வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஜூன், 2011

கடமையை மறத்தல்.


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
என்பர் வள்ளுவப் பெருந்தகை.

(வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.)

நாடு கொடுக்கும் வள்ளல்களைக் கொண்டிருப்பது சிறப்புதான்!
அதைவிட..
இரவலர் இல்லாத நாடாக அந்நாடு இருத்தல் மிகவும் சிறந்தது!

நாடு மக்களைத் தொழிலாளிகளாக மாற்றலாம்!
சோம்பேறிகளாக மாற்றக் கூடாது!


கொடை (இலவசம்) அளவு கடந்து போனால் மக்கள் தம் கடமை மறந்து போவார்கள்!

இதோ ஒரு கொடை வள்ளலும்.
கடமை மறந்தவர்களும்...


நள்ளி! வாழியோ நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் – அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே

புறநானூறு -149

திணை – பாடாண்
துறை – இயன்மொழி

கண்டீரக் கோப்பெருநள்ளியை வன்பரணர் பாடியது.

காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுதல் பாணர் வாழ்வியலாகும்.

பாணருக்கு வறுமை தோன்றாத வண்ணம் “நள்ளி“ கொடை கொடுத்தலால் அவர்கள் தம் கடமையை மறந்து...

மாலையில் மருதப்பண்ணும்
காலையில் செவ்வழிப்பண்ணும் வாசித்தனர். இசைநூல் முறைமையை மறந்தனர்.

பாணர்கள் இவ்வாறு தம் கடமையை மறந்ததற்குக் காரணம் நீதான் எனப் புலவர் நள்ளியைச் சுட்டுகிறார்.

நேரடியாகப் பார்த்தல் நள்ளியைக் குறை கூறுவது போல இருந்தாலும், நள்ளியின் கொடைத் தன்மையின் சிறப்பைப் போற்றுவதாகவே உள்ளது.


பாடல் வழியே


 சங்ககாலத்தில் பாணர்கள் காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுவர் என்ற மரபு புலனாகிறது.
 மக்களின் உடல் உழைப்பை மன்னன் கொடை என்ற பெயரால் மறக்கச் செய்தான் என்ற கருத்தும் உற்றுநோக்கி அறியமுடிகிறது.

சனி, 25 ஜூன், 2011

கலீல் கிப்ரான் (கவிதைகள்)


ஊர்வலம்
வாழ்க்கை என்பது ஒரு ஊர்வலம்.
காலுக்கு வேகம் கூடியவர்கள்
அதற்கு வேகம் குறைவு என்று குறைபட்டுக்கொண்டு
ஊர்வலத்தைவிட்டு வெளியேறுவார்கள்
காலுக்கு வேகம் குறைவாக உள்ளவர்களோ
அதற்கு வேகம் கூடுதல் என்று குறைபட்டு
ஊர்வலத்தைவிட்டு வெளியேறுவார்கள்.


இரண்டு வகை


ஒவ்வொரு மனிதரிலும் இரண்டுபேர் வீதம்
இருக்கிறார்கள் அல்லவா?

ஒருவர் இருட்டில் விழித்திருக்கிறார்
இன்னொருவர் வெளிச்சத்தில் உறங்கிக்கிடக்கிறார்.


மணலும் நுரையும்


மணலுக்கும் நுரைக்கும் நடுவில்
நான் எப்போதும் இந்தக் கரையில் உலாவவேன்
என் கால் சுவடுகள்
அலைகள் பட்டு அழிந்துபோகும்
காற்று வந்து நுரையை அடித்து இல்லாமல் செய்யும்.
எனினும் எப்போதும்
கடலும் கரையும் இருக்கும்
என்றென்றைக்கும்.

வியாழன், 23 ஜூன், 2011

ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு (கூகுள்)கூகுள் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு சேவை வழங்கி வந்தபோதெல்லாம் இந்த சேவை தமிழுக்கும் இலக்கண மரபுகளுடன் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற வருத்தம் பலருக்கும் இருந்துவந்தது. இதனை உணர்ந்து கூகுள் நிறுவனத்தார் அதற்கும் புதிய சேவையை வழங்கியமை பாராட்டுக்குரியது. இதனால் தமிழர்களின் இணையப் பயன்பாடு மேலும் அதிகரிக்கும்.

இந்த சேவையை இந்த இணைப்பு வழியே பெறமுடியும்.

இதுவரை தமிங்கில வழியே தமிழ் எழுதியவர்கள் இலக்கண மரபுகளுடன் தமிழ் மொழியை ஆங்கில வழி எழுதவும் இந்த தொழில்நுட்பம் துணைநிற்கும்.

அறிவுக்கு மொழி தடையில்லை
என்ற உயரிய நிலையை அடைய இத்தகைய கண்டுபிடிப்புகள் மிகவும் தேவையானவை என்றே கருதுகிறேன்.

பொய் சொல்லிகள்.

எல்லோருமே பொய் சொல்கிறோம்.
எவ்வளவு பொய் சொல்கிறோம்?
எதற்காகப் பொய் சொல்கிறோம்?
என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது.

அரிச்சந்திரனுக்குப் பிறகு பொய்சொல்லாதவர்களை விரல்விட்டுத்தான் எண்ணவேண்டியதாக இருக்கிறது.

தவறான அபிப்பிராயங்கள் பொய்களை விடப் பெரிய எதிரிகள்!

என்கிறது ஒரு பொன்மொழி.

ஒவ்வொரு பொய்யும் ஒவ்வொரு பல்லைத் தட்டுவதாக
இருந்தால் யாருக்கும் பல்லே இருக்காது.


என்கிறது இன்னொரு அனுபவமொழி.

பொய் பற்றிய ஆய்வு முடிவுகள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 4 பொய்கள் சொல்கிறார்கள். ஆண்டுக்கு 1460 பொய்களை ஆண்டு முழுவதும் சொல்கிறார்கள்.

பெரும்பாலானோர் சொல்லும் ஒரே பொய் “நான் நன்றாக இருக்கிறேன்“ என்பதாகும்.

அண்டப்புளுகு (பூமி அளவுக்குப் பெரிய பொய்.)
ஆகாசப்புளுகு (வானம் அளவுக்குப் பெரிய பொய்.) என்பார்கள்.


 ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம் என்று சொல்லுவாங்க.

(ஆயிரம் பேருக்குப் போய் சொல்லிக் கல்யாணம் செய்யனும் என்பதே உண்மையான பொருள்)

 விற்பனைப் பிரதிநிதியின் தகுதி

கையில பை
கழுத்துல டை
வாயில பொய்!

திரைப்படப் பாடல்கள்..

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!

கவிதைக்குப் பொய்யழகு!

ஒரு பொய்யாவது சொல் கண்ணே!


பொய்யின் வகைகள்


1. சுயநலப் பொய்
2. பொது நலப் பொய்
3. பொழுதுபோக்குப் பொய்
4. மகிழ்விக்கும் பொய்
5. அழவைக்கும் பொய்
6. ஏமாற்றும் பொய்
7. தன்னம்பிக்கைக்காக சொல்லப்படும் பொய்
8. மூடநம்பிக்கையை வளர்க்கும் பொய்
9. கவி நயத்துக்காக சொல்லும் பொய்
10.கதையின் வளத்துக்காகச் சேர்க்கும் பொய்

இவற்றில் நாம் சொல்லும் பொய் எந்த வகையில் வருகிறது என்று மதிப்பிட்டுக்கொள்வோமா..?

செவ்வாய், 21 ஜூன், 2011

திருக்குறள் இசைத்தட்டு (இலவச பதிறக்கம்)திருக்குறள் இசைத்தமிழ்க் குறுவட்டினை இலவமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பினைச் சொடுக்கவும்.

நிலவு (காசியனாந்தன் நறுக்கு)


புராணம் வேறு வரலாறு வேறு!
இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

புராண காலத்தில் வாழ்பவர்களால் வரலாறு படைக்க முடியாது என்பதை உணர்த்தும் எனக்குப்பிடித்த நறுக்கு.

ஆக்கம் - உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன்.

திங்கள், 20 ஜூன், 2011

தண்ணீர் தண்ணீர்!!
தண்ணீர்!
தண்ணீர்!
எங்கு பார்த்தாலும் நீர் வேட்கை!

