வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புள்ளிவிவரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புள்ளிவிவரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜனவரி, 2018

பெண்கள் வாழ சிறந்த நாடுகள்!


m12
உலகெங்கும் மகளிர் மதிப்புடனும் மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்கிறார்களா? "வுமன் ஃபீஸ் மற்றும் செக்யூரிட்டி இன்டெக்ஸ்' என்ற நிறுவனம் 2017 - 2018-ஆம் ஆண்டுக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் வருமாறு:
 பெண்களுக்கு தரப்படும் நீதி, பாதுகாப்பு உள்பட 11 காரணிகள் இதற்கு கவனத்தில் கொள்ளப்பட்டு, 153 நாடுகள் கண்காணிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியல்:
 1. ஐஸ்லாந்து
 2. நார்வே
 3. சுவிட்சர்லாந்து
 4. ஸ்லோவேனியா
 5. ஸ்பெயின்
 இந்தப் பட்டியலில் 87-ஆவது இடம் சீனாவுக்கு. இந்தியாவுக்கோ 131-ஆவது இடம்.
 பெண்களுக்கு மிகமோசமான மதிப்பை அளிக்கும் நாடுகள் என்று கடைசி ஐந்து இடத்தைப் பிடித்த நாடுகள்:
 149. மத்திய ஆப்பிரிக்க குடியரசு
 150. பாகிஸ்தான்
 151. ஏமன்
 152. ஆப்கானிஸ்தான்
 153. சிரியா
 என இந்தப் பட்டியல் கூறுகிறது.
 - ராஜி


நன்றி தினமணி

    ஞாயிறு, 26 மார்ச், 2017

    உலகின் மிகப் பெரிய நூலகம்

     
    3.7 கோடிப் புத்தகங்கள்! மற்றும் அச்சுப் பிரதிகள்,
    35 லட்சத்துக்கும் அதிகமான ஒலிப் பதிவு ஆவணங்கள்!
    1.4 கோடிப் புகைப் படங்கள்!
    55 லட்சம் வரைபடங்கள், ஓவியங்கள்
    470 மொழிகளில்..
    16 கோடி தொகுப்புகள்!
    838 மைல் நீள நூலகத்தின் புத்தக அலமாரிகள்!
    இந்நூலகத்தின் கிளை அலுவலகங்கள் டெல்லி, கெய்ரோ, ரியோ டி ஜெனிரோ போன்ற உலகின் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.
    என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட அமெரிக்காவின் தலைசிறந்த நூலகங்களில் ஒன்று  லைப்ரரி ஆப் காங்கிரஸ்!
    நாடாளுமன்றத்துக்குப் பயனுள்ள புத்தகங் களை வாங்கிச் சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 5,000 டாலரை ஒதுக் கினார் அப்போதைய அதிபர் ஜான் ஆடம்ஸ்.
    1800 ஏப்ரல் 24-ல் இந்த நூலகம் தொடங்கப் பட்டது. 12 ஆண்டுகள் கழித்து, தலைநகர் வாஷிங்டனுக்குள் நுழைந்த பிரிட்டன் இராணுவம், நகரைத் தீக்கிரையாக்கியது. இதில் இந்த நூலகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின.
    முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், தனது சொந்த நூலகத்திலிருந்து புத்தகங்களைத் தந்து நூலகத்தைப் புதுப்பிக்க உதவினார். அவர் நடத்திவந்த அவரது சொந்த நூலகம்தான் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா விலேயே மிகப் பெரிய நூலகம். 2 முறை அதிபராக இருந்த காலகட்டத்தில் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகத்தை விரிவாக்கும் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர் அவர்.
    1851-ல் மீண்டும் ஒரு தீவிபத்து ஏற்பட்டது. இதில் நூலகத்தின் மூன்றில் ஒரு பகுதி நூல்கள் எரிந்து நாசமாயின. தாமஸ் ஜெபர்ஸன் கொடுத்த பல நூல்களும் தப்பவில்லை. இந்த முறை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவாகச் செயல்பட்டு புத்தகங்களைச் சேகரித்து மீண்டும் புதுப்பித்தது.
    அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் புத்தகங்கள் சேகரிக்கப் பட்டன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக் காவின் அறிவிக்கப்படாத தேசிய நூலக மாகவும், உலகின் மிகப் பெரிய நூலகமாகவும் விரிவடைந்திருந்தது ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகம்.

    நூலக இணையதள முகவரி  - https://www.loc.gov/

    செவ்வாய், 14 மார்ச், 2017

    இந்தியா – வியப்பளிக்கும் புள்ளிவிவரங்கள்!




    வாய்மையே வெல்லும் என்பதுதான் இந்தியாவின் குறிக்கோள். என்றாலும், ஊழல் நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம். வியட்நாம் இரண்டாம் இடத்தையும், தாய்லாந்து மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.

    ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதும் கடைசியில்தான் முதலிடம் பிடிப்போம் என்றாலும், கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்.  இரண்டாவது இடத்தில் ஆத்ரேலியாவும் மூன்றாவது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் உள்ளன.

    சீனா கடைபிடிக்கும் மொழிக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, தொழில்நுட்பப் புரட்சி என எதையுமே போட்டியாக நினைக்காதவர்கள் இந்தியர்கள் இருந்தாலும் சீனாவின் மக்கள் தொகையோடு மட்டும் போட்டிபோட்டு வருகிறோம். அதனால்
    உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் இந்தியாவுக்கு, சீனா முதலிடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை வழங்கும் தொலைக்காட்சிகள், வானொலிகள், சமூகத் தளங்கள் என அதன் வளர்ச்சிக்கு ஒன்றும் குறையில்லை. என்றாலும்,
    பொய்யான செய்திகளை வழங்குவதில் இந்திய ஊடகம் உலக அளவில் இரண்டாவது பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. மூன்றாவது இடத்தில் அயர்லாந்து 

    வன்பொருள், மென்பொருள், திறன்பேசி என பெரிதும் நம்  நாட்டின் கண்டுபிடிப்புகள் கிடையாது. என்றாலும்,
    இணையப் பயன்பாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இந்தியா, முதலிடத்தில் சீனாவும் மூன்றாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன.

    ஒருவனுக்கு ஒருத்தி என்போம்! கற்பில் சிறந்தவள் யார் என்று பட்டிமன்றங்கள் வைப்போம் என்றாலும்,
    எச்.ஐ.வி. பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா
    தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், நைஜீரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.


    பெண்கள் நாட்டின் கண்கள் என்போம், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் என்போம், இருந்தாலும், உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு நான்காவது இடம் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக திகழ்வது ஆப்கானிஸ்தான். 2வது இடத்தில் காங்கோவும், 3வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.


    சங்ககாலம் தொடங்கிய ஏறுதழுவுதல் முதல் பல விளையாட்டுகளைக் கொண்ட நாம் கிரிக்கெட் மட்டுமே பெரிதெனக் கொண்டாடுகிறோம். அதனால் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் உலக அளவில் நான்காவது இடத்தில் இந்தியா. முதலிடத்தில் தென்ஆப்பிரிக்காவும் இரண்டாவது இடத்தில் ஆத்ரேலியாவும் உள்ளன.

    ·         உலக கால்பந்து அணிகள் தரவரிசையில் 41 வது இடத்தில் இந்தியா, முதலிடத்தில் ஜெர்மனியும், இரண்டாவது இடத்தில் பெல்ஜியமும் உள்ளன.

    ·         தடுக்கி விழுந்தால் பள்ளிக்கூடங்கள் எழுந்து நடந்தால், கல்லூரிகள், விரைந்து நடந்தால் பல்கலைக்கழகங்கள் என எங்கும் வணிகமான கல்வி இருந்தாலும், எழுத்தறிவில் இந்தியா 233 நாடுகளுள் 168 வது இடத்தில்! 82 விழுக்காடு ஆண்களும் 65 விழுக்காடு பெண்களும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இந்தியாவின் மொத்த எழுத்தறிவு 73.8 விழுக்காடு பின்லாந்து, கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் 100 விழுக்காடு பெற்றுள்ளன

    உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் 81 வது இடத்தில் இந்தியா.

    மேற்கண்ட இந்தியா பற்றிய புள்ளிவிவரங்கள் உங்களுக்கு வியப்பளிக்கலாம்.
    இந்தியர்களின் பலம் மனிதவளம்,
    பலவீனம் அம்மனித வளத்தை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமலிருப்பது.
    ஆம் இந்தியா வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எத்தனை எத்தனை போர்க்களங்கள் எல்லாம் நம் நாட்டின் வளத்துக்கான படையெடுப்புகள்! இன்றும் அந்தப் படையெடுப்புகள் தொடர்கின்றன. அதன் வடிவங்கள் தான் மாறியிருக்கின்றன.

    நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் நாம் யாருக்கும் அடிமையில்லை என்று சொல்லிக்கொண்டாலும் இன்னும் நம் நாட்டில் நடப்பது பன்னாட்டு வணிக நிறுவனங்களின் ஆட்சிதான்!

    மெக்காலே கல்வி என்றபெயரில் நம் குருகுலக்கல்விமுறையை ஒழித்து தாய்மொழியைப் பறித்து நம்மை இன்னும் ஆங்கில மொழிக்கு அடிமைகளாக, சுயசிந்தனையற்றவர்களாக வைத்திருப்பதில் இருக்கிறது நாம் ஏன் அடிமையானோம் என்ற கேள்விக்கான பதில்!


    திங்கள், 27 ஜனவரி, 2014

    நிறையா வாழ்க்கை

    பசிக்கு உணவு வாங்க காசின்றி ஒரு கூட்டம்!
    பணத்தைப் பதுக்கிவைக்க இடமின்றி கூட்டம்!
    பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று அறியாமல் ஒரு கூட்டம்!
    பணத்தை செலவுசெய்வது எப்படி என்று தெரியாமல் ஒரு கூட்டம்!
    என அறிவுடையோராலும், அறியாமையுடையோராலும் நிறைந்தது இவ்வுலகம்!

    பறவைகள் எந்த மரங்களையும்
    விலைக்கு வாங்கியதில்லை!
    இருந்தாலும்..
    மரங்கள் யாவும் பறவைகளுக்காகவே
    வான் நோக்கி வளர்கின்றன!

    நிலவு என்றும்
    இரவைச் சேமித்துவைத்தில்லை!
    இருந்தாலும்..
    இரவு நிலவை மட்டுமே
    எதிர்நோக்கியிருக்கிறது!

    ஆடு, மாடுகள் யாவும்
    தலையில் புல்லைக் கட்டிக்கொண்டு
    மேயச்செல்வதில்லை!
    இருந்தாலும்..
    தாவரங்கள் இவற்றையே
    பச்சைக் கொடிகாட்டி அழைக்கின்றன!

    நதிகள் எங்கும்
    முகவரி தேடி மயங்கியதில்லை!
    இருந்தாலும் கடல்
    நதிகளுக்காகவே காத்திருக்கிறது!

    வேர்கள் எப்போதும்
    தன்னை விளம்பரம் செய்துகொண்டதில்லை!
    இருந்தாலும்..
    மழை என்றும்
    வேர்களை மறந்ததில்லை!

    ஆனால் மனிதன் மட்டும்..
    எதை எதையோ விலைக்கு வாங்குகிறான்!
    சேமித்து வைக்கிறான்!
    உணவுமூட்டையைத் தூக்கிக்கொண்டே திரிகிறான்!
    முகவரியைத் தேடித்தேடி மயங்குகிறான்!
    எதற்காகவோ காத்திருக்கிறான்!
    விளம்பரப் பலகை ஏந்திக்கொண்டே நடக்கிறான்!

