வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

சங்ககால இசைமேதை.சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்த இசையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். ஆடு, மாடு மேய்க்கும் இடையன் கூட இசையில் தேர்ந்தவனாக இருந்தான்..


ஒற்றை ஆடையுடன் பசுக்களை மேய்க்கும் இடையன் நுண்புகை கமழும்படி தீக்கோலைக் கையால் கடைந்து தீ உண்டாக்கி அக்கொள்ளியால், மூங்கில் குழலில் துளை செய்து அப்புல்லாங்குழலை ஊதி இனிய ஓசையை எழுப்புகிறான்.அக்குழலில் பாலைப்பண் இசைக்கின்றனான்..
இதனை,

ஒன்றுஅமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம்நுண் அவரிபுகை கமழ, கைம்முயன்று
ஞெலிகோல் கொண்ட பெருவிறல் நெகிழிச்
செந்தீத்தொட்ட கருந்துளைக் குழலின்
இன்தீம் பாலை முனையின்,
பெரும்பாணாற்றுப்படை-175-180.

என்ற அடிகள் விளக்கும். பின் அவ்விசை அலுத்தபோது, அதைவிடுத்து, குமிழங்கோட்டை வளைத்துக் கட்டி மரல் கயிற்றை நரம்பாகக் கொண்டு யாழை உருவாக்கி, அவ்யாழிலே குறிஞ்சிப்பண்ணை விரலால் தெறித்து எழுப்புகிறான். அவ்விசையைக் கேட்ட வண்டுகள், அவ்விசையைத் தம் இனத்தின் ஒலியாகக் கருதிச் செவி கொடுத்துக் கேட்கும். என்பதை,


”குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்காற் பறவை கிளைசெத்து ஓர்க்கும்.“

பெரும்பாணாற்றுப்படை-180-183.
இவ்வடிகள் இயம்புகின்றன.

மேற்கூறி சான்றுகளின் வழி குழல், யாழ் ஆகிய இசைக்கருவிகளின் தோற்றக் கூறுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

◊ மூங்கிலில் வண்டு செய்த துளையில் காற்று நுழைந்ததால் எழுந்த இசையை நுகர்ந்த சங்ககால மக்கள் செயற்கையாகத் துளையிட்டு இசைக்கருவியாக குழலை உருவாக்கித் தாம் விரும்பிய போதெல்லாம் இசைத்து மகிழ்ந்தனர் என்பதற்குச் சான்றாக இவ்வடிகள் விளங்குகின்றன.

◊ வேட்டையாடலின் போது எய்த வில்லின் ஒலி இசைநயத்துடன் இருந்தமை உணர்ந்த அக்கால மக்கள் மேலும் நரம்புகளைக் கட்டி இசைத்து மகிழ்நதனர். இதுவே நரம்பிசைக் கருவியான வில்யாழின் தோற்றம் என்பதை அறியமுடிகிறது.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கனவில் பேசிய நனவிலிமனம்.விருப்பத்தின் விளைவே கனவு! அச்சத்தின் விளைவே கனவு! என அறிவியல் அடிப்படையில் உளவியல் அடிப்படையில் கனவு பற்றி பல்வேறு செய்திகளை அறிந்தாலும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் ஆசை எனக்கும் தோன்றுவதுண்டு.

விட்டுவிட்டுத் தோன்றும் கனவு, முழுமையாகத் தோன்றும் கனவு என்று இக்கனவுகள் கண்விழித்ததும் மறந்துபோய்விடும். எவ்வளவு ஆழமாகச் சிந்தித்தாலும் நினைவுக்கு வருவதில்லை. இன்னும் கேட்டால் உளவியலாளர்கள் விழித்ததும் நினைவுக்கு வராதது மட்டுமே ஆழ்மனதில் தோன்றும் கனவுகள் என்றும். நினைவுக்கு வந்தால் அக்கனவு மேல்மட்ட மனதில் தோன்றும் கற்பனையே என்று விளக்கம் தருவார்கள்.

நனவிலி மனம்..

நேற்று இரவு நல்ல தூக்கத்தில் இருந்தது போது உண்மையிலேயே நடப்பது போல ஒரு கனவு வந்தது….

என் நண்பனுடைய எதிரி ஒருவன் இறந்துவிட்டான். இறந்தாலும் ஆவியாக வந்த என் நண்பனுடைய தூக்கத்தைக் கூட கலைத்துவிட்டு துன்பப்படுத்திக் கொண்டிருந்தான்.

என் நண்பனின் சராசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டு எப்போதும் ஒருவித பயத்துடனே காணப்பட்டான். அடிக்கடி என்னிடம் வந்து இது குறித்து புலம்பினான்.

ஒருநாள் இரவு பேருந்துக்காக நானும் என் நண்பனும் காத்திருந்தோம் என் நண்பன் மனநிலை பாதிக்கப்பட்டவன் போல……………

டேய் நான் என்னடா பாவம் செஞ்சேன்?
என்னை ஏன்டா ஆவியா வந்து இப்படி படுத்தற?
முதலில் கனவில் மட்டும் வந்து தூக்கத்த பறிச்ச?
அடுத்து உருவமாக வந்து பயமுறுத்துன!
அடுத்து எல்லா ஒலியிலும் உன் குரல் மட்டும் கேட்டது!
இப்ப நேரிலே வந்துட்டியே!
என்னை விட்டுடுடா…………..
நீ உயிரோட இருக்கும் போது கூட உனக்கு இவ்வளவு சக்தி இல்லையே செத்துப் போய் ஆவியானா இவ்வளவு சக்தி கிடைக்குமா….

என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

இதைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்த என் நனவிலி மனது என்னிடம் சொல்லியது..


நான் ஆரம்பத்திலே உன் நண்பன்ட சொன்னேன்..

எல்லாம் உன் மனக் கற்பனை தான்..
பேய், பூதம், ஆவின்னெல்லாம் எதுவுமே இல்லை…….
அவனோட கற்பனைக்கு நீரூற்றி வளர்த்தது போல அதையே சிந்தித்துக்கொண்டிருந்தான். இப்போது மனநிலை பாதிக்கப்பட்டவன் போல புலம்புகிறான் என்று.!


அவ்வளவு தான் தூக்கத்துடன் கனவும் கலைந்தது.
ஏனோ தெரியவில்லை இந்த கனவு, விழித்தவுடன் கொஞ்சம் கொஞ்சம் நினைவிருந்தது. பூக்களை மாலையாகத் தொடுப்பது போல ஒவ்வொரு காட்சியாகச் சேர்த்து என் கனவை முழுமைப்படுத்தினேன்..

இயல்பாகவே பகுத்தறிவுவாதியான நான் கனவிலும் பகுத்தறிவுவாத சிந்தனையோடு இருப்பது பெருமிதம் கொள்வதாக இருந்தது.

இந்த கனவு என் மனதின் எந்தப் பகுதியிலிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் தூக்கத்தில் நனவிலி மனதிலிருந்து வந்தது என்பது மட்டும் எனக்குத் தெரியும். இந்தக் கனவு எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்தியது…………………ஒருவன் மிகவும் பயந்தவனாம். அவனுக்கு பேயென்றால் ரொம்பவும் பயமாம். பக்கத்து ஊருக்குச் செல்லும் வழியில் சுடுகாடு இருப்பதால் அவ்வழியே செல்வதற்கு அஞ்சிக் கொண்டே இருந்தானாம். அவனுக்கு அவனுடைய அப்பா எவ்வளவு சொல்லியும் அவனுடைய அச்சம் போகவே இல்லையாம்.

ஒருநாள் அவனுடைய அச்சத்தை எப்படியாவது போக்கிவிடவேண்டும் என்று தன் மகனை அழைத்துக்கொண்டு ஒரு மந்திரவாதியிடம் சென்று தாயத்து ஒன்று வாங்கி அவன் கையில் கட்டினாராம்.

“இந்தத்த தாயத்தைகட்டிக் கொண்டு நடுஇரவு 12 மணிக்குக் கூட நீ சுடுகாட்டுக்குப் போகலாம. எந்தப் பேயும் உன் அருகில் வருவதற்கே அஞ்சும்“

என்றாராம் மந்திரவாதி. இவனும் புதுவிதமான துனிச்சலுடன் சுடுகாட்டை கடந்து பார்க்கலாம் என்று தாயத்தோடு உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு சுடுகாட்டு வழியே வந்தானாம்…


“எந்தப் பேயும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை உணரத்தொடங்கினான்………

இப்போது இவன் மனம் முன்பைவிட அதிகமா அச்சம்கொள்ள ஆரம்பித்துவிட்டது………..

தாயத்தைக் அவிழ்த்து வீசி எறிந்துவிட்டுத் தலைதெறிக்க ஓடத்தொடங்கினான்.“

தந்தை கேட்டார் என்ன நடந்தது என்று….

அப்பா நான் தாயத்தைக் கட்டிக் கொண்டு சுடுகாட்டு வழியே போனேன்.. எந்தப் பேயும் என்னைப் பின்தொடரவே இல்லை…!!

சரி அப்பொழுது ஏன் இவ்வளவு அச்சத்துடன் ஓடிவருகிறாய்..??

“நான் இவ்வளவு நாள் அஞ்சிய பேய் கூட என் அருகில் வர அஞ்சுகிறது என்றால் இந்த தாயத்துதான் பேய்களுக்கெல்லம் பெரிய பேய்ய்ய்ய்ய்ய்ய்!“

என்றானாம்.

தன் மகனுக்குப் பேய் இல்லை என்பதை எப்படிப் புரியவைப்பது என்று தெரியாமல் தலையில் கைவைத்துக் கொண்டாரார் தந்தை.!

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மனதைக் கவரும் எபிக் உலவி.
உலவிகள் (ப்ரௌசர்) இணையத்தில் உலவுவதற்குப் பயன்படுவனவாகும். உலவிகள் என்றவுடன் நினைவுக்கு வருவது…..

இன்டர்நெட் எக்சுபுளோர், மொசில்லா பயர்பாக்சு, கூகுள் குரோம், ஓப்ராமினி, சபாரி போன்ற உலவிகளாகும். இவ்வுலவிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தனித்தன்மைகளைக் கொண்டுள்ளன. இவற்றுள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் உலவியாக மொசில்லா பயர்பாக்சு (நெருப்புநரி உலவி) என்னும் உலவி வழக்கில் உள்ளது.

14.07.10 அன்று இந்திய வல்லநர்களால் இந்தியாவுக்கென உருவாக்கப்பட்ட “எபிக் உலவி“ வெளியிடப்பட்டது. வெளிநாட்டார் அவர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்து உருவாக்கிய உலவிகளையே பயன்படுத்திவந்த நாம் இப்போது நமக்கென நாமே உருவாக்கிய எபிக் உலவியைப் பயன்படுத்துவது புதிய அனுபவமாகவே உள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த கிடன் ரெப்ளெக்ஸ் என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது.

இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்

எபிக் உலவியின் தனிச்சிறப்புகள்.

◊ மொசில்லா பயர்பாக்சின் கட்டமைப்பில் இவ்வுலவி வடிவமைக்கப்பட்டிருப்பதால் செயல்திறன் விரைவாகவுள்ளது.

◊ இவ்வுலவியுடன் வழங்கப்படும் ஆண்ட்டி வைரஸ் (எதிர்ப்பு நச்சுநிரலி)பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. இந்த உலவியின் வழி எந்த பைலை (கோப்பை)பதிவிறக்கினாலும் , அது வைரஸ் சோதனை செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடையதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் உலவியாக இது விளங்குகிறது.

◊ இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம்.

◊ இவ்வுலவியின் இடது ஓரத்தில் நாம் அடிக்கடி பயன்படுத்தும், பேசுபுக், டிவைட்டர்,ஆர்குட்,ஜிமெயில், யாகூ, ஆகிய இணைப்புகள் உள்ளன. இவற்றை நாம் திறந்திருக்கும் பக்கத்தில் இடது பகுதியில் உட்பக்கமாகக் கூடத் திறக்க முடிகிறது.
◊ மேப், போக்குவரத்து, வேலைவாய்ப்பு,விளையாட்டு, பேக்கப், கலெக்சன்,புக்மார்க்கிங், வரலாறு,பதிவிறக்கம், ஆட்ஆன் என்னும் பல்வேறு வசதிகளும் இந்த எபிக் உலவியின் தனித்தன்மைக்குத் தக்க சான்றாக விளங்குகின்றன.

◊ எனக்குத் தெரிந்து எழுதும் (ரைட்டர்) வசதியை உலவியிலேயே வழங்கும் முதல் உலவி எபிக்தான். ரைட்டர் பகுதியிலிருந்து கொண்டு நாம் பயன்படுத்தும் கணினியிலுள்ள கோப்புகளைக் கூட எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.
◊ உலவியின் பின்புலத்துக்காக வழங்கப்படும் தீம்கள் கண்ணைக் கவர்வதாகவுள்ன.இதனை ஸ்கின் என்னும் பகுதியில் பெறமுடிகிறது. மக்கள், பண்பாடு, தேசியம், விளையாட்டு, சினிமா, கலை, இசை,சமயம், அரசியல்,இயற்கை, என பல்வேறு வகைப்பாடுகளில் இந்த வசதி அளிக்கப்படுகிறது.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

மீடியாகோப்பும் வீடியோவெட்டும்.
மீடியாகோப்பு என்னும் மென்பொருள் விண்டோஸ் மீடியாபிளேயர்,விஎல்சி பிளேயர் போல வீடியோக்களை இயக்குவதற்குப் பயன்படும் மென்பொருள் ஆகும். இதற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.

