வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 31 மே, 2010

எதிரி.

உன் நண்பனை அளவோடு நேசி!

ஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்!

உன் எதிரியை நேசிக்கக் கற்றுக்கொள்!

ஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்!
ஓட்டம்.

ஏழை மனிதன் உணவுக்காக ஓடுகிறான்!

பணக்காரன் உண்ட உணவு செரிப்பதற்காக ஓடுகிறான்!ஒரு மனிதனுக்கு வெற்றியைக் கற்பிக்கும் குரு யார் தெரியுமா?

பெற்றோர் - 10 %
உறவினர்கள் - 1%
நண்பா்கள் - 6%
காதலர்-3%
ஆசிரியர்-5%
தோல்வி-75%


தவறுகள்தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கும்!
அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கும்!

செவ்வாய், 18 மே, 2010

அந்தியிளங்கீரனார்.
இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் அழகு நிறைந்துள்ளது.

நிலம், நீர், தீ, காற்று, வான் என ஐந்து இயற்கைக் கூறுகளில் நாம் வாழ்ந்தாலும், தாமரை இலை மேல் நீர்த்துளி போல இயற்கையை நீங்கி நம்மால் வாழ முடிகிறது?

உண்மையைச் சொல்லுங்க நீங்க வானத்தைப் பார்த்து எத்தனை நாளாகிறது?


நிலவு, நட்சத்திரம், வானவில், மின்னல், மழை இவற்றையெல்லாம் திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்க்கப் பழகிக்கொண்டோம்.

இருந்தாலும் இவையெல்லாம இயற்கையில் அன்றாடம் நம்மைச்சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை மறந்துபோனது தான் கொடுமை!

மாலைக் காலத்தைப் பாடாத கவிஞர்களே இல்லை. இக்காலக் கவிஞர்களுள் குறிப்பி்டத்தக்கவர் வைரமுத்து அவர்கள். அவரின் “ அந்தி “ என்னும் கவிதை அந்தியின் அழகை காட்சிப்படுத்துவதோடு, இன்றைய இயந்திர மனிதர்களைப் பார்த்து நறுக்கென்னும் கேள்விகளைக் கேட்கிறது.

அந்தி


யாரங்கே?
இராத்திரி வரப்போகும்
இராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?
இத்தனை வண்ணக் கோலம்
ஏனங்கே?

ஓ!
அது
இரவின் வாசலென்றா
இத்தனை அலங்காரம்?

என்ன அது?
தீயில் அங்கே
தேன்வடிகிறதா?

அங்கே
வழிந்தோடுவதெல்லாம்
வானத்துக்கு
ஒரு
பகலை பலிகொடுத்த
இரத்தமா?

இத்தனை
வர்ணப் புடவைகளைக்
கலைத்துப் போட்டும்.....
கடைசியில்
இரவு
கறுப்பைத்தானே
கட்டிக் கொள்கிறது?

நீலத் திரையில்
யாரோ
வரையக் கொண்டுவந்த
வர்ணக் கிண்ணம் -
சூரியனில் தடுக்கிச்
சிந்தி விட்டது!
ஆனால்.....
சிந்தியதெல்லாம்
சித்திரமானது!

புரிகிறது!
மரணப் படுக்கையில்
பகல்
புன்னகைக்கிறதா?

விடைபெறும் சூரியன்
உள்ளங் கையை
உரக்க அசைக்கையில்..
தங்க மோதி்ரங்கள்
தகதகக்கின்றன்!

என் கிராமத்து சோதரி
ஒரு
கிழிந்த பாவாடைக்காரி
கேட்கிறாள்:

"இந்த வானமும் ஏன்
என்னைப் போல்
ஒட்டுப் போட்டு ஆடை
உடுத்துகிறது?"

