Tuesday, May 12, 2009

கவைமகனார்.சங்க இலக்கியங்கள் பாடப்பட்டது ஒரு காலம் தொகுத்து பதிப்பிக்கப்பட்டது வேறொரு காலம்.
அடி அளவு,பாடல் பொருள் என சங்கப் பாடல்களை திணை,துறை வகுத்து பத்துப்பாட்டு,எட்டுத்தொகை என நம்முன்னோர் வகுத்துள்ளனர்.

அவ்வாறு பாடல்களைத் தொகுத்தபோது பல பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் கிடைக்கவில்லை. அப்போது அப்பாடல்களில் உள்ள சிறந்த தொடர்களையே அப்புலவர்களின் பெயராக இட்டு மகிழ்ந்தனர். அதுபொருத்தமாகவும் இருந்தது.

இன்று அப்பாடல்களைப் பார்க்கும் போது இந்த சிறந்த தொடரை இப்பாடலில் எழுதியதாலேயே இப்புலவர் தம் இயற்பெயர் காலப் போக்கில் மறைந்து போனதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்புலவர்களின் பெயர்களுக்கான காரணங்களை எடுத்தியம்பும் தொடர்கட்டுரை,
தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்(வலைப்பதிவின் உள்ளடக்கத்தில் காண்க)ஆகும்.ஏழு புலவர்களின் பெயர்களை எடுத்தியம்பிய நிலையில் இன்று கவைமகனார் என்னும் புலவருக்கான காரணத்தைக் காண்போம்..

”கொடுந்தாள் முதலைக் கோள்வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி,நீ நின்
நயன் உடைமையின் உவக்கும் யான் அது
கவைமக நஞ்சு உண்டாங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே

(குறுந்தொகை- 324)

செறிப்பு அறிவுறுக்கப்பட்டு இரா வாரா வரைவல் என்றார்க்கு தோழி அது மறைத்து வரைவு கடாயது.


( இற்செறிப்பு- தலைவியின் களவினை (காதல்)அறிந்த பெற்றோர் வெளியே செல்ல விடாது வீட்டிலேயே இருக்கச் செய்தல்.
இரவுக்குறி- தலைவன் ஊருக்குத் தெரியாது தோழியின் துணையுடன் இரவுப் பொழுதில் தலைவியைச் சந்தித்து காதலித்தல்.
வரைவு- திருமணம்.
வரைவு கடாதல் – திருமணம் செய்து கொள்ளுமாறு தூண்டுதல்.
கவைமக – ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.)

இரவில் கொடிய முதலைகள் உள்ள நீர் நிலையைக் கடந்து தலைவன், தலைவி மீது உள்ள விருப்பத்தால் அவளைக் காண வருகிறான்.தலைவியும் அவன் வழித் துயரை அறியாது உவந்து ஏற்றுக் கொள்கிறாள்.அதனால் யான், மக வடிவு இல்லாது ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுள் ஒரு குழந்தை நஞ்சுண்டவழி அந்நஞ்சு மற்றொரு குழந்தைக்கும் பரவிக் கொல்லும் எனத் தாய் அஞ்சுவது போல என் மனத்தினுள்ளே நீ இரவில் வருதலை அஞ்சுவேன் என்கிறாள் தோழி.

தோழி, தலைவி இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றும் தலைவிக்கு ஏற்படும் துயர் தனக்கும் தான் எனத் தோழி எண்ணுதலை இப்பாடல் எடுத்தியம்புகிறது.

தலைவனிடம் தோழி,நீ வரும் வழியின் துன்பங்களை நானறிவேன். தலைவி அறியாள் அதனால் நீ இரவுக் குறி வந்த அவளைப் பார்த்து மகிழ்ந்தது போதும். அவளை வரைவு செய்து கொள் என வலியுறுத்துகிறாள்.

இப்பாடலில் தோழி தலைவி மீது கொண்ட பற்றுதலை “கவைமக நஞ்சுண்டாங்கு” என்ற தொடர் குறிப்பிடுகிறது.இத் தொடரின் சிறப்புக் கருதி இப்பாடலைப்பாடிய புலவரின் பெயர் “கவைமகன்” என்றானது.


இப்பாடலின் வழி சங்கப்புலவரின் பெயருக்கான காரணத்தை அறிவதோடு சங்க கால வாழ்வியலையும் அறியமுடிகிறது.

இற்செறித்தல்,
வரைவு கடாதல்,
என இரு அகத்துறைகளை இப்பாடல் சுட்டுகிறது.இது போல அகத்துறை புறத்துறை என அகவாழ்வியலையும்,புறவாழ்வியலையும் சங்க இலக்கியங்கள் சுட்டியுள்ளன.

சுட்டி ஒருவர் பெயர் கூறாத மரபினையும் இப்பாடலில் காணமுடிகிறது.காலத்தை வென்று செம்மொழியாகத் தமிழ்மொழி திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணமாகவுள்ளது.

24 comments:

  1. நல்ல கட்டுரை...

    ரசித்தேன்...

    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வேத்தியன்.

    ReplyDelete
  3. original tamil post ithu than

    great sir neenga

    ReplyDelete
  4. கருத்துரைக்கு நன்றி சக்தி...

    ReplyDelete
  5. நெல்லை தமிழ் கேட்டது அருமையான கேள்வி

    இன்றைய நிலையில் களவுன்னா அது திருடுதலைக் குறிப்பதாகவுள்ளது.

    ஆனா சங்க காலத்தில் களவுனா காதலிக்கிறத தான் குறித்தது.

    திருமணத்திற்கு முன்பு ஊராருக்கும்,பெற்றோருக்கும் தெரியாமல் தலைமக்கள் காதலித்தனர்....

    இரவிலும்,பகலிலும் இந்த சந்திப்பு நிகழந்தது.
    இரவு சந்திப்பை இரவுக்குறி என்றும்
    பகல் சந்திப்பை பகற்குறி என்றும் அழைத்தனர்..

    இந்த களவுக்கும் கால அளவு உண்டு.நீண்ட காலம் காதலிக்க முடியாது.குறிப்பிட்ட காலத்தில் காதல் வாழ்வு திருமண வாழ்வாக மாறவேண்டும்.

    அதாவது களவு- கற்பாக மாறவேண்டும்

    அதைத் தான் களவும் கற்று மற

    என்றனர் நம் முன்னோர்..

    “காதலி காலம் தாழ்த்தாது திருமணம் செய்து கொள் “
    இது தான் களவும் கற்று மற என்பதற்கான உண்மையான விளக்கம் .

    காலம் செல்லச் செல்ல இந்தப்பொருள் மயங்கி.
    இன்று திருடு ...
    அந்தப்பழக்கத்தை மறந்துவிடு..
    என்று பொருள் வழங்குகின்றனர்....

    ReplyDelete
  6. குணா அவர்களே
    இன்றைய பதிவு மாதிரி உங்ககிட்ட நான் ரொம்ப நாள் எதிர்பார்த்தேன் ஒரு பாடலைச் சொல்லி அதற்கு பொருளை விளக்கும் போது அது அப்படியே மனதில் பதிந்துவிடுகிறது...இதில் பல புது தமிழ் வார்த்தைகள் அறிந்தேன்...மற்றும் ஒரு கவிதை அதன் பொருள் கவிஞருக்கு அப்பெயர் வரக்காரணம்...என 5வரி பாடலில் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது...இதனால் தானோ யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழியை போல் இனிதாவது எங்கும் காணோம்....கவி சுவை குணா...

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள பதிவு குணா

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இற்செறிப்பு,இரவுக்குறி புதிய கலைச் சொற்களை கற்றறிந்தேன்.

    உங்களுடைய முயற்சி பாராட்டுகளுக்குரியது.

    உங்க‌ளைப் போன்ற‌ இல‌க்கிய‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் வ‌லைத‌ள‌த்துக்கு வ‌ருவ‌து வ‌லைப்பூக்க‌ளின்
    எழுச்சி மிகு கால‌ம்.

    ஓங்குக உங்கள் பணி !!! முனைவரே !!!

    ReplyDelete
  9. தமிழரசி,அ.மு.செய்யது,அபுஅஃப்ஸர்
    ஆகியோரின் வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  10. அவ்வாறு பாடல்களைத் தொகுத்தபோது பல பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர் கிடைக்கவில்லை. அப்போது அப்பாடல்களில் உள்ள சிறந்த தொடர்களையே அப்புலவர்களின் பெயராக இட்டு மகிழ்ந்தனர். அதுபொருத்தமாகவும் இருந்தது.
    ///
    மிகச்சரிதான்.

    ReplyDelete
  11. ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுள் ஒரு குழந்தை நஞ்சுண்டவழி அந்நஞ்சு மற்றொரு குழந்தைக்கும் பரவிக் கொல்லும் எனத் தாய் அஞ்சுவது போல என் மனத்தினுள்ளே நீ இரவில் வருதலை அஞ்சுவேன் என்கிறாள் தோழி.///

    பொறுத்தமான படத்தையும் போட்டுள்ளீர்கள்!!!

    ReplyDelete
  12. அருமை..அருமை..உங்கள் எழுத்துக்கள் தமிழ் அமுதை அள்ளித் தருகிறது..படிக்கையில் வார்த்தையால் விவரிக்க முடியாத நிறைவு..தயவு செய்து தொடருங்கள்..! நன்றி..

    ReplyDelete
  13. மிக்க நன்றி முக்கோணம் அவர்களே.

    ReplyDelete
  14. குணா அவர்களே....
    உங்கள் பதிவு ஐந்திணைப் பெயரி முலம்...பதிவி விகடனில் வெளிவந்துள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் குணா...மேலும் தமிழ் செழிக்க செய்யுங்கள்....

    ReplyDelete
  15. அருமையாய் எழுதுகிறீர்கள் குணசீலன். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  16. நன்றி தமிழ்,பிரேம்குமார்..

    ReplyDelete
  17. வருங்கால சமுதாயத்திற்கு தமிழின் பெருமையை, ஆழத்தை உணர வைக்க இது போன்ற பதிவுகள் அவசியம் தேவை.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. விகடனில் வந்துள்ள உங்கள் பதிவுக்காக,
    என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
    உங்களை போல் ஒரு சில தமிழர்களின் பேனாவில் மட்டுமே தமிழ் உயிர் வாழ்கிறது!!

    ReplyDelete
  19. தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி கலை..

    ReplyDelete
  20. ஒரு சங்க இலக்கியப் பாடலை அடியடியாக
    அழகாக விளக்கிய விதம் வெகு அழகு...

    மிகவும் பயனுள்ள பதிவு வளர்க உங்கள் தமிழ் தொண்டு...

    ReplyDelete
  21. சங்க இலக்கியங்கள் பாடப்பெற்றதற்கும் தொகுக்கப்பட்டதற்கும் இடையில் எவ்வளவு காலம் சென்றிருக்கும் என்று நினைக்கிறீர்கள். சில பத்தாண்டுகள்? ஓரிரு நூற்றாண்டுகள்?

    கவைமகனார் என்ற பெயர் எப்படி அமைந்தது என்ற விளக்கம் நன்று. பாடல் தோழியின் வாய்மொழியாக இருக்க அதனைப் பாடலாக யாத்தவர் ஆண்புலவர் என்று நினைக்கிறேன். சரி தானா?

    களவும் கற்று மற என்ற பழமொழிக்கு அருமையான விளக்கம் சொன்னீர்கள். படித்து மகிழ்ந்தேன்.

    களவு, கற்பு என்பவற்றிற்கு முன்பிருந்த பொருளையும் இப்போதிருக்கும் பொருளையும் அதனால் விளையும் குழப்பங்களையும் பற்றி ஒரு இடுகை எழுதுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete