வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 31 ஆகஸ்ட், 2011

இதை நான் எதிர்பார்க்கல!!

Photobucket
1.அறிவு உழைப்பு, உடல் உழைப்பு - இரண்டில் எது பிடிக்கும்??

உடலை இயந்திரமாக்காத அறிவின் உழைப்பு பிடிக்கும்!!

2.அனுபவம், ஆற்றல்?? - இரண்டில் எது சிறந்தது?
அனுபவத்துக்குப் பின் கிடைக்கும் ஆற்றல் சிறந்தது!!


3.கோபம், சிரிப்பு - இரண்டில் எது விரும்பத்தக்கது??

குழந்தையின் கோபம்! ஏழையின் சிரிப்பு!!

4.இன்பம், துன்பம் – எது வரவேற்கத்தக்கது??

துன்பத்துக்குப் பின் கிடைக்கும் இன்பம்!! இன்பத்திற்குப் பின் கிடைக்கும் துன்பம்!!

5.வெற்றி, தோல்வி – எது நல்லது??

தோல்விக்குப் பின் கிடைக்கும் வெற்றி!
வெற்றிக்குப் பின் கிடைக்கும் தோல்வி!

6.நட்பு, பகை – இவ்விரண்டில் எது போற்றத்தக்கது??
நாம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாத நட்பைவிட
நம் தவறுகளுக்காகச் சண்டையிடும் பகையே போற்றத்தக்கது!!

7.செல்வம், வறுமை – இவற்றுல் எது நிலையானது??
செல்வமும், வறுமையும் மாறிமாறிவரும் என்ற மாற்றம் மட்டுமே நிலையானது!!

8.எதிர்பார்ப்பு, ஏமாற்றம் – இதில் ஏமாற்றம் குறைய என்ன செய்யலாம்??

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள ஏமாற்றம் தானே குறையும்!!

9.பற்று, துறவு – ஒரு சான்று தருக?

தாமரை இலையின் நீர்த்துளி போல நீருக்குள்ளே இருந்தாலும் ஒட்டி ஒட்டாமல் இருக்கவேண்டும்!!

10.பரிசு, பாராட்டு – எது விலைமதிப்பு மிக்கது??
உணர்ச்சியற்ற பரிசை விட, மனம் நிறைந்த பாராட்டு விலைமதிப்பு மிக்கது!!

11.உண்மை, பொய் – இவற்றில் எதை நாம் நீக்கவேண்டும்??

உண்மைபோல பொய் பேசுவதையும்,
பொய் போல உண்மை பேசுவதையும் நீக்கவேண்டும்!!

12.கவிதை, உளறல் - எது போற்றத்தக்கது??

உளறும் கவிதையை விட, கவிதை போன்ற உளறல் போற்றத்தக்கது!!

13.சொற்பொழிவு, மொனம் - எது சிறந்தது?

பொருளற்ற சொற்பொழிவைவிட, பொருள் பொதிந்த மௌனம் சிறந்தது!!

14.கேள்வி, பதில் - எது அறிவை வளர்ப்பது??

மனப்பாடம் செய்து சொல்லும் பதிலைவிட, அறியாமல் வினவும் கேள்வியே அறிவை வளர்க்கும்!!15.இயற்கை, அறிவியல் – இவற்றுள் எது தேவையானது??

இயற்கையைச் சிதைக்காத அறிவியலே தேவையானது!!

இப்படி என்னுள் தோன்றும் வினாக்களுக்கு, என் அறிவுக்கு எட்டியவரை விடை சொல்லியிருக்கிறேன்..

இதே கேள்விக்குத் தங்கள் அறிவுக்கு எட்டிய பதில்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இப்படித்தான் என் வகுப்பில் மாணவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்டு அவர்கள் சிந்தித்துப் பதிலளிக்க வாய்ப்பளிப்பேன்.

அப்படியொருநாள் “வெற்றிக்கு வழி“ என்ற தலைப்பில் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு பதில் சொல்லவேண்டும். ஆனால் ஒருவர் சொன்ன பதிலை இன்னொருவர் சொல்லக்கூடாது என்று விதிமுறை விதித்திருந்தேன்.

ஒவ்வொரு மாணவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற பயனுள்ள பல குறிப்புகளைச் சொல்லி வந்தார்கள். எல்லோரும் சொல்லி முடிததவுடன் என் மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.

அவர்கள் எடுத்த மதிப்பெண்களைவிட அவர்கள் சிந்தித்துச் சொன்ன ஒவ்வொரு குறிப்புகளும் மதிப்புமிக்கனவாகவே எனக்குத் தெரிந்தன.

அப்போது அவர்களிடம் கேட்டேன்...

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிப்புகளைச் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி. இக்குறிப்புகள் எல்லாம் கொண்ட நபரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?“ என்று கேட்டேன்.

(மாணவர்கள் இல்லை என்று பதில் சொல்வார்கள். நான் உண்மைதான் இவ்வெல்லாப் பண்புகளும் கொண்டவராதல் அரிது! இவற்றுள் ஒன்றிரண்டு இருந்தால் கூட வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம் என்று சொல்ல எண்ணியிருந்தேன்)

நான் சற்றும் எதிர்பாராதவிதமாக, மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து இவ்வெல்லாப் பண்புகளும் கொண்ட நபரைப் பார்த்திருக்கிறோம் ஐயா என்றார்கள்!!!!!!

அப்படியா எங்கே? யாரை? என்றேன்.

மாணவர்கள் அது நீங்கள் தான் ஐயா என்றார்கள்!!

சில மணித்துளிகள் ஆடிப்போய்விட்டேன்!

(எனக்கு நன்றாகத் தெரியும் இவர்கள் பொய்சொல்கிறார்கள்! நகைப்புக்காகவோ, என் மீது கொண்ட அன்பின் மிகுதியாலோ இவ்வாறு சொல்கிறார்கள் என்று)

சில மணித்துளிகளில் மாணவர்களைப் பார்த்து நான் சொன்னேன்.

அப்படியா மிக்க மகிழ்ச்சி!

நீங்கள் சொல்வது உண்மையென்றால்.........

“நான் ஒரு கண்ணாடி“ என்றேன்.


அவர்களின் மகிழ்ச்சி இருமடங்கானது. ஆம் எனக்கென்று எந்தப் பண்புகளும் கிடையாது. நான் மாணவர்களான உங்களைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி அவ்வளவே! என்றேன்.

என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவமாக அந்த வகுப்பு அமைந்தது.

(அன்பின் உறவுகளே...
நேற்று நான் வெளியிட்ட “கல்வி உளவியல்“ என்னும் இடுகை நேற்று “இளமை விகடனில்“ வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.)

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கல்வி உளவியல்

Photobucket
நிலம் மாறினாலும் நிறம் மாறாத செல்வம் கல்வி.

கற்றவர்களே கண்ணுடையவர்களாக மதிக்கப்படும் காலம் இது.

மனிதனைச் சிந்திக்கச் செய்வது கல்வியின் அடிப்படை நோக்கமாகும்.

தொல்காப்பியரும், பிராய்டும் உளவியலின் முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்களாக மதிக்கப்படுகின்றனர்.

இவ்விருவரின் வழியில் நான் மாணவர்களிடம் கற்ற உளவியல் கூறுகள், என்னைப் போன்ற கல்வியாளர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
1. ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.

2. சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்கமோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்காது பாடம் நடத்துவர். இச்சூழலில் மாணவர்கள் உள்ளத்தால் வகுப்பை விட்டு வெளியே சென்று விடுகின்றனர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

3. ஆசிரியரின குரல் ஒலி அளவு எல்லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களுடன் இருத்தல் வேண்டும்.

4. ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உடல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும்.

5. பாடத்தோடு தொடர்புடைய செய்திகளையும் இடையிடையே சொல்ல வேண்டும்.

6. பாடத்தை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திச் உரைக்க வேண்டும்.

7. பெரிய கருத்துக்களையும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்வன நகைச்சுவைகளும், சின்னக் கதைகளும் என்பதை ஆசிரியர் மனதில் கொள்ள வேண்டும்.

8. பாடத்திற்கு ஏற்ப கரும்பலகை, பவர்பாயின்ட், ஒலி, காணொளி, கணினியின் துணைகொண்டு விளக்கமுறைகளைக் கையாளவேண்டும்.

9. மாணவர்களிடையே வினாக்களை எழுப்ப வேண்டும். அவர்கள் தவறாகச் சொன்னாலும் அவர்களின் குறைகளை அவர்களுக்குப் புரியவைத்து மீண்டும் சொல்ல ஊக்குவிக்கவேண்டும்.

10. “பாராட்டு“ ஆசிரியர் கையிலிருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ளவேண்டும்.

11. ஆசிரியர்கள் திட்டுவதாலோ, தண்டனை தருவதாலோ மாணவர்களைத் திருத்திவிடமுடியாது என்பதை உணர்ந்து, அன்பாகப் பேசி அவர்களுக்கு அவர்களின் தவறைப் புரியவைக்க வேண்டும்.

12. மாணவர்கள் மதிப்பெண் வாங்குவதைவிட அப்பாடப் பொருள் குறித்த ஆர்வமும், போதிய அறிவும், படைப்பாக்கத்திறனும் கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும்.

13. மாணவர்கள் தம் துறை சார்ந்து புதியன படைக்க ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும்.

14. அந்தக் காலத்தில மாணவர்கள் வகுப்பு வேளையில் அலைபேசியை வைத்து குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள், இன்று நவீன தொழில்நுட்பத்துடனான அலைபேசிகளில் முகநூலில் (பேஸ்புக் சாட்) அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையிலிருந்து நாம் அந்த அலைபேசியைப் பறிப்பது எளிது. ஆனால் அதைவிட நம்மை ஏமாற்றி அவர்கள் வகுப்பு வேளையில் அதனைப் பயன்படுத்துவது அதைவிட எளிது. அதனால் காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் அவர்களின் மனநிலையையும் அறிவுத் திறனையும் புரிந்து கொண்டு அவர்களே அதனைப் புறந்தள்ளும் விதமாக புதிய தொழில்நுட்பங்களுடன் பாடம் நடத்த வேண்டும். அச்சூழலில் அவர்களே அந்த அலைபேசிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

15. இவை எல்லாவற்றுக்கும் மேலே மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்க வேண்டிய பெரும் பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

மாணவர்கள் வெள்ளைத் தாள்!
அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது!!

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

இதென்ன வியப்பு !!


நிலவும், நிழலும் எப்போதும் நம்முடன் வருவது போல..
நம் அன்புக்குரியவர்களின் நினைவும் நம்முடன் தான் எப்போதும் இருக்கும்.
அவர்கள் நம்மோடு இல்லாவிட்டாலும்,
நாள்தோறும் நம்மைச் சந்திக்காவிட்டாலும் அவர்களின் நினைவுகள் நம்மைச்சுற்றியே சுவாசம் கொள்ளும்.

“நினைத்துப் பார்த்தல் சந்திப்பதற்கு இணையானது“ என்றொரு பொன்மொழியை எங்கோ படித்திருக்கிறேன்.
நினைத்துப் பார்த்தல் எப்படி சந்திப்பதற்கு இணையானது? என்ற ஐயத்தைப் போக்கியது ஒரு சங்கப்பாடல்...
ஆம் இங்கு தலைவனின் பின்னால் தலைவியின் கண்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
கொடிய பாலை வழியிலும் தொடரும் துன்பம் தோய்ந்த தலைவியின் கண்கள், தலைவன் எங்கெங்கு நோக்கினும் அவனையே சுற்றிச் சுற்றி வருகின்றன..
பாடல் இதுதான்.


உழையணந்து உண்ட இறைவாங்கு உயர்சினைப்
புல்லரை இரத்திப் பொதிப்புறப் பசுங்காய்
கல்சேர் சிறுநெறி மல்கத் தாஅம்
பெருங்காடு இறந்தும் எய்தவந் தனவால்
5 அருஞ்செயல் பொருட்பிணி முன்னி யாமே
சேறும் மடந்தை என்றலின் தான்தன்
நெய்தல் உண்கண் பைதல் கூரப்
பின்னிருங் கூந்தல் மறையினள் பெரிதழிந்து
உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்
10 இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பலங் குழலின் ஏங்கிக்
கலங்கஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே.


நற்றிணை-113
இளங்கீரனார்.
திணை – பாலை
கூற்று – இடைச்சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.
(தலைவியைப் பிரிந்து பாலை வழியே செல்லும் தலைவன், தலைவியின் நினைவால் தன் நெஞ்சுக்குச் சொல்லுவது)


தலைவன் பொருள் மீது கொண்ட பற்றால், தலைவியை நீங்கிப் பாலை வழியே பொருள் தேட எண்ணினான். தம் எண்ணத்தைத் தலைவியிடம் கூறினான்.

தலைவியோ, தன் நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்கள் வருந்தவும்,
பின்னிய கரிய கூந்தல் விரிந்து அதனுள்ளே முகம் மறைத்து பெரிதும் கலக்கம் அடைந்தவளாக வாய்விட்டு அழுதாள்.

தலைவி அழுதது உதியன் போர்க்களத்தில் இசைஞர்கள் எழுப்பிய ஆம்பல் என்னும் பண்ணை உடைய குழல் இசைத்த்து போல இருந்தது.

இவ்வாறு கலங்கி அழுது, துன்பம் கொண்டவளாக நோக்கினாள்...
அவளது பார்வை...
பரற் கற்கள் நிறைந்த கொடிய பாலை வழியிலும் இங்கு எம்முன்னே காணக் கிடைத்தது.
இது என்ன வியப்பு!!!

என வியக்கிறான் தலைவன்.

பாடல் வழியே..
1. பாலை வழியே ஆற்றாமை மிக்கவனாகத் தலைவியைப் பிரிந்தான் தலைவன். அதனால் இறுதியாகத் தான் தலைவியைக் கண்ட காட்சி மனதில் ஆழமாகப் பதிந்தது. எனவே தான் எங்கெங்கு பார்த்தாலும் தலைவியின் துன்பமிக்க கண்களே காட்சியளித்தன. அதனை உணர்ந்து இது எப்படி நான் செல்லும் இடமெல்லாம் என் தலைவியின் துன்பமிக்க கண்களே காட்சியளிக்கின்றன எனத் தலைவன் வியந்தான்.

2. மருட்கை - வியப்பு என்னும் மெய்பாடு விளக்கம் பெறுகிறது. மருட்கை என்னும் சுவை புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்னும் காரணங்களால் தோன்றும் இங்கு தலைவனுக்கு மருட்கையாகிய வியப்பு தலைவியின் கண்கள் எங்கும் தோன்றும் புதுமை காரணமாகத் தோன்றியது.
3. தலைவியின் கண்கள் - நெய்தல் மலருக்கும்
தலைவியின் அழுகை - குழல் இசைக்கும் ஒப்பிடாக உரைக்கப்பட்டமை அக்கால மக்களின் கற்பனை நயத்துக்குத் தக்க சான்றாக அமைகிறது.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

பாத்திறம் அறிந்து பிச்சையிடு!பழமொழிகள் என்பவை நம் முன்னோர்களின் அனுபவ மொழிகளாகும். இவை நம் முன்னோர் நமக்காகச் சேர்த்து வைத்துச் சென்ற அழியாத செல்வங்களாகும்! அதன் பொருள் மாற்றிப் பயன்படுத்துவதும், தவறாகப் புரிந்துகொள்வதும் நம் அறியாமையின் அடையாளம் என்றே உணர்கிறேன்.

இதோ...

பாத்திரம் அறிந்து பிச்சையிடு!
பாத்திறம் அறிந்து பிச்சையிடு!


இவற்றில் எது சரியானது?

பாத்திரம் – சமையக்க பயன்படுத்தும் கலம், கதை மாந்தர்.
பாத்திறம் – பாவாகிய செய்யுளின் திறம்.

பாத்திரம் அறிந்து பிச்சையிடு!

1. இன்றைய வழக்கில் பிச்சையெடுப்பவர் பாத்திரத்தை நல்ல சுத்தமாக வைத்திருக்கிறாரா? என்பதை அறிந்து பிச்சையிடவேண்டும் என்று பொருள் வழங்கிவருகிறோம். இதை வைத்து கவுண்டமணி செந்தில் நகைச்சுவைகூட வந்துள்ளது.
2. நாடகத்திலோ, திரைப்படத்திலோ இடம்பெறும் கதை மாந்தர்களின் திறன் அறிந்து அவர்களுக்குத் தக பாத்திரத்தை வழங்குதல்.
என இருபொருள் வழங்கி வருகிறோம்.

பாத்திறம் அறிந்து பிச்சையிடு!

வள்ளல்களை நாடிச் சொல்லும் புலவர்கள் தம் பாடல் பாடி பரிசில் பெற்றுவந்தனர்.
சில மன்னர்கள் பாவின் (செய்யுள்) திறன் அறியாது கொடை கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இச்சூழலில்தான் இந்தப் பழமொழி உருவாகியிருத்தல் வேண்டும். இதோ அதற்கான சூழல்...

ஒருநாள் கபிலர் என்னும் சங்கப்புலவர், திருமுடிக்காரியைக் காணச் சென்றார். எல்லாப் புலவர்களையும் ஒரே மாதிரிப் பார்க்கும் வழக்கம் கொண்ட காரியும் பிற புலவர்களைப் போலவே கபிலரையும் மதித்துப் பொருள் வழங்கினான். அப்போது கபிலர்..

மன்னா!!
யாவருக்கும் கொடுத்தல் எளிது!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகுதியுடையவராவர். அவர்தம் தகுதியை உணர்ந்து அதற்குத்தகப் பொருள் வழங்குதல் அரிது!
அதனால் புலவர்களைப் பொதுவாகக் காணும் வழக்கத்தை நிறுத்துவாயாக.! என்றார்.
பாடல் இதோ...

ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை யறிதலோ வரிதே பெரிதும்
ஈத லெளிதே மாவண் டோன்றல்
5 அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.

புறநானூறு (121)

திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக்காஞ்சி.
மலையமான் திருமுடிக் காரியைக் கபிலர் பாடியது.

பாடல் வழியே..

1. பாத்திறம் அறிந்து பிச்சையிடு! என்ற பழமொழியே அறியாமையாலோ, காலத்துக்கு ஏற்ப மாறியோ பாத்திரம் அறிந்து பிச்சையிடு! என்று மாறியிருக்கவேண்டும் என்ற கருத்தை எடுத்தியம்புவதாக இப்புறப்பாடல் அமைந்துள்ளது.

2. இன்றைய சூழலில் இந்தப் பழமொழியை “பா (செய்யுள்) த்திறம் அறிந்து பிச்சையிடு என்று பயன்படுத்த இயலாது. அதே நேரம்...

பசியுடன் இருப்பவருக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற பழமொழியை மனதில் கொண்டு...

பிச்சையெடுப்பதை ஊக்குவிக்காது, நம்மால் முடிந்தால் அவர்கள் திறனை அறிந்து அவர்கள் உழைத்து வாழத் துணை நிற்போம்!

என்று பொருள் கொள்வதே சரியாக அமையும் என்று கருதுகிறேன்.

நம் மரபுகளை உணர்வோம். அடுத்த தலைமுறைக்கும் நம் பண்பாட்டை உணர்த்துவோம்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

பறவைகள் சொல்லும் பாடம்!!
அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்..
என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருப்பதுண்டு...

“சுதந்திரம்“ என்ற சொல்லின் பொருளை பறவைகளைக் கண்டே தெளிந்தேன்!
“தேடல்“ என்னும் சொல்லின் ஆழத்தை பறவைகளைக் கண்டே உணர்ந்தேன்!
“அழகு“ என்னும் இனிமையைப் பறவைகளைக் கண்டே அறிந்தேன்!
“கூடு“ கட்டி வாழவேண்டும் என்பதும் பறவைகள் தான் எனக்குக் கற்றுத்தந்தன!

சைவக் கொக்கு, வைணவ காக்கை, கிறுத்தவப் புறா, இசுலாமியக் கிளி, சமண வாத்து, புத்த ஆந்தை ஆகியவற்றை இன்றுவரை நான் கண்டதில்லை..


பறவைகள் எனக்குச் சொல்லித்தந்தன சமயங்களைக் கடந்து வாழ்! என்று.

எந்தப் பறவையும் வங்கியில் சென்று சேமிப்புக் கணக்குத் தொடங்கியதில்லை. தங்கம் வாங்கி அணிகலன் செய்து மாட்டிக்கொண்டதில்லை.

“தேவைக்கு மேல் சேமிக்காதே“ என்று என்னைப் பறவைகள் தான் அறிவுறுத்தின!

எந்தப் பறவையும் எந்தப் பள்ளியிலும் சென்று பாடம் கேட்டதில்லை..
பறவைகள் என்னிடம் சொல்கின்றன....

“அனுபவத்தில் கிடைக்காததா நீ படிக்கும் ஏட்டில் கிடைக்கப்போகிறது“ என்று..

இவையெல்லாவற்றுக்கும் மேலே...
காகா என்று கத்திய குயில்!
கூகூ என்று கூவிய காக்கை!
கீகீ என்று கத்திய புறா!
குர்குர் என்று கத்திய கிளி!
அகவிய ஆந்தை!
அலறிய மயில்!
கூவிய கொக்கு!
கத்திய சேவல்!
என எந்தப் பறவையையும் நான் கண்டதில்லை!

பறவைகள் எனக்கு உணர்த்தின “தாய்மொழியை விட உயர்ந்தது எது? என்று.

பறவைகளிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் இன்னும் இன்னும்...
உங்களுக்கெல்லாம் பறவைகளைப் பார்த்தால் என்ன தோன்றும்..?

சங்ககாலத் தலைவி ஒருத்திக்கு என்ன தோன்றுகிறது என்று பாருங்கள்..
மாலைப் பொழுது வந்தமை கண்டு தலைவனின் பிரிவால் வாடும் தலைவி, பறவைகள் தம் குஞ்சுகைளுக்கு உணவெடுத்துச் செல்வது கண்டு மேலும் வருந்தி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.


குறுந்தொகை 92. நெய்தல் - தலைவி கூற்று
காமமிக்க கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது.
- தாமோதரனார்.

கதிரவன் மறைந்த, அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில் வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த, வழியில் வளர்ந்த கடம்ப மரத்தில் கூட்டிலிருக்கும், குஞ்சுகளின், வாயினுள்ளே செருகும் பொருட்டு, இரையைத் தம் அலகில் எடுத்துக் கொண்டமையால், விரைந்து செல்லும் அவை இரங்கத்தக்கன. அவற்றுக்கு இருக்கும் அன்பு என் தலைவனுக்கு இல்லையே...!!

பாடல் வழியே..
1. தலைவின் மீதுகொண்ட அன்பின் மிகுதியால் தலைவி ஆற்றாமல் புலம்புவது “காமம் மிக்க கழிபடர்கிளவி“ என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
2. மாலை நேரத்தில் பறவைகளின் அன்பைக் கண்டு இதுபோலத் தலைவன் தன் மீது அன்பற்றவனாக இருக்கிறானே என்ற தலைவியின் ஏக்கத்தை பாடல் அழகாகப் புலப்படுத்துகிறது.
3. இதுபோன்ற பறவைகளின் காதலைத் தலைவன் தன் நிலப்பகுதியில் காணமாட்டானா? தன்நினைவு அவனுக்கு வராதா? என்ற ஏக்கத்தையும் தலைவியின் புலம்பலில் காணமுடிகிறது.
4.சங்ககாலத் தலைவியின் புலம்பல் வழி சில மணித்துளிகள் நாமும் பறவைகளுடன் பறக்க முடிகிறது.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

எதிர்பாராத பதில்கள்!!


சிலபதில்கள் நம்மைச் சிரிக்கவைக்கும்!
சில பதில்கள் நம்மைச் சிந்திக்கவைக்கும்!

என் பார்வையில் சில பதில்கள்...
கையெழுத்து

மகன் – அப்பா உங்களால இருட்டுல கையெழுத்துப் போடமுடியுமா?
அப்பா – ஓ முடியுமே
மகன் – எங்க நான் மின்விளக்கை நிறுத்துகிறேன் நீங்க கையெழுத்து போடுங்க பார்ப்போம்
அப்பா – எதுலடா?
மகன் – என் தரச் சான்றிதழில் தான்!!!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-
அதிகம் பயன்படும் புத்தகம்

ஆசிரியர் – எந்த புத்தகம் உன் வாழ்க்கையில் உனக்குப்பெரிதும் பயன்படுகிறது..?
மாணவன் – எங்க அப்பாவோட காசோலைப் (செக்) புத்தகம் தான்.
ஆசிரியர் – !

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

அழுகை!


வினாத் தாளைப் பார்த்து அழும் மாணவனிடம் அவன் நண்பன் சொல்கிறான்....
டேய்!
வினாத்தாளைப் பார்த்து நீ ஏன்டா அழுதுட்டு இருக்க?
நம்ம வினாத்தாளைப் பார்த்து அழுதா அது கேவலம்!

நம்ம எழுதற விடைத்தாளைப் பார்த்து ஆசிரியர் அழனும் அதுதான்டா சாதனை!!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-மூளை.


மேதாவி - உங்க வீடு ரொம்ப அழகா இருக்கே. எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டினீங்க?

அதிமேதாவி - என் மூளையை வைச்சுதான்!

மேதாவி - களிமண்ணாலயா இவ்வளவு பெரிய வீடு கட்டினீங்க
ரொம்ப வியப்பா இருக்கே.

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-


பார்வை
கண் பார்வையற்ற ஒருவன் நீண்ட நேரமாகப் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். தனக்கு அருகாமையில் இருந்த பலகையில் “கண் தெரியாத எனக்கு உதவுங்கள்“ என்று எழுதப்பட்டிருந்தது.

பலரும் பார்த்துச் சென்றனர். சிலர் மட்டுமே பிச்சையிட்டனர்.

அந்தவழியே சென்ற ஒருவர். அந்தப் பிச்சைக்காரனின் பலகையில் இருந்ததை அழித்தார். பின் ஏதோ எழுதிச் சென்றான். அதிலிருந்து அந்த வழியே சென்ற ஒவ்வொவரும் நிறைய பணம் போட ஆரம்பித்தனர்.

அவன் அப்படி என்ன தான் பலகையில் எழுதியிருப்பான்...

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..
உங்களைப் பார்க்கும் வாய்ப்புதான் என் கண்களுக்கு இல்லை!“


-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

பரிசு


அக்கா – ஏன்டா தம்பி பாட்டியோட பிறந்தநாளுக்கு அவங்களுக்குக் கால்ப்பந்து வாங்கிக் கொடுத்த..?

தம்பி – என்னோட பிறந்த நாளைக்கு அவங்க எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தாங்க தெரியுமா..!!
அதான் எனக்குப் பயன்படாதத அவங்க கொடுத்ததால, அவங்களுக்குப் பயன்படாதத நான் அவங்களுக்குப் பரிசா கொடுத்தேன்.

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

தவறு

நாம் தவறு செய்யும் போதெல்லாம்
நல்ல வழக்குரைஞர்களாக இருக்கிறோம்!

அடுத்தவர் அதே தவறைச் செய்யும் போதெல்லாம்
நல்ல நீதிபதியாக இருக்கிறோம்!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

பொய்
ஆண்கள் எப்போது பொய் சொல்லமாட்டார்கள்?
பெண்கள் கேள்வி கேட்காமல் இருக்கும் வரை!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

மரம்

ஒரு மரத்திலிருந்து ஒரு மில்லியன்
தீக்குச்சிகளைத் உருவாக்கலாம்!
ஒரு தீக்குச்சியால்
ஒரு மில்லியன் மரங்களையும் எரிக்கலாம்!

நம்மிடமிருக்கும் சிறிய எதிர்மறை எண்ணங்கள் கூட
நம்மிடமிருக்கும் பெரிய நேர்மறை எண்ணங்களை அழித்துவிடும்!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-


வழிகாட்டுதல்

நல்ல வழிகாட்டுதல் என்பது, கொடிய இருள் நிறைந்த காட்டில் கையில் கிடைத்த சிறு விளக்கு போன்றது
கையில் இருக்கும் விளக்கு காடு முழுவதும் ஒளி தராவிட்டாலும், அடுத்த அடி வைப்பதற்கான ஒளியையும், பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது!

-0O0- -0O0- -0O0- -0O0- 0O0- -0O0- -0O0- -0O0-

புதன், 24 ஆகஸ்ட், 2011

நான் சிரிச்சதால நீ பிழைச்ச!!சினம் நோய்!
சிரிப்பே மருந்து!

அடுத்தவர் செய்யும் தவறுக்கு நாம் ஏன்
நமக்கே தண்டனை கொடுத்துக்கொள்ளவேண்டும்?

துன்பம் வரும் போது சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லுகிறார்!

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது நடைமுறை வாழ்வில் கடைபிடிப்பதில் தான் சிக்கலே இருக்கிறது.

சிரிப்பு மருத்துவம் கூட இப்பல்லாம் பரவலா வந்திருச்சு!
ஆனால் நோயாளிகள் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறது!

சங்ககாலக் காட்சி ஒன்று...

சங்ககாலத் தலைவி ஒருத்தி தனக்கு வந்த சினத்தை (கோபம்) எப்படி சிரிப்பாக மாற்றுகிறாள் என்று பாருங்கள்...

தோழி – தலைவி உன் தலைவன் கடமை மறந்தவனாக இருக்கிறான். உன் நினைவே அவனுக்குக் கிடையாது. உன்னை மணம் செய்யும் எண்ணமே அவனுக்குக் கிடையாது..!

தலைவி – தோழி.. நீ விளையாட்டாகப் பேசினாய், சிரிப்புக்காகப் பேசினாய் என்று உன் பேச்சை நான் எடுத்துக்கொண்டதால் நீ பிழைத்தாய்....!
ஒரு வேளை நீ உணர்ந்து உண்மையாகத் தான் சொன்னாய் என்று நான் எடுத்திருந்தால் என்ன நடந்திருக்குமோ எனக்கே தெரியாது..!!!
என்கிறாள்.

பாடல் இதுதான்..


“அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யான் எவன் செய்கோ? என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவை கொல்? நன்னுதல் நீயே“

தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது.

அள்ளூர் நன்முல்லை.
குறுந்தொகை -96.


தலைவியைத் தலைவன் வரைந்து (மணம்) கொள்ளவேண்டித் தோழி தலைவனை இகழ்ந்து கூறினாள்.

தலைவன் மேல் கொண்ட நம்பிக்கை மிகுதியாலும், அன்பின் மிகுதியாலும் தோழியின் கூற்று தலைவிக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

தோழியின் மொழிகள் நகைபொருட்டாயின் தன்னால் ஏற்கத்தக்கனவாயிற்று?
உணர்ந்து கூறியனவாயின் ஒறுத்தலுக்கு (துன்பத்துக்கு) ஆளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டாள்.

அருவி தன்னைச் சார்ந்து வளர்ந்துள்ள வேங்கை மரத்தைக் குறைவின்றிக் காத்து, வளம் பெறச் செய்வது போல தலைவனும் தன்னைப் போற்றுவான். எனத் தலைவி இயற்பட மொழிந்தாள்.

வேங்கைமரம், அருவி தன்னிடம் வந்தவழிப் பயன் கொள்ளுமேயன்றித் தானே அதனிடம் சென்று பயன்கொள்ளாது.
அவ்வருவியைத் தன்னிடம் வரச்செய்தலும் இயலாது.
அதுபோல நம் காதலரும் நம்மை நாடிப் பகலினும் இரவினும் வந்தவழி இன்பம் நுகர்வதல்லது நாமே சென்று பயன்கொள்வதோ அவரை நம்பால்வருவித்தலோ இயலாது எனக் கூறி தோழி இயற்பழித்தனள்.

ஒருகால் பெருகியும் ஒருகால் வற்றியும் வரும் மலையருவி போலத் தலைவனும் வந்தும் வாராமலும் ஒழுகுவான் யாமும் வேங்கைபோல வந்தவழிஇன்பம் துய்த்தும் வாராத வழி ஆற்றியும் இருப்பதல்லது தனித்து ஒன்றும் செய்ய இயலாதவராவோம் எனத் தோழி குறித்தனள்.

எவன் செய்கோ? என்ற வினா தலைவன் தலைவியை மணம் முடிக்க வாராமையால் தோழியின் செயலறவினைப் புலப்படுத்துவதாகும்.

பாடல் வழியே...1. இன்பமும், துன்பமும் நமக்குள் தான் இருக்கிறது!
2. வெறுப்பும், சிரிப்பும் நமக்குள் தான் இருக்கிறது!
3. நட்பும், பகையும் நமக்குள் தான் இருக்கிறது.
4. நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் நமக்குள் தான் இருக்கிறது.
இவற்றில் எதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்ற முடிவும் நம் கையில் தான் இருக்கிறது என்ற வாழ்வியல் உண்மையை அழகுபட மொழிவதாக இப்பாடல் அமைகிறது.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

மனிதக் கணினி !உடலைப் பார்த்து வன்பொருள் செய்தாய்!
மனதைப் போல மென்பொருள் கண்டாய்!
நினைவின் கூறை ராம் எனச் சொன்னாய்!
கொள்திறன் அதனை மெமரி என்றாய்!
கண்கள் போல கேமரா செய்தாய்!
வாயைப் பார்த்து ஒலியைப் பெருக்கினாய்!
செவிகள் ஒப்பிட்டு ஒலிப்பதிவு செய்தாய்!
கணினியின் கைகள் மௌசே என்றாய்!
உடலைத் தாக்கும் கிருமிகள் கண்டாய்!
நச்சு நிரலும் நீயே உருவாக்கினாய்!
உடலைக் காக்கும் வகைதனை அறிந்தாய்!
எதிர்ப்பு நச்சு நிரலையும் நீயே கண்டாய்!
மனதில் ஆயிரம் கனவுகள் கண்டாய்!
கனவின் பாதியை இணையம் என்றாய்!
ஏ மனிதா..

ஒன்றை உற்று நோக்கினாயா...?
எல்லாமே போலச் செய்ததுதான்!
இணையானது அல்ல!
புதிதானதும் அல்ல!

எதிர்காலத்தில் நீ..
கணினிக்குள் சிந்தனை வைப்பாய்!
கணினியைத் தானே இயங்க வைப்பாய்!
ஏன் உன்னையே நீ கணினி கொண்டு இயக்கிக் கொள்வாய்!

ஒன்று சொல்..

மனிதன் பார்த்து கணினி செய்தாய்! நீ..
கணினி பார்த்து மனிதன் செய்வது எப்போது???

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

வாழ்க்கைப் புதிர்!!


கடவுள் உண்டா இல்லையா?
பேய் உண்டா இல்லையா?
மறுபிறவி உண்டா இல்லையா?
விதி என்பது எது?
தலையெழுத்து நம் தலையில் எங்கு உள்ளது?
நிம்மதி எங்கு உள்ளது?
மகிழ்ச்சியின் திறவுகோல் எது?
வாழ்க்கை எங்கு தொடங்குகிறது?
வாழ்க்கை எங்கு முடிகிறது?
நிலையான பொருள் எது?
அறிவு என்பது யாது?
பொருள் மட்டும் தான் வாழ்க்கையா?
நம்மால் நிகழ்காலத்தில் மட்டும் ஏன் வாழ்முடியவில்லை?
மழலையின் மொழி எது?
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?
இரத்தத்தில் கலந்த சாதியை எப்படிப் பிரித்தெடுப்பது?
இப்படிப் பல புதிர்களுக்கான பதிலை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு மாணவனிடம் கேட்டேன்..
உனக்குப் புதிரான ஒன்று சொல் என்று..
அவன் சொன்னான்..

ஐயா தேர்வில் கேட்கப்படும் “வினாத்தாள்“ தான் புதிரானது! என்றான்.

நான் சொன்னேன் நீ படிக்காமல் இருக்கும வரை அப்படித்தான் இருக்கும் என்று..

எனக்கும் நீண்ண்ண்ண்ட காலமாகவே ஒரு புதிருக்கான பதில் தெரியவில்லை..
தமிங்கிலம் பேசும் இன்றைய மக்களுக்கு தாய்மொழி எது?
என்பது தான் எனக்குப் புரியவில்லை???


எல்லாம் புரிந்துவிட்டால் நாம் ஒவ்வொருவருமே கடவுளராகிப்போவோமே..
அடுத்தநொடி என்ன நடக்கும் என்பதை அறியாத ஒவ்வொரு மணித்துளிகளுமே எதிர்பார்ப்பு நிறைந்தது தான்! இந்த எதிர்பார்ப்பிலும், கிடைக்கும் அனுபவத்திலும் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்பது என் அனுபவம்.

ஒரு இணையதளம் நாம் எப்போது இறந்துபோவோம் என்று கூறுகிறது.

ஆம் கிளியும், எலியும் சோதிடம் சொன்ன காலம் போய் இன்று கணினிகள் வந்துவிட்டன சோதிடம் சொல்ல..

இப்படி வாழ்கையில் புரியாத புதிர்கள் எண்ணற்றவை உள்ளன.
இதனைப் புரிந்துகொள்ளவே ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
நம் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர்கள், நம்மை மூளைச் சலவை செய்து தன் பொருட் தேவையை நிறைவு செய்துகொள்கிறார்கள்.
நினைவுக்கு வந்த நறுக்கு..

“உன் கையில் ஓடுகிறது
சோதிடனின் தனரேகை!“


சரி சங்ககாலத் தலைவி ஒருத்தி கூறும் வாழ்க்கைப் புதிரைப் பார்ப்போம்..

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி புலம்பு கொள்
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே

நற்றிணை 314 பாலை - முப்பேர் நாகனார்
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது

கள்ளிச் செடியின் மொழி.
கையில் நொடிப்பது போன் ஒலியுடன் காய்களைத் தெறிக்கிறது கள்ளிச் செடி!

புறாக்களின் காதல்.
அக்கள்ளிச் செடியில் கிளைகளில் தனியே அமர்ந்த புறாக்கள் தம் துணையை அன்போடு அழைக்கும்.

பாலையின் வெம்மை.
இத்தகைய கொடிய வெம்மை நிறைந்தது பாலை நிலம்.

தலைவனுக்குப் புரியாத புதிர்.

இக்கொடிய பாலை வழியே சென்ற தலைவனுக்கு,

“ஒருகாலத்தில் முதுமையடைந்தோர்
மறுபடியும் அழிந்த இளமையை எய்துவது இல்லை!“
அதே போல்,
“வாழ்நாளின் அளவு இவ்வளவு
என்பதை அறிந்தவரும் இல்லை!“
என்னும் வாழ்க்கைப் புதிருக்கான பதில் தெரியவில்லை!

தலைவனின் தவறான பதில்.
வாழ்க்கைப் புதிருக்கான பதில் தெரியாததால் தலைவன் “உன்னைப் பிரியேன்“ என்று தலைவியிடம் சொல்லி அதை நிறைவேற்ற முடியாது பிரிந்தவனாகவும், அதனால் பொய் சொல்லியவனாகவும் போய்விட்டான்!

தலைவியின் வாழ்த்து.

இத்தகு பொய்சொல்லியவனாக இருந்தாலும் அவன் ஏதும் தீங்கு நேராது வாழவேண்டும் என வாழ்த்துகிறாள் தலைவி.

பாடல் வழியே.
1. கைநொடிப்பது போன்று கள்ளிக் காய் வெடிக்கும் என்ற உவமை, புலவரின் உற்றுநோக்கலுக்குத் கத்க சான்றாகவுள்ளது.
2. பாலையின் வெம்மையிலும் புறாக்களின் காதல், தலைவனுக்கு தலைவியின் நினைவை வரவழைப்பதாகத் திகழ்கிறது.
3. தொலைந்த இளமை மீண்டும் வராது, நாம் வாழும் நாள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது என்ற வாழ்க்கையின் புதிரை யாவரும் உணர அழகாக உரைக்கிறார் புலவர் முப்பேர் நாகனார்.

சனி, 20 ஆகஸ்ட், 2011

தன்மானம் = உயிர்!மானம் என்றால் அது ஏதோ மேலே இருப்பது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வானம் வேறு மானம் வேறு.
மானம் என்றால் என்ன?
உயிர் எப்படி தனித்துவமானதோ, மதிப்பிற்குரியதோ! அதுபோலத்தான் மானம்!
மானம் போனா உயிர் வாழக்கூடாது என்றனர் நம் முன்னோர்!
ஆனால் இன்று..

தலைக்கு மேல வெள்ளம் போகும் போது அது சாண் போனா என்ன? முழம் போனா என்ன?
என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!!

நம் தேவையை நிறைவு செய்துகொள்ள யார் காலை வேண்டுமானாலும் பிடிக்கத் தயங்குவதில்லை.
அதனால் தான்..

கால்கை பிடித்தல்! கால்கை பிடித்தல்!
என்பது காக்கை பிடித்தல்! காக்கை பிடித்தல்! என்று பரவலாகப் பேசப் படுகிறது.
இதுவும் ஒரு வாழ்க்கையா..?


செல்வநிலையில் செம்மையான வாழ்க்கை வாழ்வதற்கும்,
வறுமை நிலையில் செம்மையான வாழ்க்கை வாழ்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.


இதோ ஒரு சங்க காலப் புலவர் ஒருவரின் தன்மானமுள்ள வாழ்வியலைப் பாருங்களேன்..

குமணனும் பெருஞ்சித்திரனாரும்.

குமணன் கடையெழு வள்ளல்கட்குக் காலத்தாற் பிற்பட்டவன்;
இவன் முதிர மலையைச் சார்ந்த நாட்டை ஆண்ட குறுநில மன்னன்.
இந்நாடு இயல்பாகவே நல்ல வளம் சிறந்தது. குமணனைப் பாடிப் பரிசில் பெற்றவர்களுள் பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்கவராவார்.

தன்மானம் = உயிர்!

குமணனைப் பெருஞ்சித்தரனார் பாடிய பாடல் ஒன்று தன்மானத்தின் மதிப்பை உணர்த்துவதாக உள்ளது.பெருஞ்சித்திரனார், இப் பாட்டின்கண்,

வறுமைத் துயரால் தன்னைப்
பெற்ற முதிய தாயும், இனிய மனைவியும், பலராகிய மக்களும் உடல்
தளர்ந்து மேனி வாடிக் கிடப்பதும் அவர் நெஞ்சு மகிழுமாறு தான்
பொருள் பெற்றுச் செல்லவேண்டி யிருப்பதும் எடுத்துரைத்து
“யான் களிறு முதலிய பரிசில் பெறுவேனாயினும் முகமாறித் தரும் பரிசிலைப் பெற
விரும்பேன்;
நீ உவந்து நான் இன்புற பரிசு தந்தால் குன்றிமணி
யளவாயினும் விரும்பி ஏற்றுக் கொள்வேன்;
எனக்கு
அவ் வின்பமுண்டாகும் வகையில் என்னை அருள வேண்டுகின்றேன்”என்று
கூறுகின்றார்.

“வாழு நாளோ டியாண்டுபல வுண்மையிற்
றீர்தல்செல் லாதென் னுயிரெனப் பலபுலந்து
கோல்கா லாகக் குறும்பல வொதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று
5 முன்றிற் போகா முதிர்வினள் பாயும்
பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதழிந்து
குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த
10 முற்றா விளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று
நீருலை யாக வேற்றி மோரின்
றவிழ்ப்பத மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த வுடுக்கைய ளறம்பழியாத்
துவ்வா ளாகிய வென்வெய் யோளும்
15 என்றாங், கிருவர் நெஞ்சமு முவப்பக் கானவர்
கரிபுன மயக்கிய வகன்கட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா வேனற் கிழுமெனக்
கருவி வானந் தலைஇ யாங்கும்
20 ஈத்த நின்புக ழேத்தித் தொக்கவென்
பசிதினத் திரங்கிய வொக்கலு முவப்ப
உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலெ னுவந்துநீ
இன்புற விடுதி யாயிற் சிறிது
25 குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண
அதற்பட வருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றனிற் பாடிய யானே.


புறநானூறு -159.
திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. அவனை அவர்
பாடியது..

ஈன்றாள் கண்ட பசி

"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை" (குறள் 656)

தன்னைப் பெற்ற தாய் பசியால் வாடுவதைப் பார்த்து மனம் வருந்தி வேதனைப்படும்பொழுதுகூட, சான்றோர்கள் பழிப்பதற்குக்குக் காரணமான இழிந்த செயல்களை செய்யக் கூடாது என்பர் வள்ளுவர்.

இக்குறளின் பொருளை புலவர் பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையில் தான் நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

சென்ற ஆண்டுகள் பல உண்டாதலின், இன்னும் போகின்றதில்லை எனதுயிரென்று சொல்லிக்கொண்டு வாழும் நாளோடு பலவாக வெறுத்துத் தான்பிடித்த தண்டே காலாகக்கொண்டு ஒன்றற்கொன்று அணுகப் பல அடியிட்டு நடந்து நூலை விரித்தாற் போலும் மயிரையுடையவளாய்க் கண்மறைந்து முற்றத்திடத்து மூப்பையுடைய தாயும் பசியுடன் வாடி தாம் உயிர் துறக்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்!

உடல் மெலிந்த மனைவி

பசப்புற்ற மேனியுடனே நினைவு வருத்த வருந்தி இடையிலே எடுத்த பல சிறுபிள்ளைகள் பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினையுடையளாய் மிகவும் வருந்திக் குப்பையின்கண் படுமுதலாக வெழுந்த கீரையினது முன்பு கொய்யப்பட்ட கண்ணிலே கிளைத்த முதிராத இளைய தளிரைப் பறித்துக்கொண்டு உப்பின்றியே நீரை உலையாகக் கொண்டு ஏற்றிக் காய்ச்சி மோரின்றி அவிழாகிய உணவை மறந்து பசிய இலையைத் தின்று மாசோடு கூடித் துணிபட்ட உடையினளாய் அறக்கடவுளைப் பழித்து என் மீது அன்பு குறையாதவளாக வாழும் பெருஞ்சித்திரனாரின் மனைவி!

வாழ்க்கையின் பொருள்!

வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண் ஐவனநெல்லோடு வித்தி இருட்சியுற அழகுபெற்றுக்கோடைமிகுதியான் ஈன்றலைப்பொருந்தாத தினைக்கு இழுமெனும் அனுகரணவொலியுடனே மின்னும் இடியுமுதலாகிய தொகுதியையுடைய மழை துளியைச் சொரிந்தாற் போலத் தந்த நினது புகழை வாழ்த்திப் பசியால் வருத்தமுற்ற எனது சுற்றமும் மகிழ,

மேம்பட்டு ஏந்திய தந்தங்களைக் கொண்ட கொல்யானையைப் பெறினும் முகமாறித் தரும் பரிசிலைக் கொள்ளேன்;
மகிழ்ந்து நீ யான் இன்புற விரையத் தந்து விடுவையாயிற் சிறிதாகிய குன்றியென்னும் அளவையுடைய பொருளாயினும் கொள்வேன்;

கூரிய வேலையுடைய குமணனே! இசைமேந்தோன்றல்!
நிற்பாடிய யான் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடுபரிசில் கொள்ளேன்; இருவர்நெஞ்சமுமுவப்ப, ஒக்கலுமுவப்ப உவந்து இன்புறவிடுதியாயிற் குன்றியுங்கொள்வேன்; அதற்பட அருளல் வேண்டுவலெனக் கூட்டி வினைமுடிவுசெய்க என்று வள்ளல் குமணனைப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடுகிறார்.

பாடல்வழியாக உயிருக்கு இணையானது தன்மானம்! அதனை பொருளுக்காக விற்கக் கூடாது என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது


ஒப்பீடு


அன்று பொருளில்லாவிட்டாலும் மதித்த தாய்! மனைவி!குழந்தைகள்!
இன்று பொருளில்லாவிட்டால் மதிக்காத தாய்! மனைவி!குழந்தைகள்!

அன்று வறுமையில் வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ்ந்தனர்!
இன்று செல்வநிலையில் வாழ்ந்தாலும் மானத்தின் பொருளறியாது வாழ்கின்றனர்!

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

மறக்கமுடியுமா? (மாணாக்கர் கவிதை)


அன்பின் உறவுகளே வாங்க இளம் கவிஞரை வாழ்த்தி வரவேற்போம்.

“எங்கெங்கோ பிறந்து
நாட்கள் பல கடந்து
இங்கொன்றாய் சேர்ந்து
இனிதாய் நட்பு கொண்டோமடா!

வகுப்பில் அடிக்கும் அரட்டை
அயர்ந்துவிடும் குறட்டை
மாற்றிக் கொண்ட சட்டை
மனதில் பதிந்த சுவடடா!

சிலநேரம் அடிதடி
அடுத்தநொடி இணைந்தபடி
நட்பில் மட்டும் ஏன் இப்படி?

பாடம் எடுக்கையில் வேடிக்கை
தேர்வு அறையில் படுக்கை
தோல்வி அடைவது வாடிக்கை
இதுதான்டா வாழ்க்கை!

வீட்டில் ஒரு கையில்
சமைத்த உணவு
கல்லூரியில் பல கைகள்
வைப்பதால் வரும் நிறைவு!

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
தேர்விறுதித் திரையரங்குகள்
நண்பன் வீட்டு விழாக்களில்
இனிமையான சேட்டைகள்
நினைக்க நினைக்க
முகம் மலருமடா!

தேர்வில் துருப்புச் சீட்டெடுத்து
கோழிபோலத் தலையசைத்து
தலைகோதிக் கொண்டே
எழுதியதெல்லாம்
நினைக்க நினைக்க இனிமையடா!

வகுப்புத் தேர்வை வாராவாரம்
நாளை நாளை என்றுதினம்
ஓட்டவைத்த ஓட்டுனனே – உனக்கு
உரிமம் கொடுத்தது யாரடா?

இன்பம் என்பது தேவையடா
இளமைக்கு அது சொந்தமடா
எதிர்காலம் என்றொன்று இருக்குதடா
பின்வரும் துன்பத்தை எண்ணிச் செயல்படடா!

மறக்கமுடியாத நினைவுகள்
துறக்கவிரும்பாத சுகமான சுமைகளாக
என்றும் என் மனதில்!

(ச.கேசவன்
இயற்பியல் - இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு)

புதன், 17 ஆகஸ்ட், 2011

இயன்றவரை இனிய தமிழில்(400வது இடுகை)முகமூடிகளையே அணிந்து அணிந்து
தன் முகம் மறந்த அப்பாவியாய் – தமிழன்!

வளர்க்கும் வீட்டுக்காரனுக்குப் பயன்படாமல்
பக்கத்துவிட்டில் காய்காய்க்கும் கொடியாய் – தமிழன்!

தன் வீடு தீப்பற்றி எறிய
எதிர்வீட்டில் தண்ணீர் ஊற்றும் பேதையாய் – தமிழன்!

நுனிக் கிளையிலிருந்து கொண்டு
அடிக்கிளையை வெட்டும் அறிவாளியாய் – தமிழன்!

தன் வீடு இருளில் கிடக்க
எதிர் வீட்டுக்கு விளக்கேற்றும் புத்திசாலியாய் – தமிழன்!

பிறமொழி கலவாத் தமிழில் ஒரு நிமிடம் பேச
உன்னால் முடியுமா? என்று கேட்டால்

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து
திருதிருவென விழிக்கும் குழந்தையாய் – தமிழன்!

சரி! தமிழில் தான் உன்னால் பேசமுடியவில்லை
ஆங்கிலமாவது தமிழ் கலக்காமல் பேசுவாயா? என்றால்

பெருங்கல்லை இவன் தலையில் வைத்ததுபோல
நொந்துபோய் பார்க்கிறான் – இன்றைய தமிழன்!

இப்படியொரு தலைமுறை இப்போது உருவாகியுள்ளது.
பொய்யில்லை.
வகுப்பறையில் ஆங்கிலத்தில் சுற்றறிக்கை வாசித்தால்
ஆசிரியரை வியப்போடு பார்க்கிறார்கள்.
அக்கம்பக்கத்து மாணவர்களிடம்
என்ன ஏது என்று வினவுகிறார்கள்!

சரி இளந்தலைமுறைதான் இப்படியென்றால்
பழைய தலைமுறையைப் பார்த்தால்.

பழம்பெருமை பேசிப்பேசியே
உணர்ச்சிவசப்பட்டுக்கிடக்கிறது.

அறிவியல் மண்ணை அளந்து
விண்ணை அளந்து
அளக்க இடம் கேட்டு நிற்கும்போது
இவர்கள் யாரோ கண்டறிந்த பொருள்களுக்கு
என்ன பெயர் வைக்கலாம் என்று
பட்டிமன்றம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்!தமிழ்பேசுவதே இழிவெனக் கருதும் இளந்தலைமுறை!
தமிழ்மட்டும் தான் மொழி என்று கருதும் பழைய தலைமுறை!

இவ்விரண்டுக்கும் நடுவே இவர்களுக்கு இடைப்பட்ட தலைமுறை பிறமொழி பேசாமல் தமிழ்பேச முயன்று சமூகத்தி்ல் தமிழை இன்று நாம் தொடர்புகொள்ளும் இணையஉலகத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

ஒரு நகைச்சுவை..

செவ்வாய் கிரகத்தில வாழ நாட்டுக்கு 100 பேர் தேர்ந்தெடுக்கச் சொன்னாங்கலாம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் தேர்ந்தெடுத்தாங்கலாம். நம்மாளும் தேர்ந்தெடுத்தானாம். சரி உங்க நாட்டுல 100 பேர எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? என்று நம்மாளப்பார்த்து கேட்டிருக்காங்க...

நம்மாளு சொன்னானாம்..
ஓசில 10, பிசில 10, எம்பிசில 10 என்றானாம்.
ஏன்டா நீங்களாம் திருந்தவே மாட்டீங்களாடா..?
என்று கேட்டாங்களாம்.

தமிழன் சாதியால்,மதத்தால்,கட்சிகளால், நிறத்தால், ஏற்றத்தாழ்வுகளால் பலநூறு வகைப்பட்டவனாகப் பாகுபட்டுப்போயிருக்கிறான்.

நம்மை ஒருகுடை கீழ் சேர்க்கும் ஒரே அடையாளம் மொழி என்பதை நாம் அறியவேண்டும்!

தாய் மொழியில் பேசும்போது..
நுட்பமான, ஆழமான, முழுமையான, புரிதலும், வெளிப்படுத்தலும் அமையும் என்பது என் அனுபவம்.

வானொலி,தொலைக்காட்சி,பத்திரிக்கை,விளம்பரம் என்னும் பிற ஊடகங்களுடன் ஒப்புநோக்கும்போது “இணையத்தமிழ்“ மதிப்பிற்குரிய ஊடகமாகவே எனக்குத் தோன்றுகிறது. தமிழானது, சமூக ஊடகங்களால் கொலைசெய்யப்பட்டு வரும் நிலையில் இணையத்தமிழ் எதிர்காலத்துக்கு தம்மால் இயன்வரை தமிழில் செய்திகளைப் பதிவு செய்துவருவது வரவேற்கத்தக்கது.

தமிழன் தொலைந்த இடம்


தமிழன் மொழியைத் தொலைத்துத் தன்னைத் தானே தேடிவரும் நிலையில், தமிழன் எங்கு தொலைந்தான்? எப்படித் தொலைந்தான் என்பதை தமிழறிஞர் மு.வரதராசன் அவர்கள் அழகாகக் குறிப்பிட்டுச் செல்கிறார்,

“கணக்கு முதலிய அறிவுத் துறைகள் எண் எனப்படும்.
கவிதை முதலிய இலக்கியத்துறைகள் எழுத்து எனப்படும். இவ்விரண்டும கல்விக் கண்கள் என்பர் வள்ளுவர்.முன்பெல்லாம் இலக்கியத்துறையில்நூல்கள் மிகுந்திருந்தன.இக்காலத்தில் அறிவுத்துறை நூல்கள் பெருகி வருகின்றன.காரணம் என்ன?

முன்பு கணக்கு, வாணிகம், மருத்துவம், தொழில்நுணுக்கங்கள், முதலிய அறிவுத்துறைகள் குடும்பக் கல்வியாக இருந்தன. வழிவழியாகக் குடும்பத்தாரால் கற்பிக்கப்பட்டு வந்தன. முன்னெல்லாம் வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. ஆகையால் அந்த அறிவுத் துறைகளும் எளிமையானதாக இருந்தது. இந்தக் காலத்தில் வாழ்க்கை அவ்வளவு எளிமையானதாக இல்லை.சிக்கல்கள் பெருகிவிட்டன. துறைகள் பெருகி வளர்ந்துவிட்டன. யந்திரங்களும் அவற்றின் நுட்பங்களும் பெருகிவிட்டன.எதையும் அறிவியல் முறையின்படி ஆய்ந்து தெளிவுபடுத்தி எழுதிவைத்துப் போற்றுதல் தேவையாகிவிட்டது. குடும்பக்கலையாகவே இன்றுவரை இருந்துவரும் சமையல் முதலியன பற்றியும் நூல்கள் எழுதப்பட்டுப் பட்டப்படிப்பு அமைந்துள்ள காலம் இது. ஆகையால் இன்றைய தேவைக்கு ஏற்ப அறிவுத் துறைநூல்கள் பெருகிவிட்டன.இன்னும் பல மடங்கு பெருகுவதும் இன்றியமையாததாகிவிட்டது.

தனிப்பாட்டு, காவியம், நாடகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, கட்டுரை ஆகிய இலக்கியத் துறைகளைவிட மேற்குறித்த அறிவுத் துறை நூல்கள் எல்லா மொழிகளிலும் விரைந்து பெருகுகின்றன. தமிழ் மொழியிலும் இவ்வகையில் பின் தங்காமல் வளர்ச்சி பெறவேண்டும். ஆனால் தமிழ் இலக்கியத்துறையை வளர்ப்பதில் மட்டுமே சென்ற ஆண்டுவரை ஆர்வம் இருந்துவந்தது. சில அறிவுத்துறை பற்றிய நூல்கள் தமிழில் பழங்காலத்தில் இருந்தபோதிலும் பின் வந்தோர் அவற்றைக் காத்து வளர்க்கவில்லை. அறிவுத் துறைகளை விடாமல் வளர்த்து வந்தது வடமொழி. ஆகவே அறிவுத்துறைகள் பற்றி நாடும்போதெல்லாம் வடமொழியை நாடுவது வழக்கமாக இருந்தது.

இலக்கியத் துறைக்குத்தமிழும், அறிவுத் துறைக்கு வடமொழியும் என்று வகுத்துக்கொண்டு, வடமொழி நூல்களைச் சார்ந்து வாழ்ந்தனர். அதனால் வடமொழி அறிஞர்களுக்கு பெருமிதமும் செல்வாக்கும் மிகுந்திருந்தன “தமிழில் என்ன உள்ளது“ என்று தமிழர் சிலர் எள்ளி வினவும் வருந்தத்தக்க போக்குக்கு இடம் ஆயிற்று.

அதே நிலை தான் இன்றும் உள்ளது. வேறு வடிவில் உள்ளது. அறிவுத் துறை நூல்களுக்கு ஆங்கிலத்தைச் சார்ந்து பழகிவிட்டமையால், முன்காலத்து வடமொழி அறிஞர்களைப் போல் இக்காலத்து ஆங்கில அறிஞர்களுக்குப் பெருமிதமும் செல்வாக்கும் வளர்ந்துவிட்டன. “தமிழில் என்ன உள்ளது?“ என்ற பழங்காலச் செருக்கான கேள்வியைக் கேட்போர் இன்றும் தமிழரிடையே இருந்து வருகின்றனர்“

தமிழறிஞர் மு.வரதராசன் அவர்கள் – காலந்தோறும் தமிழ் பக்38,39.

நாம் சிந்திக்கவேண்டிய நேரமிது.
நம் துறைசார்ந்த செய்திகளை இயன்றவரை தமிழில் பதிவுசெய்வோம்.
சிந்தனை தாய்மொழியில் இருப்பதும் அதனைத் தாய்மொழியிலேயே பதிவு செய்வதும் காலத்தின் கட்டாயமாகும்

தமிழறிஞர்களே இலக்கிய ஓடம் ஓட்டியது போதும்.
பல்துறை அறிஞர்களே தமிழைக் குறை கூறியது போதும்.

மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல!
ஒரு இனத்தின் மொத்த அடையாளமாகவும், அனுபவத்தின் தொட்டிலாகவும், பண்பாட்டின் கருவூலமாகவும் கருதத்தக்கது!

மொழியைப் புறக்கணிப்பது நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு இணையானது என்பதை நினைவுபடுத்துவதற்காகவே இவ்விடுகை.

என்னால் இயன்றவரை..

என் அறிவுக்கு எட்டியவரை இன்றுவரை இன்றைய கருவி கொண்டு, வலையுலகில் தமிழ்மொழி சார்ந்த இலக்கியம் சார்ந்த செய்திளைப் பகிர்ந்து வருகிறேன்.

இன்று 400வது இடுகை வெளியிடுவது மனதுக்கு நிறைவாக இருந்தாலும், தமிழின் நிலை தமிழன் நிலை வருந்தத்தக்தாகவே இருக்கிறது.

என் வலையுலக வாழ்வில் பெருஞ்செயலாக நான் கருதுவது..

1. இயன்றவரை தமிழில் பிறமொழி கலவாது கருத்துக்களை வெளியிட்டு வருவது.
2. ஒரு சில மணித்துளிகளாவது தமிழர்களை இலக்கியங்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
3. பழந்தமிழ் இலக்கியங்களைச் சொன்னாலும் நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு உரைப்பது.
4. 400வது இடுகை வெளியிடும் நாளில் 400 பேருக்குமேல் பின்தொடரச் செய்வது.
மேற்கண்ட பெருமைகள் யாவும் எனக்குச் சொந்தமானவையல்ல.
ஆம் எனக்குக் கிடைக்கும் எல்லாப் பெருமைகளும் தமிழ்மொழிக்கே உரிமை என்று கூறி என் வலைப்பதிவைப் பார்வையிட்டு, கருத்துரை வழங்கி, பின்தொடர்ந்து என்னைத் தொடர்ந்து எழுதச் செய்யும் அன்பு நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


-0O0- நன்றி -0O0- நன்றி -0O0- நன்றி -0O0-

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

மிரட்டும் ஆந்தை!


சங்ககாலத் தமிழர்கள் இயற்கையுடன் இயைபுகொண்ட வாழ்வு வாழ்ந்தனர்.
அஃறிணை உயிர்களுடன் உறவாடி மகிழ்ந்தனர்.

இதோ ஒரு அகப்பாடல்..
இதில் தோழி,
பேராந்தை என அழைக்கப்படும் கூகையிடம் பேசுகிறாள்,
என்ன பேசுகிறாள் என்று கொஞ்சம் கேளுங்களேன்....

தலைவன் திருமணம் செய்துகொள்ளமலே காலம் தாழ்த்தி வருகிறான். ஒரு நாள் இரவு நேரத்தில் தலைவியைச் சந்திக்க வந்த தலைவன் அருகாமையில் மறைந்து நிற்க. அதனை அறிந்த தோழி தலைவனுக்கு அறிவுபுகட்ட நல்லதொரு வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்கிறாள்.
தலைவனுக்குக் கேட்குமாறு தோழி சொல்கிறாள்...
எம் ஊரின் வாயிலில் பலரும் நீருண்ணும் துறையிலே பெருங்கடவுள் தங்கியுறையும் பழைய மரம் உள்ளது. அம்மரத்தின் மீதிருந்து தேயாத வளைந்த வாயுடன் தெளிந்த கண்ணுடன் கூரிய நகத்துடன் விளங்கி எங்களுடன் ஒருசேரப் பழகித் தங்கும் வலிமை மிகுந்த கூகையே!!

நீ வாயாகிய பறை ஒலிக்க பிறரை வருத்துகின்றாய்!
நாங்கள்..
ஆட்டு இறைச்சியுடன்,
நெய் கலந்தும்,
வெண்மையான சோற்றில்,
வெள்ளெலியின் சூட்டிரைச்சியையும் சேர்த்தும் நிறையுமாறு உனக்குத் தருவோம்..
எங்களிடம் அன்பு நிறைந்த காதலர் எம்மைக் காணவருவார் என்று எதிர்பார்த்து உளத்தடுமாற்றத்துடன் நாங்கள் இருப்போம்..


அப்போது உறங்குவார் யாவரும் அஞ்சி விழித்துவிடுமாறு நீ உன் கடுமையான குரலால் குழறி எங்களை வருத்தாதே..
என்கிறாள். இதனை கேட்டிருக்கும் தலைவன். சரி நாம் இனியும் தலைவியை வருத்தக்கூடாது. விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவுக்குவருவான்.

பாடல் இதோ..

எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய்ப்பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்
எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே.
பெருந்தேவனார்.
நற்றிணை -83
கூற்று – இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

இரவு நேரத்தில் தலைவியைக் காண வந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க, அதனை அறிந்த தோழி அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது.

பாடல் வழியே.

1. நீருண்ணும் துறைகளுக்கு அருகாமையில் இருந்த மரங்களில் கடவுள் குடியிருப்பதாக எண்ணிய சங்ககால மக்களின் கடவுள் நம்பிக்கை புலனாகிறது.
2. ஊருக்கும், பெற்றோருக்கும் அஞ்சினாலும் தலைமக்கள் ஒருவரை ஒருவர் இரவில் சந்தித்து உறவாடி மகிழ்ந்தமை சுட்டப்படுகிறது. கூகை என்றழைக்கபடும் ஆந்தை கூட காதலர்களுக்கு எதிரியாக இருந்தமை பாடல் வழி அறியமுடிகிறது.
3. கூகை அலறி ஒலிஎழுப்பாமல் இருந்தால் இறைச்சி கலந்த உணவு தருவோம் என்ற தோழியின் கூற்று, ஒருபுறம் நகைப்பை ஏற்படுத்துவதாகவும், மறுபுறம் அச்சத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.
4. தலைவனிடம் நேரில் பேசாமலேயே பிற வாயில்களின் வழி, தலைவனுக்கு மனதில் பதியுமாறு அழகாக உணர்த்தும் தோழியின் திறன் நல்லதொரு உளவியல் அணுகுமுறைக்குச் சான்றாகவுள்ளது.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

இதுவல்லவா சுதந்திரம்!பறவைக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா?
காற்றுக்கு இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா?


கூண்டுக் கிளிக்கும்
சிறகில்லாத மனிதனுக்கும்

ஒன்றும் பெரிய வேறுபாடு எனக்குத் தெரியவில்லை!

அடிமை மண்ணில் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும்
சுதந்திரத்தின் பொருள்!

சுதந்திர மண்ணில் பிறந்த மாணவனிடம் கேளுங்கள்...
சுதந்திரம் என்றால் என்ன? என்று..

பள்ளி மாணவன் சொல்வான் அதிலென்ன சந்தேகம்
பள்ளி விடுமுறைதான் சுதந்திரம் என்று!

சரி பள்ளி இருந்தால் எது சுதந்திரம்? என்று கேட்டால்...

மாணவன் சொல்வான் நிச்சயமாக வகுப்பு எடுக்காமல் இருப்பதுதான் என்று!

சரி வகுப்பு எடுத்தால் எது சுதந்திரம்..? என்றால்..

மாணவன் சொல்வான்...
தேர்வு வைக்கக்கூடாது! கேள்வி கேட்கக்கூடாது அப்படிக் கேட்டாலும் என்னைக் கேட்க்கூடாது அதுதான் சுதந்திரம் என்பான்!

இதோ சில நிகழ்காலச் சமூகத்தில் சுதந்திரம்....

சாலைவிதிகளை மீறுவதா சுதந்திரம்?
அவரிடம் கையூட்டு பெறுவதல்லவா சுதந்திரம்!

