வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 27 ஜூன், 2014

சிரிப்பும் சிந்தனையும்


நான் மருத்துவராகி நாட்டுக்கு சேவை செய்யப்போகிறேன் என்று யாராவது 

சொன்னால் இப்போதெல்லாம் சிரிப்பு தான் வருகிறது.

அரசு நடத்தவேண்டிய கல்விநிலையங்களை தனியார் நடத்துகிறது!

தனியார் நடத்தவேண்டிய மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதன் விளைவாக மருத்துவம் என்பது இன்று அப்பாவி மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது.

பணத்தைக் கொட்டி டாக்டர் பட்டம் வாங்கியதால் இன்றைய மருத்துவர்கள் அதை எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மனிதாபிமானம், சேவை என்பதெல்லாம் இன்றைய மருத்துவர்கள் பலரும் கேள்விப்படாத சொற்களாகவே உள்ளன.

ஆயிரம் வேர்களின் பண்பை அறிந்தவரே அரை வைத்தியர் என்ற பழமொழி இன்று பலராலும் ஆயிரம் பேரைக் கொன்றவர்
 அரை வைத்தியர் என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 

இவர்களின் புரிதல் தவறென எண்ணிவந்த நான் இப்போதெல்லாம் இவர்களின் புரிதல் சரிதான் என்று உணர்கிறேன்.

கடந்த சில நாட்களாக தினமணி நாளிதழில் நான் விரும்பிய சில கேலிச்சித்திரங்கள். (நன்றி தினமணி)


செவ்வாய், 24 ஜூன், 2014

பன்மொழிப் புலவர்

கா. அப்பாத்துரை (ஜூன் 241907 - மே 261989தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர்எனப் பெயர் பெற்றவர்.
அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.
அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.

எழுதிய நூல்கள்


தரவுகளுக்கு நன்றி தமிழ்விக்கிப்பீடியா.

பன்மொழிப்புலவரின் பிறந்தநாளான இன்று அவரது பணிகளை எண்ணிப்பார்ப்பதில் பெருமிதம் கொள்வோம்.

ஞாயிறு, 22 ஜூன், 2014

தமிழ் இலக்கிய விளையாட்டு

தமிழ் இலக்கியங்களையும், தமிழர் பண்பாட்டையும் உலகுபரவி வாழும் தமிழர்களுக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக, தமிழ் இலக்கிய விளையாட்டு என்ற தொடரை எழுதவிருக்கிறேன். இத்தொடரில் சில படங்களை வெளியிடுவேன். அந்தப் படம் ஏதோ ஒரு தமிழ் இலக்கியத்தையோ, அவ்விலக்கியத்தில் உள்ள பாடலையோ நினைவுபடுத்துவதாக அமையும். படத்தோடு தாங்கள் கண்டறிவதற்கான குறிப்பையும் வழங்குவேன். தாங்கள் அதைக் கண்டறிந்து மறுமொழியில் தெரிவிக்கவேண்டும். இடுகை வெளியிட்ட மறுநாள் அதன் சரியான பதிலை நான் தெரிவிப்பேன்.

நான் என் மாணவர்களுக்கு விளையாட்டாகப் பாடம் கற்பிக்க பயன்படுத்திய படங்கள் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே இத்தொடரை நான் தொடங்க அடிப்படையாக அமைந்தது. 

இன்று திருக்குறள் மற்றும் பழமொழி குறித்த தேடலாக விளையாட்டு அமைகிறது.


1.
2
3
4

5
6


அன்பான தமிழ் உறவுகளே எனது புதிய முயற்சிக்குத் தாங்கள் தந்த ஊக்கத்துக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறுமொழி வழியே நீங்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த பதில்கள் தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றையும், உங்கள் தமிழார்வத்தையும் எடுத்தியம்புவதாக அமைந்தது.

படங்களுக்கான பதில்கள். 1. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் 
 2. மழலைச்சொல் கேளா தவர்.
  குறள் 66: 

 3. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
 4. நாவினாற் சுட்ட வடு.
  குறள் 129: 

 5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
 6. உள்ளத் தனையது உயர்வு.
  குறள் 595:

 7. நுணலும் தன் வாயால் கெடும்

 8. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,

 9. மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்

வியாழன், 19 ஜூன், 2014

நீங்களும் பெருமிதம் கொள்வீர்கள்!


கல்வி வணிகமாகிவிட்ட இன்றைய சூழலில் ஒரு பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றால் நுழைவாயிலில் கோயிலோ, மாணவர்கள் பெற்ற தேர்ச்சிவிழுக்காட்டு விவரங்களோ, பணியிடம் பெற்ற விவரங்களோ இருக்கும். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில், உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள்  சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் திருவள்ளுவர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது என்பது தமிழராக நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்கவொன்றாகும்.

சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம்.

பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம்.

இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ...

இடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி

இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே.

இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம்

முகநூலில் கண்ட இந்தச் செய்தி குறித்து மேலும் தெரிந்துகொள்ளும் ஆவலில் தேடியபோது கிடைத்த இணையதள விவரங்களை இந்த இணப்பில் காணலாம்.

(முகநூலில் இந்த செய்தியைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி)