வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஜனவரி, 2014

நிறையா வாழ்க்கை

பசிக்கு உணவு வாங்க காசின்றி ஒரு கூட்டம்!
பணத்தைப் பதுக்கிவைக்க இடமின்றி கூட்டம்!
பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று அறியாமல் ஒரு கூட்டம்!
பணத்தை செலவுசெய்வது எப்படி என்று தெரியாமல் ஒரு கூட்டம்!
என அறிவுடையோராலும், அறியாமையுடையோராலும் நிறைந்தது இவ்வுலகம்!

பறவைகள் எந்த மரங்களையும்
விலைக்கு வாங்கியதில்லை!
இருந்தாலும்..
மரங்கள் யாவும் பறவைகளுக்காகவே
வான் நோக்கி வளர்கின்றன!

நிலவு என்றும்
இரவைச் சேமித்துவைத்தில்லை!
இருந்தாலும்..
இரவு நிலவை மட்டுமே
எதிர்நோக்கியிருக்கிறது!

ஆடு, மாடுகள் யாவும்
தலையில் புல்லைக் கட்டிக்கொண்டு
மேயச்செல்வதில்லை!
இருந்தாலும்..
தாவரங்கள் இவற்றையே
பச்சைக் கொடிகாட்டி அழைக்கின்றன!

நதிகள் எங்கும்
முகவரி தேடி மயங்கியதில்லை!
இருந்தாலும் கடல்
நதிகளுக்காகவே காத்திருக்கிறது!

வேர்கள் எப்போதும்
தன்னை விளம்பரம் செய்துகொண்டதில்லை!
இருந்தாலும்..
மழை என்றும்
வேர்களை மறந்ததில்லை!

ஆனால் மனிதன் மட்டும்..
எதை எதையோ விலைக்கு வாங்குகிறான்!
சேமித்து வைக்கிறான்!
உணவுமூட்டையைத் தூக்கிக்கொண்டே திரிகிறான்!
முகவரியைத் தேடித்தேடி மயங்குகிறான்!
எதற்காகவோ காத்திருக்கிறான்!
விளம்பரப் பலகை ஏந்திக்கொண்டே நடக்கிறான்!

மனிதன் மட்டும் ஏன் இப்படி..??
என்று மக்களைக் காணும் போது தோன்றும்.
புறநானூற்றுப் பாடல் ஒன்று வறுமையில் வாடும் எளியோரின் வாழ்வை நிறையா வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறது. அவர்கள் வறுமையில் வாடினாலும் பகுத்துண்ணும் பண்புடையவர்களாக இருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் சிறந்த பாடலைக் காண்போம்.
களிறு நீறாடிய விடு நில மருங்கின்
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தெனக்
குழி கொள் சின்னீர் குராஅல் உண்டலின்
செறு கிளைத் திட்ட கலுழ் கண் ஊறல்
முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
முளவுமாத் தொலைச்சிய முழுச் சொல் ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறு செய்திடுமார்
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
அலந்தலை இரத்தி அலங்கு படு நீழல்
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்துதலை வரினும் தாங்கும்
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே.
புறநானூறு 325, 
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,
                                 திணை: வாகை, துறை: வல்லாண் முல்லை
யானைகள் புழுதியில் விளையாடிய பரந்த நிலப்பகுதியில் வேனிற்பருவத்தில் புதிதாகப் பெய்த மழையால்  குழிகளில் சிறிதளவு தேங்கிய நீரினை, குரால் என்னும் ஒருவகைப் பசு நீர் வேட்கையினால் உண்டது. நீர் அற்ற அக்குழியின் சேற்றைத் தோண்டிப் பெற்ற கலங்கிய ஊற்று நீரினைத் தங்களுக்குள் முறையாகப் பெற்று உண்கின்ற நிறைவு பெறாத வாழ்க்கையுடையோர் அங்கு வாழ்பவர் ஆவார்.
முள்ளம் பன்றியைக் கொன்ற பேரொலியை உடைய அவ்வினத்து ஆண்மக்கள் , ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக் கதவினையுடைய தங்கள் சிறப்பில்லாத இல்லங்களின் முன்னர், உடும்பினது நிணத்தை அறுத்து யாவர்க்கும் பகுத்துத் தருவதற்காகத் தீயைமூட்டி, அதில் உடும்பினை வாட்டும்போது பிறக்கும் கொழுவிய நிணத்தின் நாற்றம், அச் சிற்றூர்களின் தெருக்கள் எங்கும் கமழ்வதாகும்.
இத்தகைய செயலையுடையோர் உறையும்போது இடத்திலுள்ள இத்தி மரத்தின் அசைகின்ற நிழலில் இருந்து, மெல்லிய தலையையுடைய சிறுவர்கள் அம்புகளை எறிந்து விளையாடுவார்கள்.
வெற்றியையுடைய வேலினையுடைய வேந்தர்கள் தன்னோடு பகைத்து வந்தவழி, தான் ஒருவனாக நின்று எதிர்த்துத் தாங்குவதற்கு உரிய வலிமையும், வரையறுக்க இயலாத கொடையினையும் உடைய பெரிய தகுதியையடைய வீரனின் ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இருப்பிடத்தை உடையதாகும்.

திணைவாகை. ( வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரம் செய்தல்)
துறைவல்லாண் முல்லை ( ஒரு வீரனுடைய ஊரையும் அவனது இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல் வல்லாண்முல்லை ஆகும்.)

அன்றும் இன்றும்
·         அன்று வறுமையில் இருந்தாலும் பகுத்துண்ணும் மரபு பின்பற்றப்பட்டது இன்றோ யாரும் உணவைப் பகிர்ந்தளித்தாலும் மயக்கமருந்து கலந்திருக்குமோ என்ற அச்சம்தான் முதலில் வருகிறது.
·         அன்று குழியில் தேங்கிய நீரைக்கூட மக்கள் குடித்தனர் நலமாகவும் இருந்தனர் இன்றோ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் குடிநீரைக்கூட பணம் கொடுத்து வாங்குகிறோம்.

·         அன்றைய குழந்தைகள் தெருக்களில், மரங்களின் நிழலில், மண்ணில் விளையாடினர். இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி, திறன்பேசிகளில் உள்ள விளையாட்டுகளே போதும் என அறிவுறுத்தப்படுகின்றனர்
  
   பாடல் வழியாக...
   உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எத்தனையோ பேர் இவ்வுலகில் உள்ளனர். பதுக்கி வைத்து பணக்காரர் தரவரிசையில் இடம்பெறுவது பெரிய சாதனையல்ல. பகுத்துண்டு நம்மால் முடிந்தவரை மனிதாபிமானத்தோடு வாழ்வதே பெரிய சாதனைதான் என்பதை இப்பாடல் நினைவுபடுத்திச் செல்கிறது.
  


8 கருத்துகள்:

  1. பகுத்துண்டு நம்மால் முடிந்தவரை மனிதாபிமானத்தோடு வாழ்வதே பெரிய சாதனைதான்

    பதிலளிநீக்கு
  2. வறுமையில் வாடினாலும் பகுத்துண்டு வாழ்வதே வாழ்க்கை... மற்றவை எல்லாம் வீண்...

    சிறப்பான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. பகுத்துண்ணும் காலம் மலையேறிவிட்டது! எவ்வளவு வந்தும் போதவில்லை என்ற நிறையா வாழ்க்கையே இன்று! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு