வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 30 மே, 2009

சங்க இலக்கியக் களஞ்சியம்

சங்க இலக்கியங்களில் இன்றுவரை பல்வேறு நோக்கங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளின் விவரங்கள் அடங்கிய ஆய்வடங்கல்கள் இன்றைய ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளன. அவை இணையத்தில் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது.

எம்பில்,பிஎச்டி போன்ற பட்டங்களுக்காக ஆய்வு செய்வோர் முன்பு ஆய்வு செய்யப்பட்ட களங்களையே மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்களுக்காகவே உருவான நூல்தான்,
சங்க இலக்கியக் களஞ்சியம் ஆகும்.
இந்நூலை ச.மெய்யப்பன் அவர்கள் பதிப்பித்துள்ளார்கள்.

இந்நூல் கிடைக்குமிடம்.

மெய்யப்பன் தமிழாய்வகம்
80 புதுத்தெரு
விலை-200
பதிப்பான ஆண்டு 2000

பொருளடக்கம்

சங்க இலக்கிய நூற்களஞ்சியம்
சங்க இலக்கிய கட்டுரைகள்
சங்க இலக்கிய ஆய்வேடுகள்
சங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்
சங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்

இந்த நூலின் சிறப்பு

சங்க இலக்கிய நூற்களஞ்சியம்(789 நூல்களைப்பற்றி)
சங்க இலக்கிய கட்டுரைகள்(4007 இலக்கியக்கட்டுரைகள்)
சங்க இலக்கிய ஆய்வேடுகள்(564 ஆய்வேடுகள்)
சங்க இலக்கிய பதிப்புகள் அட்டவணைகள்(239 அட்டவணைகள்)
சங்க இலக்கிய களஞ்சிய செய்திகள்(1103 செய்திகள்)
என்பதாகும்.
ஆய்வு நூல்களின் உள்ளடக்கத்தையும் குறிப்பிட்டுள்ளமை இந்த நூலுக்கு மேலும் சிறப்பளிப்பதாகவுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தும் 2000 மாவது ஆண்டு வரையே எடுக்கப்பட்டுள்ளது.
இன்றுவரை சங்க இலக்கிம் குறித்து கல்லூரிகள் ,பல்கலைக்கழகங்களில் நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளே மீண்டும் செய்யப்படாமலிருக்கவும்,புதிய களங்களில் சங்க இலக்கியங்களை பன்முகநோக்கில் ஆயவும் இணையத்திலேயே ஆய்வடங்கல்கள் கிடைக்கும் வகை செய்யவேண்டும்..

சங்க இலக்கியங்கள் சங்க கால வரலாறாகவும் திகழும் தகைமையுடையவை.ஆகையால் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்யவிரும்பும் ஆய்வாளர்கள் இதுபோன்ற சங்க இலக்கிய ஆய்வடங்கல்களைப் பார்த்துவிட்டு பின் ஆய்வுக்குப் புகுவது நலம் பயப்பதாக அமையும்.

திங்கள், 25 மே, 2009

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.அறிவியல்,ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது.எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை.இதனை உணர்ந்துதான் இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறியமுடிகிறது.
தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.


தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு


தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது,

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே”

(தொல்-1526)
என இயம்பியுள்ளார்.இதில் மெய்,வாய்,மூக்கு,கண்,செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,

‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’

(தொல்-1526)

என வெளிப்படுத்தியுள்ளார்.


ஓர் அறிவுடையன

புல்,மரம்,செடி,கொடி ஆகிய தாவர இனங்கள் மெய்யால் உற்றறியும் இயல்புடையன என்பதை,


‘புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1527)

இந்நூற்பா சுட்டுகிறது.


ஈர் அறிவுடையனநத்தை,மீன்,சிப்பி போன்ற உயிரினங்கள் உற்றறிதலோடு,நாவால் உணரும் இயல்பும் உடையன.இதனை,

‘நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1528)

என்ற நூற்பா இயம்புகிறது.


மூன்று அறிவுடையன
கரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை என்பதை,

‘சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1529)

என்னும் நூற்பா வழியாக அறியமுடிகிறது.


நால் அறிவுடையன

‘நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து,சுவையுணர்ந்து,மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை,

நண்டும் தும்பியும் நான்கறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1530)

என்ற நூற்பா உணர்த்தும்.


ஐந்து அறிவுடையன

விலங்கினங்கள் அனைத்தும்,விலங்கின் இயல்புடையோரும் ஐந்து அறிவுடையன என்று,

‘மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’


(தொல்-1531)

இந்நூற்பா இயம்புகிறது.


ஆறு அறிவுடையன


மன அறிவுடைய மனிதர்கள் ஆறு அறிவுடையவர்களாவர்.இவர்களுக்கு ஐம்புலனறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை,


மக்கள் தாமே ஆறறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1532)

என்ற நூற்பா சுட்டுகிறது.


உருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)


Big Bang எனப்படும் மாவெடிப்பு நிகழ்ந்த பின் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுள் உயிர்க்கூறுகளின் தோற்றம் குறிப்பிடத்தக்கது.பூமியில் முதலில் எளிய உயிர்க் கூறுகள் தோன்றின.அவை பல்லாண்டுகால உருமலர்ச்சிக்குப் பின்னர் இன்றைய நிலையை அடைந்தன.முதலில் உருமலர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின் ஆவர்.இவருடைய கருத்துக்கு இன்று வரை அறிவியல் அடிப்படையிலான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.இவ்;வுருமலர்;ச்சிக் கொள்கையையே தொல்காப்பியரும் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையாக வெளிப்படுத்தியுள்ளார;


ஒருசெல் உயரி (புரோட்டோசோவா)

உயிர்களின் முதல் நிலை ‘செல்’ஆகும்.உயிர்த்துடிப்புள்ள உயிரணு செல் ஆகிறது. பூமியில் தோன்றிய முதல் தாவரமாக அமீபா என்னும் நீர்வாழ்த் தாவரத்தைக் குறிப்பிடுகிறோம்.இது ஒருசெல் உயிரியாகும்.இது புரோட்டோசோவா என்னும் வகை சார்ந்தது.தொல்காப்பியர் சுட்டும் ஓரறறிவுயிரி புல்லும்,மரமும் தாவர வகையே இவை உற்றறியும் தன்மையுடையன என்பது குறிப்பிடத்தக்கது.


செல்பிரிதல்

ஒரு செல்லானது பிரிதலின் போது பல்கிப்பெருகிப் பல செல்கள் உருவாகின்றன.பலசெல் உயிர்களின் ஒவ்வொரு செல் தொகுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன.அதனால் உயிர்களின் பண்பு மாறுபடுகிறது.இதனால் உருமலர்ச்சி ஏற்பட்டது. செல் பிரிதலின் போது அமீபா இரு துண்டுகளாகப் பிளந்த போது பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் தோற்றம் பெற்றன.

பல செல் உயிரி


ஒருசெல் உயிரியை புரோட்டோசோவா என அழைப்பது போல பல செல் உயிரியை மெட்டோசோவா என அழைப்பர்.பல செல் உயிரிகளை இரு வகைப்படுத்தலாம். 1.முதுகுத்தண்டற்றவை,2.முதுகுத்தண்டுள்ளவை.

முதுகுத்தண்டற்றவை.


கடற்பஞ்சு,புழுவினங்கள்,நண்டு,சிலந்தி,நத்தை,நட்சத்திர மீன்கள் போன்ற உயிரனங்கள் முதுகுத் தண்டற்றவை ஆகும்.தொல்காப்பிர் சுட்டும் கடல்வாழ் உயிரினங்களாக நத்தை,மீன் ஆகியன இவ்வகை சார்ந்தவையாக உள்ளன.இவை உற்றறிதலோடு,நாவால் உணரும் சுவையுணர்வும் கொண்டவையாக விளங்குகின்றன.

முதுகுத் தண்டுள்ளவை

கார்டேட்டா எனப்படும் வகை சார்ந்த இவற்றை நீர் வாழ்வன,நிலத்தில் வாழ்வன நீர்நில வாழ்வன என வகைப்படுத்த இயலும்.

நில வாழ்; உயிரிகளை ஊர்வன,பறப்பன,பாலூட்டிகள் எனப்பகுக்கலாம்


ஊர்வன

கரையான்,எறும்பு ஆகியன மூன்று அறிவுடையன என்பர் தொல்காப்பியர்.இவை உற்றறிதல்,சுவையுணர்வு,நுகர்ச்சி என்னும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளன.


பறப்பன

வண்டு,தும்பி போன்றன நாலறிவுடையன இவை உற்றறிதலோடு,சுவை,நுகர்ச்சி,பார்வை என்னும் பண்புகளைக் கொண்டவையாகும். உருமலர்ச்சிக் கொள்கையின்படி இரு பெரும் பாகுபாடு கொண்டவையாக அறிவியலாளர்கள் பாகுபாடு செய்துள்ளனர்.அவை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என்பதாகும்.

பல செல் உயிர்களின் உருமலர்ச்சி நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.அதன் அடிப்படையில் அவ்வுயிர்கள் பாகுபடுத்தப்பட்டன.

பாலூட்டிகள்

விலங்கினங்களும் விலங்கின் இயல்புடைய மக்களும் ஐந்தறிவுடையன எனத் தொல்காப்பியர் சுட்டுவர்.அறிவியல் அடிப்படையில் இது பாலூட்டி வகையில் அடங்குவதாகவுள்ளது.


மனித நிலை

உயிர்களின் வளர்ச்சி நிலையில் மனிதன் என்னும் நிலையே உயரிய வளர்ச்சி நிலையாகும். ‘மனதை’ உடையவன் மனிதன் எனப்படுகிறான்.ஆறாவது அறிவான ‘மனம்’ மனிதனை உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.இதனையே தொல்காப்பியரும் இயம்புகிறார்.

முடிவுரை

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டின்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றன என்பதை அறியமுடிகிறது.

செல் பிரிதலின் மூலம் உயிர்கள் உருமலர்ச்சி பெறுகின்றன.

செல் தொகுப்புகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உயிர்களின் பண்பு அமைகிறது என்ற உருமலர்ச்சிக் கொள்கை தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையோடு இயைபுற்று அமைகிறது.

அறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது.இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.

தொல்காப்பியரின் உயிரியல் கோட்பாடு அவர் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.இ;து தமிழ் மொழியும் தமிழர் தம் சிந்தனையும் பழங்காலந்தொட்டே செம்மையுற்று இருந்தமை உணர்த்துவதாக உள்ளது

செவ்வாய், 19 மே, 2009

ஆற்றுப்படை
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் ஆட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறி இச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்


தொல்காப்பியம்-1037
என்பது தொல்காப்பிய நூற்பா இதில் ஆற்றப்படையின் இலக்கணம் கூறப்படுகிறது.ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்துதல் என்பதைக் குறிப்Gதாகும். சங்க காலத்திலேயே தனிப்பெரும் இலக்கியமாக ஆற்றுப்படை வளர்ச்சி பெற்றிருந்தது.

கூத்தர் ( கூத்தாடக் கூடிய கலைஞர்கள்)
பாணர் (யாழ்கொண்டு பண் இசைக்கக் கூடியவர்கள்
சிறு யாழை வாசித்தால் சிறுபாணர் என்றும்,
பேரியாழை வாசித்தால் பெரும் பாணர் என்றும் பெயர் பெறுவர்.)
பொருநர் ( ஏர்களம்இபாடுநர்,போரக்களம் பாடுநர், பரணி பாடுநர் என மூவகைப்பட்ட பொருநர்கள் இருந்தனர்)
விறலி (விறல் பட – மெய்பாடு தோன்ற – உணர்வுகளை வெளிப்படுத்தி திறம்பட ஆடும் ஆடல்மகள்))

கூத்தர், பாணர், பொருநர்,விறலி ஆகியோரை சங்க காலத்தில் வாழ்ந்த
கலைஞர்களாக அறிய முடிகிறது. இவர்கள் பாடல் இசைத்தல்,கூத்தாடுதல், ஆடுதல் எனப் பல்வேறு திறன்களையும் பெற்றிருந்தனர்.

வறுமை காரணமாக அரசனைப் பார்த்து தம் திறன்களை வெளிப்படுத்தி பரிசில் பெற்று வருவதற்காக நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்வர்.
அப்போது தம்மைப் போல் வறுமை காரணமாக அரசனை நாடிப் பரிசில் பெற்றுத் திரும்பி வரும் கலைஞர்களைக் காண்பர்.

அவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர் ஒருவர் பெறவிருக்கும் கலைஞரை ஆற்றுப்படுத்துத் ஆற்றுப்படையாகும்.

அந்த அரசனிடம் எவ்வாறு செல்வது,அவன் என்னென்ன பரிசில் தருவான் எனப் பல்வேறு செய்திகளை பரிசில் பெற்ற கலைஞர் சொல்வதுண்டு.

சிறுபாணன் -சிறு பாணனை ஆற்றுப்படுத்தினால் அது சிறுபாணாற்றுப்படை எனப்படும்.
பெரும்பாணன்- பெரும்பாணனை ஆற்றுப்படுத்தினால் அது பெரும்பாணாற்றப்படை எனப்படும்.
கூத்தர்- கூத்தரை ஆற்றுப்படுத்தினால் அது கூத்தராற்றுப்படை எனப்படும்.
விறலி – விறலியை ஆற்றுப்படுத்தினால் அது விறலியாற்றுப்படை எனப்படும்.

சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படைகள் உள்ளன.


திருமுருகாற்றுப்படை
( முருகனிடம் வீடு பேறு பெற்ற பக்தன் வீடு பேறு
பெறவிருக்கும் ஒருவனை ஆற்றுப்படுத்துதல்)
சிறுபாணாற்றுப்படை (சிறுபாணர்- சிறுபாணர்)
பெரும்பாணாற்றப்படை (பெரும்பாணர்- பெரும்பாணர்)
பொருநராற்றுப் படை( பொருநர் – பொருநர்)
கூத்தராற்றுப்படை (கூத்தன் – கூத்தன்)

இந்த ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக சங்க காலத்தில் அரசனுக்கும் கலைஞர்களுக்கும் இருந்த உறவு நிலைகளை அறிய முடிகிறது.சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும்
ஆற்றுப்படைத் துறை அமைந்த சிறுசிறு பாடல்கள் இருப்பதைக்
காண முடிகிறது.

ஞாயிறு, 17 மே, 2009

புள்ளோப்புதல்

சங்க காலத்தில் பெண்களின் பணிகளில் புள்ளோப்புதல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. புள்ளோப்புதல் என்றால் பறவைகளை விரட்டுதல் ஆகும்.(புள்ளினம்- பறவையினம்) . இதனை சங்ககால மகளிர் விளையாட்டாகவும் கொண்டிருந்தனர். தானியங்களை உண்ண வரும் கோழி உள்ளிட்ட புள்ளினங்களை, குளிர்,தழல்,தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு விரட்டினர். இந்தக் கருவிகளுக்குக் கிளிகடி கருவிகள் என்பது பெயராகும். இவ்வாறு புள்ளினங்களை விரட்டும் போது ஆலோ என்று சொல்லி விரட்டுவது மரபாகும்.

நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும்


சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் பட்டினப்பாலையில் சங்க கால மகளிர் புள்ளோப்புதல் பற்றி குறிப்பு உள்ளது. சங்க காலமகளிர் தானியங்களைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தங்கள் காவலையும் மீறி அங்கு தங்கிவிடும் புள்ளினங்களை மகளிர் தம் காதில் அணிந்திருந்த பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு விரட்டினர். அவ்வாறு புள்ளினங்களை விரட்டுவதற்காக எறிந்த பொன்னாலான அணிகலன்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன. அவ்வாறு சிதறிக் கிடந்தமையால் சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்கள் (முக்கற்சிறுதேர்- சிறு வண்டி) செல்வதற்குத் தடை ஏற்பட்டது. என்பது இப்பாடலடிகளின் பொருளாகும்.

இப்பாடலடிகள் வழியாக புள்ளோப்புதல்,
தங்கத்துக்கு சங்க காலத்தில் இருந்த மதிப்பு,
சங்க காலச்செல்வ நிலை,
சிறுவர்கள் சிறுதேர் ஓட்டுதல் உள்ளிட்ட பல மரபுகளை அறிந்து கொள்ளமுடிகிறது.


இன்றைய சூழலில்….

புள்ளினங்களையே அனிமல் பிளானட்,டிஸ்கவரி சேனல்களில் தான் காணமுடிகிறது. ஏனென்றால் நாம் வாழும் ஒலி நிறைந்த நகர(நரக) வாழ்வு அப்புள்ளினங்களுக்குப் பிடிப்பதில்லை.

சங்க காலத்தில் தங்கத்தை ஒரு அணிகலனாக மட்டுமே எண்ணினார்கள்.இன்று தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு மனிதர்களுக்குக் கூட இருப்பதில்லை....
குழந்தைகள் சங்க காலத்தில் முக்காற் சிறு தேர் ஓட்டினார்களாம். இன்று எந்தக் குழந்தையாவது அப்படி ஓட்டுகிறதா. இவையெல்லாம் நமது தமிழர் தம் மரபுகள் என்றாவது அறிந்து கொள்வோம்.

வியாழன், 14 மே, 2009

அறத்தொடு நிற்றல் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 23

குறுந்தொகை 23


தலைவியின் காதலை பெற்றோருக்குத் தெரியப்படுத்துதல்  என்பது இதன் பொருளாகும். 
இன்றைய காலத்தில் ஒரு பெண் தன் காதலை இயல்பாக தன் பெற்றோரிடம் கூறிவிடுகிறாள். 
ஆனால் சங்க காலத்தில் ஒரு பெண் தன் காதலைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கப் பல படிநிலைகள் இருந்தன. அவற்றை இலக்கணப்படி காண்போமானால்.

பகற்குறி, இரவுக்குறி, முதலான இரு வழிகளிலும் நிகழ்ந்து வந்த தலைமக்களின் சந்திப்பு (மறைமுகக் காதல் வாழ்க்கை.) குறி இடையீட்டினால், சிற்சில இடையூறுகளால் தொடர முடியாத நிலை ஏற்படும். அந்நிலையில் தலைவன் - தலைவியர் ‘மணம்’ புரிந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ விரும்புவர். அது கருதித் தலைவியின் களவு ஒழுக்கத்தை முறையாக வெளிப்படுத்தி முறைப்படுத்தும் செயல்கள் நிகழும். அதனை அகப்பொருள் இலக்கணத்தில் அறத்தொடு நிற்றல்’ என வழங்குவர்.

செவ்வாய், 12 மே, 2009

கவைமகனார்.சங்க இலக்கியங்கள் பாடப்பட்டது ஒரு காலம் தொகுத்து பதிப்பிக்கப்பட்டது வேறொரு காலம்.
அடி அளவு,பாடல் பொருள் என சங்கப் பாடல்களை திணை,துறை வகுத்து பத்துப்பாட்டு,எட்டுத்தொகை என நம்முன்னோர் வகுத்துள்ளனர்.

அவ்வாறு பாடல்களைத் தொகுத்தபோது பல பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் கிடைக்கவில்லை. அப்போது அப்பாடல்களில் உள்ள சிறந்த தொடர்களையே அப்புலவர்களின் பெயராக இட்டு மகிழ்ந்தனர். அதுபொருத்தமாகவும் இருந்தது.

இன்று அப்பாடல்களைப் பார்க்கும் போது இந்த சிறந்த தொடரை இப்பாடலில் எழுதியதாலேயே இப்புலவர் தம் இயற்பெயர் காலப் போக்கில் மறைந்து போனதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்புலவர்களின் பெயர்களுக்கான காரணங்களை எடுத்தியம்பும் தொடர்கட்டுரை,
தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்(வலைப்பதிவின் உள்ளடக்கத்தில் காண்க)ஆகும்.ஏழு புலவர்களின் பெயர்களை எடுத்தியம்பிய நிலையில் இன்று கவைமகனார் என்னும் புலவருக்கான காரணத்தைக் காண்போம்..

”கொடுந்தாள் முதலைக் கோள்வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி,நீ நின்
நயன் உடைமையின் உவக்கும் யான் அது
கவைமக நஞ்சு உண்டாங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே

(குறுந்தொகை- 324)

செறிப்பு அறிவுறுக்கப்பட்டு இரா வாரா வரைவல் என்றார்க்கு தோழி அது மறைத்து வரைவு கடாயது.


( இற்செறிப்பு- தலைவியின் களவினை (காதல்)அறிந்த பெற்றோர் வெளியே செல்ல விடாது வீட்டிலேயே இருக்கச் செய்தல்.
இரவுக்குறி- தலைவன் ஊருக்குத் தெரியாது தோழியின் துணையுடன் இரவுப் பொழுதில் தலைவியைச் சந்தித்து காதலித்தல்.
வரைவு- திருமணம்.
வரைவு கடாதல் – திருமணம் செய்து கொள்ளுமாறு தூண்டுதல்.
கவைமக – ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.)

இரவில் கொடிய முதலைகள் உள்ள நீர் நிலையைக் கடந்து தலைவன், தலைவி மீது உள்ள விருப்பத்தால் அவளைக் காண வருகிறான்.தலைவியும் அவன் வழித் துயரை அறியாது உவந்து ஏற்றுக் கொள்கிறாள்.அதனால் யான், மக வடிவு இல்லாது ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுள் ஒரு குழந்தை நஞ்சுண்டவழி அந்நஞ்சு மற்றொரு குழந்தைக்கும் பரவிக் கொல்லும் எனத் தாய் அஞ்சுவது போல என் மனத்தினுள்ளே நீ இரவில் வருதலை அஞ்சுவேன் என்கிறாள் தோழி.

தோழி, தலைவி இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றும் தலைவிக்கு ஏற்படும் துயர் தனக்கும் தான் எனத் தோழி எண்ணுதலை இப்பாடல் எடுத்தியம்புகிறது.

தலைவனிடம் தோழி,நீ வரும் வழியின் துன்பங்களை நானறிவேன். தலைவி அறியாள் அதனால் நீ இரவுக் குறி வந்த அவளைப் பார்த்து மகிழ்ந்தது போதும். அவளை வரைவு செய்து கொள் என வலியுறுத்துகிறாள்.

இப்பாடலில் தோழி தலைவி மீது கொண்ட பற்றுதலை “கவைமக நஞ்சுண்டாங்கு” என்ற தொடர் குறிப்பிடுகிறது.இத் தொடரின் சிறப்புக் கருதி இப்பாடலைப்பாடிய புலவரின் பெயர் “கவைமகன்” என்றானது.


இப்பாடலின் வழி சங்கப்புலவரின் பெயருக்கான காரணத்தை அறிவதோடு சங்க கால வாழ்வியலையும் அறியமுடிகிறது.

இற்செறித்தல்,
வரைவு கடாதல்,
என இரு அகத்துறைகளை இப்பாடல் சுட்டுகிறது.இது போல அகத்துறை புறத்துறை என அகவாழ்வியலையும்,புறவாழ்வியலையும் சங்க இலக்கியங்கள் சுட்டியுள்ளன.

சுட்டி ஒருவர் பெயர் கூறாத மரபினையும் இப்பாடலில் காணமுடிகிறது.காலத்தை வென்று செம்மொழியாகத் தமிழ்மொழி திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணமாகவுள்ளது.

சனி, 9 மே, 2009

ஐந்திணைப் பெயர் மூலம்.

மொழி ஞாயிறு .தேவநேயப்பாவாணர் உலகறிந்த வேர்ச்சொல் ஆய்வாளராவார்.இவர் தம் வாழ்நாளில் தமிழ் மொழியின் தொன்மை,தனிச்சிறப்பு ஆகியவற்றை தம் படைப்புக்கள் வாயிலாக எடுத்தியம்பினார். இவரின் பல்வேறு நூல்களும் தமிழ் இணையப்பல்கலைக்கழக் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவற்றை அவ்விணையதளம் தரும் டேப் என்னும் எழுத்துரு கொண்டே படிக்க இயலும் என்பது ஒரு குறைபாடாக உள்ளது.தமிழ் இணையப்பல்கலைக்கழகம் யுனிகோடு முறைக்கு மாறினால் தமிழுலகம் மேலும் பயன் பெறும்.

தமிழர் வரலாறு என்னும் நூல் பாவாணர் படைப்புகளில் ஒன்றாகவுள்ளது.இந்நூலில்

ஐந்திணைப்பெயர் மூலம் பற்றி வேர்ச்சொல் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள கருத்து தமிழுலகம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகவுள்ளது. முதல், கரு, உரி என்ற அடிப்படையிலேயே சங்கப்பாடல்களைப் பார்த்த நமக்கு வேர்ச்சொல் அடிப்படையிலான கருத்து புதுமையாகவுள்ளது.அதனைக் கீழே காணலாம்.

ஐந்திணைப்பெயர் மூலம் குறிஞ்சி

குறி = அடையாளம், காலம், அளவு, தடவை.
குறி - குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்தஇடமும், மலைநாடு.
ஒ.நோ: நெரி - நெரிஞ்சி - நெருஞ்சி.
கோடைக்கானல் மலையிலும்நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள்,பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும்இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும்.
ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ளகுறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும்காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறுஅளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம்.

முல்லை
முல் - முன் - முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.
முல் - முள் = 1. கூர்மை. "முள்வாய்ச்சங்கம்" (சிலப். 4:78). 2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879).3. ஊசி. 4. பலாக்காய் முனை.
முள் - முளை = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4)
தனிநிலைக் காண்டம் 101
________________________________________
முல்-முல்லை=கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும். "முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு" (அகம். 4:1).
என்பதில், முல்லையரும்பை வைந்நுனைஎன்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க. வை = கூர்மை.

பாலை
பால் - பாலை = இலையிற் பாலுள்ளசெடியுங்கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும்நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லைநிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில்தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும்வன்னிலம்.
பகல் (பகுப்பு) என்னும் சொல்லின்மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும்,பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும்தொடர்பில்லை.

மருதம்
மல் = வளம். "மற்றுன்றுமாமலரிட்டு" (திருக்கோ.178)
மல் - மல்லல் = 1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788). 2. அழகு. "மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.).
மல் - மல்லை = வளம். "மல்லைப்பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).
மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.
ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம்.
"பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்" (கம்பரா. தாடகை.5)
மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.
"அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
துறையணி மருது தொகல்கொள வோங்கி" (அகம். 97)
"வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின்" (புறம்.52)


"பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே." (புறம்.351)
"மருதுயர்ந் தோங்கிய விரிபூம்பெருந்துறை" (ஐங்.33)
"கரைசேர் மருத மேவி" (ஐங்.74)
"திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை" (கலித்.27)
"மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு" (பதிற்.23)
"வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை" (சிலப்.14:72)
"......................................................காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த" (குறுந்.258)
இம் மேற்கோள்களிலெல்லாம்,மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமேஅடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.

நெய்தல்

நள்ளுதல் = 1. அடைதல்."உயர்ந்தோர் தமைநள்ளி" (திருவானைக்.கோச்செங்.25). 2. செறிதல். "நள்ளிருள்யாமத்து" (சிலப்.15:105).3. கலத்தல், பொருந்துதல்.4.நட்புச்செய்தல். "நாடாது நட்டலின்கேடில்லை" (குறள்.761) நள்ளார் = பகைவர்.
நள் - நண். நண்ணுதல் = 1.கிட்டுதல்."நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது"(திருவாச.12:17). 2.பொருந்துதல். 3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர்."நண்ணாரும் உட்குமென் பீடு" (குறள்.1088)
நள் - நளி. நளிதல் = 1. செறிதல்."நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்"(மலைபடு.197). 2. ஒத்தல். "நாட நளிய நடுங்கநந்த" (தொல்.1232)
நள் - நௌ¢ - நெய். நெய்தல் = 1.தொடுத்தல். "நெய்தவை தூக்க" (பரிபா.19:80). 2.ஆடை பின்னுதல். "நெய்யு நுண்ணூல்" (சீவக.3019).3.ஒட்டுதல்.
நெய் = ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். "நீர்நாண நெய்வழங்கியும்"(புறம்.166:21).2. வெண்ணெய். "நெய்குடை தயிரினுரையொடும்" (பரிபா.16:3).3. எண்ணெய்."நெய்யணி மயக்கம்"

(தொல்.பொருள்.146).4.புனுகுநெய். "மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப" (சிலப்.4:56). 5. தேன்."நெய்க்கண் ணிறாஅல்" (கலித்.42). 6.அரத்தம்."நெய்யரி மற்றிய நீரெலாம்"(நீர்நிறக்.51).7.கொழுப்பு. "நெய்யுண்டு"(கல்லா.71).8. நேயம், நட்பு. "நெய்பொதிநெஞ்சின் மன்னர்" (சீவக.3049).
நெய் - நேய் - நேயம் = 1. நெய் (பிங்.).2. எண்ணெய் (பிங்.). 3.அன்பு. "நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ.39).4.தெய்வப் பற்று. "நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி" (திருவாச.1:13)
நேயம்-நேசம்= 1.அன்பு. "நேசமுடையவடியவர்கள்" (திருவாச.9:4) .2. ஆர்வம்."வரும்பொரு ளுணரு நேசம்" (இரகு. இரகுவு.38).
நேசம்-நேசி. நேசித்தல். 1. அன்புவைத்தல். "நேசிக்குஞ் சிந்தை" (தாயு.உடல்பொய்.32).2. மிக விரும்புதல்.
"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்" (தாயு. பரிபூர.13).
நெய் - நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு" (மூதுரை,17)
என்பதை நோக்குக.
பண்டைக்காலத்தில், இடப்பெயர்கள்பெரும்பாலும் நிலைத் திணைச் சிறப்புப்பற்றியேஏற்பட்டன.
எ-டு :
ஊர்ப்பெயர் - தில்லை, ஆலங்காடு,பனையூர், நெல்லூர், விராலிமலை, காஞ்சிபுரம்.
நாட்டுப்பெயர்- ஏழ்தெங்கநாடு,ஏழ்குறும்பனை நாடு.
பெருந்தீவுப் பெயர்- நாவலந்தீவு,இலவந்தீவு, தெங்கந்தீவு.
ஒவ்வொரு பெருந்தீவும் பொழில்(சோலை) என்றும் பொதுப் பெயர் பெற்றது. இதனால்,உலகமும் பொழிலெனப்பட்டது.
"ஏழுடையான் பொழில்" (திருக்கோ.7)

குறிஞ்சி முல்லை முதலிய ஐந்திணைநிலப்பெயர்களும், அவ்வந் நிலத்திற்குரியகருப்பொருளும் தட்பவெப்பமும்பற்றியநிலைமையையும், உரிப்பொருள் என்னும் புணர்தல்இருத்தல் முதலிய மக்கள் காதலொழுக்க வகையையும்,இருமடி ஆகுபெயராய்க் குறிக்கும். இவ்வகையிலேயே,
"பாலை நின்ற பாலை நெடுவழி" (சிறுபாண்.11)
"முல்லை சான்ற முல்லையம் புறவின்" (சிறுபாண்.169)
"மருதஞ் சான்ற மருதத் தண்பணை" (சிறுபாண்.186)
என்னும் அடிகளில், முன்னிற்கும்திணைப்பெயர்கள் அமைகின்றன. குறிஞ்சி முல்லைபாலை மருதம் நெய்தல் என்பன, பண்ணுப் பெயர்களாய்அமைவதும் இம் முறையிலேயே.
மேற்காட்டிய சிறுபாணாற்றுப்படையடிகட்கு, "பாலைத் தன்மை நிலைபெற்றமையாற்பிறந்த பாலைநிலமாகிய தொலையாத வழி";"பாலைத் தன்மையாவது, காலையும் மாலையும்நண்பகலன்ன கடுமை கூடிச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலுமின்றி நிலம்பயந் துறந்து,புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம்பெறுவதொரு காலம்" என்றும்;
"கணவன் கூறிய சொற்பிழையாதுஇல்லிருந்து நல்லறஞ் செய்து ஆற்றியிருந்ததன்மையமைந்த முல்லைக்கொடி படர்ந்தஅழகினையுடைய காட்டிடத்து" என்றும்;
"ஊடியுங் கூடியும் போகநுகருந்தன்மையமைந்த மருதநிலத்திற் குளிர்ந்தவயலிடத்து" என்றும்;
நச்சினார்க்கினியர் உரைகூறியிருத்தலைக் காண்க.

இங்ஙனமே, மதுரைக்காஞ்சியிலும்,ஐந்திணை நிலப் பெயர் களும் அவற்றிற்குரியஉரிப்பொருளை ஆகுபெயராகவுணர்த்து கின்றன.
மருதஞ் சான்ற = ஊடலாகியஉரிப்பொருளமைந்த.
முல்லை சான்ற = இருத்தலாகியஉரிப்பொருளமைந்த.
குறிஞ்சி சான்ற = புணர்ச்சியாகியஉரிப்பொருளமைந்த.
பாலை சான்ற = பிரிவாகியஉரிப்பொருளமைந்த.
நெய்தல் சான்ற = இரங்கலாகியஉரிப்பொருளமைந்த.
குறிஞ்சி முதலிய ஐந்திணைப்பெயர்களும் நிலைத்திணையைக் குறிக்கும்போது,மருதம் பாலை என்பன இயற்பெயரும், குறிஞ்சி முல்லைஎன்பன சினையாகுபெயரும், நெய்தல் என்பதுதொழிலாகு
பெயரும் ஆகும்.

ஐந்தும் முன்பு நிலத்தைக்குறித்துப் பின்பு நிலவொழுக்கத்தைக்குறிக்கும்போது, மருதம் பாலை என்பன இருமடியாகுபெயரும் ஏனைய மும்மடி யாகுபெயரும் ஆகும்.
இடத்தின் பெயர் இடவொழுக்கத்தைக்குறிப்பது, கும்ப கோணம் பண்ணிவிட்டான் என்னுங்கொச்சை வழக்குப் போன்றது.
நிலவொழுக்கத்தின் பெயரேநிலத்தைக் குறித்தது என்று சொல்வது, தோகைஎன்னும் பெயர் முதலிற் பெண்ணையே குறித்துப்பின்னர் மயிலுக்காயிற்று என்று சொல்வதொத்ததே.
காதலர் இருவரின் மணவாழ்க்கை, தெய்வஏற்பாட்டால், ஒரோவழி பெற்றோர்க்கும்மற்றோர்க்கும் தெரியாத களவொழுக்க மாகத்தொடங்குவது முண்டு. அது இருமாதத்திற்குள்வெளிப்பட்டு விடும். அதன் பிற்பட்ட வெளிப்படையொழுக்கம் கற்பெனப்படும். மணவாழ்க்கை ஆயிரங்காலத்துப் பயிராதலால், தமிழர் களவொ ழுக்கம்ஆரியர் கூறும் அற்றைப் புணர்ச்சியான யாழோர்(கந்தருவர்) மணமன்று; நல்லாசிரியரிடம்கல்லாதவரும் அயல்நாட்டாரும் கருதுகின்றவாறு,இல்வாழ்க்கை யேற்படாத அநாகரிகக் காலத்துக்காமப் புணர்ச்சியு மன்று.
கற்பில் தொடங்கும் மணவாழ்க்கையேபெரும்பான்மை; களவில் தொடங்குவது மிகமிகச்சிறுபான்மை. கற்பாகத் தொடராத களவு இழிந்தோரொழுக்கமெனப் பழிக்கப்படுவது. இறைவன் ஏற்பாடும்இன்பமிகுதியும் களவின் சிறப்பியல்புகள்.
காதலர் வாழ்க்கை தொடக்கம்முதல்முடிவுவரை நானூறு துறைகளாக வகுக்கப்பட்டு, கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே"
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலைநோக்குக.

கோவைஎன்னும் நாடகமாகக் கூறப்பெறும். இது வடவர் கூறும்காமநூலன்று. இம்மை யின்ப விருப்பினர்க்குநுகர்ச்சியால் உவர்ப்பு விளைவித்தும், உலகப்பற்றற்றவர்க்கு உவமை காட்டியும், சிற்றின்பச்செய்தி வாயிலாக மக்களைப் பேரின்பத்திற்குவழிப்படுத்த வேண்டுமென்பதே முதனூலாசிரியர்நோக்கம். இதை மாணிக்கவாசகர் உணர்ந்தேஇறுதியில் திருச்சிற்றம்பலக் கோவை பாடினார்.
"ஆரணங்காண் என்பர் அந்தணர் யோகியர்ஆகமத்தின்
காரணங்காண் என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே"
என்னும் மதிப்புரைத் தனிப்பாடலைநோக்குக

-தமிழர் வரலாறு பக்கம் -100-105.

செவ்வாய், 5 மே, 2009

திறக்காத வேர்டும் திறக்கும்.


எம்.எஸ் வேர்டில் உருவாக்கிய தமிழ்க் கோப்பு (வேர்டு)ஒன்று திறக்காமல் பிழைச்செய்தி தோன்றியது.அக்கோப்பு முக்கியமான தவிர்க்கமுடியாத கோப்பு.என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டே

இணையத்தில் Word Repair என்று கூகிளில் தேடினேன். பல்வேறு இணையதள முகவரிகள் கிடைத்தன. அவற்றுள் இலவசமான இணையதளத்தைத் தேடியபோது எனக்கு http://www.repairmyword.com/?file=WordRepair.exe என்னும் இணையதளம் கிடைத்தது.
இவ்விணையதளம் சென்று வேர்டு கோப்பினை மீட்டுத்தரும் மென்பொருளை பதிவிறக்கினேன்.
என் கணினியில் நிறுவிக்கொண்டேன்.


பின் அம்மென்பொருளைத் திறந்து நான் மீட்க வேண்டிய கோப்பினைக் கணினியிலிருந்து அளித்தேன் பின் அம்மென்பொருளில் இடது மூலையில் உள்ள ஓபன் என்னும் பகுதியைச் சொடுக்கினேன்.
எனது கோப்பு திறக்கப்பட்டது.மிகவும் மகிழ்ந்தேன்..

நீங்களும் இது போன்ற சூழல்களில் இம்மென்பொருளைப் பயன்படுத்திப்பாருங்களேன்...

ஒப்பியல் இலக்கியம்

ஒப்பியல் இலக்கியம்
கலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.

தமிழில் உள்ள துறைகளில் ஒப்பியல்த்துறை குறிப்பிடத்தக்கதொரு துறையாகும்.இத்துறையில் கால்தடம் பதித்தவர்களில் கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார்.இவரது ஒப்பியல் இலக்கியம் என்னும் நூல் தமிழாய்வாளர்கள் ஒவ்வொருவரும் படித்து இன்புற வேண்டிய நூலாகும்.இந்நூல் இணையத்திலேயே யுனிகோடு எழுத்துரு வடிவில் கிடைக்கிறது.மதுரைத்தமிழ் இலக்கிய மின்னூல்த் திட்டத்தின் கீழ் இணையத்தில் பதிவுசெய்துள்ளனர்.

பொருளடக்கம்

ஒப்பியலின் தத்துவங்கள் - 1
தமிழில் ஒப்பியல் ஆய்வு - 23
தமிழ் வீரயுகப் பாடல்கள் - 48
இரு கோட்பாடுகள் - 61
பெரும் பெயர் உலகம் - 79
பொற் காலமும் புதுயுகமும் - 89
காதலும் கட்டுப்பாடும் - 116
சித்தர் தத்துவம் - 137
சிந்துக்குத் தந்தை - 160
பாரதியும் சுந்தரம் பிள்ளையும் - 196
பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் - 219
உசாத் துணைநூல்கள் - 228
நூலாசிரியர் அகரவரிசை - 242


இந்நூலை முழுமையாகக்காண. கீழுள்ள இணையதள முகவரிக்குச் செல்லவும்.

http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0102.html
(இதனைக் காப்பி செய்து அடரஸ் பாரில் இட்டுத் தேடவும்)

நீதி இலக்கியம் குறித்த மாநாடு

தமிழில் நீதி இலக்கியம்
வளர்ச்சியும் பரிணாமமும்

(மாநாடு – ஜீலை 2009)
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் – மைசூர்.
பாரதிதாசன் பல்கலைக் கழகக் கல்லூரி தமிழ்த்துறை, பெரம்பலூர்.

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி
முனைவர்.நா.ஜானகிராமன்
தலைவர், தமிழ்த்துறை
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி
பெரம்பலூர்-621212

கட்டணம் – விரிவுரையாளர்கள்-300
ஆய்வு மாணவர்கள் -200

நிறைவுசெய்த படிவம், கட்டுரை, வரைவோலை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 27.062009.

விவரங்களுக்கு janakirambu@gmail.com.

சனி, 2 மே, 2009

சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்.

தமிழில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு வருகின்றனர். எப்படியும் நூலாக்கும் முன்பு கணினியில் அச்சாக்கம் செய்வர். அதனை இணையைத்தில் வெளியிட்டால் மிகவும் பயனாக இருக்குமே........
இணையத்தில் இன்றைய நிலையில் மூல நூல்கள் நிறைவாகக் கிடைக்கின்றன. ஆய்வு நூல்கள் குறைவு . பிடிஎப் வடிவிலோ, எச்.டி.எம்.எல் வடிவிலோ இக்கட்டுரைகளை வெளியிட்டால் தமிழாய்வு மேலும் வளரும். தமிழ் இணையப்பல்கலைக்கழகம் பல ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளது.அவ்வடிப்படையில் நூலகம் என்னும் இணையதளம் பல்வேறு ஆய்வு நூல்களைப் பதிவேற்றம் செய்துள்ளது.
(http://74.220.219.81/~noolaham/project/02/175/175.htm?uselang=ta
/
/" )

இது நூலகத்தின் இணைய முகவரியாகும். இங்கு எட்டு அரிய ஆய்வுக்கட்டுரைகள் html வடிவில் காணக் கிடைக்கின்றன. இதுபோன்ற பதிவுகள் இன்னும் வளரவேண்டும்.

நூல் விபரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு.
இக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது.

சங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),
சங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),
சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்),
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),
சங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),
யப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),
ஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),
வழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா)
ஆகிய எட்டு ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது தேசிய கலை இலக்கியப் பேரவையின் 99ஆவது நூலாகும்.


பதிப்பு விபரம்


சங்க இலக்கிய ஆய்வுகள். அ.சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, மூன்றாம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத்; தொகுதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002, (கொழும்பு: கௌரி அச்சகம்). ix + 190 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22X14.5 சமீ., ISBN: 955-8637-15-7.

சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

இன்றைய நிலையில் தமிழாய்வில் செய்யப்பட்ட ஆய்வுகளே திரும்பவும் செய்யப்படும் நிலை உள்ளது. அதற்குக் காரணம் தமிழாய்வுகள் குறித்த ஆய்வடங்கல்கள் குறைவு . இன்றுவரை தமிழகத்திலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகளை தொகுத்து வரையறை செய்யவில்லை. அதனால் திரும்பத்திரும்ப ஒரே ஆய்வுத் தலைப்புகளைப் பலரும் ஆய்வுசெய்யும் நிலை உள்ளது. ஒரே தலைப்பில் வெவ்வேறு உள்ளடக்கங்கள் இருக்கலாம். எனினும் இனி வரும் ஆய்வடங்கல்களில் ஆய்வுத்தலைப்பு , அதன் உள்ளடக்கம் என வரையறைசெய்து தொகுத்தால் எதிர்காலத்தில் தமிழாய்வு மேலும் சிறக்கும். ஆய்வடங்கல் தயாரிப்பது என்பது தனிநபர் செய்யத்தக்க பணியன்று அதற்கு செம்மொழி ஆய்வு நிறுவனம்,பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றின் ஒத்துழைப்பு அவசியமாகும். அரசு உதவி பெற்று இதுவரைத் தொகுக்கப்பட்ட ஆய்வடங்கல்கள் கூட ஆய்வுத் தலைப்பு, ஆய்வாளர் நெறியாளர், கல்வி நிறுவனம் , ஆய்வு செய்யப்பட்ட ஆண்டு என்ற அடிப்படையில் தான் உள்ளது. அதோடு அவ்வாய்வின் உள்ளடக்கமும் குறிப்பிடப்பட்டால் நலமாக இருக்கும் .ஏனென்றால் தமிழில் சில களங்கள் மேலும் மேலும் ஆய்வு செய்யத்தக்கனவாக இருக்கும் .


அந்த அடிப்படையில் சங்க இலக்கியம் வழி ஆய்வுசெய்வோருக்காக இப்பகுதியில் சங்கத்தமிழாய்வு நூல்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. நான் முனைவர் பட்டம் செய்த போது(ஐந்து வருடங்களுக்கு முன்பு) இணையத்தில் சங்கத்தமிழாய்வு நூல்களைத் தேடினேன் அப்போது கிடைத்த செய்தி மிகவும் குறைவு. இன்றும் அந்நிலையே உள்ளது. இணையம் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில்,பல்வேறு பதிப்பகங்களும் நூல்களைப் பட்டியலிட்டுள்ளன. அவையும் உள்ளடக்கங்களோடு பட்டியலிடப்பட்டால் நன்றாக இருக்கும்.


கல்விப்புலம் சார்ந்த தமிழன்பர்கள் பலரும் இன்று வலைப்பதிவு பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தாமறிந்த ஆய்வு நூல்களைத் தங்கள் வலைப்பதிவில் உள்ளடக்கங்களோடு குறிப்பிட்டுச் சென்றால் இனிவரும் தமிழாய்வாளர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். ஒரே தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளும் நிலை மாறவும் தமிழாய்வு மேலும் சிறப்புறவும் இது அடிப்படையாக அமையும்.

(சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
மயிலை.சீனி.வேங்கடசாமி)


சங்க இலக்கியங்கள் வழி அறியப்படும் செய்திகளை சங்ககால வரலாறாக அறிய முடிகிறது. அவ்வடிப்படையில் இந்நூல் சங்க கால வரலாற்றில் சில பகுதிகளை ஆழமாக ஆய்ந்து எடுத்தியம்புகிறது.

உள்ளுறைI தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்

1.தொல்காப்பியர் காலம்
2.தொல்காப்பியர் காலம்- வேங்கடம்
3.தொல்காப்பியர் காலம்-ஓரை
4.தொல்காப்பியர் காலம்-பாண்டியரின் தமிழ்ச்சங்கம், வச்சிரநந்தியின் திரமிள சங்கமும்.
5.தொல்காப்பியர் காலம்- தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும்.
6.இணைப்பு – எழினி – யவனிகா

II. சங்க நூல்களில் தமிழர் வாழ்க்கை1. ஐயர் யாத்தனர் கரணம்
2. வேந்தனும் வருணனும்
3. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள்
4. சங்க காலத் தமிழரின் கடல் செலவும் தரைச் செலவும்
5. தொல்காப்பிய ஆய்வுரை
6. நடுகல் என்னும் வீர வணக்கம்
7. பெரும்படை
8. வான் மண்ணுதல்
9. கழுதை ஏர் உழுதல்
III. சங்க காலத்து நகரங்கள்

1. சங்க காலத்துக் காவிரிப்பூம்பட்டணம்
2. சங்க காலத்து மதுரை மாநகரம்
3. இணைப்பு ஆல் – நீர்

நூல் வெளியீட்டகம்

பாவை பப்ளிகேசன்
142 ஜானி ஜான் கான் சாலை
இராயப்பேட்டை, சென்னை

நூல் வெளியான ஆண்டு
2005

வெள்ளி, 1 மே, 2009

தமிழில் பிடிஎப் செய்யலாம்…

பிடிஎப்(pdf) என்பது Portable Document File என்பதன் சுருக்கமாகும். இதுவரை தமிழ் இணையதளங்கள் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்தன. இன்றைய நிலையில் யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு மாறிவருகின்றன. அன்று முதல் இன்று வரை தமிழ் இணையதளங்களில் தோன்றும் எழுத்துருச் சிக்கலின் தீர்வுகளில் தனித்தன்மையுடன் விளங்குவது பிடிஎப் என்னும் முறையாகும். அடாப் ரீடர் வாயிலாக இந்த பிடிஎப் கோப்புகளைப் படிக்கமுடியும்.இதற்கென வேறு எழுத்துருக்கள் தேவையில்லை என்பதால் பலராலும் விரும்பத்தக்கதாக பிடிஎப் இன்றுவரை விளங்கி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரு புள்ளிக்குள் அடக்கி வைத்திருப்பதாக இம்முறை விளங்குவது குறிப்பிடத்தக்கது.இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பல்வேறு இணையதளங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.

பல்வேறு இணையதளங்கள் இலவசமாக வேர்டு உள்ளிட்ட தரவுகளை பிடிஎப் முறைக்கு மாற்றித்தருகின்றன. இவ்விணையதளங்களுக்குச் சென்று மாற்ற வேண்டிய தரவுகளை உள்ளிட்டு நம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சில மணித்துளிகளில் நம் மின்னஞ்சலுக்கு நம் பிடிஎப் கோப்புகள் வந்து விடும்.இவ்விணையதளங்களில் மாற்றித்தரப்படும் பிடிஎப் கோப்புகள் ஆங்கில முறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எவ்விதமான சிக்கலுமின்றி உள்ளன.ஆனால் தமிழ்த்தரவுகளை இவ்விணையதளங்களின் வாயிலாக பிடிஎப்பாக மாற்றும் போது தமிழ் எழுத்துருக்கள் சிதைந்து காணப்படும் நிலையே இன்று வரை உள்ளது.மேலும் இணைய இணைப்பில் மட்டுமே பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் நிலை இருந்தது.இதற்கு மாற்றாக இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தமிழ் பிடிஎப் கோப்புகளை நாமே உருவாக்குவதற்காக ஒரு மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.

(http://getitfreely.co.cc/content/cute-pdf-creater//" )

இவ்விணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு முதல் பக்கத்தில் கிடைக்கும் Converter, Cute pdf writer என்னும் இரு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவேண்டும்.இணையத்தில் நிறுவிக் கொள்ளவேண்டும் முதலில் கன்வெர்டரையும், பிறகு கியூட் பிடிஎப் ரைட்டரையும பதிவிறக்கவும். மாற்றித் பதிவிறக்கினால் சிக்கல் ஏற்படும்.

நாம் பிடிஎப் செய்யவேண்டிய தமிழ்த் தரவுகளை திறந்துகொள்ளவும் (எம்.எஸ் வேர்டு) (File>Print) பின் அந்தக் கோப்பில் இடது மேல்பக்க மூலைப்பகுதியில் உள்ள பைல் செல்லவும், அதன் கீழ் உள்ள பிரிண்ட் பகுதியைச் சொடுக்கினால் Print Window தோன்றும் அதில் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸ் தோன்றும். அதில் Cute pdf writer ஐத் தெரிவு செய்து பிரிண்ட் கொடுக்கவும். கோப்பு தயாரிக்கப்பட்டு சில நொடிகளில் எங்கு சேமிக்கவேண்டும் என்று தோன்றும். இடத்தைச் சுட்டினால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும்.

எவ்விதமான எழுத்துருச் சிக்கலுமின்றி இணைய இணைப்பே இல்லாமல், இலவசமாகத் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் பிடிஎப் கோப்பினை எந்த இணையதளத்திலும் சிக்கலின்றித் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் படிக்க அடாப் ரீடர் மட்டும் அக்கணினியில் இருக்கவேண்டும்.