வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சங்க இலக்கியத்தில் உவமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க இலக்கியத்தில் உவமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 அக்டோபர், 2014

புலிதுஞ்சு வியன்புலம்!

வலிமைவாய்ந்த புலிதங்கியிருக்கும் அகன்ற இடத்துக்குள் சராசரியான மனிதர்கள் சென்றால் அவர்கள் நிலை என்ன ஆகும்?

(சமகால விபத்துடன் சங்ககாலக் காட்சியை ஒப்பீடுசெய்வதாக இக்கட்டுரை அமைகிறது.)

விலங்குக் காட்சிசாலைக்குச் சென்ற பாரதி சிங்கத்தை அருகில் சென்று பார்க்கவேண்டும் என்று சொன்னதாகவும். பணியாளர் அருகில் இருக்க, அச்சமின்றி சென்ற பாரதி சிங்கத்தைப் பார்த்து நீ காட்டுக்கு ராஜா, நான் பாட்டுக்கு ராஜா என்று சொல்லியதாகவும். அதை ஏற்றுக்கொள்வதுபோல சிங்கமும் கர்சனை செய்ததாகவும் பாரதி பற்றி வாழ்க்கைக் குறிப்புகள் சொல்வதுண்டு.

எல்லோரும் பாரதியாகமுடியுமா? 



இந்தக் காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமுடியாது.

அந்த மனிதனின் நிலையில் நம்மை வைத்து எண்ணிப்பார்க்கும்போதே மனதெல்லாம் பதைபதைக்கிறது.

நாம் வாழ எத்தனையோ உயிர்களை அழித்திருக்கிறோம்.
ஆனால்

புதன், 2 ஏப்ரல், 2014

நிழலில் நீளிடைத் தனிமரம்

நாம் ஏன் பிறந்தோம்..?
மீண்டும் பிறக்காமலிருப்பதற்காகவே பிறந்தோம் என சமயங்கள் உரைக்கின்றன. நாம் செய்யும் நல்வினை, தீவினை அடிப்படையில் நமக்குப் பல்வேறு பிறப்புகள் உண்டு என்று சமயங்கள் அறிவுறுத்திச் செல்கின்றன. காவல்நிலையங்களும், நீதிமன்றங்களும் பல்வேறு சட்டங்களை வகுத்து மக்களை நல்வழிப்படுத்த முயற்சிசெய்கின்றன. இருந்தாலும் இந்த உலகம் சுயநலமிக்கதாகவே உள்ளது. உலகம் செல்லும் பாதையில் நாமும் செல்வோம் என்றே பலரும் செல்கிறோம். இந்த நிலையிலும் மனிதாபிமானத்தோடு, சீவகாருண்யத்துடன், பொதுநல உணர்வோடு வாழ்பவர்களைக் காணும்போது பெரு வியப்பு தோன்றுகிறது.
ஒரு நாளிதழில் ஒருவருடைய அனுபவம் படித்தேன்..

ன் தந்தையின் நினைவுநாளுக்காக ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருக்கின்றனர் அண்ணன், தம்பி இருவரும் அங்கு உள்ள முதியோருக்கு ஏதாவது தந்தையின் நினைவாகச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு..
அப்போது அங்கு முதியோரெல்லாம் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தார்களாம். இவர்களுக்கு மனதில் ஒரு எண்ணம். இந்த முதியோரின் முடிதிருத்தத்துக்கு ஆகும் செலவை நாம் ஏற்றுக்கொண்டால் என்ன? என்று தோன்றியதாம். தம் எண்ணத்தை அந்த விடுதிக் காப்பாளரிடம் கேட்டபோது அவர் சொன்னாராம்….
ஐயா இந்த முதியோர் இல்லத்துக்கு நீண்ட நாட்களாகவே முடிதிருத்தம் செய்ய வருபவர் அதற்காக பணம் எதுவும் வாங்குவதில்லை. தம் மனநிறைவுக்காக அவர் மாதம் ஒரு முறை இங்கு வந்து இலவசமாகவே முடிதிருத்தம் செய்துவிட்டுச்செல்கிறார் என்றவுடன் எங்களுக்கு வியப்பாக இருந்தது என்றுதம் அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

இப்படியும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்த மனிதாபிமானமிக்கவரின் பண்பை எண்ணி நான் மனதில் ஒப்பீடுசெய்துகொண்ட பாடல் இதுதான்,

கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!


                                        புறநானூறு, 119, பாடியவர்: கபிலர்.



பாரி இருந்த பொழுது, கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த பொழுது , யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயும் உடையதாக இருந்தது பறம்பு நாடு. நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல், முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?

பாடலின் வழியே..

தெறுழ்ப் பூக்கள் யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் பூத்தன என்ற உவமை மிகவும் நுட்பமானதாகவுள்ளது.

ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்ணும் சங்ககால உணவு மரபு சுட்டப்பட்டது.

இரவலர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய பாரியின் வள்ளல் தன்மைக்கு நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல என்ற உவமை மிகவும் ஏற்புடையதாகவுள்ளது.


தமிழ்ச்சொல் அறிவோம் :-

பெயல் = மழை
தலைஇய = பெய்த
காண்பு = காட்சி
காலை = காலம், பொழுது
வரி = புள்ளி
தெறுழ் = ஒரு கொடி
வீ = பூ
ஈயல் = ஈசல்
அளை = மோர்
யாணர் = புதுவருவாய்
நந்துதல் = கெடுதல்
பணை = முரசு


வியாழன், 27 டிசம்பர், 2012

மாலைப் பொழுதின் மயக்கத்திலே..



மாலைப் பொழுதில் வானில் ஏற்படும் அழகான மாற்றங்களைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.

எத்தனை எத்தனை வண்ணங்கள்!
எத்தனை எத்தனை வடிவங்கள்!

கொஞ்சம் தலைநிமிர்ந்து பார்க்கக்கூட இந்த மனிதர்களுக்கு நேரமில்லையே என்று மனம் நொந்திருக்கிறேன்.

இலக்கியங்களில் இந்த மாலைப் பொழுதைப் பலகவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.
        
  இளங்கோவடிகள் அந்திமாலைசிறப்புசெய்காதை என்றொரு காதையில் மாலைப் பொழுது பற்றி அழகாகப் பாடியிருப்பார்.

         மாலைப் பொழுதின் மயக்கத்திலேநான் கனவு கண்டேன் தோழி.....

        மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ......

   என்ற திரைப்படப் பாடல்கள் மறக்கமுடியாதவை..

மருத்துவர் ஊசிபோடுவதால் ஏற்படும் வலியைவிட அவர் ஊசிபோடப்போகிறார் என்ற நினைவு அதிகமான வலிதருவதாகும். அதுபோல நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களைவிட எதிர்பார்க்கும் துன்பங்களால் ஏற்படும் வலி பெரிது..

வள்ளுவரின் பொழுது கண்டு இரங்கல் என்னும் குறள்பாக்களை படித்தபோது என்ன நயம் என்று வியந்திருக்கிறேன்.

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
1221

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
1222

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
1223

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
1224

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
1225

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
1226

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
1227

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
1228

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
1229

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
1230
             
             பைங்கால் கொக்கின் புன்புறத் தன்ன
             குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
             வந்தன்று வாழியோ மாலை
             ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.
                                          
குறுந்தொகை-122,  ஓரம் போகியார், நெய்தல் திணை தலைவி கூற்று




கொக்கின் சிறகுப்புறத்தைப் போன்ற ஆம்பல் மலர்களும் குவிந்தன.

இதோ மாலைக்காலமும் வந்துவிட்டது...

மாலையே நீ வாழ்வாயாக!

இந்த மாலைப்பொழுது, தான் மட்டும் தனியாக வந்தாலும் பரவாயில்லை 

கங்குல் (இரவு) என்னும் கொடுமையையும் உடன் 

அழைத்துவந்திருக்கிறதே நான் என்ன செய்வேன்..

என்று புலம்புகிறாள் தலைவி.
  •  இரவில் மலர்ந்து பகலில் கூம்பும் மலர் ஆம்பல் ஆகும். இந்த ஆம்பல், மலர்வதற்குரிய மாலைப்பொழுது இன்னும் வரவில்லை. அதற்குள் இந்த மாலைக்காலம் வந்துவிட்டது. என்ற தலைவியின் புலம்பலால் “மலர் மலர்வதையும் கூம்புவதையும் வைத்து சங்ககால மக்கள் காலத்தை அறிந்தார்கள்” என்ற வழக்கத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.
  • சிறிது காலம் நிற்கும் மாலைப் பொழுது நீண்டநேரம் நிற்கும் இரவைத் துணைக்கு அழைத்து வந்தது தலைவிக்குப் பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது.
  • பகலும் இரவும் இயல்பாக வந்துசெல்வது. ஆனால் இந்தத் தலைவியைப் போலத் தன் துணையைப் பிரிந்து வாடுவோருக்கோ, காலமும் நேரமும் வரும் போகாது.
  • இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த எதிர்பார்ப்பு, பரிதவிப்பு நம்மிடம் இருக்கிறதா? யாரையும் எதிர்பார்த்து வழிமீதுவிழி வைத்து நாம் காத்திருக்கிறோமா? அலைபேசியில் அழைத்து உடனுக்குடன் விவரத்தைத் தெரிந்துகொண்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுகிறோமே..


அதனால் இந்த உணர்வுப்போராட்டங்களைப் படிக்கும்போதெல்லாம் மனம் இலக்கியநயம் பாராட்டுகிறது.


தொடர்புடைய இடுகைகள்..





          1. அந்தியிளங்கீரனார்











   2. தூங்காத விழிகள் இரண்டு 

சனி, 17 நவம்பர், 2012

தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல்.

நாள்தோறும் தற்கொலைகள் பெருகிவருகின்றன.

பசி, நோய், பணம், காதல், ஏமாற்றம், அவமானம், மனநலபாதிப்பு என தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் எல்லோருக்குமான உயிர்வலி ஒன்றாகத்தான் உள்ளது.

மனத்தடுமாற்றம் என்பது யாவருக்கும் பொதுவானது.
அப்போது மனதை தடுத்து மாற்றம் செய்யும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றலுடையவராவார். அந்த ஆற்றல் யாருக்கெல்லாம் இருக்கும்..?

நம் எல்லோருக்கும் அந்த ஆற்றல் உண்டு. ஆனால் நாம் தான் அதனைப் பயன்படுத்துவதில்லை.

நம் மனம் தடுமாறும்போது..
நாம் என்ன எதிர்பார்க்கிறோம்..?
நம் குறையைக் கேட்க யாராவது இருக்கமாட்டார்களா?
என்பது தானே..
அதைதானே தற்கொலை செய்துகொள்பவர்களும் எதிர்பார்க்கிறார்கள்!

மனத் தடுமாற்றத்தின் போது அருகே ஒருவர் இருந்து கொஞ்சம் காதுகொடுத்து அவர்களின் மனதைத் திடப்படுத்தினால்போதும்..
ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கிறதா?


தொழில்நுட்ப வளர்ச்சி....
தொலைவிலிருக்கும் மனிதர்களையும்
எதிரில் பார்த்துப் பேசத் துணைநிற்கிறது..
ஆனால்..
அருகிலிருக்கும் மனிதர்களையோ
மறக்கச்செய்துவிட்டது.
அதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் இப்போதெல்லாம் மனஅழுத்தம் வந்துவிட்டது. அதனால் தற்கொலைகள் அதிகரித்துவருகின்றன. உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதும் வழக்கம் இருந்தது என்று சொன்னால் இன்றைய தலைமுறையினர் நம்பமாட்டார்கள்.அந்த அளவுக்கு காலம் மாறிப்போச்சு..

உனக்கு என்ன பிரச்சனை?
ஏன் இப்படியிருக்க?
என்ன ஆச்சு என்று உரிமையுடன் பேச.. காதுகொடுத்துக்கேட்க..
இன்று இங்கு, யாருக்கும் நேரமில்லை..

வீட்டுக்கு விருந்தினர் வருகை
மனம்விட்டுப் பேச
வராமலா போகும் விளம்பர இடைவெளி
என்றொரு துளிப்பா உண்டு.
மனித நாகரீக வளர்ச்சிக்குக் காரணமான அறிவியல் வளர்ச்சியே
உறவுகளிடையே பெரிய இடைவெளி ஏற்படவும் காரணம் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.

அறிவுரை சொல்ல ஆயிரம் பேர் இங்குண்டு
காது கொடுத்துக் கேட்க இங்கு எத்தனைபேர் உண்டு..?

சங்கப்பாடல் ஒன்று..

 

     "இடிக்கும் கேளிர் நும்குறை யாக

     நிறுத்தல் ஆற்றினோ நன்றுமன் தில்ல

     ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்

     கையில் ஊமன் கண்ணில் காக்கும்

     வெண்ணெய் உணங்கல் போலப்

     பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே".

                                     குறுந்தொகை 58   வெள்ளிவீதியார்.                                                  

தலைவன் தன் தோழனிடம் சொல்கிறான்..

என்னை இடித்துரைக்கும் நண்பா!

இதனை நின் செயலாகக் கொண்டு

நிறைவேற்றுதல் வேண்டும். அதுவே சிறந்தது.

கதிரவன் காயும் வெப்பமான  பாறையில் கைஇல்லாத ஊமன் கண்ணினால் காக்கும் வெண்ணெய்த்திரள்  வெப்பத்தால் உருகிப் பரவுவதுபோல, என்மனத்துப் பரவியுள்ள இந்நோய் பொறுத்தற்கு அரியது.

வெப்பத்தால் பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதை ஊமையானவன் பார்க்கத்தான் முடியும், அதனை எடுத்து வேறொரு இடத்தில் வைக்கநினைத்தாலும் அவனுக்குக் கையில்லை. வாய்பேசமுடியாததால், அவன் பிறரைத் துணைக்கு அழைத்தலும் இயலாது. தன் கண் எதிரிலிலேயே அந்த வெண்ணெய் பாழாவதைப் பார்த்து வருந்துதல் ஒன்றே அவனால் முடியும்.

அதுபோலத் தான் தலைவிமீதுகொண்ட அளவுகடந்த ஆசையை அடக்கிக்கொள்ளும் ஆற்றலும், பிறரிடம் வெளியிடும் துணிவும் தன்னிடம் இல்லை எனத் தலைவன் தோழனிடம் கூறினான்.

தோழன், தலைவனின் மெலிவைப் கண்களால் பார்க்கிறான், வேறு எந்த உதவியும் செய்யவில்லை. கை, கால், கண்கள் பெற்றிருந்தும் தனக்கு இவன் உதவவில்லையே என்ற ஏமாற்றம் தலைவனுக்கு இருக்கிறது என்பது இப்பாடலின் பொருளாகும்.

சங்க  இலக்கியத்தில் புகழ்பெற்ற இப்பாடலை அப்படியே இன்றைய வாழ்வுக்குப் பொருத்திப் பார்க்கலாம் வாங்க..

சங்ககாலத் தலைவனுக்கு இந்தப்பாடலில் உள்ளதுபோல இன்றைய சராசரி மனிதர்களுக்கும் தற்கொலை செய்துகொள்ள ஏதோ ஒரு காரணம் உள்ளது. அது சிறிய காரணமாகவே இருந்தாலும் அவர்களுக்கு அப்போது அதுதான் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.

அதனால் நாம் ஒவ்வொருவரும் தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்பதை உணர்வோம்..

மனிதர்களுக்கு மனத்தடுமாற்றத்தின்போது தேவையானது

அறிவுரைகளல்ல - அன்பான செவிமடுத்தல்

என்ற எனது புரிதலை இவ்விடுகைவழியே குறிப்பிட்டுள்ளேன்.

தற்கொலைகளைத் தடுக்கும் வழிமுறைகளை தாங்களும் கூறினால்

தமிழுலகம் பயன்பெறும்..

