வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 29 மே, 2011

நீங்க தீவிரவாதியா..?

கண் துடைப்புக்காக நடத்தப்படும்
நேர்முகத்தேர்வுகளின் போது..

தன் கடமையைச் செய்ய
இலஞ்சம் கேட்கும்
அரசு அலுவலர்களைக் காணும்போதும்..

அரசுப் பணியை எதிர்பார்க்காத பட்டதாரி
சுயதொழில் தொடங்க
வங்கிக் கடன் கேட்டால்
இழிவாகப் பேசும் அதிகாரிகளைச் சந்திக்கும்போது..

அடுத்த வேளை சோற்றுக்குக் கூட
வழியில்லாதவர்கள் பலர் இருக்க..
ஏழேழு தலைமுறைக்கு
சொத்துசேர்க்கும் அரசியல்வாதிகளைக்
காணும்போது

கோயிலில் மணிக்கணக்கில் நாம் நிற்க
பணம் படைத்தவரை மட்டுமே உடனே
சந்திக்கும் கடவுள் சிலைகளைக் காணும் போது


கல்வி கடைசரக்காகும்போது
உணவுப் பொருள்களில் கலப்படத்தை உணரும் போது
ஒருவர் பொய் சொல்லி வழக்கில் வெற்றிபெறும் போது
சாலை விதிகளை மதிக்காதவர்களைக் காணும்போது
குடிசைகளையும் கோபுரங்களையும் ஒப்பிட்டுக் காணும்போது

இப்படி ஒவ்வொரு நாளும் ஓராயிரம் சூழல்களை
நாம் ஒவ்வொருவரும் சந்திக்கிறோம்.

இச்சூழல்களையெல்லாம்.....
நாம் எப்படி எதிர்கொள்கிறோம், நமக்கு எழும் கோபங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் நாம் யார் என்ற மதிப்பீடே அடங்கியிருக்கிறது.

1. சராசரி மனிதரா? (தமக்குள்ளே பேசிக்கொண்டு அடுத்த வேளையைப் பார்ப்பவர்)


2. அரசியல் வாதியா? (இந்த சிக்கல்களையெல்லாம் சொல்லி இதை நான் மாற்றிக் காட்டுகிறேன் என்று ஓட்டு கேட்பவர்.)3. சினிமாக்காரரா? (இந்த பிரச்சனைகளை மாற்றுவதாக படம் எடுத்து பணம் பார்ப்பவர்)

4. ஊடகவியலாரா? ( இந்த சமூக அவலங்களை ஆங்காங்கே சொல்லி சினிமாவும், கிரிக்கெட்டும் தான் நாடு வல்லரசாகத் தேவையெனச் சொல்பவர்)5. ஆன்மீகவாதியா? (கடவுள் இருக்கிறார் அவர் தான் இந்த சோதனைகளைத் தருகிறார். அவரே மாற்றுவார் என தன்னைத் தேற்றிக்கொண்டு கோயில் உண்டியல்களை நிறைச் செய்பவர்)

6. தீவிரவாதியா ? (குழந்தையாகப் பிறந்து சமூக அவலங்களால் அவமதிக்கப்பட்டோ, தன்னறிவு இல்லாமலோ தீவிரவாதியாக மாறி தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் சிறைக் கம்பிகளுக்கு உள்ளேயோ!! வெளியேயோ! இருப்பவர்)
மேல்கண்ட வகைப்பாட்டில் நான் சராசரி மனிதன் என்னும் வகை சார்ந்தவன்.

நீங்க....?

சனி, 28 மே, 2011

Don't Believe Girls (குறுந்தொகை)

smail

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன..

பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்?
உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்?

இந்த பழமொழிக்கும் இந்தப் பாடலுக்கும் என்ன தொடர்பு...

As a little white snake
with lovely stripes on its young body
troubles the jungle elephant

this slip of a girl
her teeth like sprouts of new rice
her wrists stacked with bangles

troubles me

பாடலின் பொருளை அறிய பாடலின் மீது கொடுக்கப்பட்ட இணைப்பைச் சொடுக்கவும்.

வெள்ளி, 27 மே, 2011

அறிவும் அரைகுறையறிவும் (கலீல் ஜிப்ரான்)

ஒவ்வொருவரும் தாம் சொல்வததான் சரி என்றே நம்புகிறோம்.
நம்மைப் போலவே அடுத்தவருக்கும் சிந்தனை இருக்கிறது ,அவரின் சிந்தனைகள் கூட சரியானதாக இருக்கலாம் என்பதை ஏற்க மறுக்கிறது மனித மனம். நாம் ஒரு நொடியாவது சிந்திக்க நான் விரும்பிய தத்துவக்கதை இதோ....


நான்கு தவளைகள், நதியில் மிதக்கும் ஒரு மரக்கட்டையில் அமர்ந்திருந்தன.
திடீரென வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கட்டை மெதுவாக நீரோடையில் நழுவிச் சென்றது.
தவளைகள் தாம், இவ்வாறு ஒருமுறைகூட மிதந்து சென்றதில்லையே என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தன.

ஓடும் போது,
முதல் தவளை பேசியது...


“உண்மையில் இது ஓர் அதி அற்புதமான மரக்கட்டையாகும். ஏதோ உயிருள்ளது போல செல்கிறது. இதுபோன்ற கட்டையினை இதுவரை நான் அறிந்ததில்லை!”

பிறகு
இரண்டாம் தவளை பேசியது..
“இல்லை என் நண்பனே, மற்ற மரக்கட்டைகள் போல் தான் இதுவும் நகர்வதில்லை. கடலை நோக்கிச் செல்லும். நதிதான் நம்மையும் இந்தக் கட்டையையும் அதனுடன் இழுத்துச்செல்கிறது.“

மூன்றாம் தவளை சொன்னது...
உண்மையில் எது நகர்கிறது என தம்முள் வாதிட ஆரம்பித்தன. இந்தச் சண்டை வளர்ந்தது. உரத்துச்சூடுபிடித்தது. அவர்களுள் ஒரு உடன்பாடில்லை.

அவை, அதுவரை கவனமாய் அமைதிகாத்து வாக்குவாதங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நான்காவது தவளையை நோக்கித் திரும்பி அதன் கருத்தைக் கேட்டன.

நான்காம் தவளை சொன்னது..

“உங்கள் ஒவ்வொருவரின் கருத்தும் சரி.
யாருடையதும் தவறில்லை.
நகர்தல் இந்த மரக்கட்டையில், நீரில், நம் சிந்தனையிலும் உள்ளது“


மூன்று தவளைகளும் பெருங்கோபமுற்றன.
மூன்று தவளைகளும் ஒன்றுசேர்ந்து நான்காம் தவளையை மரக்கட்டையிலிருந்து நதியில் பிடித்துத் தள்ளிவிட்டன.

வியாழன், 26 மே, 2011

மொழிபெயர்ப்பாளர் தேவை.


பணி – மனிதனாக இருத்தல்.
அடிப்படைத் தகுதி – மனம் உடையவராக இருக்கவேண்டும்.

பிற தகுதிகள்.

1. இயற்கையைக் காதலிக்கத் தெரிந்திருக்கவேண்டும்.
2. இயற்கையின் மொழிகளைப் புரிந்துகொண்டு எடுத்துச்சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்.

வயது – குழந்தையாக, குழந்தை மனநிலையுடையவராக இருத்தல் வேண்டும்.(1முதல்100வயது வரை)

சம்பளம்

சிரிப்பு – மகிழ்ச்சி – நீண்டகாலம் வாழும் வாய்ப்பு.

பணிச்சூழல்.

கட்டிடங்களுக்கு வெளியே, வானத்துக்கு கீழே, காற்றுவெளியில்,
காசின் ஓசைகளைக் கடந்து.

விண்ணப்பப் படிவம்.

கீழ்கண்டவை என்ன மொழி என்பதைக் காலியிடங்களி்ல் நிறைவுசெய்க.

பறவைகளின் சிறகசைப்பு -
குயிலின் சோககீதம் -
மயிலின் ஆடல் -
எறும்புகளின் தேடல் -
விலங்குகளின் அச்சுறுத்தல் -
மழையின் சங்கீதம் -
இலைகளின் சலசலப்பு -
பனித்துளிகளின் ஈரம் -
மலர்களின் நறுமணம் -
மலர்களுக்கு வண்டு செய்யும் சொற்பொழிவு -
நட்சத்திரங்களின் கண்சிமிட்டல் -
நிலவின் ஒளி -
வானவில்லின் வண்ணங்கள் -
காலை வானி்ன் புதுப்பொலிவு -
அந்தி வானின் வெட்கம் -
சூரியனின் வெப்பம் -
தீயின் ஓயாப்பேச்சு -
கடற்கரை மண்ணுக்கு அலைதரும் முத்தம் -


இயற்கையின் மொழிதான் என்ன..?

செம்மொழி, பச்சைமொழி, வெள்ளைமொழி..

இப்படி ஏதாவது ஒன்றா..?

தமிழ், வடமொழி, தமிங்கிலம், ஆங்கிலம் இப்படி ஏதாவதா?

(செம்மொழி பற்றி ஓராண்டுகாலம் படித்த மாணவன் தேர்வில் எழுதுகிறான்....

செம்மொழி என்றால் சிவப்பா இருக்கும். இதனைத் தோற்றுவிததவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று..)

மனிதர்கள் பேசும் மொழியால் இயற்கையைப் புலப்படுத்த முடியுமா?

சரி!
இயற்கையின் மொழிகளை முழுதும் உணர்ந்தவர்கள் யார்?

ஓவியரா..?
(இவர் சில கோடுகளையும் வண்ணங்களையும் கொண்டு இதுதான் இயற்கையின் மொழி என்பார்.)

கவிஞரா..?

(இவர் வார்த்தைகளோடு சண்டையிட்டுக்கொண்டிருப்பவர்.
இயற்கை வார்த்தைகளுக்குள் அடங்குமா?)
விஞ்ஞானியா..?

(இவர் சோதனைக் குழாய்களில் அடைத்து வைத்து பகுப்பாய்வு செய்ய இயற்கை என்ன சிறுபொருளா?)

சரி யாரால் தான் இயற்கையை மொழிபெயர்க்கமுடியும்..?
(எனக்குத் தெரிந்தவரை குழந்தைகளால் மட்டுமே இயற்கையை உணரமுடியும், மொழிபெயர்க்கமுடியும்.)

இயற்கையின் மொழி சிரிப்பு.
அதனால் தான் குழந்தைகள் சிரித்துக்கொண்டே இருக்கின்றன.

நிலவைக் காட்டிக் கூட சோறூட்டமுடிகிறது.
பறவைகளை, விலங்குகளைக் காட்டிக்கூட அழுகையை நிறுத்தமுடிகிறது.

அதனால்...

இந்த மொழிபெயர்ப்பாளர் பணியிடத்துக்கு குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள்..

குழந்தை மனநிலையுடன் சிரிப்பு என்னும் வரைவோலை எடுத்து இயற்கை என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய இறுதிநாள் –ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்.


(வெறும் கண்துடைப்புக்காக எத்தனையோ காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளைப் பார்க்கிறோம், விண்ணப்ப படிவங்களை நிறைவுசெய்கிறோம்....

இந்த விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்வதால்..

1.மனிதர்கள் பேசும் மொழியில் உயர்வு தாழ்வு எதுவுமில்லை என்பதை உணர்வோம்.

2.இயற்கையின் மொழிக்கு முன் மனிதர்பேசும் மொழி எந்தவிதத்தில் உயர்ந்தது என்பதை சிந்திப்போம்

3. மனமுடைய மனிதனாக, இயற்கையைக் காதல் கொண்டவராக வாழ முயல்வோம் என்ற எண்ணம் வரும் என நினைக்கிறேன்)

குறிப்பு - ஒரு நாளில் ஒருமணிநேரமாவது மனிதனாக வாழ முயற்சி செய்வோம்.

செவ்வாய், 24 மே, 2011

தமிழ் இலக்கிய ஒலிக்கோப்புகள்.1. திருக்குறள் இசைவடிவில் உரையுடன் பதிவிறக்க (தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)


2.மகாகவி பாரதியாரின் பாடல்களை இசைவடிவில பெற
(பெண்மை)


3. திருவாசகம், திருப்புகழ், கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம், வைரமுத்து கவிதைகள், மனசே ரிலாக்சு உள்ளிட்ட ஒலிக்கோப்புகளைப் பெற
(தமிழ் மியுசிகா)

4. புகழ்பெற்ற அறிஞர்களின் தமிழ்ச் சொற்பொழிவுகளின் ஒலிக்கோப்புகள் கொண்ட வானொலித் தளம். கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்த வசதி உள்ளது.


5. சோம.வள்ளியப்பன் அவர்கள் எழுதிப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை நூலின் (இட்லியாக இருங்கள்)ஒலிவடிவத்தைத் தரும் வலைப்பதிவு (ஆடியோ தமிழ்புக்)

திங்கள், 23 மே, 2011

வலைப்பதிவர்களின் நாடித்துடிப்பு (350வது இடுகை)


கடந்த நான்கு ஆண்டுகளாக வலையுலகில் வலம் வந்துகொண்டிருக்கிறேன்.
வலைப்பதிவர்களை,

1. தன்னிறைவுக்காக எழுதுபவர்கள்.
2. பொழுதுபோக்காக எழுதுபவர்கள்.
3. வியாபர நோக்கில் எழுதுபவர்கள்.
4. மக்கள் நலன் கருதி எழுதுபவர்கள்.
எனப் பாகுபாடு செய்யமுடியும்.

நான் எனது தன்னிறைவுக்காவே எழுதிவருகிறேன். நான்கு ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. காலம் மிக விரைவாகச் சென்றுவிட்டது.

சங்கத்தமிழ், இணையத்தமிழ் என இரு நிலைகளில் மட்டுமே எழுதிவரும் எனது பதிவையும்...

108 நாடுகளிலிருந்து 58,000 பேர் பார்வையிட்டுள்ளனர்,
383 பேர் பின்தொடர்கின்றனர்,
130 பேர் மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுகிறார்கள்.

என்றால் உலகம் பரவிய தமிழர்களிடம் தமிழுணர்வு இன்னும் செத்துவிடவில்லை என்பதையே உணர்த்துவதாக உள்ளது.

நான் கடந்துவந்தபாதையில்.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்தமை
திரட்டி நட்சத்திரமாக இருந்தமை
தமிழ்மண விருது வென்றமை


என எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்க நிகழ்வுகள் பல உள்ளன. இவை வலையுலக நண்பர்கள் என் எழுத்துக்களுக்குத் தந்த வரம்.

ஆரம்ப காலங்களில் தமிழ்மணம், தமிழிஷ் உள்ளிட்ட திரட்டிகளுக்குச் சென்று நண்பர்களின் இடுகைகளை வாசித்து கருத்துரையளித்து, ஓட்டளித்து வருவேன்.

கடந்த சில வருடங்களில் பணிச்சுமை காரணமாக அப்பணியை முழுமையாக மேற்கொள்ள இயலவில்லை.

இடுகைகளை திரட்டிகளில் சேர்ப்பதோடு சரி.
ஆனால் வலையுலக நண்பர்கள் தொடர்ந்து ஓட்டளித்து, கருத்துரையளித்து பலருக்கும் எனது பதிவு சென்றடைய துணைநின்றுள்ளனர். பெயர்களைச் சொன்னால் பக்கம் நீளும் என்பதால் அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை நான் கண்ட வலைப்பதிவர்களின் மனநிலைகளை வரிசைப்படுத்தியுள்ளேன்.

வலைப்பதிவர்களுக்குப் பிடித்தது.

1. சொந்தமான சிந்தனை.
2. ஆர்வமூட்டும் தலைப்பு, புதிய தகவல்.
3. பிழையற்ற, தெளிவான, எளிய தொடரமைப்பு.
4. தனித்துவமான எழுத்து நடை.
5. அடுத்தவர் தகவலாக இருந்தாலும் நன்றி கூறி வெளியிடுதல்
6. கருத்துரைகளுக்குப் பதிலளித்தல்
7. கருத்துரையளித்த, பின்தொடரும் பதிவர்களின் தளங்களுக்கும் சென்று பார்வையிடுதல் நிறைகளை எடுத்துக்கூறிப் பாராட்டுதல்.
8. குறைகளைக் கூறினாலும் நாகரீகமாகக் கூறுதல்.
9. அழகான தளவமைப்பு.
10. விரைவாகத் திறக்கத்தகக்க வலைப்பக்கம்.
11. கண்களை சோர்வடையச் செய்யாத வலைப்பதிவின் பின்புல வண்ணங்கள், எழுத்தின் வண்ணங்கள்.
12. தொடர்ந்து பதிவிடுதல்.
13. நிகழ்கால சமூகத்தைப் பிரதிபலித்தல்,
14. பழமையான மரபுகளை அடையாளப்படுத்துதல்.
15. நகைச்சுவை, அனுபவம், தொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு, கல்வி, இலக்கியம், சிந்தனை, விளையாட்டு என எல்லாவற்றையும் சொல்வதைவிட ஏதோ ஒன்றைக் கூறினாலும் தெளிவாக, தனித்துவத்துடன் சொல்லுதல். எந்த அளவுக்கு வலையுலகை நான் புரிந்துகொண்டேன் என்பதை நண்பர்களே நீங்கள் தான் சொல்லவேண்டும்.

வலைப்பதிவர்களுக்குப் பிடிக்காதது.

1. சுயதம்பட்டம். (தன்னைப்பற்றியே பெருமை பேசுதல்)
2. கருத்துரைப்பெட்டியில் உறுதி செய்யும் எழுத்துக்கள் இருத்தல் (வேர்டு வெரிபிகேசன்)
3. அளவுக்கு அதிகமான அறிவுரை.
4. அடுத்தவர் சிந்தனையை தனது என சொல்லிக்கொள்ளுதல்.
5. ஓட்டுப் போடுங்கள், பின்தொடருங்கள், என மின்னஞ்சல் செய்தல்.
6. நீண்ண்ண்ட பதிவாக இடுதல்.
7. அளவுக்கு அதிகமான வார்த்தைகளின் அலங்காரங்கள்.
8. சுயவிவரமற்ற கருத்துரையாளராக வந்து கருத்துரைத்தல்.
9. பெரும்பாலான வலைப்பதிவர்கள் வைத்திருக்கும் விட்செட்டுகளை, இணைப்புகளையே வைத்திருத்தல்.
10. தொடர் இடுகை என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதச் சொல்லி வற்புறுத்துதல்.
11. இடுகைகளைக் சிறிதுகூடப்படிக்காமல் தொடர்பே இல்லாமல் கருத்துரையளித்தல்.
12. பலரும் சொன்ன பழைய செய்திகளைப் பதிவிடுதல்.
13. பல இடுககைளும், இணைப்புகளும் முகப்புப் பக்கத்தில் இருத்தல்.
14. அதிமேதாவித்தனமான எழுத்துநடை.
15. அடிக்கடி வலையமைப்பையும், பக்கப்பெட்டிகளையும் மாற்றுதல்.


