வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

வேறென்ன வேண்டும்..?

நிறைவே அடையாத மனம் கொண்டவர்கள் நாம். 
ஆனால் சில சூழல்களில் மட்டும் நம் மனம்..

அடப் போங்கடா!! 
இதைவிட வேறு என்னடா வேண்டும்?
என்று கேட்கும்..

ஒரு மனிதனின் மகிழ்ச்சியின் அளவுகோள் பணத்தில் தான் அடங்கியுள்ளதா என்ன..?

இதோ பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் மன்னன் சொல்கிறான்..


Even when a man has earned much
of whatever can be earned
shared it with many 
even when he is master of great estates
if he does not have 
children
who patter on their little feet
stretch tiny hands
scatter toch
grub with mouths
and grab with fingers
smear rice and ghee
all over their bodies
and over come reason with love
all his days
have come to nothing

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
     உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
     குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
     இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
     நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
     மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
     பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
  (புறம் : 188)

பலசுவைமிக்க உணவுகளைப் படைத்துப் பலரோடும் அமர்ந்து உண்ணும்
‘உடைமை‘ எனப்படும் பெரும்செல்வம் பெற்றவராயினும் என்ன?
மெல்ல மெல்ல, 
குறு குறு என நடந்து சென்று, 
தம் அழகிய சிறிய கையை நீட்டி, 
உண்கலத்து நெய்யுடைச் சோற்றில் இட்டும்
அக்கையாலேயே, பெற்றோரைக் கட்டிக் கொண்டும், 
வாயால் கவ்வியும், 
கையால் துழாவியும், 
தன் உடல் முழுவதும் சிதறியும்,
அக்குறும்புகளால் பெற்றோரை மயக்கி இன்பம் கொடுக்கும்
புதல்வர்கள் இல்லாதவர்களது வாழ்நாள் பயனற்றதே என்று..

தொடர்புடைய இடுகை


வியாழன், 29 டிசம்பர், 2011

எதிர்பாராத பதில்கள்எங்கோ எப்போதோ...
படித்த, கேட்ட மனதைவிட்ட நீங்காத நகைச்சுவைகள் சில..

நகைச்சுவை -1
ஆசிரியர் இன்று ஏதாவது நன்மை செய்தாயா?
மாணவர் இன்று இரண்டு நன்மைகள் செய்தேன் ஐயா.
ஆசிரியர் என்ன செய்தாய்?
மாணவர் முதலில் தண்ணீரில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பறவை ஒன்றைக் காப்பாற்றினேன்.
ஆசிரியர்- அட! பரவாயில்லையே பாராட்டுக்கள். இன்னொரு நன்மை என்ன?
மாணவர் அந்தப் பறவையைப் பசியோடு காத்திருந்த எங்கள் வீட்டு நாயிடம் தந்துவிட்டேன்..
ஆசிரியர் - !!!

--------0OO0------------------0OO0------------------0OO0------------------0OO0----------


நகைச்சுவை -2

மேடையில் ஒரு பாடகர் இரசித்து இரசித்து பாடல் பாடிக்கொண்டிருக்கிறார்..
முன் வரிசையில் ஒரு பையன் அவரைப் பார்த்துக் கொண்டே அழுதுகொண்டிருக்கிறான்..
அவரும் அவனைப் பார்த்துக்கொண்டே சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.
 அவரைப் பார்த்து பார்த்து அவன் அழுகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு நிலையில் மனம நொந்த அவர் கீழிறங்கி வந்து அவனிடம் ஏம்பா அழுதிட்டே இருக்க? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பையன்...
உங்களை மாதிரியே தான் எங்கள் வீட்டில் ஆடும் சாவதற்கு முன்னால் கத்திக்கொண்டே இருந்தது என்றான்.

திரு திரு வென விழித்தார் பாடகர்.

--------0OO0------------------0OO0------------------0OO0------------------0OO0----------

                                                 நகைச்சுவை -3

மாணவர் ஐயா சும்மா திட்டாதீங்க.. நான் 4 இலட்சம் கொடுத்துதான் இந்த சீட்டையே வாங்கினேன்.
ஆசிரியர் தம்பி நீ ரொம்ப பேசாத 14 இலட்சம் கொடு்த்துதான் நான் இந்த வேலைக்கே வந்திருக்கேன்.
மாணவர் - !!

 --------0OO0------------------0OO0------------------0OO0------------------0OO0----------


நகைச்சுவை -4
கணவனும் மனைவியும் மிகவும் கஞ்சத்தனமானவர்களாம். எச்சில் கையால் காக்கை கூட விரட்ட மாட்டார்களாம். அவர்களுக்கு விமானத்தில செல்லவேண்டும் என்று ஆசைமட்டும் இருந்ததாம். அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் விமானத்துறையில் இருந்தால் அவரிடம் சென்று கேட்டார்களாம். அவரும் சரி 2000 ரூபாயாகும் என்றாராம். இவர்களா தருவார்கள்.. அவ்வளவு பணமெல்லாம் எங்களிடம் இல்லை என்றார்களாம் அவர்கள். 
இவர்களைப் பற்றி நன்கு அறிந்த அந்த நண்பர்..
ஒரு வழி சொன்னாராம்..
சரி உங்களைப் பற்றி நன்றாகவே எனக்குத் தெரியும்.உங்களுக்காக ஒரு வாய்ப்பு தருகிறேன். உங்களை இலவசமாகவே விமானத்தில் அழைத்துச் செல்கிறேன். ஆனால் ஒரு விதிமுறை..
நான் எப்படி விமானத்தை ஓட்டினாலும் 
நீங்கள் சத்தமே போடக்கூடாது என்றாராம்.

அவர்களும் இப்படியொரு வாய்ப்புக்கு மகிழ்ச்சியடைந்து 
விமானத்தில் சென்றார்களாம்.

விமானம் மேலும் கீழும் குறுக்கும் நெடுக்குமாக மிக விரைவாகச் சென்றது...

எந்தச்சூழலிலும் கணவனும் மனைவியும் சத்தமே போடவில்லை.
வியந்துபோன அந்த விமான ஓட்டி முதலில் இறங்கி வந்த தன் நண்பரின் மனைவியிடம் கேட்டாராம் எப்படி உங்களால் சத்தமே போடாமல் இருக்கமுடிந்தது என்று.

அதற்கு அந்தப் பெண்மணி சொன்னாராம்..

மிகவும் பயமாகத் தான் இருந்தது.
சத்தம் போடுவது போல ஒரு சூழல் வந்தது அப்போது கூட நான் சத்தமே போடவில்லை என்றாராம்.
எப்போது என்று அந்த நண்பர் கேட்க..
இந்தப் பெண்மணி சொன்னாராம்...

என் கணவர் விமானத்திலிருந்து கீழே விழுந்தபோது என்று..

--------0OO0------------------0OO0------------------0OO0------------------0OO0----------

புதன், 28 டிசம்பர், 2011

கொலைபேசி!
சில நேரங்களில்
நம் கையில்
பலநேரங்களில்
நாம் அதன் கையில்!

சில நேரங்களில்
பாதையாகிறது
பல நேரங்களில்
போதையாகிறது!

சில நேரங்களில்
பொழுதுபோக்காகிறது
பலநேரங்களில்
பொழுதுகளைத் தின்றுவிடுகிறது!

சில நேரங்களில்
தூரம் குறைக்கிறது
பலநேரங்களில்
நாயாய் குரைக்கிறது!

சில நேரங்களில்
உயிர் காக்கிறது
பலநேரங்களில்
உயிர் பறிக்கிறது!


காலந்தோறும் ஏதோவொரு கருவியோடுதான் நாம் வாழ்ந்துவந்திருக்கிறோம்..
கல்....வில்..வேல்.. என இதன் பட்டியல் பெரியது..
இருந்தாலும்

இக்கருவிகள் எல்லாம் நமக்குத்தான் அடிமையாக இருந்தன
இந்தக் கருவிகளுக்கு நாம் என்றும் அடிமையாக இருந்ததில்லை!

ஆனால் இந்த அலைபேசியோ இதுவரை வந்த வானொலி, தொலைக்காட்சி,கணினி, இணையம் என எல்லாவற்றையும் உள்ளடக்கி மனிதனின் மந்திரக்கோலாக, இன்னொரு கையாக, இன்றைய உலகில் உலா வருகிறது.
அதனால் மனிதனைப் பல நிலைகளில் அடிமைப்படுத்தி வருகிறது.

சிலரின் கைகளைவிட்டு
சிலரின் கண்களைவிட்டு
சிலரின் காதுகளைவிட்டு

இந்த அலைபேசியை இன்று பிரிக்கமுடிவதில்லை. 

சிலர் அலைபேசியில் குறுந்தகவலுக்காக தட்டச்சிடும் வேகத்தைப் பார்த்தால் இவர்களெல்லாம் கணினி மையங்களில் தட்டச்சு செய்தாவது பிழைத்துக்கொள்வார்கள் என்று தான் தோன்றுகிறது.


சிலர் அலைபேசியில் தான் காலை முகம் பார்க்கிறார்கள். முகநூல் மட்டுமே இவர்களது முதல் உலகமாக இருக்கிறது..


சிலர் கூகுள்+, சிலர் டுவைட்டர், சிலர் வலைப்பதிவு..
என ஏதோ ஒரு நிலையில் அலைபேசியின் அடிமைகளாகவேதான் இன்றைய சூழலில் நாம் வாழ்கிறோம்.

