வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 25 மார்ச், 2023

நன்னூல் -36-46 நூற்பாக்கள் விளக்கம்

 


 

கற்பித்தல் வரலாறு என்பது ஆசிரியர் மாணவர்க்கு பாடம் கற்பித்தலின் இயல்பையும் முறையையும் விவரிக்கின்றது. இது பாடம் சொல்லுதலின் வரலாறு நுவலும் திறன் ஈதல் இயல்பு என பல சொற்றொடர்களால் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதனை பவணந்தி முனிவர்,

 

 1. நூல் நுவல் திறன்

ஈதல் இயல்பே இயம்பும் காலை

காலமும் இடனும் வாலிதின் நோக்கி

சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி

உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து

விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து

கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொளக்

கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப                                                 36

 

 கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டியன,

1. காலத்தையும் இடத்தையும் நன்கு ஆராய்தல்,

2. நல்ல இடத்திலிருந்து வழிபடு தெய்வத்தை வணங்குதல்,

3. கற்பிக்கும் பாடத்தை மனதில் பதியவைத்து நினைகொள்ளுதல்,

4.  விரைந்து சொல்லாமல், சினமில்லாமல் முகமலர்ச்சியுடன் இருத்தல்

5. மாணவனின் தன்மையறிந்து நடத்துதல்

6.  மாணவன் தெளிவடையுமாறு மாறுபடற்ற மனத்துடன் கற்பித்தல்,

 

செவ்வாய், 21 மார்ச், 2023

அன்னச்சேவலைத் தூதுவிட்டவர்

 

 

கோப்பெருஞ்சோழன்(அரசர்), பிசிராந்தையார்(புலவர்)இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களாவர். ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்புகொண்டனர். பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் துறந்தார். இப்பாடலில் பிசிராந்தையார் தன் நட்பின் அடையாளமாக அன்னப்பறவையைத் தூதுவிடுகிறார்.

 

இரத்தல் அரிது! பாடல் எளிது!அரிய செயல்களைச் செய்பவர்களைப் பெரியவர்கள் என்றும் அவ்வாறு செய்யாதவர்களைச் சிறியவர்கள் என்றும் உரைப்பார் வள்ளுவர்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.26

சொல்லுவது யாவர்க்கும் எளியது ஆனால் சொன்னவாறு செய்வது அரிது என்றும் கூறுவார் வள்ளுவர்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல் -664

செயற்கரிய செய்த பெரியவரான கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியதாக இப்புறப்பாடல் அமைகிறது. இப்பாடலில் மன்னா  “நீ பரிசில் ஈவாயாக” என்று இரப்பது கடினமான செயல். ஆனால் உனது பெருமையைப் பாடுவது எளிது எனப் பாடுகிறார் மோசிகீரனார்.