இப்படி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நான்கு ஆண்டுகளில் எனது ஆர்வம் சிறிதுகூடக் குறையவே இல்லை.

வலைப்பதிவு ஆரம்பித்தபோது எத்தகைய ஆர்வத்துடன் இருந்தேனோ அதைவிடப் பன்மடங்கு ஆர்வமுடையவனாகவே இருக்கிறேன். அதற்குக் காரணம்...
நண்பர்களே நீங்கள் தான்.
நீங்கள் மட்டும் தான்.

ஞாயிறு, 22 மே, 2011

காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.


“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“

நோயுற்றபோது மருத்துவமனைக்குச் செல்ல நேரம் பார்க்காத மனிதன்..

சாலையைக் கடக்கும்போது தன் இராசிக்கு ஏற்ற திசையைப் பார்க்காத மனிதன்..

வேலைக்குச் செல்ல நல்ல காலம் பார்க்காத மனிதன்..

கீழே கிடக்கும் பணத்தை எடுக்க சகுனம் பார்க்காத மனிதன்.


ஏனோ இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறான் சாதகம், சோசியம், சகுனம் என்று...

அதனால் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இன்னும்..

கூண்டில் வாழும் கிளிகளும், எலிகளும்...

மூடநம்பிக்கையை வளர்க்கும் ஊடகங்களும்!

இதில் என்ன கொடுமையென்றால்..

ஒரு தொலைக்காட்சி சொல்லும் சோசியத்தை

இன்னொரு தொலைக்காட்சி ஏற்றுக்கொள்வதில்லை.

நாம் நினைத்தா இந்த பூமிக்கு வந்தோம்..?
நாம் நினைத்த போதா இங்கிருந்து செல்லப்போகிறோம்?

செல்லும் நேரம் வந்தால் எல்லோரும் செல்லவேண்டியதுதானே..
இதில் ஏன் இந்த மூட நம்பிக்கைகள்..?

நல்ல சகுனங்கள்:-

1. கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.
2. பிணம் எதிரே வருதல்.
3. அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.
4. தாயும் பிள்ளையும் வருதல்.
5. கோயில் மணியடித்தல்.
6. சுமங்கலிகள் வருதல்.
7. கருடனைக் காண்பது.
8. திருவிழாவைக் காணல்.
9. எருக் கூடையைக் காணல்.
10. யானையைக் காண்பது.
11. நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.
12. பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.
13. கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.
14. காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.
15. கழுதை கத்துதல்.
16. பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.
17. அணில் வீட்டிற்குள் வருதல்.

கெட்ட சகுனங்கள்:-

1. பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.
2. ஒற்றைப் பிராமணனைக் காணல்.
3. விதவையைக் காணல்.
4. எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.
5. விறகுடன் வருபவரைக்காணல்.
6. மண்வெட்டியுடன் எதிர்ப்படல்.
7. தும்மல் ஒலி கேட்டல்.
8. ஆந்தை அலறல்.
9. கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.
10. காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.
11. நாய் குறுக்கே செல்லுதல்.
12. போர் வீரனைக் காணுதல்.
13. நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.
14. அம்பட்டனைக் காணல்.
15. வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.
16. பாய் விற்பவரைக் காணல்.
17. அரப்பு விற்பவரைக் காணல்
18. சிமாறு (விலக்குமாறு) விற்பவரைக் காணல்.
19. முக்காடிட்டவரைக் காணல்.
20. தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.பல்லி சகுனம்:-

சிரசில் - மரணம்
மூக்கில் - நோய்
வயிற்றில் - குழந்தை
முழங்காலில் - கலகம்
பாதத்தில் - பிணி
இடக்கையில் - மரணம்
வலக்கையில் - பெரிய சாவு
உடம்பு – தீர்க்காயம்

அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் இதுபோன்ற நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் இருப்பது உண்மைதான்.

அறிவியல் வளர்ச்சி குறைவான, நம்பிக்கைகள் நிறைவான சங்ககாலத்திலேயே சகுனங்களைப் புறந்தள்ளிய சோழமன்னனைப் பற்றிய புறப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

பாடல் இதோ..
புறநானூறு 41

திணை – வஞ்சி

துறை – கொற்றவள்ளை

பாடியவர் கோவூர்கிழார்

பாடப்பட்டவன் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.பகைவரை எதிர்த்துப் போர்மேல் செல்லும் வஞ்சித்திணையின் ஒரு துறையே கொற்றவள்ளை ஆகும்.

இது பகைவர் நாட்டின் அழிவுதனைக் கூறி மன்னனின் புகழை எடுத்துரைக்கும் தன்மையுடையது.

இப்பாட்டில் “எரிதிகழ்ந்தன்ன செலவுடைய வளவன்“ என்று மன்னனைப் புகழ்ந்தும் உன் பகைவர் நாடு பெருங்கலக்கம் அடைந்தது என்று இரங்கிப் பாடியமையாலும் கொற்றவள்ளையானது.ஒருவரின் உயிரைப் பற்றிக்கொள்ள காலனான எமன் கூட தக்க நேரம் பார்த்துக் காத்திருப்பான். ஆனால் உரிய காலம் எதுவும் பார்காமல் வேல்செறிந்த பகைவர்களை நீ நினைத்த நேரத்தில் அழிக்கும் தன்மை கொண்டவன்.

வேந்தே!!

எட்டுத் திசைகளிலும் எரிகொள்ளி எரிந்து வீழும்!

பெரிய மரத்தின் இலையில்லாத பெரிய கிளை உலர்ந்துபோகும்!

வெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு பல இடங்களில் செறிந்து தோன்றும்!

மேலும் அச்சம் தரும் பறவைகளும் சேர்ந்து ஒலி எழுப்பும்!

இவ்வாறு நனவில் பல தீய குறிகளைக் கண்டாய்!!பல் நிலத்தில் விழுந்தது போலவும்,

எண்ணையினைத் தலையில் தடவியது போலவும்,

ஆண் பன்றி மீது ஏறுவது போலவும்,

ஆடைகளைக் களைந்தது போலவும்,

படைக்கருவிகளிருந்த கட்டில் கீழே கவிழ்வது போலவும்,

தாங்க முடியாத அரிய பல தீய குறிகளைக் கனவில் கண்டாய்...

அதனாலென்ன...

தீய குறிகளைக் கருதாமல் போர் புரியும் வலிமைகொண்டவனே...

போர்க்களத்தில் காற்றும் நெருப்பும் கலந்து சுழல்வதுபோல இயங்கும் பேராற்றல் உடைய வளவனே!!நீ போருக்குக் கிளம்பியதை அறிந்து நின் பகைவர்கள் தம் புதல்வருடைய மலரைப் போன்ற கண்களை முத்தமிடுவர். அதன் வாயிலாக மனைவியருக்குத் தன் துன்பத்தை மறைப்பர்.

இத்தகைய துன்புறும் வீரருடன் உன்னை சினமடையச் செய்தவர்களின் நாடு மிகுந்த கலக்கத்தை அடைந்தது.

பாடல் வழியே..

1. சங்ககால மக்களின் சகுனம் பற்றிய நம்பிக்கைகளை அறிந்துகொள்ளமுடிகிறது.

2. சகுனத்தைப் புறந்தள்ளிச் செல்லும் இயல்புகொண்ட பகுத்தறிவுச் சிந்தனையையும் உற்றுநோக்கமுடிகிறது.

3. கொற்றவள்ளை என்னும் புறத்துறையும் விளக்கம்பெறுகிறது.

சனி, 21 மே, 2011

மனிதன் மாறிவிட்டான்.

பாவ மன்னிப்பு என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் இயற்றிய மனிதன் மாறிவிட்டான்.. என்ற பாடல் சிறுவயதிலிருந்தே எனக்கு மிகவும் விருப்பமான பாடலாகும்.

ஒவ்வொரு முறையும் மனிதனின் கண்டுபிடிப்புகளைப் பார்க்கும் போதும்.. எனக்கு நினைவுக்கு வரும் பாடல் இது.

போலச் செய்தல் தான் மனிதனை இந்த அளவுக்கு வளரச் செய்திருக்கிறது.
இதனை கவிஞர் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள்..

பறவை - விமானம்
எதிரொலி - வானொலி
மீன் - படகு..

மனிதன் - கணினி!!!!!!!இப்படி எல்லாமே மனிதனின் ஒப்புநோக்குச் சிந்தனைகள் தான்.'வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்


மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

ம்..ம்..ம்..ம்..
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை


மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

வெள்ளி, 20 மே, 2011

குளத்தில் மூழ்கிக் குளிச்சா..


o இன்றைய தலைமுறையில் பலருக்கு நீச்சலே தெரிவதில்லை.
o அப்படியே தெரிந்தாலும், அவர்களில் பலர் நீ்ச்சல் பள்ளிகளிலே கற்றவர்களாக உள்ளனர்.

ஏனென்றால் பல ஊர்களில் குளங்களே கிடையாது.
இருந்தாலும் அவை கிரிக்கெட் விளையாடும் களங்களாகவே உள்ளன.

நான் கிராமத்தில் வளர்ந்தவன்..
அதனால குளங்களிலே மூழ்கிக் குளிச்சுத் தண்ணீர் குடிச்சு நீச்சல் கற்றுக் கொண்டேன்.

எனக்கு நீச்சல் தெரியும்னு சொன்னாக் கூட என் நண்பர்கள் நம்ப மாட்டேங்கறாங்க..

தலைமுறை எப்படி மாறிப் போச்சு..!!

ஒரு முறை தமிழகத்தில் பெருமழை பெய்து இரு பேருந்துகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாயின. அதில் இறந்தவர்கள் பலர். அவர்களுள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற வரிசையில் திருமணம் நிச்சயிக்கப் பெற்ற இளம் வாலிபர் ஒருவரும் இருந்தார். அவரின் உடல் வலிமைக்கு பத்துப் பேரையாவது காப்பாற்றியிருக்கலாம.

நீச்சல் தெரியாததால் அவருக்கு அவரைக் கூடக் காப்பாற்றிக் கொள்ளமுடியவில்லை.

சரி ஊரில் இருந்த குளங்கள் எல்லாம் எங்கே?????? காணோம்....???????

பாலுக்கு இணையாக தண்ணீர் விற்கும் இந்தக் காலத்தில்
குளத்து நீரை விலங்குகள் கூட குடிக்க யோசிக்கின்றன.

பலர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு விலைகொடுத்து வாங்கும் குடிநீரைத்தான் கொடுக்கின்றனர்.

கிராமங்களில் சென்றால் பலர் குடிநீர்குளங்களில் தண்ணீர் எடுத்து தலையில் சுமந்து செல்வதைக் காணமுடியும்.

இப்போதெல்லாம் விலைக்கு விற்கும் குடிநீர் வண்டிகளைத் தான் அதிகம் பார்க்க முடிகிறது.குடிநீர்க்குளம் என்று ஒன்று இருந்தது என்று சொன்னால் கூட இனிவரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்.

சங்ககால வாழ்வியலைப் பாருங்கள்...


தனது பழமையான நகரத்தின் வாயிலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் நெடுஞ்செழியன் மூழ்கி நீராடினான்.

மன்றத்தில் அமைந்த வேப்ப மரத்தின் ஒளி பொருந்திய தளிரைச் சூடிக்கொண்டான்

தெளிவான ஓசையுடைய பறை முன் ஒலிக்கச் செல்லும் ஆண் யானையைப் போலப்,

பெருமையுடன், வெம்மையான போர் புரியும் நெடுஞ்செழியன் நடந்து வந்தான்.

அவனை எதிர்த்துப் போர் புரிய வந்த பகைவர் மிகப் பலரே..

பகல் பொழுது மிகவும் சிறியது.

இருப்பினும் அவனை எதிர்த்து வென்றவர்கள் யாரும் இல்லை.

பாடல் இதோ..


மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல் தவச் சிறிதே.

புறநானூறு 79
திணை - வாகை
துறை - அரச வாகை
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.
(ஒருவனாக நின்று பலரைப் போரில் வென்றமை பற்றிப் பாடுவது)


பாடல் வழியே..

1.மன்னனின் வீரம் பற்றிக் கூறும் அரசவாகை என்னும் புறத்துறை விளக்கப்படுகிறது.
2.யானை வருவதை அறிவிக்க பறை என்னும் தோற்கருவியை முழக்கியமை அறியமுடிகிறது.
3.பாண்டிய நெடுஞ்செழியனின் வீரமும், இயற்கையோடு இயைந்த சங்ககால வாழ்வியலும் அழகாக உணர்த்தப்படுகிறது.
4.நிகழ்காலத் தலைமுறையினருக்கு

குடிக்கவும், குளிக்கவும் குளங்கள் இருந்தன என்பதை நினைவுபடுத்தவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு அடையாளப்படுத்தவுமே இவ்விடுகை எழுதப்பட்டது.

வீட்டில ஏதாவது பொருள் காணவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்.
ஊருல குளமே காணமல் போனால் யாரிடம் புகாரளிப்பது..?

வியாழன், 19 மே, 2011

பணம் காய்க்கும் மரங்கள்.

1. அரசியல்
2. கிரிக்கெட்
3. கல்வி
4. சினிமா
5. ஆன்மீகம்

நாம் வீட்டுக்கு வீடு மரம் வளர்க்கிறோமோ இல்லையோ...
இதில் ஏதோ ஒரு மரத்துக்குத் தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம்!

எங்க வீட்டில..

நெல்லி மரம்.
வாழை மரம்.
கொய்யாமரம்..
அதோட கல்வி மரத்துக்குத் தண்ணீர் (பணம்) ஊற்றி வருகிறோம்.
ஆமா உங்க வீட்டில எந்த மரம் வளர்க்கிறீங்க..?

நகைச்சுவை விடுகதை.

1.கூரை வீட்டைப் பரிச்சா..
ஓட்டுவீடு!
ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!
வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!

அது என்ன?
------------------

2.அம்மா பிள்ளைத்தாச்சி
அப்பா ஊர்சுற்றி!

இவர்கள் யார்?
------------------

3.அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்..
ஆனால்,
தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது!

அது என்ன?
-----------------

4.நீரிலே பிறப்பான்..
வெயிலிலே வளர்வான்..
நீரிலே இறப்பான்..!

அவன் யார்?

-----------------

விடை கீழே...


--

--

--


--


--


--


--

--


--


--


--

--

--

--

புதன், 18 மே, 2011

தமிழன்டா!


ஏறுமுக எண்கள்

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு


10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு


5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு


300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

தகவல்களுக்கு நன்றி பிகேபி


எப்படி வாழ்ந்திருக்கின்றனர் என் முன்னோர் எண்ணிப்பார்க்கும் போதே பெருமிதம் தோன்றுகிறது.

திங்கள், 16 மே, 2011

இன்றைய தலைமுறை.


கணினிசார் வாழ்க்கை வாழும் இன்றைய தலைமுறையினருக்கு..
அடிப்படைக் கல்வி கூட இப்படி மாறிப்போனது..

அதனால் என்ன நாங்கள் இன்னும் எங்கள் தாய்மொழியில் சொல்லிக்கொடுப்போம்..

அம்மா, ஆடு, இலை,ஈ,உரல், ஊஞ்சல், எலி , ஏணி, ஐவர், ஒட்டகம்,ஓணான், ஔவையார்,எஃகு...

என்று..
எங்கள் தமிழ் மொழி உயிருள்ள மொழி அதனால்தான்...

உயிர்களைப் பற்றியே அடிப்படைக்கல்வி சொல்லித்தருகிறோம்.

இருமொழியையும் ஒப்புநோக்கிப்பாருங்கள்..


அம்மா,
ஆடு,
இலை,
ஈ,
எலி,
ஐவர்,
ஒட்டகம்,
ஓணான்,
ஒளவை


என ஓரறிவு முதல் ஆறறிவுவரை உள்ள உயிர்களைப் பற்றியே முதலில் சொல்லித்தருகிறோம்.


இணைப்பு - தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு.

தேர்வு என்றால் என்ன?


பள்ளிக்கூடமாகட்டும்..
பல்கலைக்கழகமாகட்டும்..

மாணவர்களை மதிப்பீடு செய்ய இக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகள்..

மாணவர்களின் அறிவுத்திறனை மதிப்பிடுவதாக இருக்கிறதா?
படைப்பாக்கத் திறனை மேம்படுத்துவதாக இருக்கிறதா?
சிந்தனையை வளர்ப்பதாக உள்ளதா?
அறிவுத் திறன் என்பது என்ன?
3 மணிநேரத் தேர்வில் அந்த அறிவு முழுமையும் வெளிப்பட்டுவிடுமா?
உள்மதிப்பீடு, அகமதிப்பீட்டு முறைகள் எந்த அளவுக்கு மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயனளிப்பதாக அமைகின்றன?
இன்றைய கல்விமுறையையும், தேர்வுமுறையையும் பார்க்கும்போது இப்படி ஓராயிரம் கேள்விகள் மனதில் தோன்றும்.

இது நகைச்சுவைக்கா மட்டுமல்ல..

“மனதில் நிறைய இருந்தாலும்
ஒன்றுமே எழுத வராது..

அது காதல் கடிதம்!!

மனதில் எதுவுமே இல்லாவிட்டாலும்
எழுதிக்கொண்டே இருப்போம்..

அதுதான் தேர்வு!!!“

ஞாயிறு, 15 மே, 2011

பல கோப்புகளைத் திறக்க ஒரேமென்பொருள்.செல்லும் இடமெல்லாம் கணினி வேண்டும்..
ஆனால் அதனை நாம் சுமக்கக்கூடாது..

அதிவிரைவான, எல்லாத் தொழில்நுட்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் கணினி மட்டும் வேண்டும். ஆனால் சராசரி மனிதனும் பயன்படுத்தத்தக்கதாக இருக்கவேண்டும்.

அளவற்ற நினைவுத்திறனும், கட்டற்ற கொள்திறனும், கண்ணிமைக்கும் நேரத்தில் செய்துமுடிக்கும் செயல்திறன் கொண்டதாகக் கணினி இருக்கவேண்டும். ஆனால் அதைப் பாதுகாக்க வேண்டிய தேவையிருக்கக் கூடாது..

இப்படி ஒவ்வொரு மனிதர்களின் தேவையும், எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் நிறைவேறி வருகிறது.

