வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

சிரிப்பும் சிந்தனையும்.

v துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது!
சிரிப்பனிடம் துன்பம் இருக்காது! - ஆனால்,

துன்பத்திலும் சிரிப்பனிடம் தோல்வி இருக்காது!!

v நண்பா உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே!
அந்தத் துன்பத்திடம் சொல் என் நண்பன் இருக்கிறான் என்று!

v கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்! - அவை
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன.

v அறிவாளி ஒருவன் தான் அறிவாளி என்று எண்ணிக்கொள்ளும் போது முட்டாளாகிறான்!

முட்டாள் ஒருவன் தான் ஒரு முட்டாள் என்று உணர்ந்துகொள்ளும் போது அறிவாளிகிறான்!

v காது கேளாதோர் கவிதை.
எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!
எல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்!

v பல வேலைகளைச் செய்ய ஒரே குறுக்கு வழி..
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்யுங்கள்!

v இயற்கை, காலம், பொறுமை ஆகியற்றைவிட சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை.

v எல்லோருமே தவறு செய்பவர்கள் தான் ஆனால்
முட்டாள்கள் மட்டுமே அந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்!


பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்.


v கேளிக்கைகளை, ஆனால் மகிழ்ச்சியை அல்ல.
v புத்தகங்களை, ஆனால் ஞானத்தை அல்ல.
v கூட்டாளிகளை, ஆனால் நண்பர்களை அல்ல.
v உணவை, ஆனால் பசியை அல்ல.
v மருந்தை, ஆனால் ஆரோக்கியத்தை அல்ல.
v படுக்கையை, ஆனால் தூக்கத்தை அல்ல.
v கடிகாரத்தை, ஆனால் அதிக நேரத்தை அல்ல.
v அகங்காரத்தை, ஆனால் அழகை அல்ல.
v வீட்டை, ஆனால் மகிழ்ச்சியா வீட்டையல்ல.
v மோதிரத்தை, ஆனால் திருமணத்தை அல்ல.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

முல்லையும் பூத்தியோ!ஒரு மாவட்ட ஆட்சியர் அன்புடன் ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய் ஒரு நாள் இறந்து போனது. ஊரிலுள்ள பல்வேறு மக்களும் அவரிடமும் அவர் உறவினரிடமும் வந்து துக்கம் விசாரித்துச் சென்றனர்.

ஒருநாள் அந்த மாவட்ட ஆட்சியரே இறந்துபோனார்.
ஆனால் அவரின் இறப்பைக் கேட்க யாருமே வரவில்லை!!

ஊர்மக்களிடம் ஒருவர் கேட்டார் என்னங்க அவர் வீட்டு நாய் இறந்ததைக் கேட்க நிறைய பேர் வந்தார்கள்.
இன்று அவரே இறந்து போனார் யாருமே வரவில்லையே? என்று. அதற்கு அந்த ஊர் மனிதர் ஒருவர் சொன்னார்.

மாவட்ட ஆட்சியர் வாழும்போது அதிகாரியாகவே வாழ்ந்தார்!
பணத்துக்கும் தன் சுயநலத்துக்கும் கொடுத்த மதிப்பை அவர் மக்களுக்குத் தரவில்லை.

மக்களோ அவரிடமிருந்த பதவிக்காகவும். அவரால் சில பயன்களை அனுபவிக்கவும் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

இன்று அவரே இல்லை அவர் வீட்டுக்கு ஏன் மக்கள் போகப்போகிறார்கள்?என்றார்.


ஒருமனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனுடைய இறப்பு தெளிவாகக் காட்டிவிடும்.

மண் பயனுற வாழ்ந்தவர்கள் இறப்பதில்லை!
அவர்களின் உடல் மட்டுமே அழிந்துபோகிறது!


மண் பயனுற வாழ்ந்த மனிதனும் மக்கள் மனமும்...


ஒல்லையூர் நாட்டு வள்ளல் சாத்தன் இறந்ததால் அவ்வூர் மக்கள் வருந்தியிருக்கின்றனர். முல்லை மலர் இயல்பாக மலர்ந்திருக்கிறது. அதைப் பார்க்கிறார் புலவர்,

முல்லையே!
இளைய வீரர்கள் சூடமாட்டார்கள்!
வளையல் அணிந்த இளமகளிரும் பறிக்கமாட்டார்கள்!
நல்ல யாழை வாசிக்கும் பாணனும் பறிக்கமாட்டான்!
பாடினியும் சூடிக்கொள்ள மாட்டாள்!

தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு வீரர் பலரையும் எதிர்நின்று கொன்றவன், வலிய வேலையுடைய சாத்தன், அவன் இறந்த பின்பு, இந்த ஒல்லையூர் நாட்டிலே முல்லையே நீயும் பூத்தனையே?
சாத்தன் இறந்தால் பகைவர் அகம் மலர்வர்!
முல்லை மலரே நீ ஏன் மலர்ந்தாய்?

