வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 31 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 76. பொருள் செயல்வகை

 



பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்.- 751

மதிப்பில்லாதவர்களும் பொருளால் மதிப்படைவா்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு.- 752

பொருளில்லாரை யாரும் மதிப்பதில்லை, செல்வரையே மதிப்பர்   

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று. -753

பொருள் எங்கும், எத்தடைகளையும் கடந்து செல்லும்

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்று வந்த பொருள். -754

அறம், இன்பம் இரண்டும் தருவது நல்வழியில் சேர்த்த பொருளே

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்      

புல்லார் புரள விடல். -755

அருளோடும் அன்போடும் வராத செல்வத்தை விரும்பாதே

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.- 756

இறையாக வந்த பொருள், வரி, பகைவர் பொருளும் அரசனுக்குரியன

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு. - 757

அன்பின் குழந்தையாம் அருள், பொருளெனும் செவிலியிடம் வளரும்

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை. - 758

பொருளுடன் தொழில் தொடங்குவது, பாதுகாப்பானது, மகிழ்ச்சியானது

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.- 759

பகைவரின் செருக்கை அழிக்க, பொருளைச் சேர். அதுவே நற்கருவி

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு. - 760

பொருளை ஈட்டியவரிடம் அறமும், பொருளும் சென்று சேரும்

வெள்ளி, 30 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 75. அரண்

 


ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்

போற்று பவர்க்கும் பொருள். - 741

எதிர்ப்பவர்களுக்கும், அஞ்சுபவர்களுக்கும் பாதுகாவல் அரண்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண். -742

அகழியும், மண்ணும், மலையும், நிழல் தரும் காடும் உடையது அரண்

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவரண் என்றுரைக்கும் நூல். - 743

உயரம், அகலம், உறுதி, எதிரிகளால் அழிக்க இயலா தன்மையது அரண்

சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை

ஊக்கம் அழிப்ப தரண். - 744

கோட்டை பெரிதாகவும், அதன் வாசல் சிறிதாகவும் அமைவதே அரண் 

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்

நிலைக்கௌiதாம் நீரது அரண். -745

பகைவா்க்கு அரிதாகவும், தமக்கு வசதியாகவும் அமைவது நல்லரண்  

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண். - 746

வீரர்களையும், அவர்களின் தேவைகளையும் நிறைவுசெய்வது அரண்  

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற் கரியது அரண்.-747

முற்றுகையிலோ, சூழ்ச்சியிலோ வெல்லமுடியாததே நல்ல அரண் 

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

பற்றியார் வெல்வது அரண்.-748

பெரும்படையாலும் அழிக்கமுடியாததே அரண்

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறெய்தி மாண்ட தரண். - 749

பகைவரை எளிதில் வீழ்த்துமாறு அமைவது அரண்

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.- 750

அரண் பல சிறப்புக்கொண்டிருந்தாலும், நல்ல வீரர்களே அதற்கு சிறப்பு

வியாழன், 29 அக்டோபர், 2020

திருக்குறள்- அதிகாரம் - 74. நாடு

 


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு. - 731

நல்ல விளைபொருள், பெரியோர், நற்செல்வர் நிறைந்ததே நாடு

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்

ஆற்ற விளைவது நாடு. - 732

பொருள் வளத்தால் பிறநாட்டாரும் விரும்புவதே நாடு    

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு. - 733

செலவுகளிருந்தாலும் மகிழ்வோடு மக்கள் வரிதருவது சிறந்த நாடு

உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு. - 734

கடும்பசி, தீராத நோய், பெரும் பகை இல்லாததே நாடு

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.- 735

பிரிவுகள், உட்பகையும், கொடியோரரரும் இல்லாதது நாடு

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை. - 736

கேடு வந்தாலும், வளம் குன்றாதிருப்பது நாடு

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.-737

ஆற்றுநீர், ஊற்றுநீர், மலை, மழை, அரண் ஆகியன நாட்டிற்கு அணி

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து. - 738

நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், காவல் நாட்டிற்கு அழகு

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.      -739

பிற நாடுகளைச் சாராமல் பல வளங்களையும் கொண்டதே நாடு

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு. -740

நல்ல அரசனால்தான் நல்வளங்கள் மக்களைச் சென்றடையும்

புதன், 28 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 73. அவையஞ்சாமை

 


வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர். - 721

நல்ல பேச்சாளர், அச்சத்தினால் தவறாகப் பேசமாட்டார்கள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார். -722

கற்றோரும் போற்றுமாறு பேசுவோர் கற்றோருள் கற்றோராவார்

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர். - 723

போருக்கு அஞ்சாதார் எளியவர், அவையில் அஞ்சாதாரே அரியவர்

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.- 724

தெரிந்ததைப் புரியுமாறு, கூறி தெரியாததை  கேட்டு அறிக

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.- 725

நற்சபையில் அஞ்சாமல் பேச, நல்ல நூல்களைப் படி

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு. - 726

கோழைக்கு வாள் எதற்கு? அவையஞ்சுவோருக்கு நூல் எதற்கு?   

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.- 727

அவையயஞ்சுபவனின் அறிவு பேடியின் வாளுக்குச் சமம்

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.- 728

பேச்சுத்திறன் இல்லாதவர்கள் பல கற்றாலும் பயனில்லை

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.- 729

அவையச்சம் கொள்வோர், கல்லாதாரைவிடக் கீழானவர்

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.- 730

அவையச்சம் கொள்வோர், வாழ்ந்தும் பயனில்லை

செவ்வாய், 27 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 72. அவையறிதல்

 


வையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.- 711

பார்வையாளரின் தன்மையறிந்து, ஆராய்ந்து பேசுவோர் நல்ல அறிஞர்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர். - 712

சொற்களின் சிறப்பை அறிந்தவர் அதை அவையறிந்து வெளிப்படுத்துவர்

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூஉம் இல். - 713

அவையறியார், சொல்லும் முறையும் அறியார்  ஆவார்

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.- 714

அவையோருள், அறிவாளி, பேதையர் தன்மையறிந்து  பேசுக

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு. -715

அறிவுமிக்கவர்கள் முன்னர் பேசாமலிருப்பதே அறிவாகும்

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. - 716

அறிவாளிகள் முன் ஏற்படும் இழுக்கு, பெருங்குற்றமாகும்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து. - 717

நல்லறிஞர் பேச்சில் நல்ல நூல்களின் பெருமை விளங்கும்

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர்சொரிந் தற்று. - 718

ஆர்வமுடையார் முன் பேசுதல் நற்பயிருக்கு நீர் பாய்ச்சுவது போன்றது

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச் சொல்லு வார்.- 719

அறிவார்ந்த அவையில் பேசுவோர், பேதையார் முன் பேசாமை நன்று 

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்

அல்லார்முன் கோட்டி கொளல். -  720

அறிவற்றார் முன் பேசுதல் அமுதத்தை கீழே சிந்துவது போன்றது

வெள்ளி, 23 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 71. குறிப்பறிதல்

 


கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.- 701

குறிப்பறிந்து நடப்பவன் கடல்சூழ் உலகிற்கு அணியாவான்              

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல். - 702

ஐயமின்றி ஒருவர் உள்ளத்தை அறிபவன் தெய்வத்துக்கு சமமாவான் 

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல். 703

முகக்குறிப்பால் அகத்தை உணர்வாரை எப்படியும் துணையாகக் கொள்

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை

உறுப்போ ரனையரால் வேறு. - 704

தோற்றத்தில் ஒத்திருந்தாலும், அறிவால் வேறுபட்டவர் குறிப்பறிவார்   

குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண். -705

முகக்குறிப்பால் அகத்தை உணராவிட்டால் கண்களால் யாது பயன்?   

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம். - 706

முகமே மனதைக் காட்டும் கண்ணாடி

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும். -707

இன்ப, துன்பங்களை விரைந்து வெளிப்படுத்திவிடும் முகம்

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்ற துணர்வார்ப் பெறின். -708

முகத்தைப் பார்த்தே அகத்தை உணர்வாரிடம் வார்த்தைகள் எதற்கு   

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின். - 709

பகையையும், நட்பையும் கண்களே காட்டிவிடும்

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

கண்ணல்லது இல்லை பிற. -710

கண்களால் கருத்தை உணர்பவரே நுண்ணறிவாளர் எனப்படுவார்

வியாழன், 22 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்


 

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். - 691

நெருப்பில் குளிர்காய்வதுபோல் அரசனிடம் அணுகாது, அகலாது பழகு

மன்னர் விழைப விழையாமை மன்னரான்

மன்னிய ஆக்கந் தரும்.- 692

மன்னர் விரும்புவதைத் தான் விரும்பாதாரே அவருடன் நிலைப்பார்  

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது. -693

ஆட்சியாளருடன் பழகுவோர் சந்தேகத்திற்கு இடமின்றி நடக்கவேண்டும்     

செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.- 694

பெரியவா்கள் முன்பு, காதோடு பேசுதல், சிரித்தலும் தவிர்ப்பது நலம்  

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை.- 695

அரசன் மறைக்கும்போதும், சொல்லும்போதும் அதற்கேற்ப புரிந்த நட  

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் சொலல். - 696

குறிப்பையும், காலத்தையும் அறிந்து மன்னர் விரும்புமாறு கூறு

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்.- 697

அரசனே கேட்டாலும் பயனுள்ளவை மட்டுமே சொல்லுக 

இளையார் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும். - 698

வயதோ, உறவோ, ஆட்சியாளர் முன் பார்க்காது பதவியைப் பார்

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.- 699

அரசர்க்கு நம்பிக்கையுரியோர் அவர் விரும்பாததைச் செய்யார்

பழையும் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும். - 700

நெடுங்காலம் பழகினாலும் பண்பில்லாதவை செய்யாதே