    மனிதன் மட்டும் ஏன் இப்படி..??
    என்று மக்களைக் காணும் போது தோன்றும்.
    புறநானூற்றுப் பாடல் ஒன்று வறுமையில் வாடும் எளியோரின் வாழ்வை நிறையா வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறது. அவர்கள் வறுமையில் வாடினாலும் பகுத்துண்ணும் பண்புடையவர்களாக இருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் சிறந்த பாடலைக் காண்போம்.
    “களிறு நீறாடிய விடு நில மருங்கின்
    வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தெனக்
    குழி கொள் சின்னீர் குராஅல் உண்டலின்
    செறு கிளைத் திட்ட கலுழ் கண் ஊறல்
    முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
    முளவுமாத் தொலைச்சிய முழுச் சொல் ஆடவர்
    உடும்பிழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
    சீறில் முன்றில் கூறு செய்திடுமார்
    கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
    மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
    அலந்தலை இரத்தி அலங்கு படு நீழல்
    கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
    அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
    வேந்துதலை வரினும் தாங்கும்
    தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே.“
    புறநானூறு 325, 
    பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,
                                     திணை: வாகை, துறை: வல்லாண் முல்லை
    யானைகள் புழுதியில் விளையாடிய பரந்த நிலப்பகுதியில் வேனிற்பருவத்தில் புதிதாகப் பெய்த மழையால்  குழிகளில் சிறிதளவு தேங்கிய நீரினை, குரால் என்னும் ஒருவகைப் பசு நீர் வேட்கையினால் உண்டது. நீர் அற்ற அக்குழியின் சேற்றைத் தோண்டிப் பெற்ற கலங்கிய ஊற்று நீரினைத் தங்களுக்குள் முறையாகப் பெற்று உண்கின்ற நிறைவு பெறாத வாழ்க்கையுடையோர் அங்கு வாழ்பவர் ஆவார்.
    முள்ளம் பன்றியைக் கொன்ற பேரொலியை உடைய அவ்வினத்து ஆண்மக்கள் , ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக் கதவினையுடைய தங்கள் சிறப்பில்லாத இல்லங்களின் முன்னர், உடும்பினது நிணத்தை அறுத்து யாவர்க்கும் பகுத்துத் தருவதற்காகத் தீயைமூட்டி, அதில் உடும்பினை வாட்டும்போது பிறக்கும் கொழுவிய நிணத்தின் நாற்றம், அச் சிற்றூர்களின் தெருக்கள் எங்கும் கமழ்வதாகும்.
    இத்தகைய செயலையுடையோர் உறையும்போது இடத்திலுள்ள இத்தி மரத்தின் அசைகின்ற நிழலில் இருந்து, மெல்லிய தலையையுடைய சிறுவர்கள் அம்புகளை எறிந்து விளையாடுவார்கள்.
    வெற்றியையுடைய வேலினையுடைய வேந்தர்கள் தன்னோடு பகைத்து வந்தவழி, தான் ஒருவனாக நின்று எதிர்த்துத் தாங்குவதற்கு உரிய வலிமையும், வரையறுக்க இயலாத கொடையினையும் உடைய பெரிய தகுதியையடைய வீரனின் ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இருப்பிடத்தை உடையதாகும்.

    திணை – வாகை. ( வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரம் செய்தல்)
    துறை – வல்லாண் முல்லை ( ஒரு வீரனுடைய ஊரையும் அவனது இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல் வல்லாண்முல்லை ஆகும்.)

    அன்றும் இன்றும்
    ·         அன்று வறுமையில் இருந்தாலும் பகுத்துண்ணும் மரபு பின்பற்றப்பட்டது இன்றோ யாரும் உணவைப் பகிர்ந்தளித்தாலும் மயக்கமருந்து கலந்திருக்குமோ என்ற அச்சம்தான் முதலில் வருகிறது.
    ·         அன்று குழியில் தேங்கிய நீரைக்கூட மக்கள் குடித்தனர் நலமாகவும் இருந்தனர் இன்றோ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் குடிநீரைக்கூட பணம் கொடுத்து வாங்குகிறோம்.

    ·         அன்றைய குழந்தைகள் தெருக்களில், மரங்களின் நிழலில், மண்ணில் விளையாடினர். இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி, திறன்பேசிகளில் உள்ள விளையாட்டுகளே போதும் என அறிவுறுத்தப்படுகின்றனர். 
      
       பாடல் வழியாக...
       உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எத்தனையோ பேர் இவ்வுலகில் உள்ளனர். பதுக்கி வைத்து பணக்காரர் தரவரிசையில் இடம்பெறுவது பெரிய சாதனையல்ல. பகுத்துண்டு நம்மால் முடிந்தவரை மனிதாபிமானத்தோடு வாழ்வதே பெரிய சாதனைதான் என்பதை இப்பாடல் நினைவுபடுத்திச் செல்கிறது.
      


    வியாழன், 3 அக்டோபர், 2013

    முதலிடத்தை நோக்கி இந்தியா


    பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல், ஒலிம்பிக் என எந்தத் துறையில் பார்த்தாலும் இந்தியா பின்னிலையில் இருக்கிறது மக்கள்தொகைப் பெருக்கத்தில் மட்டும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 2050ல் இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிப் பார்த்தாலே தலைசுற்றுகிறது. இப்போதே விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அரசியல்வாதிகளுக்கோ தங்கள் நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

    நண்பர்களே நம்மால் முடிந்தவரை சமூகத்தளங்களில்

    விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் வாங்க..

    தொடர்புடைய இடுகைகள்

    700 கோடி கறுப்புப் பணம்!!!

    வியாழன், 26 செப்டம்பர், 2013

    சிந்திக்கவைக்கும் குடியரசுத் தலைவரின் உரை





    புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றியபோது,
    கடந்த 6ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்த தட்சிசீலம்,  நாளந்தா, விக்கிரமசீலா, வல்லபி, சோமபுரா பல்கலைக்கழகங்களில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர். அப்புகழை நாம் மீண்டும் பெற வேண்டும். ஆசிரியர் பணி அனைத்துப் பணிகளிலும் சிறந்ததாகும். மாணவர்கள் சந்தேகங்கள் எழுப்பினால் அதற்குப் பதிலளிப்பது மிகுந்த மகிழ்வைத் தரும். மாணவர்களுக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும், ஆசிரியர்கள் திகழ வேண்டும். தாங்கள் பெற்ற அறிவை மாணவர்களுக்குப் போதிப்பதில் கடமை, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தரமானக் கல்வியை பெறுவதும் உரிமையாகும்.

    இந்தியாவில் தற்போது 659 பல்கலைக்கழங்கள், 33,000 கல்லூரிகளில் 1.8 கோடி பேர் பயின்று வருகின்றனர். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இது 2.9 கோடியாக உயர வாய்ப்புள்ளது. இந்தியாவை முன்னேற்றுவதில் மாணவ, மாணவியருக்கு பெரும் பங்கு உள்ளது. ஒழுக்கம், கடமை உணர்வு, கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எந்த கடினமான சூழலையையும் சமாளிக்கலாம் என்றார் முகர்ஜி.

    குடியரசுத் தலைவரின் உரை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

    செவ்வாய், 27 நவம்பர், 2012

    தங்கம் நேற்று - இன்று - நாளை?


    தங்கம் இறக்குமதியில் இந்தியா முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் 

    சீனாவும் உள்ளதாம்.

    இன்று நேற்றா இந்த நிலை சங்ககாலத்திலிருந்தே தமிழர்கள் இப்படித்தானே 

    இருந்திருக்கிறார்கள்

    சங்ககாலத்தில் வணிகம் செய்யவந்த யவணர்கள் பெரிய மரக்கலங்களில் தங்கத்தைக் கொண்டு வந்து அதனை விலையாகத்தந்து மிளகை அள்ளிச்சென்றுள்ளனர்.அற்றைக் காலந்தொட்டே தமிழர்கள் தங்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கின்றனர். ஆனால் யவணர்கள் மிளகின் மருத்வகுணம் அறிந்தே மிளகை அள்ளிச் சென்றுள்ளனர்.



    1930–ம் ஆண்டு முதல் ஒரு சவரன் தங்கத்தின் விலை..


    1930 – ரூ.14




    1935 – ரூ.24



    1940 – ரூ.28



    1945 – ரூ.49



    1950 – ரூ.79



    1955 – ரூ.63



    1960 – ரூ.88



    1965 – ரூ.56



    1970 – ரூ.147



    1975 – ரூ.432



    1980 – ரூ.1064



    1985 – ரூ.1544



    1990 – ரூ.2520



    1995 – ரூ.3600



    2000 – ரூ.3480



    2005 – ரூ.4640



    2006 – ரூ.7680



    2007 – ரூ.7600



    2008 – ரூ.9200



    2009 – ரூ.10944



    2010 – ரூ.12500



    2011 – ரூ.21120


    இன்றைக்கு - ரூபாய் 26252


    நாளை?



    தொடர்புடைய இடுகை

    தங்கத்தைவிட மதிப்புமிக்கது

    மிளகுக்கு இணையா தங்கம்?