என்று பாடுகிறார்.

பாடல் இதோ..


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?


புறநானூறு 242.
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.


இவ்வாறு கையற்றுப் புலம்புதல் “கையறுநிலை“ என்னும் புறத்துறையாகும்.

இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

1. கையறுநிலை என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
2. வாழ்ந்தால் மண்பயனுற வாழவேண்டும் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது.
3. அரசன் மீது மக்கள் கொண்ட அன்பு பாடலைப் படிப்போர் மனதை நெகிழச்செய்வதாகவுள்ளது.

புதன், 17 பிப்ரவரி, 2010

நீர் வழிப்படூஉம் புணைபோல் - UPSC EXAM TAMIL - புறநானூறு - 192ஒரு நாள் வான்வழியே சிவனும், பார்வதியும் சென்றுகொண்டிருந்தார்களாம். அவர்கள் கண்ணுக்கு கிழிந்த சட்டையைத் தைத்துக்கொண்டிருக்கும் வயது முதிர்ந்த ஒருவர் தெரிந்தாராம். அவரைப் பார்த்த பார்வதி மிகவும் ஏழைபோலத் தோற்றமளிக்கிறாரே…
இவருக்கு ஏதாவது வரம் தந்து செல்லாம் என்று சிவனிடம் சொன்னாராம்.
அதற்கு சிவன் இவரா..
இவர் நீ நினைப்பது போல சராசரி மனிதர் அல்ல!
அவருக்குக் கடவுள் நம்பிக்கையுண்டு. ஆயினும் அவர் முதலில் நம்புவது நம்மையல்ல அவரைத் தான் என்றாராம். ஆயினும் பார்வதியின் வற்புறுத்தலுக்காக அந்த முதியவரைப் பார்க்க இருவரும் அவர் வீட்டுக்குச் சென்றார்களாம்.

இருவரையும் பார்த்த அந்த முதியவர்..
முகம் மலர்ந்து வரவேற்றார்,
பின் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார், நல்லாருக்கீங்களா?
என்னை மதித்துப் பார்க்க வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி!
என்றவர் தொடர்ந்து தன் கிழிந்த சட்டையைத் தைக்க ஆரம்பித்துவிட்டாராம்.

பார்வதிக்கு இது மிகவும் புதுமையாக இருந்தது. என்ன இவர் கடவுளர் நாம் வந்திருக்கிறோம் நம்மை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இவர்பாட்டுக்க கிழிந்த சட்டையைத் தைத்துக்கொண்டிருக்கிறாரே என்று. சரி நாமே கேட்கலாம் என்று பார்வதி அந்த முதியவரிடம் கேட்டாராம்..

பார்வதி - முதியவரே தாங்கள் எங்களிடம் ஏதாவது வரம் கேளுங்கள் தருகிறோம்.

முதியவர் - இடியெனச் சிரித்தார்…

(இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை)

பார்வதி - நாங்கள் ஏதாவது வரம் தருகிறோம் என்றுதானே கேட்டோம் அதற்கு ஏன் சிரிக்கிறீர்கள்?

முதியவர் - என் வாழ்வில் தேவைகள் குறைவு.
அதனால் வாழ்வெல்லாம் நிறைவு!
என் தேவைகளை நானே நிறைவுசெய்து கொள்கிறேன்.
எனக்கு எதற்கு வரம்?

பார்வதி - தாங்கள் ஏதாவது வரம் கேட்டுத்தான் ஆகவேண்டும். நாங்கள் யாரைப் பார்த்தாலும் வரம் தந்து செல்வது தான் வழக்கம் அதனால் ஏதாவது கேளுங்கள்.

முதியவர் - சரி மிகவும் வற்புறுத்திக் கேட்கிறீர்கள். அதனால் கேட்கிறேன்.
நான் தைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊசியின் பின்னே இந்த நூல் செல்லும் வரம் தாருங்கள்.

பார்வதி - என்ன சொல்கிறீர்கள் முதியவரே..
இயற்கையாகவே ஊசியின் பின்தானே நூல் செல்லும்.
இதற்கு எதற்கு வரம்?

முதியவர் - ஆம் உண்மை தான் அதுபோலதானே எனது வாழ்க்கையும். நான் செய்யும் நன்மை தீமையை அடிப்படையாகக் கொண்டு தானே இன்ப துன்பம் அமையும்.

நான் ஒரு நன்மை செய்தால் அதன் பின்னே இன்பம் வரும்!
நான் ஒரு தீமை செய்தால் அதன் பின்னே துன்பம் வரும்!

இதில் எனக்கு எதற்கு வரம்.

பார்வதி - உண்மைதான் உங்களைப் போலவே எல்லோரும் இருந்துவிட்டால் எங்களுக்கு வேலை மிச்சம்.