 

சனி, 8 செப்டம்பர், 2012

பொகுட்டுவிழி




மழை - நீர்க்குமிழி - முயல் இம்மூன்றையும் எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் படித்தபிறகு...

மீண்டும் எப்போது இவற்றைக் காண்போம் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

பாடல் இதோ...
நீருள் பட்ட மாரிப் பேர்உறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ஊர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்

புறநானூறு -333 -1-4

மேகத்தின் பெருமழையால்,
நீருள் தோன்றிய குமிழியைப் போல,
உருண்டு திரண்டு விழித்தலையுடைய கண்களையும்,
கரிய பிடரியையுடைய தலையையும்,
பெரிய காதுகளையும், உடைய முயல், ஊருக்கு உள்ளே சிறிய  புதர்களில் துள்ளிவிளையாடும்.

என்ன ஒரு ஒப்பீடு மழையால் ஏற்பட்ட நீர்க்குமிழிகளைப்போல முயலின் கண்கள் இருக்கும் என்ற புலவரின் சிந்தனை பாராட்டத்தக்கதாகவுள்ளது.

வியாழன், 21 ஜூன், 2012

நாளைய குடிநீர்











    என் சிறுவயதில் எங்க ஊரில், பல இடங்களிலும் குடிநீர் குளங்கள்” என்று பல இருந்தன. இன்று அந்த இடங்களெல்லாம் கட்டிடங்கள் வந்துவிட்டன.சில குளங்களில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று குடிநீரை விலைகொடுத்துத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

    எதிர்காலத்தை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இதன் அடுத்தநிலை என்ன?
    எதிர்காலத்தில் குடிநீருக்கு என்னசெய்யப்போகிறோம்..? என்று.


    சங்ககாலப் பாடல் ஒன்று நாளைய குடிநீர் இப்படிக்கூட இருக்கலாமோ என்ற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

    தலைவனுடன் உடன்போக்கு சென்று மீண்ட தலைவியிடம்,
    நீ சென்ற தலைவனின் நாட்டுக் குடிநீர் நன்றாக இருக்காது என்று சொல்கிறாள் தோழி.
    இல்லைஇல்லை அது இனிமையான நீர் என்று
    பதில் சொல்கிறாள் தலைவி.
    இது தலைவி, தலைவன் மீது கொண்ட அன்பை
    வெளிக் கொணரத் தோழி கையாளும் உத்திகளுள் ஒன்றாகக் காணமுடிகிறது.

    பாடல் இதோ..

    அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
    தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
    உவலைக் கூவல் கீழ
    மான்உண்டு எஞ்சிய கலுழி நீரே
    ஐங்குறுநூறு -203


    என் தலைவன் நாட்டில் கிடைக்கும் நீர் “மான் உண்டு எஞ்சிய அழுகிய சிறிதளவு நீர்தான்” என்றாலும் அதன் சுவை, நம்முடைய வீட்டில் தோட்டத்தில் கிடைக்கும் இனிய தேனோடு கலந்த பசுவின் பாலைவிட இனிமையானது,  என்கிறாள் தலைவி.


     பாடல் வழியே..

  1. பிறந்தவீட்டுப் பெருமையைப் போலவே புகுந்தவீட்டுப் பெருமையையும் காக்கவேண்டியது பெண்களின் கடமை என்ற பண்பாட்டை நினைவுபடுத்துவதாக இப்பாடல் அமைகிறது. என்னதான் தலைவனின் நாட்டில் கிடைக்கும் நீர் சுத்தமற்றதாக, சுவையற்றதாக இருந்தாலும் அதைவிட்டுக்கொடுக்காமல் பேசும் தலைவியின் பண்பு அவள் தலைவன் மீது கொண்ட காதலை அறிவுறுத்துவதாக உள்ளது.

  2. என்னதான் தலைவி கலங்கிய நீரை தேனோடும் பாலோடும் கலந்த நீர் என்று சொன்னாலும், மான்உண்டு எஞ்சிக் கலங்கிய நீர் என்ற சிந்தனை நாளை நாம் குடிக்கும் நீருக்கும் இந்த நிலை வருமோ? என்ற கருத்தை முன்வைப்பதாக அமைகிறது.

