வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

11வது உலகத்தமிழ் இணையமாநாட்டு நினைவுத்துளிகள்.

                                            


                    சிதம்பரத்தில் நடைபெற்ற 11வது உலகஇணையத்தமிழ் மாநாட்டில் இணையத்தில் தமிழ் இனி என்ற தலைப்பில் கட்டுரை
வாசித்தேன். பலநாடுகளிலிருந்தும், பலதுறைகளிலிருந்தும்  வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகள் யாவும் இணையத்தில் தமிழின் வளர்ச்சியை அடுத்த படிநிலைக்கு அழைத்துச்செல்வனவாக இருந்தன. மாநாட்டில், மு.இளங்கோவன் ஐயா,முனைவர் மணிகண்டன் ஐயாமுனைவர் சிதம்பரம் ஐயாமுனைவர் இறையரசன் ஐயாமுனைவர் கல்ப்பனா அம்மாபேராசிரியர் தமிழ்ப்பருதிஐயா உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்துகருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமை மனநிறைவைத் தந்தது. விஸ்வல் கம்யுனிக்கேசன் செல்வமுரளி அவர்களின் கண்டுபிடிப்புகளும்தமிழின் மீது அவருக்கிருந்த ஆர்வமும் பாராட்டுதலுக்குரியது. தமிழ் இணையப் பல்கலைகக்கழத்தின் குறுவட்டுகள்,  கலைச்சொல்லாக்கத்தொகுப்புகள் அனைத்தும் தமிழின்
வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளமுடியும்.ஊடகத்துறை சார்பாக பல தமிழ் மென்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எசாரெம் பல்கலைக்கழம் சார்பாக சந்திஇலக்கணம் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த மென்பொருள் சிறப்பாக இருந்தது. விழாவில்
துணைவேந்தர் பொன்னவைக்கோ ஐயா பேசும்போதுஇணையத்தி்ல்
தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சிப் படிநிலைகளைச் சொல்லி நாமெல்லாம் ஒற்றுமையாக செயல்பட்டால் மிகவிரைவில் தமிழ் உயர்ந்த நிலையை அடையும் என்றார். பார்வையாளர்கள் பலரும் வந்து  ஆர்வத்துடன் கலந்துகொண்டு இணையத்தில் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், கணித்தமிழ்ச்சங்கம், உத்தமம், செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகிய தமிழ் அமைப்புகளின் கூட்டுமுயற்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த மாநாடு இணையத்தில் தமிழ் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடையப் பெரிதும் துணைநிற்கும் என்பதை உணரமுடிந்தது.             

வியாழன், 27 டிசம்பர், 2012

மாலைப் பொழுதின் மயக்கத்திலே..மாலைப் பொழுதில் வானில் ஏற்படும் அழகான மாற்றங்களைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.

எத்தனை எத்தனை வண்ணங்கள்!
எத்தனை எத்தனை வடிவங்கள்!

கொஞ்சம் தலைநிமிர்ந்து பார்க்கக்கூட இந்த மனிதர்களுக்கு நேரமில்லையே என்று மனம் நொந்திருக்கிறேன்.

இலக்கியங்களில் இந்த மாலைப் பொழுதைப் பலகவிஞர்கள் பாடியிருக்கிறார்கள்.
        
  இளங்கோவடிகள் அந்திமாலைசிறப்புசெய்காதை என்றொரு காதையில் மாலைப் பொழுது பற்றி அழகாகப் பாடியிருப்பார்.

         மாலைப் பொழுதின் மயக்கத்திலேநான் கனவு கண்டேன் தோழி.....

        மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ......

   என்ற திரைப்படப் பாடல்கள் மறக்கமுடியாதவை..

மருத்துவர் ஊசிபோடுவதால் ஏற்படும் வலியைவிட அவர் ஊசிபோடப்போகிறார் என்ற நினைவு அதிகமான வலிதருவதாகும். அதுபோல நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களைவிட எதிர்பார்க்கும் துன்பங்களால் ஏற்படும் வலி பெரிது..

வள்ளுவரின் பொழுது கண்டு இரங்கல் என்னும் குறள்பாக்களை படித்தபோது என்ன நயம் என்று வியந்திருக்கிறேன்.

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
1221

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
1222

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.
1223

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
1224

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
1225

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
1226

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.
1227

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
1228

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
1229

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
1230
             
             பைங்கால் கொக்கின் புன்புறத் தன்ன
             குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
             வந்தன்று வாழியோ மாலை
             ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே.
                                          
குறுந்தொகை-122,  ஓரம் போகியார், நெய்தல் திணை தலைவி கூற்று
கொக்கின் சிறகுப்புறத்தைப் போன்ற ஆம்பல் மலர்களும் குவிந்தன.

இதோ மாலைக்காலமும் வந்துவிட்டது...

மாலையே நீ வாழ்வாயாக!

இந்த மாலைப்பொழுது, தான் மட்டும் தனியாக வந்தாலும் பரவாயில்லை 

கங்குல் (இரவு) என்னும் கொடுமையையும் உடன் 

அழைத்துவந்திருக்கிறதே நான் என்ன செய்வேன்..

என்று புலம்புகிறாள் தலைவி.
  •  இரவில் மலர்ந்து பகலில் கூம்பும் மலர் ஆம்பல் ஆகும். இந்த ஆம்பல், மலர்வதற்குரிய மாலைப்பொழுது இன்னும் வரவில்லை. அதற்குள் இந்த மாலைக்காலம் வந்துவிட்டது. என்ற தலைவியின் புலம்பலால் “மலர் மலர்வதையும் கூம்புவதையும் வைத்து சங்ககால மக்கள் காலத்தை அறிந்தார்கள்” என்ற வழக்கத்தை அறிந்துகொள்ளமுடிகிறது.
  • சிறிது காலம் நிற்கும் மாலைப் பொழுது நீண்டநேரம் நிற்கும் இரவைத் துணைக்கு அழைத்து வந்தது தலைவிக்குப் பெரிதும் கவலையளிப்பதாக உள்ளது.
  • பகலும் இரவும் இயல்பாக வந்துசெல்வது. ஆனால் இந்தத் தலைவியைப் போலத் தன் துணையைப் பிரிந்து வாடுவோருக்கோ, காலமும் நேரமும் வரும் போகாது.
  • இன்று தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த எதிர்பார்ப்பு, பரிதவிப்பு நம்மிடம் இருக்கிறதா? யாரையும் எதிர்பார்த்து வழிமீதுவிழி வைத்து நாம் காத்திருக்கிறோமா? அலைபேசியில் அழைத்து உடனுக்குடன் விவரத்தைத் தெரிந்துகொண்டு அடுத்தவேலையைப் பார்க்கப் போய்விடுகிறோமே..


அதனால் இந்த உணர்வுப்போராட்டங்களைப் படிக்கும்போதெல்லாம் மனம் இலக்கியநயம் பாராட்டுகிறது.


தொடர்புடைய இடுகைகள்..

          1. அந்தியிளங்கீரனார்   2. தூங்காத விழிகள் இரண்டு 

திங்கள், 24 டிசம்பர், 2012

தமிழ் பேசும் கணினிஇன்றைய சூழலில் உலகமே சிறு கிராமமாக மாறிவிட்டது. வெவ்வேறு நாடுகளில் வாழ்வோரும் இணையமேடையில் ஒன்றாகக் கூடித் தங்கள் கருத்துக்களை மொழிப்பாகுபாடின்றிப் பகிர்ந்து கொள்கிறார்கள். அறிவுக்கு மொழி தடையல்ல என்ற சிந்தனை மேலோங்கியுள்ளது. கணினியும் இணையமும் அடைந்துவரும் வளர்ச்சியை உற்றுநோக்கும்போது, எதிர்காலத்தில் உலகத்தின் ஒரே மொழி கணினியின் குறியீட்டு மொழியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அதனால் கணினியின் மொழியைத் தமிழர்கள் கற்றுக்கொள்வதும் தம்மொழியைக் கணினிக்குப் புரியவைப்பதும் தமிழர்களின் அடிப்படைக் கடமையாக அமைகிறது. இன்றைய வழக்கில் உள்ள மொழிமாற்றுத் தொழில்நுட்பங்கள் வழி எந்த மொழியை வேண்டுமானாலும் எந்தமொழியிலும் மாற்றிப் படிக்கமுடியும். அதனால் அவரவர் தாய்மொழியில் தம் கருத்துக்களை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. அந்த அடிப்படையில் இன்று நாம் பயன்படுத்தும் கணினிகள் எந்த அளவுக்குத் தமிழ்பேசுகின்றன என்பதை எடுத்துரைத்து நாம் செய்யவேண்டிய கடமைகளைக் கோடிட்டுக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது,
இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகள்
ஆங்கிலம், சீனம், சுபானியம், சப்பானியம், போர்த்துகீசியம், செர்மன், அராபிக், பிரெஞ்சு, இரசியன், கொரியன் ஆகிய மொழிகள் இன்றைய இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதல் பத்து மொழிகளாக உள்ளன. இந்தப் பட்டியல் நமக்கொரு உண்மையைப் புலப்படுத்திச் செல்கிறது. சிவப்பு என்பது அழகல்ல நிறம், ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி என்ற பொன்மொழியே நினைவுக்கு வருகிறது. கணினியின் மொழி ஆங்கிலம் மட்டுமல்ல, கணினியைப் புரிந்துகொண்ட மொழிகளையெல்லாம் கணினியும் புரிந்துகொள்ளும்என்பது நம் புரிதலாக இருத்தல்வேண்டும். கணினிக்கு 01 என்பதே தாய்மொழி என்பதால் எந்தமொழியையும் சொல்லும்விதத்தில் சொன்னால் கணினி புரிந்துகொள்ளும். நிரல்மொழிகளை அதற்குப்புரியும் விதத்தில் கட்டளையாகக்கொடுத்தால் நம் தமிழ்மொழியைக்கூடக் கணினி அழகாகப் பேசும் என்பது ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டிய நுட்பமாகும்.

இயங்குதளங்களும் தமிழும்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு தமிழ்எழுத்துருக்களைப் பயன்படுத்திவந்த காலத்தில் ஒருங்குறி என்னும் எழுத்துரு அதற்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளிவைப்பதாக அமைந்தது. இருந்தாலும் பல்வேறு இயங்குதளங்கள் தமிழ் எழுத்துருக்களை ஏற்காத நிலையே நீடித்தது. இப்போது விண்டோசு, லினெக்சு எனப் பல்வேறு இயங்குதளங்களும் தமிழ் எழுத்துருக்களை ஏற்றுக்கொள்கின்றன. கணினியின் இயங்குதளம் குறித்த அடிப்படை அறிவை இளம் தலைமுறையினர் உணர்ந்துகொள்ள வழிவகைசெய்யவேண்டும்.

