வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 டிசம்பர், 2012

ஊடுதல் காமத்துக்கு இன்பம்.


அன்று கோவலன் மாதவியிடம் சென்று மீண்டும் கண்ணகியிடம் வந்தபோது, அன்றைய கண்ணகி காலில் இருந்த சிலம்பைக் கழற்றிக் கொடுத்தாளாம். அதுதான் கற்புடைமை என இன்றும் போற்றப்படுகிறது.

இன்றைய கண்ணகியாகியரும் காலில் உள்ளதைக் கழற்றிக்கொடுப்பார்கள். சிலம்பை அல்ல! செருப்பை!

தலைவன் பரத்தையரிடம் சென்று மீண்டும் தலைவியை நாடி வருகிறான். அவனுடைய தவறை மறந்து, அவனை ஏற்றுக்கொள். அவன் மீது கோபம் கொள்ளாதே என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். அப்போது தோழியிடம் தலைவி சொல்வதாக இப்பாடல் அமைகிறது

நன்னலம் தொலைய நலம் மிகச் சாஅய்

இன்னுயிர்க் கழியினும் உரையல் அவர்நமக்கு

அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி

புலவியது எவனோ அன்பிலங்கடையே

அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகை -93

எனது பெண்மை நலம் கெடவும், உடல் மெலியவும், எல்லாவற்றையும் விட எனது இனிய உயிர் நீங்கினாலும், அவரிடம் கோபமாக நடந்துகொள்ளாதே அவரை ஏற்றுக்கொள் என்கிறாய்?
நீ சொல்வதும் சரிதான்!
தலைவர் நமக்கு தாயும், தந்தையும் அல்லவா?
அவரிடம் நான் எவ்வாறு கோபம் கொள்வேன்!
கோபம் கொள்ள அவர் என்ன என் தலைவரா?
கோபமெல்லாம் அன்புடையாரிடத்தல்லாவா நிகழ்வது?

இப்பாடலை நேரடியாகப் பார்த்தால் தலைவன் பெற்றோருக்கு இணையாக வைத்துப் பாராட்டப்படுகிறான் என்றுதான் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால், தலைவன் மீது தலைவிகொண்ட கோபம் புரியும்.

தலைவன் பெற்றோரைப் போல மதிக்கத்தக்கவன்
ஆனால் என் கணவன்(காதலன்) போல அன்புகொண்டு கூடி மகிழத் தகுதியில்லாதவன்.
என்ற கருத்துதான் தலைவியின் ஆழ்மனவெளிப்பாடாகவுள்ளது.

தலைவன் பரத்தையிடம் சென்றதால், தலைவிக்கு ஏற்பட்ட நயமான ஊடல்(புலவி) நறுக்கென்று தலைவனுக்குத் அவன் தவறை உணர்த்துவதாக உள்ளது.

அன்பு யார் மீதும் காட்டலாம்
ஆனால்
கோபம் உயிருக்கு மேலான உரிமையுடையவரிடம் தான் வெளிப்படத்தமுடியும் 
என் கருத்தை எடுத்தியம்புதாக இப்பாடல் அமைகிறது.



தொடர்புடைய இடுகை.
                                                   





                                 நயமான ஊடல் 

புதன், 21 நவம்பர், 2012

தொலைத்தொடர்பு அடர்த்தி


காலந்தோறும் ஒவ்வொரு வீடுகளிலும்,
செல்வத்தின் அடையாளமாகவும், தொழில்நுட்ப அறிவின் அடையாளமாகவும் இருந்த கருவிகள் சிலவற்றைக் காண்போம்..

வானொலி
கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி
தொலைபேசி
வண்ணத் தொலைக்காட்சி
டெக்
டேப்ரிக்கார்டர்
சிடி பிளேயர்
டிவிடி பிளேயர்
கணினி
அலைபேசி
இணையத்துடன் கூடிய கணினி
மடிகணினி
டேப்ளட் பிசி
சுமார்ட் போன்
என காலந்தோறும் பல கருவிகள் வந்திருக்கின்றன.வந்துகொண்டிருக்கின்றன.
இவற்றுள் கணினியும், அலைபேசியும் மக்களைச் சென்றடைந்த அளவுக்கு வேறு எந்தக் கருவியும் அதிகம் சென்றடைந்த்தில்லை.





ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு தொலைக்காட்சிதான் இருக்கும் அதுவும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருக்கும்..
ஆனால் இன்று..!!

2சி, 3சி, 4சி என தொழில்நுட்ப மாற்றங்களை இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை எனப் பாகுபாடு செய்துள்ளனர். நாம் இன்னும் மூன்றாவது தலைமுறைக்கே முழுவதும் சென்று சேரவில்லை அதற்குள்ளாக 4வது தலைமுறை தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாம்.

120 கோடிக்கு மேல் மக்கள் கொண்ட இந்தியாவில் அலைபேசி இணைப்பாளர்களின் எண்ணிக்கை 90கோடி இருக்கிறது.

ஒருகாலத்தில் வீட்டுக்கு ஒரு தொலைத்தொடர்பு இணைப்பு இருப்பதே வியப்புக்குரியதாக இருந்தது. இன்று, பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அலைபேசிகள் உள்ளன.

கணினி தயாரிப்பாளர்களெல்லாம் அலைபேசிக்கான தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

v  ஒரு காலத்தில் நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் உறவினர்களிடம் சென்று சொல்லிவருவது முதன்மையான பணியாக இருக்கும்.
v  அடுத்து கடிதவழி தொடர்பு.
ஆனால் இன்று அலைபேசி, இணையத்தின் வளர்ச்சியால் இந்த மரபுகள் எல்லாம் தொலைந்துபோய்விட்டன.

இன்று உலகின் எந்த இடத்தில இருப்பவரிடமும் நேருக்கு நேராக அலைபேசி வழியே முகம் பார்த்துப் பேசமுடியும் என்பது எவ்வளவு பெரிய மாற்றம்!!

புறா, ஒற்றன், தூதுவன், கடிதம், தொலைபேசி, அலைபேசி, இணையம் என்ற வளர்ச்சி..

யாகூ மெசஞ்சர் (எழுத்து உரையாடல்)
ஜிடாக் (பேச்சு உரையாடல்)
முகநூல் (பேச்சும், எழுத்தும் கலந்த உரையாடல்)
ஸ்கைப் (முகம் பார்த்துப் பேசும் உரையாடல்)

என்ற வளர்ச்சிப் படிநிலையை அடைந்துள்ளது.

இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சியில் வாழும் நாம் கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாம் வாங்க.

சங்கப் பாடல் ஒன்று...

தலைவன் வெளியூர் சென்றிருக்கிறான். மழைக்காலத்தில் திரும்பிவந்துவிடுவேன் என்றுசொல்லிச்சென்றான்.
அந்தக்காலமும் வந்துவிட்டது. ஆனால் தலைவனைக் காணோமே எனத் தலைவியின் மனது பதற்றம் அடைகிறது.
அப்போது தோழி தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள்.
கவலைப்படாதே...
தலைவன் வரப்போகிறான் என்பதை முன்பே அறிந்த மேகங்கள் கடலில் சென்று நீரை முகந்துவந்து பெருமழையாகப் பொழிகின்றன. அறிவல்லாத மேகங்களோ உனது துன்பத்தைக் குறைக்கும்விதமாக..
மழைக்காலம் வந்துவிட்டது
தலைவன் வந்துகொண்டிருக்கிறான் என்பதன் அடையாளமாகத்தான் மழைபொழிகிறேன்..
என்று  சொல்லாமல் சொல்லிச்செல்கின்றன.
நீ ஏன் குழப்பமடைகிறாய் என்கிறாள்.

விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?

நற்றிணை -112, பெருங்குன்றூர் கிழார்.
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

தோழீ !
மலைச்சாரலில் அரும்பு முழுதும் ஒருசேர மலர்ந்த கரிய கிளைகளையுடைய வேங்கைமரத்தில், சுரும்பு முரலுகின்ற பக்கமலையிலுள்ளவெல்லாம் அஞ்சும்படியாக; களிற்றைக் கொன்று அச்சமற்ற உள்ளத்தையுடைய சிங்கம் நிற்கும் பெரிய மலைநாடன்,
கார்ப்பருவத்தின்கண் வருவேன் என்று கூறிச் சென்றபடி மீண்டு வருகின்றான் என்பதை அறிந்து விருப்பமுற்று,
கரிய கடலின்கண்ணே சென்று நீரையுண்டு மணிபோலும் நிறத்தினையுடைய அருவியினிழிகின்ற நீரையுடைய அகன்ற இடமெல்லாம் மறைபடுமாறு பரவி; மலையானது கண்விழித்து இமைத்தாற் போல மின்னி ஒலிக்கின்ற வலிய இடியேற்றுடனே கலந்து வந்த இந்த மழைக்கு; நான் யாது கைம்மாறு செய்வேன்? என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.


தலைவன், தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள எந்த தொழில்நுட்பமும் இல்லாத சங்ககாலத்தில் அவர்கள் இயற்கையோடு எவ்வாறெல்லாம் இயைபுபட வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இதுபோன்ற பாடல்கள் பெரிதும் துணைபுரிகின்றன.


இவ்வளவு தொழில்நுட்பங்களோடு வாழும் நமது மகிழ்ச்சி
எந்தத் தொழில்நுட்பமும் இன்றி வாழ்ந்த சங்ககால மக்களின் மகிழ்ச்சி

இரண்டையும் சீர்தூக்கிப்பார்த்தால்..

சங்ககாலத்தைவிட இன்று நாம் தொழில்நுட்ப அளவில் முன்னேற்றமடைந்திருக்கிறோம்!

ஆனால்

உறவுகளிடையே உள்ள அன்புநிலையின் பின்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

இன்று வெளியே சென்ற உறவுகளை இவ்வளவு ஆவலோடு யாரவது எதிர்பார்த்துக் காத்திருக்கிறோமா..

வரவில்லையென்றால் உடனே  அலைபேசியில் அழைத்து என்ன? ஏது? எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போய்விடுகிறோம்.

இந்தப் பாடலில் தலைவி தலைவனை ஆவலோடு எதிர்பார்த்துக்காத்திருக்கிறாள்.
அவன் வருவதாகச் சொல்லிய பருவம் வந்துவிட்டது. அவனைக் காணோமே என்று..

மேகம் மழைபொழிவது இயற்கை.
இங்கு அதனைத் தனக்கு சார்பாகத் தோழி பயன்படுத்திக்கொள்ளும் பாங்கு எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது.

இன்று தொலைத்தொடர்பு அடர்த்தி அதிகரித்திருக்கலாம்
ஆனால்
மனித மனங்களுக்கிடையிலான அன்பின் அடர்த்தியும் அதிகரித்திருக்கிறதா?
என்று தன்மதிப்பீடு செய்துகொள்ள இவ்விடுகை பயன்படும் எனக் கருதுகிறேன்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

கோபம் வரும்போதெல்லாம்..


  1. கோபம் என்பது கொடிய நோய்..
  2. இந்நோய் தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்திருக்கும் சுற்றத்தாரையும் அழிக்கவல்லது.
  3. மிக விரைவாக அருகே இருப்பவருக்கும் பரவக்கூடிய நோய்..

  4. கோபத்தைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றுவதில்தான் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய உள்ளது.

  5. கோபம் வரும்போது..

    தண்ணீர் குடிக்கவும்..
    ஒன்று இரண்டு என எண்ணவும்..
    கண்களை மூடிக்கொள்ளவும்..
    கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்கவும்..

    என பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள்..
    நம் வள்ளுவர் சொல்கிறார்...

    நீங்க கோபப்படுறீங்களா?
    உங்களுக்கு நீங்களே ஏன் தண்டனை கொடுக்கறீங்க..
    நிலத்தில் தன் கைகளை ஓங்கி அடித்துக்கொண்டவனுக்குக் கை வலிக்காமலா போகும்?
    அதுபோலத்தான் அவன் கொள்ளும் கோபத்தால் அவனுக்கு வலி ஏற்படும். அவன் கோபத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து தப்பமுடியாது என்கிறார்.

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

    குறள் 307: 
    கோபம் வரும்போதெல்லாம் நான் இந்தக்குறளை நினைத்துக்கொள்கிறேன்..


ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இந்தக்குழந்தைகள் சொல்வது கேட்கிறதா?



  • சுவர்  பெரிதாக இருப்பதால் கல்வி தன்னைவிட்டு மிகத்தொலைவில் இருப்பதாக இந்தக் குழந்தை எண்ணி்க்கொள்ளவில்லை. தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உறுதியுடைய மனம் இந்தக் குழந்தையிடம் உள்ளது அதனால் வெளியே இருந்துகூட இந்தக் குழந்தையால் கற்றுக்கொள்ளமுடிகிறது..



சில குழந்தைகள் பள்ளியின் உள்ளே இருந்தும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.

கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் 
இருந்தால் போதும் எதுவும் தடையல்ல 
என்ற உயர்ந்த சிந்தனையை இந்தக் காட்சி நமக்குப் புலப்படுத்துகிறது.



  •  அந்தக் காலத்தில் குழந்தைகள் தான் புத்தகங்களைக் கிழிப்பார்கள். இன்றெல்லாம் வன்முறை உணர்வைத் தூண்டித் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் புத்தகங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடுகின்றன. இந்த உண்மையை அழுத்தமாகச் சொல்லும் நிழற்படம் இது.



  • கல்வி - பணம் இரண்டில் எது மதிப்பு மிகுந்தது?
   பணத்தைக் கொடுத்து கல்வியை வாங்குகிறோம்
  கல்வியை விற்றுப் பணமாக்குகிறோம்
இலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது என்பது உண்மைதான்
அதற்காக அதிகவிலைகொடுத்து இந்தக்கல்வியை வாங்கும்போது
அதைப் பெறும் மாணவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்ற கருத்தையும் நாம் சிந்திக்கவேண்டும்.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
திருக்குறள் -391
தொடர்புடைய இடுகை


வியாழன், 2 ஆகஸ்ட், 2012

கூகுளைவிடச் சிறந்த தேடுபொறி!


  1. இன்று வரை எத்தனையோ தேடு பொறிகள் வழக்கில் வந்திருக்கின்றன. எந்தத் தேடுபொறியாலும் கூகுளோடு போட்டி போடமுடியவில்லை.
  2. யாகூ, பிங் என பிரபலமான தேடுபொறிகளின் இடையே குல் (www.Cuil.com) என்றொரு தேடுபொறி வந்து நான்தான் கூகுளைவிட சிறந்த தேடுபொறி என்றது. ஆனால் இன்றுவரை நிலைத்திருப்பது என்னவே கூகுள் மட்டுமே.
  3. கூகுளின் இந்தச் செல்வாக்கிற்கு அடிப்படைக் காரணங்களில் சில...

  4. விரைவான தேடல்
  5. துல்லியமான தேடல்
  6. சரியான பகுப்பாய்வு
  7. தொடர்புடைய செய்திகளைத் தருதல் ஆகியனவாகும்.

  8. நானும் சிந்தித்துப் பார்த்தேன் கூகுளைவிடச் சிறந்த தேடுபொறி எது? என்று..

    நானறிந்த வரை மனித மனதுக்கு இணையாக கூகுளால் கூட ஒரு செய்தியைத் தேடித்தரமுடியாது என்று தோன்றியது.

    நாம் கூகுளில் தேடும் அளவுக்கு நம் மனதில் தேடுவதில்லை என்பதுதான் நிகழ்கால உண்மை.

    பெரிய பேச்சாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள், தேர்ந்த ஓவியர்கள், சாதனையாளர்கள் என இவர்களின் வாழ்க்கையை ஆழ்ந்துநோக்கினால் இவர்கள் தம் மனதில் தன்னைப் பற்றித் தேடி தன்னால் என்ன முடியும் என்று அறிந்துகொண்டவர்கள் என்பது விளங்கும்.

    விலங்குகளுக்குக் கூட அதன் அனுபவங்கள் மரபியல் கூறுகள் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. அதுபோலவே மனிதனுக்கும் இன்று இந்த மணித்துளி வரை மனித சமூகம் பெற்ற அனுபவங்கள் அடுத்த தலைமுறை மனிதனுக்கு மரபியல் கூறுகள் வழியே எடுத்துவரப்படுகின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது.
    ஒவ்வொரு புதிய செய்தியைத் தெரிந்துகொள்ளும் போதும் “இது நமக்கு முன்பே தெரிந்ததுபோல உள்ளதே என்று நமக்குத் தோன்றும் எண்ணமே அதற்குச் சான்றாகவுள்ளது.

    • கூகுள் தன் தரவுத் தளத்தில் உள்ள செய்திகளைத் தேடித்தருவதுபோல, மனித மனமும் தன்னிடம் உள்ள செய்திகளைத் தேடித்தரத் தயாராக உள்ளது. என்றாலும் நாம் தான் அதைப் பயன்படுத்துவதில்லை.

    • நம் மூளை என்னும் தரவுத்தளத்தில், சென்ற தலைமுறையிலிருந்து பெற்ற அனுபங்களை சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அதனை நாம் அறிந்துகொள்வதற்கு நமக்கு கல்விநிலையங்கள், நூல்கள், அனுபவங்கள் எனப் பல்வேறு அறிவின் கூறுகள் தேவைப்படுகின்றன.

    இன்றைய சூழலில் பலருக்குத்  தான் யார் என்றும் தனக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளது என்றும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள முயல்வதும் இல்லை.

    தான் யார் என்று தெரிந்துகொண்டவர்களை 
    இந்த உலகம் உடனடியாகத் தெரிந்துகொள்கிறது!

    தான் யார் எனத் தெரியாதவர்களைப் பற்றி 
    இந்த உலகத்துக்கும் கவலையில்லை!

    இதோ சில தேடல்கள்..


  9. நான் யார் தெரியுமா?
  10. என்று பலரும் தன்னைப் பற்றி பிறரிடம் கேட்பதுண்டு.

    இவர்கள் யார் என்று இவர்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? தெரியாமல் தான் கேட்கிறார்களா? என்று தான் இவர்களைப் பார்த்தால் எனக்குத் தோன்றும்.

  11. “எல்லோருக்கும் எல்லாமே தெரியும் - ஆனால்
  12. தனக்கு எல்லாம் தெரியும் என்பதுதான் எல்லோக்கும் தெரிவதில்லை“ என்பது எனது அனுபவ மொழி.

    • வடிவேலு நகைச்சுவையில், வேலைக்குச் செல்லும் வடிவேலுவை நிறுத்தி சிங்கமுத்து என்ற நடிகர் கேட்பார்..“கருப்பா, குள்ளமா, சுருட்டை முடிவச்சிட்டு ஒருத்தர் இருப்பாரே அவரை உங்களுக்குத் தெரியுமா? என்று.

    வடிவேலுவோ.. யாரவர் அவர் வீட்டுமுகவரி, தெருமுகவரி என்று ஏதாவது அடையாளம் இருக்கிறதா? என்று கேட்பார். அதற்கு அவர் அதெல்லாம் எதுக்கு தம்பி என்று “கருப்பா, குள்ளமா, சுருட்டை முடிவச்சிட்டு ஒருத்தர் இருப்பாரே அவரை உங்களுக்குத் தெரியுமா?  என்று மீண்டும் சொல்லி அவரைத் தெரியுமா? என்று கேட்பார். வடிவேலுவுக்குக் கோபம் வந்துவிடும்..

    “என்னய்யா நீ முகவரியும் தரமாட்டேங்கிற, விவரமும் சொல்ல மாட்டேங்கிற யாரு யாருன்னு கேட்டா எனக்கு எப்படிய்யா தெரியும்? என்ற கேட்பார்.

    அப்போது அவருக்குத் தலைக்கு மேல் கோபம் வந்துவிடும்.
    ஏன்டா... அது நான் தான்டா.
    நான் இந்த தெருவுல எந்த அளவுக்குப் பிரபலமாகியிருக்கேன் என்று தெரிஞ்சிக்கதான்டா அப்படிக் கேட்டேன். யாரைக் கேட்டாலும்..

    சொன்னவுடனே என்னை நல்லாத் தெரியும்! நல்லாத் தெரியும்! என்று சொல்லிட்டுப் போறாங்க. நீ மட்டும் எப்படிடா என்னைய தெரியாதுன்னு சொல்லாம் என்று போட்டு வடிவேலுவை அடிப்பார்.

    இப்படியொரு நகைச்சுவை. இதில் இவர் யார்? என்று இவர் தகுதி என்ன என்று இவருக்கே தெரியவில்லை. இன்னொருவரிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இவர் நினைக்கிறார்.

    • இதுபோல இன்னொரு சென் கதை...

    ஒரு துறவி இறக்கும் நிலையில் இருப்பார். அவரைச்சுற்றி அவரது சீடர்கள் சூழ்ந்திருப்பார்கள். தன் குரு கடைசியில் என்ன வார்த்தை சொல்லப் போகிறார் என்று ஆவலாகக் காத்திருந்தார்கள். அந்தக் கடைசி வார்த்தை அவரது வாழ்வின் மொத்த அனுபவமாக இருக்கும் என்று அந்த வார்த்தையைத் தெரிந்துகொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

    அந்த குருவோ தம் சீடர்களில் சிறந்த சீடனை அருகே அழைத்தார். அவரிடம் தம் வாயைத் திறந்து காட்டினார். பின் என்ன தெரிந்தது என்று கேட்டார்.

    சீடன் சொன்னார், “குருவே பற்கள் தெரிகின்றன, நாக்கு தெரிகிறது“ என்றார்.

    குரு சொன்னார். பார்த்தாயா.. உனக்கே எல்லாம் தெரிந்திருக்கிறது. பற்கள் நிலையில்லாதவை, நாக்கு நிலையானது என்பது உனக்குத் தெரிந்திருக்கிறது. இந்த உலகில் எல்லாமே இப்படித்தான் நமக்குத் தெரியும் என்பதுதான் பலநேரங்களில் நமக்கு மறந்துபோகிறது என்றார்.


    • இதே போன்ற இன்னொரு கதை..
    ஒரு தொடர்வண்டியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான் ஒருவன். பொதுவாக அவன் ஒவ்வொருவரிடமும் சென்று...

    சாப்பிட்டு இரண்டு நாளாச்சுங்க..
    கை ஒடிஞ்சுபோச்சு..
    கால் ஒடிஞ்சிபோச்சு..
    கண்கள் தெரியல என ஏதாவது பொய்சொல்வான்.. அதை நம்பிய சிலர் அவனுக்குத் தன்னால் முடிந்த பணமோ, காசோ கொடுப்பார்கள்.

    ஒரு நாள் இப்படித்தான் தொடர்வண்டியில் காலதர்(சன்னல்) அருகே அமர்ந்திருந்த ஒருவரிடம் சென்று பொய்சொல்லி பிச்சையெடுக்கலாம் என்று அருகில் சென்று வாயைத் திறந்தான். அவர் அவன் பேசும் முன்பே தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார். இந்தப் பிச்சைக்காரனுக்கோ உழைக்காத காசு உடம்புல ஒட்டாது என்று மனம் சொன்னது. இன்னொரு கேள்வியும் அவன் மனதில் தோன்றியது.

    இவர் எப்படி நாம் எதுவும் சொல்லாமலேயே பணம் கொடுத்தார்? என்று பல்வேறு சிந்தனைகளோடு. சரி என்று, 


    வேறு பிச்சைக்காரன் போல தன் சட்டையை இன்னும் கிழித்துக்கொண்டு தலைமுடியை மாற்றி சீவிக்கொண்டு கண்ணில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஐயா.. என்று அவரிடமே மீண்டும் சென்றான்..

    இப்போதும் அவர் அவன் பேசும் முன்பே இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார்.  இவனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? என்று எதுவும் பேசாதவனாக மீண்டும் சட்டையைக் கழற்றிவிட்டு கைகளை மடக்கி உள்ளே வைத்துக்கொண்டு ஒருகையில்லாதவன் போல அவரிடமே மீண்டும் போய் நின்றான். இவன் ஆரம்பிக்கும் முன்பே அவரும் வழக்கம் போல இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார்.

    இப்போதும் இவனால் தன் மனதில் தோன்றிய கேள்வியை அவரிடம் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

    அவரிடமே கேட்டான்...

    ஐயா நான் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லையா?
    நான் தான் முதலில் கால் ஒடிந்தவனாக வந்தேன்.
    இரண்டாவது முறை கண் தெரியாதவனாக வந்தேன்.
    மூன்றாவது முறை கைஇல்லாதவனாக வந்தேன்.

    என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா என்று கேட்டான்.

    அதற்கு அந்த மனிதர் சொன்னார். தம்பி நீ ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தோற்றங்களோடு வரும் போதும் நீ யார் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது.

    ஆனால் பாவம் உனக்குத்தான் நீயார் என்று தெரியவில்லை என்று எண்ணி, சிரித்துக்கொண்டிருந்தேன் என்றார்.

    அவர் சொன்னதன் பொருள் புரிந்தும் புரியாமலும் அவன் அந்த இடத்தைவிட்டுச் சென்றான் என்றொரு கதை உண்டு.

    வடிவேலு நகைச்சுவை
    சென் கதை
    பிச்சைகாரன் கதை

    என மூன்று கதைகளும் சொல்லும் கருத்து ஒன்றுதான்.
    உள்முகத்தேடல் என்பது ஒவ்வொருவருக்கும் தேவை என்பதுதான் அது.

    மனித மனதை விடச் சிறந்த தேடுபொறி இதுவரை கண்டறியப்படவில்லை, மனித மூளையில் உள்ள செய்திகள் அளவுக்கு கூகுளின் தரவுத்தளத்தில் கூட செய்திகள் இல்லை என்ற வாழ்வியல் உண்மையையே இக்கதைகள் உணர்த்துகின்றன. 

சனி, 16 ஜூன், 2012

பொய் சொல்லும் காதுகள்

                   நம்மிடமே இருந்தாலும் சிலநேரங்களில் நம் புலன்கள் நமக்கு எதிராகவே செயல்படுகின்றன. மெய், வாய், கண், செவி, மூக்கு என ஒவ்வொரு புலன்களும் நமக்கு எதிராக எப்போதெல்லாம் செயல்படுகின்றன என்பதைக் கொஞ்சம் உற்றுநோக்கிப் பார்த்தால்.

  • உடல்நிலை பாதித்தல்
  • மனநிலை பாதித்தல் 
என்னும் இருநிலைகளை நாம் அடையாளம் காணமுடியும். இன்று ஒரு அகப்பாடலைக் காண இருக்கிறோம். இதில் தலைவியின் காதுகள் அவளிடம் பொய் சொல்கின்றன. இது உடல்நிலை பாதிப்பா? மனநிலை பாதிப்பா? என்று பார்க்கலாம் வாங்க..


  • காது பேசுமா?
  • பேசினால் பொய்பேசுமா? 

என்று தோன்றுகிறதா? பாடலைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.


                    திருமண நாள் குறிக்கப்பட்ட இடைப்பட்ட நாளில் தலைவனின் நினைவாகவே வாடியிருக்கிறாள் தலைவி. அவளிடம் உன்னால் அவன் நினைவைத் தாங்கிக்கொள்ளமுடியுமா? என்று கேட்கிறாள் தோழி. அதற்குத் தலைவி பதிலளிப்பதாக இப்பாடல் அமைகிறது.

                    நள்ளிரவுப் பொழுதில் பனைமரத்தில் கட்டப்பட்ட கூட்டில் தம் அருகில் ஆண்அன்றில்பறவை இருந்தாலும் பெண் அன்றில் ஆண்அன்றிலை எண்ணி ஒலி எழுப்பும். அப்போது ஊர்மன்றத்தைப் பிளந்து கொண்டு செல்வதுபோன்ற பேரொலியுடன் தலைவனின் நெடிய தேர் வரவில்லை என்றாலும் வருவதுபோலவே என் காதில் ஒலிக்கிறது அதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன் என்கிறாள் தலைவி.

பாடல் இதுதான்.


முழவு முதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக்

கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே.


குறுந்தொகை 301, 
குன்றியனார், 
இப்பாடலின் ஆங்கில வடிவம்...


My friend! In the middle of the night

my eyes have abandoned  sleep,
and even though I know that he isn’t coming
I feel I hear his tall chariots
with many bells, splitting the earth
and arriving in our town’s common grounds
as the black-legged anril bird
with her first set of eggs
in her nest woven
with small twigs from the luxuriant fronds
of the palm trees with drum-like trunks
calls out in pain for her loving mate.              

பாடலின் அழகுக்கு மேலும் அழகுதரும் கூறுகள்

  • ஒரே கூட்டில் வாழ்ந்தாலும் உடனிருக்கும் தம் துணையைப் பிரிந்ததாக எண்ணி அன்றில் பறவை வருந்தும் என்ற புலவரின் கூற்று அஃறிணை உயிரினங்களின் காதலுக்குத் தக்க சான்றாக அமைகிறது.
  • தலைவனின் தேர் வரவில்லை என்றாலும் பேரொலியுடன் விரைந்து வருவதுபோல ஓசை என்காதுகளில் ஒலிக்கும் என்ற தலைவியின் நினைவு தலைவன் மீது தலைவி கொண்ட பெருங்காதலுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
தொடர்புடைய இடுகைகள்