இந்தக் கதை காலகாலமான நம் நம்பி்க்கையின் பிரதிபலிப்பாகவுள்ளது.
இதே சிந்தனையை உள்ளடக்கிய சங்கப் பாடல் ஒன்று.


யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

192. பெரியோர் சிறியோர்!
பாடியவர்: கணியன் பூங்குன்றன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி.

இந்தப் பாடல் உணர்த்தும் கருத்துக்கள்….யாதும் ஊரே யாவரும் சுற்றத்தாரே என்று வாழ்ந்துவிட்டால் நமக்குள் வேறுபாடு அகன்றுவிடும்!

தீமையும் நன்மையும் பிறர் தரா வாராது!
துன்பமும் இன்பமும் தம்மாலேயே விளைவதாகும்!

என்பது புரிந்துவிட்டால் கோயில்களின் எண்ணிக்கையும் குறையும், உழைப்பு அதிகரிக்கும்! நாடு செழிக்கும்!

இறத்தலும் புதியதன்று!
கருவில் தோன்றிய நாள் முதல் இறப்பு என்பது தீர்மானிக்கப்பட்டது!

என்ற சிந்தனை அறிவியலின் துணைகொண்டு இன்னும் ஆய்வு செய்யவேண்டியது.

மரபணுக்களையும், வேர்செல்களையும் ஆய்வுசெய்யும் அறிவியல் அறிஞர்கள் ஒரு உயிரின் இறப்பு குறித்த நாளை வரையறை செய்யமுடியுமா? என்று சிந்திக்கலம்.

வாழ்தலை இனிதென மகிழ்தலும் இல்லை!
ஒரு வெறுப்பு வந்தபோது வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்குதலும் இல்லை!

இன்பம் வந்த போது மகிழ்ந்து துன்பம் வந்தபோது வருந்தும் நாம் இரண்டையும் சமநிலையில் எடுத்துக்கொள்ள முற்பட்டால் ஏமாற்றம் குறையும்.

மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் கல்லை உருட்டி ஒலிக்கும் ஆறு. அவ்வாற்று நீரின் வழியே செல்லும் தெப்பம் போல அரிய உயிர் நம் வாழ்வின் முறைவழியே செல்லும் என்பதை நன்மைக் கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலேயே அறிந்தோம். அதனால்,

பெரியோரைக் கண்டு பெருவியப்படைவதும் இல்லை!
சிறியோரைக் கண்டு அவமதிப்பு செய்வதும் இல்லை!

என்பதே பாடலின் பொருள்.


இப்பாடலில்,

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

என்பதற்கு உரையாளர்களும், ஆய்வாளர்களும் விதிவழியே என்ற பொருளையே சொல்லிச் சென்றுள்ளனர். முறையென்ற சொல்லுக்கு ஊழ் எனப் பொருள் கொள்வது எந்தவிதத்தில் பொருந்தும்?

கடவுள் நம்பிக்கையாளர்களின் மன நிறைவுக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளாம்.
கணியன் பூங்குன்றனாரோ மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளார் முறைவழிப்படும் என்று!

என்ன முறைவழி?
நன்மை - தீமை என்ற முறை வழி,
இன்பம் - துன்பம் என்பன வந்து சேரும்.

கால காலமாகவே கடவுள் நம்பிக்கையில் மூழ்கிப்போன மனது முறைவழி என்பதை விதி வழி என்று ஆக்கிவிட்டது.

கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே..
விதியை யாராலும் வெல்ல முடியாது என்று பேசும் இவர்கள்…

விதியை மதியால் வெல்லாம் என்றும் பேசுவார்கள்…

காலத்திற்கு ஏற்றது போல.

உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய இப்பாடலை உலகமக்களிடையே கொண்டு செல்லும் போது நம்முடைய விதிபற்றிய நம்பிக்கையையும் ஏன் கொண்டு செல்லவேண்டும்?

பாடல் பாடிய புலவர் விதி என்றா கூறியிருக்கிறார்?
இல்லையே முறை என்று தானே சொல்லியிருக்கிறார்?
முறை எப்படி விதியாகும்?

தினை விதைத்தால் தினை விளையும்
வினை விதைத்தால் வினை விளையும் என்பதே முறை!

என்பதைச் சிந்தித்து பழந்தமிழரின் உயரிய கொள்கையைப் போற்றுவோம்!!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-1

காலகாலமாக நம் மொழியில் பலமொழிச்சொற்கள் கலந்துள்ளன. இன்று ஆங்கிலத்தோடு தமிழைக் கலந்து பேசுவது போல ஒருகாலத்தில் மணிப்பிரவாள நடை என்ற நடை பெருவழக்காக இருந்தது. மணிப்பிரவாளம் என்றால் முத்தும் மணியும் போல தமிழும் வடமொழியும் கலந்துபேசும் முறையாகும்.

தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் மறைமலையடிகளும், பரிதிமாற்கலைஞரும் செய்த மாற்றங்கள் குறிப்பிடத்தகனவாகும்.

மறைமலையடிகளின் இயற்பெயர் ஸ்வாமி வேதாசலம் என்பதாகும். தனித்தமிழ் மீது இவர் கொண்ட ஈடுபாடு காரணமாக…வேத- மறை
அசலம்-மலை
ஸ்வாமி-அடிகள் என மாற்றி மறைமலையடிகள் என்று வைத்துக்கொண்டார்.

தான் நடத்தி வந்த “ஞானசாகரம்“ இதழின் பெயரும் வடமொழிச்சொல்லாக இருந்தது அதனையும் மாற்றி “ அறிவுக்கடல்“ என்று அமைத்துக்கொண்டார்.

இவரைப் போலவே பரிதிமாற்கலைஞரும் வடமொழியிலிருந்த தன் பெயரை தமிழ் மரபுப்படி மாற்றிக்கொண்டார்.

இவரின் இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரிகள்.சூரிய- பரிதி
நாராயண- மால்
சாஸ்திரி-கலைஞர் என்பதை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.

இவ்விருவரும் தம் பெயரிலிருந்த வடசொற்களை மட்டும் விரட்டவில்லை. தமிழ்மொழியிலிருந்த பல வடசொற்களையும் விரட்டினார்கள.

காலத்தின் தேவைகருதி…

தமிழில் கலந்த பிறமொழிச்சொற்களையும் அதற்கு இணையான தமிழ்சொற்களையும் தொடர் இடுகையாக வெளியிடயிருக்கிறேன்.

வடமொழிச் சொல் - தமிழ்ச்சொல்

1. அக்கிரமம் - கொடுமை, முறைகேடு
2. அக்கிணி - தீ, அழல்,நெருப்பு,
3. அகதி-ஏதிலி
4. அகிம்சை-இன்னாசெய்யாமை.
5. அங்கீகாரம்- ஏற்பிசைவு.
6. அசம்பாவிதம்- நேரக்கூடாதது.
7. அசாத்தியம்-செயற்கரியது.
8. அசீரணம்-செரியாமை.
9. அசுத்தம்-குப்பை.
10. அஞ்ஞானம்-அறிவிலி.
11. அட்சதை-மங்கல அரிசி.
12. அட்சயபாத்திரம்-அமுதசுரபி.
13. அட்டகாசம்-பெருஞ்சிரிப்பு.
14. அத்தாட்சி- சான்று.
15. அதர்மம்-அறக்கேடு.
16. அதிசயம்-வியப்பு,புதுமை.
17. அதிபர்-தலைவர்.
18. அதிகபட்சம்-பேரெல்லை.
19. அதிகப்பிரசங்கி-வாயாடி.
20. அஸ்திவாரம்- கடைக்கால்.
21. அந்தம்-முடிவு.
22. அந்நியன்-வேற்றான்,அயலான்.
23. அநாதை-ஏதிலி.
24. அநாவசியம்- தேவையில்லை.
25. அநியாயம்-அன்முறை.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

நீரின்றி அமையா யாக்கை.மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா? என்று இங்கு இருந்துகொண்டே சிந்தி்த்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா? என்பதைத் தான்.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. என்றும்.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

என்பதை,

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
என்றும் உரைப்பார் வள்ளுவர்.

இக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல்க் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.

இதே சிந்தனையைப் புறநானூற்றுப் பாடலும் முன்வைக்கிறது.


நீரின்றி அமையாத உடல்,

உடல் உணவால் அமைவது!

உணவைவே முதன்மையாகவும் உடையது!

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்!

எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்!

நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப்படைத்தவராவர்
.


என்ற கருத்தை இப்பாடலில் காண முடிகிறது. இந்த சிந்தனை பழங்காலத் தமிழரின்,

நிலவியல்,
உடல்கூறியல்,
வானியல், குறித்த அறிவியல் அறிவை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

நீரின்றி - நிலமில்லை!
நிலமின்றி - உடலில்லை!

நிலம் - உடல் இரண்டுக்குமே அடிப்படைத் தேவை நீர்!

இந்த நீரை நிலத்துடன் சேர்க்கும் போது உணவு கிடைக்கிறது!

உணவே மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் தலையானதாகவுள்ளது.


மன்னனுக்கு நல்லறம் சொல்லும் புலவர் சொல்கிறார்..

மன்னனே..
பல புகழையும் கொண்டவன் நீ..
உனது புகழ் நீங்காததாக இருக்க வேண்டுமானால் நிறைய நீர் நிலைகளை உருவாக்கு.
நீ உருவாக்கும் நீர் நிலைகள் வெறும் நீர்நிலைகள் அல்ல!
நிலத்தோடு நீரைச் சேர்ப்பது என்பது உடலோடு உயிரை சேர்ப்பதாகும்.. என்றுரைக்கிறார். இதனையே,


முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

புறநானூறு - 18. நீரும் நிலனும்!
பாடியவர்; குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
என்ற பாடல் விளக்குகிறது.

இதன் பொருள்...

முழங்கும் கடல் முழுவதும் வளைந்த பரந்தகன்ற உலகத்தைத் தம் முயற்சியால் கொண்டு, தம்புகழை உலகில் நிலைக்கச் செய்து தாமே ஆண்ட வலியோர் மரபில் வந்தவனே!

ஒன்றைப் பத்து மடங்குகளாக அடுக்கிய கோடியைக் கடையெண்ணாகக் கொண்டு உன் வாழ்நாள் அமையட்டும்.
நீரில் படியுமாறு தாழ்ந்த குறுகிய காஞ்சி மரத்தின் மலர்களைக் கவ்வும் வாளை இன மீன்களையும், நிறம் பொருந்திய கெடிற்று மீன்களையும் கொண்டது ஆழமான அகழி!

அதனுடன் வானம் அஞ்சுமாறு உயர்ந்த சீரிய நெடிய மதிலையும் கொண்ட வளமுடைய பழைய ஊரினைக் கொண்டு விளங்கும் வலிமையான அரசனே!

நீ செல்கின்ற உலகத்தில் நுகரத்தக்க செல்வத்தை வேண்டினாலும் உலகை ஆளும் அரசர் பலருடைய தோள் சிறந்த புகழை இவ்வுலகில் நிலை நிறுத்த விரும்பினாலும் அவ்விருப்பங்களுக்குத் தக்க செயல் ஒன்றனைக் கூறுவேன் இனி பெருமையுடையவனே கேட்பாயாக,

வெல்லும் போருடைய செழிய!

நீரின்றி அமையாத உடல்,
உணவால் அமைவது!

உணவைவே முதன்மையாகவும் உடையது!

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்!

எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்!

நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப்படைத்தவராவர்.

விதைகளை விதைத்து மழையை நோக்கும் புல்லிய புன்செய் நிலமகன்ற இடமுடைய நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால் நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைபிடிப்பாய்!

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலை பெருகச் செயதல் வேண்டும். இவ்வாறு நிலத்துடன் நீரைக் கட்டியோர் இவ்வுலகில் நிலைக்குமாறு தன் பெயரை உலகுள்ளவரை நிறுத்திய புகழை அடைவர். அவ்வாறு செய்யாதவர் இவ்வுலகினோடு தம்பெயரைச் சேர்த்த புகழை அடையார்.பாடல் கிளறும் சிந்தனைகள்.


² நீரே நிலத்துக்கும், உடலுக்கும் மதிப்பளிக்கிறது. என்ற அவர்களின் சிந்தனை அவர்களுக்கு இருந்த அறிவியில், உடலியல், நிலவியல் அறிவை அறிவுறுத்துவதாக உள்ளது.

² புகழ் நிலைக்க வேண்டுமானால் நீர் நிலைகளை உருவாக்கு என்று மன்னனுக்கு அறிவுறுத்தும் புலவர் மண் மீதும் மக்கள் மீதும் கொண்ட பற்றுதல் புலனாகிறது.

² இன்றைய அரசு இயற்கை தந்த நீர்நிலைகளைக் கண்டு கொள்ளாததன் விளைவு 1 லிட்டர் குடிநீரின் விலை ரூபாய் 15. பூச்சிக்கொல்லி மருந்தின் ( வெளிநாட்டுக் குளிர்பானங்கள் ) விலை ரூபாய் 30.

² நீரின் தனித்துவத்தையும், அதன் தேவையையும் அறிவியல் அடிப்படையில் நிலவியல் அடிப்படையில் பாண்டியனுக்கு அறிவுறுத்த குடபுலவியனார் என்ற புலவர் இருந்தார்.

² இன்றைய கவிஞர்களுக்கோ இலக்கிய நயத்தோடு…………

டர்ர்ர்ங்குது, சுர்ர்ர்ர்ங்குது என்று பாட்டெழுதவே நேரம் போதவில்லை..

² அரசுக்கோ தம் நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

தமிழ்மணம் தந்த முதல் பரிசு.சென்ற ஆண்டுக்கான தமிழ்மணம் அளித்த விருதுகளுள் 11 வது பிரிவில் எனக்கு முதல் பரிசு கிடைத்ததை முன்பே பதிவில் பகிர்ந்திருக்கிறேன். விருது அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களிலேயே தமிழ்மணம் இணையதளத்தினர் முதல்பரிசு ரூபாய் 1000 க்கான பரிசுக் கூப்பனை மின்னஞ்சல் வழி அனுப்பிவிட்டார்கள். சென்னை நியு புக் லேன்ட் என்னும் நூல் நிலையத்தில் புத்தகங்களை வாங்கிக்கொள்ளப் பணித்திருந்தார்கள். பாண்டிச்சேரிக்குக் கருத்தரங்கத்துக்குச் சென்றபோது அப்படியே சென்னை சென்று பரிசுக்கான நூல்களை மகிழ்வோடு வாங்கிவந்தேன்.

இந்த மகிழ்வான வேளையில் தமிழ்மணம் இணையதளத்தினருக்கும்,
வாக்களித்து தேர்வுபெறச் செய்த,
வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்விப்பணியிலிருக்கும் எனது சிந்தனைச் சிதறல்களுக்கு நூல்களே அடிப்படையாக அமைகின்றன. அவ்வடிப்படையில் தமிழ்மணம் வாயிலாகக் கிடைத்த இந்த நூல்களை என் வாழ்வில் என்றும் மறக்கமுடியாது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதிவரும் எனது எழுத்துக்களின் சுவடுகளுள் ஆழப்பதிந்த சுவடுகளாக இந்த தமிழ்மண விருதுகள் அமைந்துவிட்டன.

இவ்வேளையில் நான் வியப்போடும், பெருமையோடும் எண்ணிப்பார்க்கும் செய்தி ஒன்று உண்டு!!

தமிழ் வலைப்பதிவர்கள் பலர் இருந்தாலும் கல்விப்புலம் சார்ந்த, தமிழ்த்துறை சார்ந்த வலைப்பதிவர்கள் எத்தனைபேர் என்பதை விரல்விட்ட எண்ணிவிடலாம்.

இச்சூழலில்,

பழந்தமிழ் இலக்கியம் தொடர்பான செய்திகளைப் பதிவிடும் எனது பதிவைப் வாசிப்போருள் 80 சதவீதம் பிற துறை சார்ந்திருந்த நண்பர்கள் தான். அவர்களுக்குத் தமிழ்மீது இருக்கும் ஆர்வம் பாரட்டுதலுக்கும், வரவேற்பிற்கும் உரியது. அவ்வேளையில் தமிழ்த்துறை சார்ந்தவர்களும் வலையுலகிற்கு வரவேண்டும் என்பது எனது ஆவலாகவுள்ளது.

ஆலமரம் போல வேர்விட்டு, விழுதுவிட்டு, நிழல் பரப்பி நிற்கிறது

நம் மொழி! நம் மரபு!

ஆனால் அதன் வேர்கள் நம் கண்ணுக்குத் தெரியாதவாறு மண்ணுக்குள் புதைந்திருக்கிறது.

நமது மரபுகளையும், தமிழின் தனிச்சிறப்பையும் எடுத்தியம்புவதே
எனது பதிவின் நோக்கமாகும்.

என்னைப் போன்ற ஒவ்வொரு பதிவர்களின் பதிவுகளையும் உலக அரங்கின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் பணி போற்றுதலுக்குரியது.

புதன், 10 பிப்ரவரி, 2010

சங்ககால விலங்குகள் (படம்)புவி வெப்பமயம் என்னும் பெரும் சிக்கல் தீர ஒரே வழி இயற்கை.
இயற்கையை நாம் அழித்ததாலேயே புவி வெப்பமயமாதல் என்னும் பேரழிவைச் சந்தித்திருக்கிறோம். ஒரு மரத்தை வெட்டும் போது ஒரு செடியை நடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதில்லை.
இயற்கையென்றால், நிலம், நீர், தீ, காற்று, வான் மட்டுமல்ல.
இயற்கையின் ஒரு கூறாக விலங்கினங்களும், பறவைகளும் உள்ளன.

இயற்கையை அழிக்கும் மனிதன் இந்த உயிரினங்களையும் அழிக்கத் தவறியதில்லை.
அதன் விளைவு இயற்கை அரிய காட்சிப் பொருளாக மாறிவருகிறது. மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாமல் இயற்கை பெரும் சீற்றத்துக்குத் தயாராகிவருகிறது.

சங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

சங்கத் தமிழரும் விலங்கினங்களும்.


சங்கத்தமிழர் வாழ்வியலில் விலங்குகள் இயைபுறக் கலந்திருந்தன.

வளர்ப்பு விலங்குகள்.

நாய் வேட்டைக்குப் பயன்பட்டது. வீட்டுக்காவலுக்கு நாய் வளர்க்கும் வழக்கம் அன்றே இருந்தது.

யானை, குதிரை மன்னனின் போருக்குப் பெரிதும் பயன்பட்டன.

கழுதை சுமைகளைத் தூக்கப் பயன்பட்டது.

யானையும், புலியும் ஒன்றையொன்று சண்டையிட்டு வென்றமையைப் புலவர்கள் பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளனர்.

குரங்கு, மான், கரடி, ஆமா, போன்ற பல்வேறு விலங்குகளைப் பற்றியும் குறிப்புகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது..

சங்கத்தமிழரின்,

பண்பாட்டில்,
போரில்,
உணவில்,
போக்குவரத்தில்,
உவமையில்,


எனப் பலநிலைகளிலும் விலங்கினங்கள் தொடர்பான செய்திகளை அறியமுடிகிறது.

சான்றாக,

கீழ்க்காணும் இடுகைகள் பழந்தமிழர் வாழ்வில் விலங்குகள் பெற்ற இடத்தை அறிவுறுத்துவனவாக அமையும்.


1. சகுனம் பார்த்த பன்றி

2. சிறுபிள்ளையும் பெருங்களிறும்

3. விட்டகுதிரையார்

4. அணிலாடு முன்றிலார்

5. இரும்பிடர்த்தலையார்

6. கூவன் மைந்தன்

7. இம்மென் கீரனார்

8. கொட்டம்பலவனார்.

9. துன்பத்தில் இன்பம் காண.
10. விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்.
11. சங்ககால ஒலி கேளுங்கள்
12. வாழ்வியல் இலக்கணங்கள் (அகத்திணைகள்)

வியாழன், 4 பிப்ரவரி, 2010

பழந்தமிழரின் இசைக்கருவிகள்(படம்)ஓரறிவுயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரைக்கும் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இத்தகைய இசைக்கு அடிப்படையனவை இசை்ககருவிகளாகும். பண்டைத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்று வெவ்வேறு வடிவங்களோடும், பெயர்களோடும் நம் பயன்பாட்டில் உள்ளன.

பண்டைத்தமிழர் இசைக்கருவிகளை,

தோல் கருவி
நரம்புக்கருவி
துளைக்கருவி
கஞ்சக்கருவி

என நான்கு வகையாகப் பகுத்தனர். இக்கருவிகளுள் எது முதலில் தோன்றியது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

தோல் கருவிதான் முதலில் தோன்றியது என்போர்,
வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல் வெயிலில் காய்ந்த போது ஏதோவொரு கல்பட்டாலும் ஒலி எழுப்பும் தன்மையுடன் அத்தோல் இருக்கும். அதை அறிந்த பழந்தமிழன் அந்தத் தோலைக் கல்லில் போர்த்தி இருகக் கட்டி ஒலி எழுப்பினான். இதுவே தோல்கருவியின் தோற்ற வரலாறு என்கின்றனர்.

நரம்புக்கருவி தான் முதலில் தோன்றியது என்பவர்கள்,

பழந்தமிழர் போருக்காகவோ, வேட்டையாடவோ வில்லைப் பயன்படுத்தினர். வில்லை எய்தபோது நாணிலிருந்து வரும் ஒலியே யாழ் தோன்றக்காரணமானது. யாழில் பழமையானது வில்யாழ், சீறியாழ், பேரியாழ், மகர யாழ், செங்கோட்டியாழ் எனப் பழ நரம்பாலான இசைக்கருவிகள் வளர்ச்சி பெற்றன. இன்று பயன்பாட்டிலிருக்கும் வயலின், கிட்டார் போன்ற நரம்பிசைக் கருவிகளுக்கு யாழே தாயாகும்.

துளைக்கருவி தான் முதலில் தோன்றியது என்பவர்கள்,

மூங்கிலில் வண்டு செய்த துளையில் காற்று வந்து முத்தமிட்ட போது மூங்கிலின் சிணுங்களே மண்ணில் தோன்றிய முதல் இசை என்கின்றனர் சிலர்.

கஞ்சக்கருவி இரும்பு, செம்பு, பொன் ஆகியவற்றால் செய்யப்பட்டது. சேர்ந்திசைக்கருவியாக இக்கருவி பயன்பட்டது.

வாழ்வியலில் இசைக்கருவிகள்.

பழந்தமிழரின் வாழ்வியலோடு இசைக்கருவிகள் இரண்டரக் கலந்திருந்தன.

பண் இசைப்பதால் பாணர் என்று பெயர் பெற்ற கலைஞர்கள் தம்மோடு எப்போதும் யாழ் வைத்திருந்தனர்.
சீறியாழை வைத்திருப்பவர் சிறுபாணர் என்றும் பேரியாழை வைத்திருப்பவர் பெரும்பாணர் என்று பெயர் பெற்றனர்.

ஆயர்கள் ஆநிரைகளை மேய்ப்பதற்கு குழல் இசைத்தனர்.

சங்க கால வாழ்வியலில் அதிகம் பயப்பட்ட இசைக்கருவிகளில் தோல்கருவிகளுள் குறிப்பிடத்தக்கது பறை, முரசு, முழவு ஆகியன ஆகும்.

ஆற்றுநீர் அணை உடைந்து வந்தால்,
யானை மதம்பிடித்து ஓடி வந்தால்,
மக்களுக்கு அறிவிப்பு செய்ய தோல்க்கருவியை இசைத்தனர்.
உழவுத் தொழில்.
குரவை, துணங்கை, வெறியாட்டு ஆகிய கூத்து நிகழ்விலும் தோல்க்கருவி முதன்மை பெற்றது.

போரில் வெற்றியின் அடிப்படையாக முரசொலி இருந்தது. எந்த நாட்டு மன்னன் வெற்றி பெறுகிறான் என்பதை முரசொலியை வைத்தே அறிந்துகொள்ள முடியும். ஒரு மன்னன் வெற்றி பெற்றால் முதலில் செய்வது தோற்ற மன்னனின் முரசின் கண்ணைக் கிழிப்பது தான். அரசனுக்கு அளிக்கும் மதிப்பை முரசுக்கும் முரசுகட்டிலுக்கும் அக்கால மக்கள் அளித்தனர்..

வழி தவறியவர்களுக்கு வழிகாட்டும் இசை.

அன்று பல சூழல்களின் காடுகளைக் கடந்து செல்லும் நிலையிருந்தது. அப்போது வழிமயக்கம் ஏற்பட்டு எப்படிச் செல்வது என்ற வழிச்செல்வோர் அஞ்சும் போது, மேட்டுப்பகுதிகளில் அனைவரும் கூடித் தம் இசைக்கருவிகளால் இசைத்தனர். அவ்விசை கேட்டுக் கானக்காவலர்கள் ஓடோடி வந்து முதலில் அவர்களுக்குப் பசி தீர காய் கனிகளை அளிப்பர். பின் அவர்கள் வழிமயக்கம் தீர உதவுவர்.

பழங்கால இன்னிசைக் கச்சேரி.

பல இசைக்கருகளையும் சேர்ந்து இசைக்கும் பெரிய இசைநிகழ்ச்சிகள் பலவற்றையும் அன்றைய தமிழன் கேட்டு மகிழ்ந்திருக்கிறான்..

இன்னியம் ( இனிய இசை ஒலி)
பல்லியம் ( பல இசைக்கருவி)
அந்தரப்பல்லியம் (வானில் இசைக்கும் ஒலி)


ஆகிய சொற்கள் இதற்குச் சான்றுகளாகின்றன.

இசையால் பெயர் பெற்ற தமிழன்.

பாணர் ( பண் இசைப்பதால்)
சிறுபாணர் ( சீறியாழை இசைப்பவர்)
பெரும்பாணர் ( பேரியாழை இசைப்பவர்
பறையர் ( பறை இசைப்பவர்)
துடியர் ( துடி இசைப்பவர்)
கடம்பர் (கடம் இசைப்பவர்)
இயவர் ( இசைப்பவர்
கூத்தர் ( கூத்தாடுவதால்)
வயிரியர் ( வயிர் என்னும் கருவியை இசைப்பவர்)

கலைஞர்கள் கருவிகளைக்கட்டித் தம் தோளில் சுமந்து கொண்டு வள்ளலை நாடிச் செல்வதைப் பல சங்கப்ப பாடல்கள் சுட்டுகின்றன.
சான்றாக மலைபடுகடாம் என்னும் பத்தப்பாட்டு நூலில் இடம் பெற்றுள்ள குறிப்பு,

விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, 5
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் து¡ம் பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் து¡ம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, 10
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,

(மலைபடுகடாம் -2-11)

இப்பாடலில் இவ்விசைக்கருகளின் இசையை அழகாகக் குறிப்பிட்டுள்ளார் புலவர்.

இவ்வாறு பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்றைய இசைக்கருகளுக்கு அடிப்படையாகும். பழந்தமிழர் வகுத்த பண்களே இன்றைய இராகங்களுக்கு முன்னோடி.

இன்றை இசைக்கருவிகளுக்கு அடிப்படை மின்சாரம்.
மின்சாரம் இல்லாவிட்டால் இந்தக் கருவிகள் செத்துப் போகும்.

பழந்தமிழர் இசைக்கருவிகளின் அடிப்படை இயற்கை.

இயற்கையப் புறந்தள்ளி மனிதனால் வாழமுடியாது!
இயற்கைக்கு இணையான இசையை எந்த ஒரு இசையமைப்பாளனாளும் உருவாக்க முடியாது!
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் பழந்தழிழர்தம் இசைக்கருவிகளும் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையே.
அதனால் தான் சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது இவ்விசைக்கருவிகளின் ஒலிகளைக் கேட்டுணர முடிகிறது.

பழந்தமிழரின் அனுபவங்களும், அவர்கள் விட்டுச்சென்ற பழைய கருவிகளுமே நமது இன்றைய இசைக்கு வாழ்வுக்கான அடிப்படை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.