தொடர்புடைய இடுகை

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கயம் மூழ்கும் மகளிர் கண்கள் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 09

Kurunthogai - 09


தலைமக்களிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளை ஊடல் என்று சொல்வதுண்டு. பரத்தையரிடம் கொண்ட ஈடுபாடு காரணமாகத் தலைவியை நீங்கிய தலைவன் மீண்டும் தலைவியைச் சந்திக்க வருகிறான். தோழியை வாயிலாக அழைத்து வருகிறான். தோழி முன் தன் கோபத்தை வெளிப்படுத்துவது நாகரிகமல்ல என்பதை உணர்ந்த தலைவி தலைவனின் தவறை மறந்து அவனை ஏற்கிறாள். நெய்தல் திணை என்பதால் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் உரிப்பொருளாகிறது. தலைவனின் செயலால் வாடும் தலைவியின் நிலையும். தலைவனின் தவறை மறந்து அவனை ஏற்கும் பண்பும் இப்பாடலில் சுட்டப்படுகிறது.

ஞாயிறு, 25 மார்ச், 2012

மகவுடை மந்தி!





ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம்!
ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களுக்கே முன்னுரிமை அளிக்கிறோம்..

இன்னொருவரின் ஆசைகளையோ, எண்ணங்களையோ காதுகொடுத்து என்ன? என்று கேட்பதற்குக் கூட நமக்கெல்லாம் நேரம் இருப்பதில்லை.

அப்படிக் கேட்டால் உலகில் தற்கொலைகள் கூட பாதியாகக் குறைந்துவிடும் என்பது என் எண்ணம்!



இதோ ஒரு சங்ககாலத் தலைவன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான்..

உங்களுக்குக் கேட்கிறதா?


தோழி - தலைவ! இதுவரை நீ ஊருக்குத் தெரியாமல் இரவுநேரத்தில் வந்து தலைவியைக் கண்டு காதல் மொழி பேசி வந்தாய்..

தலைவன் - ஆமாம். உன் உதவியை மறக்கமுடியுமா?

தோழி - போதும்! போதும்! எல்லாவற்றையும் இதோடு நிறுத்திக்கொள்!

தலைவன் - ஏன்? என்ன ஆனது?

தோழி - நீ இரவு நேரத்தில் வரும் வழியின் துன்பங்கள் எண்ணியும், உங்கள் சந்திப்பை ஊரார் அறிந்து பேசும் அலர் மொழிக்கு அஞ்சியும் நாளும் நாளும் நாங்கள் பட்ட துன்பங்கள் போதும். தலைவியை நீ திருமணம் செய்துகொள். அது தான் உங்கள் இருவருக்கும் நல்லது.

தலைவன் - (தன் நெஞ்சைப் பார்த்து இவ்வாறு பேசுகிறான் தலைவன்)
                     
                        ஏ நெஞ்சே! அதோ பார் பச்சை மண்பானை!
                        இதோ பார் தம் குட்டியைத் தூக்கிச் செல்லும் குரங்கு!

அந்த பச்சை மண்பானையை மழையிலிருந்து காக்க முடியுமா? அந்த மண்பானை அழிவது உறுதி. அதுபோல தலைவியின் நினைவால் தன் மனம் அழிதலும் உறுதி!

சே! அந்த குரங்குக் குட்டியைக் கூட கிளைகளில் ஏறும் போது கீழே விழாமல் பாதுகாத்து அன்போடு அணைத்துச் செல்ல அதன் தாய்க்குரங்கு உண்டு. ஆனால் எனக்கு..?

இன்னும் கொஞ்ச காலம் காதலித்து மகிழலாம் என்று எனக்கு ஆசை இருந்தாலும் என்னைப் புரிந்துகொள்ளவோ, என் தேவையை அன்போடு கேட்டு நிறைவேற்றவோ யாருமே இல்லையே..
குறுந்தொகை -29

என்று தலைவன் தன் மனதோடு இவ்வாறு பேசிக்கொள்கிறான்.