வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 30 மார்ச், 2010

எதிர்பாராத பதில்கள் - 2.வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள மூன்று இளவரசர்கள் ஞானி ஒருவரைத் தேடிச்சென்றார்கள். அவர்களை நன்கு வரவேற்று அமரச் செய்த ஞானி மூன்று கோப்பைகளில் தேநீர் கொண்டு வந்து வைத்தார்.

ஒன்று தங்கக்கோப்பை, இரண்டாவது வெள்ளிக்கோப்பை, மூன்றாவது களிமண் கோப்பை.

என்ன செய்வது என்று அறியாது திகைத்த இளவரசர்கள் ஞானியிடமே கேட்டார்கள். இப்படி மூன்று விதமாக வைத்தால் நாங்கள் என்ன செய்வோம் எல்லோரும் தங்கக் கோப்பையைத் தானே எடுக்க நினைப்போம். ஏன் இப்படி வைத்தீர்கள் என்று கேட்டனர்.

ஞானி சொன்னார்,
மூன்று கோப்பைகளும் தோற்றத்தில் வெவ்வேறாகத் தெரியலாம். ஆனால் மூன்று கோப்பைகளிலும் உள்ளிருப்பது ஒரே தேநீர்தான்.
அந்த தேநீர் போன்றதே வாழ்க்கை. புறத்தோற்றங்களுக்கு மயங்குவோர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியாது தவிக்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.

எனது வகுப்பில் வாழ்க்கையைப் பற்றி சொல்வதற்காக இந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு, எனது மாணவர்களில் மூவரை எழச்செய்து அவர்களிடம் கேட்டேன்,
எனது வீட்டுக்கு வரும் உங்களுக்கு தங்கம், வெள்ளி, களிமண் என வெவ்வேறு கோப்பைகளில் தேநீர் தந்தால் நீங்கள் எந்தக் கோப்பையை எடுப்பீர்கள் கேட்டேன் இரண்டு மாணவர்களும் நான் முதலில் எடுத்தால் தங்கக் கோப்பையைத் தான் எடுப்பேன் என்றனர். மூன்றாவது மாணவரிடம் கேட்டபோது அவர் சொன்னார்,

ஐயா நான் எந்தக் கோப்பையில் தேநீர் அதிகமாக இருக்கிறதோ அதைத்தான் எடுப்பேன் என்று எதிர்பாராத பதிலைச் சொன்னார். வியந்து போனேன்.

வாழ்க்கையின் உண்மையும் கூட அதுதான். வாழ்க்கைத் தேவைக்கு மட்டுமா செல்வம் சேர்க்கிறோம். நிறைவான செல்வத்தைத் தானே அனைவரும் விரும்புகிறோம்.

----------------------------- -------------- -----------------------


இழந்த நாட்கள்.

ஜகாங்கீர் – இளமையில் ஏறு போல் நடக்கும் இளையவர்கள் வயதானபின்னர் ஏன் கூனிக் குறுகி பூமியைப் பார்த்தவாறு நடக்கிறார்கள்?
நூர்ஜகான் – தாங்கள் இழந்த நாட்கள் பூமியில் எங்காவது புதைந்து கிடக்கிறதா என்று தேடவே அவ்வாறு நடக்கிறார்கள்.!

---------------- ---------------- ------------ ---------நீரே விழுந்தால் நான் என்ன செய்வேன்?

கம்பரும் சோழ மன்னரும் ஆற்று நீரில் கால் வைத்து நடந்தபோது கம்பர் ஆற்று நீரை அள்ளிக் குடித்தார். அப்போது,

சோழன் – கம்பரே.. என் காலில் விழுந்த நீரைத்தானே நீங்கள் அள்ளிக்குடிக்கிறீர்கள்?
கம்பர் – நீரே என்காலில் விழுந்தால் நான் என்ன செய்வேன் மன்னா?

(கம்பர் நீரே என்று சொன்ன சொல் இருபொருளுடையது. நீரே என்று நிலத்தில் செல்லும் நீரையும் நீரே என்று எதிரே இருக்கும் சோழனையும் குறிப்பதாகப் பொருள் கொள்ள முடியும். கம்பர் சொன்ன எதிர் பாராத பதிலையும் தமிழின் நயத்தையும் எண்ணி மகிழ்ந்தான் சோழன்.)

------------ --------------- --------------- -----------------

அறிஞர் ஆல்டன் குள்ளமானவர். அவரைப் பார்த்து அவருடைய வழக்கறிஞராக இருந்த நண்பர் ஒருவர் சொன்னார்.
“ உங்களை எனது கோட்பாக்கெட்டில் தூக்கி வைத்துக்கொள்ள முடியும்“ என்று.

அதற்கு ஆல்டன் அவரைப் பார்த்து,
” ஓ அப்படியென்றால் உங்கள் தலையைவிட கோட் பாக்கெட்டில் தான் மூளை அதிகமாக இருக்கும்” என்றார்.

--------------- ----------- ---------- ---------- ------------


விருந்தினர் மாளிகை என்ன விலை?

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியைக் கல்விக்குடியாக்கிய பெருமை வள்ளல் அழகப்பச்செட்டியாருக்கு உரியதாகும். அவர் ஒரு முறை மும்பை சென்றபோது, ரிட்சு என்னும் (ஓட்டலுக்கு) விருந்தினர் மாளிகைக்குச் சென்றிருக்கிறார்.
அதன் உரிமையாளர், அழகப்பச்செட்டியாரின் எளிய தோற்றத்தைப் பார்த்து இங்கு அறை காலியாக இல்லை என்றாராம். இவர் தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் இங்கு அறைகள் உள்ளன என்பதை உணர்ந்த அழகப்பச் செட்டியார். அந்த விருந்தினர் மாளிகை உரிமையாளரைப் பார்த்து,

இந்த மாளிகையில் எத்தனை அறைகள் உள்ளன? என்றாராம்.

உரிமையாளரோ,
நீர் என்ன இந்த ஓட்டலை விலைக்கு வாங்கப் போகிறீரோ? என்றாராம்.
அதற்கு ஆம் என்ன விலை என்று அழகப்பர் கேட்க. உரிமையாளர் சில லட்சங்கள் என்று சொல்ல, அடுத்த நிமிடமே தம் காசோலையைக் கிழித்துக் கொடுத்து அந்த விருந்தினர் மாளிகையை விலைக்கு வாங்கிவிட்டார் அழகப்பர்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.
----------- ------------ ------------- ----------- -----------

வாழ்க்கையின் இலக்கு.
காட்டில் வாழும் முயலைப் பிடிக்க எண்ணியவன் அந்த முயலை எய்து வருவதைவிட, பெரிய யானையைக் கவர முயன்றவன் எய்த அம்பு பிழைத்து வெறுங்கையுடன் வந்தாலும் அது தான் சிறப்பு என்பதை,


"கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" என்பர் வள்ளுவர்.

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை என்கிறார் கோப்பெருஞ்சோழன்.

வாழ்வியல் இலக்கைக் கூறும் புறப்பாடல் ஒன்று,

கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தன்மீது கொண்ட பகையால் மனம் வாடி தன் நாட்டை அவர்களிடமே கொடுத்து மானம் போனதாகக் கருதி வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்தான்.

வடக்கிருத்தல் என்பது,
ஊர்ப்புறத்தே தனியிடத்தில் அறம் கூறும் சான்றோர் சூழ புல்லைப்பரப்பி அதன் மீதமர்ந்து உண்ணா நோன்பு இருத்தலாகும். இப்படி இருப்பதால் வீடுபேறும், மீண்டும் பிறவா நிலையும் கிடைக்கும் என்பது அற்றைக் கால நம்பிக்கையாகும்.


வடக்கிருத்தலால் வீடுபேறு கிடைக்காது என்றும், மீண்டும் பிறவாநிலையென்பது கிடைக்காது என்ற கருத்தினரும் சங்க காலத்தில் இருந்தனர்.

யாவரையும் பார்த்து கோப்பெருஞ்சோழன் சொல்கிறார்...

அறம் செய்வதையே நம் வாழ்க்கைப் இலக்காகக் கொள்வோம். நல்வினை செய்வோமா? செய்யவேண்டாமா? என்ற சிந்தனை கொண்டோர் நெஞ்சத் துணிவில்லாதவர்களாவர்.

யானை வேட்டுவன் தவறாது யானையை வேட்டையாடி மீள்வதும் உண்டு.
சிறு பறவைகளை வேட்டையாட விரும்பிச் செல்வோர் அவற்றைப் பெறாது வெறுங்கையுடனே வருவதும் உண்டு.

“சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் வெறும் வயிற்றுக்கு வாழ்ந்து மடிந்து போவதா?“

அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வாழ்க்கையை முதலில் தூக்கி எறிந்து இலக்கோடு வாழப்பழக வேண்டும்.

அறவழியே (நேர்வழி) வாழ்ந்தால் சொர்க்கம் என்னும் மறு உலகம் கிடைக்கப் பெறும்.

பிறப்பு என்னும் நோயிலிருந்து “ மீண்டும் பிறவா நிலை“ அடையலாம்.
(பிறவி என்பதே நோய் – பிறவிப்பிணி. நாம் செய்த பாவத்தால் தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம் என்பது தமிழர்தம் நம்பிக்கை)

இவையிரண்டும் கிடைக்காவிட்டாலும் இமையத்தின் உயரத்துக்கு நம் புகழைப் பெற்று குற்றமில்லா உடலுடன் வாழ்ந்து மறையலாம் என்கிறார். பாடல் இதோ,

“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
5 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
10 மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தவறத் தலையே
(புறநானூறு -214)

சொர்கம், நரகம், மறுபிறப்பு போன்றன இருக்கிறதா? இல்லையா என்ற கருத்து சங்ககாலத்திலிருந்தே இருந்திருக்கிறது.

இருந்தால் நன்றாக இருக்கும் என்ற மனித நம்பிக்கையே இதற்குக்காரணம்.

மனிதனைப் பண்படுத்தவே இவையெல்லாம் தோன்றின. நல்லபடி அடுத்தவுயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் இறந்த பின்பு சொர்ககம் இல்லாவிட்டாலும் வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்பது சங்கத்தமிழர் கண்ட உண்மை.


பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்

1. வாழ்க்கையில் அறம் செய்ய வேண்டும்.
2. சொர்ககம், நரகம், என்னும் மறு உலகம் மற்றும் மறுபிறப்பு ஆகியன உண்டு என்றும் இல்லை என்றும் எண்ணிய அக்கால நம்பிக்கை புலப்படுகிறது.
3. மானம் போனால் வடக்கிருந்து உயிர்நீப்பர் எண்ணும் அக்கால மரபு சுட்டப்படுகிறது.
4. அறவழியே வாழ்வதே வாழ்வின் இலக்கு என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது.

திங்கள், 29 மார்ச், 2010

வெற்றிக்குப் பக்கத்தில்.14 ஆம் நூற்றாண்டில்,கொலம்பஸ் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு புதிய உலகைக்காணும் ஆவலில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கடல் வழியே புறப்பட்டது. 24 நாட்களாகத் தொடர்ந்து பயணம் எந்தக் கரையும் தென்படவில்லை. ரொனால்டோ என்பவர் உணவுக்கான பொறுப்பாளர். இருக்கக்கூடிய உணவு தற்போது திரும்பிச்சென்றால் மட்டுமே போதுமானது.

24நாட்களில் சொந்த நாட்டை அடையலாம். தொடர்ந்து பயணம் செய்தால் எல்லோரும் உணவுக்கு வழியின்றி கடலிலேயே செத்து மடிய வேண்யது தான். ரொனால்டோ சகபயணிகளிடம் கேட்டபோது அவர்களும் வந்த வழியே திரும்புவது தான் நல்லது என்று விரும்பினர்.

தங்கள் கருத்தை கொலம்பசிடம் தெரிவித்தார்கள்.தம் இலக்குக்கு உணவு தடையாவதா? ஏற்றுக்கொள்ளவில்லை கொலம்பசின் மனது. முடியாது எக்காரணத்தைக்கொண்டும் பின்வாங்கக்கூடாது தொடர்ந்து முன்னோக்கிச் செலுத்துங்கள் என்றார். சிறிது நேரத்தில் ரொனால்டோ தலைமையிலான புதிய குழு கூடி கொலம்பசைக் கைது செய்து கயிற்றில் கட்டியது. கப்பல் பின்னோக்கிச் சென்றது.

வருத்தத்துடன் தன் இலக்குப் பறிபோவதைப் பார்த்த கொலம்பஸ், ரொனால்டோவை அழைத்து, சரி இருக்கும் உணவில் எனக்கும் பங்கு இருக்கிறது தானே என்றார்.
ரொனால்டோ, ஆமாம் அதிலென்ன சந்தேகம், தங்கள் உயிரையும் சேர்த்துக்காக்க வேண்டிய பணி எனக்கு இருக்கிறது என்றார் ரொனால்டோ,

நான் சொல்வதை நன்றாகக் கேளுங்கள்,

எனக்கான 24 நாட்கள் உணவை நான் சாப்பிடாவிட்டால் அது இங்கு இருப்பவர்கள் கூட ஒரு நாள் சாப்பிடப் போதுமானதாக இருக்குமா?

ஆம் இருக்கும் என்றார் ரொனால்டோ.

சரி அப்படியென்றால் எனக்காக 24மணி நேரம் கப்பலை முன்னோக்கிச் செலுத்துங்கள். 24 மணி நேரத்தில் கரை தெரிந்தால் சரி, இல்லையென்றால் அங்கே என்னைக் கடலில் தூக்கி எறிந்து விட்டு நீங்கள் தாய்நாடு திரும்புங்கள் என்றார் .

தம் இலக்கின் மீது கொலம்பசுக்கு இருந்த ஆர்வம் கண்டு தலைவணங்கிய ரொனால்டோ கப்பலை முன்னோக்கிச் செலுத்த கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்கா!

தன்னம்பிக்கைக்கும், கொள்கைப் பற்றுதலுக்கும் சிறந்தவொரு பாடமாக இந்த நிகழ்வை எண்ணிப்பார்க்க முடிகிறது.

வெள்ளி, 26 மார்ச், 2010

துபாயா..? அபுதாபியா..?
நான் சுற்றி வளைச்செல்லாம் கேட்க விரும்பல. நேரடியாகவே கேட்குறேன் .

துபாய் போறேன்.. அபுதாபி போறேன்னெல்லாம் சொல்லிட்டு கிளம்பறீங்களே..

நீங்களெல்லாம் போனவுடனே அள்ளிட்டு வருமாறு பொருளெல்லாம் ஒரே இடத்திலேயேவா கிடைக்குது?

உங்களை மாதிரி வெளிநாடு போகாம உள்ளூரிலேயே இருக்கறவங்கள்ளாம் சாப்பிடக்கூட வழியில்லாமலா இருக்காங்க?

வெளிநாடு சென்று ஈட்டும் அந்தப்பொருளை உங்களாள உங்க சொந்த நாட்டிலேயே ஈட்டமுடியாதா?

இப்படி வெளிநாடு போறவங்களப் பார்த்து இன்றும் கேட்கவேண்டிய கேள்வியை சங்ககாலப் பெண்ணொருத்தி கேட்டிருந்தால் இப்படித்தான் கேட்டிருப்பாள்.

(வாழ்நாள் குறைவானது, இளமை அருமையுடையது, முயன்று பொருளீட்டுதல், அறம் செய்தலின் சிறப்பு, பொருள் இல்லாமையின் இழிவு, பொருளின் உயர்வு, அன்பின் சிறப்பு, பிரிவின் கொடுமை, என்பவற்றைத் தோழியிடம் கூறிய தலைவன், பொருள் தேடச்செல்ல எண்ணினான்.

அதற்குத் தோழியோ,
முன்பு நடந்ததைக் கூறி தலைவனின் வெளிநாடு செல்லும் பயனத்தைத் தடுத்தாள்.இதற்குச் செலவழுங்குதல் என்று பெயர்.)


தலைவனே!
அரிய பொருள்களின் மீது எழுந்த ஆசையால் உள்ளம் தூண்ட தலைவியைப் பிரிந்து வேற்றுநாடு சென்றிருக்க எண்ணாதே!
நீ விரும்பித் தலைவியின் தோளில் எழுதிய தொய்யிலும், உன் வலிமையான மார்பில் தலைவி சாய்ந்ததால் ஏற்பட்ட தேமலும மாறுமா? என சிந்தித்துப்பார்.

நீ நன்கு மதித்த பொருளும் தேடச்சென்றவர்கள் நீண்ட காலம் தேடுவன்றி அள்ளிக்கொள்ளுமாறு ஒரே இடத்திலேயேவா கிடைக்கப்போகிறது?

பொருள் தேடப்போகாது, ஒரே இடத்திலேயே இருப்பவர்கள் எல்லாரும உணவுக்குக் கூட வழியில்லாது அழிந்து போகிறார்களா என்ன?

இளமையும், இருவர் உள்ளத்தே ஒத்த காமமும் ஒன்றாக வாய்க்கப்பெற்றவர்கள், பொருளை விரும்புவார்களா?

இல்வாழ்க்கை என்பது இளமையும் காமமும் உள்ளவரை தம்முள் தழுவியும் ஒரு சில நேரம் ஒன்றன் கூறாகிய ஆடையும் உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும் அதனைப்பற்றிக் கவலைப்படாமல் ஒன்றிக் கலந்து அன்புடன் வாழ்வதல்லவோ வாழ்க்கை.

அன்றி பொருளுக்காகப் பிரிந்து சென்ற நீ இளமை கழிந்து பொருளை மட்டும் ஈட்டி வருவதா வாழ்க்கை?


என்று தலைவனிடம் தோழி கேட்டவுடன் சிந்தித்த தலைவன் தன் பயணத்தைத் தவிர்த்து நிறுத்திக்கொண்டான்.
பாடல் இதோ,

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப்,
பிரிந்து உறை சூழாதி -ஐய! - விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்து உடை மார்பில் சுணங்கும். நினைத்துக் காண்;
சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும், காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிது அரோ
சென்ற இளமை தரற்கு!
கலித்தொகை 18

துபாய் அபுதாபின்னு கிளம்பறவங்களே இதையும் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்க!

(இந்த இடுகையைப் படித்த நண்பர் ஒருவர் மின்னஞ்சல் வழியே துபாயில் வாழும் வெளிநாட்டினரைப் பற்றி அனுப்பிய நிழற்படம்.... .
இதோ..

புதன், 24 மார்ச், 2010

எதிர்பாராத பதில்கள்.
எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை. இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் இருப்பதில்லை.

“எதிர்பார்ப்பு குறையும் போது ஏமாற்றமும் குறையும்“

வாழ்க்கையில் எதிர்பாராத பதில்கள் பல நம்மை நீண்ட நேரம் சிந்திக்கச் செய்துவிடும். அப்படிப்பட்ட எதிர்பாராத பதில்களைத் தொகுத்து தொடந்து இடுகையாகத் தரலாம் என எண்ணுகிறேன்.


-oOo-


காட்சி -1


அப்பா - உனக்கே எழுதப்படிக்கத் தெரியாது என்ன எழுதிக்கிட்டிருக்க? யாருக்கு எழுதுற?

பையன் - என் நண்பனுக்கு கடிதம் எழுதுறேன்.

அப்பா - நீ எழுதும் கடிதம் அவனுக்குப் புரியுமா?

பையன் - ஏன் புரியாது? அவனுக்கும் என்னை மாதிரி எழுதப்படிக்கத் தெரியாது! அதனால் நான் எழுதுவது அவனுக்குப் புரியும்!!

அப்பா - !!


-oOo-

காட்சி -2


அப்பா - தம்பி இங்க வா! சாமிகும்பிடாமப் போலாமா?
வா சாமி கும்பிட்டுப் போ!

பையன் - ஏம்பா சாமி கும்பிடனும்?

அப்பா - சாமி கும்பிட்டா, சாமி எல்லாம் தரும் பா.

பையன் - அப்படின்னா சாமி பேனால்லாம் தருமா?

அப்பா - ஓ பேனா என்ன? நீ என்ன கேட்டாலும் தரும்!

பையன் - சரி நீங்க உங்க பேனாவை எனக்குக் கொடுங்க.

நீங்க சாமிட்ட கேட்டு வேற பேனா வாங்கிக்கோங்க!!

அப்பா - !!!!

-oOo-

காட்சி -3


பெரியவர் - ஏம்பா தம்பிகளா..
ஓணானை ஏன் கழுத்துல கயிறைக் கட்டி இந்தப்பாடு படுத்தறீங்க? அந்த வாயில்லா சீவனைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லையா?

சிறுவர்கள் - இல்லையே நாங்க விளையாட்டுக்குத் தானே செய்யுறோம்.

பெரியவர் - உங்களுக்கு விளையாட்டாத் தெரியலாம். ஆனா அதுக்கு இது துன்பமி்ல்லையா? நீங்க இப்படி செஞ்சீங்கன்னா, அடுத்த பிறவியில அந்த ஓணான் மனிதனாப் பொறந்து நீங்க ஓணானா பிறப்பீங்க. அப்ப அந்த ஓணான் உங்கள இப்படி பாடாப் படுத்தும்.

சிறுவர்கள் - பெரியவரே நீங்க சொல்வது ரொம்ப சரி. போன பிறவில நாங்க ஓணானா பிறந்தப்ப இந்த ஓணான் எங்களை இப்படி துன்பம் செய்தது அதனால் தான் அதுக்கு நாங்க இப்ப பலி வாங்கிக்கிட்டு இருக்கோம்.

பெரியவர் - !!

-oOo-

காட்சி -4


தாத்தா - பாப்பா இங்க பாரு இந்த விளக்கில் ஒளியேற்றுகிறேன். இப்போது இந்த விளக்கில் ஒளி எங்கிருந்து வந்தது?

குழந்தை - (அந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு.) இப்போது இந்த ஒளி எங்கு போனதோ அங்கிருந்து தான் வந்தது.

தாத்தா - !!

-oOo-

செவ்வாய், 23 மார்ச், 2010

உங்களை எங்கேயோ பார்த்துபோல இருக்குதே?உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….?

இதே கேள்வியை நாம் ஒவ்வொருவரும் யாரையாவது பார்த்து, எப்போதாவது கேட்டிருப்போம்.

ஒன்று அவர்களை நாம் முன்பே எங்காவது பார்த்து மறந்திருப்போம்..
இல்லையென்றால் நாம் பழகிய ஒருவரின் முகச்சாயலை அவர்ககொண்டிருப்பார்..!!

நாம் பழகிய ஒருவரின் முகம் நம் மனதில் ஆழப்பதிந்துவிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் ஒருவர் படித்துப் பிரிந்து 10 ஆண்டுகள் கழித்து ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டார். ஹலோ என்று சொன்னவுடனேயே அவரின் பெயரை அழைத்து நீங்கள் தானே என்றேன். வியந்து போய்விட்டார்.

வியந்துபோனது அவர் மட்டுமல்ல!
நானும் தான் எப்படி என்னால் முடிந்தது?

நன்கு பழகிய அவரின் குரலை என்மனம் எங்கோ ஆழப்பதிந்து வைத்திருக்கிறது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.

இப்படி நம் ஆழ்மனப்பதிவுகள் ஆயிரம் ஆயிரம் வியப்புகளை உள்ளடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றன.


ஒருகதை,பூனைகள் சேர்ந்து மாநாடு நடத்தின. பல நாடுகளிலும் இருந்து நிறைய பூனைகள் வந்திருந்தன. கூட்டம் தொடங்கியது.

தலைமை தாங்கிய பூனை மேடையில் தோன்றி பேசியது.

நாமெல்லாம் முழு நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நிச்சயமாக “எலிகள் மழையாகப் பொழியும்“ என்றது.

அவ்வளவு தான் எல்லா பூனைகளும் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தன.

இதனைப் பார்த்துக்கொண்டே அந்த வழியில் சென்ற நாய் ஒன்று சிரித்துக்கொண்டே சென்றது..

என்ன இது முட்டாள்த்தனம்?

என்றாவது எலிமழை பொழிந்திருக்கிறதா?

இவ்வளவு முட்டாள்தனம் நிறந்தவையாகப் பூனைகள் இருகும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை!

நம்பிக்கையோடு வேண்டினால் ஒருவேளை “எலும்பு மழை“ வேண்டுமானால் பொழியலாம்!

என்று மனதில் எண்ணியவாறு சென்றது நாய்.

என்றோ எங்கோ படித்த இந்தக் கதையை பலசூழல்களில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனைகள், நம்பிக்கைகள் அவரவர்களும் அதனை முழுவதும் நம்புகிறார்கள்.

மனதில் என்ன உள்ளதோ அதுதான் கனவில் மட்டுமல்ல, நினைவிலும் வரும்!

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு காணும் பொருளெல்லாம் உணவாகத் தெரியும். காரணம் அவன் மனமெங்கும் பசி நிறைந்திருக்கிறது.

பூனைகளின் நினைவில் எப்போதும் எலிகள் தான்!
நாய்களின் மனதில் எப்போதும் எலும்பு தான்!

அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒன்று நிறைந்திருக்கிறது.
இங்கு ஐங்குறுநூறு என்னும் அகப்பாடலில் தலைவன் மனம் முழுக்க தலைவி மட்டுமே நிறைந்திருக்கிறாள்.


மயில்,முல்லை, மான் என இயற்கைக் கூறுகள் எதைப் பார்த்தாலும் தலைவியைப் பார்த்தது போலவே தோன்றுகிறது.


போர்க்கடமை மேற்கொண்டு சென்ற தலைவன், வினை முடிந்து மீண்டுவந்தபோது தன் காதலியிடம் இவ்வாறு சொல்லி மகிழ்கிறான்.

அழகிய நெற்றியையுடைய பெண்ணே!

சாயலில் அப்படியே உன்னைப் போலவே இருந்த மயில் ஆடக்கண்டேன்!

உன் அழகிய நெற்றியைப் போலவே மனம் வீசும் முல்லை மலரக் கண்டேன்!

உன்னைப் போலவே மருண்டு நோக்கும் மான்களைக் கண்டேன்!

இந்த இயற்கைக் கூறுகள் யாவும் உன்னையே எனக்கு நினைவுபடுத்தின. அதனால், உன்னையன்றி வேறொன்றையும் எண்ணாது, விரைந்தோடும் கார்மேகத்தைவிட விரைவாக வந்தேன்!

(கார்மேகத்தைவிட விரைவாக வந்தேன் என்பதால் தலைவன், தான் குறித்துச்சென்ற கார்காலத்திற்கு முன்பே வந்தான் என்பதும் உணர்த்தப்படுகிறது)

தலைவனின் உள்ளத்தில் தலைவியின் நினைவே நிறைந்திருந்ததால், காணும் காட்சிகள் யாவிலும் தலைவியே தெரிந்தாள்.

மயில், முல்லை, மான் ஆகிய இயற்கைக் கூறுகள் தலைவன் தலைவியின் நினைவின்றி வேறு நினைவு கொள்ளாதவனாக இருக்கத் துணைநின்றன.

பாடல் இதோ,

நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மாமருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.

ஐங்குறுநூறு -492

இப்பாடல் வழி அறியலாகும் செய்திகள்.


◊ நினைவுகளின் வெளிப்பாடே நாம் காணும் காட்சி என்னும் உளவியல் கூறு உணர்த்தப்படுகிறது.
◊ நம் மனதில் நிறைந்த ஏதோ ஒன்று நாம் காணும் பொருள்களிலெல்லாம் வெளிப்படும் என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

(பெண்களின் ஏழு பருவங்கள்

பேதை, பெதும்பை,மங்கை, மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம்பெண்)

திங்கள், 22 மார்ச், 2010

96 வகை சிற்றிலக்கியங்கள்.

தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 
96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும். 

தொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது. இலக்கிய வகை - பொருள் 
1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள். 
3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல். 
4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல். 
5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம். 6. அலங்கார பஞ்சகம் - - 
7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை - - 
9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல். 10. இரட்டை மணிமாலை - - 
11. இருபா இருபஃது - - 
12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல். 
13. உலாமடல் - கனவில் பெண் இன்பம். 
14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை. 
16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு. 
17. ஊசல் - வாழ்த்துதல். 
18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர். 
19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு. 
20. ஊரின்னிசை - பாட்டுடைத்தலைவன் ஊர். 
21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர். 
22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை. 
23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள். 
24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா. 
25. ஒலியல் அந்தாதி - - 
26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை - 
28. கண்படை நிலை - 
29. கலம்பகம் - 18 உறுப்புகள். 
30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல். 
31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது. 
32. காப்பு மாலை - தெய்வம் காத்தல். 
33. குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல். 
34. குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல். 
35. கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை. 
36. கைக்கிளை - ஒரு தலைக்காமம். 
37. கையறுநிலை - உற்றார் இறந்த பொழுது வருந்துவது. 
38. சதகம் - (அகம், புறம்) நூறு பாடல் பாடுவது. 
39. சாதகம் - நாள், மீன் நிலைபற்றிக் கூறுவது. 
40. சின்னப் பூ - அரசனின் சின்னங்கள் பத்து. 
41. செருக்கள வஞ்சி - போர்களத்தில் வெற்றி ஆரவாரம், பேய்கள் ஆடல் பாடல். 42. செவியறிவுறுஉ - பெரியோருக்குப் பணிவு, அடக்கம். 
43. தசாங்கத்தயல் - அரசனின் பத்து உறுப்பகள் 
44. தசாங்கப்பத்து -- அரசனின் பத்து உறுப்பகள் 
45. தண்டக மாலை -- 
46. தாண்டகம் - 27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும். 
47. தாரகை மாலை - கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல். 
48. தானை மாலை - கொடிப்படை. 
49. தும்பை மாலை - தும்பை மாலை சூடிப்பொருவது. 
50. துயிலெடைநிலை - பாசறையில் தூங்கும் மன்னனை எழுப்புதல். 
51. தூது - ஆண் - பெண் காதலால் அஃறிணையைத் தூதனுப்புதல். 
52. தொகைநிலைச் செய்யுள் - -
53. நயனப்பத்து - கண். 
54. நவமணி மாலை - - 
55. நாம மாலை - ஆண்மகனைப் புகழ்தல். 
 56. நாற்பது - காலம் இடம் பொருள் இவற்றுள் ஒன்று. 
57. நான்மணி மாலை -- 
58. நூற்றந்தாதி - - 
59. நொச்சிமாலை - மதில் காத்தல். 
60. பதிகம் -ஏதேனும் ஒருபொருள்.
61. பதிற்றந்தாதி - - 
62. பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது.
63. பரணி - 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது. 
64. பல்சந்த மாலை -- 
65. பவனிக்காதல் - உலாவல் காமம் மிக்குப் பிறரிடம் கூறுவது. 
66. பன்மணி மாலை - கலம்பக உறுப்புகள். 
67. பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரை.
68. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) - குழந்தையின் பத்துப்பருவங்கள். 
69. புகழ்ச்சி மாலை - மாதர்கள் சிறப்பு. 
70. புறநிலை - நீ வணங்கும் தெய்வம் நின்னைக் காக்க. 
71. புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் காக்க. 
72. பெயர் நேரிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல். 
73. பெயர் இன்னிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல். 
74. பெருங்காப்பியம் - கடவுள் வணக்கம், வருபொருள், நான்குபொருள் படபாடுதல். 
75. பெருமகிழ்ச்சிமாலை - தலைவியின் அழகு, குணம் , சிறப்பு. 
76. பெருமங்கலம் - பிறந்தநாள் வாழ்த்து. 
77. போர்க்கெழு வஞ்சி - மாற்றார் மீது போர்தொடுக்கும் எழுச்சி. 
78. மங்கல வள்ளை - உயர்குலத்துப்பெண். 
79. மணிமாலை - - 
80. முதுகாஞ்சி - இளமை கழிந்தோர் அறிவில் மாக்கட்கு உரைப்பது. 
81. மும்மணிக்கோவை -- 
82. மும்மணிமாலை - - 
83. மெய்கீர்த்தி மாலை - அரசனின் கீர்த்தியைச் சொல்லுவது. 
84. வசந்த மாலை - தென்றல் வருணனை. 
85. வரலாற்று வஞ்சி - குலமுறை வரலாறு. 
86. வருக்கக் கோவை -- 
87. வருக்க மாலை --
88. வளமடல் - மடலேறுதல். 
89. வாகை மாலை - வெற்றி வாகை சூடுதல். 
90. வாதோரண மஞ்சரி - யானையை அடக்கும் வீரம். 
91. வாயுறை வாழ்த்து - பயன்தரும் சொற்களை அறிவுரையாகக் கூறுவது. 
92. விருத்த இலக்கணம் - படைக்கருவிகளைப் பாடுவது.
93. விளக்கு நிலை - செங்கோல் சிறக்கப்பாடுவது. 
94. வீர வெட்சி மாலை - ஆநிரை கவர்தல்.
95. வெற்றிக் கரந்தை மஞ்சரி - ஆநிரை மீட்டல். 
96. வேனில் மாலை - இளவேனில், முது வேனில் வருணனை.

ஞாயிறு, 21 மார்ச், 2010

நோக்கு(200 வது இடுகை)வேர்களைத்தேடி..........

இதுவரை 85 நாடுகளிலிருந்து 29000 பார்வையாளர்கள் 2500 க்கு மேல் கருத்துரையளித்துள்ளனர். இவர்களுள் 179 பேர் இப்பொழுது இவ்வலைப்பதிவைப் பின்தொடர்ந்து வருகின்றனர். 300 பேர் மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுகின்றனர்.

தமிழ், மொழி, இலக்கியம் மட்டுமே எழுதும் எனது பதிவு நாடி இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் தமிழ்ப்பற்று எனது எழுத்துக்களுக்கான கடமையை மேலும் அறிவுறுத்துவதாக அமைகிறது.

அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்…

கடந்து வந்த பாதை………


திரட்டி, தமிழ்மணம் ஆகிய திரட்டிகளில் இந்தவார நட்சத்திரம்,
தமிழ்மணம் 2009 விருது, தினமணியில் வலையுலகப் படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டமை,

என நினைவில் நீங்காத அனுபவங்கள் பல இருந்தாலும் எப்போதும் எண்ணிப்பெருமிதம் கொள்ளுவது..

வலையுலகம் தந்த நட்பைத்தான்..

திரும்பிய திசையெல்லாம் நண்பர்கள்….
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்புக்குச் சென்றபோது இந்த வலையுலக நட்பின் ஆழத்தை உணர்ந்தேன். உடன்பிறந்த உறவுகளைப் போல, பலநூறாண்டுகள் பழகியது போன்ற உரிமை..

நான் நன்றாக அறிவேன்..
எனது பதிவுகளைப் படிப்போரில் 80 விழுக்காடு தமிழ்த்துறை அல்லாத பல்வேறு துறை சார்ந்தோர் என்பதை.

நான் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்தபோது இணையத்தில் தேடிக் கிடைக்காத தமிழ் இலக்கியம் குறித்த செய்திகளைப் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணமே நான் வலையுலகிற்கு வர அடிப்படையாக அமைந்தது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தைப் பொற்காலம் என்பர். சங்க இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் மட்டும் சொல்லவில்லை. வாழ்வியல் நுட்பங்கள் பலவற்றையும் அழகாகச் சொல்லிச்செல்கின்றன. எனது இடுகைகளில் பாதிக்கு மேல் சங்கஇலக்கியங்களே ஆட்சிசெலுத்தும்.

பணத்தைப் பன்மடங்காக்கும் தொழில்நுட்பங்களைச் சொல்லித்தர உலகில் பல அமைப்புகள் உள்ளன. வாழ்வியல் நுட்பங்களைச் சொல்லித்தரவோ, கேட்கவோ மனிதர்களுக்கு நேரமில்லை.

சங்ககால மக்களின், இயற்கையோடு இயைந்த வாழ்வு, செம்மையான கொள்கைகள், கட்டுப்பாடுகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், அறிவியல் அறிவு, வாணிகம், என பல்வேறு கூறுகளும் இன்றைய சமூகம் அறிந்தகொள்ளவேண்டியவையாக உள்னன.


2500 ஆண்டுகள் பழமையான இலக்கியங்களாக இருந்தாலும் அதன் இனிமை கருதிப் படிக்க வரும் தமிழ்ப்பற்றாளர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

தமிழின், தமிழரின் வேர்களைத்தேடி…. நான் சென்ற இடங்களிலெல்லாம் தமிழ் நண்பர்களை நட்பாகத் தந்த இந்த வலையுலகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் இவ்வேளையில்,

தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, தமிழ்வெளி, தமிழ்10 ஆகிய வலைப்பதிவுத் திரட்டிகளையும் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.

தினமணி நாளிதழும் வலைப்பதிவுகளைத் திரட்டுவது வலையுலகின் வளர்ச்சியைக் காட்டுவதாக அமைகிறது.


கருத்துச்சுதந்திரம் நிறைவாகவுள்ள இந்த வலையுலகில் வலைப்பதிவர்கள் ஒவவொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறன்களைக் கொண்டிருக்கின்றனர்.

தொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு, கவிதை, கதை, சிந்தனை, நகைச்சுவை எனப் பல பொருளிலும் வலைப்பதிவர்கள் எழுதுகின்றனர். இவர்களின் சிந்தனை, தனித்திறன் பல வடிவங்களில் வெளிப்பட்டாலும். இவையெல்லாம் தமிழ் என்னும் எழுத்துவடிவத்தில் இணையத்தில் பார்ப்பதற்குப் பெரிதும் மகிழ்ச்சியாகவுள்ளது..

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்குக் கணினியில் உள்நுழையக்கூட தெரியாது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவு என்பதும் கூட எனக்குக் கனவாகத்தான் இருந்தது.

இன்று வலைப்பதிவு, மின்னஞ்சல் ( அரட்டை) ஆர்குட், டிவைட்டர், பேஸ்புக், என எங்கு சென்றாலும் தமிழ் தமிழ் தமிழ் தமிழிலேயே அனைத்துத் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் முடிகிறது.


வலைப்பதிவர்களுக்கு உதவுவதற்கு என்று பல்லாயிரம் இணையதளங்களும் வலைப்பதிவர்களும் வந்துவிட்டனர். இவையல்லாமல் யுடியுப் போன்ற காணொளித் தளங்களும் வலைப்பதிவுத் தொழில்நுட்பக் காணொளிகளைக் கொண்டு விளங்குகின்றன.


ஐந்து நிமிடத்தில் இன்று….

◊ ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம்.
◊ தமிழ் எழுது மென்பொருள் (அழகி, என்.எச்.எம்) பதிவிறக்கி கணினியில் பதியலாம்.
◊ ப்ளாக்கர் அடைப்பலகையை இணையப்பக்கம் போல மாற்றலாம்.
◊ இணையத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் விட்செட்டுகள் வாயிலாக வலைப்பதிவில் சேர்க்கலாம்.
◊ உங்கள் எண்ணங்களை உலகில் உள்ள எல்லாத்திசைகளிலும் திரட்டிகள் வாயிலாகக் கொண்டு செல்லலாம்.

குறுகிய காலத்தில் இணையவுலகில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு விரல்நுனியில் உலகம் உள்ளது.

அதனால் வலையுலகில் பார்வையாளர்களாக மட்டுமே பலகோடிப் போ் உள்ளனர். அவர்களும் வலையுலகிற்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும், ப்ளாக்கர் என்னும் வலைப்பதிவு சேவை வழங்கிய கூகுளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..
____________/\______________ நன்றி! நன்றி! நன்றி! ____________/\_________

சனி, 20 மார்ச், 2010

தலைப்புணைக் கொளினே
“தோழிமார்கதை“

என்னும் தலைப்பிலான கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை தோழிகளின் நட்பின் ஆழத்தையும் வாழ்வியல் இயல்பையும் அழகுறச் சொல்லும் கவிதையாகும்,

'ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்
புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்
பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட
பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிறுவாட்டுக்காசெடுத்து
கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி
நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க
கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட
பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில
வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க
சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக
எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு
என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க
பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட
என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக
விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்
பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்
ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து
சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது
புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது
எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக
தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக
எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட
உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு
வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு
ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்

போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!


இந்தக் கவிதையின் படைப்பாக்கத்தில் சங்கப்பாடலின் தாக்கம் தெரிகிறது.

சங்கஇலக்கியத்தில் குறுந்தொகைப் பாடல் ஒன்று இருபெண்களின் நட்பை அழகுறச் சொல்லுகிறது.இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் ( தலைவியை முதலில் இயல்பாகப் பார்த்துக் காதல் கொண்ட தலைவன். அவளைச் சந்தித்து மீண்டும் பேச எண்ணுகிறான். தலைவியோடு மிகுந்த நெருக்கம் கொண்டு விளங்குபவள் தோழி. அதனால் தோழியின் துணை கொண்டு தான் தலைவியைச் சந்திக்கலாம் என்று முடிவுசெய்கிறான்.

(தலைவியின் விருப்பத்துக்குரிய தோழி ஆதலால் பெட்டவாயில் ஆனால் தோழி. தோழியின் வாயிலாகத் தலைவன் தலைவியைச் சந்திக்க எண்ணுவதால் இத்துறை பெட்டவாயில் பெற்று இரவு வலியுறுத்தல் ஆனது)

தலைவிக்கும் தோழிக்குமான நட்பைப் பார்த்து வியக்கிறான் தலைவன்..


பித்திகத்திற்கு மழைப்பருவமும், தளிருக்கு மழைத்துளியும் போலத் தலைவிக்கு இத்தோழி இன்றியமையாதவள். தளிரைப் போன்ற மென்மையானவள் தலைவி.

தலைவியும் தோழியும் ஒற்றுமையாக இருக்கின்றனர். இருவரும் நீராடச் சென்றால் தோழி நீர் மிதவையின் மேல்பகுதியைப் பற்றினால் தலைவியும் நீர்மிதவையின் மேல்பகுதியைப் பற்றுகிறாள். தோழி நீர்மிதவையின் கீழ்ப்பகுதியைப் பற்றினாள் தலைவியும் நீர்மிதவையின் கீழ்ப்பகுதியைப் பற்றுகிறாள்.


(தலைப்புணைக் கொளினே - நீர்மிதவையின் மேல்பகுதியைப் பற்றினாள்)

தோழி, நீர் மிதவையின் (புணையின் கடைப்பகுதியைப் )கீழ்பகுதியைப் பற்றினாள் தலைவியும் மிதவையின் கடைப்பகுதியைப் பற்றுவாள்.

மிதவையின் மேல்ப்பகுதியையும், கீழ்ப்பகுதியையும் விட்ட தோழி நீரோடு அடித்துச் செல்லப்பட்டால் தோழியை நீரிலிருந்து மீட்பதற்காக தலைவியும் செல்வாள் போலும் என்று பார்த்து தலைவிக்கும் தோழிக்குமான நட்பைப் பார்த்து வியக்கிறான் தலைவன்.


இதனை,

தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட்
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே.குறுந்தொகை .222. குறிஞ்சி - தலைவன் கூற்று
-சிறைக்குடி யாந்தையார்.


என்னும் பாடல் விளக்கும்.

பாடல் வழி அறியலாகும் செய்திகள்

◊ பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தல் - என்னும் அகத்துறையென்பது தோழியின் துணையால் தலைவியைத் தலைவன் சந்திக்க எண்ணுதல் என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
◊ தலைவிக்கும் தோழிக்குமான நட்பு மிக அழகாகச் சொல்லப்படுகிறது.
◊ நீராடும் மகளிர் வாழைமரத்துண்டு போன்ற எதையாவது பற்றிக்கொண்டு நீராடும் வழக்கம் இப்பாடல் வழி அறியலாம். இதனை,

“நறுவீ நாகமு மகிலு மாரமும்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகி“

(சிறுபாண்-116-7)

என்னும் சிறுபாணாற்றப்படை வழியாகவும் அறியமுடிகிறது.

◊ கவிஞர்.வைரமுத்து அவர்களின் தோழிமார்கதை என்னும் கவிதையின் கருவாக இந்த சங்கப்பாடல் கூட அமைந்திருக்கலாம்.

வெள்ளி, 19 மார்ச், 2010

படிக்காத அம்மாவின் கையெழுத்து.

படிக்காத அம்மாவின் கையெழுத்து.படிக்காத அம்மாவின் கையெழுத்து..
“கோலம்“

--- ----- ------
தன்னம்பிக்கை--- -------- ---------

வறுமை.


நான் வறுமையில் வாழ்கிறேன்!
வறுமை என்னிடம் வசதியாய் வாழ்கிறது!!

வியாழன், 18 மார்ச், 2010

24 ஆம் புலிக்கேசி.
குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படனும்னு வழக்கத்தில் சொல்வதுண்டு..

அது மோதிரக் கையில்லை - மோதுகிற கை!!