தமிழ்த் தட்டச்சுப்பலகை
தமிழ் எழுத்துக்களை ஒருங்குறிமுறையில் கணினியில் என்.எச்.எம், அழகி போன்ற மென்பொருள்களின் வழி தட்டச்சுசெய்துகொண்டாலும். தட்டச்சுப்பலகைகளெல்லாம் இன்னும் ஆங்கில எழுத்துமுறையில் தான் உள்ளன.  தமிழ்த்தட்டச்சுப்பலகை வடிவமைக்கப்பட்டு தமிழர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். இன்று தமிழில் தட்டச்சு செய்வோர் தமிழ்த் தட்டச்சுமுறையிலோ, தமிங்கில முறையிலோ, ஆங்கிலமுறையிலோ தம் கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதற்கேற்ப தமிழ்த்தட்டச்சுப் பலகைகள் வெளியிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மென்பொருள்கள்
இயங்குதளம், உலவி, வேர்டு உள்ளிட்ட ஆபீசு தொகுப்புகள், அடாப் தொகுப்புகள் என நாம் பயன்படுத்தும் பல்வேறு மென்பொருள்களும் இப்போது தமிழ்மொழியை ஏற்றுக்கொள்கின்றன. இருந்தாலும் அதன் கட்டளைகள் யாவும் ஆங்கிலமொழியில் தான் உள்ளன. அதற்குப் பதில் தமிழ்மொழியே கட்டளை மொழியாக இருந்தால் தமிழின் பரவல் இன்னும் அதிகரிக்கும்.

தமிழ் இணையதளங்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் இணையதளங்களைக் காண்பதே அரிதாக இருந்தது. அவையும் தனித்தனி எழுத்துருக்களைப் பயன்படுத்திவந்தன. இப்போது நிறைய தமிழ் இணையதளங்களைக் காணமுடிகிறது. எல்லாம் ஒருங்குறி எழுத்துருமுறையைப் பயன்படுத்துவதால் அவ்வளவு எழுத்துருச்சிக்கல்கள் ஏற்படுவதில்லை. அரசு இணையதளங்கள், பல்கலைக்கழகங்கள் தொடங்கி, நாளிதழ்கள், வாரஇதழ்கள், எழுத்தாளர்கள் என தமிழர்களால் உருவாக்கப்படும் இணையப்பக்கங்கள் யாவும் முழுக்கமுழுக்க தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுவருகின்றன. தமிழிணையங்களில் தமிழின் செல்வாக்கை எடுத்தியம்ப தமிழ் இணையப்பல்கலைக்கழகம் (www.tamilvu.org) விக்கிப்பீடியா    (www.ta.wikipedia.org ) என்னும் இரு இணையதளங்களைச் சான்றாகத் தருகிறேன்.

வலைப்பதிவுகள்
பிளாக்கர், வேர்டுபிரசு உள்ளிட்ட இலவச வலைப்பதிவுகள் வழி இணையதளங்களுக்குப் போட்டியாக நிறைய வலைப்பதிவர்கள் உருவாகியிருக்கிறார்கள.; பல்வேறு துறைசார்ந்த இவர்கள் தம் கருத்துக்களை முடிந்தவரை தமிழிலேயே வெளிப்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய வலைப்பதிவர்கள் ஒவ்வொருவரும் எவ்விதமான தடையுமின்றித் தம் கருத்துக்களைத் தமிழில் வெளிப்படுத்துவதால் திரைபடத்துறையினர், தொடங்கி அரசியல்வாதிகள் வரை வலைப்பதிவுகளைத் திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமூகத் தளங்கள்
                இன்றைய மக்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் முகநூல்(www.facebook.com )   டுவைட்டர்(www.twitter.com கூகுள்பிளசு(google+), என பல்வேறு சமூகத்தளங்களிலும் தமிழ்ப்பற்றாளர்களால் இப்போது தமிழ் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. அதனால் அந்த தளங்களும் முடிந்தவரை தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் தருகின்றன. இத்தளங்களைப் பயன்படுத்தும் தமிழர்களில் பலரும் ஆங்கிலமொழியிலேயே தம் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். தமிழர்கள் யாவரும் தம் கருத்துக்களைத் தமிழிலேயே வெளியிட்டால் உலகமே திரும்பிப்பார்க்கக்கூடிய மாபெரும் மொழியாக தமிழ்மொழி திகழும் என்பதைத் தமிழர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.

எழுத்துரு மாற்றிகள்
                இத்தனை காலமாக பல்வேறு தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி வந்ததால் அந்தத் தகவல்களைத் தமிழ் ஒருங்குறி முறைக்கு மாற்றிக்கொள்வதற்காக பொங்குதமிழ் உள்ளிட்ட எழுத்துருமாற்றிகள் பெரிதும் பயன்படுவனவாக விளங்குகின்றன.

மொழி மாற்றிகள்
                தமிழ் எழுத்துருக்களை பிற மொழிகளுக்கு மாற்றவும், பிற மொழியிலுள்ள எழுத்துருக்களைத் தமிழ் எழுத்துருக்களாக மாற்றவும் கூகுள் மொழிமாற்றி உள்ளிட்ட நிறைய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. என்றாலும் தொழில்நுட்பமறிந்த தமிழர்களுக்கு அந்த அளவுக்கு இலக்கணம் தெரியவில்லை என்பதால் இன்னும் இவ்வாறு மொழிமாற்றும் போது நிறைய இலக்கணப் பிழைகள் ஏற்படுகின்றன. அதனால் தமிழ் இலக்கணமறிந்தவர்கள் தொழில்நுட்பமும் கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் இந்த மொழிமாற்றித் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழி தனிச்சிறப்புடையதாக அமையும்.