ஆழ்துளைக் கிணறுகளும், பூச்சிக் கொல்லி (கூல்டிரிங்) மருந்து நிறுவனங்களும் உறிஞ்சியது போக மினரல் வாட்டர் என்ற பெயரில் இன்று கிடைக்கும் நீர்தான் மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. அந்த மினரல் வாட்டரும் தயாரிக்கப்படும் முறையை அறிந்தால் நீர்வேட்கையே அடங்கிப்போய்விடுகிறது.

தாவரங்களை அழித்து வானத்தை ஏமாற்றியதால்..
இப்போது..
வானமும் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டது!
சில நேரங்களில் நாம் வாழும் நிலம் தான் பாலையா?
என்ற சிந்தனை வந்துவந்து போகிறது!!


சங்ககாலத்தில் பெண்யானையின் நீர்வேட்கைக்காக வானத்தைப் பார்த்துக் கதறிய ஆண்யானையின் பேரொலி இன்றும் கேட்கிறதே!!!


இதோ....


வளை உடைத்தனையது ஆகி பலர் தொழ
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னாப் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே – களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி
வெண்நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?

குறுந்தொகை – 307
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்கு கிழத்தி உரைத்தது.

கடம்பனூர்ச் சாண்டில்யன்.
தலைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்தும் தலைவன் வரவில்லை. அதனால் வருந்தினாள் தலைவி. இச்சூழலில் அவளை ஆற்றுப்படுத்த தோழி கடுஞ்சொல் கூறினாள். அதற்குத் தலைவி பதிலளிப்பதாக இப்பாடல் அமைகிறது.

வண்ணத்தாலும், வடிவத்தாலும் உடைந்த சங்குவளையலைப் போன்ற பிறைத்திங்கள் வானில் தோன்றும். அதனைக் கன்னியர் பலரும் விரும்பித் தொழுவர்.

நீர்வேட்கை காரணமாக வருந்தி நடக்கும் பெண்யானையின் வருத்தம் தாங்க இயலாத ஆண்யானை, உயர்ந்து நிற்கும் யா மரத்தின் நிலை கெடும்படியாகத் தன் தந்தங்களால் குத்தியது. தன்னுடைய பிடியானை அந்த நீரில்லாத நாரினைக் கொள்ளுதலால் வருந்தித் தன் தும்பிக்கையைச் சுவைத்தது.

இத்தனைக்கும் காரணமான மழை பெய்யாத வானத்தை அண்ணாந்து நோக்கி வருத்தமுற்ற மனத்துடன் கதறியது.

அந்தோ! நெடும்பொழுது நாம் அழுமாறு, இத்தகைய பாலை நிலத்தில் கடப்பதற்கு அரிய வழியில் பிரிந்து சென்றோர் தாம் வருவதாகச் சொல்லிச் சென்ற பருத்தை மறந்தனரோ..?
என வருந்துகிறாள் தலைவி.


பாடல் வழியே.
1. பாலை வழியே தலைவன் சென்றமையால் ஏற்பட்ட தலைவியின் வருத்தம் – பிடியின் நீர்வேட்கையைத் தீர்க்க இயலாத களிறின் வருத்தம்.
2. பிறைத்திங்கள், அன்புடைய விலங்குகள் – தலைவனுக்கு தான் சொல்லிச் சென்ற பருத்தை நினைவூட்டுவதாக உள்ளது.
3. பிறையைக் கன்னியர் தொழும் சங்ககால மரபு பாடல்வழி சுட்டப்படுகிறது.

தமிழ்ச்சொல் அறிவோம்.


உயங்குதல் – தளர்தல்.
நீள் இடை – நெடும்பொழுது.
அத்தம் – பாலை வழி.
நோனாது – பொறுக்க இயலாது.

வெள்ளி, 17 ஜூன், 2011

இதுவல்லவோ அரசு!!


ஒரு புலவன் அரசனைப் பார்த்து மன்னா நீ கடல்மணலினும் நீண்டகாலம் வாழ்வாயாக என்று மனம் நிறைய வாழ்த்துகிறான் என்றால் அந்த அரசன் எவ்வாறு ஆட்சிசெய்திருப்பான்...?
ஆளும் அரசுக்கு சாதனைகள் நிறைய இருக்கலாம் ஆனால் உண்மையான சாதனை என்பது என்ன..?

அறம் அன்றோ உண்மையான சாதனை!
(“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“)
இன்றைய சூழலில் ஒரு அரசு ஆட்சிக்கு வந்தால் அதன் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஏதோ தானே நாட்டுக்கு அரசனானது போல ஆதிக்கம் செலுத்துகின்றனர். தனக்கு வேண்டியர்களுக்கு ஒரு சட்டம், ஏழை எளியவர்களுக்கு ஒருசட்டம் என்று!
சரி எப்படி இருக்கவேண்டும்..?

(நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது)
வேண்டியவர்களுக்கு ஒரு நீதி வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி என்று வழங்காது பொதுவான நீதியை வழங்கவேண்டும்.
ஒரு அரசன் தான் மக்களுக்குச் செய்த சாதனைகளைப் பட்டியலிடுவதா சிறப்பு..?
செய்ய வேண்டிய கடமையை நினைவில் கொள்வதே சிறப்பு!

(இல்லோர் கையற)

இல்லாதவர்கள் இல்லாத நிலையை ஒரு நாட்டுக்குத் தரவேண்டும் அதுவல்லவா நல்லரசின் கடமை!

இதோ சங்ககாலக் காட்சி ஒன்று,
பாண்டிய மன்னனைப் புலவர் ஒருவர் வாழ்த்துகிறார்.

உயர்ந்தமலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக்
கொளுத்தி ஒப்பில்லாததோரம்பை வாங்கிய மூன்றுமதிலையும் எய்து; பெரிய வலியையுடையதேவர்கட்கு; வெற்றியைக்
கொடுத்த; கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது; அழகிய திருமுடிப் பக்கத்தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம் போல; மூவேந்த ருள்ளும் மேம்பட்ட பூந்தாரை யுடைய மாற,
கடிய சினத்தை உடையவாகிய கொல் களிறும்;
விரைந்த செலவை யுடையவாகிய மனஞ் செருக்கிய குதிரையும்;
நெடிய கொடியை யுடையவாகிய உயர்ந்த தேரும்;
நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென;
நான்கு படையுங் கூட மாட்சியைப்பட்டதாயினும்;
மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி;

அதனால்-;
இவர் நம்முடையரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது;
இவர் நமக்கு அயலோ ரென்று
அவர் நற்குணங்களைக் கெடாது; ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும்; திங்களைப் போன்ற
குளிர்ந்த பெரிய மென்மையும்;
மழையைப் போன்ற வண்மையுமென்ற;
மூன்றையு முடையையாகி;
இல்லாததோர்
இல்லையாக; நீ நெடுங் காலம் வாழ்வாயாக;
நெடுந் தகாய்; தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய
தலையையுடைய திரை யலைக்கும் செந்திலிடத்து; நெடிய முருகவேள் நிலைபெற்ற;
அழகிய அகன்ற துறைக்கண்; பெருங் காற்றுத்
திரட்டுதலால்; குவிந்த
வடு வழுந்திய எக்கர் மணலினும் பலகாலம்
குணம் கொல்லாது என்பதற்கு, முறைமை யழிய நீ வேண்டியவாறு
செய்யா தெனினுமாம். பூந் தார் மாற, நெடுந்தகாய், நான்குடன்
மாண்டதாயினும் அரசின் கொற்றம் அறநெறி முதற்கு; அதனால் கோல்
கோடாது குணங் கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையு
முடையையாகி இல்லோர் கையற நீ மணலிலும் பலகாலும் நீடு வாழிய எனப் பொருள் கொள்ளமுடியும்.

பாடல் இதோ...
ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
5. பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
10. அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
15. வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
20. கடுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே. (55)

புறநானூறு 55. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார்
பாடியது.

பாடல் வழியே.

1. “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“
2. நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
3. இல்லோர் கையற

ஆகிய பாடல் அடிகள் வழியே
அறவழியே ஆட்சி செய்வதே அரசின் முதல் கடமை,
நீதி வழங்குதல் ஒருபக்கம் சாராது பொதுவானதாக இருத்தல்வேண்டும்,
இல்லையென வாடுவோர் இல்லாத நாடாக அந்நாட்டை ஆளவேண்டும்.

ஆகிய செய்திகள் ஆட்சிசெய்வோர் மனதில் எழுதப்படவேண்டிய பொன்மொழிகளாக உள்ளன.

வியாழன், 16 ஜூன், 2011

கல்வி + அறிவு = வாழ்க்கை!கல்வி என்றால் என்ன?
கல்வியை கல்விநிலையங்களில் மட்டும்தான் பெறமுடியுமா?
அச்சடித்த காகிதங்களிலும்..
வாங்கும் மதிப்பெண்களிலும்..
வைத்திருக்கும் பட்டங்களிலும் தான் கல்வி இருக்கிறதா?

நகலெடுக்கும் இயந்திரங்களா மாணவர்கள்?
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளா மாணவர்கள்?

கல்விச் சாலைகள் கூடா? கூண்டா?
பறவைகள் கட்டும் கூட்டில் அவற்றுக்கு சுதந்திரம் இருக்கும்.
கிளிகள் வாழும் கூண்டுக்குள்..???

இதுவல்லவா கல்வி!

o “எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ,
விரிந்த அறிவைத் தருமோ,
ஒருவனைத் தன் சொந்தக்காலில் நிற்கச் செய்யுமோ
அத்தகைய கல்வி தான் நமக்குத் தேவை.
மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை
வெளிப்படுத்துவதே கல்வி.
அறிவு வளர்ச்சிக்கு ஒரேயொரு வழிதான் உண்டு.
அதுதான் மனதை ஒருமுகப்படுத்துதல். கல்வியின்
இலட்சியமே மனதை ஒருமுப்படுத்துவதுதான்.“
– விவேகானந்தர்.

o உயர்கல்வியின் ஒட்டுமொத்த நோக்கமே நல்ல எண்ணங்களை உருவாக்குவதுதான் – பிளாட்டோ.


நான் கண்டவரை என் அனுபவத்தில்....


கல்வியால் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்குப் பயன்படும்போது அந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாக அமைகிறது. அந்த வாழ்க்கை தரமான நல்லதொரு சமூகத்தை உருவாக்கத் துணைநிற்கிறது!

கல்வி என்பது படிக்கும் ஏட்டில் மட்டும் இல்லை!
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் இருக்கிறது கல்வி என்றே நம்புகிறேன்.

(அரசுப் பள்ளிக்கூடத்தில் மகளைச் சேர்த்த ஈரோடு கலெக்டர் ) என பரபரபரபரப்பாக ஈரோடு மக்கள் பேசிக்கிறாங்க!!
பரபரப்பா பேசறதுக்கு இதுல என்ன இருக்குங்கறார் அந்த மாவட்டக் கலெக்டர்.
(மக்களோட வியப்புக்கு என்ன காரணம்? அரசுப்பள்ளியில் தரமான கல்வி கிடைக்குமா? என்ற கேள்விதான்)

இதுவே இன்றைய கல்விக்கான சரியான சான்றாக அமையும் என நினைக்கிறேன்.

வெள்ளி, 10 ஜூன், 2011

இலவசங்கள் வேண்டாம் !!இலவசம் என்ற சொல்லைக் கேட்டாலே இப்போதெல்லாம் கோபம் தான் வருகிறது. பத்து ரூபாய் மதிப்புள்ள ஒருபொருளை ஒருவர் நமக்கு இலவசமாகத் தருகிறார் என்றால் அதில் அவருக்கு எவ்வளவு இலாபம் இருக்கிறது என்றே இப்பொதெல்லாம் மனம் கணக்குப்பார்க்கிறது.

அரிசி இலவசம்
குடிதண்ணீர் 30 ரூபாய்!

தொலைக்காட்சி இலவசம்
மின்சாரம் 3 மணிநேரம் வராது!

மடிகணினி இலவசம்
இணைய இணைப்பு 1000 ரூபாய்!

இப்படி இன்னும் இன்னும் பலநூறு நகைச்சுவைகள் நாளுக்கு நாள் நடைமுறைக்கு வருகின்றன.

உடல் ஊனமுற்றவர்களைக் கூட இப்போதெல்லாம் அப்படிக் கூறாமல் மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்துவரும் இக்காலத்தில் ஏன் அரசு இலவசம் என்ற பெயரில் மக்களை ஊனமாமுற்றவர்களாக்குகிறது என்று தான் தோன்றுகிறது.

ஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான்.

கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்தநாட்டில் மட்டும் தான் விற்பனை செய்யவேண்டும் என்று சொல்ல அந்த அரசுக்கு எப்படித் தகுதி இருக்கமுடியும்..?

இங்கு படித்தான் வெளிநாட்டுக்குப் போய் உழைத்துக்கொட்டுகிறான் என்று புலம்புவதில் ஏதாவது பொருளிருக்கிறதா?

மருத்துவக் கல்வியை பணம் கொட்டிப்படித்தவரால் எப்படி இலவசமருத்துவம் பார்க்க முடியும்.

சிந்தித்தால் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுத்தால் போதும்.
கல்வியை இலவசமாகக் கொடுக்கமுடியுமா..?

அரிசியிலிருந்து...... ஏதேதோ இலவசமாக் கொடுக்கமுடிந்த அரசால் ஏன் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுக்கமுடியாது..?

“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“
என்பது சீனப்பழமொழி.

எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் !!
கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே நிறைவு செய்துகொள்கிறோம் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

கல்வியையே விலைகொடுத்து வாங்கும் இன்றைய சூழலில்,
வேலையை எப்படி கல்வித்தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொடுக்கமுடியும்?
இன்றைய நிலையென்ன..?
பணம் கொடுத்தால்தான் வேலை, அரசியல்வாதிகளின் பரிந்துரையிருந்தால் தான் வேலை!

“வேலை வாய்ப்பு அலுவலகங்கள்“ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தால் என் கண்ணுக்கு “வேலை ஏய்ப்பு அலுவலகங்கள்“ என்றே தெரிகிறது.

இலவசங்கள் எல்லாவற்றையும் நிறுத்தினால் மக்கள் மீது சுமத்தப்படும் வரி பாதிக்குப் பாதி குறையும்.


இன்று நேற்றல்ல சங்ககாலம் முதலாகவே இந்தச் சிக்கல் இருந்துவந்திருக்கிறது.

சங்கப்புறப்பாடல் ஒன்று...


முதியவர்கள் இறந்தபின்னர் வழிவழியாக வந்த அரசபதவிஏற்ற மன்னன் அதிகமான வரியை மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களிடம் பிச்சையெடுப்பதற்கு இணையானது!
அத்தகைய சிறப்பில்லாத ஆட்சியைச் சிறுமையோன் பெறின் அதில் பெருமையில்லை.
துணிந்து போரிடும் வலிமையும் முயற்சியும் உடையவன் பெறுவானேயானால் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்ணிற நெட்டி கோடையில் உலர்ந்து சுள்ளி போல் மிகவும் நொய்மையுடையதாம். குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்கொற்றக்குடையையும் முரசையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே. என்கிறது இப்புறப்பாடல். பாடல் இதோ..

மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
பாறர வந்த பழவிறற் றாயம்
எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்
குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்
5 சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே
மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்
விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்
அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
10 நொய்தா லம்ம தானே மையற்று
விசும்புற வோங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75)
புறநானூறு
75. சோழன் நலங்கிள்ளி
திணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி
பாட்டு.

பாடல் வழியே..

• மகிழச்சி நிறைந்த மக்களைக் கொண்டதாக ஒருநாடு இருக்கவேண்டுமென்றால் வரிச்சுமையிருக்கக்கூடாது என்ற கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.
• மக்களிடம் அதிகமாக வரியை வசூலிப்பது என்பது பிச்சையெடுப்பதற்கு இணையானது என்ற கருத்து சுட்டப்பட்டுள்ளது.
( சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து
உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான்.
வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின்
இயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று. மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக்
கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண்
வரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று
என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, “அரசு முறை மூத்தோர்க்குப்
பின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை
யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி
விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து
பொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய
சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின்,
அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம்” என்றான். இங்ஙனம்
சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான்.)
சோழன் நலங்கிள்ளி என்னும் அரசனே அரசின் கடமை பற்றி இவ்வாறு கூறியிருப்பது இன்றைய நிலையிலும் நிகழ்காலச் சமூக நிலையை ஒப்பிட்டு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

வியாழன், 9 ஜூன், 2011

பலவீனமே பலம்!