ஆம், “ குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்“ என்பது தான் சரியாக அமையும். மோதுகிற கையென்றால். தமக்கு நிகரான வலிமையுடையவரிடம் ( மோதுகிற மனதிடம் உள்ளவரிடம்) மோதுவது தான் வீரம் என்ற பொருளில் அன்று வழங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் 23 ஆம் புலிகேசி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அதில் புலிகேசி என்னும் மன்னன் கோழையாக இருப்பார். தூதாக வந்த புறாவை வறுத்து சாப்பிட்டுவிடுவார். அதனால் தூதனுப்பிய மன்னன் போர்தொடுத்து வந்துவிடுவான். போர் என்றால் அஞ்சும் புலிகேசி வெண்கொடியேந்தி சமாதானம் கேட்பார்.

போரிட வந்த மன்னன் புலிகேசியைப் பார்த்து,
என்ன இவன் மானங்கெட்ட மன்னாக இருப்பான் போல இருக்கிறது என்று சொல்ல..

அருகிலிருப்பவன்.. மன்னா இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்.. இவன் கண்ணை மட்டுமாவது எடுத்துக்கொண்டு போவோம் என்பான்.

அவ்வளவு தான் புலிகேசி மன்னன் எதிரியின் காலிலேயே வீழ்ந்துவிடுவார்..

அனைவரும் பார்த்துச்சிரித்த இக்காட்சிகள் திரையில் மட்டுமல்ல சங்க கால வாழ்வியலிலும் இருந்திருக்கின்றன.


வலிமையான மன்னன் ஒருவன் இன்னொரு மன்னன் மீது போர்தொடுத்து வந்துவிட்டான். தனது வருகையை எதிரியின் காவல் மரங்களை வெட்டித் தெரிவி்க்கிறான். ஆனால் எதிரியே தன் எதிர்ப்பையே காட்டவில்லை.

போர்தொடுத்து வந்த மன்னனைப் பார்த்து புலவர்,

மன்னா நீ போர்தொடுத்து வந்த மன்னன் உனக்கு நிகரானவன் அல்ல. மானம் இழந்தவனாக இருக்கிறான். இந்த மன்னனை நீ வென்றாலும், கொன்றாலும் உனக்குப் ஏதும் பெருமை இல்லை என்று சொல்கிறார்.


செறிந்த பரல்கள் உடைய சிலம்பில் நீண்ட கோல் தொழிலமைந்த சிறிய வளையல்களும் அணிந்த மகளிர், குளிர்ந்த ஆன்பொருநையாற்று மணல் மேட்டிலேயே பொன்னாலான கழற்சிக் காய்களைக் கொண்டு வீசி விளையாடுவர். அவர்கள் வியைாடும் வெண்மணல் பரப்பு, சிதையுமாறு வலிய கையையுடைய கொல்லனால் அராவிக் கூர்மையாக்கப்பட்ட நெடிய கைப்பிடியை உடைய கோடரி கொண்டு உனது வீரர்கள் காவல் மரங்களை வெட்டுவார்கள்.

அதனால் மலர் மணமுடைய நெடிய கிளைகள் மலர்கள் உதிர்ந்து பொலிவழியும். இவ்வாறு சோலைகள் தோறும் காவல்மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையை உடைய காவலமைந்த மாளிகையிடத்துச் சென்றொலிக்கும்,

எனினும் மானமின்றி இனிதாக அங்கே உறையும் வேந்தனுடன் இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட்டாய் என்பது நாணத்தக்கது..

எனவே நீ பகை வேந்தனைக் கொன்றாலும் கொல்லாது விடுத்தாலும் அவற்றால் உனக்கு நேரும் உயர்ச்சியை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. நீயே நன்கு எண்ணி அறிவாய். இப்போரைத் தவிர்த்தலும் உண்டு!!அடுநை யாயினும், விடுநை யாயினும்,
நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,
செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்,
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க,
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.


புறநானூறு - 36.
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:வஞ்சி. துறை: துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.

(பகைவர் மேல் போர் செய்ய எழும் வஞ்சித்திணையின் ஒரு துறை துணைவஞ்சி. பகைவருடன் போரிட வந்தவனைத் தடுத்து அமைதிப்படுத்திப் போரைத் தவிரச் செய்தல். இருபெரு வேந்தருக்கும் சந்து செய்வித்தல். போரைத் தவிர்த்தமையால் இது துணைவஞ்சியானது.)

பாடல் வழி அறியலாகும் செய்திகள்.

◊ குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும் என்பதற்கேற்ப தம் வலிமைக்கு நிகரானவனுடன் மோதுவதே சிறந்தது என்ற செய்தி முன்வைக்கப்படுகிறது.
◊ பொன்னாலான காய்களைக் கொண்டு மகளிர் விளையாடிமை அக்காலச் செல்வச் செழிப்பின் குறியீடாகவுள்ளது.
◊ வென்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனின் காவல் மரத்தை வெட்டும் அக்கால மரபு சுட்டப்படுகிறது.
◊ மானம் அற்றவர் மனிதரே அல்ல. அவருடன் போர் புரிவதும் வெற்றிபெறுவதும், அன்றி அவரேயே கொல்வதும் கூட பெருமையல்ல என்ற சங்ககால மக்களின் உயர்ந்த கொள்கை புலப்படுத்தப்படுகிறது.

செவ்வாய், 16 மார்ச், 2010

மூதின் முல்லை.

மூதின்முல்லை என்பது புறத்துறைகளுள் ஒன்றாகும். மறக்குடி மகளிரின் வீரத்தைப் பற்றிக் கூறுவது இத்துறையின் தன்மையாகும். இத்துறையைப் பற்றி புறப்பொருள்வெண்பாமாலை “அடல்வே லாடவர்க் கன்றியு மவ்வில், மடவரல் மகளிர்க்குமற மிகுத்தன்று” என உரைக்கும்.

பொன்முடியார் என்னும் பெண்பாற்புலவர் (மறம்-வீரம்) மறக்குடிப் பெண்ணின் கூற்றில் வைத்துப் பாடிய இப்பாடல் எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துக்கைளத் தாங்கி விளங்குகிறது.

திங்கள், 15 மார்ச், 2010

பாசி யற்றே பசலை.
தலைவனை நீங்கினால் ஏற்படும் பிரிவு காரணமாகத் தலைவியின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றம் பசலை எனப்படும். பசலையைக் கண்டு ஊரார் அலர் தூற்றுவர் என்பது சங்ககால மரபு. இந்த பசலை பற்றிப் பல பாடல்களைப் புலவர்கள் பாடியிருந்தாலும் அதன் தன்மையை எல்லோருக்கும் புரியமாறு சொல்லும் பாடல் ஒன்றைக் காண்போம்…


நீர்நிலைகளின் பச்சை நிறத்தில் பாசிபடர்ந்திருப்பதைப் பலரும் பார்த்திருப்பர். அந்தப் பாசி பயன்கொள்வோர் அருகே செல்லும் போது விலகிச் செல்லும், அந்நீர்நிலையைக் கடந்து வந்தபின்பு மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும்.

அந்த பாசி போன்றது பசலை என்கிறாள் தலைவி. ஏனென்றால் தலைவன் அருகே இருக்கும் போது இந்த பசலை என்னைவிட்டு நீங்கிவிடுகிறது. அவன் என்னை நீங்கியவுடன் மீண்டும் வந்து சேர்ந்துகொள்கிறது என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது என்னும் அகத்துறையில் அமைந்த இப்பாடலை,

(வரைவு - திருமணம்)

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்த லானே.

குறுந்தொகை -399. மருதம் - தலைவி கூற்று


பரணர் பாடியிருக்கிறார்.

ஞாயிறு, 14 மார்ச், 2010

மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்.“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்“ என வழங்கப்பட்டுவரும் பழமொழியின் திருந்திய வடிவம்,

“ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்“ என்பதாகும். ஆயிரம் வேர்களின் பண்புகளை அறிந்தவனே நல்ல மருத்துவன் என்ற இப்பழமொழி, பழந்தமிழரின் மருத்துவச் சிந்தனைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது.

வள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் மருந்தின், மருத்துவத்தின் பல்வேறு படிநிலைகளையும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
என்ற வள்ளுவரின் மருத்துவப் படிநிலையைத் தான் இன்றைய மருத்துவவியலாளர்களும் மருத்துவக்கல்வியாகப் படிக்கின்றனர்.

சங்க இலக்கியத்திலும் மருத்துவம் தொடர்பான பல்வேறு செய்திகளைக் காணமுடிகிறது.

மருந்தாய்ந்து கொடுத்த அறவோன்


நோய்வாய்ப்பட்டவர் விரும்பியதைக் கொடு்க்காமல், நோயின் தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்து நோய்வாய்ப்பட்டவரின் உடலுக்குத்தக்க மருந்தைத் தருபவரே நல்ல மருத்துவராவார்.

தலைவி தன் தந்தையை, மருந்தாய்ந்து கொடுத்த நல்ல அறவோன் என்கிறாள் தோழியிடம்...

திருத்தமாகச் செய்யப்பட்டதும், கைவினைத்திறம் அமைந்ததும் ஒளிபொருந்தியதுமான தோள் வளையை நான் விரும்பினேன். அது கிடைக்கப் பெறாமையால் அழுதேன். என் தந்தை, “தீர்த்தற்கரிய நோயை அடைந்தவர் விரும்பியதைக் கொடாமல் ஆராய்ந்து நோய்க்குத் தக்கவாறு மருந்து தரும் அறமுடைய மருத்துவனோடு ஒப்பிடத்தக்கவராவர்.

பலரும் புகழும் மலை நாடனாகிய என் தலைவன் சிலகாலம் என்னை நீங்கியிருப்பதை என் தந்தை அறிந்தனர் போலும். தலைவன் என்னை விட்டு நீங்கினாலே உடல் தளர்ந்து தோள் வளை கீழே விழுந்து என் தோளுக்குப் பழிவரும். ஆனால் நானே நீக்கினாலும் நீங்காதவாறு வண்ணம் கெடாத, பொன்னாலான தோள்வளையைச் செய்துதந்தார். அவர் வாழ்க என வாழ்த்துகிறாள் தலைவி. இதனை,


திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்,
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது,
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல,
என்னை-வாழிய, பலவே!-பன்னிய
5 மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல,
நீப்ப நீங்காது, வரின் வரை அமைந்து,
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே.
நற்றங் கொற்றனார்

சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைத்தது.
(சிறைப்புறம் என்றால் வீட்டுக்கு அருகாமையில்)
நற்றிணை - 136. குறிஞ்சி

என்னும் பாடல் உணர்த்தும். தான் வேண்டியதைத் தராமல், தனக்குப் பயன்படும் வகையில் அளித்தமையால் தலைவி தன் தந்தையின் செயலை மருந்தாய்ந்து கொடுக்கும் மருத்தவனின் செயலோடு ஒப்பிட்டு நோக்கியுள்ளாள்.

இவ்வாறு தலைவி தோழியிடம் கூறும்போது அருகாமையில் மறைவாக நிற்பான் தலைவன். தலைவியின் மனநிலையையும், உடல்நிலையையும் உணர்ந்து விரைந்து திருமணம் செய்துகெள்ள முற்படுவான்.

இப்பாடல் வழி அறியலாகும் செய்திகள்.