நான் வியந்த மேக்கணினி நுட்பம் இதையெல்லாம் நடைமுறைப்படுத்திக்காட்டியிருக்கிறது.

பயனர் முகவரியும்,
கடவுச் சொல்லுமே இனி கணினியின் மொத்த வடிவமாக இருக்கப்போகிறது.

மேகக்ணினி நுட்பம் பற்றி நான் அறிந்தபோது வியந்தது என்னவென்றால்...

மென்பொருள்கள் எல்லாம் மேகத்திலிருக்கும் அதனை கண்ணிமைக்கும் நேரத்தில் பதிவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் கணினியில் எந்த மென்பொருளையும் பதிந்து வைத்திருக்கத் தேவையில்லை என்பதுதான்.


இணையத்தில் உலவும்போது “யுனிவர்சல் வியுவர்“ என்றொரு மென்பொருளைப் பார்த்தேன். மிகவும் பயனுடையதாக,
எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக இருந்தது.

யுனிவர்சல் வியுவர் என்னும் இம்மென்பொருளால் திறக்கத்தக்க கோப்பு வகைகள்
1. எழுத்துவகை – யுனிகோடு உள்ளிட்ட எல்லா எழுத்துக்களும்
2. என்கோடிங் செய்யப்பட்ட எழுத்துக்கள்
3. படங்கள் – எல்லா வகையான படக்கோப்புகளும்
4. மல்டிமீடியா- ஏவிஐ,எம்பக், எம்பி3 உள்ளிட்ட கோப்புகளை ஏற்கிறது. விஎல்சி கோப்புகளை ஏற்க மறுக்கிறது.
5. இணையம் – இன்டர்நெட் எக்சுபுளோரின் எச்டிஎம்எல் உள்ளிட்ட கோப்புகள்.
6. பிளக்கின் – எல்லா வகையான பிளக்கின்கள்
7. மைக்ரோ சாப்டு ஆபிசு – நாம் அதிகம் பயன்படுத்தும் வேர்டு,பவர்பாயின்ட்டு, எக்செல் உள்ளிட்ட பல்வேறு கோப்புகளையும்,
8. அடாப் ரீடாரால் திறக்கத்தக்க பிடிஎப் கோப்புகளையும் திறக்கிறது.

இத்தனை வேலைகளையும் செய்ய ஒரே மென்பொருள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காமல் இருக்கும்?

இன்னும் இம்மென்பொருள் மேம்படுத்தப்பட்டு..

தற்போது பல்வேறு கோப்புகளைத் திறக்கமட்டும் பயன்படும் இம்மென்பொருள்..

அந்தக் கோப்புகளை உருவாக்கும் வகையில் எதிர்காலத்தில் வடிவமைக்கப்பட்டால் இன்னும் வரவேற்கப்படுவதாக இருக்கும் எனக் கருதுகிறேன். இம்மென்பொருளை “யுனிவர்சல் வியுவர்“ இங்கு பதிவிறக்கிப் பயன்படுத்திப்பாருங்கள் நண்பர்களே.

இரண்டாம் தரம்.


குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் சிறுவர்களுக்கான பாடல்களை அழகிய தமிழில் பாடியதால் புகழ்பெற்றவராவார். இவரைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.

இவர் ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வற்புறுத்தி சாப்பிடச் செய்தனர். கவிஞர் உணவில் சிலவற்றைத் தவிர்த்து,சிலவற்றை மட்டும் உண்ணலானார். அருகில் நின்று உபசரி்த்தவர். “ஏன் கவிஞர் சரியாகச் சாப்பிடவில்லை. சாப்பாடு நன்றாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு,

சாப்பாடு முதல் தரம்!
நான் இரண்டாம் தரம்!

என்று பதிலளி்த்தார். தான் முதலிலேயே வீட்டில் சாப்பிட்டுவிட்டேன். அதனால் இப்போது நன்றாக சாப்பிடமுடியவில்லை என்பதைக் கவிஞர் தமிழ்ச்சுவையுடன் சொன்னார்.

சனி, 14 மே, 2011

இரண்டு அடிமைகள்.


ஒரு நாள் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார்.

என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும்.
அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?
என்று கேட்டார்.

“ஐநூறு பவுண்டுகள்“ என்றார் பிளாட்டோ.
ஐநூறு பவுண்டுகளா?? இந்தப் பணத்தில் ஒரு அடிமையையே விலைக்கு வாங்கிவிடலாமே!! என்றார்.

அதற்கு பிளாட்டோ..

நீங்கள் சொல்வதும் சரிதான்.. இந்தத் தொகைக்கு ஒரு அடிமையையே வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் மகனோடு சேர்த்து இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்கள் என்றார்.

புதன், 11 மே, 2011

பெண்கள் கூந்தலில் கயிறு திரித்தவன்.


சங்க கால மன்னர்கள், அவர்களிடம் தோற்ற பகைவர்தம் மனவியரை இழுத்து வந்து அவர்களுடய தலைமுடியைக் கொய்து அதிலிருந்து கயிறு திரித்து அக் கயிற்றால் பகையரசரின் யானையப் பிடித்து இழுத்து வந்தனர். நன்னன் என்ற கொடுங்கோலரசன் இப்படிச் செய்ததை நற்றிணைப் பாடலில் காணமுடிகிறது.

பாடல் இதோ..
தடந்தாட் தாழைக் குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள்புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள்பொறி போல எம்முனை வருதல்
அணித்தகை அல்லது பிணித்தல் தேற்றாப்
பெருந்தோட் செல்வத்து இவளினும் – எல்லா
எற்பெரிது அளித்தனை நீயே பொற்புடை
விரிஉளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோ நின் விறற் தகைமையே

பரணர்
நற்றிணை -270
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி வாயில் எதிர்கொண்டது.

தலைவன் பரத்தையிடம் சென்று பின் தலைவிடம் மீண்டு வருகிறான். தலைவியுடன் தோழி தலைவனை எதிர்கொள்கிறாள் அப்போது தலைவனிடம் தோழி சொல்வதாக இப்பாடல் அமைகிறது.
பெரிய அடிப்பகுதியைக் கொண்ட தாழையின் தூறுகளால் வேயப்பட்ட குடிசை, அங்கு சோலையில் மணம் செய்யும் வண்டுகளால் தாளமுடியாதபடி மொய்த்து நறுமணம் வீசுவதும் இருளைப் போன்று விளங்குவதுமான கூந்தலைக் கொண்ட தலைவி கூந்தலில் மிக்க துகள் படியும்படி வருந்துவாள்.
அவள் நிலத்து உருளும் இயந்திரம் போலச் செயலற்று எம்முன் வருவாள்.
உன்னைப் பிரிந்ததால் அழகினை இழந்தவளாக இருப்பாள். பெரிய தோளாகிய செல்வமுடைய தலைவியை விட்டு நீங்கி அன்பில்லாத பரத்தையை நாடினை...?
ஆயினும் ஒன்றுகேள்..
அழகுடைய விரிந்த பிடரிமயிரினால் பொலிவுற்றதும், விரைகின்ற ஓட்டத்தையும் கொண்ட நல்ல குதிரைகளுடைய படைகளைக் கொண்ட பகைவர்களை வென்ற வேற்படையுடைய மன்னனான நன்னன்,
அவர்களைத் தோற்றோடச் செய்து பின்,
பகைமன்னரின் மகளிர்தம் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரி்த்தான்.
அவன் அவ்வாறு செய்த கொடுமையை விட நீ தலைவியை நீங்கி அவளைத் தவிக்கவிட்ட கொடுமை பெரிது என்கிறாள் தோழி.

இப்பாடலின் வழி.

1. உருள் பொறி போல - என்ற சொல்லாட்சி வழி, உணர்வற்ற தலைவி இயந்திர படிமம் போல இயங்கினாள் என சுட்டப்படுகிறது. சங்ககாலத்தில் வழக்கிலிருந்த கரும்பு இயந்திரம் போல உருளும் இயந்திரம் ஏதோ அக்கால வழக்கில் இருந்திருக்கும் என்பதை அறியமுடிகிறது.

2. மேலும் வென்ற மன்னன் தோற்ற நாட்டுப் பகை மன்னர் தம் மகளிரின் கூந்தலைக் கொய்து கயிறாகத் திரித்த அக்கால வழக்கத்தையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

உயிர்கள் பேசும் ஒரே மொழிஉயர்திணை - அஃறிணை
உயர்ந்தவன் - தாழ்ந்தவன்
பணக்காரன் - ஏழை
படித்தவன் - படிக்காதவன்
நல்லவன் - கெட்டவன்
ஆன்மீகவாதி - நாத்திகவாதி
தலைவன் - தொண்டன்
உள்நாட்டுக்காரன் - வெளிநாட்டுக்காரன்
தாய் மொழி - பன்னாட்டு மொழி


என எந்த வேறுபாடுமின்றி
எல்லா உயிர்களும் பேசும் ஒரேமொழி இதுதான்..

நகை

நகை இகழ்ச்சியிற் பிறப்பது, எள்ளல், இளமை, பேதமை, மடன் என்ற நான்கும் நகைப் பொருளாகும் என்கிறார் தொல்காப்பியர்.

”எள்ளல் இளமை பேதைமை மடன்என்று

உள்ளப்பட்ட நகை நான்கு என்ப” (தொல். மெய்ப். 4)

இவர்போன்றஎம் முன்னோடிகள் சொன்னதால் நானும் இதனை.....