இலவசம் பெற்று ஓட்டளிப்பதா சுதந்திரம்?
ஆட்சிக்கு வந்து விலைவாசியை உயர்த்துவதல்லவா சுதந்திரம்!

அலுவலகத்தில் கடமையை செய்யாதிருப்பதா சுதந்திரம்?
போட்டிபோட்டு குறட்டைவிடுவதல்லவா சுதந்திரம்!

தாய் மொழி பேசுவதா சுதந்திரம்?
வயிற்றுக்காக ஆங்கிலம் பேசுவதல்லவா சுதந்திரம்!

பிறந்த நாட்டில் பணிபுரிவதா சுதந்திரம்?
வெளிநாட்டில் கூலி வேலை பார்ப்பதல்லவா சுதந்திரம்!

விடுமுறை எடுத்துத் திரைப்படம் பார்ப்பதா சுதந்திரம்?
கிரிக்கெட்டுக்காக விடுமுறை எடுப்பதல்லவா சுதந்திரம்!

விளம்பரங்கள் வழி மூளைச்சலவை செய்வதா சுதந்திரம்?
ஆளும் கட்சியின் அடிவருடுவதல்லவா ஊடக சுதந்திரம!

சாலை நடுவே குடித்து ஆட்டம் போடுவதா சுதந்திரம்?
மதுக்கடைகளை அரசே நடத்துவதல்லவா சுதந்திரம்!

நம்முள் நாமே அடிமைப்பட்டுக்கிடப்பதா சுதந்திரம்?
அன்று வெள்ளையன்! இன்று கொள்ளையன்!

கொடியேற்றுதாலோ! மிட்டாய் கொடுப்பதாலோ!
சுதந்திரம் வந்துவிடுவதில்லை!
இந்தியா ஒளிர்வதில்லை!


லித்துவேனியா நாட்டு மேயர் யாருக்கும் அஞ்சாமல்
சாலையோர ஆக்கிரமிப்புகளைத் தானே அகற்றி
ஒருநாள் தன் கடமையைச் செய்தார் என்று
உலகமே அவரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது!

நம் நாட்டில் இப்படியொரு நல்ல செயல் செய்தால்
அடுத்த நாளே அந்த மனிதரை வேறு
ஊருக்கு பணிஇடமாற்றம் செய்துவிடுவோமே..

இதுவல்லவா உண்மைச் சுதந்திரம்..?

இந்தியத் திருநாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் சுதந்திரக் காற்றை அளவுக்கு அதிகமாகவே சுவாசிக்கிறோம். அதிலும் அரசு அலுவலகத்தில் வாழும் அலுவலர்கள்....

ஒரு முறை ஏதோ ஒரு சான்றிதழ் பெற உள்ளே சென்று வந்தால் தெரியும் சுதந்திரக் காற்றை நம்மைவிட இவர்கள் தான் அதிகமாக சுவாசிக்கிறார்கள் என்று..

அறிஞர்.அண்ணா, பெருந்தலைவர் காமராசர் போன்ற பல தலைவர்களும் தன்னலமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் அவர் பெயரைச் சொல்லியே ஓட்டு வாங்கி பட்டை நாமம் சாத்துகிறார்கள். என்று அடுத்தவரைக் குறை கூறும் அதே நேரத்தில் நம்மையும் நாம் திருத்திக் கொள்ள முயல்வோம்!

சுதந்திரத்துக்காகப் போராடிய எத்தனையோ அன்பு நெஞ்சங்களை எண்ணிப்பார்ப்போம்!

தொ(ல்)லைக் காட்சி பார்த்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை விட கீழ்க்காணும் உறுதிமொழிகளில் ஏதோ ஒன்றிரண்டையாவது வாழ்க்கையில் கடைபிடிக்க முயல்வோம்........

• “உணவு, உடை,உறைவிடம் என்னும் அடிப்படைத் தேவைகளை முதலில் நிறைவு செய்வோம்“
• “தரமான கல்வியை, தன்னம்பிக்கையளிக்கும் கல்வியை மாணவர்களுக்குத் தரமுயல்வோம்.“
•“நம் கடமையை செய்வோம்“
• “சுயநலமின்றி இருக்க நாமொன்றும் இயந்திரங்கள் அல்ல. பொதுநலம் கலந்த சுயநலம் கொண்டவர்களாக இருப்போம்“
• “பிறந்த நாட்டின் மீது பற்று வைப்போம்“
• “தாய் மொழியையே பேச முயல்வோம்“
• “நம் நாடு உயர நம் துறை சார்ந்து ஏதோ ஒரு வழியில் துணை நிற்போம்“
• “நாட்டின் பண்பாடுகளை மதிப்போம், போற்றுவோம்“
• “நம் நாட்டில் விளையும் விளைபொருள்களுக்கும், உற்பத்திப் பொருள்களுக்கும் முன்னுரிமை அளிப்போம்“
• “எல்லோருக்கும் அரசு வேலைவாய்ப்பளித்தல் இயலாத ஒன்று. (6000 அரசு பணியிடம் இருந்தால் பத்து இலட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்) அதனால் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம்“


நம் நாட்டில் எத்தனையோ நிறைகள் உண்டு!
நிறைகளை சொல்ல நிறையபோர் இருக்கிறார்கள்!
நான் மேற்கண்ட இடுகையில் குறைகளையே அடிக்கோடிட்டு இருக்கிறேன். குறைகளைத் திருத்திக் கொள்வதே வளர்ச்சியின் அடையாளமாக இருக்கும் என்பது எனது கருத்து.

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்!

சனி, 13 ஆகஸ்ட், 2011

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

சிரிக்க வைத்த வாளைமீன்!


சங்கஇலக்கியங்கள் சங்ககால மக்களின் வாழ்வியலை மட்டுமின்றி அஃறிணை உயிர்களின் வாழ்வியலையும் அழகாகப் பதிவுசெய்துள்ளன.

பண் இசைப்பதில் வல்ல பாணர்கள் மீன் பிடிப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். ஒரு பாணர் மூங்கிலால் செய்யப்பட்ட தூண்டிலில் இறைச்சித் துண்டை வைத்து மீன் பிடிக்க முயன்றார். வாளை மீன் ஒன்று அத்தூண்டிலை நாடி வந்தது. அறியாமல் இறைச்சியைக் கவ்வியது. பின் உணர்ந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று உயிரை வாயில் பிடித்துக்கொண்டு சிறு காயத்தோடு இறைச்சித்துண்டையும் பெற்றுத் திரும்பியது. விழிப்போடு இல்லாத்தால் பாணன் ஏமாந்துபோனான்.

பாணன் ஒருமுறை தான் ஏமாந்தான். ஆனால் உயிர்பிழைத்த வாளை மீனோ பல முறை ஏமாந்தது.
ஆம்..

நீரில் வளரும் பிரம்பின் நிழல் சூரியன் வெளிச்சத்தில் நீரில் நிழலாக வீழும் போதெல்லாம் தன்னைக் கொல்லவந்த தூண்டில்தானோ!!
என்று அஞ்சி விரைந்து நீந்தும் தன்மையதாக மாறிப்போன வாளை மீனை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது.


பாடல் அடிகள் இதோ...

‘பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்,
கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ,
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்’

பெரும்பாண் ஆற்றுப்படை 283-288
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பாடல் வழியே..

1. பிரம்பின் நிழலை தூண்டில் என்று அறியாமல் அஞ்சிய மீனின் செயல் சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது.
2. நமக்கெல்லாம் மீன்களைப் பார்த்தால் அவை நீந்துவது மட்டும் தான் தெரியும் ஆனால் இந்தப் புலவருக்கோ வாளை மீனின் மனநிலையே தெரிந்திருக்கிறது. இது உண்மையா மீன் உண்மையிலேயே அஞ்சியதா? அது எப்படிப் புலவர்களுக்குத் தெரிந்தது என்று ஆராய்வதைவிட புலவரின் கற்பனை நயம், எண்ணி வியப்பதாகவே விளங்குகிறது.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

வலைப்பதிவர்களைத் தாக்கும் நோய்கள்!


வலையுலகில் கால்பதிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் இயல்பான ஆசைகளே அவர்களைத் தொல்லை செய்யும் நோயாக மாறிப்போய்விடுகிறது. இவர்களை,

எந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாதோர்!
நோயால் துன்பமடைவோர்!
நோய்கான மருந்து என்ன? என்பதை உணராதவர்கள்!
வருமுன் காப்பவர்கள்!
நோய்க்கான மருத்துவத்தை நன்கு அறிந்தவர்கள்!
என பலவகைப்பட்டவர்களாகப் பாகுபடுத்தி அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

நோய்களின் வகை.

1. தம் வலைப்பக்கத்தை இன்னும் அழகாக்க வேண்டும்.
2. வலைப்பக்கம் விரைவாகத் திறக்கவேண்டும்.
3. வலைக்கணக்கை தாக்குநர்கள் (ஹேக்கர்) தாக்கிவிடக்கூடாது.
4. வலைப்பக்கத்தில் நச்சுநிரல் (வைரசு) வந்துவிடக்கூடாது.
5. இடுகைகளை யாரும் திருடிவிடக்கூடாது (காப்பி)


மேற்கண்ட நோய்கள் தீர கொஞ்சம் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இதுவே இந்நோய் தீர சிறந்த மருந்து.

(வலைப்பக்கத்தின் அழகைவிட உள்ளே சொல்லபட்டவற்றைத் தான் பார்வையாளர்கள் விரும்புகிறார்கள் என்பது முதலில் புரியவேண்டும்.
வலைப்பக்கம் விரைவாகத் திறக்க குறைவான விட்செட்டுகள் குறைவான இடுகை எளிய அடைப்பலகையைப் பயன்படுத்தவேண்டும்.
தாக்குநர்களிடமிருந்து தப்பிக்க அடிக்கடி கடவுச் சொல்லை மாற்றவேண்டும். பிற இடங்களில் மின்னஞ்சல் கணக்கைக் கையாளும்போது மிகவும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.
வலைப்பக்கத்தில் தேவையில்லாத சுமைகளை ஏற்றக்கூடாது. கோப்புகளைச் சோதித்துப் பதிவேற்றவேண்டும்.
நம் பதிவுகளை நகலெடுக்க இயலாதவாறு நிரல்களை நம் வலைப்பக்கத்தில் சேர்க்கவேண்டும்.)

6. நிறைய பார்வையாளர்கள் வரவேண்டும்.
7. அனைவரும் கருத்துரையிடவேண்டும், பின்தொடரவேண்டும்.
8. குறைகூறும கருத்துரைகளே இடம்பெறக்கூடாது.
9. விருதுகள் தேடிவர வேண்டும்.
10. எல்லா சமூகதளங்களிலும் தம் இடுகை முன்னிலையில் இருக்கவேண்டும்.

மேற்கண்ட நோய் தீர ஒரே வழி எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்வதுதான்.

(தகுதியான இடுகையாக, சமூகத்தைப் பிரதிபலிக்கும், சிந்திக்கவைக்கும், சிரிக்கவைக்கும், இடுகை என்றால் பார்வையாளர்கள் அழைக்காமலே வருவார்கள். கருத்துரையிடாமல் செல்லமாட்டார்கள்.பின்தொடர்வார்கள். குறைகூற மாட்டார்கள். விருதுகள் தேடிவரும்.இடுகையும் எல்லா சமூகத் தளங்களிலும் முன்னிலையில் இருக்கும் தொடர்ந்து இற்றைப்படுத்தவேண்டும். பிற வலைப்பக்கங்களுக்கு தாம் அடிக்கடி செல்லவேண்டும் கருத்துரை இடவேண்டும்.ஓட்டளிக்கவேண்டும்.

வலையுலகில் என்னைத் தாக்க முயன்ற நோய்களிடமிருந்து நான் என்னை எவ்வாறு தற்காத்துக்கொண்டேன் என்ற அனுபவமே இப்பதிவு.
இளம்பதிவர்களுக்குப் பாடமாக அமையுமே என்பதாற்காக....

புதன், 10 ஆகஸ்ட், 2011

உலகிலேயே விரைவான வாகனம்?உலகத்திலேயே விரைவாகச் செல்லும் வாகனம் எது?
தொடர்வண்டி, கப்பல், வான்ஊர்தி, ஏவுகணை....

இவை எல்லாவற்றையும் விட விரைவாகச் செல்லும் வாகனம் மனம்.


ஆம் மனதை விட விரைவாகச் செல்லும் வாகனத்தை இனியும் கண்டறிய முடியாது.
மனதுக்கும் அதிவிரைவான வாகனத்துக்குமான போட்டியை சங்கப்பாடல் ஒன்று அழகாகப் பதிவு செய்துள்ளது.

தலைவன் பொருள் தேடிமுடித்தபின் தலைவியை உடனே காண நினைக்கிறான். தன்னிடமிருக்கும் அதிவிரைவான குதிரை பூட்டிய தேரை ஓட்டுபவன் திறமையான பாகன் விரைவாகத்தான் ஓட்டுவான். இருந்தாலும் தலைவன் மனத்துக்கு முன் குதிரை இழுக்கும் தேரின் வேகம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அதனால் தன் பாகனிடம் தலைவன் சொல்கிறான் இதுவரை பயன்படுத்தாத முள்ளால் ஆன தாற்றுக் கோலைப் பயன்படுத்தி தேரை விரைந்து செலுத்து என்று..
காதல் கண்ணை மறைக்கும் சூழலிலும் தலைவன் மனிதாபிமானம் கொண்டவனாக, உயிரிரக்கம் கொண்டவனாக இருக்கிறான் என்பதை பாடலை நன்கு உற்று நோக்கும் போது புரிந்துகொள்ளமுடிகிறது.

பாடல் இதோ....

விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ, தேரே! உதுக்காண்
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே


மருதன் இள நாகனார்
நற்றிணை -21
கூற்று – வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
பொருளீட்டிய பின் வீட்டுக்குத் திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனை நோக்கி..
பாக! நம் வீரர் மெதுவாகப் பின்னே வரட்டும். நீ விரைந்து தேரைச் செலுத்து. கானங்கோழி இரையைப் பெற்றுத் தன் பெடையை நோக்குவதைப் பார் இதுபோல நானும் என் தலைவியை பெருமையோடு நோக்கவேண்டும். அதனால் தேரை விரைந்து ஓட்டுவாயாக என்கிறான் தலைவன்.


தலைவனின் அன்பு உள்ளம்.

பொருள் தேடிய பின்னர் தலைவியைக் காண தலைவனின் நெஞ்சம் விரைகிறது. மனதிற்கு இணையாக தேரை விரைந்து ஓட்டக்கூடியவன் தான் பாகன். இருந்தாலும் தலைவன் மனம் ஒரு சில மணித்துளிகளைக் கூட பல மணி நேரங்களாகக் கருதிக்கொள்கிறது. அதனால் பாகனை நோக்கித் தலைவன் சொல்கிறான்..
பாகனே! நம்மோடு வரும் வீரர்களால் நம் வேகத்துக்கு வரமுடியாது மேலும் அவர்கள் நீண்ட தொலைவு உடல்வருந்தி வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஆங்காங்கு தங்கி மெதுவாக வரட்டும் என்கிறான். இச்சூழலில் தலைவி மட்டுமே நிறைந்துள்ள தலைவனின் மனது தன்னையே நம்பி வந்த வீரகளின் நலனையும் காணவிழைவது தலைவனின் அன்புள்ளத்துக்குத் தக்க சான்றாக அமைகிறது.
தலைவனின் சுயநலம்.
தலைவியைக் காணவேண்டுமென்ற தலைவனின் ஆவலுக்கு முன்னே குதிரையின் வேகம் தோற்றுப் போகிறது. தலைவன் பாகனைப் பார்த்து...

“ பாக! இதுவரை நீ தீண்டாத கூரிய தாற்று முள்ளாலே குதிரையைத் தீண்டித் தேரைச் செலுத்துக“ என்று சொல்கிறான்.


இதில் தலைவியைக் காணவேண்டும் என்ற தலைவனின் சுயநலம் மிகுதியாக இருந்தாலும். “ இதுவரை தீண்டாத” என்னும் சொல்லாட்சி அதுவரை அவ்வுயிர் மீது அவன் கொண்டிருந்த அன்பையும். அந்தக் குதிரை வருந்தும் அளவிற்கு இனியும் தீண்டமாட்டான் என்ற உணர்வையும் இயம்புவதாகவுள்ளது.

அழகான காட்சி

கானக்கோழி உருக்கிய நெய்யில் பாலைச் சிதறினாற் போல, அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளையும் கடைகின்ற குரலையுடைய மிடற்றினையும் கொண்டது. அது பார்ப்பவர்களுக்கு விரும்பம் தரும் தன்மையது. அக்கோழி மழை பெய்து நீர் வடிந்த அகன்ற நெடிய காட்டில் ஈரம் காயாத மணலை நன்றாகப் பறித்து நாட்காலையில் இரையாகிய நாங்கூழ்ப் புழுவைக் கவரும். அப்புழுவைக் கொன்று தன் பெடைக்கு ஊட்டவேண்டிப் பெருமையுடன் அப்பெடையை நோக்கும். இக்காட்சியைக் காணும் தலைவன் அதனைப் பாகனுக்குக் காட்டி இதுபோல பொருளீட்டிய நானும் தலைவியைப் பெருமையுடன் நோக்க விரைந்து தேரைச் செலுத்துவாயக என்கிறான்.

பாடல் வழியே.

1.தலைவன் பொருள் தேடச் செல்லும்போதும், மீளும்போதும் அவனுடன் வீரர்கள் உடன் வருவார்கள் என்ற சங்ககால வழக்கம் அறியப்படுகிறது.
2.தன் வீரர்கள் உடல் வருந்தி இருக்கிறார்கள் அதனால் அவர்கள் ஓய்வெடுத்து மெல்ல வரட்டும் என்பதன் வழி தலைவனின் அன்புள்ளம் புலனாகிறது.
3. “ உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன” என்னும் கானக்கோழி பற்றிய உவமை புலவரின் கற்பனை நயத்துக்குத் தக்க சான்றாக உள்ளது.
4.“பேடை நோக்கிய பெருந்தகு நிலையே“ என்ற அடிகள் முயன்று பொருளீட்டுவதன் சிறப்பை உணர்த்துவதாகவும். பெற்றோர் தேடிய செல்வத்தைவிட தாம் முயன்று ஈட்டிய செல்வமே சிறந்தது என்ற அறத்தை இயம்புதாகவும் விளங்குகிறது.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

முடிச்சவிக்கி!முடிச்சவிக்கி என்ற சொல் திட்டுவதற்கு மட்டும் தான் பயன்படவேண்டுமா?

23ஆம் புலிக்கேசி என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி.....
புலவர்: மன்னா! மாமன்னா, நீ ஒரு மாமாமன்னா!
பூமாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி!

அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி!

தேடி வரும் வரியவர்க்கு மூடா...........!!
நெடுங்கதவு உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு!
எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு!

மண்ணோடு மண்ணாக்கு!
இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கையே!
என்று புகழ்வது போல இகழ்வார். காரணம் கேட்டால்.
1. மாமன்னன் என்றால் பெரிய மன்னன் மாமாமன்னன் என்றால் மன்னர்களுக்கு எல்லாம் பெரிய மன்னர் என்று கூறினேன்.
2. மாரி என்றால் மழை, முல்லைகளிடத்து பெய்யும் மழை என்றேன்.
3. அரசியலில் போடும் சூழ்ச்சியான முடுச்சுகளை அவிழ்ப்பவன் அன்று கூறினேன்.
4. அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும், பசி என்று ஏழைகளுக்கு அள்ளிக்கொடுகின்ற மூடா நெடுங்கதவு உன் கதவு என்றேன்.
5. எதிரிகளை புண்ணாக்கு என்று சொன்னேன்
6. அண்டம் என்றால் உலகம், காக்கை என்றால் காப்பாற்றுவது, உலகத்தை காப்பாற்றுபவன் என்று சொன்னேன்.
என்று விளக்கம் கூறுவார்.
இன்றைய சூழலில் முடிச்சவிக்கி என்றால் திருடன். முடிச்சில் கட்டிவைத்திருக்கும் பணத்தை அவிழ்ப்பவன் என்று பொருள் கொள்கிறோம்.

கடவுள் உண்டா?
இல்லையா?
என்ற கேள்விக்குப் பதில் தரும் சிந்திக்கவைக்கும் சென்கதை ஒன்று.


ஒரு நாள் புத்தர் காலை நேரத்தில் தம் சீடர்கள் முன்னால், கையில் சிறு துணியுடன் வந்தார்.
கைக்குட்டையைவிடப் சற்றுப் பெரிதாக இருந்தது அந்தத் துணி.
வந்து மேடையில் அமர்ந்து எதுவும் பேசாமல் அத்துணியில் முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.
சீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர்.
ஐந்து முடிச்சுகள் போட்டபின்னர் தலை நிமிர்ந்து பேசினார் புத்தர்..
“நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப்போகிறேன். அதற்குமுன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்போகிறேன்.“

1. இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி, முன்பிருந்த துணிதானா? இல்லை வேறு துணியா?

ஆனந்தன் எழுந்தான்..
பெருமானே.. ஒருவகையில் எல்லாம் ஒன்றுதான்.முன்பு இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றுதான். முடிச்சுகள் மட்டுமே வேறுபாடு. ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.அவ்வளவுதான்.
முன்பு இருந்த துணி சுதந்திரமானது. முடிச்சுகள் விழுந்ததும் இதன் சுதந்திரம் போய்விட்டது. இப்போதுள்ள துணி அடிமைப்பட்டுக் கிடக்கிறது. என்றான்.
அதற்குப் புத்தர்...
“ஆம் ஆனந்தா. நீ சொன்னது சரிதான். ஒரு வகையில் ஒரே துணிதான். மற்றொரு வகையில் வேறுபட்டுள்ளது. எல்லோரும் இயல்பில் கடவுள்தான்! முடிச்சுப் போட்டுக்கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர். அதனால் தனித்தனி உலகங்களாக மாறிப்போய்விடுகின்றர். சரி எனது அடுத்த கேள்வி...

2..இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்யவேண்டும்?
சாரிபுத்தன் எழுந்து...


“குருவே அவற்றை அவிழ்க்க நான் அருகில் வர அனுமதிக்கவேண்டும். முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்கவும் வழியில்லை. முடிச்சுப் போடப்பட்டதற்கான முறையை அறிந்தால் அவிழ்க்க எளிதாக இருக்கும். நெருங்கிப் பார்த்தறியாமல் எதுவும் செய்ய இயலாது. நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும். நினைவின்றி விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலானவை.சில நேரம் அவிழ்க்கவே முடியாமல் போய்விடும் என்றான்.
அதற்கு புத்தர்..

“சாரிபுத்தா, நீ மிகவும் சரியாகச் சொன்னாய். அதுதான் வாழ்க்கை. அதுதான் வாழ்க்கையின் சிக்கல்.“ என்றார் புத்தர்.

நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான். நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம்.

இப்போது சொல்லுங்கள் நாமெல்லாம் முடிச்சவிக்கிகளா? இல்லையா?

சனி, 6 ஆகஸ்ட், 2011

நாம் ஏன் நிலவை வணங்குவதில்லை?


நிலவு - வானம் எழுதிய கவிதை!
நிலவு - பாட்டி வாழும் வீடு!
நிலவு - கவிஞர்கள் விழும் பள்ளம்!
நிலவு – அழகு விளையும் நிலம்!
நிலவு – இரவு நேர ஒளிவிளக்கு!
நிலவு - மழலையின் குறுஞ் சிரிப்பு!
நிலவு – காதலியின் முதல் முத்தம்!
நிலவு – வானத்தின் ஒற்றைப் புதையல்!
நிலவு – நம்மோடு வரும் நிழல்!
நிலவு – இரவு நேரத்துப் பாடகி!
நிலவு – ஒளி வழங்கும் வள்ளல்!
நிலவு – பசித்தவன் கொண்ட ஏக்கம்!
நிலவு – ருசித்தவன் விடும் ஏப்பம்!
நிலவு – ஏழை சிந்தும் கண்ணீர்!
நிலவு – கிணற்றில் உள்ள தண்ணீர்!
நிலவு – உடலை வருடும் இளந்தென்றல்!
நிலவு – உள்ளத்தை மயக்கும் மெல்லிசை!
நிலவு – இசையின் கால இடைவெளி!
நிலவு – நாவில் சிந்திய தேன்துளி!
நிலவு – கடவுள் காட்டும் முகம்!
நிலவு – அழகான ஓவியத்தின் இதயம்!
நிலவு - சொர்க்கத்தின் முதல் வாசல்!
நிலவு – சிந்தனையைத் தூண்டும் போதிமரம்
நிலவு – குடிசையின் கூரையில் மலரும் நட்சத்திரமலர்!

பொதுவாக நான் கவிதை எழுதுவது கிடையாது. இயற்கையை எடுத்தியம்பும் போதெல்லாம் என் எழுத்துக்களுக்கு கவிச்சிறகு முளைத்துவிடுகிறது.
நிலவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மேற்சொன்ன காட்சிகள் நினைவுக்கு வரும்.
சங்கப்புலவர்களுள் ஒருவரான உறையூரைச் சேர்ந்த மருத்துவன் தாமோதரனார் அவர்களும் நிலவைப் பார்க்கிறார் இவருக்கு சோழ மன்னனின் வெண்கொற்றக் குடை நினைவுக்கு வருகிறதாம்.

இயல்பாக நிலவைத் தொழுவது கிடையாது!
நிலவு சோழனின் வெண்கொற்றக்குடை போல இருப்பதால் தொழப்படுகிறது!
என்கிறார் இந்தப் புலவர்.

கடலின் நடுவே படகினில் ஏற்றி வைத்த விளக்கினைப் போல செவ்வாயின் ஒளி திகழும் மாகமாகிய வான் உச்சியில் முழுமதி நின்று தோன்றும். அதனைச் சுரமாகிய அரிய பாலை வழியில் காட்டில் வாழும் மயிலைப் போன்றவளும் சில வளையல்களை அணிந்தவளுமான விறலியுடன் நானும் கண்டேன். கண்டதும் விரைவாகப் பலமுறை தொழுதோம்.
கடற்கரைக் கழி முகத்திலுள்ள நீரால் விளைந்த உப்பினைச் சுமந்து மலைநாடு நோக்கிச் செல்லும் ஆரக்கால் அமைந்த வண்டி. அதனைப் பள்ளத்தில் ஆழ்ந்துவிடாதபடி வலிமையுடையதும் சுமைதாங்குவதுமான காளை இழுத்துச் செல்லும். அந்த வலிய காளையைப் போன்றவன் எம் அரசன். அவன் வெற்றி முழக்கமிடும் முரசும் தப்பாத வாளும் உடையவனாகிய வளவன். அவனுடைய வெயிலை மறைக்கும் பொருட்டு ஏந்தியதும் அச்சம் தருமாறு விளங்குவதும், முத்துக்கள் பொருந்தியதுமான தலைமையான வெண்கொற்றக்குடையைப் போன்றது நிலவு என்பதால் நிலவைப் பலமுறைத் தொழுதோம்.

முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
உச்சி நின்ற வுவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
5.சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதன மல்லமோ பலவே கானற்
கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
10.வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே.
புறநானூறு 60
திணை: பாடாண் திணை துறை: குடை மங்கலம்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

பாடல் வழியே.


1.கடலிற் செல்லும் படகில் இரவுக் காலங்களில்
விளங்கேற்றுவர் என்ற அக்கால வழக்கமும், அவ்விளக்கு வானத்தில் இரவில் விளங்கும் செவ்வாய் மீனுக்கு உவமமானது என்ற கூற்றின் வழி பழந்தமிழர்களின் வானியல் அறிவும் புலனாகிறது.

2.இந்தப் பாடலைப் பாடிய புலவர் மருத்துவன் தாமோதரனார் சங்ககாலத்தில் மருத்துவத் தொழில் செய்தார் என்பதும் பெயர் வழியே அறியமுடிகிறது.
3. நிலவை இயல்பாக வணங்குவதில்லை! சோழனின் வெண்கொற்றக் குடையைப் போல இருப்பதால் வணங்குகிறோம் என்ற மன்னின் ஆட்சிச்சிறப்பு அழகாகச் சொல்லப்படுகிறது.

4.சுமை இழுக்கும் காளையைப் போலத் திறமையானவன்,வலிமையானவன் சோழன் என்னும் கருத்து உரைக்கப்படுகிறது.
5.வெண்கொற்றக் குடையின் சிறப்பை உரைக்கும் குடைமங்கலம் என்னும் புறத்துறை விளக்கப்படுகிறது.

“இன்றும் நிலவு இருக்கிறது அரசு இருக்கிறது ஆட்சியிருக்கிறது.
ஆனால் யாரும் நிலவை வணங்குவதில்லை!
ஏன் வெண்கொற்றக் குடை இல்லை என்பதாலா?
நல்லாட்சி இல்லை என்பதாலா?

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

முட்டாள் கழுதைகோபம் சில நேரங்களில் வரம்!
பல நேரங்களில் சாபம்!

கோபம் தீப்பெட்டியிலிருக்கும் தீக்குச்சி போல!
விளக்கையும் ஏற்றலாம்! வீட்டையும் கொளுத்தலாம்!

கோபம் வார்த்தைகளை விதைக்கிறது!
வெறுப்பை அறுவடை செய்கிறது!

கோபத்தை அடக்குபவனே பலமானவன்!

கோபம் பலவீனத்தின் அடையாளம்!

கோபம் மூளைக்கு ஓய்வு கொடுத்து!
நாவுக்கு மட்டும் வேலை கொடுக்கிறது!சினம், சீற்றம், கதம், வெகுளி என்றெல்லாம் அழைக்கப்படும் சினம் சிலர் வாழ்க்கையை சிக்கலுக்குரியதாக்கிவிடுகிறது.

கோபத்தில் பேசும் வார்த்தைகள் பொருளற்றவை என்று தெரிந்தாலும் கோபம் வந்துவிட்டால் அதன் கட்டுப்பாட்டிலேயே நாம் மாறிப்போய்விடுகிறோம்.

ஒருவர் நம்மைப் பார்த்து நாயே என்று திட்டினால் பதிலுக்கு அவரை ஏதாவது கழுதையே, குரங்கே என்று திட்டினால்தான் மனம் அடங்குகிறது.

நாம் நாயா? மனிதரா? என்று நாம் சிந்திக்கும் வாய்ப்பை நம் மனம் நமக்கு ஒரே ஒரு நொடிப் பொழுதுதான் தருகிறது. அந்த மணித்துளி சிந்தித்து நாம் நாயல்ல மனிதர் தான் என்பதை உணர்ந்தால் கோபம் நமக்கு அடிமையாகிறது. சிந்திக்கத் தவறும் போது கோபத்துக்கு நாம் அடிமையாகிவிடுகிறோம்.

முல்லாவின் கதை.

முல்லா சிறந்த அறிவாளி என்று ஊர் முழுக்க பேசி வந்தார்கள். அதைக் கேட்ட அறிவாளி ஒருவருக்கு முல்லா மீது பொறாமைத் தீ பற்றிக்கொண்டது. முல்லா ஒரு முட்டாள் என்று ஊர் மக்கள் பேசவேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் முல்லா என்ன சொன்னாலும் அதற்கு எதிர்வாதம் செய்வதே வழக்கமாகக் கொண்டுவந்தார்.

முல்லாவிடமே பேசி ஒருநாள் விவாதம் வைத்துக்கொள்ளலாம் நீ அறிவாளியா? நான் அறிவாளியா? என்பதை மக்கள் முன்பு விவாதித்து முடிவுக்கு வரலாமா என்று கேட்டார் அறிவாளி. அதற்கு முல்லாவும் இசைந்தார்.

குறிப்பிட்ட நாளன்று அறிவாளி வந்து மக்கள் முன்னிலையில் காத்திருந்தார். விவாதம் என்பதையே மறந்த முல்லாவும் வேறு ஏதோ வேலையாகப் போய்விட்டார்.

காத்திருந்து நொந்துபோன அறிவாளி முல்லாவின் வீட்டுக்கே போனார். அங்கு முல்லாவின் மனைவிதான் இருந்தார். தன் கோபம் குறையாத அறிவாளி முல்லாவின் வீட்டுச் சுவரில் “முட்டாள் கழுதை“ என்று பெரிய எழுத்தில் எழுதிவிட்டு முல்லாவைத் திட்டிய மன நிறைவுடன் திரும்பி வந்தார்.

வீடு திரும்பிய முல்லா மனைவியிடம் நடந்தவை கேட்டு உடனடியாக அறிவாளியின் வீட்டுக்குச் சென்றார். முல்லா வருவதைக் கண்ட அறிவாளியோ முல்லா சண்டைக்குத்தான் வருகிறார் என்று தானும் சண்டைக்குத் தயாரானார்.
முல்லா அந்த அறிவாளியிடம்....

ஐயா மன்னிக்கவேண்டும் நான் தங்களிடம் விவாதத்துக்கு வருவதாகச் சொன்னதை மறந்துவிட்டேன். நான் வீடு திரும்பியபோதுதான் தங்கள் பெயரை நீங்கள் என் வீட்டு்ச்சுவரில் எழுதியதைப் பார்த்துத்தான் நினைவு வந்தது.அதனால் தான் ஓடோடி வந்தேன் என்றாராம்.

அறிவாளிக்கு முல்லா சண்டைக்கு வந்திருக்கிறாரா? சமாதானத்துக்கு வந்திருக்கிறாரா? என்பதையே புரிந்துகொள்ள இயலவில்லை.

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கவிதை ஊர்தி. (இளம் கவிஞர்களுக்காக)


காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.

பழந்தமிழன் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல வடிவங்களைக் கையாண்டான்.

• பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் பெரும்பாலும் ஆசிரியப்பாவால் பாடப்பட்டவையாகும்.
• சிலப்பதிகாரம் நிலைமண்டில ஆசிரியத்தால் ஆனது.
• நீதி நூல்கள் வெண்பா யாப்பால் அமைந்தவை.
• சீவக சிந்தாமணி, கம்பராமாணயம் விருத்தப்பாவால் ஆனவை.
• தேவார, திவ்ய பிரபந்தங்கள் இசை விருத்தத்தால் ஆனவை.
• பிள்ளைத் தமிழ் கழிநெடிலடிச் சந்தவிருத்தத்தால் ஆனது.
• உலாவும்,தூதும் கலிவெண்பாவால் ஆனவை.
• பரணி தாழிசையால் ஆனது.
• கோவை நூல்கள் கட்டளைக் கலித்துறையால் ஆனவை.
• பிற்கால நாடகங்கள் கீர்த்தனையால் ஆனவை.


மரபுக் கவிதைகளில் பெயர் பெற்ற சான்றோர்கள்.

“வெண்பாவில் புகழேந்தி, பரணிக்கோர் செயங்கொண்டார்
ஒண்பாவிற்கு உயர்கம்பன், கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் வசைபாடக் காளமேகம்
பண்பாகப் பகர்சந்தம் படிக்காசால் ஒருவர் பகரொணாதே“

தனிப்பாடல்.

வெண்பா – புகழேந்தி (நளவெண்பா)
விருத்தம் – கம்பர் (கம்பராமாணம்)
சந்தம் – படிக்காசுப்புலவர் (சந்தப் பாடல்கள்)
கோவை, உலா, அந்தாதி – ஒட்டக்கூத்தன் (மூவருலா)
கலம்பகம் – இரட்டையர்கள்.

கருத்து – ஓட்டுநர்
கவிதை வடிவம் – ஊர்தி

ஊர்தி எந்த அளவுக்கு காலத்துக்கு ஏற்றதாய் இருக்கவேண்டுமோ அதுபோல
கருத்தும் இயைபுடையதாகவே இருத்தல் வேண்டும்.

இன்று...

பலரிடம் ஊர்தி இருக்கிறது
ஓட்டத் தெரியவில்லை!

ஓட்டத் தெரிந்தவர்களிடம்
ஊர்தியில்லை!

ஓட்டத்தெரிந்தவர்களிடம் உள்ள ஊர்தியே இன்றைய காலப் பாதையில் தொடர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

பழந்தமிழ்க் கவிஞர்கள் இதனை நன்கு உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

தன் கருத்துக்கு ஏற்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஒரு கவிதை காலம் கடந்தும் போற்றப்பட கருத்துடன் இயைபுடைய வடிவம் அடிப்படைத் தேவையாகும்.

ஓசை நயமிக்க கவிதைகள் காலவெள்ளத்தில் புறந்தள்ளப்பட்டுவிடும்!
கருத்தாழமிக்க கவிதைகளே கரைசேரும் என்பதையும் இளங்கவிஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்!


இளங்கவிஞர்களின் தன்மதி்ப்பீட்டுக்காகவும்.
தமிழ் யாப்பின் வளர்ச்சிப் படிநிலைகளை, நினைவுபடுத்தவும்,அறிமுகம் செய்யவுமே இவ்விடுகையைப் பதிவு செய்தேன்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நிலவுக்கு வந்த சோதனை!


பொதுவாக நம் உறவினர்களைக் காணவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகாரளிப்போம், நாளிதழ்களில், வானொலியில், தொலைக்காட்சியில், இணையத்தில் விளம்பரம் செய்வோம் அக்கம்பக்கத்திலிருப்பவரிடம் விசாரிப்போம்...

இவையெல்லாவற்றையும் கடந்து சங்ககாலத் தலைவி ஒருத்தி தன் தலைவனைக் காணவில்லை என்று நிலவிடம் தேடச் சொல்கிறாள்.
எல்லோரையும்விட உயரத்தில் நீ இருப்பதால் என் தலைவன் இருக்கும் இடம் உனக்கு நன்றாகத் தெரியும்.
அதனால் மரியாதையாக என் தலைவன் எங்கு இருக்கிறான் என்று என்னிடம் கூறிவிடு. உனக்குத் தெரிந்தும் என்னிடம் அதை மறைத்தால் நீயும் என்போல தேய்ந்து அழிந்து காணமல்ப் போய்விடுவாய் என்று மிரட்டுகிறாள்.

பாடல் இதுதான்..

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!
நற் கவின் இழந்த என்தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே?

நற்றிணை-196
வெள்ளைக்குடி நாகனார்.

(நெட்டிடை கழிந்து பொருள் வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள், திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.)

தலைவன் தம் காதல் வெளிப்பட்டபின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்றான். பிரிவை ஆற்றாத தலைவி நிலவை நோக்கி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

பல பகுதிகள் ஒன்றாக இணைந்தது போன்ற பல கதிர்களின் இடைஇடையே பாலை மொண்டு வைத்தது போலக் குளிர்ச்சியைக் கொண்ட வெண்மையான நிலா ஒளியையுடைய தேனை எடுக்க அமைந்த கண்ணேணியால் இடர்பட்டறியாத பல கலைகளும் நிறைவுற விளங்கும் நிலவே!

நீ சான்றாண்மையும் செம்மைக் குணங்களும் உடையயை ஆகலானும் உனக்குத் தெரியாது உறையும் உலகம் ஒன்றும் இல்லையாகலானும், எனக்குத் தெரியாதவாறு மறைந்து ஒழுகும் என்னுடைய காதலர் இருக்கும் இடத்தை எனக்கு நீ காட்டுவாயாக!

இவ்வாறு கேட்டும் நீ ஒன்றும் கூறாயாகலின் நிலவே!
நீ அறிந்த அளவில் சாட்சி கூறாது பொய் மேற்கொண்டனை! இச்செயல் புரிந்தமையால், நல்ல அழகிழந்த என்தோள் போல நீயும் வாட்டமுற்று நாள்தோறும் சிறுகிச் சிறுகிக் குறைந்து நீ மறைவாய்!
அவ்வாறு நீ ஆனால் உன்னால் காட்டவும் இயலுமா?

பாடல் வழியே!
1. பரிதிக் கதிர்களுக்கிடையே பால் ஊற்றி வைத்தது போலத் தோன்றும் பசுவெண்ணிலவு என்னும் உவமை புதுமையாகவுள்ளது.

2. களவுக்காலத்தில் தலைவன் தன்னைக் காணவருவதற்குத் நிலவு ஒளி தந்து துணை நின்றமை எண்ணிய தலைவி நிலவைப் போற்றினாள்.

3. எங்கோ இருக்கும் தன் காதலனைத் தேடிக் கண்டறிய நிலவின் துணையை நாடும் தலைவியின் மனநிலை காதலின் ஆழத்துக்கும், மனத்தடுமாற்றத்துக்கும் தக்க சான்றாகவுள்ளது.

4. உண்மை அறிந்தும் சொல்லாவிட்டால் அது பொய் சொன்னதற்கு இணையானது என்ற தலைவியின் கூற்று அக்கால நீதி வழங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.