பலம் என்பதற்கும் பலவீனம் என்பதற்குமான அளவீடுகள் சூழலுக்குத் தக்க மாறிப்போய்விடுகின்றன.

பலமே சிலருக்குப் பலவீனமாகிவிடுகிது.
பலவீனமே சிலருக்குப் பலமாகிப்போகிறது.

இதோ இவருக்கு உடல் குறையே பலமாகப் போனது.


தாமசு ஆல்வா எடிசன் காது கேளாதவராவார். அவர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் போது அவர் கவனம் முழுக்க கண்டுபிடிக்க வேண்டிய பொருளின் மீது மட்டுமே இருக்கும். ஒரு நாள் அவரது நண்பர் ஒருவர்..

“எடிசன் உங்களுக்குக் காது கேட்கவில்லையே இந்தக் குறைபாடு தங்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது?“ என்று கேட்டார்.
அதற்கு எடிசன்..
“எனக்குக் காது கேட்கவில்லையே என்பதற்காக நான் வருத்தப்படவில்லை. அது எனக்கு பலவகையில் உதவியாகவுள்ளது. நான் ஆய்வில் ஈடுபடும் போது யார் என்னை அழைத்தாலும் எனக்குக் கேட்பதில்லை. அதனால் என் எண்ணம் சிதையாமல் என்னால் ஆய்வு செய்யமுடிகிறது என்றார்.இதோ ஒட்டக்கூத்தருக்கு தற்பெருமையே பலவீனமாகிப்போகிறது

ஒரு தடவை ஒட்டக்கூத்தர் புகழேந்தியைப் பார்த்து ..

எங்கள் சோழமன்னர் முதுகுக்குக் கவசம் அணிவதே இல்லை.
உங்கள் பாண்டிய மன்னர் தான் உறுதியான முதுகுக் கவசம் அணிகிறார் என்றார். எங்கள் மன்னர் ஏன் முதுகுக் கவசம் அணிவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா..?
எங்கள் மன்னர் புறமுதுகு காட்டி ஓடுவதே இல்லை அதனால் தான் என்றார்.
அதற்கு புகழேந்திப்புலவர்....
உங்கள் மன்னர் கவசம் அணியாததற்குக் காரணம் நீங்கள் சொன்னது அல்ல. புறமுதுகிட்டு ஓடும் கோழைகள் மீது எங்கள் பாண்டிய மன்னர் வேல் எறிவதில்லை என்ற நம்பிக்கைதான் காரணம் என்றார்.


இதோ இந்த மாதர் சங்கத்தின் பலவீனமே அவர்கள் நினைத்ததை சாதிக்கும் பலமாக மாறிப்போகிறது.


பெர்னாட்சாவுக்கு ஒரு மாதர் சங்கத்திடமிருந்து தாங்கள் எழுதிய புத்தகம் ஒன்றை இலவசமாக அனுப்பிவைக்கும் படி கடிதம் ஒன்று வந்தது.
பெர்னாட்சா புத்தகம் எதையும் அனுப்பாமல் மாதர் சங்கம் எழுதிய கடிதத்திலேயே சிகப்பு மையால் “ நான் எழுதிய புத்தகத்தை விலை கொடுத்துக் கூட உங்களால் வாங்கமுடியவில்லை. மிக மிக வெட்கம் என் புத்தகத்துக்காக 12 சில்லிங் 6பென்சு செலவழிக்க முடியாத மாதர் சங்கம் இருப்பதே கேவலமானது என்று எழுதி அனுப்பியிருந்தார்.

நான்கு நாட்களுக்குப்பின்னர் பெர்னாட்சாவுக்கு மீண்டும் ஒரு கடிதம் மாதர் சங்கத்திடமிருந்து வந்தது.

“அன்புடைய பெர்னாட்சாவுக்கு உங்கள் கையெழுத்திட்ட கடிதம் கிடைக்கப்பெற்றோம். மிக்க மகிழ்ச்சி. அதை ஒரு புத்தக வியாபாரியிடம் காட்டினோம். அதை அவர் விலைக்கு எடுத்துக்கொண்டு உங்கள் புத்தகம் ஒன்றைக் கொடுத்துவிட்டார். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி“ என்று அதில் எழுதியிருந்தது.கீழே வீழ்வது பலவீனமானலும் மீண்டும் எழுவதே பலமாகிறது.

ஓர் இராணுவ வீரனை நெப்போலியன் முன் கொண்டு வந்து நிறுத்தினார் உயர் அதிகாரி. “இவன் அவ்வளவு திறமையானவன் அல்ல அதனால் போரிலிருந்து இவனுக்கு ஓய்வளிக்கவேண்டும்.“ என்று அந்த உயர் அதிகாரி கூறினார்.
இவன் என்ன செய்தான் என்று கேட்டார் நெப்போலியன்.

“எதிரிகள் தாக்குதலில் காயம்பட்டு ஒன்பது முறை கீழே விழுந்தான் பத்தாவது முறைதான் எழுந்தான்“ என்றார்.

உடனே நெப்போலியன் முகம் பிரகாசமானது. வீரனைப்பார்த்து, “உன் விடா முயற்சியையும் வீரத்தையும் நான் பாராட்டுகிறேன். ஒன்பது முறை வீழ்ந்தாலும் சோர்ந்துவிடாமல் பத்தாவது முறை எழுந்து நின்று வெற்றிபெற்றாயே நீதான் மற்றவர்களை விட மாவீரன் என்று வாழ்த்தினார்.

காதலுக்குக் கண்களில்லை.


காதலுக்குக் கண்கள் இல்லை என்பார்கள். ஏனென்றால்..

காதல்
காலம் பார்க்காது!
நேரம் பார்க்காது!
சாதகம் பார்க்காது!
நிறம் பார்க்காது!
அழகைப் பார்க்காது!
சாதி பார்க்காது!
மதங்களைப் பார்க்காது!

இப்படி எதுவுமே பார்க்காத காதல் அன்பை மட்டுமே பார்க்கும் அதனால் காதலுக்குக் கண்களில்லை என்பார்கள்.


(எல்லாம் பார்க்காத இன்றைய காதல் பணத்தைப் பார்க்கும் என்று யாரோ சொல்வது காதில் கேட்கிறது.
இருக்கலாம். அப்படியிருந்தால் அதற்குப் பெயர் காதல் இல்லை. வியாபாரம்!
வரதட்சனை என்ற பெயரில் மணமகனை விற்கும் வியாபாரத்துக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.)

இதோ சங்க இலக்கியம் சொல்லும் புதுவகை விளக்கம்.


பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கள் வெற்ப
வேங்கை கமழும் எம்சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே

குறுந்தொகை 355
கபிலர்
குறிஞ்சி.

இரவுக் குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது.

உயர்ந்த மலையின் தலைவனே!
பெய்யும் மேகங்கள் வானத்தை மறைத்தலால் ஆங்குள்ள விண்மீன்களைக் காணமுடியவில்லை.
நீர் எங்கும் பரவி ஓடுவதால் கீழே நிலத்தையும் காணமுடியவில்லை.
கதிரவன் மேற்திசையில் மறைந்தமையால் மேலும், கீழும் எங்கும் மிகுதியான இருள் தோன்றியது.

இந்நிலையில் எம்மையும், உன்னையும் தவிர யாவரும் உறங்கிவிட்டனர்.

இங்குள்ள வேங்கையின் மலர்கள் மனம் வீசுகின்ற ஆங்குள்ள சிறுகுடி உள்ள இடத்தை வருவதற்கு எவ்வாறு அறிந்துகொண்டாய்..?

நாங்கள் நீ வரும் வழியின் அருமை கண்டு வருந்துவோம்.

1. இரவுக்குறியில் இடையீடுகள் பல இருப்பினும் தலைவன் தன் வலிமையாலும், அறிவாலும் அவற்றைக் கடந்து தலைவியைக் குறியிடத்துக் கண்டான். அவள் அவன் வருகை குறித்து மகிழ்ந்தாள். ஆயினும் வழியருமை எண்ணி வருந்தினாள்.

2. விசும்பு காணாமை – திசையை அறிய முடியாது
நீர் நிறைந்த நிலம் – நிலத்தை அறிய முடியாது
கதிரவரன் மறைதல் – வழியறிய முடியாது
ஓசையின்றி ஊர் தூங்குவதால் – ஊரிடம் அறியமுடியாது. இவ்வளவு தடைகள் இருந்தாலும் தலைவன் தலைவியைச் சந்திக்கிறான்.இங்கு தலைவன் தலைவியைக் காண்பதற்கு கொடிய பாதையைக் கடக்கிறான் இருந்தாலும் அவனுக்குக் கண்கள், காது என்னும் உறுப்புகளின் துணை தேவைப்படவில்லை.
மனம் – மனதைத் தேடிச் செல்கிறது அதற்கு கால்கள் மட்டுமே போதுமானதாக இருக்கிறது இங்கு. இதனால் தானோ காதலுக்குக் கண்களில்லை என்றார்கள்.


3. இரவுக்குறியின் பயனின்மை காட்டிய தோழி தலைவனைத்
வரைவு கடாவுவதாக (திருமணத்துக்குத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது)

தமிழ்ச் சொல் அறிவோம்.

1. பெயல் – மேகம்
2. கால் – வான் வெளி
3. எல்லை – கதிரவன்
4. கங்குல் – இரவு.

புதன், 8 ஜூன், 2011

சிறந்த கல்வி.


இன்றைய கல்வி புத்திசாலிகளை உருவாக்குகிறதா?
புரட்சிக்கு வித்திடுவது எது?
இன்றை மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுகிறதா?

இந்தக் கேள்விக்கு அறிஞர்கள் சொல்கிறார்கள்.


அறிஞர் பேகன்


யார் புத்திசாலி ?

பேகன் - தான் படித்த நூலறிவை எவன் தன் வாழ்க்கைக்கும் பயன்படுத்துகிறானோ அவனே புத்திசாலி.


-------- ------------ ----------------

இந்த உலகில் மிகவும் புரட்சிகரமானது எது ?

“கல்வி“தான் இந்த உலகில் புரட்சிகரமானது. ஒரு எழுத்தைக் கற்றுத் தருவது ஒரு புரட்சிக்கு வித்திடுவதாகும் என்றார்.

-இங்கர்சால்-
--------- ---------- -----------------

சிறந்த முறையில் கல்வி பயின்றவர் யார்?
வாழ்க்கையின் சுக துக்கங்களை ஒரே மாதிரிப் பார்ப்பவர்கள் யாரோ அவர்கள் தான் சிறந்த முறையில் கல்வி பயின்றவர்கள் என்றார்.

-ரூசோ-

-------- ------------- -----------------

திங்கள், 6 ஜூன், 2011

சங்க இலக்கியம் -காட்சிப் பதிவு.

சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது சங்ககாலக் காட்சி ஒன்று மனதில் பதிகிறது.

நான் கண்ட சங்ககாலக்காட்சியை உங்களுக்கும் தெரியவைக்கும் முயற்சிதான் இது...

பாடல் இதோ..


எழுதரு மதியம் கடற் கண்டாங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அணையன் தோழி
நெருஞ்சி அணைய என் பெரும் பணைத் தோளே.

குறுந்தொகை - 315
வரைவிடை வேறுபடுகின்றாய் என்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது.

தோழி..
கடலிலிருந்து மேலெழும் முழு நிலவினைப் பார்த்தால்
அதன் ஒளி வெள்ளம் மலையிலிருந்து விழும் அருவி போலவே உள்ளது.

அத்தகு உயர்ந்த ஓங்கிய மலைநாடன் தலைவன். அவன் கதிரவனைப் போன்றவன்
என் தோள்கள் கதிரவனையே நோக்கும் நெருஞ்சி மலர் போன்றவை.

(அருவி மேலிருந்து பலரும் காண கீழ் இறங்கி வரும் என்பது, தலைவன் தலைவியைப் பலரும் காண வரைந்து கொள்ள வருவான் என்பது உணர்த்தப்பட்டது.)

சொற்பொருள்

வரைவு - திருமணம்
கிழத்தி - தலைவி
மதியம் - நிலா
பணைத்தோள் - பருத்த தோள், மூங்கில் போன்ற தோள்.

வெட்கப்பட்ட அன்னம்!!பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன்,தோழியை வாயில் வேண்ட, அவள் வாயில் நேர்வாள் நெருங்கிக் கூறியது.

நகைச்சுவை.

பலவகை வண்ணங்களைக் கொண்ட மலர்கள் உள்ள பொய்கையில் பெண் அன்னம் மகிழ்ந்து உலவுகிறது. அப்போது தன் துணையாகிய ஆண் அன்னத்தைக் காணாமல் கலங்கித் தேடியது. நிலவின் நிழலைத் தன் துணையென நினைத்து அதனிடம் ஓடுகிறது. அப்போது இன்னொரு பக்கத்திலிருந்து ஆன் அன்னம் வருகிறது.
அதைக்கண்டு வெட்கப்பட்டு மலர்களினிடையே மறைந்துகொள்கிறது பெண் அன்னம்.
இத்தகைய காட்சிகளைக் கொண்ட ஊர்த்தலைவனே கேட்பாயாக..

துன்புறுத்தும் ஓசைகள்.

நீ எமது அழகு குறையும்படி பிரிந்து அருள்செய்யாமல் இருந்ததனால் பல நாள்களாக உறங்காத கண்கள் ஒருநாள் சற்றே அயர்ந்து கண்கள் மூடின. அப்போது பரத்தையர் சேரியில் பெண்கள் வாழ்த்திப்பாட, நீ சேர்ந்த பரத்தை வீட்டிலிருந்து வரும் முரசின் ஒலி எம்மை எழுப்பும்.

துணங்கை

நீ பிரிந்ததால் அழுதுகொண்டே இருந்த எம் கண்கள் எம் புதல்வனை மெல்லத் தழுவியதால் இமை பொருந்தின. ஆனால் நீ அமைத்த பெரிய வீட்டில் உன் விருப்பத்துக்குத் தக பெண்ணை உனக்கு வேண்டியவர் தந்து அங்கு வாழ்த்துப்பாடல் பாட, அவர்களோடு நீ ஆடிய துணங்கைக் கூத்தின் ஒலியும் காட்டில் வந்து எம்மை எழுப்பும்.
நீ வாராமல் அழுத கண்ணீர் ஈரம் புலராத எம் கண்கள் இமை பொருந்தின. ஆனால் பரத்தையர் வீட்டுக்கு ஏற்றி வந்த உன் தேரின் மணியோசை வந்து எம்மை எழுப்பும்.

நயம் நிறைந்த உவமை

இவ்வாறு பரத்தையர் சேரியிலிருந்து வந்த பல்வேறு ஓசைகள், வலிமை குறைந்த மன்னனுடைய கோட்டையை வலிமையுடைய அரசன் முற்றுகையிட்டு காலை நேரத்தில் தன் போர் முரசை ஒலிக்க அந்த ஒலி அவனுடைய காதில் விழுவதைப் போல எமது உறக்கத்தை பறித்தன. அதனால் நாங்கள் பெரிதும் வருந்தமாட்டோம். ஆனால் பரத்தையர் வீட்டில் யாழ் வாசித்த பாணன் அதை எடுத்துக்கொண்டு இங்கு தூதுவனாக வரக்கூடாது. அவன் வந்தால் அதுவே எங்களுக்குப் பெரும் துன்பத்தைத் தருவதாக இருக்கும்.
பாடல் இதோ..

மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தெனக்
கதுமெனக், காணாது, கலங்கி, அம் மடப் பெடை
மதி நிழல் நீர் உள் கண்டு, அது என உவந்து ஓடித்,
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணிப்,
பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்;

நலம் நீப்பத் துறந்து, எம்மை நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே!

அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண் கண், எம்
புதல்வனை மெய் தீண்டப், பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே!

வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே!

என ஆங்கு,
மெல்லியான் செவி முதல், மேல்வந்தான் காலை போல்,
எல்லாம் துயிலோ எடுப்புக; நின் பெண்டிர்,
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்ப்
பாணன் புகுதராக் கால்

கலித்தொகை-70
பாடலின் வழியே.

1. அன்னத்தின் அறியாமையால் தோன்றி நகைச்சுவை இலக்கியச் சுவை கூட்டுவதாக உள்ளது.
2. மகளிர் ஆடும் துணங்கைக் கூத்தைப் பற்றிக் குறிப்பினைக் காணமுடிகிறது.
3. வலிமையான அரசன் – தலைவன்
வலிமையில்லாத அரசன் – தலைவி என்ற ஒப்பீடு நயமுள்ளதாக உள்ளது.

இருள் - காசியானந்தன் நறுக்குகள்

ஒவ்வொரு விழாக்களிலும் தலைவர்கள் விளக்கேற்றும் போது கவிஞரின் இந்த நறுக்கு தான் என் நினைவுக்கு வருகிறது.

இருள் நீக்கும் விளக்கின் வெளிச்சம் ஏற்றுபவர்களுக்கு மட்டும்தானா?

ஞாயிறு, 5 ஜூன், 2011

காதலிக்கும் போது..

ஆண்களாக இருந்தாலும்
பெண்காளாக இருந்தாலும் காதலிக்கும் போது இருப்பது போல திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை.

நிறைய மாறிவிடுகிறார்கள்.

காதலிக்கும் போது...
நிறைகள் மட்டுமே தெரிகிறது
பாராட்ட மட்டுமே தெரிகிறது.
திட்டினாலும் சிரிக்கத் தோன்றுகிறது
பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றுகிறது
நிகழ்காலம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.
கசப்பான உணவும் இனிக்கிறது

திருமணத்துக்குப் பின்னர்...
குறைகள் மட்டுமே தெரிகிறது
பாராடட்ட நேரம் ஒதுக்கமுடியவில்லை
சிரித்தாலும் திட்டத் தோன்றுகிறது.
ஆளைவிட்டா போதும் என்றிருக்கிறது
எதிர்காலம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.
இனிப்பான உணவும் கசக்கிறது.

இதோ எனக்கு மின்னஞ்சலில் வந்த சிந்திக்கத்தக்க நகைச்சுவை.
காதலிக்கும் போது..


அவன் : ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம்,இன்றும்,என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்: கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?திருமணத்திற்குப் பின் :


கீழிருந்து மேலாகப் படியுங்கள்..


எப்படியிருக்கிறது!!!!
இன்று நேற்றா இப்படியொரு மாற்றம் வந்தது.?

காதல் தோன்றிய போதே இந்த மாற்றங்களும் தோன்றிவிட்டன.

என்னைக் கேட்டால் உண்மையான காதலின் அளவு என்ன ? உயர்வு என்ன என்பதை

இளமையில் அளவிடக்கூடாது.

திருமணத்துக்குப் பின்னர்.
குழந்தை பெற்ற பின்னர்
வயதான பின்னர் தான் அளவிட வேண்டும் என்பேன்.

இதோ சங்ககாலக் காட்சி ஒன்று..

வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.

தலைவ..
முன்பு ஒரு காலத்தில் என் தோழி பசுமையான வேப்பங்காயைத் தந்தாலும் அது இனிய மனமுள்ள “கரும்புக்கட்டி“ என்று இளமைப் பருவத்தில் சுவைத்து உண்டு வந்தீர்.

இப்போது பாரி என்னும் வள்ளலுக்குரிய பறம்பு மலையின் தை மாதத்துக் குளிர்ச்சி பொருந்திய சுனை நீரையே தந்தாலும் “வெப்பமாக இருக்கியது உவர்பாக இருக்கிறது“ என்று கூறுகிறீர்.

உலகின் அன்பின் தன்மை இத்தன்மையது போலும்!!!

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம் பூங்கட்டி என்றனீர் இனியே
பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
“வெய்ய உவர்க்கும்“ என்றனீர்
ஐய! அற்றால் அன்பின் பாலே.


குறுந்தொகை 196
மிளைப்பெருங்கந்தன்

இலக்கியச் சுவை.

ஒப்பீடு
வேம்பு – இளமைத் தன்மை கொண்ட தலைவி – இனிப்பு
இனிய குளிர்ந்த நீர் – வயதான தலைவி – வெப்பம்,உவர்ப்பு

இளமைப் பருவத்து அன்பு - தேம் பூங்கட்டி.
முதுமைப் பருவத்து அன்பு – வெப்பமாக, உவர்ப்பாக.

சனி, 4 ஜூன், 2011

வலி தீர்த்த இசை.

பொருள் காரணமாக நீங்கிச் சென்ற தலைவன் மீண்டு வந்தான். அதனை அறிந்த தோழி, தலைவியிடம் “குன்றம் கடந்த நம் தலைவர் வந்தார்“ என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறாள். இதுவே பாடலின் சூழல்.


இசை மருத்துவம்


பார்வை ஒன்றுபட வேடன் வலையை அமைத்தான். அந்த வலையைக் கண்ட நெடிய காலைக் கொண்ட கணந்துள் என்னும் பறவை அச்சமுற்றுக் கத்தும். அப்பறவையின் தனித்த குரலிலான தெளிந்த ஒலியானது, யாழிசையுடன் சேர்ந்து பாலை நிலைவழியே செல்லும் கூத்தர்களின் வழிச் செல்லும் துயரை நீக்குவதாக இசைக்கும்.

பாலை வழி


இத்தகைய வழியில் கடுமையாய் ஒலிக்கும் பம்பையுடன் சினமுடைய நாயை உடைய வடுகர் கூட்டம் தங்கும் நெடுங்குன்றம் உள்ளது. அக்குன்றத்தையும் கடந்து நம் தலைவர் வந்தார் என்கிறாள் தோழி.

தலைவனும் புதல்வனும்


தலைவியின் கையில் அணியப்பட்ட செம்பொன்னாலான அணிகலன்கள் உடல்மெலிவால் கழன்று விழும். அதனைக் கண்டு புதல்வன் நம்மை அணைத்துக்கொண்டு அழுவான். அவனுடைய இனிய குரலைக் கேட்கும் போதெல்லாம் தலைவனைக் காணவேண்டும் என்ற ஆவல் நமக்குத் தோன்றும். நம் ஆவலை நிறைவுசெய்யும் விதமாக தலைவரும் நம்மிடம் வந்து சேர்ந்தார் என்று உவந்து தலைவியிடம் சொல்கிறாள் தோழி.

பாடல் இதோ..

“பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்காற் கணந்துள் புலம்பு கொடெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமெனவிசைக்கு
நரம்பொடு கொள்ளுமத்தத் தாங்கட்
கடுங்குரற் பம்பைக் கதநாய்வடுகர்
நெடும் பெருங்குன்ற நீந்தி நம்வயின்
வந்தனர் வாழிதோழிகையதை
செம்பொற் கழறொடிநோக்கு மாமகான்
கவவுக்கொளின் குரல் கேட்டொறும்
அவவுக்கொண் மனத்தேமாகிய நமக்கே”

வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது
நற்றிணை - 212.
பாலை- குடவாயிற் கீரத்தனார்


பாடல் வழியே

1.நடந்துசெல்லும் வலியையும், மனச்சுமையையும் நீக்குவதாக இங்கு யாழிசையுடன், பறவையின் ஒலியும் இருந்தது என்ற செய்தி இசைமருத்துவக்கூறாக அறியமுடிகிறது.

2.காட்டில் குரங்கு, மயில் ஆகியன தீங்குகளை அறிவுறுத்தும் உயிரினங்களாகும். இவைபோல இந்த கணந்துளும் அறிவுத்தியது என்ற செய்தி சங்ககால மக்களின் விலங்குசார் வாழ்வியல் குறித்த தெளிந்த அறிவுக்குச் சான்றாகவுள்ளது.

3.கணந்துள் பறவையின் ஓசை யாழோசையுடன் சேர்ந்து இசைக்கும் என்றது, தலைவி தலைவனுடன் கூடி இசைபட வாழ்வாள் என்பதைச் உள்ளுறையாக உரைப்பதாகவுள்ளது.

4.தலைவி புதல்வனைக் காணும்போதெல்லாம் தலைவனின் நினைவு வருகிறது என்ற செய்தி உளவியல் அடிப்படையிலான பெண்களின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுவதாகவுள்ளது.

வெள்ளி, 3 ஜூன், 2011

தங்கப் பெட்டி.


ஒரு முறை போரில் வென்ற மாவீரர் அலெக்சான்டர் எதிரிகளின் நாட்டில் தங்கப்பெட்டி ஒன்றைக் கைப்பற்றினார். அவரின் படைத்தளபதி வந்து அலெக்சான்டரிடம் கேட்டார்..

மன்னா விலைமதிப்பில்லாத இந்தப் பெட்டியை எங்கு வைப்பது? என்று.

அதற்கு அலெக்சான்டர் சொன்னார்..

யார் சொன்னது இந்தப் பெட்டி விலைமதிப்பில்லாதது என்று, ஒரு பொற்கொல்லனைக் கேட்டால் கூட இந்தத் தங்கப் பெட்டியின் விலையைச் சொல்லிவிடுவான்.

இந்தப் பெட்டியை எனது புத்தகங்களை வைக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம், அப்போது தான் இந்தப் பெட்டிக்கு சரியான மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்றார்.

சிரல்வாய்த் தளவு


'சிரல் வாய் உற்ற தளவின்'

நற்றிணையில் இடம்பெறும் இவ்வுவமை புலவரின் கற்பனைத் திறனுக்குத் தக்கதொரு சான்றாகவும், இயற்கையோடு இயைந்த சங்ககால வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

'மீன்கொத்திப் பறவையின் வாய்போன்ற அரும்புகளைக் கொண்ட முல்லை' என்பது இதன் பொருளாகும்.

தமிழ்ச்சொல் அறிவோம்

தளவம் - முல்லை மலர்
சிரல் - மீன்கொத்திப் பறவை

வியாழன், 2 ஜூன், 2011

துகில் விரித்தன்ன வெயில்.

சங்கஇலக்கியப் பாடல்களை முழுமையாகப் படிக்க முயன்று பலமுறை தோற்றுப்போயிருக்கிறேன். ஆம் அப்பாடல்களில் உள்ள அழகியல் கூறுகள் ஒவ்வொன்றும் என்னை அடுத்த அடிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்திருக்கின்றன.

ராமனின் அழகை,

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
என்பார் கம்பர்.

அப்படி சங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றையும் காணும்போது அகவாழ்வியலையும், புறவாழ்வியலையும் கண்டு மெய்சிலிர்த்து நின்றிருக்கிறேன். அப்படி நான் வியந்த உவமைகளைக் காட்சிப்படுத்தலாம் என நினைக்கிறேன். முன்பே சங்க இலக்கியத்தில் தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் என்ற தலைப்பில் 27 புலவர்களைக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறேன். இனி “சங்க இலக்கியத்தில் உவமைகள்“ என்ற உட்தலைப்பில் தொடர்ச்சியாக சங்கப்புலவர்களின் உவமைநயத்தை காட்சிப்படுத்தவுள்ளேன்.

இதோ முதலாவதாக..

“துகில் விரித்தன்ன வெயில்“


வெண்மையான ஆடையை விரித்தது போன்ற வெயில் என்பது இதன் பொருள்.


(வெயிலைப் பார்த்து இப்படி நமக்கு என்றாவது தோன்றியிருக்கிறதா??)

எதுக்காகப் பொருள் தேடறீங்க..?


பொருள் தான் வாழ்க்கையின் அடித்தளம்.
பொருள் இல்லாதவரை இந்த உலகில் நாய் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை!
அதனால் தான் எல்லோருமே பொருள் தேடுகிறோம்.

நாம் தேடும் பொருள் யாருக்காக..?

தனக்கு!
தன் குடும்பத்துக்கு!!
அடுத்து வரும் தன் தலைமுறைக்கு!!!
அடுத்தடுத்து வரும் தன் தலைமுறைகளுக்கு!!!!


என்ற பதிலே பெரும்பாலோனரிடமிருந்து வரும்.
சரி! இதுதானே சராசரி மனித வாழ்க்கை!

இதையும் தாண்டி சிந்தித்தவர்கள் தான் மாமனிதர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதோ சங்ககாலத் தலைவன் ஒருவனுடைய சிந்தனை.

“தம்மை விரும்பி வாழ்வோருக்கு உதவி செய்து அவர்களைக் காத்தலால் வரும் மகிழ்ச்சி ஒன்று,
தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக்கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று.

இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் பொருள்!
அதனால் பொருளைத் தேடவேண்டும் என ஓயாமல் நினைந்தான் தலைவன்.“

தன் குடும்பத்தின் வறுமை நீங்கவேண்டுமே என்று எண்ணவேண்டி தலைவன்,
விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவி செய்யப் பொருள்வேண்டுமே என்று எண்ணுகிறான்.

தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் கலந்திருப்பதால் தானோ சங்ககாலத்தைப் பொற்காலம் என்கிறோம்.

பாடல் இதோ..

தம் நயந்து உறைவோர்த் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார்நல்கூர்ந்தோர்! என
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆபமன் வாழி தோழி கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல் முதற் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறுங்கால் உழுஞ்சலி
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
அரிக் கோற் பறையின் ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை்ப பொருந்தி செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண்குரல்
கணிவாய் பல்லிய காடு இறந்தோரே!

அகநானூறு 151
பாலை
காவன் முல்லைப் பூதரத்தனார்.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

ஆடுகளப் பறை

தோழி..
வாழ்க! பாலை நிலத்தில் குட்டையான வாகைமரங்கள் கோடைக்காற்றில் உலர்ந்து மிகுதியான காற்று வீசும்போது,கூத்தியர் ஆடும் போது முழங்கும் பறைபோல, அவற்றின் விளைந்த நெற்றுகள் ஒலிக்கும்.

பல்லி சோதிடம்

அங்கு கற்குவியலில் கள்ளிச் செடிகள் நிற்கும்.
பல்லி, சோதிடன் போல அவ்வழியே செல்வோருக்கெல்லாம் நிமித்தம் கூறும்.
அத்தகைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர் முன்பு நம்மிடம் அருளோடு இருந்தார்.

ஈத்துவக்கும் இன்பம்

இப்போது தம்மை விரும்பி இருப்போரை ஆதரித்து!
தாம் விரும்பும் உறவுகளுடன் இயைந்து மகிழ்ந்திருக்க இயலாதவொரு வறுமையுற்றார். அதனால் வாழ்க்கைக்குச் செல்வமே துணையாகும் என்று நினைந்து நம்மிடம் அருள்கூர்வதைக் கைவிட்டார். வறுமையை நீக்கும் பொருள் மகிழ்வைத் தரவல்லது. விருந்தினரையும், சுற்றத்தாரையும் மகிழச் செய்வது.
“அடுத்தவர்களுக்குக் கொடுப்பதால் தோன்றும் இன்பமானது,
இன்பங்களுள் தலைசிறந்தது.“ என்று உணர்ந்தவராக என்னை நீங்கிப் பொருள் நாடிச் சென்றார்!
நாம் என்ன செய்யமுடியும்..? என்கிறாள் தலைவி.

பாடல் வழியே.
1. விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவுவதே இல்லற வாழ்வின் அடிப்படைக் கடமை என்பது உணர்த்தப்படுகிறது.
2. பறையொலிக்கு ஏற்ப ஆடுகளமகள் (கூத்தியர்)ஆடும் வழக்கம் சுட்டப்படுகிறது.
3. சங்ககாலம் தொட்டே பல்லியின் ஒலியை, மக்கள் நிமித்தமாகக் கருதியமை உணரமுடிகிறது.

(பொருள் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்மல்ல -
தங்கள் மேற்பார்வைக்கு “துபாயா அபுதாபியா?)

புதன், 1 ஜூன், 2011

எக்காலம்..?


காலதர் வழியே காற்று வாங்கியது
அந்தக்காலம்
விண்டோசின் வழியே உலகைக் காண்பது இந்தக்காலம்!

பொறியின் வழியே எலியைப் பிடித்தது
அந்தக்காலம்
சுட்டெலியின் வழியே பேரறிவைப் பிடிப்பது இந்தக்காலம்!

கடிதம் போட்டுக் காத்துக்கிடந்தது
அந்தக்காலம்
மின்னஞ்சல் வழியே காலம் சுருங்குது இந்தக்காலம்!

படைப்புகள் அனுப்பி ஏங்கிக்கிடந்தது
அந்தக்காலம்
ப்ளாக்கின் வழியே யாவரும் படைப்பாளரானது இந்தக்காலம்!

வீட்டுமுகவரிகள் மட்டுமே அடையாளமானது
அந்தக்காலம்
பேஸ்புக்கும், டுவைட்டரும் அடையாளமானது இந்தக்காலம்!

தீப்பெட்டியும், நூலும் தொலைபேசியானது
அந்தக்காலம்
ஸ்கைப்பும்,3ஜியும் முகம்பார்த்துப் பேசச்சொல்லுது இந்தக்காலம்!


இப்படி கணினி வழியே எல்லாம் செய்யும் மனிதா..?

 நீ கணினி வழியே நெல்மணி விளைவிப்பது எக்காலம்..?

 இணையத்தில் எல்லாம் தேடும் மனிதா நீ தொலைத்த உன் சிரிப்பைத் தேடிக்காண்பது எக்காலம்..?

 கொசுவை விரட்டக் கூட மென்பொருள் கண்ட மனிதா நீ, நடமாடும் கணினியான மனிதனை மீண்டும் மனிதனாக்கும் மென்பொருளை உருவாக்குவது எக்காலம்..?

 உன்னைப் போலவே மொழிப்பாகுபாடு கொண்ட கணினிகளை ஒரே குறியீட்டு மொழிக்குள் நீ கொண்டு வருவது எக்காலம்..?

 மேகக்கணினி நுட்பம் கண்ட மனிதா நீ, கணினிகளால் தோன்றும் வெப்பம் தணிப்பது எக்காலம்..?தமிழ்ச்சொல் நயம்.

(காலதர் - (ஜன்னல் - வடமொழி)
கால் - காற்று
அதர் - வழி

காற்று வரும் வழி)

பல்லைப் பிடுங்கிக் கதவில் பதித்தவன்.


தண்டனையளிப்பதால் செய்த தவறு சரியாகிவிடுமா..?
அடுத்த முறை இதே தவறு நிகழக்கூடாது என்ற நோக்கில்தானே காலந்தோறும் தண்டனைகள் விதிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

தண்டனைகள் எப்படியிருக்கவேண்டும்?

தாம் செய்த தவறை உணரச் செய்வதாக, மீண்டும் அந்தப்பிழை ஏற்படாது தடுப்பதாகவே இருக்கவேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் காலந்தோறும் நீதிவழங்கும் மரபுகள் வழக்கில் இருந்திருக்கின்றன.

எவ்வளவு காலங்கள் கடந்துவந்திருக்கிறோம்.
பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்ற கருத்தை எடுத்துச் சொல்லும் அகப்பாடல் இது.

மனித உருவில் விலங்கைப் போல காட்டுமிராண்டித்தனம் நம்முள் எப்போதும் புதைந்து இருக்கும் அது எப்போது வெளிப்படும் என்பது நமக்கே தெரியாது.

இதோ இந்த அகப்பாடலில் அப்படியொரு விலங்கு வெளிப்படுகிறது பாருங்கள்..

தலைவனைப் பிரிந்த தலைவி சோர்வுடன் இருக்கிறாள். தலைவியின் நிலைக்கு வருந்திய தோழி சொல்வதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் மீண்டு வருவான் உன்னைச் சேர்வான் எனத் தேற்றும் தோழி அழகான வரலாற்றுக் குறிப்பு ஒன்றையும் தம் கூற்றில் தருகிறாள்.

யானை பிடிக்கும் சங்ககால மரபு

தோழி!
கேட்பாயாக..
சோழமன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குறுநில மன்னர் தத்தம் பணியாளரைக் கொண்டு பெரிய குழிகளைத் தோண்டி,
பிடி, கன்றுடன் புதிய யானைகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நெடுந்தொலைவில் குறுநிலத்தை ஆளும் எழினி என்னும் மன்னன் அடிமைத்தொழிலைப் பயிலாதவன். அதனால் அவன் மட்டும் யானைபிடிக்கும் அப்பணிக்கு வரவில்லை. அதனால் கோபமுற்ற சோழன் மத்தி என்பவனை ஏவி எழினிக்குத் தக்க பாடம் கற்பிக்கச் செய்தான்...

தண்டனையாக பல்லைப் பிடுங்கி கதவில் பதித்தல்

மத்தி என்பவன் சோழனின் ஆணைப்படி எழினியைச் சிறைபிடித்து அவனுடைய பல்லைப் பிடுங்கி வந்து கடற்கரை ஊராகிய வெண்மணியின் வலிமையான கோட்டைக் கதவில் பிறருக்குப் பாடமாக அப்பல்லைப் பதித்து வைத்தான்.

தன் வெற்றிக்கு அடையாளமாக அந்த ஊரின் கடற்கறையில் கல் நாட்டினான்.

இன்றுவரை தீராத புறம் பேசும் மரபு


அத்தகைய கல் விளங்கும் துறைமுகத்தில், அலைகள் கரையை மோதி ஆரவாரிக்கும். அதுபோல இந்த ஊரில் நம்மைப் பற்றிய பழிச்சொல் (அலர்) பெருகிவிட்டது. அதனால் தனக்குத் தொடர்பு இல்லாதது போல நாம் அதைக் கேட்டுத் துடிதுடித்து அழத் தலைவர் பிரிந்தார்.

அழகோவியம்

அவர் சென்ற திசையில் வேங்கட மலை உள்ளது. அங்கு வெண்கடம்ப மரங்கள் மிகுதி. அப்பகுதியில் திண்மையான கொம்புடைய யானை, தன் தினவைத் தீர்ப்பதற்காக மரத்தில் உரசும். அப்போது மரத்திலிருந்து மலர்கள், பனிக்கட்டிகள் போல உதிர்ந்துவிடும். அவை உழவர் பாறையின் மீது காயவைக்கும் வெந்நெல் விதைபோல உலர்ந்து கிடக்கும். அத்தகைய வேங்கட மலைக்கு அப்பால் வேற்றுமொழி வழங்கும் நாட்டுக்குத் நம் தலைவர் சென்று செயலாற்றினாலும் விரைந்து வந்து அருள் செய்வார் என்று தலைவியைத் தேற்றுகிறாள் தோழி.

பாடல் இதோ...

கேளாய் எல்ல! தோழி! – வாழிய
சுதைவிரிந்தன்ன பல்பூ மாராம்
பறைகண்டன்ன பாஅடி நோன்தாள்
திண்நிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும்
தண்மழை ஆலியின் தாஅய் உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை
பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக்
கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப்பட்ட
கல்லா எழினி எல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழப்பிரிந்தோரே.

மாமூலனார்.
பாலை.
அகநானூறு 211


பிரிவின்கண் வேறுபட்ட தலைவியின் வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.

பாடலின் வழியே..

1. பல்லைப் பிடுங்கி கதவில் பதிக்கும் சங்ககால போர்வழக்கத்தை அறியமுடிகிறது.
2. அகவாழ்வில் தலைமக்களைப் பற்றி ஊரார் பேசும் பழிச்சொல் (அலர்) பற்றி அறியமுடிகிறது.
3. யானைபிடிக்கும் வழக்கத்தில் அன்றைய பேரரசர்கள் தம் கீழுள்ள குறுநில மன்னர்களைப் பயன்படுத்தியமையை அறியமுடிகிறது.
4. உழவர்கள் வெண்ணெல் விதைகளைப் பாறையில் காயவைத்தமையும் பாடல் வழிப் புலனாகிறது.

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்னு சொல்லுவாங்க.

நாம் இருவர் நமக்கு இருவர் என்று சொன்னாங்க, அடுத்து..
நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று சொன்னாங்க, அடுத்து..
நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தைகள் என்று சொல்றாங்க..

இந்தக்காலத்துல போய்...

மக்கள் விழுக்காடு போகிற போக்கில் 16 பிள்ளை பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தமுடியுமா..?

அதனால் தான் நம் முன்னோர் மேற்கண்ட 16 செல்வங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினர் போலும்.