வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 21 ஜனவரி, 2011

மேகக் கணினி (கிளவுட் கம்யூட்டிங்)


வள்ளுவர் இன்றிருந்தால்..

சுழன்றும் கணினி பின்னது உலகம் அதனால்
உழந்தும் கணினியே தலை

கணினி கற்று வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுஅவர் பின்செல் பவர்

என்று பாடியிருப்பார்.
ஆரம்ப கால கணினிகளுக்கு நிறைய இடம் தேவைப்பட்டது. குறைந்த கொள்திறனும், நினைவுத் திறனும் கொண்ட அக்கணிகளும் தனித்தே செயல்பட்டு வந்தன. காலம் செல்லச் செல்ல கணிகளுக்கிடையே தொடர்புகொள்ளும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இன்று பெரு வையமே சிறு கிராமமாக இணையத்தால் சுருங்கிப்போனது. எல்லையற்ற நினைவுத் திறனையும், கொள்திறனையும் நோக்கி இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கிறது.

மேகக் கணினி.


மேகம் எவ்வாறு எல்லோருக்கும் பயன்படுகிறதோ அதுபோல இணையமும் எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் உருவானதே மேகக் கணினி. பல கணினிகளும், சேவையகங்களும் இணையத்தால் தொடர்பு கொள்ளும் நுட்பமே மேகக் கணினி.

தற்கால அதிவேகக் கணினி

 மூளையைப் போல சிந்திக்கும் இயந்திரத்தை உருவாக்கவேண்டும் என்ற மனிதனின் தேடலின் விளைவு சூப்பர்கணினி உருவாக்கப்பட்டுள்ளது.
 முதலில் எலியைப்போல சிந்திக்கும் கணினி உருவாக்கப்பட்டது.தற்போது ஐபிஎம் நிறுவனம் பூனையைப்போல சிந்திக்கும் கணினியை உருவாக்கியுள்ளது.
 1,47,456 பிராசசர்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். அதன் நினைவகம் 144 டெராபைட் ஆகும். நாம் பயன்படுத்தும் கணியைவிட இலட்சம் மடங்கு சக்திவாய்ந்தது இக்கணினியாகும்.
 இன்று பயன்பாட்டிலுள்ள கணினிகள் மனிதனைப்போல 1விழுக்காடுதான் சிந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மேகக் கணினியின் தனிச்சிறப்புகள்.

ழ கணினிகள் மட்டும் போதுமானது மென்பொருள்கள் மேகத்தில் கிடைக்கும், அதனை கணினியில் நிறுவத் தேவையில்லை. நம் ஆவணங்களை பூமிப்பந்;தின் எந்த இடத்திலிருந்தும்; இணையத்தின் உதவியோடு உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.
ழ கணினிகள் எந்த இயங்குதளத்தையும் பெற்றிருக்கலாம்.
ழ பழைய கணினிகூட போதுமானது. எதிர்காலத்தில் கணினிகள் எதுவும் தேவைப்படாது. பேனா வடிவில் கூட கணினிகள் வந்துவிடும்.
ழ நம் கணினிகளில் அதிகமான கொள்திறன் இருக்கவேண்டிய தேவையில்லை. மாறாக அதிகமான நினைவுத் திறனிருந்தால் போதுமானது.
ழ மேகக் கணினி வழியாக மிகப்பெரிய பயன்பாடுகளைக் கூட நம் உலவியின் துணைகொண்டு எளிதாகச் செய்துவிடமுடியும். சான்றாக… கூகுள், ஸ்கைப், மைக்ரோசாப்;டு எனப் பல நிறுவனங்களும் மேகக் கணினிநுட்பத்துடன் தம்மை இணைத்துக்கொண்டு பல வகையான மென்பொருட்களை வழங்கிவருகின்றன. அம்மென்பொருள்களைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
ழ இதனால் நம் கணினிக்கென மென்பொருகளை வாங்கவோ நிறுவவோ தேவையில்லை.
ழ இப்போது மேகக் கணினிக்கென தனியாக இயங்குதளங்களும் கிடைக்கின்றன. கூகுள் நிறுவனத்தாரின் குரோம், ஐகிளவுடு மற்றும் குட்எஸ் ஆகியன வழக்கில் உள்ளன. இவ்வியங்குதளங்களின் வழியாக கூகுளின் எல்லா வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இயங்குதளத்துக்கு குறைந்த அளவு 256 எம்பி ரேமும் 35 எம்பி அளவுடைய வன்தட்டும் போதுமானது.
ழ பயனர்களுக்கு மென்பொருள்களைத் தருவது, சேமிப்புக்கான பெரிய பாதுகாப்பான இடமளிப்பது, இணைய சேவைகளைத் தருவது, என இதன் பயன்படுகள் நீண்டுகொண்டே செல்லும்...
காலத்தின் தேவை – மேகக் கணினி.
இன்றைய நிலையில் கணினி இல்லாத துறைகளே எதுவுமில்லை. அதனால் கணினி நம் முதன்மையான தேவையாகிறது. நாம் செல்லுமிடங்களிலெல்லாம் நம் கணினியைத் தூக்கிக்கொண்டு செல்லமுடியாது. இந்நிலையில்,

 எளிதில் எடுத்துச்செல்ல வசதியான குறைந்த எடைகொண்ட, கைக்கு அடக்கமான, அதிக கொள்திறன் கொண்ட கணினி நம் அடிப்படைத் தேவையாகிறது.
 இன்றைய வழக்கில் அலைபேசிகள் கூட இணைய வசதி கொண்ட கணினியாகப் பயன்பட்டு வருகின்றன.
 எதிர்காலத்தில் இன்னும் சிறிய சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும் பேனா அளவில் கூட கணினிகள் பயன்பாட்டுக்கு வரலாம். அதன் வழி பெறும் ஒளியால் நமக்கான கணினித் திரையும், தட்டச்சுப்பலகையும் மாயத்தோற்றம் போல காணக்கிடைக்கும். அக்காலத்தில் நமக்கு இன்றைய மென்பொருள்போல வன்பொருள்களின் தேவையும் குறையும்.
 பிளாபி, சிடி, டிவிடி, பென்டிரைவ், பிளாஸ்டிரைவ், மெமரி கார்டு என பல புறநினைவுக் கருவிகளைப் பயன்படுத்தி வந்த நாம்… ஏடிரைவ், ரேபிட்சேர், பிளிப்டிரைவ், பிரீடிரைவ்,ஹக் டிரைவ், மீடியாபயர், 4சேர் என காலம்தோறும் நம் கோப்புகளைச் சேமித்துக் கொள்ள பல வழிகளைப் பின்பற்றி வருகிறோம்..
 கிணறு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிணற்று நீர் பயன்படும், ஆனால் மழையோ எல்லோருக்கும் பயன்படும். அது போல் இன்றைய கணினி மற்றும் இணைய உலகம், தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே மிகவும் பயன்படுவதாகவுள்ளது. சராசரி மக்களுக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இம்மேகக் கணினி.
 இந்நிலையில் மேகக் கணினி காலத்தின் கட்டாயத் தேவையாகிறது. நானறிந்தவரை எனக்குப் புரிந்தவரை இந்த “மேகக் கணினி (கிளவுட் கம்யுட்டிங்)” என்னும் தொழில்நுட்பத்தை விளக்கியிருக்கிறேன்.இந்த தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதும், பயன்படுத்துவதும் நாம் சம காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன். தெரிந்தவர்கள் தாமறிந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாமே...

வியாழன், 13 ஜனவரி, 2011

பிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது.

• மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். பெரியாழ்வாரின் தாலாட்டுப்பாடல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம்.கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை இடுதலை எழிலுறப் பாடியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
பத்துப் பருவங்களுக்கான விளக்கம்


இரு பாலாருக்குமான பொதுவான பருவங்கள்


காப்பு - குழந்தையை இறைவன் காக்க வேண்டுமென வேண்டிப்பாடுவது.
செங்கீரை - கீரை காற்றில் அசைவது போன்ற மென்மையான பருவத்தைப் பாடுவது.
தால் - குழந்தையைத் தாலாட்டுவதாக அமைவது.
முத்தம் - குழந்தையிடம் - முத்தம் வேண்டுவதாகப் பாடுவது.
வருகை - குழந்தை எழுந்து நடந்து வருவதைப் பாடுவது.
அம்புலி - குழந்தைக்கு நிலவைக் காட்டுதல்.

ஆண்களுக்கான சிறப்புமிக்க மூன்று பருவங்கள்

சிற்றில் சிதைத்தல் - சிறுபெண்கள் கட்டிய மணல் வீட்டை ஆண்குழந்தை சிதைக்கும் நிலையைப் பாடுவது
சிறுதேர் உருட்டல் - ஆண்குழந்தை சிறிய தேரை உருட்டி விளையாடுவதைப் பாடுவது.
சிறுபறை கொட்டல் - ஆண்குழந்தை சிறிய தோலாலான பறையைக் கொட்டுவது.

பெண்களுக்கான மூன்று பருவங்கள்.


நீராடல் - நீர்நிலையில் விளையாடுதல்.
அம்மானை - காய்களைத் தூக்கிப்போட்டு விளையாடுதல்
ஊசல் - ஊஞ்சலாடுதலைப் பாடுவது.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

நாங்க அப்படி இல்லைங்க..!மீண்டும் நாங்க ஆட்சிக்கு வந்தால்….
செல்போன் இலவசமா தருவோம்!
டிவிடி பிளேயர் இலவசமா தருவோம்!
வாசிங்மிசின் இலவசமா தருவோம்!
குளிர்சாதனப்பெட்டி இலவசமா தருவோம்!
எல்சிடி டிவி இலவசமா தருவோம்!
ஆனா….
பெட்ரோல் விலை 150
டீசல் விலை 150
கேசின் விலை 800
உள்ளூர் பேருந்தின் குறைந்த பயணச்சீட்டின் விலை 10
காய்கறி விலை 70
மின்சாரம் துண்டித்தல் 12 மணிநேரம்
செம்மொழி மாநாட்டுக்கு 2000 கோடி
2 சி ஊழல் 5 இலட்சம் கோடி என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்…

இது எனக்கு வந்த குறுந்தகவல்.
இதில் எந்தக் கட்சி என்பதை நான் குறிப்பிடவில்லைங்க!
எந்த அரசியல்வாதி (வியாதி)(வியாபாரி) களையும் குறிப்பிடும் நோக்கமும் எனக்கில்லைங்க!
இன்று நடப்பது மன்னராட்சி என்றும் நான் குறிப்பிடவில்லைங்க!
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவே இந்நிலை மாறவில்லை என்பதைத் தான் நான் குறிப்பிட விரும்புறேங்க
.

புறக்காட்சி ஒன்று…

"களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின்6 பனுவற் பாணர் உய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே."

புறநானூறு -127


கடையெழு வள்ளல்களுள் குறிப்பிடத்தக்கவன் ஆய். இவனுடைய சிறப்பை ஏணிச்சேரி முடமோசியார் இவ்வாறு பாடுகிறார்.

திணை – பாடாண்
துறை – கடைநிலை
(தலைவன் வாயிற்கண் நின்று விடை கூறுதல். விடை விடுத்தலும், பெறுதலும் கடைநிலையாகும்.)

சுவைக்கு இனிதாகிய தாளிப்புடைய உணவை வேந்தர் பிறருக்கு வழங்காமல் தாமே உண்டு தம் வயிற்றை நிறைத்துக்கொள்வர். அத்தகைய சிறப்புடைய முரசுபொருந்திய செல்வம் நிறைந்த அரண்மனையுடன் ஒப்பிடத்தக்கதல்ல ஆய் வள்ளலின் அரண்மனை. ஏனென்றால்…..
களாப்பழத்தின் நிறத்தை ஒத்த கரிய கோட்டினை உடைய சிறிய யாழைக்கொண்டு இனிய பாடல் பாடும் பாணர் ஆய் வள்ளலைப் பாடி யானைகளைப் பரிசாகப் பெற்றுச் சென்றனர். அதனால் களிறுகள் இல்லாத அவனுடைய யானைகட்டும் தறியில் மயில்கள் தத்தம் இனத்துடன் தங்கியிருந்தன. மகளிரோ பிறிதோர் அணிகலனின்றி மங்கலநாணை மட்டும் அணிந்திருந்தனர். அதனால் அவன் அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்பர்.

பாடல் வழி...
• “பிறர்க்கு ஈவு இன்றித் தம்வயிறு அருத்தி” என்ற அடிகளின் வழி சுவைமிக்க உணவை பிறருக்குக் கொடுக்காமல் தாமே உண்டு தன் வயிறை மட்டும் நிறைக்கும் சங்ககால மன்னனை இன்றைய ஆட்சி செய்யும் மன்னனுடன் ஒப்புநோக்குங்கள் என்று நான் கூறவில்லை.
• ஏனைய அரசனின் அரண்மனையில் காணப்படும் செல்வநிலையும் ஆரவாரமும் ஆய் வள்ளலின் அரண்மனையில் காணப்படாவிட்டாலும் மக்களின் வயிற்றில் அடிக்காமல் அவர்கள் தேவையை நிறைவுசெய்யும் ஆய்வள்ளலின் அரண்மனை வெறுமையே சிறந்தது என்று அவனது கொடை நலத்தை ஏணிச்சேரி முடமோசியார் சொல்கிறார்.

• இப்பாடலில் புலவர் ஆய்வள்ளலை இகழ்வது போலப் புகழ்கிறார். செல்வர்களைப் புகழ்வதுபோல இகழ்கிறார்.

சங்ககாலத்திலும் தம் வயிற்றை மட்டுமே நிறைத்துக்கொள்ளும் அரசர்கள் இருந்தார்கள் என்பதைப் புலவர் சுட்டிச் செல்கிறார்.

இன்றும் தான் இருக்கிறார்கள் இவர்கள் தம் வயிற்றை மட்டுமல்ல..
தம் ஏழு தலைமுறையினரின் வயிற்றையும் வளர்க்கிறார்கள் என்று ஏணிச்சேரி முடமோசியார் சொல்லவில்லை நான் தான் சொல்கிறேன்.

 மேலும் இப்பாடலின் வழி..
தலைவன் வாயிற்கண் நின்று விடை கூறுதல் “கடைநிலை” என்னும் புறத்துறை என்பது விளக்கப்படுகிறது.
 பாடப்படும் ஆண்மகனின் புகழைப்பாடுவது பாடாண் திணை என்னும் புறத்திணை புலப்படுத்தப்படுகிறது.
 கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஆய் வள்ளலின் கொடை நலம் சிறப்பித்துரைக்கப்படுகிறது.