வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

தொடரால் பெயர் பெற்ற சங்கப் புலவர்கள்

1. அணிலாடு முன்றிலார் –குறுந்-41.
2. இம்மென் கீரனார்-அக-398
3. இரும்பிடர்த்தலையார்-புற-3
4. ஊட்டியார்-அக-68
5. ஓரிற் பிச்சையார்-குறுந்-277.
6. ஓரேருழவர்-குறுந்-131.
7. கங்குல் வெள்ளத்தார்-குறுந்-387.
8. கல்பொரு சிறுநுரையார்-குறுந்-290.
9. கவைமகன்-குறுந்-324.
10. காலெறி கடிகையார்-குறுந்-267.
11. குப்பைக் கோழியார்-குறுந்-305.
12. குறியிறையார்-குறுந்-394.
13. கூகைக் கோழியார்-புற-364
14. கூவன் மைந்தன்-குறுந்-224.
15. கொட்டம்பாலனார்-நற்-95
16. கோவேங்கைப் பெருங்கதவனார்-குறுந்-134.
17. செம்புலப்பெயனீரார்-குறுந்-40.
18. தனிமகனார்- நற்-153.
19. தும்பி சேர் கீரனார்-குறுந்-393.
20. தேய்புரி பழங்கயிற்றினார்- குறுந்-284.
21. தொடித்தலை விழுத்தண்டினார்- புற-243.
22. நெடுவெண்ணிலவினார்-குறுந்-47.
23. பதடி வைகலார்-குறுந்-323.
24. மீனெறி தூண்டிலார்-குறுந்-54.
25. விட்ட குதிரையார்-குறுந்-74.
26. வில்லக விரலினார்-குறுந்-370.
27. விழிகட் பேதைப் பெருங்கண்ணனார்- நற்-242.

பத்துப்பாட்டும் பாடியோரும்

பழம்பாடல்.


முருகு,நல்வாடையும் கீரன் முடத்தாமக்கண்ணி பொருந
மருவுபாண்,பாலை உருத்திரங்கண்ணன் மகிழ் சிறுபாண்
புரியுநத்தத்தன் மருதம் நன்காஞ்சி நப்பூதன் முல்லை
வருமெங் கபிலன் குறிஞ்சி மலைபடுகடாம் கௌசிகனே.

சங்கப்புலவர் பெயரால் அறிப்படும் தொழில்கள்.

1.அறுவை வாணிகன்
2.ஆசிரியன்
3.ஏனாதி
4.ஓடக்கோவன்
5.ஓதல்
6.கண்ணாகரன்
7.கணக்காயன்
8.கணியன்
9.காவல்
10.காவிதி
11.கொல்லன்
12.கூத்தன்
13.செய்தி வள்ளுவன்
14.தச்சன்
15.பொன்வாணிகன்
16.பொற்கொல்லன்
17.மருத்துவன்
18.வண்ணக்கன்
19வினைத் தொழில்

சங்க இலக்கியக் குறிப்புகள்.

சங்க இலக்கியம் எனப்படுபவை எட்டுத் தொகை,பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதி நூல்களாகும்.473 புலவர்கள் பாடிய 2381 பாடல்களைக் கொண்டு தொகைப் பாடல்களாக இவை விளங்குகின்றன.அகம்,புறம் என்பன பாடுபொருள்களாகும்.அகத்தில் களவு,கற்பு ஆகியனவும்,புறத்தில் வீரம்,கொடை ஆகியனவும் பாடப்பெற்றுள்ளன.

திங்கள், 26 ஜனவரி, 2009

சங்க இலக்கியம்

எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்
என்று இத்திறத்த எட்டுத் தொகை


எட்டுத்தொகை நூல்கள்:

1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு

பத்துப்பாட்டு நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:

"முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."

பத்துப்பாட்டு

1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்-317 அடிகள்

2. பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார் -248 அடிகள்

3. சிறுபாணாற்றுப்படை -நல்லூர் நத்தத்தனார் - 269 அடிகள்

4. பெரும்பாணற்றுப்படை-கடியலூர் உருத்திரங்கண்ணனார்-500அடிகள்

5. கூத்தாராற்றுப்படை(மலைபடுகடாம்)-பெருங்கௌசிகனார்-583அடிகள்

6. மதுரைக் காஞ்சி -மாங்குடி மருதனார் - 782 அடிகள்

7. முல்லைப்பாட்டு - நப்பூனார் -103 அடிகள்

8. குறிஞ்சிப்பாட்டு - கபிலர் - 261 அடிகள்

9. நெடுநல்வாடை நக்கீரர்-317அடிகள்

10. பட்டினப்பாலை-கடியலூர் உருத்திரங்கண்ணனார்-500 அடிகள்

திங்கள், 19 ஜனவரி, 2009

காலத்தின் தேவை........

காலத்தின் தேவை........

சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்வோருக்கு இணையத்தில் தரவுகள் குறைவாகவே உள்ளன.மூலபாடங்கள் மின்னூல் வடிவில் கிடைத்தாலும் அதற்கான உரைகள் குறைவாகவே உள்ளன .சான்றாக.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ,சென்னை நூலகம் ஆகிய இணையதளங்களில் உரைகள் கிடைக்கின்றன.இவ்வுரைகள் ஒரே பக்கத்தில் காண இயலாதவாறு உள்ளன.சங்க இலக்கிய உரைகளும் ,ஆய்வுகளும் மின்னூல் வடிவில் கிடைக்கும் வகை செய்ய வேண்டும்.இது எதிர்காலத் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்

குறிஞ்சிப் பாட்டு

(ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது)
தோழி அறத்தொடு நிற்றல் பாங்கில் அமைந்துள்ள இப்பாடலில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்கள் ....
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,

புறநானூறு.. (வீரம்)

பாடல்.9
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். துறை :
இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து,
இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க.

“ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின். என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!“


இப்பாடலில் சங்க கால மக்களின் போர் மரபு கூறப்படுகிறது.பசுவும் பசுவின் இயல்புடைய பார்ப்பனரும்,பெண்களும்,நோயுற்றவர்களும்,இறந்து தென்திசையில் வாழும் முன்னோருக்கு சடங்கு செய்யும் புதல்வர்களைப் பெறாதவர்களும் எனப் பலரும் கேட்பீராக....
யாம் அம்புகளை விரைவுபடச் செலுத்திப் போரிட உள்ளோம்.நீவிர் யாவரும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள் என்று அறநெறியைக் கூறும் மனஉறுதி கொண்டவனாக முதுகுடுமிப் பெருவழுதி இருந்தான் என இப்பாடல் குறிப்பிடுகிறது.

மாற்றரசர் ஆயினும் முன்னறிவிப்புச் செய்து போரால் அவர்களுக்கு துன்பம் ஏற்படக்கூடாது என எண்ணினான்.இவ்வியல்பு முதுகுடுமிப் பெருவழுதியின் “அறத்தாறு நுவலும் பண்பை இயம்புவதாக உள்ளது.
சங்க காலத்தமிழர்களின் வீரத்திலும் ஒரு மனிதாபிமானத்தைக் காணமுடிகிறது.
இன்றோ மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மடிகிறார்கள்.இவர்களைக் காணும் போது இவர்கள் மக்களா?மாக்களா?என்னும் ஐயம் தான் எழுகிறது.
“மாவும் மாக்களும் ஐயறிவினவே “
(தொல்-1531) என்பர் தொல்காப்பியர் .அதாவது விலங்கினங்கள் அனைத்தும் விலங்கியல்போடு உள்ளோரும் ஐந்தறிவுடையன என்கிறார்.

மனிதர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் காணும்போது நாம் "மாக்களோடு"தான் வாழ்கிறோம் என்பது புரிகிறது.

செவ்வாய், 13 ஜனவரி, 2009

என்.எச்.எம்.ரைட்டர்

என்.எச்.எம்.ரைட்டரை நான் பயன்படுத்திப் பார்த்தேன் மிகவும் எளிமையாகவும்,பயனுள்ளதாகவும் உள்ளது.நீங்களும் பயன்படுத்திப் பாருங்களேன்.இம்மென்பொருள் எனது வலைப்பதிவில் நூலகங்கள் பகுதியில் உள்ள ரவி நூலகத்திலும் கிடைக்கும்.இதில் யுனிகோட்,தமிழ் 99,தமிழ் பொனட்டிக்,பழைய தட்டச்சு முறை,யுனிகோடு பாமினி,தமிழ் இன்ஸ்கிரிப்ட் யுனிகோடு எனும் பல்வேறு முறைகள் உள்ளன.ஒரு எம்.எஸ் வேர்ட் பகுதியைத் திறந்து மேற்கண்ட தட்டச்சு முறைகளில் ஏதாவது ஒன்றில் அடித்துக்கொண்டு அதனை அப்படியே காப்பி செய்து வலைப்பதிவிலோ இணையத்திலோ பதியலாம்.இதனால் எழுத்துகளை உருமாற்றத் தேவையில்லை.மேலும் இணையதளங்களைத் தமிழிலேயே தேடிக்கொள்ளவும் இம்முறை பயன்படுகிறது.

சனி, 3 ஜனவரி, 2009

கருத்தரங்க அறிவிப்பு

நான் இணையத்தில் கண்ட கருத்தரங்க அறிவிப்புகளை அனைவரும் பயன்பெற இங்கு அளிக்கிறேன் .........

'அறிஞர் அண்ணா பன்முகப் பார்வை ' என்னும் தேசிய கருத்தரங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது அதன் அழைப்பிதழைப் பெற முனைவர் சே.கல்பனா அவர்களின் இவ்வலைப்பதிவுக்குச்

http://www.http://kalpanase.blogspot.com/

செல்லவும்

வெள்ளி, 2 ஜனவரி, 2009

கருத்தரங்க அறிவிப்பு

திண்ணை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அறிவிப்பு

Friday January 2, 2009

தொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் கருத்தரங்கம்

அ.ராமசாமிபேரா. அ.ராமசாமி


தமிழியல் துறை ,


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்


திருநெல்வேலி -11


================================================================================================


ramasamy_59@hotmail.com


ramasamytamil@gmail.com


தொலைபேசி : 0462-2520879 / 9442328168


===================================================================== 31-12-2008


நண்பர்களே


வணக்கம்!


எமது தமிழியல் துறை செம்மொழி நிறுவனத்தின் உதவியுடன் 2009,மார்ச்,9,10,11 தேதிகளில் தொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்திடத் திட்டமிட்டு வருகிறது. மூன்று நாட்கள் கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கையைக் குறைத்து விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எனத்திட்டம். அத்தோடு கல்வித்துறை சார்ந்த புலமையாளர்களையும் கல்வித்துறை சாராத படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் போன்றவர்களையும் சந்திக்கச் செய்வதும் விவாதிக்கச் செய்வதும் நடக்கும் .


கட்டுரைகளும் விவாதங்களும் தொகுக்கப்பட்டுப் பின்னர் நூலாக்கப்படும். இக்கருத்தரங்கில் கட்டுரை வாசிப்பவர்களுக்குச் செம்மொழி நிறுவனம் முதல்வகுப்பு அல்லது இரண்டாம்வகுப்பு ஏசிக் கட்டணம் வழங்கவும், விவாதத்தில் பங்கேற்பவர்களுக்கு இரண்டாம் வகுப்புக் கட்டணம் மற்றும் தங்கும் படிகள் வழங்கப்படும்.


எமது பல்கலைக்கழக நிதியிலிருந்து மதிய உணவு வழங்க ஏற்பாடு உண்டு.


இக்கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க/ விவாதத்தில் பங்கெடுக்க எனத் தாங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.


கடிதம் அல்லது இணையம் வழியாகவும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.


பதிலை எதிர்பார்க்கிறேன்.


தங்களின்


அ.ராமசாமி