அகராதிகள்
                தமிழ்ச்சொற்களின் பொருள்களை அறிந்துகொள்ள இன்று நிறைய இணைய அகராதிகள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. அண்ணா பல்கலை அகராதி, கூகுள் அகராதி, பாப்ரிசிசு அகராதி, கதிர்வேலு அகராதி, மெக்ஆல்பின் அகராதி, தமிழ்டிக் டாட்காம், தமிழ்லெக்சிகன் ஆகியன குறிப்பிடத்தக்க அகராதிகளாகும். சான்றாக விக்சனரி  என்னும் இணையஅகராதி 2,58,606 சொற்களைக் கொண்டு விளங்குகிறது.

சொல் திருத்திகள்  
                ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சுசெய்யும்போது எழுத்துக்கூட்டலைச் சரிபார்த்துப் பரிந்துரைசெய்யும் மேம்பட்ட சொல்திருத்திகள் ஆங்கிலமொழியில் நிறைய உண்டு. அதுபோல இப்போது தமிழ்ச் சொல்திருத்திகளையும் உருவாக்கிவருகின்றனர். அவையெல்லாம் சோதனைமுயற்சியிலேயே இருக்கின்றன. இந்தசொல் திருத்திகள் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கு வரும்போது தமிழின் பரவல் அதிகரிக்கும்.
மின்னூல்கள்
                நிறைய தமிழ்மின்னூல்கள் இணையவெளியில் கிடைக்கின்றன. இபுக் ரீடர்போன்ற தனித்துவமான கண்டுபிடிப்புகளும் சாதாரணமான அலைபேசிகளும் கூட இப்போதெல்லாம் மின்னூல்களை வாசிக்கப்பயன்படுகின்றன. அதனால் எதிர்காலத்தில் இணையவெளியில் நிறைய தமிழ்மின்னூலகங்கள் உருவாகலாம். அதன்வழியே தமிழ்நூல்கள் எல்லாம் கிடைக்க வழிவகைஏற்படலாம். அதனால் நாமும் நம்மாலானவரை நம் துறைசார்ந்த தமிழ்நூல்களை மின்னூலாக்கி இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றாக சில மின்னூலகங்கள் (http://www.noolaham.org/,  http://www.chennailibrary.com/ , http://www.projectmadurai.org/ )

ஒலிப் புத்தகங்கள்
                இப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துப் படிப்பதற்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை. அதனால் (ஆடியோ புக்) ஒலிப்புத்தகங்கள் நிறையவே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. தமிழ் இலக்கியங்கள் யாவும் எம்பி3 வடிவில் பதிவு செய்யப்பட்டு குறுவட்டுகளாகவோ, இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியுடனோ கிடைக்கின்றன. இதுவரை சங்கஇலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்கள் கூட ஒலிப்புத்தகங்களாகக் கிடைக்கின்றன. சான்றாக http://tamilaudiobook.blogspot.in/ , http://www.itsdiff.com/ , http://www.tamilvu.org/library/libindex.htm  ஆகிய இணையதளங்களைக் குறிப்பிடலாம்.
தமிழ்க் காணொளிகள்
                யுடியுப்  உள்ளிட்ட காணொளித்தளங்களில் இப்போதெல்லாம் அதிகமாக தமிழ்ப்பதிவுகளைக் காணமுடிகிறது. தமிழ்ச்சொற்பொழிவுகளையும், இலக்கிய மேடைகளையும் இப்போதெல்லாம் காணொளிகளாகப் பதிவேற்றும் பணியையும் தமிழர்கள் செய்துவருகிறார்கள்.

அலைபேசிகளில் தமிழ்
பெரிய பெரிய கணினி நிறுவனங்களும் இப்போதெல்லாம் கணினி தயாரிப்புகளை ஓரம்கட்டிவைத்துவிட்டு டேப்ளட் பிசி, நோட்புக் பிசி, சுமார்ட் போன்உள்ளிட்ட அலைபேசி தயாரிப்புகளில் இறங்கிவிட்டன. எதிர்காலத்தில் இவைதான் இணையவசதியோடு தகவல்தொடர்புக்கு அதிகமாகப் பயன்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது. ஒருகாலத்தில் அலைபேசிகளில் தமிழ்க்குறுந்தகவல் அனுப்புவதே வியப்புக்குரியதாக இருந்தது. இன்று அலைபேசிகளில் தமிழ்ப்புத்தகங்களைப் படிக்கமுடிகிறது. தமிழ்வழி இணையதளங்களைப் பார்க்கமுடிகிறது.


எதிர்காலத்தில் தமிழ்
                வானில் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தை அதன் ஓட்டுநர், நாம்தான் உயரத்துக்கு வந்துவிட்டோமே பறந்ததுபோதும் என்று ஓட்டுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? அதுபோலத்தான் இன்று நம் தமிழின் நிலையும் இருக்கிறது. நாம் இன்று இணையத்தில் அடைந்த வளர்ச்சியே போதும் என்று இருந்தால் நாம் எதிர்காலத்தில் அடையாளம் இழந்தவர்களாகப் போய்விடுவோம். இன்றைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்புடையதாக நம் தமிழ் மொழியிருக்கிறது என்று நாம் பெருமிதம்கொள்ளும் நிலையில் இவற்றில் பெரும்பகுதி நாம்கடன்பெறும் தொழில்நுட்பங்களாகவே இருக்கிறது என்பதையும் நாம் மறுக்கமுடியாது.
கலைச்சொல்லாக்கம்
                எல்லா அறிவியல்துறைகளையும் தமிழ்மொழியிலேயே படிக்கவேண்டும். அப்போதுதான் புரிதலும், கண்டுபிடிப்புகளும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே கலைச்சொல்லாக்கங்களை உருவாக்கிவருகிறோம். பிறநாட்டார் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழில் பெயரிடுவதில் காட்டும் ஆர்வத்தை நாம் கலைச்சொல் உருவாக்கத்தில் காட்டவேண்டும். கணினித்துறையில் அதிகமான கலைச்சொற்களை உருவாக்கி மேற்கண்ட எல்லாத் தொழில்நுட்பங்களையும் தமிழிலேயே வடிவமைக்கும் அளவுக்கு நாம் இன்னும் வளரவேண்டும்.

தமிழ் எழுத்துக்களை ஒலியாகக் கேட்க
                இதுவரை நாம் பார்த்த தொழில்நுட்பக்கூறுகள் யாவும் கணினியில் தமிழ் எந்த அளவுக்கு ஏற்புடைத்தாகவுள்ளது என்றும், தமிழ் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்தியம்புவதாக அமைந்தது. இந்த வளர்ச்சியின் மணிமுடியாக ஒரு தொழில்நுட்பம் இப்போது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/  என்ற இணையதளத்திற்குச் சென்று தமிழ் ஒருங்குறி முறையிலான எழுத்துக்களை நகல் (காப்பி) எடுத்து ஒட்டினால் எம்பி3 என்னும் வேவ் ஒலிக்கோப்பாக அந்த எழுத்துக்களைப் பதிவிறக்கிக் கேட்டுமகிழமுடியும். இந்தநுட்பம் ஆங்கிலமொழியில் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்டாலும் இப்போது தமிழுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது பெருமிதம்கொள்ளத்தக்கதாக அமைகிறது.

தமிழர்களின் சிந்தனைக்காக.
நம் தமிழ்மொழி தொன்மையானது, தொடர்ச்சியான இலக்கிய, இலக்கண மரபுடையது என்றாலும் அறிவியல்துறையில் கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கிறது. சான்றாக, 134 கோடி மக்கள்தொகை கொண்ட சீனர்களில் 38 கோடிபேர் இணையத்தைப் பயன்;படுத்துகின்றனர். 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் 6 கோடிப் பேர்தான் உள்ளனர். அதனால் நம் வீட்டில் இருக்கவேண்டியது தொலைக்காட்சியா? கணினியா? என்பதை ஒவ்வொரு தமிழர்களும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
எதிர்காலத்தில் ஒரு  தொழிற்சாலையில் இருவர் மட்டும்தான் வேலைபார்ப்பார்கள். ஒருவர் காவல்காரர், இன்னொன்று நாய். காவலருக்கு வேலை அங்கு இருக்கும் கணினிகளெல்லாம் ஒழுங்காக வேலைசெய்கின்றனவா? என்று பார்ப்பது. அவர் உள்ளே சென்று எந்தக் கணினியையும் தொடாமல் இருக்கிறாரா? என்று பார்ப்பது நாயின் வேலை என்றொரு கணிப்பு உள்ளது. வள்ளுவர் இன்று இருந்திருந்தால்..             
                             ‘சுழன்றும் கணினி பின்னது உலகம் அதனால்
            உழந்தும் கணினியே தலை
                            
                             ‘கணினி கற்றுவாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
            தொழுது அவர்பின்செல் பவர்
என்று பாடியிருப்பார்.

முடிவுரை
·         இணையத்தில் ஆதிக்கம் செலுத்தும் மொழிகள் வரிசையில் இப்போது தமிழ் இல்லை என்றாலும் அதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள மொழியாகத் தமிழ் விளங்குகிறது.
·         இப்போதுள்ள இயங்குதளங்கள் தமிழ் மொழியை ஏற்றுக்கொள்கின்றன. இருந்தாலும் இயங்குதளங்களுக்கான துறையில் நாம் இன்னும் குழந்தை நிலையில்தான் இருக்கிறோம்.
·         தமிழ்த்தட்டச்சுப் பலகைகள் இதுவரை இல்லை என்பதால் அதனைத் தயாரித்துப் பரவலாக்கவேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம்.
·         முழுக்க முழுக்க தமிழ்க்கட்டளைகளைக் கொண்ட உலவி, ஆபிசு தொகுப்பு, அடாப்தொகுப்பு ஆகியன தமிழின் பரவலை அதிகரிக்கும். அவற்றை உருவாக்குவது குறித்து கணினிபடித்த தமிழர்கள் சிந்திக்கவேண்டும்.
·         தமிழ் இணையதளங்களைப் பார்க்கும்போது அவை ஆங்கில இணையதளங்களுக்கு இணையாக இருக்கின்றன. இது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.
·         தமிழ் வலைப்பதிவுகள் இணையதளங்களுக்கு இணையான மிகப்பெரிய ஆற்றலாக உருவெடுத்துள்ளன.
·         முகநூல், டுவைட்டர், கூகுள் பிளசு, ஆர்குட் உள்ளிட்ட சமூகத்தளங்களில் தமிழர்களின் பங்களிப்பு வரவேற்புக்குரியதாக உள்ளது. தமிழர்கள் எல்லோரும் தம் கருத்துக்களை தமிழ்மொழியிலேயே வெளியிட்டால் உலகநாடுகளெல்லாம் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு தமிழின் ஆதிக்கம் இருக்கும்.
·         எழுத்துருமாற்றிகளும், மொழிமாற்றிகளும், அகராதிகளும் இணையப்பரப்பில் தமிழின் ஆளுமைகளை வெளிப்படுத்துவனவாக விளங்குகின்றன.
·         தமிழ்ச்சொல் திருத்திகளைத் தமிழுலகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.
·         இணையத்தில் கிடைக்கும் தமிழ் மின்னூல்கள் தமிழரிடம் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
·         தமிழ் ஒலிப்புத்தகங்களும், தமிழ்க்காணொளிகளும் தமிழின் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சிக்குச் சான்றாகின்றன.
·         அலைபேசிகள், டேப்ளட் பிசி, சுமார்ட் பிசி ஆகிய நவீன தொழில்நுட்பக் கருவிகளுக்கு ஏற்ப தமிழ் தன்னைத் தகவமைத்துக்கொண்டு வருகிறது.
·         நாள்தோறும் பெருகிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்கவேண்டிய பெரிய பணி தமிழர்களுக்கு உள்ளது.
·         நிகழ்கால ஆண்ட்ராய்டு, ஈதர் நெட், மேகக்கணினி, சிக்த் சென்சு தொழில்நுட்பங்களை உள்வாங்கி எதிர்காலத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தமிழ்மொழியைத் தகவமைக்கவேண்டிய பணி தமிழர்களுக்கு உள்ளது.
·         இன்றைய கணினிகள் தமிழ்மொழியைப் புரிந்துகொள்வதோடு, தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்து அவற்றை ஒலிக்கோப்புகளாகப் பதிவிறக்கிக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளன. இது சீனமொழியோடு ஒப்பிடும்போது குறைந்தபட்ச வளர்ச்சிதான். அதனால் காலத்தின்; தேவையை உணர்ந்து தமிழர்கள் யாவரும் கணினியைத் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும். இன்றைய சூழலில்,

கணினிகள்  தமிழ்பேசும் நிலையில்தான் இருக்கின்றன.
ஆனால் பல தமிழர்களுக்குத்தான் கணினியிடம் 
தமிழ்பேசத் தெரியவில்லை.
தான் அறிவாளி என எண்ணிக்கொள்ளும்போது ஒரு அறிவாளி முட்டாளாகிறான்
தான் முட்டாள் என்பதை உணரும்போது முட்டாள் அறிவாளியாகிறான்.
கணினியில், இணையத்தில் நாம் அறிவாளியா? முட்டாளா?
என்று தன்மதிப்பீடு செய்துகொள்வோம்..

நம்மால் முடிந்தவரை கணினியிலும், இணையத்தில் நம் கருத்துக்களை வெளியிடுவோம்.

(ஆர் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட எனது கட்டுரை)

சனி, 22 டிசம்பர், 2012

எனது தமிழாசிரியர்கள்


ஞாலமுதல்மொழி, திராவிடமொழிகளுக்குத் தாய்மொழி, பழமையான,  சிறந்த இலக்கியச்செல்வங்களைச் சங்ககாலம் முதலாக இன்றுவரை தொடர்ச்சியாகக் கொண்ட மொழி என்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தமிழ்மொழி என் தாய்மொழி என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழில் எழுதுவதையும், பேசுவதையும் பெருமையாகக் கருதுகிறேன்.

“ஒரு நல்ல ஆசிரியரால் நல்ல மாணவனை உருவாக்கமுடியும்  நல்ல மாணவனால் நல்ல ஆசிரியராக உயரமுடியும்“ என்றொரு பொன்மொழி உண்டு.

நான் இன்று  தமிழ் விரிவுரையாளராக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் நல்ல மாணவனாக இருந்தேன் என்று நினைக்கவில்லை, எனக்கமைந்த ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்களாக அமைந்தார்கள் என்பதே காரணம். எனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் அவ்வப்போது எண்ணிப்பார்ப்பதுண்டு. 

என்னைக் கவர்ந்த மனதில் நிலைத்த எனது தமிழாசிரியர்கள் பலரையும் மொத்தமாக எண்ணிப்பாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த தமிழ்ச்செடி இணையத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு எனது கடந்தகாலத்துக்கு உங்களையும் அழைத்துச்  செல்கிறேன்.

பள்ளித் தமிழாசிரியர்கள்

சிவகங்கை மாவட்டத்தில், கல்லல் என்னும் கிராமத்தில் முருகப்பா மேனிலைப் பள்ளியில்தான் நான் 6ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை படித்தேன். பலநாட்கள் மரத்தடியில்தான் வகுப்புகள் நடக்கும். வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாடம் நடத்துவது என்பது அவர்களுக்குப் பெரிய சாதனையாக இருக்கும். அங்கு எனது தந்தை (மு.இராசேந்திரன்) தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். 

அவர் அடிக்கடி சொல்வார் “மேயப் போகும் மாடு கொம்பில் புல்லைக் கட்டிக்கொண்டு போகாது” என்று. இந்த பழமொழி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. 

எதையும், யாரையும் எதிர்பார்க்காது வேர்களைப்போல, நீரைப் போல இடத்துக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப என்னை வடிவமைத்துக்கொள்ள இந்த சிந்தனை பெரிதும் உதவியது. அவர் நன்றாக மரபுக்கவிதை இயற்றுவார். எங்கள் ஊரில் ஏதும் திருமண விழா என்றால் அவரிடம் வந்து பலரும் வாழ்த்துப் பாடல்களை எழுதிச்செல்வார்கள். அதனால் என் தந்தையைப் பலரும் புலவர் என்றுதான் அழைப்பார்கள். அவரது இந்த ஆற்றல் எனக்கு மரபுக்கவிதை எழுதவேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தியது.

6,7 ஆம் வகுப்புகளில் திருமதி. பாண்டியம்மாள் அம்மா அவர்கள் எனக்குத் தமிழ் எடுத்தார். அவர்களின் குரல்வளம் இப்போது நினைத்துபார்த்தாலும் காதுகளில் கேட்பதுபோல இருக்கிறது. கிராமிய மொழிநடையில் அவர் சொன்ன கதைகள், திருக்குறள் கருத்துக்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன.

8,9,10 ஆம் வகுப்புகளில் திருமதி. நாகம்மை அம்மா அவர்கள் தமிழ் எடுத்தார். அவர்கள் அதிராத குரலில் தமிழை நயமாகப் பேசுவார். அவர்கள் சொன்ன நன்னெறிக் கதைகள் என்னை நிறைய சிந்திக்கவைத்தன.

11,12 ஆம் வகுப்புகளில் திரு குப்பால் அவர்கள் தமிழ் வகுப்பெடுத்தார். அவர் எங்கள் பள்ளியின் தலைமையாசிரியராகவும் இருந்தார். சங்க இலக்கியத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் இவரே. சங்ககாலக் கதைகள் பல சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவர் தமிழ் பேசியவிதம், பாடம் நடத்திய முறை தமிழ் மீது எனக்கு பற்று ஏற்படக் காரணமாக அமைந்தது.

கல்லூரித் தமிழாசிரியர்கள்

காரைக்குடி இராமசாமித் தமிழ்க்கல்லூரியில் நான் (பிலிட்) இளங்கலை தமிழ் பயின்ற காலத்தில் எனக்கு வந்த தமிழாசிரியர்கள் தமிழ்மொழியின் பல்வேறுதுறைகளை எனக்கு அறிமுகம் செய்துவைத்தனர். அதைக் கல்லூரி என்று யாரும்சொல்லமாட்டார்கள். வீடுபோலத்தான். அதன் தோற்றமும் அப்படித்தான் இருக்கும். ஐயா, அம்மா என்றுதான் ஆசிரியர்களை அழைப்போம். அவர்களும் மாணவர்களைத் தம் பிள்ளைகள் போலத்தான் நடத்துவார்கள்.

முதல்வர் திரு முருகசாமி ஐயா அவர்கள் எனக்கு படைப்பிலக்கியம் நடத்தினார். முதலாம் ஆண்டில் நடந்த கவிதைப் போட்டியில் கல்லூரியில் முதலிடம் பெற்றேன். அதற்குக் காரணம் அவர் பாடம் எடுத்த முறைதான். இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகளுக்கு அவர் என்னை அனுப்பிவைத்திருக்கிறார், என்னை அழைத்தும் சென்றிருக்கிறார். 

அவர் ஒவ்வொரு முறையும் சொல்வார். நாம் எந்தப்போட்டியில் கலந்துகொண்டாலும் நாம் வெற்றியடைகிறோமா? தோல்வியடைகிறோமா? என்று சிந்திக்கக்கூடாது. அதில் கிடைக்கும் அனுபவம் தான் மிகவும் பெரிது என்பார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை இன்று நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. முதல்வர் அவர்கள், பாரதி, பாரதிதாசன் கவிதைகளையெல்லாம் அழகான இசையில் தன்னை மறந்து பாடுவார். குதித்துக் குதித்து அவர் பாடம் எடுத்த முறை இன்று நினைத்துப் பார்த்தாலும் கண்களில் நிழலாடுகிறது.

திரு.சுப்பிரமணியன் ஐயா அவர்கள் எங்களுக்குப் புறப்பொருள் வெண்பாமாலை பாடம் எடுத்தார். பழந்தமிழரின் புறவாழ்க்கை குறித்த பெருமிதம் அவர் நடத்தியமுறையால் எனக்கு ஏற்பட்டது. கல்லூரி விரிவுரையாளர் இப்படித்தான் பாடம் நடத்தவேண்டும் என்ற ஈர்ப்பு இவர் பாடம் நடத்திய முறையால் எனக்குள் முதலில் ஏற்பட்டது.

திரு.தியாகராசன் ஐயா அவர்கள் முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியம் எடுத்தமை என்னால் மறக்கவேமுடியாது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அவர் எடுத்துரைத்த முறை தனித்துவமானது. எந்த ஒரு இலக்கியமாக இருந்தாலும் மிக எளிதாகப் புரியவைத்துவிடும் அவரது அனுபவம் பாராட்டுதலுக்குரியது.எங்களைக் கல்லூரி நாட்களில் அதிகமாகச் சிரிக்கவைத்தவர் ஐயா அவர்கள்தான்.

திருமதி.வள்ளியம்மை அம்மா அவர்கள் கல்வெட்டுத்துறையில் பெரிதும் ஈடுபாட்டுடன் இருந்தார். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கல்வெட்டுகளையும் கண்டறிந்து எங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணத்தை அவர் நடத்திய முறை இலக்கணம் பயிலும்போதெல்லாம் நினைவுக்கு வரும்.

திருமதி.மெய்யம்மை அம்மா அவர்கள் தண்டியலங்காரம் எடுத்தார். தம் கருத்தை எடுத்துரைக்க அவர் வெளிப்படுத்தும் உடலசைவு மொழிகள் மாணவர்களிடம் அவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தன.

திருமதி. புவனேஸ்வரி அம்மா அவர்கள் தமிழக வரலாறும் பண்பாடும் பாடம் எடுத்தார்கள். மாணவர்களிடம் அவர் அன்புடன் பழகுவார்கள். ஒருநாள் மெய்யெழுத்துகளைப் பற்றிப் பேசும்போது மாணவர்களை கரும்பலகையில் வந்து எழுதச் சொன்னார்கள். பலமாணவர்கள் சில எழுத்துக்களைத் தவறாக எழுதினர். என்னை அழைத்தபோது நான் சென்று தவறின்றி விரைவாகக் கரும்பலகையில் எழுதினேன். அப்போது அம்மா சொன்னார்கள். குணசீலன் நீங்க நிச்சயமாக விரிவுரையாளராகிவிடுவீர்கள் அது நீங்கள் எழுதும் முறையிலேயே தெரிகிறது. என்றார் அப்போது அந்த வார்த்தைகள் என்னைப் பெரிதும் ஊக்குவிப்பதாக அமைந்தன.

திரு.ஞானசேகரன் அவர்கள் வானம் வசப்படும் என்னும் பெரிய புதினத்தை எடுத்தார். அவர் அடிக்கடி கையை மேலே தூக்கி உணர்ச்சிபொங்க பாடம் எடுப்பார். அவர் எப்போது பெரிய சத்தமிட்டுப் பேசுவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர் வகுப்பில் மட்டும் யாருமே தூங்கியதில்லை. உதவும் மனப்பான்மை மிகவும் உடையவராவர். அவரின் நடை, உடை, செயல்பாடுகள் என ஒவ்வொன்றிலும் தனக்கென தனித்தன்மையுடையவராக இவர் இருந்தார். பிறமொழி கலவாது அவர் பேசிய தமிழ் அன்றைய காலத்தில் எனக்கு வியப்பாக இருந்தது.

பல்கலைக்கழகத் தமிழாசிரியர்கள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், நான் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகளை முடித்தேன். அங்குதான் சங்க இலக்கியம் குறித்த பல்வேறு பரிணாமங்களை நான் பெற்றேன்.
அழகப்பா பல்கலைக்கழகம். காரைக்குடி

முனைவர் தெ.சொக்கலிங்கம் அவர்கள் எங்களுக்கு இலக்கண வகுப்புக்கு வந்து தொல்காப்பியம் எடுத்தார். இலக்கணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக நடத்தமுடியுமா என்று இவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

முனைவர் இரா.பாலசுப்பிரமணியன் அவர்கள் காலை முதல் வகுப்புக்கு எப்போது வந்தாலும் முதலில் பாடம் எடுக்கமாட்டார். முதல் பத்து நிமிடங்களுக்கு ஏதாவது ஒரு சிந்தனை குறித்துப் பகிர்ந்துகொள்வார். மாணவர்களிடமே கேட்பார். இன்று எதுதொடர்பாகப் பார்க்கலாம் என்று, அந்தப் பத்துநிமிடம் பாடம் தொடர்பாகவோ, வாழ்வியல் தொடர்பாகவோ, சமூகம் தொடர்பாகவே பேசுவார். பிறகுதான் பாடத்துக்குச் செல்வார். இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்ததாகும். இன்றும் எனது வகுப்புகளில் இந்த முறையை நான் மாணவர்களின் வரவேற்போடு பின்பற்றிவருகிறேன்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் சு.இராசாராம் அவர்கள் எனது தாய்மாமனாவார். நான் தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கும், நெட்தேர்வில் தேர்வு பெற்றமைக்கும் இவரே எனக்கு வழிகாட்டியாக அமைந்தார். இவர் எனது வாழ்வியல் நெறியாளராவார். இவர் பாடம் எடுக்கும்போது பாடப்பொருள் தொடர்பான பல்வேறு சான்றாதாரங்களையும் தருவார். கரும்பலகையை முழுமையாகப் பயன்படுத்துவார். சங்கஇலக்கியத்தில் இவர் செய்த ஆய்வே எனக்கு நாமும் இவரைப் போல சங்கஇலக்கியத்தில் ஆய்வு செய்யவேண்டும் என்ற எண்ணத்தைத் தந்தது. இவரது ஆய்வுக்கட்டுரைகளும், பாடம் நடத்தும் முறையும், எனக்குப் பெரிய முன்மாதிரிகளாக அமைந்தன.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள் எனது எம்பில் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு நெறியாளராவார். சங்க இலக்கியம் குறித்தும், ஆய்வியல் அணுகுமுறை, நெறிமுறை, திட்பநுட்பமாக கட்டுரை வழங்குதல் குறித்தும் பல்வேறு நுட்பங்களையும் இவரே எனக்குப் புரியவைத்தார். 

பெரிய இலக்கண நூற்பாக்கள் பலவற்றையும் இவர் மனப்பாடமாகச் சொல்வார். இவர் எனக்குப் புறத்திணையியல் எடுத்தபோது நானும் இவரைப் போல நூற்பாக்களை மனப்பாடமாகச் சொல்லவேண்டும் என்று முயன்று பல நூற்பாக்களை மனப்பாடம் செய்தமை நினைவுக்கு வந்துசெல்கிறது.

இதுவரை சொன்ன தமிழாசிரியர் பெருமக்கள் யாவும் ஒவ்வொரு காலங்களிலும் என்னைச் செதுக்கியவர்களாவர். இவர்களின் மாணவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் நான் என்றும் பெருமிதம் கொள்வதுண்டு. 

எனது மாணவர் இவர் என்று அவர்கள் என்னைச் சொல்லும் அளவுக்கு என்னை உயர்த்திக்கொள்ள நாளும் முயன்றுவருகிறேன். 
கோடி கொடுத்து குடியிருந்த வீடும் கல்விக்காக கொடுத்த கொடை வள்ளல் திரு. அழகப்பச் செட்டியார். காரைக்குடி. 

ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகச் சொல்வதென்றால் எனக்கு நாளொன்று போதாது. இருந்தாலும் யாரையும் விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரைப் பற்றியும் சில நினைவுகளை மட்டும் பதிவுசெய்துள்ளேன்.

என் தமிழாசிரியர் பெருமக்களுக்கு இந்தக் கட்டுரை வழியாக என் பணிவான வணக்கங்களையும், அன்பையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி! நன்றி! நன்றி!

(எனது தமிழாசிரியர்கள் பற்றிய கட்டுரை வழியே என்னைக் கடந்த 

காலத்துக்கு அழைத்துச்சென்ற தமிழ்ச்செடி இணையதளத்துக்கு எனது 

மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்