வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 12 நவம்பர், 2016

திருக்குறள் ஆய்வுக்கோவையில் உங்கள் கருத்துரை


 எமது கல்லூரியில் நடைபெறும் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உரைநயங்களும் என்ற பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவையில் கருத்தரங்கத் தலைப்பு தொடர்பான தங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் அளிக்கும் கருத்துக்களுள் சிறந்த கருத்துக்களை ஆய்வுக்கோவையின் அணிந்துரைப் பகுதியில் வெளியிடவுள்ளோம். 
ஆய்வுக்கோவையில் தங்கள் கருத்தும் இடம்பெறவேண்டுமானால்,

உங்கள் உண்மையான பெயர், பதவி, துறை, நாடு 
ஆகிய விவரங்களுடன்திருக்குறள் மொழிபெயர்ப்புகள் பற்றியும், உரைநயங்கள்பற்றியும் தங்கள் கருத்தை முன்வைக்கலாம்.

உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் செம்மைத் தன்மைக்கு சான்று பகரும் நூல்களுள் ஒன்று திருக்குறள். மதம் சார்ந்து பரப்பப்பட்ட விவிலியத்துக்கு அடுத்து 90க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்குரியது இந்நூல். திருக்குறள் கடல் என்றால் அதன் உரைகள் கடலின் நிழற்படங்களைப் போன்றன. மொழிபெயர்ப்புகள் கடலின் காணொளிகளைப் போன்றன. நிழற்படங்களோ, காணொளிகளோ கடலின் முழுமையான தோற்றத்தைக் காட்டிவிடமுடியாது என்றாலும், கடலைத் தம் வாழ்நாளில் ஒரு முறை கூடக் காணாதவர் கடலின் நிழற்படத்தையோ, காணொளியையோ காணும்போது கடலை நேரில் காணவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அதுபோலத்தான் இந்த உரைகளும், மொழிபெயர்ப்புகளும். உரைகள் குறளை தமிழர்களிடம் பரவச் செய்தன என்றால் மொழிபெயர்ப்புகள் குறளை உலகமக்களிடம் கொண்டு சேர்த்தன. உலகமே கொண்டாடும் திருக்குறள் இன்று இவ்வளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் இணையத்தில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளும், உரைகளும் வாசிக்கும் நிலையில் மின் வடிவில் 
எவ்வளவு கிடைக்கின்றன என்று தேடினால் பெரிதும் ஏமாற்றமே கிடைக்கிறது. விக்கிப்பீடியாவில் திருக்குறளை இன்னும் பல மொழிகளில் ஆரம்பிக்கவே இல்லை. திருக்குறளை இணையத்தில் முழுமையாகக் கொண்டு சேர்த்தால் மட்டுமே உலகஅளவில் திருக்குறள் இன்னும் போய்ச்சேரும். திருக்குறள் இன்று இணையத்தில் மின்னூலாக, ஒருங்குறி எழுத்துருவில், குறுஞ்செயலியாக, ஒலிவடிவில், காணொளி வடிவில் கிடைக்கிறது என்றாலும் திருக்குறளை இன்னும் பல தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இயைபுடையதாக்கவேண்டியதும், திருக்குறளில் இதுவரை வந்த அனைத்து பதிப்புகளையும், உரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் ஒரு களஞ்சியமாக உருவாக்கவேண்டும் என்பது நமது கடமையாகவுள்ளது. திருக்குறள் குறித்த எமது பார்வையை முன்வைத்து நடத்தப்படும்,

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உரைநயங்களும் என்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 07.12.2016 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கத்துக்காக தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்துள்ளன. மலேசியா. பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கட்டுரைகள் வந்துள்ளன. மலேயா பல்கலைக்கழகத்திலிருந்து திரு குமரன் ஐயா அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கத்தை சிறப்பிக்கவுள்ளார். இக்கருத்தரங்க ஆய்வுக்கோவை பதிப்பில் உள்ளது. உங்களது மேலான கருத்துரை எமது ஆய்வுக்கோவையை இன்னும் மதிப்புள்ளதாக்கும் என நம்புகிறேன். வழக்கமான வாழ்த்துக்களைத் தவிர்த்து திருக்குறள் மொழிபெயர்ப்புகள் பற்றியும் உரைகள் பற்றியும் தங்கள் கருத்துக்களை நூலில் பதிவு செய்கிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு உண்மையான சுயவிவரத்தையும்
(கருத்து, பெயர், பதவி, துறை, நாடு

தங்கள் கருத்துரைக்குக் கீழே தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

நன்றி.


வியாழன், 3 நவம்பர், 2016

இன்றைய சிந்தனை (04.11.2016)


பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு



இன்றைய சிந்தனை (03.11.2016)


திங்கள், 24 அக்டோபர், 2016

இன்றைய சிந்தனை (25.10.2016)


தமிழர் பண்பாட்டில் இயற்கை

தமிழர் பண்பாட்டில் இயற்கை
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் உதவிப் பேராசிரியர்
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு


தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை அதன் தொடர்ச்சியிலும் உள்ளது. தொடர்ச்சி என்பது தமிழ் மொழி எத்தனை சமய, மொழி மற்றும் பண்பாட்டுப் படையெடுப்புகளைக் கடந்து வந்தது என்ற வரலாற்றை உள்ளடக்கியது. தமிழ் வரலாற்றை அறிந்துகொள்வதில் சங்கஇலக்கியங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. சங்கஇலக்கியங்களை வாசிக்கும்போது பழந்தமிழர் பண்பாட்டின் பிறப்பிடமாக இயற்கை விளங்குவதை உணரமுடிகிறது. இயற்கையிடம் தனிமனிதன் கற்ற நற்பண்புகளே பலரும் பின்பற்றத்தக்க தமிழ்ச்சமூகத்தின் பண்பாடாகக் காணமுடிகிறது. அத்தமிழா் பண்பாட்டில் இயற்கையின் சிறப்பை எடுத்தியம்புவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
மனிதனும் இயற்கையும்
அணுக்களால் செறிந்த நிலமும், நிலத்தின் கண் ஓங்கியிருக்கும் வானமும், வானளவு பொருந்தித் தடவி நிற்கும் காற்று, காற்றினால் பெருகும் தீ, தீயுடன் மாறுபட்ட நீர், என ஐந்து வகையான பெரிய ஆற்றல்களைக் கொண்டது இயற்கைஅவ்வியற்கைக்கு ஒப்பான ஆற்றல்களைக் கொண்டவன் சேரன். அவன். தன்னைப் போற்றாத பகைவர் தம் பிழையை, நிலம் போலப் பொறுத்திருக்கிறான்!                  அப்பகைவரை அழிக்க அவன் வானளவு சிந்திக்கிறான்!
பகைவரை அழிக்க அவன் கொண்ட நால் வகைப் படைகளும் காற்றுக்கு ஒப்பான வலிமையுடையன! பகைவரை அழிக்கும் அவன் திறன் தீயிற்கு ஒப்பானது! தம்மைப் பணிந்தவர்களிடம் தீயிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நீர்போல அன்புடையவனாக உள்ளான். இவ்வாறு இயற்கையின் ஐம்பெரும் கூறுகளின் தன்மைகளையும் தம்மகத்தே கொண்டவனாக விளங்குகிறான் 1 சேரன் என்று புகழ்கிறார் முரஞ்சியூர் முடிநாகராயர்.  நிலத்திடமிருந்து பொறுமையையும், வானத்தைப் போல பரந்த சிந்தனையையும், காற்றைப் போன்ற விரைவையும், தீயைப் போல அழிக்கும் தன்மையும், நீரைப் போல அன்புடைமையும் இயற்கையிடமிருந்து பழந்தமிழர் கற்ற பண்பாடுகளாகவே காணமுடிகிறது.
நட்பாராய்தல்     
      உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல நட்பைத் தேர்ந்தெடுக்கும் நுட்பத்தை புறநானூறு விளக்குகிறது. சிறுமுயற்சியும், பதுங்கி வாழும் இயல்புமுடைய எலி போன்றவர்களின் நட்பைப் பெறாமல், வலப்பக்கம் மட்டுமே தாம் வீழ்த்தும் விலங்கை உணவாக உண்ணும் வலிமையும், வீரமும் நிறைந்த புலி போன்றவர்களின் நட்பைப் பெறவேண்டும் 2 என்கிறார் சோழன் நல்லுருத்திரனார்.
மானம்
பசி வந்தால் பத்தும் பறந்துபோம் என்பார் ஔவையார். பசியைவிட, மானமும், வீரமும் பெரிது என்ற தமிழர் பண்பாட்டை, சங்கிலியால் கட்டப்பட்ட நாய்போல சிறைப்பட்டு வாழ்வதைவிட வாளால் மடிவதே மேல் 3 என்று உயிர் விட்டு தன்மானத்தைக் காத்து நிற்கின்றான் சேரமான் கணைக்காலிரும் பொறை.
வரி விதிக்கும் மாண்பு
      வரி என்பது மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காவும், நாட்டு வளர்ச்சிக்காகவும் விதிக்கப்படுவது மரபு. அதிலும் அளவு இருக்கவேண்டும் என்கிறது இப்புறப்பாடல். சிறு நிலமானாலும் அதில் விளைந்த நெல்லை கவளமாக வழங்கினால், யானைக்கு அது பல நாட்களுக்கு உணவாகும். நூறு வயல்களாயினும், யானை தனித்துச் சென்று புகுந்து உண்டால் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட காலில் பட்டு அழிவதே மிகுதியாகும்.  அதுபோல குறைந்த வரியே மக்கள் குறைவின்றி வாழத் துணைநிற்கும் 4 என்று பாண்டியன் அறிவுடைநம்பிக்கு அறிவுறுத்துகிறார் பிசிராந்தையார். அளவுகடந்து ஆசைப்படக் கூடாது மக்கள் நலமே அரசின் வளம் என்ற உண்மையை யானைபுக்க புலம் போல என்ற உவமை விளக்குகின்றது.
உணவு வழங்கும் மரபு
      இரவலர்களுக்கு உணவு வழங்கிய கலங்கள் விண்மீன்களைப் போல ஒளிவீசுவனவாக 5 இருந்தன என்கிறார் உருத்திரங்கண்ணனார். இரவலர்களாக இருந்தாலும் அவா்களுக்கு, அரசர்கள் வெள்ளிக் கலங்களில் உணவு வழங்கினர் என்ற சிறப்பு வெளிப்படுகிறது.
ஆடைகள்
      பழந்தமிழரின் ஆடை மரபானது, தழையாடை தொடங்கி வேலைப்பாடமைந்த பல வண்ண ஆடைகள் வரை வளர்ச்சியடைந்திருந்தது. இந்திரகோபப் பூச்சியைப் போன்ற பூவேலைப்பாடமைந்த ஆடைகளைப் 6 பற்றி நக்கீரரும், நுண்மையான வேலைப்பாடமைந்த பாம்பின் தோலைப் போன்ற ஆடைகளை 7 முடத்தாமக்கண்ணியாரும் குறிப்பிடுகிறார். பழந்தமிழர், செக்கர் வானத்தை ஒத்த சிவந்த கண்களை மயக்கும் பூவேலைப்பாடு கொண்ட கலிங்கத்தை 8 இடையில் அணிந்திருந்தமை மாங்குடி மருதனார் குறிப்பிட்டுள்ளார்.
வணிகம்
விளம்பரங்கள் நிறைந்த இன்றய வணிகச்சூழலில் சங்ககால வணிகம் குறித்த பண்பாட்டை அறிந்துகொள்வது நம் கடமை. கொள்வதூஉம் மிகைகொளாது, கொடுப்பதூம் குறைகொடாது வணிகம் செய்தனர் நம் முன்னோர். மேலும், மேகங்கள் கவர்வதால் குறையாமலும், ஆறுகள் சேர்வதால் நிறையாமலும் உள்ள கடல்போல நாளங்காடிகள் மக்கள் வாங்குவதால் குறையாமலும், பலரும் பொருட்களைக் கொண்டுவருவதால் நிறையாமலும் 9 இருந்தமை விளக்கிச்செல்கிறார் மாங்குடி மருதனார். தேவைக்கு ஏற்ப பொருள்களைக் கையாளும் பண்பட்ட அறிவு இங்கு வெளிப்படுகிறது.
வீரம்
      புலி தங்கிச் சென்ற கல்அளை புலியால் எவ்வளவு பெருமைகொள்ளுமோ அதுபோல என் வீரம் நிறைந்த மகன் இருந்த வயிறு இது.  என் மகன் போர்க்களத்தில் தான் தோன்றுவான் 10 என்கிறாள் ஒரு வீரத்தாய். ஆண்கள் புலியைப் போல வீரம் நிறைந்தவர்களாக இருந்தனர் என்ற உண்மை இங்கு புலப்படுத்தப்படுகிறது.
பணிவு
      பண்பாடு அறிந்தவர்களின் சிறந்த பண்புகளுள் ஒன்று பணிவு. அரசகுமாரியின் சினத்துக்கு அஞ்சி தோழியர் எல்லாம் கைதொழுது வணங்குவதுபோல, காற்று வீசியவுடன் ஆம்பல் மலர்கள் குவிந்து தாமரை மலருக்கு சாய்ந்து வணங்கின 11 என்கிறார் பரணர். இவ்வுவமை வழியாக பணிவையும் இயற்கையிடம் பழந்தமிழர் ஒப்புநோக்கி மகிழ்ந்தனர் என்பது அறியமுடிகிறது.
நெற்றிச்சுட்டி
பழந்தமிழர்கள் பல்வேறு இலை, தழைதொடங்கி தங்கம், வெள்ளி என பல்வேறு அணிகலன்களை அணிந்தனர் என்பது பழந்தமிழ்ப் பாடல்கள் வழி அறியலாம். தாமரை இதழில் கிடந்த நெற்கதிர் ஆடல் மகளின் அழகிய நெற்றியில் அழகுடன் தோன்றும் நெற்றிச்சுட்டியைப் போல இருந்ததாக 12 கலித்தொகை சுட்டுகிறது. பெண்கள் நெற்றிச்சுட்டி அணியும் வழக்கம் சங்ககாலத்திலேயே இருந்தமை இதனால் உணரமுடிகிறது.
ஆடுகளப் பறை
      வாகையின் முதிர்ந்த நெற்றுகள் கூத்தர் ஆடும் களப் பறையைப் போல விட்டுவிட்டு ஒலிக்கும் 13 என்கிறார் வெள்ளிவீதியார். இக்கருத்தின் வழி ஆடுகளத்தில் பறைகொட்டும் மரபு சுட்டப்படுகிறது.
தலைமைக்கு அழகு
      ஆளுமை மேம்பாடு குறித்து பயிற்சிகள் இன்று பரவலாகவே நடத்தப்படுகின்றன. இதில் அதிகமாகப் பேசப்படுவது தலைமைப் பண்பு. தலைமைப் பண்பைக்கூட பழந்தமிழர் இயற்கையிடம் கற்றனர். இதனை, வலிமையுடைய ஆண் பன்றி தன்னை நோக்கி வந்த வேடர்களைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்றது. இதன் பண்பு, பகைத்து வருவோரைக் கண்டு எதிர்த்துச்சென்ற தன் படைவீரர்கள் புறமுதுகிட்டு ஓட தான் மட்டும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் எம் தலைவனைப் போல தறுகண்மையுடையது இப்பன்றி என்று எண்ணிய வேடன் அந்த ஆண் பன்றி தன் பெண்பன்றியையும் கன்றையும் காத்து தன் உயிருக்கு அஞ்சாமல் எதிர்த்து நின்ற தலைமைப் பண்பு கண்டு வியந்தான். அதைத் தாக்க எடுத்த கூர்மையான அம்பை எய்யாது விட்டுச்சென்றான் 14 என உரைக்கிறார் கபிலர்.
வரவேற்றல்
      அனிச்ச மலர் மோந்தவுடன் வாடிவிடும் அதுபோல முகமலர்ந்து வரவேற்காவிட்டால் விருந்தினர் வாடிவிடுவார்கள் என்பார் வள்ளுவர். வரவேற்கும் மாண்பை மலர்கள் போதிப்பதாக குறுந்தொகைப் பாடல் இயம்புகிறது. காந்தளின் அழகிய மொட்டு மலரும் முன்பே வண்டுகள் வந்து சேர்ந்தன. அவ்வண்டுகளைக் காக்கவைக்காமல் உரிய காலத்துக்கு முன்பே மலர்ந்தது காந்தளின் மொட்டு. இது சான்றோரைக் கண்டவுடன் முகமலர்ந்து வரவேற்கும் அறிவுடையோர் செயல்போல 15 இருந்ததாகக் குறிப்பிடுகிறார் கருவூா் கதப்பிள்ளை.
புகழ்
      புகழும்போது செவிடாகவும், இகழும்போது ஊமையாகவும் இருக்கவேண்டும் என்பர் அறிவுடையோர். தம் புகழ்கேட்டு வெட்கத்தால் தலை சாய்ந்த சான்றோர் போல மரங்கள் தலை சாய்த்திருந்தன 16 என்கிறது கலித்தொகை.
அன்பு
      அன்பின் வழியது உயிர்நிலை என்கிறது வள்ளுவம், அஃறிணை உயிர்கள் கற்றுத்தரும் அன்பின் கோட்பாட்டை கலித்தொகை அழகுபட மொழிகிறது. கொடிய வெம்மை நிறைந்த காட்டில் கிடைத்த சிறிதளவு நீரையும் யானைக்கன்று கலக்கிவிடும். அந்நீரையும் முதலில் பிடிக்கு ஊட்டி பின் உண்ணும் களிறு என்றும், தம் பெடையின் வெம்மைத் துயரைத் தம் மெல்லிய சிறகுகளால் வீசி ஆற்றும் புறா என்றும், நிழலின்றி வருந்தும் பெண்மானுக்கு தன் நிழலைத் தரும் கலைமான் என்றும் விட்டுக்கொடுத்தல் இல்லறத்தின் நல்லறம் 17 என்று சொல்கிறது கலித்தொகை
உண்மை
      தாம் நன்கறிந்த உண்மையை மறைத்தல் தவறு இதனை அறிகரி பொய்தல் என்கிறார் வெள்ளைக்குடி நாகனார். தன் தலைவன் எங்கு இருக்கிறான் என்று நன்கறிந்த நிலா அவன் இருப்பிடத்தைச் சொல்லாவிட்டால் தன்னைப் போலத் தேய்ந்து மறையும் 18 என்கிறாள் தலைவி.


நிறைவாக..            
      மனிதனின் முதல் பள்ளிக்கூடமாக இயற்கையே திகழ்ந்தது. அதில் அறிவையும், பண்பாட்டையும் தமிழர் கற்றனர் என்பதற்கு பழந்தமிழ் இலக்கியங்களே சான்று பகர்கின்றன. ஐம்பூதங்களிடமிருந்து பொறுமையையும், பரந்த சிந்தனையையும், விரைவையும், அழிக்கும் தன்மையும், அன்புடைமையும் பழந்தமிழர் கற்றனர் எலிபோன்றோர் நட்பைவிட புலிபோன்றோர் நட்பையே பெரிதும் விரும்பினர். குறைந்த வரியே மக்கள் குறைவின்றி வாழத் துணைநிற்கும் என்ற கருத்தை இயற்கை வழியே நாகரிகமாக அரசருக்கே அறிவுறுத்தும் அறிவுநுட்பம் வாய்ந்தவர்களாகப் புலவர்கள் இருந்தனர். வள்ளல்கள் இரவலர்களுக்கு வெள்ளிக்கலங்களில் உணவு வழங்கினர். பூவேலைப்பாடமைந்த, பல வண்ணம் நிறைந்த ஆடைகளை அணிந்து மகிழ்ந்தனர். கடலைப் போலத் தேவைக்கேற்ப பொருள்களைக் கையாளும் நுட்பத்தை அறிந்திருந்தனர். புலியைப் போன்ற வீரம் செறிந்தவர்களாக ஆண்கள் இருந்தனர். பணிவைக்கூட இயற்கையின் காட்சிகளுடன் ஒப்புநோக்கி மகிழ்ந்தனர். நெற்றிச்சுட்டி அணியும் மரபு, பறை இசைக்கும் வழக்கத்தையும் இயற்கையுடன் உவமித்து மகிழ்ந்தனர், தலைமைப்பண்பையும், வரவேற்கும் மாண்பையும், புகழ் கேட்டால் நாணம் கொள்ளும் இயல்பையும் கூட இயற்கை வழி உய்த்து உணர்ந்துகொண்டனர், அஃறிணை உயிர்களின் அன்பு நிறைந்த வாழ்வியலை தம் வாழ்வில் கடைபிடித்தல், உண்மை பேசுதல் போன்ற பண்பட்ட இயல்புகளையும் பழந்தமிழர் இயற்கையிடம் கற்றனர்.
சங்கஇலக்கியங்களில் நிலமாகவும், பொழுதாகவும், உள்ளுறையாகவும், உவமையாகவும் உள்ள இயற்கை, தமிழர் பண்பாட்டின் பிறப்பிடமாக இருந்தமை மேற்கண்ட சான்றுகள் வழி எடுத்துரைக்கப்படுகிறது. எத்தனை பண்பாட்டுப் படையெடுப்புகள் நிகழ்ந்தாலும் இயற்கையோடு இயைந்த தமிழர்தம் பண்பாடு என்றும் தனித்துவமானது என்ற உண்மைக்கு சங்கஇலக்கியங்கள் அடிப்படையாக அமைகின்றன.

சான்றெண் விளக்கம்

1. புறநானூறு - 2 – 1-8, 2. புறநானூறு-190. 3.புறநானூறு – 74, 4. புறநானூறு – 184,                                5. பெரும்பாணாற்றுப்படை – 471 – 79, 6.திருமுருகாற்றுப்படை – 15,                          7. பொருநராற்றுப்படை – 82, 8. மதுரைக்காஞ்சி – 434 -434, 9. மதுரைக்காஞ்சி – 424  10.  புறநானூறு – 86 -5 , 11. நற்றிணை – 300 ,12. கலித்தொகை – 79 -1-4                13. அகநானூறு 45 -1-2, 14. அகநானூறு – 248 – 6, 15. குறுந்தொகை – 265 -1 – 5          16.  கலித்தொகை – 119 -6, 17. கலித்தொகை – 11, 18. நற்றிணை 196

(22.23-10.2016 ஆகிய இரண்டுநாட்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பன்னோக்குப் பார்வையில் தமிழர் பண்பாடு என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் நான் வழங்கிய கட்டுரை)