 ஆடியோ, வீடியோக்களை இயக்கலாம்.
 ஆடியோ, வீடியோக்களை வெட்டிக்கொள்ளலாம்.
 ஆடியோ, வீடியோக்களை வேறு வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.
 நிழற்படங்களை வெட்டிக் கொள்ளலாம்.
 நிழற்படங்களின் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம்.
 நிழற்படங்களை வரிசையாக்கிப் பார்க்கலாம்(ஸ்லைடு சோ)


இப்படி பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த மென்பொருளில் வீடியோக்களை எப்படி வெட்டிக் கொள்வது என்பதைப் பார்ப்போம்.

திரைப்படங்களிலோ, வேறு வீடியோக்களிலோ சிறு காட்சிகள் நமக்கு கருத்தரங்குகளிலோ, மாணவர்களுக்கு விளக்குவதற்காகவோ, சொற்பொழிவு விளக்கங்களுக்காகவோ தேவைப்படும்.

வீடியோக்களை வெட்டிக்கொள்ள பல்வேறு இலவச மென்பொருள்கள் பயன்பாட்டிலிருந்தாலும் இம்மென்பொருள் இலவசமாகக் கிடைப்பதுடன் எளிய கட்டமைப்புடன் கூடிய பயன்பாடுடையதாக இருப்பது கூடுதல் சிறப்பாகவுள்ளது.

இந்த மென்பொருளைப் பதிவிறக்கி நம் கணினியில் நிறுவிக்கொண்டு, பின் மீடியா கோப் பிளேயரைத் திறக்கவும்,

அடுத்து ஓபன் என்னும் பகுதியில் நாம் வெட்ட வேண்டிய வீடியோக்கோப்பைத் திறந்து செலக்ட் ஸ்டார்ட் என்னும் பகுதியி்ல் சுட்டித் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

செலக்ட் என்ட் என்னும் பகுதியில் எதுவரை என்பதைத் தெரிவு செய்யவும்.

அடுத்து பிளே செலக்ட் என்பதைத் தெரிவு செய்து அடுத்து உள்ள பெட்டியில் எந்த ஒளி வடிவத்தில் வேண்டும் என்பதையும் எந்தத் தரத்தில் வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொண்டு சேவ் என்பதைச் சுட்டினால் நமக்குத் தேவையான வீடியோ சேமிக்கப்பட்டுவிடும்.

நாம் சேமிக்கும் கோப்பை flv என்னும் வடிவத்தில் சேமிப்பது சிறப்பாகும். ஏனென்றால் இந்த வடிவம் தடையின்றி எல்லா மீடியாப் பிளேயர்களிலும் இயங்கக்கூடியதாகும்.

தமிழுக்கு வந்த சோதனை.
மூன்றாமாண்டு இளங்கலை தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் போது மடிகணினியில் இராமலிங்க வள்ளலாரின் நிழற்படத்தைக் காட்டி இவர் யார் என்று தெரிகிறதா? என்று மாணவர்களிடம் கேட்டேன்..


மாணவர் -1 - அன்னைத் தெரசா…

என்றார். எனக்குத் திக்கென்றது.


மாணவர் -2- விவேகானந்தர்…….

என்றார். எனக்கு வார்த்தை எதுவுமே வரவில்லை. இவர்கள் சொன்னதைக் கேட்டு மாணவி ஒருவர் சிரித்தார். ஓ சிரிப்பதால் அவருக்காவது தெரியும் என்று நீங்கள் சொல்லுங்கள் என்றேன்…

மாணவி - கிரன் பேடி….. என்று பதிலளித்தார்…

(இவர்கள் யாரும் விளையாட்டுக்காக இவ்வாறு பதிலளிக்கவில்லை…

இவர்களின் திறனே அவ்வளவு தான்)

இந்த மாணவர்களெல்லாம் இன்று காலையில் தான் வேறு ஏதோ கிரகத்திலிருந்து இறங்கிவந்திருப்பார்கள் என்று தோன்றியது எனக்கு. அப்போது முதலில் பதிலளித்த மாணவன் ஐயா நான் மீண்டும் சொல்கிறேன் என்றான் சரி இப்போதவது தெரிந்ததே என்று சொல்லுங்க என்றேன்….

அவன் சொன்னான்…

ஐயா இவர் வேளாங்கன்னி என்றான்..

துன்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட என்னை மற்றொரு மாணவர் இடைமறித்து ஐயா இவர்தான் இராமலிங்க வள்ளாலார் என்று சொல்லி தேற்றினார்.

தமிழ் மாணவர்ளே இந்த நிலையென்றால்…………..!

இப்படியெல்லாம் கூட தமிழுக்குச் சோதனை வருமா?திரைப்பட நடிகர்களை அடையாளம் தெரியும் இந்தத் தலைமுறைக்கு தமிழ்ச்சான்றோர்களை அடையாளம தெரியவில்லையே…..!!!!!!!!!!!!!!!!!!!

• “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர்“
• “திருவருட்பாவை தந்த இராமலிங்க வள்ளலார்“
• “சமரச சன்மார்க்கம் கண்டவர்“
• “ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை“ என்று ஜோதியில் இறைத்தன்மையை உணர்ந்தவர்.
• “பசிப்பிணியை அகற்ற வேண்டும் என்று எண்ணியவர்“
• “ஆன்மீகவாதியாக இருந்தாலும் இவரது சிந்தனைகள் முற்போக்குத்தனமானவை“

இவரையும் இவர் போன்ற சான்றோரையும் அடையாளம் காட்ட வேண்டும் என்று உலகத்தமிழ் மாநாட்டு மலரில் நிழற்படமாக அளித்தது அரசு. அதனை தமிழம்.நெட் (http://www.thamizham.net/) என்ற இணையம் பதிவிறக்கிக் கொள்ளும் வசதியுடன் பிடிஎப் வடிவில் தந்து உதவியது.

