வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

திருக்குறளின் எதிர்காலம்


கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத் கீதை
மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று திருக்குறளைப் பெருமையாகச் சொல்வதுண்டு.
 
·         முகநூலில் திருக்குறள் குறித்து நான் கண்ட இரு செய்திகள், திருக்குறளின் எதிர்காலம் குறித்து என்னைச் சிந்திக்கச் செய்வனவாக அமைந்தன.
 
1.       ஆங்கிலவழி  படித்த குமாருக்கு நேர்முகத்தேர்வில், எழுத்துத் தேர்வு. கேள்வி இதுதான். திருவள்ளுவர் பற்றி செய்திகளை எழுதுக. குமாரோ பள்ளிகூடத்துல தமிழே படிக்கலை. என்ன செய்வார்? இருந்தும் எப்படி எழுதுகிறார் என்று பார்க்கலாமா......

1.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

2.
திருக்குறள் திருவள்ளுவரால் தான் எழுதப்பட்டது.

3.
வள்ளுவர் எழுதியது தான் குறள்.

4.
குறளை எழுதியது வள்ளுவர் தான்.

இது நான்கையும் எழுதிவிட்டு பத்து நிமிடமா காத்திருந்தவருக்கு எதுவும் தோன்றவில்லை...ரொம்ப ரொம்ப யோசித்தர் உடனே முகம் மலர்ந்து ஐந்தாவது கருத்தை எழுதி உடனே தேர்வுத்தாளை நீட்டினார்..அதென்ன 5ஆவது கருத்து..?
*
*
*
*
*
5.
திருவள்ளுவர் ஒரு தமிழ்நாடு பஸ்கம்பெனி ஓனரும் கூட.
என்று எழுதினார். இது கற்பனையாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் இன்றைய தலைமுறை மாணவர்களை எண்ணிப்பார்க்கும்போது இதுவும் நடக்கலாம் என்றே தோன்றுகிறது.
 
  1. திருக்குறளுக்கு ஓவிய விளக்கம் அளித்துகல்லூரி மாணவியின் சாதனை ! 

    திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் விளக்கும் வகையில், ஒவியங்களாக வரைந்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். சிறுவயது முதலே கல்வியின் மீதும், தமிழ் மொழியின் மீதும் தனக்கு இருந்த ஆர்வமே இந்த முயற்சியை செய்யத் தூண்டியதாகக் கூறுகிறார் கணினி அறிவியலில் இளநிலை படிக்கும் அந்த மாணவி.

விருதுநகர் மாவட்டம் மாணிக்கம் நகரில் வசித்து வரும் சேர்மநாதனின் மகள் ஹேமசௌந்தரி. சிறுவயது முதலே, ஓவியம் வரைவதில் திறன் பெற்றவராய் திகழ்ந்த இவர், தமிழ்ப் பற்றின் காரணமாக, திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்.

இவரது எண்ணங்கள் மூலம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும், வண்ண வண்ண ஒவியங்களாக உயிர் பெற்றுள்ளன. கற்றோருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப தன்னுடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிவதாக கூறுகிறார் இவர்.

21
மீட்டர் நீளமும் ஒரு அடி அகலமும் உள்ள காகிதத்தில், சுமார் 3 வார காலம் இடைவிடாது வரைந்து தன் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் ஹேமசௌந்தரி. தன் முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 1330 திருக்குறளுக்கும் ஒவியங்களால் விளக்கம் அளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறார் இவர். தங்கள் மகளின் முயற்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாக கூறும் ஹேமசௌந்தரியின் பெற்றோர், அவரது அடுத்த முயற்சியும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

படித்துக் கொண்டிருக்கும் போதே, காலையிலும், மாலையிலும் ஓய்வு நேரத்தில் இத்தகைய சாதனை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்கின்றனர் ஹேமசௌந்தரியின் ஆசிரியர்கள். செய்யுள் வடிவிலான திருக்குறளுக்கு, ஓவியம் மூலம் விளக்கம் கொடுத்திருப்பது வித்தியாசமான முயற்சி என்றும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

கல்வி பயிலும் வயதில் ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிய வேண்டும் என்று ஒவ்வொரு மாணவரும் கருதுவது உண்டு. பெற்றோர், ஆசிரியர், மற்றும் நண்பர்கள் அளிக்கும் ஊக்கமே, இத்தகைய சாதனை இலக்குகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திண்மையை மாணவர்களுக்கு அளிக்கும் என்பது கல்வியாளர்களின் கருத்து.


இவரைப் போன்ற மாணவர்களைப் பார்க்கும்போது மனதில் நம்பிக்கை பிறக்கிறது. ஹேமசௌந்தரி அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
·         இத்தனை காலமாக செவிவழியாகவும், ஓலைச்சுவடிகளிலும், நூல்களிலும் இருந்துவந்த திருக்குறள், இன்று இணையத்தில் மின்னூலாகவும், ஒலிநூலாகவும், அசைபடமாகவும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது. இன்று அலைபேசிகளிலும், பலகைக் கணினிகளிலும் திருக்குறள் ஒலிக்கோப்புகள் உலா வருவதைக் காணும்போது என் மனம் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறது. இன்னும் எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப திருக்குறளை இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்வது நம் கடமை என்பதை நாம் உணர்வோம்.
  • திருக்குறளின் எதிர்காலத்தில் தமிழர்களின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. எதிர்காலத்தில் திருக்குறள் எந்த அளவுக்கு உலகு பரவி செல்வாக்குப் பெருகிறதோ, தமிழரின் பெருமையும் அந்த அளவுக்குச் செல்வாக்குப் பெறும் என்பதை நாம் உணரவேண்டும். 
  • நம் குழந்தைகளுக்கு திருக்குறளின் பெருமைகளை எடுத்துரைப்பதும் அவர்களை வழிநடத்துவதும் நம் கடமை. 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இன்று தமிழ்த்தென்றல் பிறந்தநாள்.  தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க அவர்களின் பிறந்தநாள் இன்று. (ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே திரு.வி.க என்பதன் விளக்கமாகும். இவர், அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதியுள்ளார். சிறந்த தமிழறிஞராகவும், சிறந்த மேடைப்பேச்சாளராகவும், தேர்ந்த எழுத்தாளராகவும் இவர் திகழ்ந்தார். இவரது தமிழ்நடையின் காரணமாக வர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
 காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.

கல்வி

தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் இராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், 1894 இல் வெஸ்லி பள்ளியீல் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் முடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.

தமிழ்க் கல்வி

வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரெவேற்பிள்ளை நீலகிரிக்குச்சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவநூல்களையும் பாடம் கேட்டார்.

ஆசிரியப் பணி

1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம்நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.

பத்திரிகைப் பணி

பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பீன்னர் திராவிடன், நவசக்திபோன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.

அரசியல் பணி

தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.

எழுதிய நூல்கள்

·                    மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
·                    பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
·                    நாயன்மார் வரலாறு - 1937
·                    முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
·                    உள்ளொளி - 1942
·                    திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
·                    திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944
·                    உரை நூல்கள்
·                    பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
·                    பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
·                    காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
·                    திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
·                    திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941

அரசியல் நூல்கள்

·                    தேசபக்தாமிர்தம் - 1919
·                    என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
·                    தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
·                    தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
·                    சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930. (இதன் ஒரு பகுதியை ஒலிப்பு வடிவில் இங்கு கேட்கலாம்.)
·                    தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
·                    தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
·                    இந்தியாவும் விடுதலையும் - 1940
·                    தமிழ்க்கலை - 1953

சமய நூல்கள்

·                    சைவசமய சாரம் - 1921
·                    நாயன்மார் திறம் - 1922
·                    தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
·                    சைவத்தின் சமசரசம் - 1925
·                    முருகன் (அல்லது) அழகு - 1925
·                    கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
·                    இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
·                    தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
·                    சைவத் திறவு - 1929
·                    நினைப்பவர் மனம் - 1930
·                    இமயமலை (அல்லது) தியானம் - 1931
·                    சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
·                    சமரச தீபம் - 1934
·                    சித்தமார்க்கம் - 1935
·                    ஆலமும் அமுதமும் - 1944
·                    பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949

பாடல்கள்

·                    முருகன் அருள் வேட்டல் - 1932
·                    திருமால் அருள் வேட்டல் - 1938
·                    பொதுமை வேட்டல் - 1942
·                    கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
·                    புதுமை வேட்டல் - 1945
·                    சிவனருள் வேட்டல் - 1947
·                    கிறிஸ்து மொழிக்குறள் - 1948
·                    இருளில் ஒளி - 1950
·                    இருமையும் ஒருமையும் - 1950
·                    அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
·                    பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
·                    சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
·                    முதுமை உளறல் - 1951
·                    வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953

·                    இன்பவாழ்வு 1925

தரவுகளுக்கு நன்றி தமிழ்விக்கிப்பீடியா.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இன்று வாரியார் பிறந்தநாள்

சிறந்த ஆன்மீகவாதி, நல்ல சொற்பொழிவாளர், நயமாக நகைச்சுவை சொல்பவர், தேர்ந்த கதைசொல்லி எனப் பல சிறப்புகளைக்கொண்ட
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.(ஆகஸ்ட் 251906 - நவம்பர் 71993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம்இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இயல், இசைக் கல்வி

வரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப்பயிற்சி பெற்றார்.

சொற்பொழிவு ஆற்றல்

தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ்தேவாரம்திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

திருப்புகழ் அமிர்தம்

சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

எழுதிய நூல்கள்

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

விருதுகளும் சிறப்புகளும்

இசைப்பேரறிஞர் விருது, 1967 ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்

வாரியாரின் நகைச்சுவை

வாரியார் சுவாமிகள், ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு வழங்கிக் கொண்டு இருந்தார்.

வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.

சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.

அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.

அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"

"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.

கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது.

திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் ஒலிக்கோப்புகளை http://murugan.org/tamil/variar.tamil.htm  இந்த இணையத்தில்  பெறலாம்.

(தரவுகளுக்கு நன்றி தமிழ் விக்கிப்பீடியா)