வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 49. காலம் அறிதல்

 


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.- 481

ஆந்தை, காக்கையின் வலிமையைக் காலமே முடிவுசெய்கிறது

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு.- 482

காலமறிந்து வாழ்தலே செல்வத்தைக் காக்கும் கயிறு

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.- 483

காலமறிந்து செய்தால் அரிய செயலென ஏதும் இல்லை

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின். - 484

காலம், இடமறிந்து செயல்பட்டால் உலகையே வெல்லலாம்

காலம் கருதி இருப்பவர் கலங்காது

ஞாலம் கருது பவர்.- 485

உலகை வசப்படுத்துபவர்கள் காலத்தைக் கண்டு கலங்கமாட்டார்கள்

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.- 486

ஊக்கமுடையார் அடக்கம் ஆட்டுக்கடாயின் பின்வாங்கல் போன்றது 

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.- 487

கோபத்தைத் தக்க நேரத்தில் வெளிப்படுத்துபவரே அறிவுடையோர்

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.- 488

எதிரிக்கு அழிவு வரும்வரை உன் கோபத்தை அடக்கி வை

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.- 489

அரிய செயலை உரிய காலத்தில் செய்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.- 490

நற்காலம் வரும்வரை கொக்கைப்போலக் காத்திரு

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 48- வலி அறிதல்

 


வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல். - 471

செயல், பகை, துணை, தன் வலிமையறிந்து எச்செயலும் செய்க

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது இல்.- 472

தன்வலிமையறிந்து செய்வோரால் முடியாத செயல் ஏதுமில்லை

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.-473

தன் வலிமையை முழுதும் அறியாமல் கெட்டவா் பலர்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.- 474

ஒற்றுமையின்றி, தன்வலியறியாது, பெருமைகொள்வோர் அழிவா்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.- 475

மயிலிறகானாலும் அளவு மிகுந்தால் வண்டியின் அச்சு முறியும்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி ஆகி விடும்.- 476

எல்லையைக் கடந்தால் எதிலும் தொல்லைதான்

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.- 477

வருவாயறிந்து கொடைசெய்க, அதுதான் பொருளைக் காக்கும் வழி

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை. - 478

செலவு குறைவானால், வரவு குறைவாயினும் குறையில்லை

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.- 479

அளவறியாதான் வாழ்கை வளர்வதுபோல தேய்ந்து அழியும்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவரை வல்லைக் கெடும். - 480

பொருளின் அளவறியாமல் செய்யும் உதவியால் செல்வம் அழியும்

திங்கள், 28 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 47. தெரிந்து செயல்வகை

 


அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.- 461

ஆக்கத்தையும், அழிவையும் ஆராய்ந்து செயல்பட தெரிந்த 

இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்.- 462

தேர்ந்த நட்புடன், ஆராய்ந்து ஆற்றும் செயல் நன்றாகவே முடியும்

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார். - 463

கிடைப்பதை எண்ணி இருப்பதை விடாதவரே அறிவுடையவர்

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்.- 464

தெளிந்து செய்யும் செயல் என்றும் இழிவு தராது

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.- 465

திட்டமிடாமல் செய்யும் செயல் எதிரிகளுக்கே நன்மை தரும்

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.- 466

நற்செயல் செய்யாவிட்டாலும், தீச்செயல் செய்தாலும் கேடுவரும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.- 467

சிந்தித்து செயல்படு, செயல்பட்ட பிறகு சிந்திப்பது இகழ்ச்சி

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.- 468

நன்கு அறியாத செயலை பலர் கூடிநின்றாலும் முடிக்க முடியாது

நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.- 469

பண்பறியாது செய்யும் நன்மையும் தீமையில் முடியும்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு. - 470

இகழ்ச்சியான, பழியான செயலைச் செய்யாதே  


ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 46. சிற்றினம் சேராமை


 

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும். - 451

சிறியோரிடம் நட்பு சிறுமை, சிறியோரை நீங்குதல் பெருமை

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.- 452

நிலத்தால் நீரும், சேரும் நட்பால்  அறிவும் மதிப்புப் பெறும்

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படுஞ் செயல்.- 453

உணா்ச்சி மனதளவிலும், மதிப்பு நல்ல சுற்றதாலும் தோன்றும்

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துளது ஆகும் அறிவு.- 454

அறிவு மனம் சார்ந்ததல்ல, சேரும் கூட்டம் சார்ந்தது

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்.- 455

மனத்தூய்மை, செயல்தூய்மை இரண்டும் இனத்தால் அமையும் 

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு

இல்லைநன் றாகா வினை.- 456

மனத்தூய்மையைவிட இனத்தூய்மை உயர்ந்தது

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.- 457

மனம் ஆக்கத்தையும், இனம் நற்புகழையும் வழங்கும்

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப் புடைத்து.- 458

நல்ல சான்றோர்க்கும், இனநலமே காவலாகும்

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்

இனநலத்தின் ஏமாப் புடைத்து.- 459

நல்மனதால் கிடைக்கும் மறுமையிலும் இனமே துணையாகும்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல்.- 460

நல்ல சுற்றமே சிறந்த துணை, தீய சுற்றமே பெருந்துன்பம்

சனி, 26 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 45. பெரியாரைத் துணைக் கோடல்

 


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல். - 441

அறனறிந்த மூத்த அறிவுடையாருடன் ஆராய்ந்து நட்பு கொள்க

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல். - 442

வந்த துன்பம் நீக்கி, துன்பம் வராமல் காப்பவரிடம் நட்பு பாராட்டு

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல். - 443

அரிதினும் அரிதே, பெரியோரிடம் கொள்ளும் நட்பு

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையு ளெல்லாந் தலை. - 444

பெரியவர்களை சுற்றத்தாராக்குவது வல்லமையும் தலைசிறந்தது

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். - 445

ஆராய்ந்து கூறும் அறிஞரை அரசனும் தேர்ந்து கொள்வான்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.- 446

பெரியவர்களின் துணையிருந்தால் எதிரிகளும் அஞ்சுவா்

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்? - 447

தவறுகளைக் கடிந்து கூறும் பெரியோரால் பகை அழியும்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும். - 448

கடிந்து கூற மூத்தோர் இல்லாத அரசன் தானே கெடுவான்

முதலிலார்க்கு ஊதிய மில்லை மதலையாஞ்

சார்பிலார்க் கில்லை நிலை.- 449

வணிகத்துக்கு முதலீடும், நிலைபேறுக்கு பெரியோரும் தேவை

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல். - 450

பலரிடம் பகைகொள்வதைவிட, நல்லோர் நட்பை விடுதல் தீது


வெள்ளி, 25 செப்டம்பர், 2020

அழகின் சிரிப்பு - குன்றம் - பாரதிதாசன்

 மாலை வானும் குன்றமும்

தங்கத்தை உருக்கி விட்ட 

வானோடை தன்னிலே ஓர்

செந்தில் மாணிக்கத்துச்

செழும்பழம் முழுகும் மாலை

செங்குத்தாய் உயர்ந்த குன்றின்

மரகதத் திருமேனிக்கு

மங்காத பவழம் போர்த்து

வைத்தது வையம் காண


 ஒளியும் குன்றும்


அருவிகள் வயிரத் தொங்கல்

அடர்செடி பச்சை பட்டே

குருவிகள் தங்கக் கட்டி

குளிர் மலர் மணியின் குப்பை

எருதின் மேல் பாயும் வேங்கை

நிலவு மேல் எழுந்த மின்னல்

சருகெலாம் ஒளி சேர் தங்கத்

தகடுகள் பாரடா நீ


 கிளி எறிதல்

தலைக்கொன்றாய் கதிரைக் கொத்தித்

தழைப்பகஞ் சிறகடித்து

மலைப்புன்னை மரத்தின் பக்கம் 

வந்திடும் கிளி கூட்டத்தில்

சிலைப் பெண்ணாள் கவண் எறிந்து

வீழ்த்தினேன் சிறகை என்றாள்

குலுக்கென்று சிரித்தொருத்தி 

கொழும்புன்னை இலைகள் என்றாள்


 குறவன் மயக்கம்

பதட்டமாய் கிளிஎன் றெண்ணி 

ஆதொண்டைப் பழம்பார்த் தானை

உதட்டினை பிதுக்கிக் கோவை

உன்குறிப் பிழைஎன் றோதும்

குதித்தடி மான் மான் என்று

குறுந்தடி தூக்கு வானை

கொதிக்காதே நான் அம்மானே

என ஓர் பெண் கூறி நிற்பாள்

 குன்றச் சாரல் பிற

குன்றத்தின் சாரல் குன்றின்

அருவிகள் குதிக்கும் பொய்கை

பன்றிகள் மணற்கிழங்கு

பறித்திடும் ஊக்கம் நல்ல 

குன்றியின் மணியால் வெண்மைக்

கொம்பினால் அணிகள் பூண்டு

நின்றிடும் குறத்தியர்கள் 

நிலா முகம் பாரடா நீ

 குறத்தியர்

 

நிறைதினைக்கதிர் முதிர்ந்து

நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்

புறத்தினில் தேர் போல் நீண்ட

புதுப்படம் அமைத்து மேலே

குறத்தியர் கவண் எடுத்து

குறிபார்க்கும் விழி நீலப்பூ

எறியும் கை செங்காந் தட்பூ

உடுக்கை தான்  எழில் இடுப்பே


 மங்கிய வானில் குன்றின் காட்சி


மறைக்கின்ற பரிதி குன்ற 

மங்கையோ ஒளியிழந்து

நிறை மூங்கில் இளங்கை நீட்டி 

வாராயோ என அழைப்பாள்

சிறு புட்கள் அலரும்  யானை 

இருப்பிடம் சேரும்  அங்கோர்

குறுநரி ஊளைச் சங்கால் 

இருள் இருள் என்று கூவும்


 நிலவும் குன்றும்


இருந்த ஒரு கருந்தி ரைக்குள் 

இட்ட குவியல் போல

கருந்தமிழ் சொல்லுக் குள்ளே 

கருத்துக்கள் இருத்தல் போல

இருள்மூடிற் றுக் குன் றத்தை

நாழிகை இரண்டு செல்லத்

திரும்பிற்று நிலவு குன்றம்

திகழ்ந்தது முத்துப் போலே


எழில் பெற்ற குன்றம்

நீலக் முக்காட்டுக்காரி 

நிலா பெண்ணாள்  வற்றக் காய்ந்த 

பாலிலே உறைமோர் ஊற்றிப்

பருமத்தால் கடைந்து பானை

மேலுற்ற வெண்ணெய் அள்ளிக் 

குன்றின்மேல் வீசி விட்டாள்

எலுமட்டுந்தோழா நீ 

எடுத்துண்பாய்  எழிலை எல்லாம்


முகில் மொய்த்த குன்றம்

ஆனைகள் முதலைக் கூட்டம் 

ஆயிரம் கருங்கு ரங்கு 

வானிலே காட்டி வந்த 

வண முகில் ஒன்று கூடிப்

பானையில் ஊற்றுகின்ற  

பதநீர் போல்குன்றில் மொய்க்க

போனது அடிமை நெஞ்சம்

நெஞ்சம் புகைதல் போல் தோன்றும்


திருக்குறள் - அதிகாரம் - 44. குற்றம் கடிதல்


 

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து. - 431

செருக்கு, கோபம், இழிசெயல் இல்லாமையே சிறப்பு

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு. - 432

பேராசை, அவமானம், மிகுதியான மகிழ்ச்சி அரசர்க்குக் கேடு

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்

கொள்வார் பழிநாணு வார்.                       433

திணையளவு குற்றத்துக்கு பனையளவு நாணுவா் சான்றோர்

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் தரூஉம் பகை.- 434

குற்றம் அழிவுதரும், அதனால் குற்றமின்றி வாழ்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். - 435

வருமுன் காக்காதவன் வாழ்க்கை,தீயின் முன் வைக்கோல் போல்

தன்குற்றம் நீக்கப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு.-  436

தன்குற்றம் நீக்கி, பிறர் குற்றத்தைக் காண்பது தலைவனின் கடன்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.- 437

நற்செயலுக்கு உதவாத கஞ்சனின்  செல்வம்  வீணே அழியும்

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப் படுவதொன் றன்று. - 438

கஞ்சத்தனமானது குற்றங்களுள் தனிப்பெருங்குற்றம்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.- 439

தற்பெருமை கொள்ளாதே, தீய செயல்களைச் செய்யாதே

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல். - 440

தன் விருப்பத்தை எதிரி அறியாதபடி காப்பவனை வெல்லமுடியாது


வியாழன், 24 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 43. அறிவுடைமை


 

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.- 421

துன்பத்தில் காக்கும் கருவி,எதிரிகளால் அழிக்கமுடியாத அரண் அறிவு!

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு. - 422

மனதை நல்வழியில் செலுத்துவதே அறிவு

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. - 423

யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு. - 424

எளிமையாகப் பேசி, நுட்பமாகக் கேட்டு அறிந்துகொள்வது அறிவு

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்ல தறிவு. - 425

உயா்ந்தோரிடம் பழகி, இன்ப, துன்பங்களைக் சமமாகக் காண்

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு 

அவ்வ துறைவ தறிவு. - 426

உயர்ந்தோர் வாழும் வழியில் வாழ்வதே அறிவு

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்.                        427

அறிவுடையோர் எதிர்காலத்தை அறிவா், பேதையா் அறியார்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். - 428

அஞ்ச வேண்டிவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையோர் செயல்

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.- 429

வருமுன்காப்பவர் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர். - 430

அறிவே உடைமை, பிற உடைமைகள் மதிப்பில்லாதவை