வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

நன்றி சொல்லும் முறை

பேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும்.
தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர், ஒலிஒளி அமைப்பு நல்கியோர், நிழற்படக் கலைஞர் என யாரையும் விட்டுவிடாமல் எல்லோருக்கும் நன்றி சொல்லவேண்டும். சுருக்கமாக அதேநேரம் கடனுக்குச் சொல்லாமல் அனைவரும் ஏற்குமாறு நன்றி சொல்லவேண்டும். அவையோர் உணவுக்காகவோ, தன் வீட்டுக்குச் செல்லவோ ஆவலோடு இருக்கும்போது, நீட்டி முழக்கி நன்றி உரை சொல்லிக்கொண்டிருந்தால் அவையோர் நன்றிசொல்பவரைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவர். அதனால் மிகவும் சுருக்கமாக குறைந்தது இரண்டு நிமிடங்களிலும் அதிகமானால் ஐந்து நிமிடங்களிலும் நன்றி சொல்வது நலமுடையதாகும்.

கவித்துவமாக நன்றி நவில்தல்
தத்துவமாக நன்றி சொல்லுதல்
நகைச்சுவையாக நன்றி சொல்லுதல்
புள்ளிவிவரங்களுடன் நன்றி சொல்லுதல்
இயல்பாக நன்றி சொல்லுதல்

என நன்றி நவில்தல் அவரவர் திறனுக்கேற்ப வேறுபடும்.

நன்றி நன்றி நன்றி என ஒரே நன்றியைத் திரும்பத் திரும்பச் சொல்வதைவிட அந்த நன்றியை கொஞ்சம் மாற்றி,

நனி நன்றி
உளமார்ந்த நன்றி
மனம் நிறைந்த நன்றி
நெஞ்சார்ந்த நன்றி
நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்
நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
நன்றி மறவேன்
நன்றியை நினைத்துப் பார்க்கிறேன்
நன்றிகளை எண்ணிப் பார்க்கிறேன்
செவிகளும், மனமும் நிறைந்திருக்கிறது
நேரம் பயனுள்ளதாக இருந்தது

எனக் கூட்டத்தின் தன்மைக்கேற்ப நன்றியுரை சொல்லும்போது பேச்சின் தொடர்புடைய திருக்குறளையோ, பொன்மொழியோ, சான்றோர் கருத்துக்களையோ, சிறுகதைகளையோ மிகவும் சுருக்கமாக, நயமாகச் சொல்லிப் பாராட்டி, நன்றிகளை உதடுகளால் மொழியாமல், உள்ளத்தால் உச்சரித்தால், பார்வையாளர்கள் சில மணித்துளிகளைப் பெரிதாக நினைக்காமல் காத்திருப்பார்கள் என்பது நன்றி நவில்வோர் கருத்தில் கொள்ளவேண்டிய சிந்தனையாகும்.

நன்றி நவில்தலை இதற்கு மேல் எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பொன்னான நேரத்தைக் கருத்தில் கொண்டு வந்து வாசித்தமைக்கு முத்தான நன்றிகளைத் தங்களுக்கு உரித்தாக்கிக்கொள்கிறேன்.


சனி, 28 செப்டம்பர், 2013

காலத்தின் முடிவு

ர.பாரதி
மூன்றாமாண்டு வணிகவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

எத்தனை வேதனைகள்
என்னைப் பெற்றெடுக்கும்போது பெற்றிருப்பாள்…
எத்தனை பொய்கள்
என்னைச் சாப்பிட வைக்க சொல்லியிருப்பாள்…
எத்தனை தாலாட்டுகள்
என்னைத் தூங்கவைக்கப் பாடியிருப்பாள்…
எத்தனை துயரங்கள்
என் படிப்பிற்காக அனுபவித்திருப்பாள்…
எத்தனை சாபங்கள்
என்னை ஏசியியோருக்கு விட்டிருப்பாள்…
எத்தனை போரட்டங்கள்…
என்னை நன்றாக வளர்க்கக் கடந்திருப்பாள்…
எத்தனை அறிவுரைகள்
என்னை நல்வழிப்படுத்த சொல்லியிருப்பாள்…
எத்தனை வேண்டுதல்கள்
என்னை மகிழ்ச்சிக்காக் கடவுளிடம் வேண்டியிருப்பாள்..

இத்தனையும் எனக்காகப் பட்டவள்
இத்தனையும் எனக்காகச் சொன்னவள்
இத்தனையும் எனக்காகக் கேட்டவள்

இன்றோ….

ஆதரவற்று முதியோர் இல்லத்தில்
நிம்மதியின்றி இருக்கிறாள்..

இதுதான் காலத்தின் முடிவாயின்
நாளை என் பாசப்பிள்ளையால்
என் நிலையும் இதுதானோ..??


வியாழன், 26 செப்டம்பர், 2013

சிந்திக்கவைக்கும் குடியரசுத் தலைவரின் உரை

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றியபோது,
கடந்த 6ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவில் இருந்த தட்சிசீலம்,  நாளந்தாவிக்கிரமசீலாவல்லபிசோமபுரா பல்கலைக்கழகங்களில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வந்து பயின்றனர். அப்புகழை நாம் மீண்டும் பெற வேண்டும். ஆசிரியர் பணி அனைத்துப் பணிகளிலும் சிறந்ததாகும். மாணவர்கள் சந்தேகங்கள் எழுப்பினால் அதற்குப் பதிலளிப்பது மிகுந்த மகிழ்வைத் தரும். மாணவர்களுக்கு ஆசானாகவும்வழிகாட்டியாகவும்ஆசிரியர்கள் திகழ வேண்டும். தாங்கள் பெற்ற அறிவை மாணவர்களுக்குப் போதிப்பதில் கடமைபொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி தரமானக் கல்வியை பெறுவதும் உரிமையாகும்.

இந்தியாவில் தற்போது 659 பல்கலைக்கழங்கள், 33,000 கல்லூரிகளில் 1.8 கோடி பேர் பயின்று வருகின்றனர். 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் இது 2.9 கோடியாக உயர வாய்ப்புள்ளது. இந்தியாவை முன்னேற்றுவதில் மாணவமாணவியருக்கு பெரும் பங்கு உள்ளது. ஒழுக்கம்கடமை உணர்வுகடின உழைப்புஅர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எந்த கடினமான சூழலையையும் சமாளிக்கலாம் என்றார் முகர்ஜி.

குடியரசுத் தலைவரின் உரை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

ஆர் - பன்னாட்டுக் கருத்தரங்கம்.திங்கள், 23 செப்டம்பர், 2013

பழந்தமிழரின் இயற்கை ஆளுமை

                                                                                தமிழரின் இயற்கை ஆளுமைக் கூறுகளை பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்  அவர்கள் தொடர்ந்து பழந்தமிழ்ச் சான்றுகளின் வழியாகக் காட்சிக் கோப்புகளாகத் தொடர்ந்து விளக்கிவருகிறார். இன்றைய இனமணியில்,


ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

நாம் ஏமாறும் வரை....

நேற்று கலைஞர் காப்பீட்டுத் திட்டம்!
இன்று அம்மா குடிநீர்!
நாளை?

இந்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது மனதில் கவிஞர் காசியானந்தன் அவர்களின் முகவரி என்ற குறுங்கதைதான் நினைவுக்கு வருகிறது.
வியாழன், 19 செப்டம்பர், 2013

இவர்களின் கல்வியறிவு இவ்வளவுதான்!

தொல்காப்பியர் அகத்தியரிடம் கல்விபயின்ற பன்னிரு மாணவர்களுள் ஒருவராவார். திருவள்ளுவர் எங்கு படித்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இன்று தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் ஆய்வு செய்து முனைவர்பட்டம் வாங்கிய பலர் தம் பெயருக்கு முன்னால் முனைவர் என இட்டுக்கொள்கிறார்கள். அப்படியென்றால் தொல்காப்பியருக்கும், திருவள்ளுவருக்கும் எத்தனை முனைவர் பட்டம் கொடுக்கலாம் என்பது எனது நீண்ட நாள் ஐயப்பாடு. இன்றைய பல்கலைக்கழகங்களே ஆய்வுசெய்யும் இவர்களை எந்தக் கல்விச்சாலை உருவாக்கியது? எந்தக் கல்விமுறை உருவாக்கியது? என்பதை நாம் சிந்திக்கவேண்டும்!  இவர்கள் வாழ்ந்த காலம் குருகுலக் கல்வி இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அன்றைய காலம் தொடங்கி இன்றுவரை கல்வியில் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன. இருந்தாலும் தொல்காப்பியர், திருவள்ளுவர் போல எத்தனைபேரை இந்தக் கல்விமுறை உருவாக்கியிருக்கிறது? என்றே எண்ணத் தோன்றுகிறது.

  இந்தச்சூழலில் பள்ளிக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காமல் பெரும்புகழ்பெற்றவர்களின் கல்விப் பின்புலத்தைப் பதிவு செய்யவிரும்புகிறேன்.
  காமராசர் ஆறாம் வகுப்பு வரையே படித்தார்  பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் திண்ணைப் பள்ளியில் ஒருவருடம்  மட்டுமே படித்தார்.

  கண்ணதாசன் எட்டாம் வகுப்புவரை படித்தார்.

  எம்ஜிஆர் மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார்.

  தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படித்தது மூன்று மாதங்கள் மட்டுமே.
  மொகலாய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் அக்பர்,
  அவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது என்றாலும், அவர் 24000 நூல்களைக் கொண்ட நூலகத்தை அமைத்து மற்றவர்கள் படிக்கவேண்டும் என்பதை அக்பர் ஊக்குவித்தார்.


  உலகம் போற்றும் கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீசுக்கு எழுதப்படிக்கத் தெரியாது.

                                                            அன்பின் உறவுகளே இவர்களைப்போல உலகத்தைப் படித்த மேதைகளைத் தொடர்ந்து பதிவு செய்யவிரும்புகிறேன். இதன் நோக்கம் இன்றைய கல்விமுறையக் குறைசொல்தல்ல. இன்றைய கல்விமுறையை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே. அதனால் இவர்களைப் போல புகழ்பெற்றவர்களின் கல்விப் பின்புலத்தை மறுமொழியில் தெரிவித்தால் பெரிதும் மகிழ்வேன்.

  ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

  வாழைப்பழ வாய்ப்பாடு

  தமிழின் பெருமையை, தமிழரின் மேன்மையை ஓவியங்களின் வழி எடுத்தியம்பும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்களின் படைப்பு இது..  அறிஞர் அண்ணா பற்றிய அரிய தகவல்கள்

  அரசியல், இலக்கியம், சொற்பொழிவு, நாடகம், பகுத்தறிவு எனப் பல துறைகளில் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் அறிஞர் அண்ணா ஆவார்.

  • இன்றைய சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கெல்லாம் அறிஞர் அண்ணா ஓரு வாழ்க்கைப் பாடம்.
  • ஓரிருநூல்களை எழுதிவிட்டு விருதுக்காகத் தவமிருக்கும் இன்றைய இலக்கியவாதிகளுக்கு அறிஞர் அண்ணா ஓர் நூலகம்.
  • நகைச்சுவை உணர்வோடு, சிந்திக்கத்தூண்டும், நயமிக்க சொற்பொழிவு செய்வதில் இவர் ஒரு வல்லவர்.
  • வாழ்க்கையை, சமூக நிலையை நாடகமாக்குவதில் சிறந்த நாடகவியலார்.
  • இவரது சிந்தனைகள் கடவுள் நம்பிக்கையாளரையும் ஒரு மணித்துளியாவது சிந்திக்கச்செய்யும் ஆற்றல்வாய்ந்தன.

  அறிஞர் அண்ணா பற்றிய அரியபல தகவல்களைத் தன்னகத்தே கொண்ட இணையதளம்   சனி, 14 செப்டம்பர், 2013

  மெக்காலே எழுதிய கடிதம்


  "நான் பாரதத்தின் எல்லா பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளேன். இந்த நாட்டில் ஒருவர் கூட பிச்சைக்காரர் இல்லை. ஒருவர் கூட திருடர் இல்லை. அந்த அளவு செல்வ வளமும் உயர்ந்த பண்புகளும் உள்ள மனிதர்களையும் நான் இதுவரை கண்டதில்லை.
  இந்த தேசத்தின் முதுகெலும்பை முறிக்காமல் இந்த தேசத்தை வெற்றி கொள்ள முடியாது. இந்த தேசத்தின் முதுகெலும்பாக இருப்பது இதன் ஆன்மிகமும், பண்பாட்டுப் பாரம்பரியமும். எனவே இவர்களது பாரம்பரிய கல்வி முறையை நாம் மாற்ற வேண்டும். அதன் காரணமாக அன்னிய நாட்டைச் சேர்ந்ததும் ஆங்கிலேயருடையதும் எதுவாக இருந்தாலும் அதுவே நன்றென்றும் அதுவே நமக்குச் சொந்தமானதைவிடச் சிறந்தது என்றும் அவன் நினைப்பான். அவன் தனது சுயதன்மையை, இயல்பை, சுயபண்பாட்டை இழப்பான். நாம் விரும்பியபடி அவர்கள் மாறுபவர்கள். தேசம் உண்மையில் நம் ஆதிக்கத்துக்கு வரும்''

  இந்தக் கடிதம் குறித்த மாற்றுக்கருத்துக்கள் பல இருப்பதை நண்பர்கள் தந்த மறுமொழிகளின் வழியாக அறிந்துகொண்டேன். நன்றி நண்பர்களே.

  மெக்காலே அப்படிச் சொல்லவில்லை. இது சித்தரிக்கப்பட்ட கடிதம் என்று சிலர் கருத்துசொல்கிறார்கள். சரி! அப்படியென்றால் இன்று நம் தாய்மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மட்டுமே பின்தொடரும் அவலநிலை நமக்கு எப்படி வந்தது?
   இந்தக் கல்விமுறையை நாமே தேர்ந்தெடுத்துக்கொண்டோமா?

  நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக்கொட்டிக்கொண்டோமா?

  புரியாத புதிராகவே இந்த கருத்துவேறுபாடு இருந்தாலும், 
  இனியாவது தாய்மொழியின் தேவையையும், 
  அதன் பெருமையையும் தமிழர்கள் உணர்ந்தால் நலம்.

  வியாழன், 12 செப்டம்பர், 2013

  வரலாற்றில் இன்று

  தகவல்தொடர்பில் நாம் இன்று இவ்வளவு வளர்ந்துவிட்டசூழலில், வரலாற்றில் இன்றையநாள் குறிப்பிடத்தக்கதாகும். போரில்பெற்ற வெற்றிச் செய்தியை மக்களுக்குச் சொல்வதற்காக இருபத்தாறு மைல்களை மூன்று மணிநேரத்தில் ஓடிய வீரன்  பீடிப்பிடஸ் வெற்றிச்செய்தியைச் சொன்னவுடன் வீரமரணம் அடைந்தான் என்கிறது வரலாறு.

  மாரத்தான் போர் (Battle of Marathon) கிமு 490 ஆம் ஆண்டில் கிரேக்கம் மீதான பாரசீகர்களின் முற்றுகையின் முதல் கட்டத்தில் இடம்பெற்றது. இப்போர் ஏத்தன்சு நகர மக்களுக்கும் பாரசீகர்களுக்கும் இடையே இடம்பெற்றது.

  அரசே! அயோனாவிலுள்ள கிரேக்கர்கள் மக்களாட்சி வேண்டி கலகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது தாய்வழி தேசமான ஏதென்ஸ், எரித்திரியா போன்ற கிரேக்க நகரங்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றனசெய்தி வந்தது பெர்சிய பேரரசர் முதலாம் டேரியசுக்கு. கிரேக்கர்களை இப்படியே விடக்கூடாது. உடனே எதென்ஸ் மீது படையெடுத்து அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்’- டேரியஸ் ஆணையிட்டார். தரைவழியே சென்று தாக்கவேண்டுமானால் தாமதமாகிவிடும், தவிரவும் மலைப்பகுதிகளில் கிரேக்கர்களை வெல்வதும் அவ்வளவு எளிதல்ல. எனவே கடல் வழியாக சென்று திடீர் தக்குதல் நடத்த முடிவு செய்த பெர்சியா, அறுநூறு கப்பல்களில் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களோடு கிளம்பியது.
  முதலில் எரித்திரியா தீவை முற்றுகையிட்டது. ஆறு நாள்கள் முற்றுகையை தாக்குப்பிடித்த எரித்திரியா, துரோகிகளின் சதியால் பெர்சியாவிடம் வீழ்ந்தது. கோட்டையும், வீடுகளும், ஆலயங்களும் அழித்து தீக்கரையாக்கப்பட்டன, மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இனி ஏதென்ஸை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் எதென்ஸ் நகரத்திலிருந்து சுமார் இருபத்தாறு மைல் தொலைவிலிருந்த மாரத்தானில் தரை இறங்கியது பெர்சியப்படை. பெர்சியர்களின் வலிமையான குதிரைப்படையுடன் தரைப்படையும் சிறந்த தளபதியான டேடிஸ் தலைமையில் அணிவகுத்து போருக்குத் தயாராக நின்றது.
  மற்றொரு கிரேக்க நகர அரசான ஸ்பார்ட்டாவிற்கு உதவி கோரி மிக வேகமாக ஓடக்கூடிய வீரரான பீடிப்பிடஸ்(Pheidippides) என்பவனை ஏதென்ஸ் அனுப்பியிருந்தது. மலைகள் சூழப்பட்ட மாரத்தான் போர்களத்திலிருந்து ஏதென்ஸுக்கு செல்லும் வழிகளை அடைத்துக்கொண்டு பெர்சியர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தது ஏதென்ஸ் படை. வெறும் 10,000 காலாட்படைவீரர்களைக் கொண்டிருந்த ஏதென்ஸ் படைகளுக்கு ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கும் ஒரு தளபதி என்ற வகையில் பத்து தளபதிகள் இருந்தனர்.அனைத்துப்படைகளுக்கும் கால்லிமாக்கஸ் தலைமை வகித்தார். அவர்களுக்குத் துணையாக 1000 பிளேத்தீனிய வீரர்களும் களத்தில் இருந்தனர்.
  ஐந்து நாட்கள் இரண்டுப்படைகளும் சண்டையிடாமலே இருந்தன. ஸ்பார்ட்டாவிடமிருந்து உதவி வருவதற்கு தாமதமாகும் என்ற செய்தி வந்து சேர்ந்தது. அன்றைக்கு, கி.மு.490 செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் மில்ட்டியாடிஸ் தான் கிரேக்கப்படைகளுக்குத் தலைமைத்தாங்கினார். அற்புதமான தாக்குதல் வியூகத்தை வகுத்த பின் வெற்றி அல்லது வீரமரணம்என்ற முடிவுடன் தாக்குதலை ஆரம்பித்த கிரேக்கப்படை யாரும் கற்பனை செய்திராத வகையில் மாபெரும் பெர்சியப்படையை சிதறடித்தது. 6000க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த பெர்சியப்படை பின்வாங்கி கடல் வழியாக ஏதென்ஸ் நகரை தாக்க முடிவு செய்தது. மாரத்தான் போர்களத்தில் தாங்கள் பெற்ற மாபெரும் வெற்றிச்செய்தியை சொல்லவும், ஏதென்ஸ் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யவும் ஓட்டவீரரான பீடிபிடஸை தவிர யாரால் முடியும். தனது தாய்நாட்டின் வெற்றிசெய்தியை மக்களுக்கு சொல்ல மூன்று மணி நேரத்தில் இருபத்தாறு மைல்களை ஓடிக்கடந்த பீடிப்பிடஸ் செய்தியை சொன்ன மறுகணம் வீரமரணமடைந்து வரலாற்றில் நிலைபெற்றார். இந்த நிகழ்ச்சியின் நினைவாகவே மாரத்தான் ஒட்டம்என்னும் நெடுந்தூர ஓட்டம் பெயரிடப்பட்டிருக்கிறது. பின் ஏதென்ஸ் படை நகரை அடைந்தது. பயந்து போன பெர்சியர்கள் தரையிறங்காமலே பின் வாங்கி சென்றனர். இந்த போர்கள வெற்றியானது அதற்கு பின் வந்த கிரேக்க நகர அரசுகள் மக்களாட்சி வழியில் நடைபெற அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. வரலாற்றில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் போரான முதல் மாரத்தான் போர்ஐரோப்பிய நாகரீக வளர்ர்சிக்கு வித்திட்டது என்றால் மிகையில்லை.

  காலந்தோறும் ஏற்பட்ட தகவல்தொடர்பு மாற்றத்தை,
  தகவல்தொடர்பு அடர்த்தி என்ற இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
  இன்று சி.வை.தாமோதரம்பிள்ளை பிறந்தநாள்.

   

                        தமிழ்நூல்களைப் பதிப்பித்தவர் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தமித்தாத்தா உ.வே.சாமிநாதையர் தான். அவரைப்போலவே தமிழ்நூல்கள் பலவற்றையும் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களையும் தமிழுலகம் என்றும் மறக்காது. இவர்  
   (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901, சிறுப்பிட்டி,யாழ்ப்பாணம்) பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த பெருமைக்குரியவராவார். 
                       இவர், வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர்.இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றறிந்தார். தனது பன்னிரண்டாவது வயதில் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கிய வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து, அறிவியல் துறையிலும் பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1852  இல் அயலூரான கோப்பாயில் போதனாசக்தி வித்தியாசாலையில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்தார். இவரது புதல்வர் அழகசுந்தரமும் தமிழாய்வாளராவார்.

  பதிப்புத்துறை முன்னோடி

  1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் அவருக்கிருந்த ஆர்வம் வெளிப்பட்டதுமல்லாமல், 'தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி' எனும் பெருமையையும் பெற்றார்.

  இதழாசிரியர்

  இவர், யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை (தற்போதைய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) அதிபராக இருந்த பீட்டர் பேர்சிவல்பாதிரியார் தமிழ்நாட்டில் நடத்திவந்த தினவர்த்தமானி 
  பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1853 ஆம் ஆண்டுசென்னை வந்தார். அத்துடன் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார்.

  பட்டப்படிப்பு

  1858 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட முதலாவது கலைமாணி (பி.ஏ.) பட்டத்துக்கான தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினார். பின்பு தமிழகம் கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியரானார். அதன்பின் அரசாங்க வரவுசெலவுக் கணக்குச் சாலையில் கணக்காய்வாளரானார். அத்துடன் விசாரணைக் கர்த்தர் பதவியும் கிடைத்தது.

  ராவ்பகதூர் விருது

  தொடர்ந்து சட்டம் பயின்ற அவர், 1871 இல் 'பி.எல்.' தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் 'ராவ் பகதூர்' பட்டமளித்துப் பாராட்டினர்.

  தொல்காப்பியப் பொருளதிகாரம் பதிப்பித்தல்

  பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரம் அர்ப்பணிப்புடனான அவரது கடும் உழைப்பினால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சிட்டு தமிழ் நாட்டின் பட்டினங்கள் தோறும் அந்நூலை அவர் பவனி வரச் செய்த போது, அதனை மெச்சி வியந்து பாராட்டாதோர் எவரும் இருந்ததில்லை. அவரது அப்பணி ஒன்றுக்காகவே அவர் பிறந்த ஈழத்துக்கு திராவிடம் அன்று நன்றி கூறிப் பாராட்டும் நல்கியிருந்தது.

  மறைவு

      தமது அறுபத்தி ஒன்பதாம் வயதில், 1-1-1901 இல் சென்னையில் புரசைவாக்கம் பகுதியில் தாமோதரம்பிள்ளை மறைந்தார்.
  தாமோதரனார் பண்டைக்கால இலக்கியங்கள் பலவற்றைப் பதிப்பித்தார். அவற்றில் சில:
  ·                    நீதிநெறி விளக்கம் (1953)
  ·                    தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரை (1868)
  ·                    வீரசோழியம் (1881)
  ·                    திருத்தணிகைப் புராணம்
  ·                    இறையனார் அகப்பொருள்
  ·                    தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை
  ·                    கலித்தொகை
  ·                    இலக்கண விளக்கம்
  ·                    சூளாமணி
  ·                    தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை

  இயற்றிய நூல்கள்

  ·                    கட்டளைக் கலித்துறை
  ·                    சைவ மகத்துவம்
  ·                    வசன சூளாமணி
  ·                    நட்சத்திர மாலை
  ·                    ஆறாம் வாசகப் புத்தகம்
  ·                    ஏழாம் வாசகப் புத்தகம்
  ·                    ஆதியாகம கீர்த்தனம்
  ·                    விவிலிய விரோதம்
  ·                    காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)

  தமிழ்ப் பதிப்புத்துறையில் பெரும்பங்காற்றிய சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாளன்று அவர்களின் பணியை எண்ணிப்பார்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.. (தரவுகளுக்கு நன்றி தமிழ்விக்கிப்பீடியா)