வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வலைப்பதிவு நுட்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைப்பதிவு நுட்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜூன், 2020

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை I இடுகை வெளியீடு, தளவமைப்பு, தீம் (BtoA P...


BTOA 2 என்ற பெயரில் வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை என்ற தொடர்பதிவின் வரிசையில் இரண்டாவது பதிவாக இப்பதிவு வெளியிடப்படுகிறது.

இப்பதிவில் வலைப்பதிவில் எவ்வாறு நாம் இடுகைகளை வெளியிடுவது, அதன் தளவமைப்பு மற்றும் தீம் பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

செவ்வாய், 9 ஜூன், 2020

கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும்





கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும் என்ற இப்பதிவானது வலைப்பதிவு, யூடியூப் ஆகிய இரு தளங்களிலும் ஆட்சென்சின் இன்றைய நிலையையும், புதிய பதிவர்களுக்கான ஆட்சென்சு குறித்த அறிமுகமாகவும் அமைகிறது.



புதன், 3 ஜூன், 2020

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)


            புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்திருப்பதில்லை.   சில தொழில்நுட்பங்கள் மட்டுமே காலத்தை வென்று நிலைபெறுகின்றன. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகள் தனிச்சிறப்பு பெறுகின்றன. வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் கலந்துரையாடுவதற்குமான வழிமுறைகள், இணையதளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் இலவசமாகத் தம் கருத்துகளை தம் மொழியில் வெளியிட இவ்வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.

புதன், 22 மார்ச், 2017

ப்ளாக்கரின் புதிய தீம்கள்



ப்ளாக்கரின்   அறிமுகமாக அதன் புதிய தீம்கள்

 வெளியிடப்பட்டுள்ளன. வலைப்பதிவர்களையும், 

பார்வையாளர்களையும் ஈர்க்கும் தன்மையில் இவ்வடைப்பலகை 

வடிமைப்புகள் அமைந்துள்ளன.

புதன், 14 செப்டம்பர், 2016

கணித்தமிழ் வளா்க்கும் வலைப்பதிவு நுட்பங்கள்

(உத்தமம் நிறுவனமும் காந்திகிராமகிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 15வது உலகத் தமிழ் இணையமாநாட்டில் நான் வழங்கிய கட்டுரை.
தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளுள் ஒன்று காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளுதலாகும். அவ்வடிப்படையில் கணினிக்கு ஏற்ப தமிழைக் கட்டமைத்து கணித்தமிழ் வளர்த்து வருகிறோம். கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பதிவுகள் குறிப்பிடத்தக்கன. அவ்வலைப்பதிவுகளின் சிறப்பியல்புகளைக் கூறி, வலைப்பதிவுகள் வழியாக கணித்தமிழ் வளர்க்கும் வழிமுறைகளை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வலைப்பதிவுகளின் தனிச்சிறப்புகள்

      புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்திருப்பதில்லை.   சில தொழில்நுட்பங்கள் மட்டுமே காலத்தை வென்று நிலைபெறுகின்றன. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகள் தனிச்சிறப்பு பெறுகின்றன. வலைப்பதிவுகளை எளிதில் உருவாக்க முடியும். ப்ளாக்கா், வேர்டுபிரசு, தம்ளர் (1)என எந்த இலவச வலைப்பதிவுகளாக இருந்தாலும்  அவற்றை உருவாக்குதல், பயன்படுத்துதல், வெளியிடுதல் என பல நிலைகளிலும் எளிமையானதாக இருப்பது வலைப்பதிவுகளின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும். மேலும் இவ்வலைப்பதிவுகளை இணையதளங்களுக்கு இணையாக வடிவமைக்கமுடியும் என்பதும், வலைப்பதிவுளில் எழுதப்படும் கருத்துக்கள் தேடுபொறிகளில் கிடைக்கப்பெறுவதும் கூடுதல் சிறப்பாக அமைகின்றன.
விக்கிப்பீடியாவும் வலைப்பதிவுகளும்
      உலக மொழிகளுக்கு இணையாக தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இக்காலத்தில், விக்கிப்பீடியாவிலும் அதன் பல்வேறு திட்டங்களான விக்சனரி, விக்கி மேற்கோள், விக்கி நூல்கள் போன்ற பல திட்டங்களிலும் தமிழ் மொழி தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான பெரிய களம் உள்ளது. தமிழ் கட்டுரைகளை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கவும், பிறமொழிகளில் உள்ள கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கவும் வேண்டிய தேவை உள்ளது. மேலும் ஒளி எழுத்துணரி (OCR) போன்ற தொழில்நுட்பங்களின் வழியாக பட வடிவில் இருக்கும் நூல்களையும் ஒருங்குறி எழுத்துருவாக்கி விக்கிப்பீடியாவிலும், வலைப்பதிவுகளிலும் வெளியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் விக்கிப்பீடியாவில் உள்ள செய்திகளைப்பயன்படுத்தி அதில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் தமிழ் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தமுடியும். தமிழ் வலைப்பதிவுகளால், தமிழ் விக்கிப்பீடியாவை வளப்படுத்தவும், தமிழ் விக்கிப்பீடியாவால் தமிழ் வலைப்பதிவுகளில் இடம்பெறும் செய்திகளுக்கான நம்பகத்தன்மையை ஏற்டுத்துவதும் காலத்தின் தேவையாக அமைகிறது.
சமூகத் தளங்கள் வழியாக வலைப்பதிவு
       இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பேசுவது குறைந்து ஸ்மைலி எனப்படும் உணர்ச்சிக் குறியீடுகளால் தம் கருத்துக்களை வெளியிடும் நிலை வந்துள்ளது. கருத்து சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் என்பதெல்லாம் மொழி, நாடு என எல்லைகளைக் கடந்து விரிவடைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நம் நேரத்தைக் குறைத்துள்ளது என்ற கருத்து இன்று நகைச்சுவையாகியுள்ளது. ஏனென்றால் முகநூல், டுவைட்டா், கூகுள் பிளஸ், கட்செவி (வாட்சாப்) யுடியுப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் தான் மக்கள் தம் பொன்னான நேரத்தை அதிகமாக செலவிட்டுவருகின்றனர். இச்சமூகத்தளங்களில் அதிகம் பகிரப்படும் செய்திகளுள் பல, வலைப்பதிவுகளில் முன்பே எழுதப்பட்டவை என்பதும் மீள்பதிவாகவே பெரிதும் இவை வெளியிடப்படுகின்றன என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும். மேலும் மேற்கண்ட சமூகத் தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை தேடுபெறியில் தேடினால் முழுவதும் அச்செய்திகள் கிடைப்பதில்லை என்பதையும் நாம் உணரவேண்டும். அதனால் வலைப்பதிவுகளில் எழுதப்படும் செய்திகளைத் தாமாக இந்த சமூகத்தளங்களில் வெளியிடும் தொழில்நுட்பங்களை அறிந்து வலைப்பதிவுகளில் பயன்படுத்தினால் வலைப்பதிவில் எழுதப்படும் செய்திகள் இத்தளங்களிலும், இந்த சமூகத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் வலைப்பதிவுகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடும் வாய்ப்பு ஏற்படும்.
வலைப்பதிவுகளின் குழு பதிவிடல்
      தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை அதன் தொடர்ச்சியிலும் உள்ளது. அதுபோல எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் நாம் அறிந்துகொள்வதிலோ அதில் நமக்கென ஒரு பக்கத்தை உருவாக்குவதிலோ சிறப்பொன்றும் இல்லை. அந்த தொழில்நுட்பத்தை நாம் எப்படி முழுமையாக, சரியாக, தொடர்ந்து பயன்படுத்துகிறோம் என்பதில்தான் சிறப்பு உள்ளது. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகளை ஆரம்பித்துவிட்டு தொடக்கத்தில் ஒரே நாளில் பல இடுகைகளை வெளியிட்டவர்கள் பின்னர் வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை இடுகைகளை வெளியிடும்போது அந்த வலைப்பதிவு பார்வையாளர்களை முழுவதும் சென்று  சேராமல்போகிறது. அதனால் வலைப்பதிவுகளின் அமைப்புகளில் உள்ள சில நுட்பங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவற்றுள் ஒன்று இடுகைத் திட்டமிடல் நாம் நேரம் கிடைக்கும்போது இடுகைகளை வலைப்பதிவுகளில் உள்ளீடு செய்துவிட்டு நாம் விரும்பிய தேதி மற்றும் விரும்பிய நேரத்தில் வெளியிட இயலும். மேலும் நம் வலைப்பதிவுகளில் விருந்தினரை ஆசிரியராக அழைத்து ஒரே நேரத்தில் பலரையும் குழுவாகப் பதிவிட முடியும் என்பதையும் வலைப்பதிவர்கள் அறிந்துகொண்டால் தம் வலைப்பதிவைத் தொடர்ந்து இற்றைப்படுத்தி அதில் தமிழ் வளர்க்கமுடியும்.
வலைப்பதிவுகளைத் திரட்டிகளில் சேர்த்தல்
       தமிழ் வலைப்பதிவுகளை ஒரே இடத்தில் திரட்டும் முயற்சியாக பல திரட்டிகள் காலந்தோறும் இருந்து வந்துள்ளன. அவற்றுள் தமிழ்மணம் குறிப்பிடத்தக்கது. இது தவிர இன்ட்லி, திரட்டி, தமிழ் 10 ,  என  பல (2) திரட்டிகளும் செல்வாக்குப் பெற்றுள்ளன. என்றாலும் பல புதிய வலைப்பதிவர்களுக்கு இந்த வலைப்பதிவுகளைத் திரட்டியில் சேர்க்கும் நுட்பம் தெரியவில்லை. அதனால் தம் பதிவைத் தாம் மட்டுமே வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு திரட்டிகளுமே புதிய வலைப்பதிவுகளைத் தம் திரட்டிகளில் சேர்க்கும் நுட்பத்தை எளியமுறையில் விளக்கியுள்ளன. என்றாலும் அவற்றை இன்னும் எளிமையாக்கி யுடியுப் போன்ற காணொளி தளங்களின் வழி வழங்கினால் இந்த திரட்டிகளில் வலைப்பதிவர்கள் எளிதில் தம் வலைப்பதிவுகளைச் சேர்க்கமுடியும். தமிழ்மணம் என்ற திரட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவர்களுக்கென பல்வேறு துறைகளில் போட்டிகளை அறிவித்து பரிசளித்துப் பாராட்டி வந்தது. தமிழ்இணையப் பல்கலைக்கழகமும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சங்கமும் இணைந்து கடந்த ஆண்டு வலைப்பதிவர் போட்டிகளை அறிவித்து பரிசளித்துப் பாரட்டின. இதுபோல தொடர்ந்து வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டிகளை அறிவித்து பரிசளித்து வந்தால் புதிய வலைப்பதிவர்கள் உருவாகவும், அவர்கள் தொடர்ந்து எழுதவும் உதவியாக இருக்கும். உத்தமம், தமிழ் இணையப்பல்கலைக்கழகம் போன்ற இணையத்தமிழ் வளர்க்கும் அமைப்புகள் தமிழ் வலைப்பதிவுகளுக்கென ஒரு திரட்டியை உருவாக்கினால் வலைப்பதிவில் ஆக்கபூர்வமான பல தமிழ்க்கட்டுரைகளை உருவாக்கமுடியும்.

வலைப்பதிவுகளின் பதிப்பகம்
       வலைப்பதிவுகளில் பொழுதுபோக்காக எழுதுதல் என்பதையும் கடந்து தமிழை வளர்க்கும்நோக்குடன், பல பதிவர்கள் தம் பதிவுகளை நூலாக்கம் செய்துவருகின்றனர். தமிழ்மணம் என்ற திரட்டி கூட பதிவர் நூல்கள் என்ற பகுதியில் வலைப்பதிவர்தம் நூல்களை அறிமுகம் செய்துவருகின்றது. வலைப்பதிவர்களுக்கென பதிப்பகங்களை உருவாக்கினால். வலைப்பதிவில் எழுதப்படும் கருத்துக்கள் நூல் வடிவம் பெறவும் கணித்தமிழ் மேலும் வளம்பெறவும் வழிவகுப்பதாக அமையும்.  
குறுஞ்செயலிகளில் வலைப்பதிவுகள்
      மக்கள் இன்று, மேசைச் கணினி, மடிகணினிகளில் பயன்படுத்துவதைவிட திறன்பேசிகளிலும், பலகைக் கணினிகளிலும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் குறுஞ்செயலிகளையே அதிகம் பயன்படுத்த விரும்புகிறன்றனர். முகநூல், கட்செவி கூட இன்று பெரிதும் குறுஞ்செயலிகள் வழியாகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அதனால் வலைப்பதிவுகளையும் குறுஞ்செயலிவடிவத்தில் எளிமையாக்கி வழங்குவதால் வலைப்பதிவுகள் காலத்தைவென்று நிலைபேறு பெறமுடியும், மேலும் வலைப்பதிவுகளுக்கான திரட்டிகளையும் குறுஞ்செயலி வடிவத்தில் வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
காலத்துக்கு ஏற்ற வலைப்பதிவு மாற்றங்கள்      
       மாறிவரும் தொழில்நுட்பமாற்றங்களுக்கேற்ப வலைப்பதிவுகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் வலைப்பதிவுகளின் வழியாக இணையத்தில் மேலும் தமிழ் வளர்க்கமுடியும்
1. பல்வேறு சமூகத்தளங்களிலும் பகிர்வதற்கான பொத்தான்களை அமைக்கவேண்டும். அவற்றின் வழியாக வலைப்பதிவில் வெளியிடப்படும் செய்திகள் உடனுக்குடன் பல்வேறு சமூகத்தளங்களிலும், பல்வேறு சமூகத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் வலைப்பதிவுகளிலும் வெளியாகும் வசதியை அளிக்கவேண்டும்.
2. தமிழ் வலைப்பதிவுகளை ஊக்குவிக்கும் விதமாக ஆட்சின் போல விளம்பரங்களை வெளியிடவும் வருமானம் பெறவும் வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும்.
3.  தமிழ் மணம் திரட்டியில் வெளியிடப்படும் தரவரிசையானது அந்தத் திரட்டியில் பதிவு செய்த பதிவுகளை மட்டும் வரிசைப்படுத்துகிறது. மாறாக ப்ளாக்கர், வேர்டுபிரசு என புகழ்பெற்ற வலைப்பதிவுகளில் தமிழில் எழுதப்படும் எல்லா பதிவுகளையும் வரிசைப்படுத்தி தர எண் வெளியிடப்படவேண்டும்.
4. வலைப்பதிவுகளில் எழுதப்படும் கட்டுரைகளை வாசிக்கும் நிலையிலிருந்து கேட்கும் வசதியை ஏற்படுத்தவேண்டும். இதனால் பார்வையாளர்கள் தாம் விரும்பும் வலைப்பதிவுகளை கேட்டுக்கொண்டே தாம் விரும்பும் பிற தளங்களில் உலவமுடியும்.
இவை போன்ற மாற்றங்களானது வலைப்பதிவு சேவையை மேலும் பயனுள்ளவையாக்க உதவியாக இருக்கும்.
நிறைவாக
       நாளொரு தொழில்நுட்பம், பொழுதொரு கண்டுபிடிப்பு என மாறிவரும் சூழலில், வலைப்பதிவுகள் வழி கணித்தமிழ் வளர்ப்பதில் தமிழ் வலைப்பதிவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரலாறு, அறிவியல் என பல துறைசார்ந்த செய்திகளும் வலைப்பதிவுகளில் எழுத்தாகவும், ஓவியமாகவும், படமாகவும், அசைபடமாகவும், ஒலியாகவும், காணொளியாகவும், மின்னூல் வடிவிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையதளங்களுக்கு இணையாக தேடுபொறிகளில் கிடைக்கின்றன.
      இலவசமாகக் கிடைப்பதும், உருவாக்குதல், பயன்படுத்துதல், வெளியிடுதல் ஆகிய நிலைகளில் எளிமையாக இருப்பதும் வலைப்பதிவின் சிறப்பாகவுள்ளது. மேலும் தேடுதலின்போது இணையதளங்களுக்கு இணையாகக் கிடைப்பதும் தனிச்சிறப்பாகவுள்ளது.
தமிழ் வலைப்பதிவுகளால், தமிழ் விக்கிப்பீடியாவை வளப்படுத்தவும், தமிழ் விக்கிப்பீடியாவால் தமிழ் வலைப்பதிவுகளில் இடம்பெறும் செய்திகளுக்கான நம்பகத்தன்மையை ஏற்டுத்துவதும் காலத்தின் தேவையாக அமைகிறது
சமூகத் தளங்களுடனான பகிரும் வசதி வலைப்பதிவுகளுக்கு இருந்தாலும் இந்த வசதி மேலும் எளிமைப்படுத்தப்படவேண்டும். குழு பதிவிடல், திட்டமிட்டு வெளியிடுதல் போன்ற நுட்பங்களைப் பலரும் அறிந்தால் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடும் வாய்ப்பு ஏற்படும்.
வலைப்பதிவுகளைத் திரட்டிகளில் சேர்க்கும் நுட்பங்களை மேலும் எளிமைப்படுத்தவேண்டும். வலைப்பதிவர்களைக் கவரும் பல்வேறு வசதிகளை மேலும் அறிமுகப்படுத்தவேண்டும். குறுஞ்செயலி வடிவில் திரட்டிகளை உருவாக்கவேண்டும்.
வலைப்பதிவர்களுக்கென பதிப்பகம் உருவாக்கப்பட்டால், வலைப்பதிவுகளில் எழுதப்படும் கட்டுரைகள் நூலாக்கம் பெற்று கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பதிவுகளும் சிறப்பிடம் பெறும்.
சமூகத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு வலைப்பதிவுகளையும் குறுஞ்செயலி வடிவில் கொண்டுவரவேண்டும். வலைப்பதிவுகளை, வாசிப்பதுபோல கேட்கும் வசதியையும் ஏற்படுத்தவேண்டும். வலைப்பதிவர்களுக்கென போட்டிகளும், வலைப்பதிவில் விளம்பரம் வெளியிடுதலும், வருமானம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்துவதும் காலத்தின் தேவையாகவுள்ளது.
இணையத்தில் தமிழை உள்ளீடு செய்ய இன்று பல வழிகள் உண்டு என்றாலும் அவற்றுள் பயன்படுத்த எளிதானதும், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவர வசதியுள்ளதுமான வலைப்பதிவுகள் குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன. அதனால் வலைப்பதிவு நுட்பங்களை அறிவோம் கணினி வழி தமிழை வளர்ப்போம்.

அடிக்குறிப்புகள்



திங்கள், 24 டிசம்பர், 2012

தமிழ் பேசும் கணினி



இன்றைய சூழலில் உலகமே சிறு கிராமமாக மாறிவிட்டது. வெவ்வேறு நாடுகளில் வாழ்வோரும் இணையமேடையில் ஒன்றாகக் கூடித் தங்கள் கருத்துக்களை மொழிப்பாகுபாடின்றிப் பகிர்ந்து கொள்கிறார்கள். அறிவுக்கு மொழி தடையல்ல என்ற சிந்தனை மேலோங்கியுள்ளது. கணினியும் இணையமும் அடைந்துவரும் வளர்ச்சியை உற்றுநோக்கும்போது, எதிர்காலத்தில் உலகத்தின் ஒரே மொழி கணினியின் குறியீட்டு மொழியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அதனால் கணினியின் மொழியைத் தமிழர்கள் கற்றுக்கொள்வதும் தம்மொழியைக் கணினிக்குப் புரியவைப்பதும் தமிழர்களின் அடிப்படைக் கடமையாக அமைகிறது. இன்றைய வழக்கில் உள்ள மொழிமாற்றுத் தொழில்நுட்பங்கள் வழி எந்த மொழியை வேண்டுமானாலும் எந்தமொழியிலும் மாற்றிப் படிக்கமுடியும். அதனால் அவரவர் தாய்மொழியில் தம் கருத்துக்களை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. அந்த அடிப்படையில் இன்று நாம் பயன்படுத்தும் கணினிகள் எந்த அளவுக்குத் தமிழ்பேசுகின்றன என்பதை எடுத்துரைத்து நாம் செய்யவேண்டிய கடமைகளைக் கோடிட்டுக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது,
இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகள்
ஆங்கிலம், சீனம், சுபானியம், சப்பானியம், போர்த்துகீசியம், செர்மன், அராபிக், பிரெஞ்சு, இரசியன், கொரியன் ஆகிய மொழிகள் இன்றைய இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதல் பத்து மொழிகளாக உள்ளன. இந்தப் பட்டியல் நமக்கொரு உண்மையைப் புலப்படுத்திச் செல்கிறது. ‘சிவப்பு என்பது அழகல்ல நிறம், ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி’ என்ற பொன்மொழியே நினைவுக்கு வருகிறது. ‘கணினியின் மொழி ஆங்கிலம் மட்டுமல்ல, கணினியைப் புரிந்துகொண்ட மொழிகளையெல்லாம் கணினியும் புரிந்துகொள்ளும்’ என்பது நம் புரிதலாக இருத்தல்வேண்டும். கணினிக்கு 01 என்பதே தாய்மொழி என்பதால் எந்தமொழியையும் சொல்லும்விதத்தில் சொன்னால் கணினி புரிந்துகொள்ளும். நிரல்மொழிகளை அதற்குப்புரியும் விதத்தில் கட்டளையாகக்கொடுத்தால் நம் தமிழ்மொழியைக்கூடக் கணினி அழகாகப் பேசும் என்பது ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டிய நுட்பமாகும்.

இயங்குதளங்களும் தமிழும்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தமிழ்எழுத்துருக்களைப் பயன்படுத்திவந்த காலத்தில் ஒருங்குறி என்னும் எழுத்துரு அதற்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளிவைப்பதாக அமைந்தது. இருந்தாலும் பல்வேறு இயங்குதளங்கள் தமிழ் எழுத்துருக்களை ஏற்காத நிலையே நீடித்தது. இப்போது விண்டோசு, லினெக்சு எனப் பல்வேறு இயங்குதளங்களும் தமிழ் எழுத்துருக்களை ஏற்றுக்கொள்கின்றன. கணினியின் இயங்குதளம் குறித்த அடிப்படை அறிவை இளம் தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வழிவகைசெய்யவேண்டும்.

தமிழ்த் தட்டச்சுப்பலகை
தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிமுறையில் கணினியில் என்.எச்.எம், அழகி போன்ற மென்பொருள்களின் வழி தட்டச்சுசெய்துகொண்டாலும். தட்டச்சுப்பலகைகளெல்லாம் இன்னும் ஆங்கில எழுத்துமுறையில் தான் உள்ளன.  தமிழ்த்தட்டச்சுப்பலகை வடிவமைக்கப்பட்டு தமிழர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். இன்று தமிழில் தட்டச்சு செய்வோர் தமிழ்த் தட்டச்சுமுறையிலோ, தமிங்கில முறையிலோ, ஆங்கிலமுறையிலோ தம் கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதற்கேற்ப தமிழ்த்தட்டச்சுப் பலகைகள் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மென்பொருள்கள்
இயங்குதளம், உலவி, வேர்டு உள்ளிட்ட ஆபீசு தொகுப்புகள், அடாப் தொகுப்புகள் என நாம் பயன்படுத்தும் பல்வேறு மென்பொருள்களும் இப்போது தமிழ்மொழியை ஏற்றுக்கொள்கின்றன. இருந்தாலும் அதன் கட்டளைகள் யாவும் ஆங்கிலமொழியில் தான் உள்ளன. அதற்குப் பதில் தமிழ்மொழியே கட்டளை மொழியாக இருந்தால் தமிழின் பரவல் இன்னும் அதிகரிக்கும்.

தமிழ் இணையதளங்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் இணையதளங்களைக் காண்பதே அரிதாக இருந்தது. அவையும் தனித்தனி எழுத்துருக்களைப் பயன்படுத்திவந்தன. இப்போது நிறைய தமிழ் இணையதளங்களைக் காணமுடிகிறது. எல்லாம் ஒருங்குறி எழுத்துருமுறையைப் பயன்படுத்துவதால் அவ்வளவு எழுத்துருச்சிக்கல்கள் ஏற்படுவதில்லை. அரசு இணையதளங்கள், பல்கலைக்கழகங்கள் தொடங்கி, நாளிதழ்கள், வாரஇதழ்கள், எழுத்தாளர்கள் என தமிழர்களால் உருவாக்கப்படும் இணையப்பக்கங்கள் யாவும் முழுக்கமுழுக்க தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுவருகின்றன. தமிழிணையங்களில் தமிழின் செல்வாக்கை எடுத்தியம்ப தமிழ் இணையப்பல்கலைக்கழகம் (www.tamilvu.org) விக்கிப்பீடியா    (www.ta.wikipedia.org ) என்னும் இரு இணையதளங்களைச் சான்றாகத் தருகிறேன்.

வலைப்பதிவுகள்
பிளாக்கர், வேர்டுபிரசு உள்ளிட்ட இலவச வலைப்பதிவுகள் வழி இணையதளங்களுக்குப் போட்டியாக நிறைய வலைப்பதிவர்கள் உருவாகியிருக்கிறார்கள.; பல்வேறு துறைசார்ந்த இவர்கள் தம் கருத்துக்களை முடிந்தவரை தமிழிலேயே வெளிப்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வலைப்பதிவர்கள் ஒவ்வொருவரும் எவ்விதமான தடையுமின்றித் தம் கருத்துக்களைத் தமிழில் வெளிப்படுத்துவதால் திரைபடத்துறையினர், தொடங்கி அரசியல்வாதிகள் வரை வலைப்பதிவுகளைத் திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமூகத் தளங்கள்
                இன்றைய மக்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் முகநூல்(www.facebook.com )   டுவைட்டர்(www.twitter.com கூகுள்பிளசு(google+), என பல்வேறு சமூகத்தளங்களிலும் தமிழ்ப்பற்றாளர்களால் இப்போது தமிழ் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. அதனால் அந்த தளங்களும் முடிந்தவரை தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் தருகின்றன. இத்தளங்களைப் பயன்படுத்தும் தமிழர்களில் பலரும் ஆங்கிலமொழியிலேயே தம் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். தமிழர்கள் யாவரும் தம் கருத்துக்களைத் தமிழிலேயே வெளியிட்டால் உலகமே திரும்பிப்பார்க்கக்கூடிய மாபெரும் மொழியாக தமிழ்மொழி திகழும் என்பதைத் தமிழர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

எழுத்துரு மாற்றிகள்
                இத்தனை காலமாக பல்வேறு தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி வந்ததால் அந்தத் தகவல்களைத் தமிழ் ஒருங்குறி முறைக்கு மாற்றிக்கொள்வதற்காக பொங்குதமிழ் உள்ளிட்ட எழுத்துருமாற்றிகள் பெரிதும் பயன்படுவனவாக விளங்குகின்றன.

மொழி மாற்றிகள்
                தமிழ் எழுத்துருக்களை பிற மொழிகளுக்கு மாற்றவும், பிற மொழியிலுள்ள எழுத்துருக்களைத் தமிழ் எழுத்துருக்களாக மாற்றவும் கூகுள் மொழிமாற்றி உள்ளிட்ட நிறைய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. என்றாலும் தொழில்நுட்பமறிந்த தமிழர்களுக்கு அந்த அளவுக்கு இலக்கணம் தெரியவில்லை என்பதால் இன்னும் இவ்வாறு மொழிமாற்றும் போது நிறைய இலக்கணப் பிழைகள் ஏற்படுகின்றன. அதனால் தமிழ் இலக்கணமறிந்தவர்கள் தொழில்நுட்பமும் கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் இந்த மொழிமாற்றித் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழி தனிச்சிறப்புடையதாக அமையும்.

அகராதிகள்
                தமிழ்ச்சொற்களின் பொருள்களை அறிந்துகொள்ள இன்று நிறைய இணைய அகராதிகள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. அண்ணா பல்கலை அகராதி, கூகுள் அகராதி, பாப்ரிசிசு அகராதி, கதிர்வேலு அகராதி, மெக்ஆல்பின் அகராதி, தமிழ்டிக் டாட்காம், தமிழ்லெக்சிகன் ஆகியன குறிப்பிடத்தக்க அகராதிகளாகும். சான்றாக விக்சனரி  என்னும் இணையஅகராதி 2,58,606 சொற்களைக் கொண்டு விளங்குகிறது.

சொல் திருத்திகள்  
                ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சுசெய்யும்போது எழுத்துக்கூட்டலைச் சரிபார்த்துப் பரிந்துரைசெய்யும் மேம்பட்ட சொல்திருத்திகள் ஆங்கிலமொழியில் நிறைய உண்டு. அதுபோல இப்போது தமிழ்ச் சொல்திருத்திகளையும் உருவாக்கிவருகின்றனர். அவையெல்லாம் சோதனைமுயற்சியிலேயே இருக்கின்றன. இந்தசொல் திருத்திகள் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கு வரும்போது தமிழின் பரவல் அதிகரிக்கும்.
மின்னூல்கள்
                நிறைய தமிழ்மின்னூல்கள் இணையவெளியில் கிடைக்கின்றன. ‘இபுக் ரீடர்’ போன்ற தனித்துவமான கண்டுபிடிப்புகளும் சாதாரணமான அலைபேசிகளும் கூட இப்போதெல்லாம் மின்னூல்களை வாசிக்கப்பயன்படுகின்றன. அதனால் எதிர்காலத்தில் இணையவெளியில் நிறைய தமிழ்மின்னூலகங்கள் உருவாகலாம். அதன்வழியே தமிழ்நூல்கள் எல்லாம் கிடைக்க வழிவகைஏற்படலாம். அதனால் நாமும் நம்மாலானவரை நம் துறைசார்ந்த தமிழ்நூல்களை மின்னூலாக்கி இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றாக சில மின்னூலகங்கள் (http://www.noolaham.org/,  http://www.chennailibrary.com/ , http://www.projectmadurai.org/ )

ஒலிப் புத்தகங்கள்
                இப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துப் படிப்பதற்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை. அதனால் (ஆடியோ புக்) ஒலிப்புத்தகங்கள் நிறையவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. தமிழ் இலக்கியங்கள் யாவும் எம்பி3 வடிவில் பதிவு செய்யப்பட்டு குறுவட்டுகளாகவோ, இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியுடனோ கிடைக்கின்றன. இதுவரை சங்கஇலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்கள் கூட ஒலிப்புத்தகங்களாகக் கிடைக்கின்றன. சான்றாக http://tamilaudiobook.blogspot.in/ , http://www.itsdiff.com/ , http://www.tamilvu.org/library/libindex.htm  ஆகிய இணையதளங்களைக் குறிப்பிடலாம்.
தமிழ்க் காணொளிகள்
                யுடியுப்  உள்ளிட்ட காணொளித்தளங்களில் இப்போதெல்லாம் அதிகமாக தமிழ்ப்பதிவுகளைக் காணமுடிகிறது. தமிழ்ச்சொற்பொழிவுகளையும், இலக்கிய மேடைகளையும் இப்போதெல்லாம் காணொளிகளாகப் பதிவேற்றும் பணியையும் தமிழர்கள் செய்துவருகிறார்கள்.

அலைபேசிகளில் தமிழ்
பெரிய பெரிய கணினி நிறுவனங்களும் இப்போதெல்லாம் கணினி தயாரிப்புகளை ஓரம்கட்டிவைத்துவிட்டு ‘டேப்ளட் பிசி, நோட்புக் பிசி, சுமார்ட் போன்’ உள்ளிட்ட அலைபேசி தயாரிப்புகளில் இறங்கிவிட்டன. எதிர்காலத்தில் இவைதான் இணையவசதியோடு தகவல்தொடர்புக்கு அதிகமாகப் பயன்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது. ஒருகாலத்தில் அலைபேசிகளில் தமிழ்க்குறுந்தகவல் அனுப்புவதே வியப்புக்குரியதாக இருந்தது. இன்று அலைபேசிகளில் தமிழ்ப்புத்தகங்களைப் படிக்கமுடிகிறது. தமிழ்வழி இணையதளங்களைப் பார்க்கமுடிகிறது.


எதிர்காலத்தில் தமிழ்
                வானில் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தை அதன் ஓட்டுநர், நாம்தான் உயரத்துக்கு வந்துவிட்டோமே பறந்ததுபோதும் என்று ஓட்டுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? அதுபோலத்தான் இன்று நம் தமிழின் நிலையும் இருக்கிறது. நாம் இன்று இணையத்தில் அடைந்த வளர்ச்சியே போதும் என்று இருந்தால் நாம் எதிர்காலத்தில் அடையாளம் இழந்தவர்களாகப் போய்விடுவோம். இன்றைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்புடையதாக நம் தமிழ் மொழியிருக்கிறது என்று நாம் பெருமிதம்கொள்ளும் நிலையில் இவற்றில் பெரும்பகுதி நாம்கடன்பெறும் தொழில்நுட்பங்களாகவே இருக்கிறது என்பதையும் நாம் மறுக்கமுடியாது.
கலைச்சொல்லாக்கம்
                எல்லா அறிவியல்துறைகளையும் தமிழ்மொழியிலேயே படிக்கவேண்டும். அப்போதுதான் புரிதலும், கண்டுபிடிப்புகளும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே கலைச்சொல்லாக்கங்களை உருவாக்கிவருகிறோம். பிறநாட்டார் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழில் பெயரிடுவதில் காட்டும் ஆர்வத்தை நாம் கலைச்சொல் உருவாக்கத்தில் காட்டவேண்டும். கணினித்துறையில் அதிகமான கலைச்சொற்களை உருவாக்கி மேற்கண்ட எல்லாத் தொழில்நுட்பங்களையும் தமிழிலேயே வடிவமைக்கும் அளவுக்கு நாம் இன்னும் வளரவேண்டும்.

தமிழ் எழுத்துக்களை ஒலியாகக் கேட்க
                இதுவரை நாம் பார்த்த தொழில்நுட்பக்கூறுகள் யாவும் கணினியில் தமிழ் எந்த அளவுக்கு ஏற்புடைத்தாகவுள்ளது என்றும், தமிழ் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்தியம்புவதாக அமைந்தது. இந்த வளர்ச்சியின் மணிமுடியாக ஒரு தொழில்நுட்பம் இப்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/  என்ற இணையதளத்திற்குச் சென்று தமிழ் ஒருங்குறி முறையிலான எழுத்துக்களை நகல் (காப்பி) எடுத்து ஒட்டினால் எம்பி3 என்னும் வேவ் ஒலிக்கோப்பாக அந்த எழுத்துக்களைப் பதிவிறக்கிக் கேட்டுமகிழமுடியும். இந்தநுட்பம் ஆங்கிலமொழியில் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்டாலும் இப்போது தமிழுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது பெருமிதம்கொள்ளத்தக்கதாக அமைகிறது.

தமிழர்களின் சிந்தனைக்காக.
நம் தமிழ்மொழி தொன்மையானது, தொடர்ச்சியான இலக்கிய, இலக்கண மரபுடையது என்றாலும் அறிவியல்துறையில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கிறது. சான்றாக, 134 கோடி மக்கள்தொகை கொண்ட சீனர்களில் 38 கோடிபேர் இணையத்தைப் பயன்;படுத்துகின்றனர். 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் 6 கோடிப் பேர்தான் உள்ளனர். அதனால் நம் வீட்டில் இருக்கவேண்டியது தொலைக்காட்சியா? கணினியா? என்பதை ஒவ்வொரு தமிழர்களும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
எதிர்காலத்தில் ஒரு  தொழிற்சாலையில் இருவர் மட்டும்தான் வேலைபார்ப்பார்கள். ஒருவர் காவல்காரர், இன்னொன்று நாய். காவலருக்கு வேலை அங்கு இருக்கும் கணினிகளெல்லாம் ஒழுங்காக வேலைசெய்கின்றனவா? என்று பார்ப்பது. அவர் உள்ளே சென்று எந்தக் கணினியையும் தொடாமல் இருக்கிறாரா? என்று பார்ப்பது நாயின் வேலை என்றொரு கணிப்பு உள்ளது. வள்ளுவர் இன்று இருந்திருந்தால்..             
                             ‘சுழன்றும் கணினி பின்னது உலகம் அதனால்
            உழந்தும் கணினியே தலை’
                            
                             ‘கணினி கற்றுவாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
            தொழுது அவர்பின்செல் பவர்’
என்று பாடியிருப்பார்.

முடிவுரை
·         இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகள் வரிசையில் இப்போது தமிழ் இல்லை என்றாலும் அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள மொழியாகத் தமிழ் விளங்குகிறது.
·         இப்போதுள்ள இயங்குதளங்கள் தமிழ் மொழியை ஏற்றுக்கொள்கின்றன. இருந்தாலும் இயங்குதளங்களுக்கான துறையில் நாம் இன்னும் குழந்தை நிலையில்தான் இருக்கிறோம்.
·         தமிழ்த்தட்டச்சுப் பலகைகள் இதுவரை இல்லை என்பதால் அதனைத் தயாரித்துப் பரவலாக்கவேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம்.
·         முழுக்க முழுக்க தமிழ்க்கட்டளைகளைக் கொண்ட உலவி, ஆபிசு தொகுப்பு, அடாப்தொகுப்பு ஆகியன தமிழின் பரவலை அதிகரிக்கும். அவற்றை உருவாக்குவது குறித்து கணினிபடித்த தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.
·         தமிழ் இணையதளங்களைப் பார்க்கும்போது அவை ஆங்கில இணையதளங்களுக்கு இணையாக இருக்கின்றன. இது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.
·         தமிழ் வலைப்பதிவுகள் இணையதளங்களுக்கு இணையான மிகப்பெரிய ஆற்றலாக உருவெடுத்துள்ளன.
·         முகநூல், டுவைட்டர், கூகுள் பிளசு, ஆர்குட் உள்ளிட்ட சமூகத்தளங்களில் தமிழர்களின் பங்களிப்பு வரவேற்புக்குரியதாக உள்ளது. தமிழர்கள் எல்லோரும் தம் கருத்துக்களை தமிழ்மொழியிலேயே வெளியிட்டால் உலகநாடுகளெல்லாம் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு தமிழின் ஆதிக்கம் இருக்கும்.
·         எழுத்துருமாற்றிகளும், மொழிமாற்றிகளும், அகராதிகளும் இணையப்பரப்பில் தமிழின் ஆளுமைகளை வெளிப்படுத்துவனவாக விளங்குகின்றன.
·         தமிழ்ச்சொல் திருத்திகளைத் தமிழுலகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.
·         இணையத்தில் கிடைக்கும் தமிழ் மின்னூல்கள் தமிழரிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
·         தமிழ் ஒலிப்புத்தகங்களும், தமிழ்க்காணொளிகளும் தமிழின் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சிக்குச் சான்றாகின்றன.
·         அலைபேசிகள், டேப்ளட் பிசி, சுமார்ட் பிசி ஆகிய நவீன தொழில்நுட்பக் கருவிகளுக்கு ஏற்ப தமிழ் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வருகிறது.
·         நாள்தோறும் பெருகிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்கவேண்டிய பெரிய பணி தமிழர்களுக்கு உள்ளது.
·         நிகழ்கால ஆண்ட்ராய்டு, ஈதர் நெட், மேகக்கணினி, சிக்த் சென்சு தொழில்நுட்பங்களை உள்வாங்கி எதிர்காலத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தமிழ்மொழியைத் தகவமைக்கவேண்டிய பணி தமிழர்களுக்கு உள்ளது.
·         இன்றைய கணினிகள் தமிழ்மொழியைப் புரிந்துகொள்வதோடு, தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்து அவற்றை ஒலிக்கோப்புகளாகப் பதிவிறக்கிக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன. இது சீனமொழியோடு ஒப்பிடும்போது குறைந்தபட்ச வளர்ச்சிதான். அதனால் காலத்தின்; தேவையை உணர்ந்து தமிழர்கள் யாவரும் கணினியைத் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும். இன்றைய சூழலில்,

கணினிகள்  தமிழ்பேசும் நிலையில்தான் இருக்கின்றன.
ஆனால் பல தமிழர்களுக்குத்தான் கணினியிடம் 
தமிழ்பேசத் தெரியவில்லை.
தான் அறிவாளி என எண்ணிக்கொள்ளும்போது ஒரு அறிவாளி முட்டாளாகிறான்
தான் முட்டாள் என்பதை உணரும்போது முட்டாள் அறிவாளியாகிறான்.
கணினியில், இணையத்தில் நாம் அறிவாளியா? முட்டாளா?
என்று தன்மதிப்பீடு செய்துகொள்வோம்..

நம்மால் முடிந்தவரை கணினியிலும், இணையத்தில் நம் கருத்துக்களை வெளியிடுவோம்.

(ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட எனது கட்டுரை)

திங்கள், 23 மே, 2011

வலைப்பதிவர்களின் நாடித்துடிப்பு (350வது இடுகை)


கடந்த நான்கு ஆண்டுகளாக வலையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
வலைப்பதிவர்களை,

1. தன்னிறைவுக்காக எழுதுபவர்கள்.
2. பொழுதுபோக்காக எழுதுபவர்கள்.
3. வியாபர நோக்கில் எழுதுபவர்கள்.
4. மக்கள் நலன் கருதி எழுதுபவர்கள்.
எனப் பாகுபாடு செய்யமுடியும்.

நான் எனது தன்னிறைவுக்காவே எழுதிவருகிறேன். நான்கு ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. காலம் மிக விரைவாகச் சென்றுவிட்டது.

சங்கத்தமிழ், இணையத்தமிழ் என இரு நிலைகளில் மட்டுமே எழுதிவரும் எனது பதிவையும்...

108 நாடுகளிலிருந்து 58,000 பேர் பார்வையிட்டுள்ளனர்,
383 பேர் பின்தொடர்கின்றனர்,
130 பேர் மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுகிறார்கள்.

என்றால் உலகம் பரவிய தமிழர்களிடம் தமிழுணர்வு இன்னும் செத்துவிடவில்லை என்பதையே உணர்த்துவதாக உள்ளது.

நான் கடந்துவந்தபாதையில்.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்தமை
திரட்டி நட்சத்திரமாக இருந்தமை
தமிழ்மண விருது வென்றமை


என எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்க நிகழ்வுகள் பல உள்ளன. இவை வலையுலக நண்பர்கள் என் எழுத்துக்களுக்குத் தந்த வரம்.

ஆரம்ப காலங்களில் தமிழ்மணம், தமிழிஷ் உள்ளிட்ட திரட்டிகளுக்குச் சென்று நண்பர்களின் இடுகைகளை வாசித்து கருத்துரையளித்து, ஓட்டளித்து வருவேன்.

கடந்த சில வருடங்களில் பணிச்சுமை காரணமாக அப்பணியை முழுமையாக மேற்கொள்ள இயலவில்லை.

இடுகைகளை திரட்டிகளில் சேர்ப்பதோடு சரி.
ஆனால் வலையுலக நண்பர்கள் தொடர்ந்து ஓட்டளித்து, கருத்துரையளித்து பலருக்கும் எனது பதிவு சென்றடைய துணைநின்றுள்ளனர். பெயர்களைச் சொன்னால் பக்கம் நீளும் என்பதால் அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை நான் கண்ட வலைப்பதிவர்களின் மனநிலைகளை வரிசைப்படுத்தியுள்ளேன்.

வலைப்பதிவர்களுக்குப் பிடித்தது.

1. சொந்தமான சிந்தனை.
2. ஆர்வமூட்டும் தலைப்பு, புதிய தகவல்.
3. பிழையற்ற, தெளிவான, எளிய தொடரமைப்பு.
4. தனித்துவமான எழுத்து நடை.
5. அடுத்தவர் தகவலாக இருந்தாலும் நன்றி கூறி வெளியிடுதல்
6. கருத்துரைகளுக்குப் பதிலளித்தல்
7. கருத்துரையளித்த, பின்தொடரும் பதிவர்களின் தளங்களுக்கும் சென்று பார்வையிடுதல் நிறைகளை எடுத்துக்கூறிப் பாராட்டுதல்.
8. குறைகளைக் கூறினாலும் நாகரீகமாகக் கூறுதல்.
9. அழகான தளவமைப்பு.
10. விரைவாகத் திறக்கத்தகக்க வலைப்பக்கம்.
11. கண்களை சோர்வடையச் செய்யாத வலைப்பதிவின் பின்புல வண்ணங்கள், எழுத்தின் வண்ணங்கள்.
12. தொடர்ந்து பதிவிடுதல்.
13. நிகழ்கால சமூகத்தைப் பிரதிபலித்தல்,
14. பழமையான மரபுகளை அடையாளப்படுத்துதல்.
15. நகைச்சுவை, அனுபவம், தொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, இலக்கியம், சிந்தனை, விளையாட்டு என எல்லாவற்றையும் சொல்வதைவிட ஏதோ ஒன்றைக் கூறினாலும் தெளிவாக, தனித்துவத்துடன் சொல்லுதல். எந்த அளவுக்கு வலையுலகை நான் புரிந்துகொண்டேன் என்பதை நண்பர்களே நீங்கள் தான் சொல்லவேண்டும்.

வலைப்பதிவர்களுக்குப் பிடிக்காதது.

1. சுயதம்பட்டம். (தன்னைப்பற்றியே பெருமை பேசுதல்)
2. கருத்துரைப்பெட்டியில் உறுதி செய்யும் எழுத்துக்கள் இருத்தல் (வேர்டு வெரிபிகேசன்)
3. அளவுக்கு அதிகமான அறிவுரை.
4. அடுத்தவர் சிந்தனையை தனது என சொல்லிக்கொள்ளுதல்.
5. ஓட்டுப் போடுங்கள், பின்தொடருங்கள், என மின்னஞ்சல் செய்தல்.
6. நீண்ண்ண்ட பதிவாக இடுதல்.
7. அளவுக்கு அதிகமான வார்த்தைகளின் அலங்காரங்கள்.
8. சுயவிவரமற்ற கருத்துரையாளராக வந்து கருத்துரைத்தல்.
9. பெரும்பாலான வலைப்பதிவர்கள் வைத்திருக்கும் விட்செட்டுகளை, இணைப்புகளையே வைத்திருத்தல்.
10. தொடர் இடுகை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதச் சொல்லி வற்புறுத்துதல்.
11. இடுகைகளைக் சிறிதுகூடப்படிக்காமல் தொடர்பே இல்லாமல் கருத்துரையளித்தல்.
12. பலரும் சொன்ன பழைய செய்திகளைப் பதிவிடுதல்.
13. பல இடுககைளும், இணைப்புகளும் முகப்புப் பக்கத்தில் இருத்தல்.
14. அதிமேதாவித்தனமான எழுத்துநடை.
15. அடிக்கடி வலையமைப்பையும், பக்கப்பெட்டிகளையும் மாற்றுதல்.


இப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நான்கு ஆண்டுகளில் எனது ஆர்வம் சிறிதுகூடக் குறையவே இல்லை.

வலைப்பதிவு ஆரம்பித்தபோது எத்தகைய ஆர்வத்துடன் இருந்தேனோ அதைவிடப் பன்மடங்கு ஆர்வமுடையவனாகவே இருக்கிறேன். அதற்குக் காரணம்...




நண்பர்களே நீங்கள் தான்.
நீங்கள் மட்டும் தான்.

வெள்ளி, 1 ஜனவரி, 2010

வலையுலகப் படைப்பாளிகள்! (தினமணி)






இன்றைய தினமணி நாளிதளில் வலையுலகம் பற்றி வந்த கட்டுரையில்,

”தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.“

என்று எனது வலைப்பதிவையும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இயல், இசை, நாடகம் என முத்தமிழாக இருந்த தமிழ் இணையத்தமிழ் என்ற நான்காம் தமிழாக வளர்ந்துவருகிறது. எதிர்காலத்தமிழருக்கான சான்றாதரங்கள் யாவும் கொண்டதாக இந்த இணையவுலகம் வளர்ந்து வருகிறது. கருத்துச்சுதந்திரம் நிறைந்த இந்த இணையவுலகில் பலதுறை சார்ந்து எழுதுவோர் இருக்கிறார்கள்..

மொழி, இலக்கியம் சார்ந்து எழுதுவோர் குறைவாகவே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும் தமிழ்த்துறைசார்ந்தோரும் தம் கருத்துக்களை வலைப்பதிவுகளில் வெளியிடவேண்டும்.
தமி்ழ்த்துறை சார்ந்தோர் பலர் வலைப்பதிவின் கருத்துக்களைப் படிப்வர்களாக மட்டுமே உள்ளனர். அவர்களும் வலைப்பதிவு வாயிலாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்தல் தேவையான ஒன்றாகவுள்ளது.


கட்டுரை இதோ..

வலையுலகப் படைப்பாளிகள்!
எம். மணிகண்டன்
First Published : 01 Jan 2010 12:12:00 AM IST

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.
இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.
உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.
தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.
நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.
நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.
வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.
÷இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.