சிலருக்கு மட்டுமே இந்த அலைபேசி அடிமையாக இருக்கிறது.

எல்லா தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய
இந்த அலைபேசி
நம் அறிவுத்திறனையும், மானத்தையும், உயிரையும் தான்
உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பது புரிந்தால்..
அறிவியலின் குழந்தையான அலைபேசிக்கு கொலைபேசி என்று
 இன்னொரு பெயரி்டும் தேவை வந்திருக்காது.


தொடர்புடைய இடுகைகள்


செவ்வாய், 27 டிசம்பர், 2011

!புகழ் மலர்கள்!
எல்லோரும் தேடினாலும்
சிலரை மட்டுமே தேடிச் செல்வது...

எல்லோரும் விரும்பினாலும்
சிலரை மட்டுமே விரும்பிச் செல்வது..

எல்லோரும் பின்தொடர்ந்தாலும்
சிலரை மட்டுமே பின்தொடர்வது..

எல்லோரும் சிறைபிடிக்க நினைத்தாலும்
சிலருக்கு மட்டுமே சிறைப்படுவது..

!பு  க  ழ்!

ஒருவன் எவ்வளவு உயராமானவன் என்பதைவிட அவன்
எவ்வளவு உயர்வானவன் என்பதையே காலம் திரும்பிப்பார்க்கிறது.

ஒருவன் எவ்வளவு அழகானவன் என்தைவிட அவன்
எவ்வளவு அழகான பண்புகளைக்கொண்டவன் என்பதையே இவ்வுலகம் எண்ணிப்பார்க்கிறது.

ஒருவன் வாழும்போது எவ்வளவோ இடங்களை ஆளுமை என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அதையெல்லாம்விட.... 
அவன் இறந்தபின்...

எவ்வளவு மனங்களில்..
எவ்வளவு இடங்களை...

தன் அன்பால், ஆளுமையால் ஆக்கிரமித்திருந்தான் என்பதே நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான பண்பாக அமைகிறது..

ஒருவன் உடலும், உயிரும் இருக்கும்போது அவன் காதுபட பேசப்படும் புகழுரைகள் பெரும்பாலும் சுயநலம் கருதியதாகவும், பொய்மை நிறைந்தவையாகவுமே விளங்குகின்றன.

ஆனால்..

ஒருவன் மறைவுக்குப் பின்னர் பேசப்படும் புகழுரைகளில் சுயுநலம் மறைந்து உண்மை மட்டுமே நிறைந்திருக்கக் காண்கிறோம்..

இதோ மறைந்த மனித மலர்களுக்காக..
மலர்ந்த புகழ் மலர்கள் இக்கூற்றை மெய்பிப்பனவாக அமைகின்றன.


காட்சி 1.

 “ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும், சிறுவரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல
நறவு பிழிந்த இட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகும் முன்றில்
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே.

புறநானூறு -114

(பாரி மறைவுக்குப் பின் நட்பினை மறவாத கபிலர் அவனுடைய மகளிரைக் கொண்டுபோகும் போது பறம்புநோக்கி நின்று பாடியது.)

அருகில் நின்று பார்ப்பவர்க்கும் தோன்றும்...
சிறிது தொலைவு சென்று நின்று பார்ப்பவர்க்கும் தோன்றும்..
“யானை மென்று போட்ட உணவினது சக்கைபோல..
மதுப் பிழிந்துபோட்ட சக்கையிலிருந்து மதுச் சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருக்கையையுடைய பாரியின் பறம்புமலை!
என மறைந்த பாரியை எண்ணிக் கையற்றுப் புலம்புகிறார் கபிலர்.

இப்பாடலில் தேர் வழங்கும் என்றுகூட கபிலர் சொல்லியிருக்கலாம்.. “தேர்வீசும்“ என்று சொல்லியமை பாரியின் கொடையின் மிகுதியை தெரிவிப்பதாக அமைவது பாடலுக்கு மேலும் சுவையளிப்பதாக அமைகிறது.

காட்சி -2

கோப்பெருஞ்சோழன் என்றவுடன் நினைவுக்கு வருவது பிசிராந்தையார் மட்டுமே.. ஆனால் கோப்பெருஞ்சோழன் பல நல்ல உள்ளங்களை கொள்ளையடித்தவனாவன்.
பொத்தியார் என்பவர் சோழனின் அமைச்சராவர். சோழனின் மீது மிகுந்த அன்புடையவராக இருந்தார்.
சோழன் தன் மகன்களுடன் மனம் மாறுபட்டு அவர்களிடமே நாட்டை ஒப்படைத்துவிட்டு “வடக்கிருந்து“(உண்ணாமல் வடக்குநோக்கியிருந்த உயிர்துறத்தல்) உயிர்நீத்தபோது பிசிராந்தையாருடன் பலரும் வடக்கிருந்து உயிர்நீத்தனர் என்று பாடல்கள் சான்றுபகர்கின்றன.
அப்போது சோழனோடு தானும் வடக்கிருந்து உயிர்நீக்கவிரும்பினார் பொத்தியார். பொத்தியாரின் மனைவி கருவுற்றமை அறிந்த சோழன்... நீ இப்போது வருவது முறையன்று. உனக்கு மகன் பிறந்த பிறகு என்னோடு வா என்றார். இதோ பொத்தியாரின் கண்ணீர் மலர்கள் சோழனி்ன் புகழ் மலர்களாக..

“பெருஞ்சோறு பயந்து பல் யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளிழ் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

புறநானூறு 220

மிகுதியான சோற்றைத் தந்து பல ஆண்டுகள் பாதுகாத்த பெரிய களிற்றுயானையை இழந்த  வருத்தத்தை உடைய பாகன், அந்த யானை இருந்து தங்கிய இரக்கமுண்டாக்கும் கூடத்தில் உள்ள கம்பம் வெறுமையாக நிற்கக் கண்டு கலங்குவான். அதுபோல நான் பொன்னால் செய்யப்பட்ட  மாலையையுடைய தேரைக் கொண்ட வளமிக்க சோழனது பெருகிய புகழை உடைய உறையூரின் மன்றத்தைப் பார்த்துக் கலங்கினேன் என்று புலம்புகிறார் பொத்தியார்.

பாடல் வழியே..
  
இந்த இரண்டு பாடல்களிலும் பாரி கோப்பெருஞ்சோழன் என்னும் இரு அரசர்களின் ஆளுமைத்திறன் மிக அழகாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது..

இவ்விருவரும் வாழும்போது தாம் ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்பைவிட பலமடங்குஅதிகமாக இறந்தபின்பும் அன்பு உள்ளங்களில் பரப்பை ஆக்கிரமித்திருந்தார்கள் என்னும் உண்மை அறிவுறுத்தப்பட்டள்ளது.

இவர்களின் இடத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என்பதைப் புலவர்களின் கூற்று தெளிவுபடுத்துகிறது.

ஒரு மனிதன் வாழ்ந்தால் இப்படியொரு வாழ்க்கை வாழவேண்டும் இறந்தால் இப்படி நான்கு உள்ளங்களை சம்பாதித்த பின்தான் இறக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைப்பதாக இப்பாடல்கள் அமைகின்றன.உண்மையான புகழ் மலர்கள் ஒருவனின் கல்லறையில்தான் மலர்கின்றன என்பது எவ்வ்வ்வளவு பெரிய உண்மை!!!!!
என்பதைப் அறிவுறுத்துவனாக இப்பாடல்கள் அமைகின்றன

தொடர்புடைய இடுகைகள்

முல்லையும் பூத்தியோ!


திங்கள், 26 டிசம்பர், 2011

மாடு

முதுகெலும்பை மறந்த மனித மந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு நினைவுக்கு வரும் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு.


தொடர்புடைய இடுகை.


வியாழன், 22 டிசம்பர், 2011

செருப்பு.. பிஞ்சுபோச்சு!கதை 1

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்கஎன்று..

(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்குமரியாதை)

கதை 2

ஒரு துறவி ஒருநாள் நல்ல வெயிலில் நடந்து சென்றார். அப்போது அவரது செருப்பு பிஞ்சுபோச்சு. தொடர்ந்து நடக்கமுடியாதவராக அருகே இருந்த செருப்பு தைப்பவனிடம் சென்றுகொடுத்தார். அவரோ அந்தச் செருப்பைப் பார்த்துவிட்டு ஐயா நிறைய தைக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் உங்கள் செருப்பைத் தந்துவிட்டு. மாலை வாருங்கள் தைத்து வைக்கிறேன் என்றார்.

துறவியோ அந்த செருப்புத் தைப்பவரிடம்..
 ஐயா இந்த வெயிலில் நான் எவ்வாறு நடந்துபோவேன்..? என்றார். 
அதற்கு அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி...

ஐயா உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு செருப்புத் தருகிறேன். இதை அணிந்துகொண்டு செல்லுங்கள். மாலை வரும்போது இந்தச் செருப்பைத் தந்துவிட்டு. உங்கள் செருப்பைப் பெற்றுச் செல்லுங்கள் என்றார்.

ஒரு நொடி சிந்தித்த அந்தத் துறவி...
 என்னது இன்னொருவர் செருப்பை நான் அணிவதா...!! 

என்று சிந்தித்தார்..