நகை
சிரிப்பு
மகிழ்ச்சி
எனப் பெயரிட்டு அழைக்கிறென் . உங்கள் மொழியில் இதற்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்...?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

என்ற வள்ளுவரின் வாக்கு நினைவுக்கு வருகிறதா..?

செவ்வாய், 10 மே, 2011

ஊதைக் காற்று.தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

முகை – தோன்றுதல்
அரும்பு – அரும்புதல்(வளர்தல்)
மொட்டு – மலரத் தயாராகுதல்
மலர் - மலர்தல்
பூ – பூப்பதால்
வீ – வீழ்தல்
அலர்- வாடுதல்


நம் முன்னோர் இவ்வாறு ஒவ்வொரு சொற்களையும் அறிந்து உணர்ந்து காரணத்துடன் பெயரிட்டுள்ளமை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

இதோ முதல், கரு, உரிப் பொருளின் இயைபுடன் சொல்நயமும், பொருள் நயமும் கொண்ட ஓர் அகப்பாடலைக் காண்போம்..

மாக் கழி மணிப்பூக் கூம்ப, தூத்திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில்நாட்டு அம்ம – இச்சிறுநல் ஊரே

குறுந்தொகை -55 நெய்தல்
நெய்தல் கார்க்கியார்.(வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும் எனத் தோழி தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.)


தலைவன் சிறைப்புறத்தானாகக் கேட்கும் அணிமையில் நிற்க, அவன் விரைவில் தலைவியைத் மணந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்த எண்ணிய தோழி சொல்லியதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் வாராவிட்டால் தலைவி உயிர்வாழாள் என்பதை தோழி எடுத்தியம்புகிறாள்.


பெரிய உப்பங்கழிகளில் உள்ள நீலமணி போன்ற நிறத்தையுடைய நெய்தல் மலர்கள் கூம்பவும், தூய அலைகள் உடைந்து சிதறும் நீர்த்திவலைகளோடு மேகங்கள் வீசவும், தலைவனைப் பிரிந்தார்க்குச் செயலறவினைத் தோற்றுவிக்கும் அவர்கள் உடல் முழுவதும் தடவும் வாடைக் காற்றோடு உள்ளத்திற்கும் இன்னாமையைத் தருகின்ற இச்சிறிய நல்ல ஊரில் உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை சில நாட்களே ஆகும்.


மலர் கூம்புவதால் மாலைக்காலம் குறிப்பிடப்பட்டது.

 தலைவனின்றி சிலகாலமே தலைவி உயிர்வாழ்வாள் அதுவும் தலைவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையிலே வாழ்வாள் என்பதை உணர்த்துகிறாள் தோழி.

 இன்னாமையும், சிலநாள் வாழ்க்கையும் ஊரின் குறையாகாது என்பதை “நல் ஊர்“ என்ற சொல் விளக்குகிறது.

 களவுக் காலத்தில் தலைவனுடன் சில காலம் இன்பம் துய்க்க உதவியதால் இந்த ஊரானது “சிறு நல் ஊர் “ எனப்பட்டது.

 வாடைக்காற்று அலைநீர்த்திவலைகளுடன், மழைத்திவலைகளையும் வீசிப் பிரிந்தோர்க்கு துன்பம் செய்வதால் இன்னாத உறையுளை உடைய ஊரானது. என்ற கருத்தின் வழி தலைவியின் நிலை மிக அழகாக உணர்த்தப்பட்டுள்ளது. உயிரைக் கொல்ல வில்லும, வேலும் கூடத் தேவையில்லை மெல்லிய காற்றே போதும் என்ற கருத்தை மிக அழகாகப் புலவர் வெளிப்படுத்துகிறார்.

 முதல் (நிலமும், பொழுதும்) கரு , உரிப் (இரங்கல் நிமித்தம்) பொருள்களை புலவர் மிக அழகாக இயைபுபடுத்தியுள்ளமை பாடலுக்கு மேலும் சிறப்பளிப்பதாக அமைகிறது.

 நெய்தல் நிலத்தை இவ்வளவு அழகாகப் பாடியதால் தான் இப்புலவர் நெய்தல் கார்ககியார் எனப் பெயர்பெற்றார் என்பதை இவரின் பெயரின் வழி உணரமுடிகிறது.

தமிழ்ச்சொல் அறிவோம்.

மாக்கழி – கரிய உப்பங்கழி
மணிப்பூ – நீலமணி போன்ற நிறமுடைய பூ
மங்குல் – மேகம்
உறையுட்டு – இருப்பிடம்
தூத்திரை – தூய அலை
துவலை – நீர்த்திவலை
தைவரல் – தடவும்
ஊதை – வாடைக் காற்று. (ஊதுவதால் ஊதையானது)

திங்கள், 9 மே, 2011

மந்தைஉணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு இது.

அரசியல் கூட்டங்கள்
வழிபாட்டு கூடல்கள்
விளையாட்டுத் திடல்கள்

இங்கெல்லாம் மக்களின் பெரிய கூட்டத்தைக் காணும்போதெல்லாம் வியப்பாக இருக்கும். எவ்வளவு பெரிய கூட்டம் என்று...

நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் தகுதியிருந்தும் சிந்திக்காத...
கைதட்ட மட்டுமே தெரிந்த மக்கள் கூட்டத்தைக் காணும்போது..


கவிஞரின் இந்தக் கவிதை எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது என்பது புரிகிறது.

ஞாயிறு, 8 மே, 2011

இல்லோர் பெருநகை.
கடவுளின் பெயரால் நடத்தப்படும் நாடகங்களுக்கு நம் நாட்டில் குறைவே இல்லை.
கடவுளின் தூதுவன் என்றும்..
நான் தான் கடவுள் என்றும்..
காலந்தோறும் சொல்பவர்களை மக்கள் நம்பித்தான் வந்திருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்தால் விவரம் தெரிந்த பலருக்குச் சிரிப்புத்தான் வரும்.
இது இன்றுநேற்றல்ல பல்லாயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கிறது.

சங்ககாலக் காட்சி ஒன்று..


தலைவனின் பிரிவுகாரணமாகத் தலைவியின் உடல் மெலிவடைகிறது. இது ஏதோ சாமிகுத்தம் தான் என எண்ணிய செவிலி வெறியாட்டு எடுக்கிறாள். தலைவியின் மெலிவுக்குக் காரணம் தலைவன் தான் என்ற உண்மையை அறிந்தவர்கள் தலைவன்,தலைவி, தோழி, ஆகிய மூவரும் தான்.அதனால் வீட்டில் உள்ளோர் எடுக்கும் வெறியாட்டு பெரு நகைப்பிற்கு இடமளிப்பதாக இவர்களுக்கு அமைகிறது. பாடல் இதோ..


மென்தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்
அது என உணரும் ஆயின் ஆயிடைக்
கூழை இரும்பிடிக் கைகரந்தன்ன
கேழ்இருந் துறுகல் கெழுமலை நாடன்
வல்லே வருக – தோழி – நம்
இல்லோர் பெருநகை காணிய சிறிதே!

தீன்மதிநாகன்
குறுந்தொகை -111
குறிஞ்சி.

(வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு, வெறியாட்டு எடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.)

தலைவியின் உடல்மெலிவு அறிந்து, செவிலி, வேலனை அழைத்து வெறியாட்டு எடுத்தாள். அப்போது தலைவியின் உடல் மெலிவு முருகக்கடவுளால் வந்தது என்று வெறியாடும் வேலன் வெறியாடி உரைப்பான். தலைவியின் நிலைமையை சிறைப்புறமாக இருக்கும் தலைவனுக்குத் தோழி புரியவைப்பதாக இப்பாடல் அமைகிறது.

முருகக் கடவுளுக்கான வேலைக் கையில் ஏந்தி ஆவேசமுற்று ஆடுபவன் வேலன். இவனைப் படிமத்தான் என்றும் கூறுவர். தலைவியின் நோய் முருகனால் நேர்ந்தது என்று சொல்லும் வேலனின் சொல்லுக்குத் தாய் உடன்படுவாள். தலைவியின் நோயின் காரணம் அறிந்தவன் தலைவன், தலைவி, தோழி ஆகிய மூவருமே ஆவர். அதனால் வெறியாடு களத்திற்குத் தலைவன் வருதலைத் தோழி விரும்பினாள்.

தன்னுடைய கைச் சேற்றிலே மறைந்து தோன்றும் கரிய நிறமுடைய பெண்யானை போல விளங்கும் கரிய நிறமுடைய செறிந்த பாறையையுடைய நாடன் நம் வீட்டில் உள்ளோர் நாணும் பொருட்டு வேலன் மேல் ஆவேசித்து முருகப் பெருமான் வருவதற்குச் சிறிது முன்பாகவே விரைந்து வருவானாகுக என்பதை உணர்த்துகிறது இப்பாடல்.


வெறியாட்டு பற்றி தமிழ்த்தோட்டம் இணையதளத்தில் வெளியான கட்டுரை..

• வெறியாட்டு பற்றிய விக்கிப்பீடியாவின் பதிவுகள்.

வெறியாட்டு என்பது சங்க கால வீட்டுவிழா.
தலைவியைத் துய்த்த தலைவன் தலைவியிட்ம் வராமல் 'ஒருவழித் தணந்து' நிற்பதும், தலைவி தலைவனை எண்ணி உடல் இளைப்பதும், இந்த இளைப்புக்கான காரணத்தை அவளது தாய் வேலனையோ, குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டையோ கேட்டறிவதும், அவர்கள் முருகன் அணங்கினான் என்பதும், வெறியாட்டு அயர முருகன் சினம் தணிந்து மகள் நலம் பெறுவாள் என்பதும், தாய் மகளுக்கு வெறியாட்டு விழா நடத்துவதும் வெறியாட்டு எனப்படும். இதனை முருகயர்தல் என்றும் கூறுவர்.
தலைவன் தலைவியைத் துய்த்தான். அவன் ஏக்கத்தால் தலைவி மெலிந்தாள். மெலிவுக்குக் காரணம் தாய் ஆராய்ந்தது பற்றியும், வெறியாட்டு விழாக் கொண்டாடியது பற்றியும், விழாவுக்குப் பின் நிகழ்ந்தது பற்றியும் பெண்புலவர் வெறிபாடிய காமக் கண்ணியார் தன் இரு பாடல்களிலும் கூறியுள்ள செய்திகளின் தொகுப்பு இது.
• தலைவன் தலைவி உறவு தாய்க்குத் தெரியாது.
• தலையளி செய்யாத தலைவனை நினைந்து ஏங்கும் தலைவி உடல் மெலிந்துபோகிறாள். அதனால் அவளது கைவளை கழல்கிறது.
• தலைவி மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டைக் கேட்கிறாள். அவளும் அவளைச் சேர்ந்தவர்களும் 'பொய்வல் பெண்டிர்'. அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி சொல்கிறாள்.
• குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம் தணியும் என்கிறாள்.
• அதன்படி விழாக் கொண்டாடினர்.
• அந்த விழாவை முருகாற்றுப்படுத்தல் என்றும் கூறுவர்.
• மகளின் அழகு முன்பு இருந்ததைவிட மேலும் சிறக்கவேண்டும் எனத் தாய் வேண்டிக்கொள்வாள்.
• மனையில் இன்னிசை முழங்கப்படும்.
• விழாவுக்குக் களம் அமைப்பர். அகன்ற பந்தல் போடுவர்.
• முருகாற்றுப்படுத்தும் பெண்ணுக்கு வெள்ளெருக்கு மாலையும், கடம்பு மாலையும் அணிவிப்பர்.
• வேலன் வீடெங்கும் எதிரொலிக்கும்படி முருகன் பெயர் சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுவான்.
• (மறி என்னும் ஆட்டுக்குட்டியைப்) பலி கொடுப்பான்.
• அதன் குருதியில் கலந்து தினையை மனையெங்கும் தூவுவான்.
• பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டுவது போல வெறியாடு மகளைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பான்.
இதுதான் வெறியாட்டு.

சனி, 7 மே, 2011

காமம் என்பதென்ன நோயா..?
கமம் என்றால் நிறைவு அன்பின் நிறைவே காமம் ஆகும். இன்றோ காமம் என்றால் இழிவாக நோக்கும் அளவுக்கு மக்களின் பண்பாட்டுக் கூறுகள் மாற்றமடைந்துள்ளன.


love love,
they say.
love
is no disease,
no evil goddess.

Come to think of it,
dear man
with those great shoulders,
love is very much like an old bull,

enjoys a good lick
of the young grass
on the slope
of an old backyard:

a fantasy feast,
that’s what love is.

இந்தப் பாடலை எங்கோ பார்த்தது போல கேட்டதுபோல இருக்கிறதா..?
ஆம் நம் குறுந்தொகைப் பாடல் தான் இது..

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந்தாங்கு
விருந்தெ காமம் – பெருந்தோளோயே!

மிளைப்பெருங்கந்தன்
குறுந்தொகை – 204
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.
தலைவியால் உள்ளம் அழிந்து, உடல் மெலிந்து,தளர்ந்த தலைவனைக் கண்டு, பாங்கன் காமத்தின் இயல்பினைக் கூறி,இடித்துரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

அணங்கு தாக்கிய வழி உள்ளம் தளர்வதுபோலத் தலைவன் உள்ளம் மெலிந்தான். நோயுற்றவழி உடல்மெலிவதுபோல ஆற்றலும் அழகும் இழந்தனன் அவன் பாங்கனால் தன்குறை முடித்தல் எண்ணி பாங்கனிடம் கூறினான்.

விருந்துணவை உண்டபின் உடல் வலிமை பெறும். உள்ளம் மகிழ்ச்சியுறும். ஆனால் காமமாயின் துய்த்தபின் உடல் மெலியும். உள்ளம் துன்புறும். காமம் விருந்து போன்றது என்ற தலைவனுக்குப் பாங்கன் அது விருந்து அன்று என்பதை உணர்த்தினான்.

தான் கறிக்க இயலாத இளம் புல்லை விரும்பிய முதிய பசு, அதனை நாவால் தடவி இன்புற்றமை போல, தன்னால் பெற இயலாத ஒருத்திக்காக வருந்தும் நிலை தக்கதன்று எனப் பாங்கன் எடுத்துரைத்தான்.
இளம்புல் – தலைவிக்கும்
முதைச்சுவலாகிய மேட்டுநிலம் – தலைவியின் இல்லத்திற்கும்
தலைவன் – முதிய ஆவாகிய பசுவுக்கும்
நாவல் தடவுதல் – தலைவியைப் பெறுதல் பொருட்டுத் தலைவன் உடலும் உள்ளமும் மெலிந்தமைக்கும் உவமையாய் இருத்தலைச் சுட்டிக்காட்டிய பாங்கன் காமத்தின் நிலையை விளக்கினான். காமம் நினைப்பளவில் தான் இன்பமளிக்கும் என்பதை உணர்த்தினான்.

காமம் அறிவுடையார்பால் தோன்றாது என்றும்,மனத்தின் வழிச் செல்வார்க்கு அது விருந்தாய் இன்பம் தருவது என்பதையும் சுட்டினான். இதே போல சொற்சுவையும் , பொருட்சுவையும் கொண்ட இன்னொருபாடல்.............


பாடல் இதோ..

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுதலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள்பதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப பெறினே.

மிளைப்பெருங்கந்தன்
குறுந்தொகை 136
தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

(காமத்தின் இழிவினைக் கூறி இடித்துரைத்த நண்பனிடம் காமத்தின் உயர்வைத் தலைவன் எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைகிறது)

காமத்தை, உலகினர் காமம் காமம் என இழிவாகக் கூறுகின்றனர்.
காமம் என்பது புறத்தே நின்று தாக்கும் தெய்வமும் அன்று.
உடலை மெலிவிக்கும் நோயும் அன்று.
காமமானது பேயும் நோயும் போல காணப்படாததாய் சிறுகிப் பெருத்தலும், பெருகிச் சிறுத்தலும் உடையதன்று.
யானையானது, அதிமதுரத் தழையை மென்று தின்று அதனால் உண்டாகிய மதத்தைப் போலத் தாம் காணுநரைத் தமக்கு உரியராகப் பெற்றால், காமம் பெருகி நீண்ட காலம் நிற்கும் இயல்புடையது.


காமம் கிழப்பசுவுக்கு விருந்தாற்றும் இளம்புல் போலன்றி,
களிற்று யானைக்கு மதம் பெருக்கும் அதிமதுரத்தழை போன்றது எனத் தலைவன் பாங்கனுக்குக் காமத்தின் வலிமையை உணர்த்தினான்.

காமம் என்பது....

பசி,
உறக்கம்,
போல இனிய உணர்வு!
உயிரின் தேடல்!
உடலின் தேவை!

ஆனால் சரியான துணையைப் பார்த்ததும், சரியான நேரத்தில் வெளிப்பட்டால்தான் அதற்கு உணர்வும், சிறப்பும் உண்டு என்பதை இவ்வகப்பாடல் அழகாக எடுத்தியம்புகிறது.


வெள்ளி, 6 மே, 2011

குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள்
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்களைத் தேந்தெடுக்க நல்ல தளங்களின் இணைப்பு.

கன்னற்றமிழ்ப் பெயர்களின் பட்டியல்

நம்முடைய அழகுத்தமிழ் மொழியில் எத்தனையோ தமிழ்ப்பெயர்கள், அதுவும் அழைக்கும்போதே நாவில் பனிக்குழைவாய் இனித்திடும் இன்பத்தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து தச்சு/ புச்சு/ என்று பொருள் விளங்காத பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைப்பதனால், யாருக்கு என்ன பயன்! கடவுளர் பெயர்களாவது பரவாயில்லை; எந்தவிதமான சிறப்புக் காரணப் பொருளுமே இல்லாத லீலா, ரமண்யா, தீபா, என்பதைப் போன்ற பெயர்களை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல தமிழ்ப்பெயர்களை தேடுகின்ற இணையருக்காக கீழே ஆண்/பெண்களுக்கான தமிழ்ப்பெயர்களை தரப்பட்டிருக்கின்றன. இவ்விணையதளத்துக்குச் சென்று பாருங்களேன்.
இத்தளம் செல்ல (புதுச்சேரி) இங்கே சொடுக்கவும்.குழந்தைகளின் பெயர்களுக்கான பொருள் தெரியவேண்டுமா..?
அன்புதமிழ்
என்னும் இணையதளத்துக்குச் செல்லுங்கள்..நல்ல தமிழ்பபெயர்களைத் தொகுத்துத்தரும் தஞ்சை இறையரசனின் வலைப்பதிவு

ஆண்குழந்தைகளுக்கான அழகான தமிழ்ப்பெயர்கள்.
ஈகாரை தமிழ்க்களஞ்சியம்

கடவுளர் பெயர்களுக்கான பொருள் அறிய இந்த பக்கத்துக்குச் செல்லுங்கள்.

செவ்வாய், 3 மே, 2011

மனம் என்னும் இயங்குதளம்.மனம் இருப்பதாலேயே நாமெல்லாம் மனிதரானோம்.
மனிதனை மாதிரியாகக் கொண்டே கணினியின் ஒவ்வொரு பகுதிகளும் உருவாக்கப்பட்டன. நாளுக்கு நாள் கணினி புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும்...
மனிதனுக்கு இணையான, மனிதனை விட அதிக கொள்திறனும், செயல்திறனும் கொண்ட கணினியை இனி வரும் காலங்களிலும் கூட உருவாக்க இயலாது என்பது என் கருத்து.

மனமானது இயங்குதளம் (ஆப்ரேட்டிங் சிசுடம்) போன்றது. இயங்குதளம் என்றதும் ஒவ்வொருவருக்கும் தாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயங்குதளங்கள் நினைவுக்கு வரும்.
லினெக்சு, விண்டோசு என ஒவ்வொரு மனிதக் கணினிகளும் ஒவ்வொரு இயங்குதளங்களைக் கொண்டு இயங்குகின்றன.

சில இயங்குதளங்கள் சில மென்பொருள்களை ஏற்றுக்கொள்ளாது.
சில இயங்குளங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு உடன்படாது.


என இந்த இயங்குதளங்களைப் போலவே..

மனித மனங்களும் சில புதிய மரபுகளையும், நாகரீகங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.
புதிய தலைமுறையின் எண்ணங்களுடன் உடன்பாடாது நிற்கின்றன.
எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதில் வேறுபட்டுநிற்கின்றன.

கண்ணுக்குத் தெரியும் கணினி என்னும் வன்பொருள் கண்ணுக்குத் தெரியாத இயங்குதளத்தோடு ஒத்து செயல்பாட்டால் தான் கணினி நன்கு செயல்படும்.

அதுபோல கண்ணுக்குத் தெரியாத மனம் என்னும் இயங்குதளம் மனித உடல் என்னும் கணினியுடன் (வன்பொருளுடன்) இணைந்து செயல்பட்டால்தான் மனிதன் மனிதன் என்னும் பெயர் பெறமுடியும்.


ஒரு நகைச்சுவை..

 குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.

இதோ இந்த இயங்குதளம் இயங்குவதில் மனித வன்பொருளோடு வேறுபட்டு நிற்கிறது.

கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதால் பலநேரங்களில் நாம் இயங்குதளங்கள் இருப்பதையே மறந்துபோவோம்.


பழைய கணினி – பழங்கால மனிதன் – செயல்திறன்
புதிய கணினி – இக்கால மனிதன் – செயல்திறன்

என ஒப்பிட்டு நோக்கினால் ஒரு உண்மை புரியும்.
ஆம் மனம் என்னும் இயங்குதளம் பெற்றதாலேயே விலங்குகளிலிருந்து நாம் இன்று வரை வேறுபட்டு வாழ்கிறோம்.
இந்த உண்மை, இதனை,

இரண்டு துறவிகள் ஒரு கொடியைப்பற்றி விவாதம் புரிந்தனர்.ஒருவர் கூறினார்,''கொடி அசைந்து கொண்டிருக்கிறது..''அடுத்த துறவி சொன்னார்,''காற்று அசைந்து கொண்டிருக்கிறது.''அப்போது அந்தப்பக்கம் ஒரு ஞான குரு வந்து கொண்டிருந்தார்.அவர் கூறினார்,''கொடியுமல்ல,காற்றுமல்ல, உங்கள் மனம் அசைந்து கொண்டிருக்கிறது.''

இந்தக் காட்சி அறிவுறுத்தும். இங்கு மனம் – இயங்குதளத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

சங்கக் காட்சி ஒன்று....

தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணினான் தலைவன். ஆனால் பாலைநிலத்தின் கொடுமை தலைவி அதனைத் தாங்க மாட்டாள் என்பதை அறிவுறுத்தியது. அதனால் வழியருமை கூறித் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தான்.

உன்னை நீங்கித் தலைவி தனித்து இருந்து படும் துன்பத்தைவிட பாலை நிலம் அத்தகைய கொடுமையானதன்று என்பதைத் தலைவனுக்குப் புரியவைக்கிறாள் தோழி....

தலைவ!!

உன்னுடன் வந்தால் கொடிய பாலை வழி கூட தலைவிக்கு இனிமையுடையதாகும். அவளும் விழாக் கோலம் கொண்டவளாக மகிழ்ந்திருப்பாள்.

ஆனால் உன்னை நீங்கி அவள் தனித்திருந்தால்,

உமணர்கள் தங்கி்ச சென்ற பாழ்பட்ட ஊர்போலக் காட்சியளிப்பாள்.

(தங்கள் பொருள்களுடன் கூட்டம் கூட்டமாகப் பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்வர். உப்பு வண்டிகளைத் தாம் தங்கும் .இடத்தில் நிறுத்துவர். எருதுகளைத் தறிகளில் கட்டுவர். இரவு தங்கி உணவு உண்டு மகிழ்ந்து பிற இடங்களை நாடிச் செல்வர். அவர்கள் நீங்கிச் சென்ற பின் அவர்கள் தங்கிய இடமானது, பாழ்பட்ட ஊர்போலக் காட்சிதரும்.)

பாடல் இதோ..

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ – பெரும – தமியர்க்கு மனையே!

124 குறுந்தொகை (பாலை)
பாலை பாடிய பெருங்கடுங்கோ.

புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.

(தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணிய தலைவன் பாலைநிலத்தின் கொடுமை எண்ணி அஞ்சிய சூழலில், தோழி சொல்லியது.)


பாடலின் நுட்பம்

 இங்கு கொடிய பாலை நிலம் இனிமையுடையதாகவும்.
இனிய வீடு கொடிய பாலை நிலத்தின் தன்மைகொண்டதாகவும்.
உணர்ந்துகொள்ளப்படுகிறது.
 மனம் என்னும் இயங்குதளம் இங்கு சூழல் என்னும் மென்பொருளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மாற்றிப்புரிந்துகொள்கிறது.
இயங்குதளத்தோடு ஒவ்வாத மென்பொருள்களை நாம் கணினியில் நிறுவக்கூடாது அதுபோல மனதுக்கு ஒவ்வாத செயல்களை நாம் செய்யக் கூடாது. சில நேரங்களில் நாம் மனம் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

இங்கு உண்மை என்னவென்றால் பாலை கொடுமையானது.
வீடு இனிமையானது என்பதுதான்.
ஆனால் மனமோ (இயங்குதளம்) தனித்து வீட்டில் இருப்பது தான் கொடுமையானது பாலை இனிமையானது என்று சொல்கிறது.

இங்கு மனம் என்னும் இயங்குதளம் சொல்லும்படி கேட்டால்தான் உடல் என்னும் வன்பொருள் செயல்படமுடியும். இல்லாவிட்டால் இவ்வியங்குதளம் வன்பொருளை (உடல்) முடக்கிவிடும்.

பாடல் வழியே..

 மனம் – இயங்குதளம் ஆகியன ஒப்புநோக்கியரைக்கப்பட்டுள்ளன.
 உடன்போக்கு – தலைவன் தலைவியை பெற்றோர் அறியாது கூட்டிச் செல்வது என்னும் அகத்துறை விளக்கப்பட்டுள்ளது.
 உமணர்களின் பழக்கவழக்கம் உரைக்கப்பட்டுள்ளது.
 பாலை நிலத்தின் கொடுமை சொல்லப்பட்டுள்ளது.
 ஆழ்மனதின் நுட்பமான நிலைகள் இயம்பப்பட்டுள்ளன.
தமிழ்சசொல் அறிவோம்

உமணர் – உப்பு வணிகர்
கழிந்த – நீங்கிய.
தமியர் – தனித்திருப்போர்.

ஞாயிறு, 1 மே, 2011

களவும் கற்று மற.. - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 25

குறுந்தொகை 25

பறவைகள், விலங்கினங்கள் எல்லாம் எங்குபோய் திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றன. அவற்றுக்கு திருமண முறிவு என்றால் எங்கு நடக்கும்..? 

மனிதனும் ஒரு காலத்தில் அப்படித்தான் வாழ்ந்து வந்தான். ஒருவன் பலரோடு வாழ்ந்த காலமும் உண்டு. களவுக்கும் கற்புக்கும் (காதலும், திருமணமும்) இடையேதான் தமிழர் மரபு இன்று வரை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 

கற்பு என்றால் என்ன? கற்பு என்பது ஏதோ பெண்களுக்கு மட்டும் இருக்கவேண்டிய ஒன்று என்ற சிந்தனை என்று தோன்றியதோ அன்றே திருமணத்துக்கான தேவையும் தோன்றிவிட்டது. ஆம் கற்பு என்பது ஒழுக்கம். அது ஆண்,பெண் இருபாலருக்குமே பொதுவானது. ஆனால் சில ஆண்கள் பெண்களைக் காதலி்த்துவிட்டு ஏமாற்றிய சூழலில் தான் இவர்களைக் கட்டுப்படுத்த திருமணம் என்ற சடங்கு பெரியோர்களால் உருவாக்கப்பட்டது.