◊ மருந்தாய்ந்து கொடுக்கும் மருத்துவக்கலை பழந்தமிழரிடம் அக்காலத்திலேயே வழக்கத்திலிருந்திருக்கிறது.
◊ பொன்னாலான அணிகலன்களை அக்காலத்தமிழர்கள் விரும்பி அணிந்ததால், கலைநுட்பத்துடன் பொன்அணிகள் அன்றே செய்தனர் என்பதும் அறியமுடிகிறது.

சனி, 13 மார்ச், 2010

தொழில்நுட்பப் பதிவர்களே உங்களால் முடியுமா?
◊ கணினியில் அழித்த பதிவை ரிசைக்கிள்பின்னில் எடுக்கிறோம். சிப்ட் அழுத்தி அழித்த பதிவை ரெக்கவரி மென்பொருள் கொண்டு மீட்டுவிடுகிறோம்.

◊ பென்டிரைவில் அழித்த பதிவைக் கூட மென்பொருள் கொண்டு மீட்டுவிடுகிறோம்..

◊ நெட்வொர்க்கில் அழிந்த பதிவை இப்படி மீட்க ஏதேனும் மென்பொருள் உள்ளதா?

◊ “நண்பர் ஒருவர் மிகவும் தேவையான கோப்புகள் அடங்கிய பெரிய கோப்பை (போல்டரை) நெட்வொர்க்கில் வைத்து அழித்துவிட்டார். வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போன்ற அவரின் துன்பம் இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது“ இதில் சிக்கல் என்னவென்றால் கோப்பு அழிந்த கணினி “லினெக்சு“ இயங்குதளத்தில் இயங்குவதாகும். எதிர்பாராத நிலையில் தானே அந்தக் கோப்பை அழித்திருக்கிறார்.

◊ நெட்வொர்க்கில் அழிந்த கோப்பை மீட்க வழி உண்டா?
என கணினி வல்லுநர்களிடம் கேட்டால்..


◊ சிலர் சொல்கிறார்கள்…
ம் இருக்கிறது சில மென்பொருள்கள் இருக்கின்றன…. தேடிப்பார்க்கவேண்டும் என்று.

◊ சிலர் சொல்கிறார்கள் நெட்வொர்க்கில் அழிந்த மென்பொருளை மீட்பது என்பது இயலாதவொன்று. சக்தி வாய்ந்த ரெக்கவரி மென்பொருள்கொண்டு முயற்சித்தால் ஒருவேளை கணினியில் வன்வட்டில் (ஹார்டிஸ்கில்) இருந்தால் மீட்கலாம் என்று சொல்கிறார்கள்.

◊ ஒருபொருளை கீழே போட்டால் உடைந்துபோனாலும் புவியீர்ப்பு காரணமாக கீழே தான் கிடக்கும். ( கணினியில் ஒரு கோப்பை அழித்துவிட்டால் ரிசைக்கிள் பின்னில் தான் இருக்கும். அங்கும் இல்லையென்றால் வன்வட்டில் இருக்கும்.)

◊ ஒருபொருளைக் கடலில் போட்டால் கூடத் தேடிக்கண்டுபிடித்துவிடலாம். ( பென்டிரைவில் தொலைத்த கோப்புகளை மீட்பதற்குக் கூட மென்பொருள்கள் வழக்கில் உள்ளன.)

◊ அண்டவெளியில் ஒருபொருளைத் தூக்கி எறிந்தால், அப்பொருள் எங்காவது எப்போதாவது போய் விழும். இல்லாவிட்டால் ஈர்ப்புவிசை இல்லாததால் உயரத்திலேயே மிதந்து கொண்டிருக்கும். (நெட்வொர்க்கில் அழித்த, அழிந்த கோப்பும் அப்படித்தானே. அந்தத் தரவுமட்டும் எங்கு சென்றுவிடும். அதனை ஏன் மீட்க முடியாது? )


◊ தமிழ்த்துறை சார்ந்த நான் அழிந்த வேர்டு, பவர்பாய்ண்ட், எக்சல், மற்றும் ஒலி, ஒளிக் கோப்புகளை ரெக்கவரி மென்பொருள்கள் கொண்டு மீட்டிருக்கிறேன்.

◊ திறக்கமறுத்துப் பழுதுபட்டுப்போன வேர்டு போன்ற கோப்புகளை மென்பொருள் துணைகொண்டு பழைய நிலைக்குக் கொண்ட வந்திருக்கிறேன்..

இப்படி கணிதுறையல்லாத எனக்கே இவ்வளவு அனுபவங்கள் இருக்கின்றன..

தொழில்நுட்பப் பதிவர்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்..

◊ நெட்வொர்க்கில் தொலைத்த கோப்புகளை மீட்கும் வழி என்ன?
மீட்க மென்பொருள்கள் இருக்கின்றனவா? (முகவரி?)

◊ உங்கள் கணினியில்,
பென்டிரைவில்
நெட்வொர்க்கில் கோப்புகள் அழிந்தபோது என்ன மென்பொருளை, வழிமுறையைப் பின்பற்றினீர்கள்?

புதன், 10 மார்ச், 2010

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை.
மனதில் அன்பின்றி வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற கொடிய பாலை நிலைத்தில் பட்ட மரம் மீண்டும் தளிர்த்தது போன்றது என்பதை,


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.


குறள் -78

என உரைப்பார் வள்ளுவர். அந்த மரத்தின் தளிர் யாருக்கும் பயன்படுவதில்லை அது போலவே இன்று மனிதர்களும் மாறி வருகிறார்கள்.


இயந்திரங்களுக்கு மனிதப் பண்பை உருவாக்க எண்ணும் மனிதன் இயந்திரமாக மாறிவருகிறான் என்பதும் உண்மைதான்.

மனிதன் புதைக்கப்படும பெட்டிகள் இரண்டு,

ஒன்று சவப்பெட்டி
இன்னொன்று தொலைக்காட்சிப்பெட்டி


என்பர் கவிஞர் காசியானந்தன். அறிவியல் தந்த கருவிகளில் சிக்கிக்கொண்ட மனிதர்களுக்கு அன்பு என்ற உணர்வு குறைந்து வருகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குக் கொடுக்கப்படும் முதன்மை குழந்தைகளுக்குத் தரப்படுவதில்லை.

குழந்தைகள் காப்பகம்
முதியோர் இல்லம்
தனிக்குடும்பம்

ஆகியனவே இதற்கு நிகழ்கால சான்றுகளாகும்.

அஃறிணை உயிர்கள் கற்றுத் தரும் பாடம்


பாலை வழியே பொருள் தேடச் சென்ற தலைவன் அங்கு காணும் காட்சிகளால் என் நினைவு வந்து மீண்டு வருவான் என்ற தலைவிக்குத் தோழி சொல்வதாக இப்பாடல் அமைகிறது.

தோழி - தலைவன் உன்மீது மிகுந்த அன்புடையவனாக இருந்தாலும் பொருள் மீது கொண்ட பற்றினால் உன்னை நீங்கி கொடிய வெம்மைத் தன்மை வாய்ந்த பாலை வழியே சென்றுவிட்டான்.

தலைவி - ஆமாம். அவர் பிரிவை ஆற்றாது தவிக்கும் வேளையில் எனக்கொரு நம்பிக்கை பிறக்கிறது.

தோழி - என்ன?

தலைவி - தலைவன் சென்ற வழி அன்புறு காட்சிகள் நிறைந்த வழியாகும். அக்காட்சிகளைக் காணும் தலைவன் என் நினைவு வந்து விரைந்து திரும்புவான் என்பது தான்.

தோழி - உண்மைதான்.
பாலை நிலம் கொடிய வெம்மையுடையதாயினும் நீ சொல்லுவது போல அன்புறு காட்சிகளும் நிறையவுண்டு.

“ தன் கன்றின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஆண்மான் கவைத்த தன் கூர்மையான கொம்பால் மரத்தின் அடிப்பகுதியைக் குத்தித் தன் கன்றின் பசிநோயைத் தீர்க்கும்.

துள்ளி நடக்கும் இயல்புடைய தன் கன்று வெயிலில் வாடக்கூடாது என்று கருத்திய ஆண்மான் தன் உடலையே நிழலாகத் தரும்.


தலைவி - ஆம் இந்த அன்பான காட்சியைப் பார்க்கும் தலைவன் என் நினைவு வந்து விரைந்து திரும்புவான்.

தோழி - கன்றின் மீது ஆண்மான் கொண்ட அன்பைக் காணும் தலைவருக்குத் தன் கடமை தானே நினைவுக்கு வரும்.

தலைவருக்கு உன்மீது கொண்ட அன்பை விட பொருளின் மீது கொண்ட அன்பு அதிகமானது. அதனால் தன் சென்ற வினை(செயல்) முடியாது திரும்பமாட்டார்.

பாடல் இதோ,


நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே.

குறுந்தொகை 213. பாலை - தோழி கூற்று

-கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.

இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.


◊ அன்பு வாழ்க்கையை இனிமையாக்கும்.
◊ மனிதர்களை மனிதர்களாக வைத்திருப்பது அன்பு.
◊ அஃறிணை உயிர்களின் அன்பு சில காலங்கள் மட்டுமே. மனிதர்கள் கொண்ட அன்பு பல்லாண்டுகாலம்.
◊ அன்பின்றி வாழும் வாழ்க்கை யாருக்கும் பயன்தருவதில்லை.
◊ பொருள் வாழ்க்கைக்குத் தேவை. பொருள் தேடுதல் கடமைகளுள் ஒன்று. பொருள் மட்டுமே வாழ்க்கையல்ல.


என பல அறிய வாழ்வியல் கருத்துக்களை எடுத்தியம்புவதாக இப்பாடல் அமைகிறது.

திங்கள், 8 மார்ச், 2010

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-3
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர் பாண்டித்துரைத்தேவர் ஆவார். தமிழ் ஆர்வலர். அவர் ஒருமுறை மதுரை வந்தபோது தனது கோடைக் கால வீட்டில் (தற்போதைய செந்தமிழ்க்கல்லூரி) தங்கியிருந்தார். அப்போது ஆங்கிலேயரின் ஆட்சி நடந்த காலம்.

ஒருநாள் சிகாட் என்னும் ஆங்கிலப் பாதிரியார் ஒருவர் பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பார்க்க வந்தார். பாண்டித்துரைத் தேவரும் அந்தப் பாதிரியாரை வரவேற்று அமரச்செய்தார்.

பாதிரியார்
- நான் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் திருக்குறளை அச்சிட்டு வழங்கவுள்ளேன். அதன் பிரதிகள் சிலவற்றைக் கொண்டுவந்திருக்கிறேன். தாங்கள் தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்பவர். அதனால் தாங்கள் இதனை வாங்கிச் சிறப்பு செய்தல் வேண்டும்.

பாண்டித்துரைத் தேவர்-
மிகவும் மகிழ்வாகவுள்ளது. தாங்கள் ஒரு அயல் நாட்டவராக இருந்தாலும் தமிழ்மொழி மீது தங்களுக்கு உள்ள பற்று மகிழ்வளிப்பதாகவுள்ளது.

(பாதிரியார் தந்த குறளின் முதல் பக்கத்தைத் திறந்து படித்தவுடனேயே பெருந்திகைப்படைகிறார் பாண்டித்துரைத்தேவர்.)

முதல் குறள் இப்படி இருந்ததாம்….

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
முகர முதற்றே உலகு.

பாண்டித்துரைத் தேவர்
- (பெரும் சினம் தோன்றினாலும் வெளிக்காட்டாமல்) குறட்பாவில் மாறுதல்கள் உள்ளனவே. ஏதும் அச்சுப்பிழையா?

பாதிரியார்
- இல்லை! இல்லை! காலகாலமாகத் தமிழ்மக்கள், அறிஞர்கள், புலவர்கள் கவனிக்காமல்விட்டதை நான் கவனித்து எதுகை, மோனைக்க ஏற்ப திருக்குறளை மாற்றியமைத்திருக்கிறேன். ( என்கிறார் பெருமிதத்துடன்)

பாண்டித்துரைத்தேவர் - (அடக்கமுடியாத சினத்தையும் அடக்கியவராக) சரி இப்படி எத்தனை குறள்களை மாற்றியிருக்கிறீர்கள்?

பாதிரியார்
- (பெருமகிழ்ச்சியோடு) என்னால் முடிந்தவரை பெரும்பாலான குறட்பாக்களை மாற்றிவிட்டேன். அதுமட்டமல்ல,

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று இருந்ததை மாற்றி,

இயன்முறய்பால், இயய்முறய்பால், இறய்முறய்பால் என்றும் மாற்றியிருக்கிறேன்.

நோற்பியல், சால்பியல், நோக்கியல், பீடியல், காமியல், ஏமியல் என அதிகாரத்தலைப்புக்களையும் கொடுத்திருக்கிறேன்.


பாண்டித்துரைத்தேவர் - எத்தனை பிரதிகள் இவ்வாறு அச்சிட்டிருக்கிறீர்கள்?

பாதிரியார்
- நானூறு பிரதிகள் அச்சிட்டிருக்கிறேன்.

பாண்டித்துரைத்தேவர்
- தாங்கள் தயங்காது 400 பிரதிகளையும் எனக்கே தந்தருளவேண்டும்.

(பாதிரியார் பெரிதும் மகிழ்ந்து தன் பணியாளன் வாயிலாக எல்ல நூல்களையும் எடுத்துவரச்செய்து பாண்டித்துரைத் தேவரிடமே கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும வாங்கிச் சென்றுவிட்டார்)

பாதிரியார் சென்றவுடன் அந்த நூல்கள் யாவற்றையும் கண்டு பெரிதும் வருந்திய பாண்டித்துரைத் தேவர் தமிழுக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிதே என்று எண்ணி தம் வீட்டில் பெரிய குழிதோண்டி அதில் எல்லா நூல்களையும் இட்டு தீயிட்டாராம்..


(வெளியே தெரியாது இதுபோல தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர் பலராவர்)

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்( உருது - தமிழ்)


1. அகர்பத்தி - அகில் மணத்தி.
2. அமிலம் - புளிக்காரம்.
3. அலாதி - தனிச்சிறப்புடையது.
4. ஆசாமி - ஆள்.
5. இனாம் - கொடை.
6. இஸ்திரி - தேய்ப்பு.
7. உஷார் - எச்சரிக்கை,அறிவுறுத்தல்.
8. ஊதா - கருநீலம்.
9. கச்சேரி - கூடம்
10. கசரத் - உடற்பயிற்சி.
11. கசாப்பு - இறைச்சி.
12. கடுதாசி - மடல்
13. கப்சா - பொய்.
14. சந்தா - தவணை, முறைக்கட்டணம்.
15. சபாஷ் - நன்று.
16. சர்க்கார் - அரசு, ஆள்வோர்.
17. சராசரி - சரிக்கு சரி. இணையாக.
18. சலாம் - வணக்கம்.
19. சல்லிசு - மலிவு
20. சலம் - நீர்.
21. சலனம் - அசைவு.
22. சவ்வாது - பூ மணத்தி.
23. சவடால் - அடாவடி.
24. சவரம் - மழிப்பு.
25. சவாரி - இவர்தல்.
26. சவால் - அறைகூவல், வெல்விளி.
27. சாதா - பொது.
28. சாப்ஸ் - துண்டுக்கறி
29. சாமான் - பண்டம் , பொருள்.
30. சால்ஜாப்பு - சாக்குப் போக்கு, ஏமாற்றும் வேலை.

சனி, 6 மார்ச், 2010

எத்திசைச் செலினும் சோறே!அதியனுக்கும் ஔவையாருக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும். இவர்கள் பற்றி வழங்கப்படும் செவிமரபுக் கதை ஒன்று,
ஒருமுறை ஔவையார் அதியனிடம் பாடல் பாடி பரிசில் பெறச்சென்றார். ஔவை மீது அதியன் கொண்ட அன்பாலும், தமிழ்ப்பற்றாலும் ஔவைக்கு உடனடியாகப் பரிசில் தராது காலம் தாழ்த்தினான். பரிசில் கொடுத்துவிட்டால் ஔவை தன்னை நீங்கி வேறிடம் சென்றுவிடுவார் என்ற அச்சமே அதியனின் காலம் தாழ்த்தலுக்கான காரணமாகும். ஔவையோ அதியனின் காலம் தாழ்த்தலைத் தாங்க இயலாதவறாக எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என வேறிடம் செல்ல எண்ணியபோது, அதியன் ஔவையின் விருப்பப்படி நிறைய செல்வங்கைளத் தந்து அனுப்பி வைத்தானாம். ஔவை சென்றபோது தன் வீரர்களைக் கள்வர்கள் போல அனுப்பி ஔவையிடம் கொடுத்த செல்வத்தை கைப்பற்றச் செய்தானாம்.

அப்படியாவது ஔவை தன்னிடம் மீண்டும் வந்துவிடுவார் என்ற அதியனின் எண்ணமே இந்தச் செயலுக்குக் காரணமாகும். அதியனின் இந்தச் செயலுக்குள் மறைந்திருப்பது ஔவை மீது அதியன் கொண்ட அன்பும் தமிழ்ப்பற்றும் தான்.அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராது நீட்டித்த போது ஔவையார் பாடிய பாடல்…


“வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“

பாடல்- புறநானூறு-206.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: துறை: பரிசில்.


இப்பாடலின் பொருள்.


வாயிற் காப்போனே! வாயிற் காப்போனே!
வள்ளன்மை மிக்கவர்களின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து,
தமக்குத் தேவையான பரிசிலை விளைவிக்கும் ஆற்றல் மிக்க உள்ளத்தைக் கொண்ட பரிசிலர்கள் எப்போதும் செல்லும் அடைக்காத வாயிலை உடையவனே!

தலைவனாகிய அதியன் தான் தன் தரம் அறியமாட்டானா?
இல்லை என் தரத்தை அறியமாட்டானா?

அறிவும், புகழும் உடையவர்கள் மாய்ந்தால் உலகம் வறுமைப்படுவதில்லையே!

ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.
எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.

மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எ்பபடி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி எத்திசை சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்கும்.

என வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறுகிறார்.


பாடல் உணர்த்தும் உட்பொருள்.


காட்டில் மரங்களுக்குக் குறைவில்லை. அதுபோல உலகத்தில் புரவலர்களுக்கும் குறைவில்லை.
எத்திசை சென்றாலும் சோறுகிடைக்கும்!


பாடல் உணர்த்தும் வாழ்வியல் அறம்
.

¯ பசியை விட மானம் பெரிது.
¯ தச்சர் பெற்ற சிறுவர்களின் கலைத்திறனே அவர்கள் வாழ்வின் முதலீடு. அவர்கள் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை! அதுபோல கல்வியென்னும் பெருஞ்செல்வத்தை முதலீடாகக் கொண்டவர்கள் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை.

¯ நம் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் இருக்கக் கூடாது.

¯ யாரை நம்பியும் யாரும் இல்லை.

¯ கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.

வாழ்வியல் நுட்பம்
வாழ்வில் வெற்றிபெற்றவர்களின் கடந்த காலத்தைத்திருப்பிப் பார்த்தால் அவர்களின் வெற்றிக்குப் பக்கத்தில் அவர்களின் சுதந்திர உணர்வு இருக்கும்.

யாருக்கோ கட்டுப்பட்டு நம் திறமைகளை வெளிபடுத்தாமல்,
நம் திறமையை உணராதவர்களின் கீழ் வாழும் வாழ்க்கை,

வயிற்றுக்காக வாழ்க்கையை விற்பது போன்றது.

வயிற்றுக்காக வாழ்க்கையை விற்பர்களால் வாழ்வில் சாதிக்கமுடியாது!

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.
பசி வந்தபோதும் மானத்தை இழக்காத மாண்புடையவர்களே சிறந்த சாதனையாளர்களாவர்.
என்னும் பல்வேறு வாழ்வியல் நுடபங்களையும் உணர்த்துவதாக இப்பாடல் அமைகிறது.

புதன், 3 மார்ச், 2010

விரைவாகத் தமிழில் தட்டச்சிட.


நேற்று இணையத்தில் உலவலாம் என்று கடைக்குச் சென்றேன். அங்கு அந்தக் கடைக்காரர் தமிழில் ஒரு கோப்பு உருவாக்க கணினியோடு போராடிக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தயாரிக்கவேண்டிய தமிழ்க்கோப்பை முப்பது நிமிடத்தில் தயாரித்தார். அழகி என்னும் தமிழ்த்தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்தி மேல்உள்ள எழுத்து அட்டவணைகளில் சுட்டியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டி அவர் அந்தக்கோப்பைத் தயாரித்தார்.

அவர் நிலைகண்டு வருந்திய நான் பொங்குதமிழின் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொடுத்தேன். இணைய இணைப்பின்றியும் பயன்படுத்தத்தக்க அந்தக்கோப்பைப் பயன்படுத்தி தமிங்கில முறையில் எளிதில் அவரால் தட்டச்சிடமுடிந்ததை சில நொடிகளிலேயே பார்த்தேன். அவருக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்த நிறைவோடு வந்தேன்.

தொழில்முறையிலிருப்பவர்களுக்கே தமிழ்த்தட்டச்சு குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தானே இருக்கிறது..

கணினியில் தமிழ் தட்டச்சு செய்வோர்..


◊ அலுவலகக் கடிதம் உருவாக்குவோர்.
◊ தொழில் முறையில் தமிழ்க்கோப்புகளை தயாரிப்போர்.
◊ ஆய்வேடு, அழைப்பிதழ், சான்றிதழ் அச்சடிப்போர்.
◊ நாளிதழ், மாத, வார இதழ்களில் தமிழ் உள்ளீடு செய்வோர்.


இணையத்தில் தமிழ்த்தட்டச்சு செய்வோர்.


◊ வலைப்பதிவு எழுதுவோர்.
◊ கருத்துரை மட்டும் இடுவோர்.
◊ மின்னஞ்சல் அனுப்புவோர்.
◊ அரட்டையடிப்போர் (சேட்டிங்)
◊ இணையதளத்தில் எழுதுவோர்.
◊ பல்லூடகத்தில்(ட்வைட்டர், பேஸ்புக்,ஆர்குட்) தமி்ழ் எழுதுவோர்.


என தமிழ்த் தட்டச்சு செய்வோர் பலவகையினராக இருக்கின்றனர். கணினியிலும் இணையத்திலும் தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு ஒருங்குறி (யுனிகோடு) குறித்த அடிப்படை அறிவு இருத்தல் நலமாகும்.


◊ பலரும் சந்திக்கும் ஒரு சிக்கல் (யுனிகோடு) தமிழ் இணையபக்கங்கள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன என்பது தான். விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருப்போர் இந்தச் சிக்களை லதா எழுத்துருவை (எனது வலைப்பதிவில் வலதுபுறம் லதா எழுத்துருவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்)சேமிப்பதால் தீர்த்துக்கொள்ளலாம்.


◊ தமிழில் விரைவாகத் தட்டச்சிட.


◊ ஏதாவதொரு எழுத்துருவில் தட்டச்சிடத் தெரிந்துகொள்ளவேண்டும்.( பாமினி என்னும் எழுத்துரு இணைய இணைப்பிலும், இணைப்பில்லா நிலையிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது.)
என்.எச்.எம், அழகி ஆகிய தமிழ் யுனிகோடு எழுது மென்பொருள்கள் பரவலான வழக்கில் உள்ளன. இவற்றை நம் கணினியில் நிறுவிக்கொண்டால், தமிழ்99,தமிங்கில முறை, பாமினி, பழைய தட்டச்சு முறை என பல தட்டச்சு முறைகள் கிடைக்கும். இவற்றில் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றினால் தமிழ்தட்டச்சு எளிதாகும்.
◊ புலம்பெயர்ந்து வாழ்வோரும் ஆங்கில வழக்கைப் பின்பற்றுவோருக்கும் தமிங்கில முறை எளிதாக இருக்கும்.

இணைய இணைப்பில்லா எழுது மென்பொருள்.

பொங்குதமிழ் வழங்கும் எழுது மென்பொருள் இணைய இணைப்பிலும் இணைய இணைப்பில்லா சூழலிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது. இதனை (சேவ் அஸ்) நம் கணினியில் சேமித்துக்கொண்டால் இணைய இணைப்பில்லா நிலையிலும் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

தட்டச்சு நுட்பங்கள்..

◊ தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் தட்டச்சு செய்ய விரும்புவோர், ஆங்கில எழுத்துக்களுக்கான விசை எங்கு இருக்கிறது என்பதையும் அதற்கான தமிழ் எழுத்து என்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
◊ விசைப்பலகையில் உள்ள விசைகளில் FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் சிறு கோடு இருப்பதை அறியலாம். இவ்விரு விசைகளிலும் இருகைகளின்ஆட்காட்சி விரலை வைத்துக்கொள்ள வேண்டும்.

◊ (எனக்குத் ஆங்கிலத் தட்டச்சு தெரியாது. ஆனால் தமிழில் விரைவாகத் தட்டச்சு செய்வேன். FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் உள்ள சிறு கோடைத் தவிர விசைப்பலகையின் எழுத்துக்கள் என்ன? அவை எங்கு உள்ளன என்பது கூட எனக்குத் தெரியாது.) இந்த சிறு கோடுகளின் வலது, இடது, மேல், கீழ் உள்ள எழுத்துக்களை ஒருநாளைக்கு எட்டு விசைகள் என ஒரு மணி நேரம் தட்டச்சிட்டுப் பழகினால் ஒரே வாரத்தில் விரைவாகத் தட்டச்சிடலாம்.


◊ தட்டச்சிடப் பழகும் போதும் fJ ஆகிய விசைகளின் கீழுள்ள கோடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு கணினித்திரையை மட்டுமே பார்க்கவேண்டும். விசைப் பலகையைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு கணினித் திரையை மட்டும் பார்த்து அடிப்பதால் விசைப்பலகையைப் பார்க்கும் நேரம் குறையும்.

◊ விசைப் பலகையைப் பார்க்காமல் எல்லா விசைக்களுக்குமான தமிழ் எழுத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்வது முதல் படிநிலை.
◊ விசைப்பலகையைப் பார்க்காமல் சிறு சிறு சொற்களை அடிப்பது இரண்டாவது நிலை.(பிழை ஏற்பட்டாலும் fJ விசையின் கோட்டைப் பற்றி மேல், கீழ்,வலது, இடது என திருத்திக்கொள்ளலாம்.)
◊ பெரிய தொடர்களைத் தட்டச்சிட்டுப் பழகுவது தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்தும்.

◊ விரைவாகத் தட்டச்சிடுவதை விட பிழையின்றித் தட்டச்சிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


◊ ( வெளியூர்க்காரர்
- இந்த ஊருக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

உள்ளூர்க்காரர்
- வேகமாப் போன நேரமாகும்
மெதுவாப் போன வேகமாப் போகலாம் என்று..

வெளியூர்க்கார்
- புரியவில்லையே. புரியுமாறு சொல்லுங்களேன்?

உள்ளூர்காரர்
- எங்க ஊருக்குச் செல்லும் வழி கரடுமுரடானது. அதில் வேகமாப் போன விழுந்துருவீங்க. மெதுவாப்போன வேகமாப் போகலாம். அதான் அப்படிச் சொன்னேன் என்றாராம்)

மெதுவாகத் தட்டச்சிட்டாலும் பிழையின்றித் தட்டச்சிடுவது தமிழ்த்தட்டச்சினை விரைவாகப் பழகும் அடிப்படை நுட்பமாகும்.


◊ அடுத்து சில அடிப்படை கணினி நுட்பங்களை அறிந்து கொள்வது.

(Ctrl+A - எல்லாம் தேர்ந்தெடு.
Ctrl+s - சேமித்திடு.
Ctrl+x - வெட்டுக.
Ctrl+z - பழைய நிலைக்குத் திரும்பு.
Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.
Ctrl+l- வாக்கியத்தை இடதுபுறம் தள்ள.
Ctrl+R - வாக்கியத்தை வலதுபுறம் தள்ள
Ctrl+B எழுத்தைப் பெரிதாக்க.)


ஆகிய நுட்பங்கள் கணினியிலும், இணையத்திலும் தமிழை உள்ளீடு செய்யும் வழிமுறைகளாகும்.

“பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாகத் தருவதைவிட
மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லித்தருவது சிறந்ததாகும்“
என்பது சீனப் பழமொழி..

ஒருவருக்குத் தமிழில் கோப்பு உருவாக்கிக் கொடுப்பதை விட அந்தக் கோப்பை அவரே உருவாக்கும் வழிமுறையைச் சொல்லிக்கொடுப்பது சிறந்தது.

நானறிந்ததைப் பகிர்ந்து கொண்டேன்..
தாங்களுக்குத் தெரிந்த நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே..

செவ்வாய், 2 மார்ச், 2010

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-2

தமிழ்மொழி தனித்து இயங்கவல்லது. பிறமொழிகளின் துணையின்றி தமிழில் பேசவும் எழுதவும் முடியும். “தனித்தமிழ்“ பேசுவோரையும் எழுதுவோரையும் காண்பதே அரிதாகவுள்ளது. அவ்வாறு பேசுவோரை இந்தச் சமூகம் தனிமைப்படுத்துவதையும் காணமுடிகிறது. “இவ்வாறு தனிமைப்படுத்துவோர் வேறுயாருமல்ல தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான். இவர்கள் “தன் தலையில் மண்ணைத் தூற்றிக் கொள்வதோடு தமிழின் தலையிலும் மண்ணைத் தூற்றுவது வருத்தத்துக்குரியவொன்றாகவே உள்ளது.

எத்தனையோ பண்பாட்டு, மொழித்தாக்கங்களிலிருந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு உயிரோடு திகழ்வது நம் தமிழ்மொழி. இந்த நிலையும் கடந்து போகும். தமிழ்மொழி நிலைத்துவாழும் என்ற நம்பிக்கையோடு…….


பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்-பகுதி-1 ல் வடமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் காட்டினேன். பலநண்பர்களும் ஆர்வத்தோடு வந்து கருத்துத் தெரிவித்தமை மகிழ்வளிப்பதாக இருந்தது. அதில் சிலர்…

◊ வடசொற்களில் சில தமிழுக்குரியது என்றும், தமிழ்ச்சொற்கள் சில வடசொற்கள் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

கருத்துரையாளர்களின் மொழிப்பற்று பெருமிதம் கொள்வதாக இருந்தது.

◊ கால்டுவெல் அறிஞர் வந்து சொல்லும் வரை வடமொழிதான் இந்தியாவில் செம்மொழியாகக் கருதப்பட்டது. அவர் தான் “ திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்“ என்ற நூல் வாயிலாக “ திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழ்“ என்ற கருத்தை உலகறியத் தெரிவித்தார். அதன் பின்னர் தான் தமிழி்ன் தொன்மை, செழுமை, வளமை, இலக்கிய நயம் ஆகியவற்றை உலத்தார் அறிந்துகொண்டனர். தமிழில் தொல்காப்பியர் பெறுமிடத்தை வடமொழியில் பாணீனி பெறுகிறார்.
◊ தமிழ்மொழி பழமையானது என்று நாம்கருதும் அதே சூழலில் பிறமொழியின் தொன்மையையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
◊ நம்மில் பலர் தமிழ் மொழியைப் பேசத் தயங்குவதையும், பிறமொழிகளின் மீது ஈர்ப்புடையவர்ளாக உள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.◊ தமிழின் தொன்மையையும், வளமையையும் வேர்ச்சொல்லாய்வின் வாயிலாக உலகறியச் செய்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். இவர் தம் கட்டுரைகள், “ஞாலமுதல் மொழி தமிழ்“ என்பதை பெருங்குரலிட்டு மொழிவனவாகும்.
◊ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொல்லும் தகுதிவாய்ந்த ஒரே மொழி நம் தமிழ்மொழி. அதனால் கருத்துச் சுதந்திரம் நிறைந்த இக்காலத்தில் தமிழின் தொன்மையும், வளமும், வேர்ச்சொல் குறித்த விழிப்புணர்வும் இன்றைய ஊடகத்துறைக்குத் தேவையெனக் கருதுகிறேன்.


தமிழில் கலந்த பிறமொழிச்சொற்களாக உணரச்சிப் பாவலர் காசியானந்தன் அவர்கள் கூறும் சான்று…“வீட்டுக்கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும் கோணிப்பையில் இருந்த பப்பாளிப்பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும் கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ ரிக் ஷாவில் தப்பி ஓடியபோது தகவல் அறிந்த போலீ்ஸ் ஏட்டு விரட்டி துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக்கட்டின“


செய்தி ஏட்டில் திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான் என நினைக்கிறோம். ஆனால்… தமிழா இது..?

சாவி போர்ச்சுகீசியம் (திறவுகோல்)
பீரோ - பிரெஞ்சு (பேழை)
துட்டு - டச்சு (பணம்)
கோணி - இந்தி (சாக்கு, கந்தை)
பப்பாளி - மலாய் (பப்பாளி)
சப்போட்டா - இசுப்பானியம் (சப்போட்டா)
கொய்யா- பிரேசிலியன் (கொய்யா)
சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
வயது- சமஸ்கிருதம் (பருவம்)
கில்லாடி - மராத்தி (திறமைசாலி)
ஆட்டோ- கிரேக்கம் (தானியங்கி)
ரிக் ஷா - சப்பானியம் (இழுவை)
தகவல் - அரபி (செய்தி)
போலீஸ் - இலத்தீன் (காவலர்)
ஏட்டு - ஆங்கிலம் (தலைமைக்காவலர்)
துப்பாக்கி - துருக்கி (துமுக்கி)
தோட்டா - உருது(குண்டு)

அடைப்புக்குள் உள்ள சொற்கள் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களாகும்.

எந்த மொழியையும் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை.