வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 14 செப்டம்பர், 2016

இன்றைய சிந்தனை (15.09.2016)


கணித்தமிழ் வளா்க்கும் வலைப்பதிவு நுட்பங்கள்

(உத்தமம் நிறுவனமும் காந்திகிராமகிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 15வது உலகத் தமிழ் இணையமாநாட்டில் நான் வழங்கிய கட்டுரை.
தமிழ்மொழியின் தனிச்சிறப்புகளுள் ஒன்று காலத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளுதலாகும். அவ்வடிப்படையில் கணினிக்கு ஏற்ப தமிழைக் கட்டமைத்து கணித்தமிழ் வளர்த்து வருகிறோம். கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பதிவுகள் குறிப்பிடத்தக்கன. அவ்வலைப்பதிவுகளின் சிறப்பியல்புகளைக் கூறி, வலைப்பதிவுகள் வழியாக கணித்தமிழ் வளர்க்கும் வழிமுறைகளை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வலைப்பதிவுகளின் தனிச்சிறப்புகள்

      புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்திருப்பதில்லை.   சில தொழில்நுட்பங்கள் மட்டுமே காலத்தை வென்று நிலைபெறுகின்றன. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகள் தனிச்சிறப்பு பெறுகின்றன. வலைப்பதிவுகளை எளிதில் உருவாக்க முடியும். ப்ளாக்கா், வேர்டுபிரசு, தம்ளர் (1)என எந்த இலவச வலைப்பதிவுகளாக இருந்தாலும்  அவற்றை உருவாக்குதல், பயன்படுத்துதல், வெளியிடுதல் என பல நிலைகளிலும் எளிமையானதாக இருப்பது வலைப்பதிவுகளின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும். மேலும் இவ்வலைப்பதிவுகளை இணையதளங்களுக்கு இணையாக வடிவமைக்கமுடியும் என்பதும், வலைப்பதிவுளில் எழுதப்படும் கருத்துக்கள் தேடுபொறிகளில் கிடைக்கப்பெறுவதும் கூடுதல் சிறப்பாக அமைகின்றன.
விக்கிப்பீடியாவும் வலைப்பதிவுகளும்
      உலக மொழிகளுக்கு இணையாக தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள இக்காலத்தில், விக்கிப்பீடியாவிலும் அதன் பல்வேறு திட்டங்களான விக்சனரி, விக்கி மேற்கோள், விக்கி நூல்கள் போன்ற பல திட்டங்களிலும் தமிழ் மொழி தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான பெரிய களம் உள்ளது. தமிழ் கட்டுரைகளை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயர்க்கவும், பிறமொழிகளில் உள்ள கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்க்கவும் வேண்டிய தேவை உள்ளது. மேலும் ஒளி எழுத்துணரி (OCR) போன்ற தொழில்நுட்பங்களின் வழியாக பட வடிவில் இருக்கும் நூல்களையும் ஒருங்குறி எழுத்துருவாக்கி விக்கிப்பீடியாவிலும், வலைப்பதிவுகளிலும் வெளியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் விக்கிப்பீடியாவில் உள்ள செய்திகளைப்பயன்படுத்தி அதில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் தமிழ் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தமுடியும். தமிழ் வலைப்பதிவுகளால், தமிழ் விக்கிப்பீடியாவை வளப்படுத்தவும், தமிழ் விக்கிப்பீடியாவால் தமிழ் வலைப்பதிவுகளில் இடம்பெறும் செய்திகளுக்கான நம்பகத்தன்மையை ஏற்டுத்துவதும் காலத்தின் தேவையாக அமைகிறது.
சமூகத் தளங்கள் வழியாக வலைப்பதிவு
       இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பேசுவது குறைந்து ஸ்மைலி எனப்படும் உணர்ச்சிக் குறியீடுகளால் தம் கருத்துக்களை வெளியிடும் நிலை வந்துள்ளது. கருத்து சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் என்பதெல்லாம் மொழி, நாடு என எல்லைகளைக் கடந்து விரிவடைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நம் நேரத்தைக் குறைத்துள்ளது என்ற கருத்து இன்று நகைச்சுவையாகியுள்ளது. ஏனென்றால் முகநூல், டுவைட்டா், கூகுள் பிளஸ், கட்செவி (வாட்சாப்) யுடியுப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் தான் மக்கள் தம் பொன்னான நேரத்தை அதிகமாக செலவிட்டுவருகின்றனர். இச்சமூகத்தளங்களில் அதிகம் பகிரப்படும் செய்திகளுள் பல, வலைப்பதிவுகளில் முன்பே எழுதப்பட்டவை என்பதும் மீள்பதிவாகவே பெரிதும் இவை வெளியிடப்படுகின்றன என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும். மேலும் மேற்கண்ட சமூகத் தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை தேடுபெறியில் தேடினால் முழுவதும் அச்செய்திகள் கிடைப்பதில்லை என்பதையும் நாம் உணரவேண்டும். அதனால் வலைப்பதிவுகளில் எழுதப்படும் செய்திகளைத் தாமாக இந்த சமூகத்தளங்களில் வெளியிடும் தொழில்நுட்பங்களை அறிந்து வலைப்பதிவுகளில் பயன்படுத்தினால் வலைப்பதிவில் எழுதப்படும் செய்திகள் இத்தளங்களிலும், இந்த சமூகத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் வலைப்பதிவுகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடும் வாய்ப்பு ஏற்படும்.
வலைப்பதிவுகளின் குழு பதிவிடல்
      தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டும் இல்லை அதன் தொடர்ச்சியிலும் உள்ளது. அதுபோல எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் நாம் அறிந்துகொள்வதிலோ அதில் நமக்கென ஒரு பக்கத்தை உருவாக்குவதிலோ சிறப்பொன்றும் இல்லை. அந்த தொழில்நுட்பத்தை நாம் எப்படி முழுமையாக, சரியாக, தொடர்ந்து பயன்படுத்துகிறோம் என்பதில்தான் சிறப்பு உள்ளது. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகளை ஆரம்பித்துவிட்டு தொடக்கத்தில் ஒரே நாளில் பல இடுகைகளை வெளியிட்டவர்கள் பின்னர் வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை இடுகைகளை வெளியிடும்போது அந்த வலைப்பதிவு பார்வையாளர்களை முழுவதும் சென்று  சேராமல்போகிறது. அதனால் வலைப்பதிவுகளின் அமைப்புகளில் உள்ள சில நுட்பங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவற்றுள் ஒன்று இடுகைத் திட்டமிடல் நாம் நேரம் கிடைக்கும்போது இடுகைகளை வலைப்பதிவுகளில் உள்ளீடு செய்துவிட்டு நாம் விரும்பிய தேதி மற்றும் விரும்பிய நேரத்தில் வெளியிட இயலும். மேலும் நம் வலைப்பதிவுகளில் விருந்தினரை ஆசிரியராக அழைத்து ஒரே நேரத்தில் பலரையும் குழுவாகப் பதிவிட முடியும் என்பதையும் வலைப்பதிவர்கள் அறிந்துகொண்டால் தம் வலைப்திவைத் தொடர்ந்து இற்றைப்படுத்தி அதில் தமிழ் வளர்க்கமுடியும்.
வலைப்பதிவுகளைத் திரட்டிகளில் சேர்த்தல்
       தமிழ் வலைப்பதிவுகளை ஒரே இடத்தில் திரட்டும் முயற்சியாக பல திரட்டிகள் காலந்தோறும் இருந்து வந்துள்ளன. அவற்றுள் தமிழ்மணம் குறிப்பிடத்தக்கது. இது தவிர இன்ட்லி, திரட்டி, தமிழ் 10 ,  என  பல (2) திரட்டிகளும் செல்வாக்குப் பெற்றுள்ளன. என்றாலும் பல புதிய வலைப்பதிவர்களுக்கு இந்த வலைப்பதிவுகளைத் திரட்டியில் சேர்க்கும் நுட்பம் தெரியவில்லை. அதனால் தம் பதிவைத் தாம் மட்டுமே வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு திரட்டிகளுமே புதிய வலைப்பதிவுகளைத் தம் திரட்டிகளில் சேர்க்கும் நுட்பத்தை எளியமுறையில் விளக்கியுள்ளன. என்றாலும் அவற்றை இன்னும் எளிமையாக்கி யுடியுப் போன்ற காணொளி தளங்களின் வழி வழங்கினால் இந்த திரட்டிகளில் வலைப்பதிவர்கள் எளிதில் தம் வலைப்பதிவுகளைச் சேர்க்கமுடியும். தமிழ்மணம் என்ற திரட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவர்களுக்கென பல்வேறு துறைகளில் போட்டிகளை அறிவித்து பரிசளித்துப் பாராட்டி வந்தது. தமிழ்இணையப் பல்கலைக்கழகமும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சங்கமும் இணைந்து கடந்த ஆண்டு வலைப்பதிவர் போட்டிகளை அறிவித்து பரிசளித்துப் பாரட்டின. இதுபோல தொடர்ந்து வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போட்டிகளை அறிவித்து பரிசளித்து வந்தால் புதிய வலைப்பதிவர்கள் உருவாகவும், அவர்கள் தொடர்ந்து எழுதவும் உதவியாக இருக்கும். உத்தமம், தமிழ் இணையப்பல்கலைக்கழகம் போன்ற இணையத்தமிழ் வளர்க்கும் அமைப்புகள் தமிழ் வலைப்பதிவுகளுக்கென ஒரு திரட்டியை உருவாக்கினால் வலைப்பதிவில் ஆக்கபூர்வமான பல தமிழ்க்கட்டுரைகளை உருவாக்கமுடியும்.

வலைப்பதிவுகளின் பதிப்பகம்
       வலைப்பதிவுகளில் பொழுதுபோக்காக எழுதுதல் என்பதையும் கடந்து தமிழை வளர்க்கும்நோக்குடன், பல பதிவர்கள் தம் பதிவுகளை நூலாக்கம் செய்துவருகின்றனர். தமிழ்மணம் என்ற திரட்டி கூட பதிவர் நூல்கள் என்ற பகுதியில் வலைப்பதிவர்தம் நூல்களை அறிமுகம் செய்துவருகின்றது. வலைப்பதிவர்களுக்கென பதிப்பகங்களை உருவாக்கினால். வலைப்பதிவில் எழுதப்படும் கருத்துக்கள் நூல் வடிவம் பெறவும் கணித்தமிழ் மேலும் வளம்பெறவும் வழிவகுப்பதாக அமையும்.  
குறுஞ்செயலிகளில் வலைப்பதிவுகள்
      மக்கள் இன்று, மேசைச் கணினி, மடிகணினிகளில் பயன்படுத்துவதைவிட திறன்பேசிகளிலும், பலகைக் கணினிகளிலும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் குறுஞ்செயலிகளையே அதிகம் பயன்படுத்த விரும்புகிறன்றனர். முகநூல், கட்செவி கூட இன்று பெரிதும் குறுஞ்செயலிகள் வழியாகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அதனால் வலைப்பதிவுகளையும் குறுஞ்செயலிவடிவத்தில் எளிமையாக்கி வழங்குவதால் வலைப்பதிவுகள் காலத்தைவென்று நிலைபேறு பெறமுடியும், மேலும் வலைப்பதிவுகளுக்கான திரட்டிகளையும் குறுஞ்செயலி வடிவத்தில் வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
காலத்துக்கு ஏற்ற வலைப்பதிவு மாற்றங்கள்      
       மாறிவரும் தொழில்நுட்பமாற்றங்களுக்கேற்ப வலைப்பதிவுகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் வலைப்பதிவுகளின் வழியாக இணையத்தில் மேலும் தமிழ் வளர்க்கமுடியும்
1. பல்வேறு சமூகத்தளங்களிலும் பகிர்வதற்கான பொத்தான்களை அமைக்கவேண்டும். அவற்றின் வழியாக வலைப்பதிவில் வெளியிடப்படும் செய்திகள் உடனுக்குடன் பல்வேறு சமூகத்தளங்களிலும், பல்வேறு சமூகத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் வலைப்பதிவுகளிலும் வெளியாகும் வசதியை அளிக்கவேண்டும்.
2. தமிழ் வலைப்பதிவுகளை ஊக்குவிக்கும் விதமாக ஆட்சின் போல விளம்பரங்களை வெளியிடவும் வருமானம் பெறவும் வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும்.
3.  தமிழ் மணம் திரட்டியில் வெளியிடப்படும் தரவரிசையானது அந்தத் திரட்டியில் பதிவு செய்த பதிவுகளை மட்டும் வரிசைப்படுத்துகிறது. மாறாக ப்ளாக்கர், வேர்டுபிரசு என புகழ்பெற்ற வலைப்பதிவுகளில் தமிழில் எழுதப்படும் எல்லா பதிவுகளையும் வரிசைப்படுத்தி தர எண் வெளியிடப்படவேண்டும்.
4. வலைப்பதிவுகளில் எழுதப்படும் கட்டுரைகளை வாசிக்கும் நிலையிலிருந்து கேட்கும் வசதியை ஏற்படுத்தவேண்டும். இதனால் பார்வையாளர்கள் தாம் விரும்பும் வலைப்பதிவுகளை கேட்டுக்கொண்டே தாம் விரும்பும் பிற தளங்களில் உலவமுடியும்.
இவை போன்ற மாற்றங்களானது வலைப்பதிவு சேவையை மேலும் பயனுள்ளவையாக்க உதவியாக இருக்கும்.
நிறைவாக
       நாளொரு தொழில்நுட்பம், பொழுதொரு கண்டுபிடிப்பு என மாறிவரும் சூழலில், வலைப்பதிவுகள் வழி கணித்தமிழ் வளர்ப்பதில் தமிழ் வலைப்பதிவுகள் சிறப்பிடம் பெறுகின்றன. இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரலாறு, அறிவியல் என பல துறைசார்ந்த செய்திகளும் வலைப்பதிவுகளில் எழுத்தாகவும், ஓவியமாகவும், படமாகவும், அசைபடமாகவும், ஒலியாகவும், காணொளியாகவும், மின்னூல் வடிவிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையதளங்களுக்கு இணையாக தேடுபொறிகளில் கிடைக்கின்றன.
      இலவசமாகக் கிடைப்பதும், உருவாக்குதல், பயன்படுத்துதல், வெளியிடுதல் ஆகிய நிலைகளில் எளிமையாக இருப்பதும் வலைப்பதிவின் சிறப்பாகவுள்ளது. மேலும் தேடுதலின்போது இணையதளங்களுக்கு இணையாகக் கிடைப்பதும் தனிச்சிறப்பாகவுள்ளது.
தமிழ் வலைப்பதிவுகளால், தமிழ் விக்கிப்பீடியாவை வளப்படுத்தவும், தமிழ் விக்கிப்பீடியாவால் தமிழ் வலைப்பதிவுகளில் இடம்பெறும் செய்திகளுக்கான நம்பகத்தன்மையை ஏற்டுத்துவதும் காலத்தின் தேவையாக அமைகிறது
சமூகத் தளங்களுடனான பகிரும் வசதி வலைப்பதிவுகளுக்கு இருந்தாலும் இந்த வசதி மேலும் எளிமைப்படுத்தப்படவேண்டும். குழு பதிவிடல், திட்டமிட்டு வெளியிடுதல் போன்ற நுட்பங்களைப் பலரும் அறிந்தால் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடும் வாய்ப்பு ஏற்படும்.
வலைப்பதிவுகளைத் திரட்டிகளில் சேர்க்கும் நுட்பங்களை மேலும் எளிமைப்படுத்தவேண்டும். வலைப்பதிவர்களைக் கவரும் பல்வேறு வசதிகளை மேலும் அறிமுகப்படுத்தவேண்டும். குறுஞ்செயலி வடிவில் திரட்டிகளை உருவாக்கவேண்டும்.
வலைப்பதிவர்களுக்கென பதிப்பகம் உருவாக்கப்பட்டால், வலைப்பதிவுகளில் எழுதப்படும் கட்டுரைகள் நூலாக்கம் பெற்று கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பதிவுகளும் சிறப்பிடம் பெறும்.
சமூகத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு வலைப்பதிவுகளையும் குறுஞ்செயலி வடிவில் கொண்டுவரவேண்டும். வலைப்பதிவுகளை, வாசிப்பதுபோல கேட்கும் வசதியையும் ஏற்படுத்தவேண்டும். வலைப்பதிவர்களுக்கென போட்டிகளும், வலைப்பதிவில் விளம்பரம் வெளியிடுதலும், வருமானம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்துவதும் காலத்தின் தேவையாகவுள்ளது.
இணையத்தில் தமிழை உள்ளீடு செய்ய இன்று பல வழிகள் உண்டு என்றாலும் அவற்றுள் பயன்படுத்த எளிதானதும், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவர வசதியுள்ளதுமான வலைப்பதிவுகள் குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன. அதனால் வலைப்பதிவு நுட்பங்களை அறிவோம் கணினி வழி தமிழை வளர்ப்போம்.

அடிக்குறிப்புகள்சனி, 3 செப்டம்பர், 2016

பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழ்

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், 

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் 

என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் 

கருத்தரங்கத்துக்குக் கட்டுரை வழங்கத் தங்களை அன்புடன் 

அழைக்கிறேன்.