அடுத்த தலைமுறையினருக்கு உதவும் என்று நானும் இவ்வலைப்பதிவில் தொடர்நிழற்பட முறையில் முன்பே தந்தேன்…


ஆனால் இந்த தலைமுறையினருக்கே இந்த தமிழறிஞர்களை அடையாளப்படுத்தவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை நான் இப்போது தான் உணர்ந்தேன்…

இராமலிங்க வள்ளலாருக்கே இந்த நிலையென்றால்…

தமிழ்ச்சான்றோர் என்னென்ன சோதனைகளைக் காணவுள்ளார்கள் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாகவுள்ளது……………..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

(1நோட்) அறிந்தும் அறியாமலும்.மைக்ரோசாப்ட் ஆபிசின் ஒன்நோட் பயன்பாட்டை விஸ்டாவில் கடந்த ஒரு ஆண்டுகளாகப் பயன்படுத்திவருகிறேன். எனது வலைப்பதிவுக்கு எழுதும் கட்டுரைகளை என்எச்எம் வழியே யுனிகோடில் முறையில் ஒன்நோட்டில் தான் பதிவு செய்வது வழக்கம். எனது பல்வேறு பணிகளையும் எளிமையாக முடிக்க இப்பயன்பாடு பெரும் உதவியாகவுள்ளது. இதனைப் பயன்படுத்தும் முன்பு ஒருகாலத்தில்…..


பாமினிஎழுத்துருவில் வேர்டில் கோப்பினை உருவாக்கி பொங்குதமிழில் உருமாற்றி வலையேற்றிவந்தேன்.

அடுத்து என்எச்எம் வழியே யுனிகோடு வேர்டில் உருவாக்கி வலையேற்றிவந்தேன்..

இம்முறைகளில் எனது இடுகைகள் நிறைந்த கோப்புகளை பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்து வந்தது.

என்னதான் நாம் நம் வலையில் எழுதிய கட்டுரைகளை பல்வேறு வழிகளில் பேக்கப் எடுத்துவைத்தாலும் இன்று உள்ள நிலையில் எப்போது வேண்டுமானலும் நம் வலைப்பதிவில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனது சிக்கல்களைத் தீர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக இந்த ஒன்நோட் பயன்பாடு உள்ளது.

தனிச்சிறப்புகள்.


○ வலைப்பதிவில் எழுதுவோருக்கு இந்த ஒன்நோட் பெரும் வசதியாக இருக்கும். வலைப்பதிவிலோ, மின்னஞ்சலிலோ இன்பாக்சில் எல்லா தகவல்களும் ஒரே இடத்தில் இருப்பது போல நாம் வலைப்பதிவுக்காக எழுதும் எல்லா இடுகைகளும் இங்கு ஒரே கோப்பில் வரிசையாக இருக்கும்.
○ வேர்டில் உள்ள எல்லா வசதிகளும் இதில் உண்டு.
○ தானாகவே சேமித்துக்கொள்ளும்.
○ நாட்குறிப்பு போல பயன்படுத்தலாம்.
○ பிடிஎப் கோப்பாகவும் உருவாக்கிக்கொள்ளலாம்.
○ நாட்குறிப்பிலிருந்து ஒரு தாளைக் கிழிப்பது போல இதனைத் தனிக்கோப்பாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
○ நாம் மொத்தமாக எழுதிய பல இடுகைகளிலிருந்து ஒரு சொல்லைத் தேடவதற்கென தேடல் வசதி.
○ இன்செர்ட் பகுதியில் உள்ள ஸ்கிரீன் கிளிப்பிங் என்னும் பகுதி நம் ஸ்கிரீனை போட்டோ எடுப்பது போல எடுத்து உள்ளீடு செய்வதற்குப் பயன்படுகிறது.
○ தேதி நேரம் தானாக சேமிக்கப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக…

(ஆடியோ, வீடியோ) ஒலி மற்றும் ஒளிக்கோப்புகளை இந்த ஒன்நோட்கோப்பின் உள்ளே உள்ளீடு செய்வது பெரும் பயன்பாடாகவுள்ளது.

◊ எனக்கு இணையத்தமிழ் பற்றி வானொலியில் உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக ஒன்நோட்டில் தயாரித்த கட்டுரை எவ்வளவு நேரம் வருகிறது என்பதை வாசித்துப்பார்த்து காலத்தைக் கணக்கீடு செய்யலாம் என்று இதற்கு எதுவும் இதில் வாய்ப்புள்ளதா என்று பார்த்தேன். ஒலி மற்றும் ஒளிக் கோப்புகளாக பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளதைப் பார்த்தேன். முயற்சித்துப்பார்த்து வியந்துபோனேன்.

ஒன்நோட்டில் நாம் பேசுவதை ஒலி மற்றும் ஒளி வடிவில் (ஆடியோ, வீடியோ) சேமித்தபோது அந்தக் கோப்பு தானாகச் சென்று நம் ஒன்நோட்டின் இடுகையிலேயே சேமிக்கப்பட்டுவிடுகிறது. இதனை இயக்கும் போது நம் கோப்பின் இடையே ஒலி, ஒளிபரப்பாகிறது. இப்பயன்பாடு மிகவும் தொலைநோக்குச் சிந்தனையுடன் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.


◊ பவர்பாயின்ட் வாயிலாக தம் கருத்துக்களை சொல்லிவந்தவர்களுக்கு ஒரு மாற்றாகவும் இந்த ஒன் நோட் பயன்பாடு உள்ளது.
◊ கருத்தரங்குகளில் கட்டுரை வாசிப்பவர்களுக்கு உதவுவதாகவும், நிகழ்வுகளை வீடியோவாக சேமித்துக்கொள்ளவும் பயன்படுவதாக இந்த ஒன்நோட் பயன்படுகிறது.
◊ ஆபிசின் ஒன்நோட் பற்றி ஒருசில இடுகைகளையே தமிழில் காணமுடிகிறது. நானறிந்தவரை ஒன்நோட்டின் பயன்பாட்டை குறிப்பிட்டிருக்கிறேன். தாங்களும் இதன் பயன்பாட்டைக் குறிப்பிடலாமே...

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கடவுளின் முட்டாள்(கலீல் ஜிப்ரான்)


கலீல் ஜிப்ரானின் “முன்னோடி“ என்னும் நூலில் என்னை மிகவும் கவர்ந்த படைப்பை தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்……


ஒரு முறை பாலைவனத்தில் இருந்து “சரியா“ என்னும் பெருநகரத்திற்கு கனவு காணும் மனிதன் ஒருவன் வந்தான். அங்கி, ஊன்றுகோல் தவிர அவனிடம் வேறு எதுவும் இல்லை.

அவன் தெருக்கள் வழியே நடக்கும் பொழுது ஆலயங்களையும், கோபுரங்களையும், அரண்மனைகளையும் அதிசயத்துடனும், வியப்புடனும் உற்று நோக்கியவண்ணம் நடந்தான். ஏனெனில் சரியா நகரம் பிரமிப்பூட்டும் அழகுநகரமாகும்.

அவன் தன்னைக் கடந்து செல்லும் மக்களிடம் அவர்களது நகரம் குறித்துக் கேள்வியெழுப்பியபடி அடிக்கடி பேசினான். ஆனால் அவர்கள் அவனுடைய மொழியை அறியவில்லை. அவனும் அவர்களுடைய மொழியைப் புரிந்துகொள்ளவி்ல்லை.

பகற்பொழுதில், ஒரு பரந்த உணவகம் முன் நின்றான். சலவைக் கல்லால் கட்டப்பட்டிருந்தது. யாதொரு தடையுமின்றி மக்கள் அந்த விடுதியுள் சென்றும் வந்தும் கொண்டிருந்தனர்.

அவன் தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான்….

“இது ஒரு புனிதத் தலமாய் இருக்கும்!”
அவனும் அதன் உள்ளே சென்றான்.

வெகு ஆடம்பரமான அந்தப் பெருமண்டபத்தில் அவன் அதிசயமாய்ப் பார்த்ததென்னவெனில், பல மேசைகளைச் சுற்றி ஆண்களும், பெண்களுமாய் பெருங்குழுவாய் அமர்ந்திருந்தனர். அவர்கள் உண்பதும், குடிப்பதும் இசைக்கலைஞர்களின் இசையைக் கேட்பதுமாய் இருந்தனர்.

“இல்லை“ கனவுகாணும் மனிதன் சொன்னான்..

”இது தொழுகை செய்வதன்று. இது இளவரசனால் ஒரு பெருமைமிகு நிகழ்ச்சியைக் கொண்டாடு முகத்தான் மக்களுக்கு வழங்கப்படும் விருந்தாகும்.!“

அந்தநேரத்தில் இளவரசனின் அடிமையாக இருக்கக்கூடிய ஒரு மனிதன் அவனை நெருங்கி அமருமாறு பணிவுடன் வேண்டினான். இறைச்சியும், மதுவும் சுவைமிகு இனிப்புகளும் அவனுக்கு அளிக்கப்பட்டன.

நிறைவாகவும், மகிழ்சியாகவும் உண்டபின், அங்கிருந்து செல்ல அந்த கனவுகாணும் மனிதன் எழுந்தான். வாசலில் ஆடப்பரமாய் உடையுடுத்தியிருந்த மிகப் பெரும் உருவம் கொண்ட ஒரு மனிதனால் அவன் நிறுத்தப்பட்டான்.

கனவு காணும் மனிதன் தனக்குள் “நிச்சயமாய்“ இவன் இளவரசனாய் இருப்பான்! என்று சொல்லிக்கொண்டு, அவன் முன் தாழ்ந்து நன்றி தெரிவித்தான்.

அந்தப் பெருமனிதன் நகரத்து மொழியில் பேசினான்……….
“ஐயா நீங்கள் உண்ட உணவிற்குப் பணம் தரவில்லை!“

அதைப் புரிந்துகொள்ளாத கனவுகாணும் மனிதன், மீண்டும் உளபூர்வமாக நன்றி கூறினான். பின்னர் அந்தப் பெருமனிதன் சற்று யோசித்தவாறு அவனை நெருங்கி உற்று நோக்கினான்.

அந்தக்கனவுகாணும மனிதன் ஓர் அந்நியனாய் அந்த நகரத்திற்குப் புதியவனாய், எளிய ஆடை அணிந்திருந்ததைப் பார்த்தான். உண்மையில் உணவிற்காகக் கொடுக்கும் அளவிற்கு அவனிடம் பணம் இல்லை.

அந்தப் பெருமனிதன் தன்கைகளைத் தட்டி அழைக்க, அந்நகரத்து நான்கு காவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பெரும்மனிதனின் பேச்சைக் கேட்டபின் கனவுகாணும் மனிதனை இருபுறமும் இருவராய் சூழ்ந்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

கனவுகாணும் மனிதன் அவர்களது ஆடம்பர அங்கிகளைக் கவனித்தான். அணிந்திருந்த விதம் நோக்கினான். அவர்களை மகிழ்வுடன் பார்த்தான்.

பிறகு சொன்னான்……. “இவர்கள் சிறப்பான மனிதர்கள்!

நீதி மன்ற வாசல் வரை ஒன்றாய் நடந்துவந்து உள்ளே நுழைந்தனர்.

அரசஉடையில் நீண்டு தொங்கும் தாடியுடன் வயதான மதிப்பிற்குரிய மாமனிதன் சிம்மாசனம் மீது அமர்ந்து இருப்பதைக் கண்டான் கனவு காணும் மனிதன். அவன் ஓர் அரசனாய் இருப்பான் என்று நினைத்து அந்த அரசன் முன் தன்னை நிறுத்தியதற்காக ஆனந்தப்பட்டான்.
இப்போது காவலளிகள் அந்த மதிப்பிற்குரிய மாமனிதனாகிய நீதிபதிமுன் கனவுகாணும் மனிதனுக்கெதிரான குற்றத்தை விவரித்தனர். நீதிபதி இரு வழக்குரைஞர்களை நியமித்தார். குற்றத்தைத் தாக்கல் செய்ய ஒருவரையும், அந்த அந்நியனைத் தற்காக்க மற்றொருவரையும்.

வழக்கறிஞர் இருவரும் எழுந்து ஒருவர் மாறி ஒருவர் தத்தமது வாதத்தை முன் வைத்தனர். அந்நியனான அந்தக் கனவுகாணும் மனிதன் வரவேற்புரையைக் கேட்பதாகத் தன்னுள் நினைத்துக்கொண்டான். அவன் இதயம தனக்காகச் செய்யப்படும் இந்த எல்லாவற்றிற்கும் அரசன் மீதும் இளவரசன் மீதும்நன்றிப் பெருக்கால் நிரம்பி வழிந்தது.


பின்னர் கனவு காணும் மனிதன் மீதான தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு மரப்பலகையில் அவன் குற்றம் எழுதப்பட்டுக் கழுத்தில் தொங்கப்படவேண்டும் என்றும், நகரம் முழுவதும் பகிரங்கமாக அறிவிக்கும் வண்ணம் ஊதுகொம்பு வாசிப்பவனும், முரசு அறைபவனும் அவன் முன் செல்ல ஒரு வெறுங்குதிரைமீது ஏறி நகரம் முழுவதும் வரவேண்டும் என்பதான தண்டனை. அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

இப்போது கனவுகாணும் மனிதன் இவ்வாறான தண்டனைக்கு ஆளாகி நகரைச் சுற்றிவரும் போது ஊதுகொம்பு மற்றும் முரசின் ஒலி கேட்டு நகரவாசிகள் அவன் முன் ஓடிவந்தனர். அவனைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர். குழந்தைகள் கூட்டமாய் தெருத்தெருவாக அவன்பின் ஓடினர். கனவுகாணும் மனிதனின் இதயம் மெய்மறந்த மகிழ்ச்சிப் பரவசம் கொள்ள, அவர்களைப் பார்த்தான்.


அவனைப் பொருத்தவரை, கழுத்தில் தொங்கும் பலகை அரசனின் வாழ்த்து என்றும் தனக்கு மரியாதை செய்வதற்காக இந்த நகர் ஊர்வலம் என்பதாகவும் நினைத்தான்.
இவ்வாறு அவன் வரும்போது, அவனைப் போலவே பாலைவனத்திலிருந்து வந்த ஒரு மனிதனை, கூட்டத்தின் நடுவே பார்த்து மகிழ்ச்சியால் அவன் இதயம் துள்ள, சத்தம் போட்டுக் கத்தினான்.

“நண்பனே நண்பனே எங்கிருக்கிறோம் நாம்? என்ன மாதிரியான ஆனந்த நகரம் இது! எப்பேர்ப்பட்ட ஆடம்பர விருந்தோம்பும் மனிதர்கள்! தம் மாளிகைகளில் விருந்தாளியை உபச்சாரம் செய்வதும் இளவரசர் துணைவரவும், கழுத்தில் ஓர் அறிவிப்புப்பலகையைத் தொங்கவிட்டு, சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்த நகரத்தின் வரவேற்பு மரியாதையை அளிப்பதுமாய் எப்பேர்ப்பட்ட விருந்தோபசாரம்! எனக்கு இப்படியொரு வாய்ப்பா!
அந்தப் பாலைவன மனிதன் பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தபடி தலையாட்டினான்.ஊர்வலம் கடந்து சென்றது.

கனவு காணும் மனிதன் தலை நிமிர்ந்து முகம் தூக்க, அவனது கண்களில் ஒளி வழிந்தோடியது.


புரிதல்…………..

இந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை தோன்றும். இந்தக் கதையில் வரும் மனிதன் மட்டும் கனவுலகத்தில் கனவுகாண்பவனல்ல நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கனவுலகத்தில் வாழ்ந்து கனவு காண்பர்கள் தான் என்பதை சொல்லாமல்ச் சொல்கிரார் கலீல் ஜிப்ரான்.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நினைத்து நினைத்து சிரித்தேன்….

² நாட்டுப்புற வழக்கில்………..

வீட்ல மதுரையா? சிதம்பரமா? என்று கேட்பார்கள்.

மதுரை என்றால் மீனாட்சி ஆட்சி போல மனைவியின் கட்டுப்பாட்டில் குடும்பம் நடக்கிறது என்றும்,

சிதம்பரம் என்றால் நடராசரின் ஆட்சிபோல கணவனின் கட்டுப்பாட்டில் குடும்பம் நடக்கிறது என்று புரிந்துகொள்வார்கள்.


² வீட்டுல எலி வெளியில புலி என்று மனைவிக்குப் பயந்த கணவனைக் குறிப்பார்கள்.


² அவ என்னை அடிக்க!
என்னை அவ அடிக்க! என்று என்னமோ தானே தன் மனைவியை அடித்தது போல பெருமையாக சில குடும்பத்தலைவர்கள் பேசிக்கொள்வார்கள்.“கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருசன்!

என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது.

“பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி“ என்ற காலமெல்லாம் கடந்துபோய்விட்டது.

இந்தக் காலத்தில் ஆணுக்குச் சமநிலையில் பெண்களும் இருக்கின்றனர்.

ஆனால் இன்றும்….
கணவனுக்குப் பயப்படும் மனைவியையும்!
மனைவிக்குப் பயப்படும் கணவனையும்!
பார்க்க முடிகிறது.

கணவனுக்குப் பயப்படும் மனைவியைப் பார்ப்பது இக்காலத்தில் அரிதாக இருந்தாலும், மனைவிக்குப் பயப்படும் கணவனைப் எல்லா இடங்களிலும் பார்க்கமுடிகிறது!


மனைவிக்குக் கணவன் ஏன் பயப்படவேண்டும்?
கணவனுக்கு மனைவி ஏன் பயப்படவேண்டும்?

மனைவி என்றவுடன் பல கணவர்களுக்கு பூரிக்கட்டை நினைவுக்கு வந்து அச்சமளிப்பது உண்மைதான்.

கணவனுக்குப் பயப்படும் மனைவியை இயல்பாக எடுத்துக்கொள்ளும் இந்த உலகம்…

மனைவிக்குப் பயப்படும் கணவனை வினோதமான விலங்கைப் பார்ப்பதுபோல இழிவாகப் பார்க்கும் போக்கை சமூகத்தில் பார்க்கமுடிகிறது. இந்த நிலை இன்று நேற்றுத் தோன்றியதல்ல. சங்ககாலத்திலிருந்தே இதே நிலைதான்..


“பரத்தையிடம் (விலைமகள்) சென்று அவள் கையைப் பிடித்து இழுத்த தலைவனின் செயலைத் தலைவியிடம் சொல்லுவேன் என்கிறாள் பரத்தை. அதுகேட்டு பெருநடுக்கமடைகிறான் தலைவன். “சங்க காலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலைவுடைமைச் சமூகத்துக்கு உயர்ந்த காலம் என்பதாலும், மக்கள்தொகை குறைவு என்பதாலும் ஒரு ஆணுக்குப் பல பெண்கள் என்பதை இயல்பாகவே எடுத்துக்கொண்டனர். அதனால் தலைவன் பரத்தையரிடம் சென்று வருவது இயல்பாக இருந்தது.


இருந்தாலும் தலைவன் பரத்தையிடம் சென்று வருவதை தலைவி விரும்புவதில்லை. “வாயில் மறுத்தல்“ என்னும் துறைவழி தலைவியின் எதிர்ப்பை அறியமுடிகிறது. தலைவியிடம் வாயில் வேண்டிநிற்கும் தலைவன் தன் தவறை உணர்வதாகக் கொள்முடியும்.

நற்றிணைப் பாடல் ஒன்று அழகான நகைச்சுவை ஓவியத்தைப் பதிவு செய்துள்ளது.


பாடல் இதோ...


நற்றிணை .100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
5 வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
10 புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.
பரணர்
(பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச் சொல்லியது.)


தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து தலைவியை நாடிச் செல்கிறான் என்பதை உணர்ந்த பரத்தை வருத்தமடைந்தாள். அவனை மீண்டும் பெறவேண்டும் என்று கருதியவளாக………

தன்னிடம் தலைவன் நடந்துகொண்ட நடத்தையைக் கேட்டுத் தலைவி தலைவனை வெறுக்கவேண்டும் என்று எண்ணி, தலைவியின் உறவினர்கள் கேட்குமாறு தன் தோழியிடம் கூறுவதுபோல இவ்வாறு கூறுகிறாள்………..


தோழி! பெரிய நகத்தைக் கொண்ட கொக்கு கார்காலத்து உலாவும். அதன் கரிய மூக்குப் போன்ற ஆழமான நீரில் தோன்றிய ஆம்பல் மலரை உடையது குளிர்ந்த நீர்த்துறை. அத்துறைக்குரிய தலைவன் நெய்மணம் கமழும், என் கூந்தலைப் பற்றி என் கையில் உள்ள வேலைப்பாடமைந்த ஒளிவீசும் வளையைக் கழற்றிக் கொண்டான். அதனால் சினம் (கோபம்) கொண்ட முகத்தையுடையவளாக அவனிடம்,

“இனி நான் இவ்வாறு சினம்(கோபம்) கொள்ளாது இங்கு நடந்ததை உன் மனைவிக்குச் சொல்லுவேன் என்றேன்.“

அதற்கு அவன் ஊரின் எல்லையிலே உள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரை வென்று செலுத்திக்கொண்டு வருகிறவனும், இரவலர்களுக்கு தேர்கொடுக்கும் வள்ளன்மை உடையவனுமான மலையமான் அவையில் வேற்று நாட்டிலிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வது போல அதிர்ச்சியுற்று நடுங்கினான். அவன் நடுங்கி வருத்தமுற்ற நிலையை நினைக்கும் போதெல்லாம் சிரிப்பேன்.○ பரத்தையின் கூந்தல் பற்றி வளையலைக் கழற்றிக் கொண்ட செயலலைத் தலைவி அறிந்தால் என்னாகும்? என நடுங்கிய தலைவனின் நிலையை எண்ணி எண்ணிப் பார்ப்பதால் பரத்தைக்குச் சிரிப்பு தோன்றுகிறது.

○ தலைவனின் நாகரிகமற்ற செயலைத் தலைவி அறிந்தால் அவனை வெறுப்பாள். அதனால் தான் மீண்டும் தலைவனைப் பெற்று இன்புறலாம் என்பது பரத்தையின் எண்ணமாகும்.

○ இப்பாடலின் வழி சங்ககால சமூகநிலையையும், வாழ்வியியல் ஒழுக்கங்களையும் அறியமுடிகிறது. காலம் கடந்து போனாலும் மனிதர்களின் வாழ்வியல் கூறுகள் மாறிப்போவதில்லை என்னும் வாழ்வியல் உண்மை புலப்படுகிறது.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

கனவில் வந்தவன்...


விருப்பத்தின் விளைவே கனவு!
நிறைவேறாத ஆசைகளை நிறைவு செய்கிறது கனவு!
புரியும் கனவு, புரியாத கனவு,
தூக்கத்தின் முதல் நிலையில் தோன்றும் கனவு!
தூக்கத்தின் ஆழ்நிலையில் தோன்றும் கனவு!

எனக் கனவு பலநிலைகளைக் கொண்டது.


கனவு எங்கு தோன்றுகிறது? மூளையிலா? இதயத்திலா? கண்ணிலா?
கனவு கருப்பு வெள்ளையா? வண்ணமா?
கனவில் கேட்கும் சத்தங்கள் எப்படிக் கேட்கின்றன?
கனவில் காண்பதெல்லாம் நடக்குமா?
பகற்கனவு பலிக்குமா?
காலையில் விழித்தவுடன் கனவு ஏன் மறந்துபோகிறது?
கனவில் கண்ட காட்சிகளை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?

அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று எந்தக் கனவைச் சொன்னார்?

விழித்துக்கொண்டே கனவு காண்பது எப்படி?

கனவை நனவாக்குவது எப்படி?


“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“

என்பர் வள்ளுவர். எனின் உறக்கம் என்பது மரணம் போன்றதா?

எனின் கனவு வந்தால் அது நல்ல தூக்கமா? இல்லையா?


என ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் கேள்விகள் கனவுகுறித்துத் தோன்றும்.


இந்தக் கேள்விகளுக்கு விளக்கம் சொல்கிறேன் என்று சில நல்லவர்கள்………..


நல்ல கனவு வந்தால் கெட்டது நடக்கும் என்றும்!
கெட்ட கனவு வந்தால் நல்லது நடக்கும் என்றும்!
வெற்றி பெறுவதாகக் கனவு கண்டால் தோல்வி கிடைக்கும் என்றும்!
தோல்வி பெறுவதாகக் கனவு கண்டால் வெற்றி கிடைக்கும் என்றும்!
ஆசைகள் நிறைவேறுவதாகக் கனவுகண்டால் நிறைவேறாது என்றும்!
ஆசைகள் நிறைவேறாததுபோலக் கனவு கண்டால் நிறைவேறும் என்றும்!கனவு சோதிடம் சொல்வார்கள். இவர்களை ஒருவகையில் உளவியல் மேதைகள் என்றே சொல்லலாம்.
ஆமாம் கனவுக்கு பொருள் தேடும் ஏமாளிகளை மனம் தளரவிடாது நேர்மறையான கருத்துக்களைக் கூறி திடப்படுத்தும் பணிசெய்வதால் இவர்களை உளவியல் மேதைகள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?


சரி உளவியல் மேதைகள் கனவு பற்றி என்ன சொல்கிறார்கள்?

கனவு குறித்த உளவியல் அறிஞர்களின் மொத்த கருத்தைச் சுருக்கிச் சொன்னால்,

விருப்பத்தின் விளைவே கனவு“ என்றும் “அச்சத்தின் விளைவே கனவு“ என்றும் சொல்லலாம்.

இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் உள்ள காலத்திலேயே கனவு குறித்த முழுமையான விளக்கம் சொல்ல முடியாது நாம் தவித்து வருகிறோம்.

நமது கண்ணைப் போன்ற தானியங்கி வீடியோ கேமரா இனிமேலும் கண்டறிய முடியாது.

நம் மூளையைப் போன்ற அதிநவீன் தொழில்நுட்ப வசதி கொண்ட தானியங்கி வீடியோ பிளேயரை இனிமேலும் உருவாக்க முடியாது.


ஆம் விழித்திருக்கும்போது காணும் காட்சிகளைப் போலவே தூங்கிக்கொண்டிருக்கும் போதும் காட்சிகளை ஓட்டிக்காட்டும் மூளையின் திறம் எண்ணி எண்ணி வியப்படையத்தக்கதாகவுள்ளது. மூளையின் வியத்தகு செயல்களில் கனவு குறிப்பிடத்தக்கவொன்றாகும்.சங்கஇலக்கியத்தில் கனவு குறித்த சிந்திக்கத்தூண்டும் பாடல்கள் நிறையவுள்ளன.


தலைவி தன் விருப்பத்தின் விளைவாகத் தான் தலைவனுடன் கூடுவது (சேர்ந்திருத்தல்) போலக் கனவு காண்கிறாள் தான் கண்ட கனவை, வௌவால் கண்ட கனவுடன் ஒப்புநோக்கிப் பார்க்கிறள்.

பாடல் இதோ……..


உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
5 அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.

நற்றிணை -87. நெய்தல்

நக்கண்ணையார்

வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு தோழிக்கு உரைத்தது.


தலைவன் தலைவியை மணம்புரியும் எண்ணத்துடன் பொருள்தேடப் பிரிந்தான். அப்பிரிவுக்கு ஆற்றாத தலைவி தூக்கத்தில் கனவு கண்டு எழுந்தாள். அதனைத் தோழிக்குக் கூறுகிறாள்…..

ஊரிடத்திலுள்ள மாமரத்தில் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால் உயர்ந்த கிளையில் பற்றித் தூங்கும். அப்போது சோழர்குடியில் பிறந்து ஆர்க்காட்டில் வீற்றிருக்கும் அழிசி என்பனின் பெரிய காட்டிலிருக்கும் இருப்பதும் தனக்குக் கிடைக்காததுமான நெல்லிக்கனியைத் தாம் பெற்றதாகக் கனவு காணும்…


வௌவால் கண்ட கனவு போல,

தலைவனின் நாட்டில் பெரிய அடிப்பகுதியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள் மலரும். அவற்றின் மகரந்தத் தாதுக்கள், கடலின் துறையிடத்தே அமைந்த மணற்பகுதிகளில் மேயும் இப்பிகளின் ஈரமான புறப்பகுதிகளில் வீழ்ந்து மூடும்.

இவ்வாறு அமைந்த சிறுகுடியைப் பெற்ற பரதவரின் மகிழ்ச்சியையும் பெரிய குளி்ர்ந்த கடற்கரைச் சோலையையும் நான் நினைத்துக்கொண்டேன்…..


பரதவரின் மகிழ்ச்சியையும் கடற்கரையையும் நினைத்த அளவிலேயே நானும் தலைவனும் கூடி இன்புற்றதாகக் கனவு கண்டேன். கண்டதெல்லாம் கனவு என்பதை அறிந்ததும் அத்தகைய இன்பமெல்லாம் என்னைவிட்டு நீங்கிப் போனது…
என்று தோழியிடம் சொல்லி வருந்துகிறாள் தலைவி.


வௌவால் தான் பெறாத சுவையைக் கனவில் பெற்றது போல,
தலைவி தான் பெறாத தலைவனைக் கனவில் கண்டாள்.

வௌவால் தான் பெறாத நெல்லியைப் பெற்றது போலக் கனவு கண்டது,
தலைவி தான் கூடிப் பெறாத தலைவனைக் கூடியது போலக் கனாக்கண்டாள்!

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சி என்பது பரதவரின் இல்லற மகிழ்ச்சியைக் குறிப்பதாக அமைந்தது. அவர்களைப் போல தாமும் இனிது இல்லறம் நடத்தவேண்டும் என்ற தலைவியின் விருப்பத்தின் விளைவாகவே இக்கனவு தலைவிக்குத் தோன்றியது.

இப்பியின் ஈரமான புறப்பகுதியில் புன்னையின் தாதுக்கள் மூடும் என்றது கருத்து தலைவனின் நினைவால் வாடும் தலைவியின் உடல்மெலிவு கொண்டு பசலை மூடுவதுடன் ஒப்புநோக்கத்தக்கதாகவுள்ளது.

இப்பாடலின் வழி சங்ககால மக்களின் உளவியல் அறிவுநுட்பம் புலப்படுகிறது.

தலைவிக்கும், வௌவாலுக்கும் தோன்றும் கனவுகள் விருப்பத்தின் விளைவே என்று உணர்ந்து பாடிய, நக்கண்ணையாரின் அறிவு நுட்பம் சங்ககால மக்களின் அறிவுக்குத்தக்க சான்றாக அமைகிறது.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

எதிர்பாராத பதில்கள்.
○ பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியிடம்….

இந்தியக் காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவருவது எனக்குப் பெரும் வருத்தமாகவுள்ளது என்றார்.

அதற்கு, காந்தி….

“உண்மைதான். உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. விலங்குகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போதுதான் எனக்கு இன்னும் வருத்தமாகவுள்ளது“ என்றார்.
○ அலெக்சாண்டரின் குரு அரிஸ்டாட்டில். அலெக்சாண்டர் வெற்றிமேல் வெற்றியாகக் குவித்துக்கொண்டிருந்ததை அவ்வப்போது தன் குருவுக்குத் தெரிவித்துவந்தார்.

அலெக்சாண்டரிடம் அரிஸ்டாட்டில் சொன்னார்..

அலெக்சாண்டர் நாடுபிடிப்பது உனது இலக்கு!
அந்த நாட்டிலுள்ள ஏடுகளைப் பிடிப்பது எனது இலக்கு!

எனவே நீ பிடிக்கும் நாடுகளின் அறிஞர்கள் எழுதிய ஏடுகளை நான் படிக்க ஏற்பாடு செய்..

என்றார்.○ சர்ச்சிலின் 80 வது வயது நிறைவுக்காக நடந்த விருந்தில் நிழற்படம் எடுக்கவந்த இளைஞன் சர்ச்சிலிடம்,

ஐயா உங்களது 100 வது ஆண்டு நிறைவுவிழாவிற்கும் நான் தான் நிழற்படம் எடுக்கவேண்டும் என விரும்புகிறேன்.. என்றான்.

உடனே சர்ச்சில்…………

“நண்பா கவலையை விடு…
உன்னைப் பார்த்தால் நல்ல உடல்நலம் உள்ளவனாகத் தான் தெரிகிறாய். அந்த வாய்ப்பு உனக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்று சொன்னார்.
○ எம்பிடேகல் என்பவர் ஒரு தத்துவஞானி. அவரைச் சந்தித்த இளைஞன்……...

நான் பெரிய அறிவாளிகளுடன் பேசிப் பழகிப் பழகி பெரிய அறிவாளியாகிவிட்டேன் என்று சொன்னான்.

அதற்கு அந்த ஞானி………..


“நானும் தான் பெரிய பெரிய பணக்காரர்களுடன் பேசிப் பழகிவருகிறேன் ஆனால் என்னால் பணக்காரனாகமுடியவில்லையே“ என்று சொன்னார்.
○ பிரபல குத்துச்சண்டை வீரர் ஜோலூயியிடம் ஒருவர்…

நீங்கள் இதுவரை சந்தித்த சண்டைகளிலேயே உங்களை அதிகமாக சிரமப்படுத்தியவர் யார்? என்று கேட்டார்..

அதற்கு அந்த குத்துச்சண்டை வீரர்……..

“வருமான வரி அதிகாரி“ என்று அமைதியாகச் சொன்னார்.