வானத்தின்
வர்ண மாநாடு அந்தி

பூமியின் பொன்முலாம் அந்தி

உழைத்தவன் கரமா இந்த அந்தி

முத்தமிட்ட கண்ணமா இந்த அந்தி

வானம் துப்பிய தாம்பூலமா இந்த அந்தி

பழுத்த பகலா இந்த அந்தி

சூரியனின் இரத்த தானமா இந்த அந்தி


பாவி மனிதர்களே
பணம் தேடும் மனிதர்களே

நீங்கள் பாராமல் போல பௌர்னமிகள் எத்தனையோ?

அள்ளிப் பருகாத அந்திகள் தான் எத்தனையோ?

வானத்தை விழுங்கும் வசதி உமக்கு இருந்தும்
பட்டினியால் மரிக்கும் பரிதாபம் எத்தனையோ?

கதிரவன் மரணம் கூட கண்ணுக்கு அழகுதான்

ஓ செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

ஒவ்வோர் அந்தியும்
ஓர் சாயங்காலக் கவிதை
இதை மொழிபெயர்க்க வேண்டாம்
எந்த லிபியிலும் வாசிக்கலாம்!

இந்த வண்ணங்கள் குடிக்க
கண்ணிரண்டு போதுமா
அடே கௌதமா
என் உடம்பெல்லாம் கண்ணாகச் சபிக்க மாட்டாயா?

வாழும் மனிதர்களே வயிற்று மனிதர்களே

புதையலை வானத்தில் போட்டுவிட்டு
பூமிக்குள் என்னதான் தேடுவீர்கள்?

நீங்கள் நாளைகளை சேமிக்கும் அவசரத்தில்
இன்றையல்லவா அன்றாடம் தொலைக்கிறீர்கள்.

குனிந்து குனிந்தே கூன் விழுந்த மனிதா

வான் பார்க்க நிமிர்!

வானம் முழுக்க உனக்கு
நீ ஏன் வரப்புக்குப் போராடுகிறாய்?

வானத்தைக் கழித்தவனுக்குப் பூமியில் பங்கு இல்லை

வானம் ஒரு நூலகம்
இன்னும் வாசகர் தேவை!

அந்தி ஒரு பந்தி
இன்னும் விருந்தினர் தேவை!

இரவி வர்மனைக் கூப்பிடுங்கள்
அவன் பயன்படுத்தாத வண்ணங்கள் பாக்கியுள்ளன!

காஞ்சிபுரம் தோளர்களே
எந்த தரியில் நெய்வீர்கள்
இப்படியொரு சித்திரச் சேலையை!

பத்மா இந்த வானம் போல் உங்களால்
பாவம் மாற்ற முடியுமா

மனிதா
ஒவ்வோர் அந்தியும் உயிரின் மருந்து
ஆசை தீர அந்தியை அருந்து

உலகத்தில் பெரிய திரையில் வரையப்பட்ட
அரிய ஓவியம் அந்தி!


- வைரமுத்து
இந்தக் கவிதையையும் கவிஞரையும் தெரிந்த அளவுக்கு, “அந்தியிளங்கீரனார்“ என்னும் சங்கப்புலவரை நாமறிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தியை அழகுறப் பாடியதாலேயே இப்புலவர் “அந்தி - இளங்கீரனார்“ என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். வைரமுத்துவின் அந்தி பற்றிய இக்கவிதைக்கு அந்தியிளங்கீரனாரின் இக்கவிதையும் ஒரு சிந்தனைத் திறவுகோலாக இருந்திருக்கலாம்.தலைவன் பொருள் தேடப் பிரிந்தபோது, அவன் பிரிவைத் தாங்காதவளாக தலைவி வருந்தினாள். அப்போது தலைவியிடம் தோழி சொல்லியது.

பாடல் இதோ,
 

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் 5
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, 10
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் 15
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
இது கொல் வாழி, தோழி! என் உயிர்  
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

அகநானூறு -71 பாலை - அந்தியிளங்கீரனார்.

(பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது.)
 

பாடலின் பொருள்.

வண்டுகளின் கூட்டம் சுனையில் மலர்ந்த மலர்களைவிட்டு, மரக்கிளைகளில் உள்ள மலர்களை நாடிச் செல்கின்றன.

வண்டுகளின் செயல், செல்வம் குறைந்தவர்களால் பயனில்லை என்றுணர்ந்தர்வகள் அவர்களின் தொடர்பைவிட்டு செல்வம் நிறைந்தவர்களை நாடிச்செல்லும் அன்பில்லாத மக்களைப் போல உள்ளது.
 
குற்றமற்ற மான் கூட்டம் இருள் படர்ந்த அந்தி வானம் கண்டு அஞ்சுகிறது.

(இது போலத்தானே ஒருகாலத்தில் அந்தியைக் கண்டு ஆதிகால மனிதனும் அஞ்சியிருப்பான்!)

உலையில் செந்நிறமாக வெந்து பிறகு மெல்ல ஆறிவரும் இரும்பு போல அந்திவானம் மலர்கிறது.


பகற்பொழுதை வழியனுப்பி, இரவுப்பொழுதை வரவேற்கும் இம்மாலைக்காலம் காதலரைப் பிரிந்து தனிமையில் வாடுவோரைக் குறிவைத்து கூர்மையான வேலை எறிகிறது.

உருவங்காணும் கண்ணாடியின் அகத்தே ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கினாற்போல், சிறிது சிறிதாகக் குறைந்து வந்து, என் வலிமை மாய்க்க எண்ணியிருந்தது இவ்வந்திப்பொழுது!

மிக்க கடிய சூறாவளி அலைப்ப, அசையும் மரத்திலுள்ள பறவை
போல, மிகவும் அழிவுற்று என்னுயிர் இவ்வுடலைத் துறந்தேகும் காலம், இதுவோ ?


என்கிறாள் தோழி. இவ்வந்திப் பொழுது காதலரைப் பிரிந்து வாடும் உன்னை மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் துன்பமளிப்பதாகத் தான் இருக்கிறது என்று ஆற்றுவிக்க ஆற்றுப்படாத தலைவியிடம் மாலைக் காலத்தின் தன்மைகளை எடுத்தியம்புகிறாள் தோழி.


இப்பாடல் வழி அந்தியின் அழகும், அழகான அகவாழ்வியலும் எடுத்தியம்பப்படுகிறது.

புதன், 12 மே, 2010

எண்தேர் செய்யும் தச்சன்.என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின்றவர். (குறள் -771)

படைச்செருக்கு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் இக்குறளைச் சுட்டிச் செல்கிறார்.

பகைவர்களே, எம் தலைவனை எதிர்த்து அவன் முன்னே நிற்காதீர்கள். அவனை எதிர்த்து நின்றவர்களெல்லோரும் இப்போது நடுகல்லாக நிற்கிறார்கள் என்பதே இதன் பொருளாகும்.

இந்த குறள் சுட்டும் சூழல் போலவே ஔவையார் பாடிய புறப்பாடல்,


களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே.


திணை - தும்பை
துறை - தானை மறம்

அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது.


தானை - படை (படைகளின் வலிமையும் வீரமும் கூறுவது தானை மறமாகும்)

பகைவீர்!
போர்க்களம் புகுதலைத் தவிருங்கள்.
போரை எதிர்நோக்கியவனாக எம்மிடத்தும் ஒருவன் உள்ளான்.
அம்மறவன்,
ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன்,
ஒரு மாதம் முயன்று செய்த ஓர் தேர்க்காலுக்கு ஒப்பானவன்!


அதனால் அவனை எதிர்ந்து நீங்கள் அழிந்து போகவேண்டாம் என்று “களம் புகல் ஓம்புமின் என்றார்.

இப்பாடலில் அதியமானின் வீரத்தை படைவீரனின் வீரமாகக் கூறியதால் “தானை மறமானது“


பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.


• “தும்பை“ என்னும் புறத்திணை விளக்கப்படுகிறது.

• “தானை மறம்“ என்னும் புறத்துறையின் பொருள் சுட்டப்படுகிறது.

• அதியமானின் வீரமும், ஔவையார் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் இப்பாடல் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

திங்கள், 10 மே, 2010

அழுகையை மறந்த குழந்தைகள்.சோழன் கிள்ளிவளவனோடு எதிர்த்துப் போரிடமுடியாத மலையமான் தோற்றோடினான். சினம் அடங்காத கிள்ளிவளவனோ தன்னிடம் சிக்கிய மலையமானின் குழந்தைகளை யானைக் காலில் இட்டு இடறி வீழ்த்த எண்ணினான். அப்போது, மலையமானின் சிறப்பையும், காலத்தின் கோலத்தையும், குழந்தைகளின் அறியாமையையும் கூறி கிள்ளி வளவனைச் சிந்திக்கச் செய்தார் புலவர் கோவூர்கிழார்.

பாடல் இதோ,

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!

புறநானூறு.
46. அருளும் பகையும்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.
குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.

கோவூர் கிழார் வளவனிடம் கூறியது,

நீ புறாவின் துன்பத்தை மட்டுமின்றிப் பிற உயிர்களின் துன்பத்தையும் நீக்கிய சோழனின் வழித்தோன்றல். மெல்லிய தலையையுடைய இச்சிறுவரோ, அறிவால் உழுதுண்ணும் புலவர்களின் வறுமைக்கு அஞ்சித் தம் பொருளைப் பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலையுடையர் மரபில் வந்தவர்கள்.

சிறிய தலையையுடைய இச்சிறுவர்கள், தம்மைக் கொல்லவரும் யானையைக் கண்ட அளவிலேயே அழுகையை மறந்தனர். பலரும் கூடிய பொது மன்றத்தில் அச்சத்துடன் நோக்கிப் புதியதொரு வருத்தமும் அடைந்தனர். நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். இனி நீ விரும்பியதைச் செய்க.


² சங்ககாலத்தில் வென்ற மன்னன் நாட்டை எரியூட்டுதல், காவல் மரத்தை வெட்டுதல், தோற்ற மன்னனை சிறையில் அடைத்தல் போன்ற அக்கால வழக்கங்களுடன் எதிரிகளை யானைக் காலால் இடறச் செய்யும் அக்கால தண்டனை மரபு இப்பாடலால் புலப்படுதத்தப்படுகிறது.

² தன் எதிரி கிடைக்காத சூழலில் தன் சினத்தை வெளிப்படுத்த வழியற்ற கிள்ளி வளவன் மலையமானின் மக்களை யானைக்காலால் இடறி வீழ்த்த எண்ணிய போது மன்னனேயானாலும் அஞ்சாது அதனைத் தடுத்து மன்னனுக்கு நல்லுரை கூறிய புலவரின் பண்பு சங்ககாலப் புலவர்களின் செம்மாந்த வாழ்வை எடுத்தியம்புவதாகவுள்ளது.

புதன், 5 மே, 2010

சிரிப்பும் சிந்தனையும்
என் நண்பர்கள் எனக்கனுப்பிய குறுந்தகவல்களி்ல் நான் படித்து மகிழ்ந்த சில உங்களுக்காக,

அளவற்ற தன்னம்பிக்கை

² ஒரு பையன் இரு சக்கர வாகனத்தில் விரைவாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த கிளி அவன் மீது மோதி மயக்கமுற்று கீழே விழுந்தது. வண்டியை ஓட்டிச் சென்றவன் அந்தக் கிளிக்கு முதலுதவி செய்து கிளிக்கூண்டில் விட்டான்.

விழித்துப்பார்த்த கிளி மனதில் நினைத்துக்கொண்டது………….


பாவம் நாம் மோதிய அந்த வண்டிக்காரன் விபத்து நடந்த அதே இடத்தில் இறந்துவிட்டான் போலிருக்கிறது.

மோதி அவனைக் கொன்றதால் நம்மைச் சிறையில் அடைத்துவிட்டார்கள் என எண்ணியது.


² பள்ளிக்கூடம்.

என்னிடம் வரும் போதும் அழுகிறார்கள்
என்னை விட்டுச் செல்லும் போதும் அழுகிறர்கள்

இவர்களுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லுவது!!


² வேறுபாடு

மயிலுக்கும் கிளிக்கும் வேறுபாடு?

மயில் தேசிய பறவை!
கிளி சோசிய பறவை!² கடந்த காலத்தால் யாது பயன்?


உதிர்ந்த மலர்களுக்காகக் கண்ணீர்விடுவதை விட
மலர்கின்ற மலர்களுக்காகத் தண்ணீர் விடுங்கள்!² சினம் (கோபம்)

சினம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு
நீ உனக்குக் கொடுத்துக் கொள்ளும் தண்டனை!² வினாக்களின் நிலை.


1995 - எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
2000 - எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் பதிலளிக்கவும்.
2008 - அ அல்லது ஆ பிரிவில் எவையேனும் ஒன்றனுக்கு விடையளி.
2015 - வினாக்களைப் படித்தால் மட்டும் போதும்.
2020 - தேர்வு எழுத வருகை தந்தமைக்கு நன்றி!

திங்கள், 3 மே, 2010

சங்க இலக்கியத்தில் விடுகதை.
சங்க இலக்கியங்கள் சங்கத்தமிழரின் வாழ்வியலைக் கூறும் வரலாறாகும். விடுகதைகள் நாட்டுப்புற மக்களின் சிந்தனைத் திறனுக்கு தக்க சான்றாகும். சங்க இலக்கியங்கள் வாய்மொழி வழி வந்தவை என்பதால் சங்கப்பாடல்கள் பலவற்றிலும் விடுகதைக் கூறுகளைக் காணமுடிகிறது. அதனை எடுத்தியம்புதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விடுகதை

விடும் கதை – விடுவிக்கும் கதை என்பதே விடுகதையாகும். மறைபொருளிலிருந்து பொருள் விளக்கும் முயற்சியே விடுகதை. வினா எழுப்பி விடையளிக்குமாறு இவ்விடுகதைகள் அமையும். அறிவூட்டுவது சிந்தனையைத் தூண்டுவது இதன் நோக்கமாகும். யாப்பு முறையை சுட்டும் போது தொல்காப்பியர்,

‘பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே’ என்றுரைக்கிறார்.

‘பிசி, நொடி, புதிர், விடுகதை, வெடிபோடுதல், அழிப்பாங்கதை” ஆகியன இதன் வேறு பெயர்களாகும். விடுகதை என்னும் சொல்லாட்சி பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. ‘பிசி’ என்னும் சொல்லே பிதிர் என்று மாறி புதிர் என்று மாறியது. குறுகிய காலத்தில் விடைகாணும் முயற்சியால் ‘நொடி’ என்ற பெயரும் பெற்றது.

சங்கப்பாடல்களில் விடுகதை

Ø க.கைலாசபதி அவர்கள் ‘தமிழ் வீரயுகப்பாடல்கள்’ என்னும் தம் நூலில் சங்க இலக்கியப்பாடல்கள் வாய்மொழிப்பாடல்கள் என்று நிறுவியுள்ளார்.
Ø கதிர்மகாதேவன், தமிழண்ணல், கமில் சுவலபில் போன்ற தமிழ்ச்சான்றோரும் இதனை ஏற்றுள்ளனர். இவர்களின் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை சங்கப்பாடல்களை நன்கு உற்று நோக்கும் போது அறிந்துகொள்ள முடிகிறது.

நாட்டுப்புறவியல் கூறுகள் பலவும் பழந்தமிழர் வாழ்வில் இயைபுற்று இருந்தமையும், அவற்றுள் ‘விடுகதை’ வழக்கிலிருந்த மரபையும் சங்கப்பாடல்கள் வழியாக நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது.


‘துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு’ (பெரும்பாணாற்றுப்படை-459)

என்னும் அடிகள் வாயிலாகப் பேய்மகளிர் கொற்றவைக்கு விடுகதை என்னும் நொடிவிட்டதை கடியலூர் உருத்திரங்கண்ணனார் சுட்டுவர்.


கலித்தொகையில் விடுகதைக் கூறு.

தலைவன் தலைவியின் அழகு நலத்தை வியந்து புகழும் பாடல் ஒன்று விடுகதையின் கூறுகளைத் தன்னகத்தே தாங்கிநிற்கின்றது. பாடல் இதோ,


'ஐ தேய்ந்தன்று, பிறையும் அன்று
மை தீர்ந்தன்று, மதியும் அன்று
வேய் அமன்றன்று, மலையும் அன்று
பூ அமன்றன்று, சுனையும் அன்று
மெல்ல இயலும், மயிலும் அன்று
சொல்லத் தளரும், கிளியும் அன்று’
“கலி 55-9-14)

இதன் பொருள்,

உன் நெற்றி வியக்குமாறு தேய்ந்தது
ஆயினும் பிறையுமல்ல!
உன் முகம் மறுவற்றுள்ளது
ஆயினும் நிலவுமல்ல!
உன் கண் மலர் போலுள்ளது
ஆயினும் மலருமல்ல!
நீ அது பிறக்கும் சுனையுமல்ல
உன் சாயல் மெல்லென அசைவதே
ஆயினும் நீ மயிலுமல்ல!
நீ சொல்லுக்குச் சொல் தளர்கிறாய்
ஆயினும் நீ கிளியுமல்ல!

என்பதே ஆகும்.
விடுகதைக் கூறுகளுள் ‘இயைபுநிலை விடுகதை’ என்னும் வாய்மொழிக் கூறுகொண்டு இப்பாடல் விளங்குகிறது.

இப்பாடலுடன் ஒப்புநோக்கத்தக்க விடுகதை,

‘பச்சைப் பசேலென்றிருக்கும் பாகற்காயுமல்ல
பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயுமல்ல
உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயுமல்ல
உருக்கினால் நெய்வடியும் வெண்ணெயுமல்ல’


விடை – ஆமணக்கு


வாழ்க்கை இயல்பு கூறும் விடுகதை

தலைவனுடன் உடன்போக்கில் பெற்றோரை நீங்கிச் சென்றாள் தலைவி. தலைவி மீது கொண்ட பற்றினால் அவள் சென்ற வழியிலேயே தொடர்ந்து வந்தால் செவிலி. வழியில் முக்கோர்பவரைக் கண்டு, தாங்கள் வந்த வழியில் எனது மகளைப் பார்த்தீர்களா என்று வினவினாள். அச்சான்றோர் சொன்ன பதிலே விடுகதை போல இருந்தது. அவர்கள் சொன்ன கருத்தை ஆழ நோக்கினால் வாழ்க்கை இயல்பு இதுதான் என்று புரிந்துகொள்ளும் பக்குவம் வந்துவிடும். பாடல் இதோ,

‘பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதான் என் செய்யும்?
நினையுங்காலை நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர் கெழு வெண்முத்;தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதான் என்செய்யும்
தேருங்காலை நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?

கலித்தொகை 09

என்றனர்.

v நறுமணப் பொருளான சந்தனைம் பூசிக்கொள்பவரல்லது மலையிலே பிறந்தாலும் மலைக்கு அவைதான் என்ன செய்யும்?
v சிறந்த வெண்முத்துக்கள் அணிபவருக்குப் பயன்படுவதன்றி கடலிலே பிறந்தாலும் கடலுக்கு அவைதான் என்ன செய்யும்?
v ஏழ் நரம்பிலான யாழில் தோன்றும் இன்னிசை யாழிலே பிறப்பினும் பாடுபவர்கல்லாது யாழுக்கு அவைதான் என்ன செய்யம்?
v இவைபோலவே உன் மகள் உனக்கும். அவள் உன் மகளாயினும் அவள் அவனுக்குப் பிடித்தவனோடு வாழ்வதே வாழ்வின் இயல்பு.

என்ற முக்கோற்பவரின் கேள்வி செவிலியைச் சிந்திக்கச் செய்வதாக அமையும். வாழ்க்கையின் இயல்பு அது தான் என்பதை உணரச்செய்வதாகவும் அமையும்.

குறுந்தொகையில் விடுகதை

வினாநிலை விடுகதை

தன் தலைவியின் கூந்தல் மணத்தைவிட சிறந்த மணம் வேறெந்தப் பூக்களிலும் உள்ளதா? என்று ஞிமிறிடம் கேட்கும் தலைவனின் கூற்று முழுமையான விடுகதையைக் கேட்டு, பதிலை எதிர்பார்ப்பது போலவே உள்ளது. பாடல் இதோ,

2. குறிஞ்சி - தலைவன் கூற்று
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.

இப்பாடலின் வழி இக்கருத்தை உணரலாம்.


இயைபுநிலை விடுகதை

நிலத்தைவிடப் பெரியது
வானைவிட உயரமானது
கடலைவிட ஆழமானது எது?

என்று இன்று யாரையாவது கேட்டால் அவரவர் அறிவுக்கு ஏற்ப ஏதாவதொன்றைச் சொல்வார்கள். ஆனால் சங்கஇலக்கியம் பயின்றவர்களை இக்ககேள்வியைக் கேட்டால் உடனே சொல்வார்கள் ‘காதல்’ என்று. பாடல் இதோ,

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.”

குறுந்தொகை -3 குறிஞ்சி - தலைவி கூற்று

அம்மா சேலையை மடிக்க முயாது
அப்பா காச எண்ண முடியாது
அது என்ன?

(விடை – வானம் - நட்சத்திரம்)

என்பது போலவே இக்குறுந்தொகைப்பாடல் உள்ளது. அளக்கலாகா கூறுகளை விளக்கும் முயற்சியே இவை போன்ற விடுகதைகளாகும்.

புதிர் நிலை விடுகதை

தலைவியைச் சந்தித்து மகிழும் இடத்தைத் தோழியிடம் கேட்கிறான் தலைவன். தோழியோ நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்துப் புதிர் போடும் முறையில் பதில் சொல்கிறாள்.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.


(குறுந்தொகை 113
மருதம் - தோழி கூற்று
மாதீர்த்தனார்.)

ஊர்க்கு அணிமையில் பொய்கை உள்ளது. சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை. அவ்வாற்றில் இரைதேடும் நாரையன்றி வேறு எவ்வுயிரும் அடைதல் இல்லை. நாங்கள் எம் கூந்தலுக்கு செங்கழுநீர் மலர் பறிக்க அங்கு செல்வோம். பெரிய பேதமை கொண்ட தலைவி அங்கும் வருவாள் என்கிறாள் தோழி.

‘ஆற்றங்கரைக்கு வந்தால் தலைவியைப் பார்க்கலாம் என்று தலைவனுக்கு நேரிடையாகப் பதில் கூறாமல் தோழி பதில் சொல்லும் முறை புதிர் நிலை விடுகதை போல உள்ளது படித்து இன்புறத்தக்கதாகவுள்ளது.

சிந்திக்கத்தூண்டும் விடுகதை

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிவான் என்று அஞ்சி வருந்தினாள் தலைவி. அவள் மனநிலையை அறிந்த தலைவன்,

என் தாயும் உன் தாயும் என்ன உறவினர்?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவினர்?
நானும் நீயும் இதற்கு முன்னர் எந்நிலையில் உறவுடையவர்களாக இருந்தோம்?

என்று கேட்கிறான்.

எவ்விதத்திலும் தமக்கு இதற்கு முன் உறவு இல்லை என்பதே தலைவியின் மனதில் தோன்றும் பதில்.

செம்மண் நிலத்தில் சேர்ந்த மழைத்துளி போல நீயும் நானும் சேர்ந்தோம் என்ற தலைவனின் பதில். தலைவன் இனிதன்னை நீங்கமாட்டான் என்ற மனநிம்மதியைத் தலைவிக்கு அளிப்பதாகவுள்ளது. பாடல் இதோ,

‘யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.’

குறுந்தொகை 40 – செம்புலப் பெயர்நீரார்.

என்ற பாடல் தலைவியின் மனதில் சிந்தனையைத் தூண்டி பதில் வழி மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைகிறது.

உறவு நிலை விடுகதை.

வெளிநாடுகளில் ஒரு பெண் தன் காதலையோ திருமணத்தையோ தன் பெற்றோரிடம் மிகவும் சாதரணமாக,

மகள் - அப்பா நேற்று மாலை எனக்கு திருமணம் முடிந்துவிட்டது.
அப்பா – ஓ அப்படியா. பரவாயில்லை மகளே இந்தமுறைதான் எங்களை அழைக்கவில்லை. அடுத்தமுறையாவது தவறாது அழைப்பாயா?

என்று கேட்பது ஒன்றும் உலக அதிசயமல்ல. வெளிநாட்டு மரபுகளைத் தழுவி தமிழர்களும் மாறிவருவது கண்கூடு. இன்று ஒரு தமிழ்ப் பெண் தன் காதலையோ திருமணத்தையோ பெற்றோரிடம் சொல்வதற்குத் தயங்கினாலும் சொல்வதில் பெரியளவுக்கு தயக்கமோ, சிக்கலே இருப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஒரு பெண் தன் காதலைப் பெற்றோரிடம் தெரிவிப்பது என்பது இயலாதவொன்றாகவே இருந்தது.

தலைவி தன் காதலைத் தோழியிடம் தெரிவிக்க,
தோழி செவிலியிடம் தெரிவிக்க,
செவிலி நற்றாயிடம் தெரிவிக்க,
நற்றாய் தந்தையிடம் சென்று மகளின் காதலைச் சொல்வாள். இதுவே சங்ககால மரபு.


அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

குறுந்தொகை 23. குறிஞ்சி - தோழி கூற்று
-ஒளவையார்.

இப்பாடலில் தலைவி அகவன் மகளிடம்,
‘இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.’

என்று தலைவனின் குன்றம் பற்றி பாடலையே தலைவி மீண்டும மீண்டும் விரும்பிக்கேட்பதை அருகாமையில் இருக்கும் செவிலியோ, நற்றாயோ கேட்டு தன்மகள் காதல் வயப்பட்டுவிட்டாள் என்பதை உணர்வர் இதுவே சங்ககால மரபு. இப்பாடலை தலைவி தாயரிடம் கேட்கும் விடுகதையாகக் கொள்வது பொருத்தமாக அமையும்.

நிறைவுரை.

வாய்மொழிப்பாடல்களின் வழிவந்தவையே சங்கப்பாடல்கள் என்பதால் வாய்மொழிக்கூறுகள் பலவும் சங்கப்பாடல்களில் பொதிந்திருக்கின்றன. அவற்றுள் ‘விடுகதை’ என்னும் வாய்மொழி மரபும் பாடல்களில் இழையோடி இருக்கக் காண்கிறோம். இன்று பேச்சு வழக்கில் யாராவது பேசுவது புரிந்தும் புரியாமலும் இருந்தால் என்ன புதிர்போட்டுப் பேசுகிறாய்? என்று கேட்பது வழக்கம். அது போல சங்கப்பாடல்கள் பலவற்றிலும் பேச்சு மரபுகளினூடே விடுகதைப் பண்பு இயைபுற அமைந்திருப்பது உற்று நோக்கி இன்புறத்தக்கதாகவுள்ளது.

கேள்வி கேட்டல், சிந்தனையைத் தூண்டுதல், மறைபொருளாகக் கூறுதல், உவமையாகக் கூறுதல், சுற்றி வளைத்துக் கூறுதல் தத்துவப் பொருளாகக் கூறுதல் போன்ற பல்வேறு விடுகதைப் பண்புகளையும் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது.