வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாமனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாமனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 மே, 2014

பிறந்த ஊருக்குப் பெருமைசேர்த்தவர்கள்!


1. உ
. வே. சாமிநாதையர் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.  தமிழ் நாட்டில்  கும்பகோணத்துக்கு அருகே உள்ள "உத்தமதானபுரம்" எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்


ஞாயிறு, 20 அக்டோபர், 2013

வடலூரும் வார்தாவும்

மு.சௌமியா வணிகவியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு


அரசியல் இருட்டை
அகற்ற ஓர் காந்தி
சமுதாய இருட்டைச்
சாய்க்க ஓர் “சோதி“
எங்கள் சரித்திர வானின்
சகோதர ஒளிகள்!
ஒருவரோ
மருவூரில் பிறந்தும்
மருவுதலை விலக்கித்
துறவூரில் வசித்த
தோன்றல்!
மற்றவரோ-
போர்ப்பந்தா் தனில் பிறந்தும்
போர்வெய்யில் பொழுதுகளில்
நீர்ப்பந்தல் வேயும்
நிழல்மேகம் ஆனவர்!

உப்புவரியை எதிர்த்தார்
ஒருவர், பசித்தவரின்
உப்புவரிக்கண்ணீரை
ஒருவர் துடைத்துவைத்தார்
வள்ளலோ –
தேகதேசத்தைத்
தின்றுவந்த
பசியெனும் பழைய
பகையை எதிர்த்தே
அன்னக் கணைகளால்
அமர் புரிந்தவர்!

அண்ணலோ – தேசதேகத்தைத்
தீண்டிப் பரவிய
வெள்ளைக் குட்ட
வியாதியை விரட்ட
சத்தியாக்கிரக
சஞ்சீவி தந்தவர்

இருவரும் சமாதானத் தூதின்
சாட்சியாய் வெண்துகில்
உடற்கொடி மரத்தில்
உடுத்தித் திரிந்தவர்
இருவரும்
சமரசம் என்பதோர்
சத்திய மந்திரம்
உச்சரிப்பதற்கென
உருவான உதடுகள்
அ.சந்தியா வணிகவியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் (நேயர் விருப்பம்–வடலூரும் வார்தாவும் ) எழுதிய கவிதை பெரியார் பல்கலைக்கழக மாணர்வகளுக்குப் பாடமாக உள்ளது. எங்கள் கல்லூரி மாணவர்கள் இந்தக் கவிதையை உள்வாங்கி வரைந்துவந்த ஓவியங்கள் இவை. மாணவர்களின் புரிதலையும், அவர்களின் கலைத்திறனையும் வாழ்த்துவோம் நண்பர்களே)


சனி, 5 அக்டோபர், 2013

பசிப்பிணி போக்கிய வள்ளலார்

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்“ 
 “திருவருட்பாவை தந்தவர்
 “சமரச சன்மார்க்கம் கண்டவர்“
“ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை“ என்று ஜோதியில் இறைத்தன்மையை உணர்ந்தவர். 
“பசிப்பிணியை அகற்ற வேண்டும் என்று எண்ணியவர்“
அவர்தான் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
  • இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. இவரது பாடல்களை சைவ அடியார்களான நாயன்மார்களின் பாடல்களோடு ஒப்பிட்டு மகிழ்ந்தனர் தமிழ் உணர்வாளர்கள். தமிழ்மீதும் சைவசமயத்தின் மீதும் மிகுந்த பற்றுடைய ஆறுமுகநாவலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  வள்ளலார் பாடிய பாடல்கள் அருட்பா அல்ல அது மருட்பா என்றும் அவை நாயன்மார்களின் பாடல்களோடு ஒப்புநோக்கத்தக்கவை அல்ல என்றும் ஆறுமுக நாவலரும், அவரைத் சார்ந்ததோரும் தமிழ்நாட்டில் வழக்குத் தொடர்தனர். அக்காலத்தில் நடந்த மிகப்பெரிய கருத்துப் போராட்டமாக இது அமைந்தது.

 

வள்ளலார் பதிப்பித்த நூல்கள்.

1.     சின்மய தீபிகை
2.     ஒழிவிலொடுக்கம்
3.     தொண்டமண்டல சதகம்

 

இவர் இயற்றிய உரைநடை நூல்கள்

1.     மனுமுறை கண்ட வாசகம்
2.     ஜீவகாருண்ய ஒழுக்கம்


இராமலிங்க அடிகள் கொள்கைகள்

1.     கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆவார்.
2.     புலால் உணவு உண்ணக்கூடாது.
3.     எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4.     சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5.     இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6.     எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7.     பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8.     சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
9.     எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

நல்லதொரு சமூகசீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த வள்ளலாரின் பிறந்தநாளான இன்று அவரது கொள்கைகளை எண்ணிப்பார்ப்பது நம் கடமையாகும்.


வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

இன்று கலீலியோ பிறந்தநாள்

கலீலியோ கலிலி (பெப்ரவரி 15, 1564 - ஜனவரி 8, 1642) பிறந்தார். இவர் இத்தாலியில் பிறந்தார்.

இயற்பியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்று போற்றப்பட்டராவார்.

“ஒன்பது கோள்களில் ஒன்றுதான் உலகம், நிலா பூமியைச் சுற்றுகிறது.பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதும் இன்று நாமறிந்த உண்மை. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னால், 

நிலவும் சூரியனும் பூமியைச் சுற்றுகின்றன என்று நம்பினார்கள். நம் புராணங்களில் கூட அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு ஓடினான் என்றும்..

சூரியன் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கிலிருந்து மேற்கே செல்வார் என்றும் சிந்தனைகள் உண்டு. அந்தக் காலத்தில் சூரினைச்சுற்றித்தான் அனைத்துக் கோள்களும் சுற்றிவருகின்றன என்ற கருத்தைச் சொன்னதற்காக பெருந்துன்பத்தை அனுபவித்தார் கலீலியோ. இவர் கணிதமும், இயற்பியலும் பயின்றார். படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் நிறையவே கேள்விகள் கேட்டார். கற்பிக்கப்படும் அறிவியல் கருத்துக்களை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள இவர் மட்டும் ஆசிரியர்களிடம் அதற்கான ஆதாரங்களைக் கேட்பார். அரிசுடாடில் கூற்றைக்கூட மறுத்துப் பேசும் அளவுக்கு இவருக்கு அறிவியலின் மீது ஆர்வமும், பற்றும் இருந்தது. 

சனிகிரகத்தைச் சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார். வியாழன் கோளுக்கு நான்கு நிலாக்கள் உண்டு என்பதையும் கண்டுசொன்னார். சூரியனில் கரும்புள்ளிகள் தெரிவதை அவர் கண்டார். அவை என்னவாக இருக்கும் என்ற சி்ந்தித்தபோது அவை சூரியனைச்சுற்றும் கிரகங்களாகத்தான் இருக்கும் என்று சொன்னார். சூரியனைச் சுற்றித்தான் அனைத்துக்கோள்களும் சுழல்கின்றன என்ற கருத்தை அதன் வழிதான் நிரூபித்தார் கலீலியோ. கலீலியோ அவர்களின் தேடல் இன்றைய இளம் தலைமுறையினர் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகும்.

புதன், 2 ஜனவரி, 2013

அன்று இதே நாளில் (03-01-1760)

"வரி, வட்டி, திறை, கித்தி...
 எங்களோடு வயலுக்கு வந்தாயா? 
ஏற்றமிறைத்தாயா? 
நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? 
அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? 
மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி".


என்று சாக்சன் துரையோடு வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்த்திய உரையாடலை நாம் நன்கறிவோம். திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய சாக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது.
ஆங்கில மோகத்தால் தமிழர் மரபுகளையும், பண்பாட்டையும் மறந்துபோன இன்றைய குழந்தைகளுக்கு, இவரைத் தெரியுமா?

ஒரு சிறுவன் மாறுவேடப்போட்டிக்கு வழிமுறைகேட்டுவந்தான். நீ எந்த வேடம் ஏற்கிறாய்? என்று கேட்டேன்..

தாங்களே கூறுங்கள் என்றான்..

நானும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் ஏற்கிறாயா? என்று கேட்டேன்.

கதை என்ன என்று கேட்டான். முழுவதும் கேட்டவன் சரி ஏற்கிறேன் என்றான். ஆனால் சாக்சன் துரை பாத்திரம்தான் ஏற்பேன் என்றான். ஏன் என்று கேட்டால்,அவன் சொல்கிறான்.

இதில் கட்டபொம்மன் கடைசியில் இறந்துவிடுகிறான். மேலும் இவரது உடையைவிட சாக்சன் துரையின் உடை அழகாக இருக்கிறது என்கிறான்.

இந்தச் சிறுவனுக்கு என்னசொல்லிப் புரியவைப்பது.. ??

அதனால் இன்று வீரபாண்டியகட்டபொம்மன் பிறந்தநாள் என்பதை நாம் நினைவில் கொண்டு அவரது பெருமைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்துரைப்போம்.


(03-01-1760) அன்று இதே நாளில் நம் மண்ணுக்காகப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இந்த நாளில் அம்மாமனிதரை நினைவுபடுத்தவே இவ்விடுகை..

எனக்குப் பிடித்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின்
கவிதை ஒன்றை இன்று பதிவுசெய்கிறேன்..

வீரபாண்டியக் கட்டபொம்மன்

மீசை முறுக்கிநின்று வெள்ளையரே உங்களுக்கோர்
காசும் தாரோமென்று கர்ஜித்த - கேசரியாம்
பாஞ்சைப் பதிவீர பாண்டியனை நெஞ்சமே
வாஞ்சையொடு பாடுவோம் வா.
செந்தில் முருகன் சேவடியைத்
     
தினமும் போற்றித் தொழுதிடுவோன்;
சந்தக் கவிகேட் டுளமகிழ்ந்து
     
தரளம் வாரி அளித்திடுவோன்
வந்த பொல்லா வெள்ளையரை
மதியா வீர பாண்டியனைச்
சிந்தை மறவா தோவியத்தில்
சிலையில் கண்டு போற்றுவமே.
தஞ்சம் என்று வந்தவரைத்
     
தாங்கும் இனிய குணசீலன்;
பஞ்சம் அறியாப் பழம்பதியாம்
     
பாஞ்சைப் பதியில் அரசாண்ட
விஞ்சு புகழ்சேர் வீராதி
     
வீரன் கட்ட பொம்மன்பேர்
நெஞ்சில் எழுதி வைத்தன்பால்
     
நித்தம் நித்தம் போற்றுவமே.
'தானம் வேண்டில் தருகின்றேன்;
     
தருமம் வேண்டில் தருகின்றேன்;
வானம் இடிந்து விழுந்திடினும்
     
வரிதந் தும்மை வணங்கேன்' என்று
ஏனை வெள்ளைக் கம்பெனியர்க்கு
     
எடுத்துக் கூறித் தென்னாட்டின்
மானம் காத்த பாண்டியனை
     
மறவா தென்றும் போற்றுவமே.
'தானம் வேண்டில் தருகின்றேன்;
     
தருமம் வேண்டில் தருகின்றேன்;
வானம் மழையைப் பொழியுதையா!
     
மண்ணில் பயிரும் வளருதையா!
யான்இங் குமக்கு வரியிறுப்ப
     
தேனோ?' என்று வெள்ளையர்முன்
மானம் காத்த பாண்டியனை
     
மறவா தென்றும் போற்றுவமே.
சீமை வெள்ளைக் காரர்படை
     
சிதறி ஓட முறியடித்தோன்
ஊமைத் துரையென் றுலகுபுகழ்
     
ஒப்பில் விஜயன் முன்வந்த
வீமன் வீர பாண்டியனின்
வெற்றி முரசு முழக்கியிந்தப்
பூமி மீதெந் நாளுமவன்
புகழைப் பாடிப் போற்றுவமே.
காய்ந்து போரில் வெள்ளையரைக்
     
கறங்கச் செய்த ஆண்சிங்கம்;
ஆய்ந்து வினைகள் செய்துநிதம்
     
அறங்கள் காத்த அறிவுடையோன்;
பாய்ந்து நாயை முயல்விரட்டும்
     
பாஞ்சை ஆண்ட பாண்டியனுக்கு
ஏய்ந்த புகழை இனியதமிழ்
     
இசையிற் பாடிப் போற்றுவமே.
மான முற்றும் விலைகொடுத்து
     
மண்ணை வாங்கி அரசாளும்
ஈன வாழ்வை உள்ளத்தில்
     
எள்ளத் தனையும் எண்ணாதோன்;
ஊன உடலை வெறுத்துதறி
     
உலகி லழியாய்ப் புகழ்நாட்டி
வானம் சென்ற வீரனைநாம்
     
மறவா தென்றும் போற்றுவமே.
கட்ட மொம்மன் சீமையிலே
     
காகம் பறவா தெனுமாறு
சட்ட திட்டம் செய்துகுடி
     
தாங்கி நின்ற ஜகவீரன்;
துட்டர் அஞ்சும் துரைராஜன்
     
துணிந்த வீரன் என்றுலகில்
எட்டுத் திசையும் புகழ் பெற்றோன்
     
எங்கள் வீர பாண்டியனே.
கட்டமொம்மன் சீமையிலே
     
காகம் பறவா தெனுமாறு
சட்ட திட்டம் செய்துகுடி
     
தாங்கி நின்ற ஜகவீரன்;
துட்டர் கண்டன் சூராதி
     
சூரன் என்றிவ் வுலகெங்கும்
பட்டம் பெற்ற பாண்டியனைப்
     
பாடிப் பாடிப் போற்றுவமே.
அன்ன சாலை அமைத்திடுவோம்;
     
ஆல யங்கள் கட்டிடுவோம்;
பன்னற் கரிய கலைகளெல்லாம்
     
பயிலக் கழகம் கண்டிடுவோம்;
தென்னர் போற்றும் பாஞ்சையினைத்
     
திருத்தி அளகை யாக்கிடுவோம்;
மன்னர் வீர பாண்டியன்பேர்
     
வையத் தென்றும் வழங்கிடவே.
கெஞ்சி வாழும் வாழ்க்கையினைக்
     
கிஞ்சித் தேனும் விரும்பாத
செஞ்சி யாண்ட தேசிங்கத்
     
திறலோன் அனைய போர்வீரன்;
வஞ்சர் இழைத்த தீவினையால்
     
மாண்ட கட்டபொம்மான்பேர்
விஞ்சும் ஆண்மை பெறுவதற்கு
     
வீரர் போற்றும் மந்திரமே.


வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த தமிழ்விக்கிப்பீடியா பதிவு