அவர் மனசாட்சி பேசியது..
“இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே..
இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும், 
அவர் மீதான கோபத்தையும், 
பொறாமையையும் இறக்கிவைக்காமல் தூக்கிசுமக்கிறோமே... என்று

(இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது)


செவ்வாய், 20 டிசம்பர், 2011

கூபாபேபமீமு..??
இன்றையை மட்டுமே நினைவுவைத்துக்கொள்ளும் தமிழரின் மூளைக்கு நேற்றை நினைவுபடுத்தும் முயற்சியே இவ்விடுகை..


கூடங்குளம் அணுஉலை
பால்விலை உயர்வு
பேருந்து கட்டண உயர்வு
ணவீக்கம்
மீனவர் தாக்குதல்
முல்லைப் பெரியாறு

என நாள்தோறும் ஏதோ ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு போராட்டம் செய்வதும் மறுநாள் அதை மறந்து இன்னொரு போராட்டத்துக்குத் தயாராவதும் நம் வழக்கமாகப் போய்விட்டது. மறந்த சில சமூக அவலங்கள் பன்முகப் பார்வையில்...

பறவைகளின் பார்வையில்..
எங்கடா கூட்டமா கிளம்பிட்டாங்க..
மீதமிருக்கும் மரங்களையெல்லாம் 
வெட்டப்போறாங்களா?

விலங்குகளின் பார்வையில்..
நாட்டில் வாழமுடியாம 
நம்ம காட்டுக்குத் தான் கூட்டமா வருவாங்களோ..?

வானத்தின் பார்வையில்..
மழை தருவது நான்
பங்கிட்டுக்கொள்வது இவர்களா?

எமனின் பார்வையில்..
என்னோட எருமைமாடு தொலைஞ்சுபோச்சு
இவைதான் எனது புதிய ஊர்திகள்!

கடவுள் பார்வையில்..
நீ யார் என்று உன்னை உனக்கு
அடையாளம் காட்ட நான் தந்த அனுபவங்களே இவை!

ஊடகங்கள் பார்வையில்..
பர பரப்பூட்டும்
செய்தீகள்!

அரசியல்வாதிகளின் பார்வையில்..
இலவச
விளம்பரங்கள்!

சராசரி மக்களின் பார்வையில்

வாழ்வுக்கும் - சாவுக்கும்
இடையில் நடக்கும் போராட்டம்!!


 தொடர்புடைய இடுகை

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு - நினைவுத்துளிகள்
 • சிந்திக்கவைக்கும் தமிழின் பெருமையோடு குழந்தைகள் தமிழ்வாழ்த்துப் பாட சரியாக இன்று 10.30 மணிக்கு தொடங்கியது ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு.
 • குழும உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வருகை தந்த பதிவர்களை இனிதே வரவேற்றனர்.
 • குழுமத்தின் தலைவர் தாமோதர் சந்ரு வருகை தந்த அனைவரையும் முகமலர்ச்சியுடன் வரவேற்று அமர்ந்தார்.
 • சிறப்பு விருந்தினரான “ஸ்டாலின் குணசேகரன்” அவர்களின் பெருமைகளைக் கூறி மனம் நிறைய வரவேற்றார் அன்பர் ஆருரன் அவர்கள்.
 • நண்பர் ஈரோடு கதிர் அவர்கள் குழுமத்தின் வரலாறை அழகுபட தொகுத்து உரைத்தார்.
 • விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 15 சிறந்த தமிழ்ப் பதிவர்களைத் தேர்வு செய்து அவர்களின் சமூகப் பணியைப் பாராட்டி நினைவுப் பரிசளித்து மகிழ்ந்தார்கள். அப்போது அந்தப் பதிவர்களின் சாதனைகள் காணொளிகளாகத் திரையில் தோன்றச் செய்தமை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
 • பாராட்டப் பட்ட பதிவர்கள்..
 1. உண்மைத்தமிழன் சரவணன்
 2. ஜாக்கிசேகர்
 3. ஐயப்பன் ஜீப்ஸ்
 4. அதிஷா
 5. தேனம்மை இலட்சுமணன்
 6. வெயிலான் இரமேஷ்
 7. வலைச்சரம் சீனா ஐயா
 8. கே.ஆர்.பி செந்தில்
 9. சுரேஷ்பாபு
 10. லக்கிலுக் யுவகிருஷ்ணா
 11. இரவிக்குமார்
 12. யெஸ்.பாலபாரதி
 13. இளங்கோவன்
 14. மகேந்திரன்
 15. ஓவியர் ஜீவா
 • ஈரோடு கதிர், மகேசுவரன், அருள்மொழி ஆகியோர் அழகுத் தமிழில் செம்மையாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது பெருமிதம் கொள்வதாக அமைந்தது.
 • ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்பத்தின் தற்கால வளர்ச்சியையும், வலைப்பதிவர்களின் தனிச்சிறப்பையும், பதிவின் தேவையையும் அழகாக சிந்திக்கும் விதமாக எடுத்துரைத்தார். “ வலைப்பதிவர்கள் சமூக மாற்றத்தில் பெரும்பங்காற்றுகிறார்கள்” என்பதை மிகவும் பெருமிதத்துடன் முன்மொழிந்து சென்றார்.
 • பரிசு பெற்ற 15 பதிவர்களும் விருது பெற்றமைக்கு ஏற்புரை தெரிவித்தனர்.
 • செல்வக்குமார் அவர்களின் குறும்படத்தை சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.
 • ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்து பாராட்டினார்கள்.
 • ஈரோட்டில் முதல் முறை நடந்த கூட்டத்துக்கு 70 பேர்களும், இரண்டாவது ஆண்டு நடந்த கூட்டத்துக்கு 150 பேர்களும் இப்போது நடந்த கூட்டத்துக்கு 200 பேருக்குக் குறையாமல் பதிவர்கள் வந்தார்கள் என்பதை ஈரோடு கதிர் அவர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். மேலும் இக்குழுமத்தை அறக்கட்டளையாக மாற்றும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மகிழ்சிசயுடன் அவர் தெரிவித்தார்.
 • நிறைவாக நண்பர் பாலாசி அவர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
 • அடுத்து வருகை தந்த ஒவ்வொரு பதிவர்ளும் மேடைக்கு வந்து தம்மை அறிமுகம் செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
 • பதிவர்கள் ஒவ்வாருவரும் பெருமகிழ்ச்சியுடன் சென்று மேடையில் தம்மை அறிமுகம் செய்துகொண்டனர்.
 • சைவ, அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்திருந்த குழுவினர் பதிவர்களை அன்புன் மதிய உணவுக்கு அழைத்தனர்.
 • அவர்கள் அளித்த உணவைவிட அவர்கள் அருகே வந்து என்ன சாப்பிடுறீங், வேறு என்ன வேண்டும் என்று அன்போடு கேட்டது உணவின் சுவையை அதிகப்படுத்துவதாக அமைந்தது.
 • விழா முடிந்தும் பதிவின் உறவுகள் நீண்ட நேரம் ஒருவரை ஒருவர் பார்த்து உறவாடி மகிழ்ந்தனர்.

அன்பு நண்பர்கள் தாமோதர் ஐயா,ஈரோடுகதிர், ஆருரன்,சங்கவி, வால்ப்பையன், பாலாசி, இராஜா, கார்த்திக் ஆகிய குழும உறுப்பினர்களின் அன்பான வரவேற்பு என் குடும்த்தில் நடக்கும் திருமண விழாவுக்குச் சென்றுவந்ததுபோல மனநிறைவைத் தந்தது.

சீனா ஐயா
தமிழ்பேரன்ஸ் சம்பத்
தமிழ்வாசி பிரகாஷ்
வீடு.சுரேஷ்
எழுத்தோசை தமிழரசி
வானம்பாடிகள் ஐயா 
பொன்னியின் செல்வன் கார்த்திகேயன்
ஸ்ரீ

என வலையுலக சொந்தங்கள் பலரையும் நேரில் கண்டு மனம் விட்டுப் பேசியது மறக்கமுடியாத அனுபவமாகும்.


வலைப்பதிவர் சந்திப்பு தந்த நம்பிக்கைகள்.

 • வலைப்பதிவர்கள் நினைத்தால் சமூகத்தில் நல்ல பல மாற்றங்களை உருவாக்க முடியும்.
 • ஒவ்வொரு பதிவர்களும் ஏதோ ஒரு தனித்திறன்களுடனும், ஆயிரம் ஆயிரம் கனவுகளுடனும் சமூக மாற்றங்களுக்காகத் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கூட்டத்தின் அதிர்வாக இருந்தது.
 • பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த பதிவர்களின் முகங்களில் சொந்த வீட்டுக்கு வந்ததுபோன்ற அன்பு பிரதிபலித்தது.
 • இயல், இசை, நாடகத்தோடு தமிழ் என்றோ தற்கொலை செய்துகொண்டது என்ற சிலரின் பொருளற்ற வாதங்களைப் பொய்யாக்கும்விதமாக, தமிழ் தன்னை “இணையத்தமிழ்” என்று பெயர்மாற்றிக் கொண்டு வலைப்பதிவு, முகநூல், டுவைட்டர் என தன்னம்பிக்கையோடு உலா வருகிறது என்பதை எடுத்தியம்புவதாகவும் இவ்விழா அமைந்தது.

தீண்டாய் மெய் தீண்டாய்..


கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீ்ம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
 


என்ன நண்பர்களே இந்தப் பாட்டை எங்கோ கேட்டது போல இருக்கா...?

ஆம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் என்சுவாசக் காற்றே என்று ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதில் தீண்டாய் மெய் தீண்டாய் என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடலின் தொடக்கத்தில்…இந்த சங்கப்பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கும். இதன் ஆங்கில வடிவம்... (மொழிபெயர்ப்பு ஏ.கே.இராமனுசம் அவர்களுக்கு நன்றி)

Like milk
not drunk by the calf
not held in a pail,

a good cow’s sweet milk
spilled on the ground,

it’s of no use to me
unused by my man

my mound of love
my beauty
dark as mango leaf

just waiting
to be devoured
by pallor

குறுந்தொகை -27
கொல்லன் அழிசியார்

பசுவின் பாலைவிட சுவையான இப்பாடலின் பொருளை அறிய...

தீண்டாய் மெய் தீண்டாய் என்னும் இடுகையைக் காணத்

 தங்களை அன்புடன் அழைக்கிறேன்.


வெள்ளி, 16 டிசம்பர், 2011

பண வீக்கம்..?


முதல் மாணவன் - ஏன்டா பண வீ க்கம், பணவீ க்கம் என்று பேசிக்கிறாங்களே.. அப்படின்னா என்ன்னடா?

இரண்டாம் மாணவன் - அது என்னமோ தெரியலடா.. நம்ம புத்தகப் பையைவிட வீ க்கமா இருக்கும்னு நினைக்கிறேன்..
முதல் மாணவன் - !!!!


மாணவர்களின் உடலசைவு மொழிகள் என்ற எனது இடுகை இன்று 

இளமை விகடனில் குட்ப்ளாக் பகுதியில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

வியாழன், 15 டிசம்பர், 2011

நான் ஏன் வாழக்கூடாது?

தன்னம்பிக்கையே வாழ்க்கையில் நம்மை அடுத்த உயரத்துக்கு அழைத்துச் செல்வது..


“தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்? 
வாழ்ந்துதான் பாரேன்..”

என்ற தன்னம்பிக்கை வரிகள் சிந்திக்கத்தக்கன.

ஒரு பையனை ரொம்ப நாளாக் காணோம்..
ஏம்பா என்ன ஆச்சு இவ்வளவு நாளா எங்கே போனாய் என்று கேட்டேன்.

அதை ஏங்கய்யா கேட்கறீங்க..
நான் செய்யாத தப்புக்கு எல்லோரும் என்னைப் பலிசுமத்துனாங்க..

என்னை யாருமே நம்பல..
நான் தற்கொலைக்கு முயற்சித்து. பூச்சி மருந்த குடிச்சிட்டேன்.
மருத்துவமனையில் வைத்துக் காப்பாற்றிவிட்டார்கள்..
அதனாங்கய்யா மருத்துவமையிலேயே ஒருவாரம் இருந்தேன்..

என்றான்

அடப்பாவி..!!
சாகிற வயசாடா இது என்று சில அறிவுரைகள் சொல்லி அனுப்பினேன்.

ஒரு நொடிப்பொழுது எடுக்கக்கூடிய முட்டாள்தனமான முடிவுதான் இது. 
அந்த தற்கொலை என்னும் எல்லை வரை சென்று திரும்பியவனால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புபவன் நான். 
அவர்களை சரியான வழியில் திசை திருப்பிவிடவேண்டும் அவ்வளவுதான். அது பெற்றவர்களைவிட, உடன்பிறந்தவர்களைவிட நண்பர்களால்தான் முடியும்!!


சரி தற்கொலை தொடர்புடைய இரண்டு சிந்தனைகளை இன்று இடுகையாக தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

சிந்தனை ஒன்று...

ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாம். ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்.
மறுபக்கம் புலி..

என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள்.

சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது. இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்.

அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.

முயல் சிந்தித்தது...

அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??

என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.


சிந்தனை இரண்டு..

ஒருவன் வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்திருந்தான்.

நம்ம ஊரு தொடர்வண்டி என்று சரியான நேரத்துக்கு வந்தது.?

அப்படி படுத்திருக்கும்போது எங்கோ ஒலிபெருக்கியில் யாரோ பேசுவது இவன் காதில் கேட்டது.

தொடர்வண்டிக்காகக் காத்திருக்கும் நேரத்துக்கு அந்த சொற்பொழிவைக் கேட்டுவரலாம். அப்போது வண்டி வர நேரம் சரியாக இருக்கும் என்ற முடிவெடுத்து அந்தப் பேச்சைக் கேட்கச் சென்றான்.

சொற்பொழிவைக் கேட்டவன். தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டான்.


அவன் மனதில் நினைத்துக்கொண்டான்.


பொருளே இல்லாம இவ்வளவு நேரம் பேசும் இந்தச் சொற்பொழிவாளன் உயிரோடு இருக்கிறான்..

ஒன்றுமே புரியாவிட்டாலும் கைதட்டிப் பாராட்டும் இத்தனை மக்களும் உயிரோடு இருக்கிறார்கள்....!!!


நான் மட்டும் ஏன் வாழக்கூடாது!!

என்று தன்னம்பிக்கையோடு வீடு நோக்கி நடந்து செல்கிறான்.

புதன், 14 டிசம்பர், 2011

இப்படியொரு இணையம் இருந்தால்..

உலகிலேயே கொடிய ஆயுதம் “கோபம்”

கோபத்தைக் குறைக்க ஆயிரம் வழிமுறைகள் சொல்லப்பட்டாலும்.. அதைப் பின்பற்றுவதில் நிறைய நடைமுறைச் சி்க்கல்கள் உள்ளன.

இப்போதெல்லாம் கொசுவை விரட்டுவதற்குக் கூட மென்பொருள்கள் வந்துவிட்டன!

ஏன் கோபத்தைவிரட்ட ஒரு மென்பொருளோ, இணையதளமோ வரக்கூடாது என்ற சிந்தனையின் விளைவே இவ்விடுகை..

“தவறுகள் திருத்திக்கொள்ளப்படாதபோது அது தப்பாகிறது”

“கோபத்தைக் குறைத்துக்கொள்ளாதபோது மனிதன் விலங்காகிறான்”

“நாம் விலங்காகிவிட்டோம் என்பதை உணரும்போது மீண்டும் மனிதன் மனிதனாகிறான்”

என்பது நான் எனது அனுபவத்தில் கண்ட உண்மை.

இதோ எனது கற்பனை இணையதளம்..

(பல மில்லியன் மக்களின் கோபங்களால் அவர்கள் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு உளவியல் அடிப்படையில் தானியங்கியாக இவ்விணையதளம் செயல்படுகிறது.)

காட்சி -1

இணையம் : நீங்கள் இன்று எதற்காகக் கோபப்பட்டீர்கள்?
நான் : நான் செய்யாத தவறுக்காக ஒருவன் என்னைத் திட்டியபோது..
இணையம் : உங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்தினீர்கள்?
நான் : நான் அவனை அடித்துவிட்டேன், அவனும் என்னை அடித்துவிட்டான்.
இணையம் : உங்கள் மனப் புற்றில் கொடிய விசப்பாம்பு குடியிருக்கிறது. உடனே பாம்பை அழித்துவிடுங்கள்.


காட்சி -2


இணையம் : இன்று என்ன ஒரே சிரிப்பா இருக்கீங்க?
நான் : ஒருவன் என்னைப் பார்த்து “எருமை“ என்று திட்டினான்.. பதிலுக்கு நான் அவனை போடா “கழுதை” என்று திட்டிவிட்டேன்.
இணையம் : உங்கள் மன வீட்டில் நாய் படுத்திருக்கிறது. அது பதிலுக்குப் பதில் குரைக்கிறது. அதை முதலில் வெளியேற்றுங்கள்.


காட்சி -3இணையம் : இன்று ஏன் உங்கள் முகம் வாடியிருக்கிறது?
நான் : என்னோடு பணிபுரியும் நண்பன் என்னைப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் பேசிவிட்டான்.


இணையம் :அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
நான் : நான் அவன் மீது கோபம் கொண்டு பேசுவதை நிறுத்திக்கொண்டேன்.
இணையம் : உங்கள் மன மரத்தில் குரங்கு அமர்ந்திருக்கிறது. அடிக்கடி அது ஏதாவது மரத்தில் உயரத்தில் ஏறி அமர்ந்துகொள்ளும் உடனே அதை மரத்தைவிட்டு இறக்குங்கள்.

காட்சி -4

இணையம் :இன்று என்ன மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்?
நான் : இன்று என் எதிரியை நான் பலிக்குப் பலி வாங்கிவிட்டேன்.
இணையம் :உங்கள் மனப்பாதையில் மதம்பிடித்த யானை திரிகிறது.முதலில் அதைப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்.

காட்சி -5


இணையம் :இன்று என்ன மிகவும் அழகாகத் தெரிகிறீர்கள்?
நான் :இன்று ஒருவன் என்னைப் பார்த்து “நீ ஒரு முட்டாள்” என்று சொன்னான்.
இணையம் : அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்..?
நான் : சிரித்துக்கொண்டே “ஆமாம் நீ்ங்கள் சொல்வது உண்மைதான்” என்று சொன்னேன்..


இணையம் : உங்களுக்குள் குடியிருந்த எல்லா விலங்குகளும் வெளியேறிவிட்டன.
நீங்கள் மீண்டும் முழு மனிதனாக மாறிவிட்டீர்கள்.
(அன்பு நண்பர்களே இறுதியில் உள்ள குரங்குபடத்தை நன்றாகப் பாருங்கள் மனிதன் குரங்குக்கு எதுவும் தரவில்லை. கண் தெரியாத அந்த மனிதருக்குக் குரங்குதான் நீர் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுகிறது!!)தொடர்புடைய இடுகைகள்