வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 19 அக்டோபர், 2021

தேடுபொறிகளும் செயற்கை நுண்ணறிவுத் தமிழும்


மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என் பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல,  கணினி  அல்லது  இயந்திரங்கள்  ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு துறைகளிலும் இன்று செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்ந்து வருகிறது. தேடுபொறிகளுக்குத் தேவையான தமிழ் செயற்கை நுண்ணறிவுக் கூறுகளை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் 50

 ஆசிரியர்


1. ஒரு மனிதனுக்கு நீங்கள் எதையும் கற்பிக்க முடியாது, அதை அவனுக்குள் கண்டுபிடிக்க மட்டுமே உதவ முடியும். - கலிலியோ கலிலி

 

2. ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர். டாக்டா் ஏ.பி.ஜே  அப்துல் கலாம்

 

3. ஒரு ஆசிரியருக்கு ஆக்கப்பூர்வமான மனம் இருக்க வேண்டும். - டாக்டா் ஏ.பி.ஜே அப்துல் கலாம்

 

4. கற்பித்தல் என்பது மிகவும் உன்னதமான பணியாகும், கற்பித்தலில்  ஒருவரின் பாத்திரம், திறமை மற்றும் ஒரு தனிநபரின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது.

மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைத்தால், அது எனக்கு மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்

 

5. சராசரி ஆசிரியர் சிக்கலை விளக்குகிறார்; திறமையான ஆசிரியர் எளிமையை வெளிப்படுத்துகிறார். - ராபர்ட் பிரால்ட்.

 

6. ஆசிரியர் கற்பிப்பவர் அல்ல, யாரிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்கிறாரோ அவரே ஆசிரியர். - ஏ.எம். காஷ்பிரோவ்ஸ்கி

 

7. ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே நுழைய வேண்டும். - சீன பழமொழி

 

8. இதை நீங்கள் படிக்க முடிந்தால், ஒரு ஆசிரியருக்கு நன்றி. - அமெரிக்க பழமொழி

 

9. ஒருவர் கற்பிக்கும்போது, இருவர் கற்றுக்கொள்கிறார்கள். - ராபர்ட் ஹெய்ன்லைன்

 

10. கற்றலில் நீங்கள் கற்பிப்பீர்கள், கற்பிப்பதில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.- பில் காலின்ஸ்

 

11. கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் ஆன்மா, அது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு செல்கிறது."- ஜி.கே செஸ்டர்டன்

 

12. உண்மையிலேயே அற்புதமான ஆசிரியரைக் கண்டுபிடிப்பது அரிது, பிரிவது கடினம், மறக்க இயலாது.- தெரியவில்லை

 

13. கற்பிக்கத் துணிந்தவர் ஒருபோதும் கற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது. - ஜான் சி. டானா

 

14. நல்ல ஆசிரியர்களுக்கு மாணவர்களில் சிறந்தவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது தெரியும். - சார்லஸ் குரால்ட்

 

15. வீட்டுப்பாடம் தவிர, வீட்டிற்கு எடுத்துச் செல்ல உங்களுக்கு ஏதாவது கொடுக்கும் ஒரு ஆசிரியரை நான் விரும்புகிறேன்.- லில்லி டாம்லின்

 

16. நல்ல போதனை என்பது சரியான பதில்களைக் கொடுப்பதை விட சரியான கேள்விகளைக் கொடுப்பது. - ஜோசப் ஆல்பர்ஸ்

 

17. வாழ்க்கையின் வெற்றிக்கு கல்வியே முக்கியமாகும், மேலும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். - சாலமன் ஆர்டிஸ்

 

18. தெரிந்தவர்கள் செய்கிறார்கள். புரிந்துகொள்பவர்கள் கற்பிக்கிறார்கள். - அரிஸ்டாட்டில்

 

19. நாளை நீங்கள் இறப்பது போல் வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வது போல் கற்றுக்கொள்ளுங்கள்.  - மகாத்மா காந்தி

 

20 உண்மையில் ஞானமுள்ள ஆசிரியர் உங்களை தனது ஞானத்தின் வீட்டிற்குள் நுழைய விடாமல் உங்களை உங்கள் மனதின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறார்.- கலீல் ஜிப்ரான்

 

21. ஆசிரியரின் பாராட்டு கல்வி உலகைச் சுற்றச் செய்கிறது. - ஹெலன் பீட்டர்ஸ்

 

22. நான் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, என்னால் அவர்களை சிந்திக்க வைக்க முடியும். - சாக்ரடீஸ்

 

23. வாழ்நாளில் ஒரு நல்ல ஆசிரியர் சில சமயங்களில் குற்றவாளியை திடமான குடிமகனாக மாற்றலாம். - பிலிப் வைலி

 

24. சிறந்த ஆசிரியர்கள் குழந்தைகளுடன் பச்சாதாபம் கொள்கிறார்கள், அவர்களை மதிக்கிறார்கள், மேலும் ஒவ்வொருவரிடமும் ஏதாவது சிறப்பு இருக்க முடியும் என்று நம்புகிறார்கள்.- ஆன் லிபர்மேன்

 

25. கற்பித்தல் மற்ற எல்லா தொழில்களையும் உருவாக்கும் ஒரு தொழில். - யாரோ

 

26. கற்பித்தல் என்பது புரிதலின் மிக உயர்ந்த வடிவம்.- அரிஸ்டாட்டில்

 

27. தங்களுக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பதை அறிந்தவர்களே நல்ல ஆசிரியர்கள். தங்களுக்கு தெரியாததை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைப்பவர்கள் மோசமான ஆசிரியர்கள். - ஆர். வெர்டி

 

28. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். - ஜிக்ஜேக்ளர்

 

29. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்குகிறார்கள். - ஆஸ்ட்ரோகிராட்ஸ்கி எம்.வி.

 

30. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள்.  - ஹெர்பர்ட்

 

31. உங்களைச் சுற்றியுள்ள அனைவரும்  உங்கள் ஆசிரியர். - கென் கீஸ்

 

32. ஒரு ஆசிரியரின் நோக்கம் மாணவர்களை தனது சொந்த உருவத்தில் உருவாக்குவது அல்ல, மாறாக தங்கள் சொந்த உருவத்தை உருவாக்கக்கூடிய மாணவர்களை உருவாக்குவது. - யாரோ

 

33. மாணவர்களுக்கு சிறந்ததை எவ்வாறு கொண்டு வருவது என்பது நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்.- சார்லஸ் குரால்ட்.

 

34. சொல்வதை நான் மறந்துவிடுவேன். எனக்கு கற்றுக்கொடுங்கள்  நான் நினைவில் கொள்கிறேன்.

என்னை ஈடுபடுத்துங்கள் நான் கற்றுக்கொள்கிறேன். பெஞ்சமின் பிராங்க்ளின்

 

35.  ஒரு நல்ல ஆசிரியர் பதில்களை விட அதிகமான கேள்விகளைக் கேட்கிறார். - ஜோசப் ஆல்பர்ஸ்

 

36. எனக்கு ஒரு மீன் கொடுத்தால் நான் ஒரு நாள் சாப்பிடுவேன். மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், நான் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவேன். - சீன பழமொழி

 

37. பள்ளிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்? பள்ளியில், உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டு பின்னர் ஒரு சோதனை கொடுக்கப்படுகிறது. வாழ்க்கையில், உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் போது ஒரு சோதனை கொடுக்கப்பட்டுறது - டாம் போடெட்

 

38. சாதாரண ஆசிரியர் கூறுகிறார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். உயர்ந்த ஆசிரியர் நிரூபிக்கிறார். சிறந்த ஆசிரியர் ஊக்கமளிக்கிறார். - வில்லியம் ஆர்தர் வார்டு.

 

39. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்சலாண்டர்

 

40. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். - கதே

 

41. சிறந்த ஆசிரியர்கள் இதயத்திலிருந்து கற்பிக்கிறார்கள், புத்தகத்திலிருந்து அல்ல.  - யாரோ

 

42. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். - கார்லைஸ்

 

43. நல்ல ஆசிரியர் என்பவர் அறிவுத் தேடலில் மாணவனுடன் சக பயணியாகப் பயணிக்க வேண்டும் - டாக்டா் எஸ் .இராதாகிருஷ்ணன்.

 

44. கற்பித்தலின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தில் எனக்கு  நம்பிக்கை உண்டு-ஸ்டீபன் கோவே.

 

45. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். - வில்லியம் ஆல்பர்ட்

 

46. ஆசிரியர் என்பவர் கடினமான விசயங்களை எளிதாக்கக்கூடிய ஒரு நபர் - எமர்சன்

 

47. அனுபவம் எல்லாவற்றுக்கும் ஆசிரியர் - ஜீலியஸ் சீசர்

 

48. இரண்டு வகையான ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதிகமாகக் கற்பிப்பவர்கள் மற்றும் கற்பிக்காதவர்கள் - சாமுவேல் பட்லர்

 

49.  ஆசிரியர்கள் கட்டளையிடாமல் வழிகாட்ட வேண்டும், ஆதிக்கம் செலுத்தாமல் பங்கேற்க வேண்டும். - சிபி நெப்லெட்

 

50. நிறைய ஆசிரியர்கள் ஒரு மாணவருக்கு என்ன தெரியாது என்று கண்டறிகிற கேள்விகளாகவே கேட்டு நேரத்தை வீணடிக்கின்றனர். உண்மையான கேள்வி கேட்கும் கலை ஒரு மாணவனுக்கு என்ன தெரியும் அல்லது என்ன தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் கண்டறிவதிலேயே இருக்கிறது (ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்)


திங்கள், 9 ஆகஸ்ட், 2021

வள்ளுவர் வழியில் பாரதி

முனைவா் இரா.குணசீலன்


தமிழுக்குக் கதி என்று கம்பரையும், திருவள்ளுவரையும் 

சொல்வதுண்டு. அத்தகு திருவள்ளுவர் மீது பாரதிக்குத் தாக்கம் 

ஏற்பட்டதில் வியப்பில்லை.

"கடவுள் மனிதனுக்குச் சொன்னது - பகவத் கீதை

மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருவாசகம்

மனிதன் மனிதனுக்குச் சொன்னது  - திருக்குறள் " 

என்று திருக்குறளின் பெருமை பேசுவோம்.


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

    இருந்ததும் இந்நாடே -- அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

    முடிந்ததும் இந்நாடே -- அவர்

சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து

    சிறந்தது மிந்நாடே  என 

தமிழரின் சிந்தனை மரபைப் போற்றியவர் பாரதி.

வியாழன், 29 ஜூலை, 2021

12 நாட்கள் - 12 சொற்பொழிவுகள் - மக்கள் சிந்தனைப் பேரவை

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.411

செல்வங்களுள் உயர்ந்த செல்வம் கேள்விச் செல்வமே


கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.414

ஊன்றுகோல் போல துன்பத்தில்உதவுவது கேள்வியறிவே


எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.416

எவ்வளவு நல்லது கேட்கிறோமோ அவ்வளவு நல்லது விளையும்


கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.418

செவியின் கேட்புத்திறன்ஓசையல்லகேள்வியறிவே!


நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயினராதல் அரிது.419

நல்ல கேள்வியறிவுடைரேபணிவுடன் பேசுவா் 


செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என். - 420

செவியின் சுவையறியாமல் வாழ்வதும் வாழ்க்கையா?


ஈரோடு புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலந்துகொண்ட நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன. 

பெருந்தொற்றின் காரணமாக புத்தகத் திருவிழா நடைபெறாவிட்டாலும் இணையவழி சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெறுவது வரவேற்புக்குரியது. 

மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் திரு ஸ்டாலின் குணசேகரன் ஐயா அவர்களுக்கும் அமைப்பின் செயல் வீரர்களுக்கும் வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


மக்கள் சிந்தனைப் பேரவை வலைக்காட்சி

செவ்வாய், 27 ஜூலை, 2021

22 இலட்சம் பக்கப் பார்வைகள்..

வேர்களைத்தேடி
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

வேர்களைதேடி என்ற இந்த இணையதளத்தில் இதுவரை, 

1566 இடுகைகள், 

869 பின்தொடர்வோர், 

16788  மறுமொழிகள்

22,08329 பக்கப் பார்வைகள்

இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஹாங்காங், மலேசியா, இந்தோனேசியா, இரஷ்யா, சிங்கப்பூர், ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள்,ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்சு, நெதர்லாந்து, சுவீடன், சவுதி அரேபியா, கனடா, உக்ரேன், உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தொடர்ந்து வருகைதரும் தமிழ் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 20 ஜூலை, 2021

எழு குளிறு மிதித்த ஒரு பழம் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 24

 

குறுந்தொகை 24

வேப்பம்பூ பூத்துவிட்டது. 

தலைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்தும் 

தலைவியிடம் வரவில்லை. 

ஊர் பழி தூற்றுகிறது.

அவர் இல்லாமலும் இந்த வேனில் காலம் கழிந்து போய்விடுமோ? 

என்று வருந்துகிறாள் தலைவி, 

முல்லைத் திணை என்பதால் அதன் உரிப்பொருள் இருத்தலும் 

இருத்தல் நிமித்தமும் அல்லவா, 

அவர் வந்துவிடுவார் என்று தலைவி ஆற்றியிருக்கிறாள், 

முல்லை

கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்

என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?

ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து

எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்

சனி, 17 ஜூலை, 2021

நீர்வார் கண்ணை - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 22

குறுந்தொகை 22
வள்ளுவர் காட்டும் தலைவி சொல்வதாக,

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151)

என்றொரு திருக்குறள் உண்டு. செல்லாவிட்டால் என்னிடம் சொல். நீ என்னைப் பிரிந்துசெல்வதென்றால் உனது வருகையை, உயிருடன் இருப்பவர்களிடம் சொல் என்கிறாள் இத்தலைவி.

இன்று பிரிவு இவ்வளவு பெரிதாகப் பார்க்கபடுவதில்லை. தொலைத் தொடர்பு வளர்சியும், போக்குவரத்து வசதிகளும் தூரத்தையும், நேரத்தையும் சுருக்கிவிட்டன.

அன்று தூரத்திலிருந்தாலும் நினைவுகளால் ஒன்றாக இருந்தனர்.

இன்று அருகிலிருந்தாலும் சமூகத்தளப் பயன்பாடுகளால் பிரிந்து வாழ்கிறோம்.

பிரிவு என்பது ஒருவர் உயிர்விடும் அளவுக்கு சொல்லப்படுவது அன்பின் ஆழத்தைக் காட்டவே ஆகும்.

தலைவன் தன்னைப் பிரிந்துசெல்லப் போகிறான் என்பதை உணர்ந்த தலைவி வருந்தினாள். அவளுக்கு தோழி ஆறுதல் சொல்வதாக இப்பாடல் அமைகிறது.

பாலை

நீர்வார் கண்ணை நீ இவண் ஒழிய,

யாரோ பிரிகிற்பவரே?-சாரல்

சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து

வேனில் அம் சினை கமழும்

தேம் ஊர் ஒண்ணுதல்! நின்னொடும், செலவே.

வெள்ளி, 16 ஜூலை, 2021

அவர் பொய் சொல்ல மாட்டார் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 21

குறுந்தொகை 21

ஆயிரம் பேருக்குப் போய் சொல்லித் திருமணம் செய்யவேண்டும் என்பதையே ஆயிரம் பொய் சொல்லித் திருமணம் செய்யவேண்டும் என மாற்றி வழங்கி வருகிறோம்.

அந்த அளவுக்குப் பொய்சொல்வதற்கு நாம் பல காரணங்களை 

உருவாக்கி வைத்திருக்கிறோம்.

காதலிக்கும் போது, அவள் பேசுவாள் அவன் கேட்பான்

திருமணத்திற்குப் பிறகு அவன் பேசுவான் அவள் கேட்பாள்

சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் பேசுவார்கள் ஊரே 

கேட்கும் என நகைச்சுவையாகச் சொல்வதுண்டு.

பேசுவது என்பதும் கேட்பது என்பதும் 

உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம்.

ஒருவர் உடன் இருக்கும்போதே இதை அறியமுடியாது, 

ஒருவர் உடன் இல்லாதபோதும் அவர் வார்த்தைகளை மதிக்கிறோம், 

என்றால் அதுதான் உண்மையான நம்பிக்கையாகும்.

கார்காலத்தில்  திரும்பிவிடுவேன் என்று தலைவன் கூறிவிட்டுச் 

சென்றான். 

தலைவி அதனை உறுதியாக நம்பினாள். 

உண்மையான கார்காலம் வருகிறது. 

தோழி கார்காலம் வந்தும் அவர் திரும்பவில்லையே என்று சொல்லிக் 

கவலைப்படுகிறாள்.

தலைவியோ இது கார்காலம் அல்ல. இதுகார்காலமாக இருந்தால் 

அவர் வந்திருப்பார். 

அவர் பொய்சொல்ல மாட்டார் என்று சொல்கிறாள். 

தலைவனின் வார்த்தைகள் மீது தலைவி கொண்ட நம்பிக்கையை 

வெளிப்படுத்துவதாக இப்பாடல் அமைகிறது

மருதம்

வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,

பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்

கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்

கானம், ''கார்'' எனக் கூறினும்,

யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.

புதன், 14 ஜூலை, 2021

நெஞ்சே நெஞ்சே - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 19

குறுந்தொகை 19

ஆண், பெண் இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் 

போன்றவர்கள். நாணயத்தின் ஒரு பக்கத்துக்கு இன்னொரு பக்கம் 

தெரியாது.

அதுபோல இருவரின் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும், 

எதார்த்தங்களும் வேறுபட்டிருப்பது இயல்பே. இந்த வேறுபாட்டை 

ஊடல் என்று இலக்கியங்கள் உரைக்கின்றன.

தலைவியின் ஊடலைத் தீர்க்க  பேசிய வார்த்தைகள்  பயனின்றிப் 

போனதால் தலைவன் தன் நெஞ்சோடு பேசுவதாக இப்பாடல் 

அமைகிறது.

எவ்வி என்னும் அரசன் பாணர்களுக்குப் பாதுகாப்பாய்க் கொடை 

வழங்கிவந்தான், 

பொற்பூ வழங்குவதை வழக்கமாகக் கொண்டவன் எவ்வி,

அவனது மறைவுக்குப் பின் பாணர்கள் தம் திறமையை மதிக்கும் 

வள்ளல் இன்றி வருந்தினர். 

பூ அணியாத அந்தப் பாணர்களின் தலைகளைப் போல நெஞ்சே, 

நீயும்  உடல் மெலிந்து, உள்ளம் தளர்ந்து வருந்துக என 

எண்ணிக்கொள்கிறான்.

மருதம்

எவ்வி இழந்த வறுமையர் பாணர்

பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று

இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து

செவ்வாய், 13 ஜூலை, 2021

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 18

Kurunthogai 18


குறுந்தொகையில் உவமையால் புகழ் பெற்ற பாடல்கள் பல. 

அப்பாடல்களுள் இப்பாடல் குறிப்பிடத்தக்கது. 

பெரிய பலாப் பழத்தைச் சிறிய காம்பு தாங்கி நிற்கும், 

அதுபோல தலைவியின் பெரிய காமத்தை அவளுடைய சிறிய உயிர் 

தாங்கி நிற்கிறது 

என்ற உவமை காலத்தைக் கடந்து மக்கள் உள்ளங்களைக் 

கவர்ந்துள்ளது.

இரவில் வந்து தலைவியைச் சந்தித்துச் செல்லும் தலைவனுக்குத் 

“தலைவியினது காமம் அவளால் தாங்கற்கு அரியதாதலின் விரைவில் 

அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று 

உரைக்கிறாள்.

குறிஞ்சி

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!

யார் அஃது அறிந்திசி னோரே சாரல்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

திங்கள், 12 ஜூலை, 2021

மா என மடலும் ஊர்ப - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 17

மடலூர்தல் என்பது சங்க அகப்பாடல்களில் குறிப்பிடப்படும் ஒரு மரபாகும். தலைவன் தன் காதல் கைகூடாதபோது மடலூர்ந்தாவது காதலைப் பெறுவான்.

மடலூர்தல் நாணத்தக்க செயல் என்பதால் பலரும் செய்யத் தயங்குவர். இருந்தாலும் மடலூர்ந்து வந்துவிட்டால் தலைவனின் காதலை அறிந்து அவன் விரும்பிய பெண்ணை மணம்முடித்துக்கொடுப்பதும் உண்டு. 

இப்பாடலில்,

தலைவன் தலைவியை அடைய உதவுமாறு அவளது தோழியிடம் வேண்டுகிறான். 

தோழி உதவ மறுக்கிறாள். 

தலைவன் தோழியிடம் காமம் மிக்கவர்கள் மடலேறுவார்கள்; வரைபாய்தல் முதலியவற்றையும் செய்யத் துணிவார்கள் என்று தான் மடலேற எண்ணியிருத்தலை உலகின்மேல் வைத்துக் கூறுகிறான்.

தலைவன் இவ்வாறு தோழியிடம் கூறி, தலைவியைச் சேர்த்துவைக்குமாறு வேண்டுகிறாள்.

குறிஞ்சி

மா என மடலும் ஊர்ப; பூ எனக்

குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப

மறுகின் ஆர்க்கவும் படுப;

ஞாயிறு, 11 ஜூலை, 2021

செங்காற் பல்லி - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 16

Kurunthogai 16
ஊருக்கே குறிசொல்லுமாம் பல்லி கழுநீர் பானையில் விழுமாம் 
துள்ளி என்று ஒரு பழமொழி உண்டு.  நற்றிணையில் தினைக் கதிர்களை உண்ணச் சென்ற காட்டுப் பன்றி 

தவறான திசையிலிருந்து பல்லி கத்தியதால் தனக்குத் துன்பம் வரும் என்று எண்ணி திரும்பியதாக ஒரு குறிப்பு உள்ளது. 

இயல்பாக பல்லி கத்துவது என்பது தன் துணையை அழைப்பதற்காகத் தான் என்பதை நாம் அறிவோம். 

பாலை நிலத்தில், பல்லி தன் துணையை அழைக்கும் ஒலியைக் கேட்கும் தலைவனுக்குத் தான் பிரிந்து வந்த தலைவியின் நினைவு வராதா எனத் தோழி கேட்பதாக இப்பாடல் அமைகிறது.

பாலைத் திணை என்பதால் பிரிவும் பிரிவின் நிமித்தமும் 

உரிப்பொருளாகிறது.

பாலை

உள்ளார் கொல்லோ-தோழி! கள்வர்

பொன்புனை பகழி செப்பம் கொண்மார்,

உகிர்நுதி புரட்டும் ஓசை போல,

சனி, 10 ஜூலை, 2021

கணினி வரைகலை நுட்பங்கள் -சிறப்புரை

Dr.R.Gunaseelan

கணினி வரைகலை நுட்பங்கள் -சிறப்புரை

நாலூர் கோசர் நன்மொழி போல - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 15

 

குறுந்தொகை 15

தலைவி பெற்றோரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாள். 

அதைத் தோழி  செவிலிக்கும் செவிலி  நற்றாய்க்கும் அக்காதலைச் சொல்வதாக இப்பாடல் அமைகிறது. 

இவ்வாறு  சொல்வதும் சங்ககால மரபு. இதனை அறத்தொடு நிற்றல் என்று அழைப்பதுண்டு.

பாலை என்பதால் பிரிவும் பிரிவின் நிமித்தமும் உரிப்பொருளானது. இங்கு தலைவி தன் பெற்றோரைவிட்டுப் பிரிந்து தலைவனுடன் சென்றமை பேசப்படுகிறது.

பாலை

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு

தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய

நால் ஊர்க் கோசர் நன்மொழி போல

வெள்ளி, 9 ஜூலை, 2021

நல்லோள் கணவன் இவன் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 14

குறுந்தொகை 14

சங்ககாலத்தில் தலைவன் தன் காதலை வெளிப்படுத்தும் வழிகளில் 

மடலேறுதலும் ஒரு வழியாகும். 

தலைவியைச் சந்திப்பதில் தோழியால் ஏற்பட்ட தடையை உணர்ந்த தலைவன் நான் தலைவியை எப்படியும் பெறுவேன்,

மடலூர்ந்தும் பெறுவேன் அது நாணத்தக்க செயல்தான் இருந்தாலும் அவளைப் பெறுவதற்காக அதையும் செய்வேன் என்று உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

தலைவன் தன் உருவத்தையும், தலைவியின் உருவத்தையும் ஓவியமாக வரைந்து கையிலேந்தி குதிரைபோல பனங்கறுக்குகளில் செய்த ஊர்தியில் செல்வான். அதைக் கண்டு ஊரார் சிரிப்பார்கள். இவனை இந்த நிலைக்குக் கொண்டு வந்த நல்லோள் இவள் என ஊரார் பழிப்பார்கள். அந்த  நாணமும் பெற்றோர் அவளை மணம் முடித்துக்  கொடுப்பதால் சிறிது காலமே நிலைக்கும் என்கிறான் தலைவன்.

நல்லோள் என்பது இகழ்ச்சிக் குறிப்பாக அமைகிறது.

இவளைப் பெற இவன் என்னவெல்லாம் செய்தான்! என்று ஊரே பேசுவதாகவும் அதைக் கேட்டுத் தலைமக்கள் வெட்கப்படுவதாகவும். தலைவன் தோழியிடம் தன் காதலின் ஆழத்தைச் சொல்கிறான்.


குறிஞ்சி

அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த

வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப்

பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு

அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,

''நல்லோள் கணவன் இவன்'' எனப்

பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.

குறுந்தொகை - 14

பாடியவர் - தொல்கபிலர்

மடன்மா கூறும் இடனுாமருண்டே என்பதால் தோழி  குறை மறுத்துழி, தலைமகன் மடலேறுவல் என்பது பட சொல்லியது



அவன் தன் பாங்கனிடம் கூறுகிறான்.

அமிழ்தம் பொதிந்த நாக்கு.வரிசையாக ஒளிரும் கூர்மையான பற்கள். 

நாக்கை அஞ்சவைக்கும் பற்கள்.இரண்டும் உள்ள வாயிலிருந்து வரும் சிறுசிறு சொற்கள்.

இத்தனையும் கொண்டவள் அந்த அரிவை.

நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக; பெற்றபின்பு இந்த ஊரில் உள்ளார் அறிவாராக; 

பலர் வீதியில் இந்த நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்ல அதைக் கேட்டு நாம் சிறிது நாணுவேம்!


சொற்பொருள் விளக்கம்


அமிழ்து - அமுதம்

செந்நா - சிவந்த நாக்கு

இலங்கு - ஒளிவீசும்

எயிறு - பல்

சில் மொழி - சில சொற்கள்

அரிவை - அரிவைப் பருவப் பெண்

மறுகு - தெரு

நாண் - வெட்கம்


தொடர்புடைய இடுகை


மடலின் படிநிலைகள்

வியாழன், 8 ஜூலை, 2021

மாசு அறக் கழீஇய யானை போல -UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 13

குறுந்தொகை 13


குறிஞ்சித் திணை என்பதால் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் பேசப்படுகிறது. தலைவனின் பிரிவால் உடல் வாடும் தலைவி. தலைவன் தந்த காமநோய் குறித்து தன் தோழியிடம் சொல்வதாக இப்பாடல் அமைகிறது.

யானை தங்கியது போல தங்கினான் தலைவன் பின் யானை நீங்கியது போன்றே நீங்கினான் யானை இல்லாத இடம் எத்தகைய வெற்றிடத்தைக் காட்டுமோ அதுபோல தலைவன் இல்லாத தாம் சந்தித்த இடம் தலைவிக்குப் பெரிய ஏமாற்றத்தையும் வலியையும் தந்தது. 


குறிஞ்சி

மாசு அறக் கழீஇய யானை போலப்

பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்

பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்

நோய் தந்தனனே - தோழி!-

பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.

குறுந்தொகை - 13

கபிலர் பாடல்

தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய கிழத்தி தோழிக்கு உரைத்தது


தோழியர் கூட்டம் என்பது தோழியின் உதவியால் தலைவன் தலைவியைச் சந்திக்கும் சூழல் ஆகும்.

ஆற்றுதல் என்றால் தலைவியைத் தேற்று ஆறுதல் சொல்லிப் பிரிதல்.


தோழி! மேலே உள்ள தூசிகள் முழுதும் நீங்கும்படி பாகனால் கழுவப்பட்ட யானையைப் போன்ற தலைவன், பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற பெரிய மலையில் என்னுடன் தங்கிய தலைவன் காம நோயைத் தந்து சென்றான். அதனால் முன்பு குவளை மலரைப் போன்று இருந்த என்னுடைய அழகிய கண்கள் இப்பொழுது பசலை நிறம் நிரம்பப் பெற்றன என்று உரைக்கிறாள் தலைவி.


தலைவனின் பிரிவால் தலைவிக்கு ஏற்பட்ட பசலை நோய் இங்கு குறிப்பிடப்படுகிறது. யானை தன் தலையிலும் உடலிலும் தானே புழுதியை வாரி இறைத்துக்கொள்ளும். அதன் உடலில் உள்ள புழுதி முற்றிலும் நீங்குமாறு கழுவப்பெற்றமை போல பெரிய மழை பெய்து துறுகல்லின் மாசெல்லாம் நீங்கியது. பிரிவாற்றாமையால் தோன்றிய காமநோய் தலைவியின் உடல்மெலிவுக்குக் காரணமானது.

பெருமழையால் உழந்த துறுகல் போல தலைவி ஊரார் அலர் மொழிகளால் உடல் மெலிந்தால்.

பிரிவுக்கு முன் குவளைபோல இருந்த தலைவியின் கண்கள் தலைவன் பிரிவுக்குப் பின் பசலையால் வாடியது.


சொற்பொருள் விக்கம்


துறுகல் - தலைவியின் வீட்டின் புறத்தே இருக்கும் சிறிய பாறை

மாசு - புழுதி

பெயல் - மழை

பைதல் - குளிர்ச்சி

நாடன் - தலைவன்


புதன், 7 ஜூலை, 2021

அறியாது பேசும் ஊர் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 12

குறுந்தொகை 12தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடுவதற்காகப் பாலை வழியாகச் சென்றான். அதனால் வருந்திய தலைவியின் நிலையறிந்து தோழி

தலைவனைக் குறை கூறினாள். தலைவன் சென்ற கொடிய வழியை எண்ணி வருந்தாமல் குறைகூறும் தோழி மீது கோபம் கொண்டாள்  தலைவி,

தன் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் பேசும் தோழியை ஊரார் என்று சுட்டி, ஊர் பேசுகிறதே என்று தலைவி வருந்திக் கூறும் சொற்கள் இவை.

 பாலை - தலைவி கூற்று

எறும்பி அளையின் குறும் பல் சுனைய

உலைக்கல் அன்ன பாறை ஏறி,

செவ்வாய், 6 ஜூலை, 2021

நெஞ்சே எழு - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 11

குறுந்தொகை - 11


திருமணத்துக்கு இடைப்பட்ட நாளில் தலைவியைப் பிரிந்தான் தலைவன். அவன் நினைவால் வருந்திய தலைவி தன் நெஞ்சிடம் பேசுவதாக இப்பாடல் அமைகிறது. பாலைத் திணை என்பதால் பிரிவும் பிரிவின் நிமித்தமும் உரிப்பொருளாகிறது.

நெஞ்சே அவர் பிரிவால் வாடியது போதும் அவரை நாடிச் செல்வோம். 

அவர் எங்கிருந்தாலும் செல்வோம்.. 

அவர் வேறு மொழி பேசும் நாட்டுக்குச் சென்றாலும் அங்கும் 

செல்வோம் எனத் தன் நெஞ்சை எழு.. அழைக்கிறாள்.

பாலை

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்

பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,

திங்கள், 5 ஜூலை, 2021

இன்னா செய்தவனுக்கும் இனிய செய்தவள் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 10

 

Kurunthogai -10

தலைவனின் பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமானவள் தலைவி. இருந்தாலும் தலைவன் தலைவி வருந்துமாறு அவளைப் பிரிந்து பரத்தையரிடம் சென்று அவர்கள் செய்த அடையாளங்களுடன் வீடு திரும்புகிறான். இச்செயல் காஞ்சி ஊரன் கொடுமை என சுட்டப்படுகிறது. தலைவனின் இச்செயலை பிறருக்குத் தெரியாதவாறு மறைத்த தலைவி, தலைவனே தன் செயலுக்கு வெட்கப்படுமாறு தானே முன்சென்று அவனை வரவேற்கிறாள். கொடுமையை மறைத்தலும், மறத்தலும் தாயின் செயல் என்பதால் தலைவியின் இச்செயலைக் கண்ட தோழி தலைவியைத் தாய் என்று பாராட்டுகிறாள்.

இன்னா செய்த தலைவனுக்கும் இனிய செய்த தலைவியின் பண்பை இன்று நோக்கும்போது இது ஆணாதிக்கம் என்றோ, பெண்ணடிமைத்தனம் என்றோ தோன்றலாம். 

என்றாலும் இப்பாடல் அக்கால மக்களின் பண்பட்ட வாழ்வியலைப் புலப்படுத்துகிறது. 

யாயா கியளே விழவுமுத லாட்டி

பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி யூரன் கொடுமை

கரந்தன ளாகலின் நாணிய வருமே.

- குறுந்தொகை - 10

துறை - தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது.

- ஓரம்போகியார்.  

தலைவியே தலைவன் செல்வம் பெற்று விழாக்கோலத்துடன் மகிழ்ந்து வாழக் காரணமானவள்.

சனி, 3 ஜூலை, 2021

சங்க இலக்கியம் காட்டும் நல்வழிகள் - இணைவழியிலான தமிழியல் உரை

முனைவா் இரா.குணசீலன்

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தி வரும் “இணைய வழியிலான தமிழியல் உரை மற்றும் கலந்துரையாடல்” நிகழ்வில், வருகிற 4-7-2021, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு கோயம்புத்தூர், தமிழ் வலைப்பதிவர், முனைவர் இரா. குணசீலன் அவர்கள் “சங்க இலக்கியம் காட்டும் நல்வழிகள்” எனும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்.

இந்நிகழ்வில் முனைவர் இரா. குணசீலன் அவர்களது உரை முதலில் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் (பங்கேற்பாளர்கள்) அவருடன் கலந்துரையாட முடியும்.

 இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தி Google Meet எனும் செயலி வழியாக Ask Join அல்லது Join Meeting என்பதைச் சொடுக்கி, அதன் வழியாக  இணையலாம். Enter Code எனும் கேட்கும் நிலையில், அவ்விடத்தில் hzr-ekri-gmf என்று உள்ளீடு செய்து இணையலாம். 

வெள்ளி, 2 ஜூலை, 2021

ஆடிப் பாவை போல - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 08

குறுந்தொகை - 08

தலைவி தன்னைப் பழித்துக் கூறினாள் என்பதை அறிந்த காதல் பரத்தை, தலைவன் தன் மனைவிக்கு அஞ்சி அவள் சொல்லும் செயல்களை ஒரு ஆடிப்பாவை போல செய்வதாக கேலி பேசுகிறாள்.

சங்ககாலத்தில் தலைவன் பல பெண்களுடன் உறவு கொள்வது வழக்கமாக இருந்தது. தலைவனுக்கு இற்பரத்தை, காதல் பரத்தை, காமக்கிழத்தி என பல உறவுகள் இருக்கும். தலைவி இதைக் கண்டித்து வாயில் மறுத்தல், உண்டு. மருதம் என்பதல் ஊடலும் ஊடலின் நிமித்தமும் உரிப்பொருளாகிறது.

இப்பாடலில் இடம்பெறும் ஆடிப்பாவை என்ற உவமை புகழ்பெற்றதாகும்.

மருதம்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் 

பழன வாளை கதூஉம் ஊரன் 

எம் இல் பெருமொழி கூறி, தம் இல், 

கையும் காலும் தூக்கத் தூக்கும் 

ஆடிப் பாவை போல, 

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. 

குறுந்தொகை - 8

ஆலங்குடி வங்கனார் பாடல்

துறை - கிழத்தி தன்னைப் பழித்து உரைத்தாள் எனக்கேட்ட காதல் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.


பரத்தை தன்னிடம் வந்த தலைவனைப் பற்றிக் கூறுகிறாள்.

கழனி ஓரத்தில் இருக்கும் மாமரத்திலிருந்து விழும் மாம்பழத்தை அந்த 

வியாழன், 1 ஜூலை, 2021

கழலும் சிலம்பும் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 07

 

Kurunthogai - 07

தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு பெற்றோரை விட்டு உடன்போக்கில் தம் ஊருக்குச் செல்கிறான்.

பாலை நிலம் என்பது பிரிவைப் பேசக்கூடியது,

இப்பாடலில் பெற்றோரைப் பிரிந்து தலைமக்கள் செல்கின்றனர். 

பாலை கொடிய வழி. அவ்வழியில் வீரக்கழலணிந்த தலைவனும், சிலம்பணிந்த தலைவியும் கண்டோர் கண்களில் படுகின்றனர். 

இவ்வரிய வழியில் செல்லும் இவர்களின் நிலையறிந்து கண்டோர் வருந்துவதாக இப்பாடல் அமைகிறது.

தலைமக்கள் அணிந்த கழல், சிலம்பு ஆகிய அணிகலன்களைப் பார்த்தே கண்டோர் அவர்கள் காதலர்கள் என்பதையும், பெற்றோரை நீங்கிச் செல்கின்றனர் என்பதையும், தலைவன் தலைவி மீது மிகுந்த அன்புடையவன் என்பதும், அவளை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான் என்பதையும் அறிந்து இக்கொடிய வழியில் செல்கின்றனரே என வருந்துகின்றனர்.

வில்லோன் காலன கழலே; தொடியோள் 

மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர் 

யார்கொல்? அளியர்தாமே-ஆரியர் 

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி 

வாகை வெண் நெற்று ஒலிக்கும் 

வேய் பயில் அழுவம் முன்னியோரே 

குறுந்தொகை 7 

பாடியவர் - பெரும்பதுமனார்

பாலை

செலவின் கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது.


வில்லேந்திச் செல்லும் அவன் காலில் வீரக்கழல் இருக்கிறது. 

கையில் வளையல் அணிந்துள்ள அவள் காலில் சிலம்பு உள்ளது. 

இப்படிப்பட்ட நல்லவர்களாகிய இவர்கள் யார்? 

புதன், 30 ஜூன், 2021

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 06

 குறுந்தொகை - 06


திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்த நிலையில் அவன் பிரிவால் தூக்கமின்றி வாடும் தலைவி, தோழியிடம் சொல்லுவதாக இப்பாடல் அமைகிறது.

நெய்தல் 

“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து

இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சாதேனே. ”


குறுந்தொகை - 06

பாடியவர் - -பதுமனார்.

வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது


தலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி

நள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். 

செவ்வாய், 29 ஜூன், 2021

தூக்கத்தைத் தொலைத்தவள் -UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 05


காதலும் ஒரு நோய்தான். வள்ளுவர் இந்நோயை, 

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 

மாலை மலரும்இந் நோய் - 1227

என்று உரைப்பார். நெய்தல் திணை சார்ந்த இக்குறுந்தொகைப் பாடலில் தலைவனின் பிரிவால் தூக்கத்தைத் தொலைத்த தலைவியின் புலம்பல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

தலைவனின் பிரிவால் தலைவி வருந்துகிறாள், தலைவியின் நிலையறிந்து தோழி கவலைப்படுகிறாள் , 

பிரிவாற்றாமையால் தான் தூக்கமின்றித் தவிக்கும் கொடுமையைத் தோழிக்கு உரைத்து இக்காமநோயின் கொடுமையைத் தலைவி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது,

5.நெய்தல்

அதுகொல் தோழி காம நோயே?

வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை

உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தென

பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. 


குறுந்தொகை - 05

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

பாடியவர் - நரிவெரூஉத்தலையார் 

அவன் நீரலை புலம்பும் கடல்சார் புலம்புநிலத் தலைவன். 

அவன் பிரிந்திருக்கிறான் என்று பல இதழ்களைக் கொண்ட தாமரை 

போன்ற மை தீட்டிய   என்  கண்கள் மூட மறுக்கின்றன.

தோழி! காமநோய் என்பது அதுதானோ?

புன்னை மர நிழலில் குருகு மட்டும் உறங்குகிறதே!

உடையும் கடலலைத் திவலை அதன் உடலில் தூவப்பட்டு முத்து முத்தாக 

நிற்கும்போதும் தூங்குகிறதே!

என்று தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.