Tuesday, December 15, 2009

வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.
நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது.

உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை…………

செயற்கையாகவே வாழப்பழகிவிட்ட நமக்கு……….

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத்தமிழர் வாழ்வியல் வியப்பளிப்பதாகவுள்ளது.

கடற்கரை ஓரம்!
நாவல் மரத்திலிருந்து நாவல் கனி வீழ்ந்து கிடக்கிறது,
கரிய கனியாயினும் இனிய கனி ஆதலால் அதனை வண்டு மொய்த்திருக்கிறது.
வண்டும் கருமை நிறம் கொண்டது ஆதலால், கனியைக் உண்ண வந்த நண்டு வண்டைப் பிடித்தது.
நண்டிடமிருந்து தப்பிக்க. வண்டு ஒலி எழுப்பியது. வண்டின் ஒலி இனிய யாழோசை போல இருக்கிறது.

அவ்வேளையில் இரைதேடி வந்தது நாரை.

நாரைக்கு அஞ்சிய நண்டு வண்டை விட்டு நீங்கிச் சென்றது.

இவ்வழகிய காட்சி அகவாழ்வியலை இயம்ப துணைநிற்கும் சங்கப்பாடலாக இதோ...


“பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
5 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
10 ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர்
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே!


நற்றிணை 35. (நெய்தல்)
அம்மூவனார்.

கூற்று - மண மனைப் பிற்றைஞான்று புக்க “தோழி நன்கு ஆற்றுவி்த்தாய்“ என்ற தலைமகற்கு சொல்லியது.

காதலுக்குத் துணைநின்ற தோழியிடம் தலைவன் பிரிவின்போது நீ தலைவியை நன்கு ஆற்வி்த்தாய் என்றான். அதற்கு தோழி தலைவியின் பொருட்டு நான் தாய்க்கு அஞ்சினேன். அவளின் பிரிவாற்றைமை நீங்க நீயே விரைந்து வந்து காத்தாய் என்றாள். மேலும் தலைவி உன் சிறு பிரிவையும் தாங்கமாட்டாள். அதனால் அவளை நீங்காது இருத்தல் வேண்டும் என்கிறாள்.

பாடலின் விளக்கம் உரையாடலாக…….

தலைவி
- வா தோழி! வா! உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களானது..

தோழி
- ஆம் நீண்ட நாட்களானது.. எப்படியிருக்கிறாய்..?

தலைவி
- எனக்கென்ன நான் நன்றாக இருக்கிறேன்.

தலைவன்
- வா தோழி நன்றாக இருக்கிறாயா..?

தோழி
- நன்றாக இருக்கிறேன். தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்..?

தலைவன்
- நான் நன்றாக இருக்கிறேன்..

தோழி
- திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது..?

தலைவன்
- மிகவும் நன்றாக இருக்கிறது. மகிழ்வாக உள்ளோம். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நீயல்லவா..

தோழி
- நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன்.

தலைவன்
- நாங்கள் காதலித்த போது எனது பிரிவில் வாடியிருந்த தலைவியின் வருத்தத்தைப் போக்கி நன்கு ஆற்றுவித்தாய் இந்த உதவியை மறக்க முடியுமா..?

தோழி
- நீயே விரைந்து வந்து காத்தாய் அவளின் பிரிவின் வருத்தத்தைப் போக்கினாய். இதில் எனது பங்கு என்ன இருக்கிறது..

தலைவன்
- உனது பேச்சில் உனது பெருந்தன்மை வெளிப்படுகிறது.

தோழி
- பொங்கி எழும் கடல் அலை மோதிய மணல் அடுத்த கடற்கறை. அங்கு நாவல் மரத்திலிருந்து கனிகள் விழுந்திருக்கும். அக்கனிகளை மொய்தவாறு கரிய வண்டினங்கள் இருக்கும். கரிய வண்டுக்கும், கரிய நாவற்கனிக்கும் எவ்வித மாறுபாடும் இல்லாது இருக்கும். நாவற்கனியைக் கொள்ள வந்த நண்டு கரிய வண்டை பழம் என்று எண்ணிக் கைக்கொள்ளும். வண்டினங்களோ நண்டிடமிருந்து தப்பிக்க யாழ்போல ஒலி எழுப்பும். அப்போது இரைதேடி அங்கு வந்த நாரையைக் கண்டு நண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கியது. இத்தகு கடல்துறை விளங்கும் மாந்தை நகரம் போன்றது இவளின் நலம்.

நீ களவுக்காலத்தில் சிறிது நீ்ங்கினாலும் இவள் தாங்காது பசலை கொள்வாள்.

மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..

தலைவன்
- நான் இவளை நீங்குவேனா…!!

தோழி
- மகிழ்ச்சி!


உள்ளுறைப் பொருள் -

நாவற்கனி - தலைவி.
வண்டு - தோழி.
நண்டு - பெற்றோர்.
நாரை - தலைவன்.


கனியை வண்டு மொய்த்தது போலத் தலைவியைத் தோழி சூழ்ந்திருந்தாள்.
நண்டாகப் பெற்றோர் காதலைத் தடுக்க முயல நாரையாகத் தலைவன் வந்து தலைவியின் இற்செறிப்புத் துயர் நீக்கித் வரைவு (திருமணம்) மேற்கொண்டான்.


சங்கப் புலவர்கள் சங்ககால வாழ்வியலை எடுத்தியம்ப இயற்கையைத் துணையாகக் கொண்டார்களா..?

இயற்கையை எடுத்தியம்ப சங்ககால வாழ்வியலைத் துணையாகக் கொண்டார்களா..?

என வியக்கும் வகையில் சங்கஇலக்கியங்களில் இயற்கை வாழ்விலோடு கலந்திருக்கிறது.

29 comments:

 1. மேலும் ஒரு அருமையான பதிவு தோழிகள் இல்லாத காதலே இல்லை போலும்.....

  ReplyDelete
 2. //மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..

  //

  நல்லதொரு விளக்கம் நண்பரே..மதுவிற்கு அடிமையாதல்..ஆனால் இங்கு காதல் வயப்படுதல்...

  ReplyDelete
 3. அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. தமிழரசி said...

  மேலும் ஒரு அருமையான பதிவு தோழிகள் இல்லாத காதலே இல்லை போலும்...

  ஆம் தமிழ்...

  ReplyDelete
 5. புலவன் புலிகேசி said...

  //மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..

  //

  நல்லதொரு விளக்கம் நண்பரே..மதுவிற்கு அடிமையாதல்..ஆனால் இங்கு காதல் வயப்படுதல்.


  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 6. Tamilparks said...

  அருமை வாழ்த்துக்கள்..

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 7. என்ன அருமையாக விளக்கி உள்ளீர்கள். அருமை.

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் நண்பா

  இனி அடிக்கடி வந்து நிறைய கற்றுக்கொள்கிறேன் உங்களிடம்

  விஜய்

  ReplyDelete
 9. அருமையான விளக்கத்துக்கு நன்றி.

  ReplyDelete
 10. எங்கயோ இருக்க வேண்டிய ஆளு நம்ம குணா..பாவம்,இங்க வந்து மாட்டிக்கிட்டார் :)
  என் கவிதையை படிச்சும் நீங்க இந்த மாதிரி அழகா எழுதறீங்க என்றால் நீங்க ரொம்ப ஸ்ட்ராங் நண்பா.

  ReplyDelete
 11. "தூது சொல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி..." அந்த பாட்டுதான் ஞாபகம் வருது தலைவரே!!

  ReplyDelete
 12. கவிதை(கள்) said...

  வாழ்த்துக்கள் நண்பா

  இனி அடிக்கடி வந்து நிறைய கற்றுக்கொள்கிறேன் உங்களிடம்

  விஜய்..
  மகிழ்ச்சி நண்பரே...

  ReplyDelete
 13. வானம்பாடிகள் said...

  அருமையான விளக்கத்துக்கு நன்றி.

  நன்றி ஐயா..

  ReplyDelete
 14. கலையரசன் said...

  "தூது சொல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி..." அந்த பாட்டுதான் ஞாபகம் வருது தலைவரே!!


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கலை..

  ReplyDelete
 15. பூங்குன்றன்.வே said...

  எங்கயோ இருக்க வேண்டிய ஆளு நம்ம குணா..பாவம்,இங்க வந்து மாட்டிக்கிட்டார் :)
  என் கவிதையை படிச்சும் நீங்க இந்த மாதிரி அழகா எழுதறீங்க என்றால் நீங்க ரொம்ப ஸ்ட்ராங் நண்பா.  உங்களுக்கென்ன நண்பரே..
  இக்காலத்துக்கு ஏற்றது போல எழுதுகிறீர்கள்...

  நான் எழுதுவது 2500 ஆண்டுகால பழமையான இலக்கியம்..

  அதனை இக்கால வழக்குத்தமிழில் வழங்க முயற்சிக்கிறேன் அவளவுதான்.

  வருகைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 16. மிக அருமையான விளக்கம். உங்களின் சீரிய தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. நன்றாக இருக்கின்றது குணசீலன்.தங்கள் தமிழ்தொண்டுக்கு வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 18. கருத்துரைக்கு நன்றி நண்பா...

  ReplyDelete
 19. "சங்க இலக்கியங்களில் இயற்கை வாழ்வியலோடு கலந்திருப்பது"

  மிகவும் அழகு.அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

  ReplyDelete
 20. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதேவி..

  ReplyDelete
 21. சங்க இலக்கியங்களில் சொல்லாது எதுவுமே இல்லை எனலாம்.. மிக்க அழகு

  ReplyDelete
 22. பாடலின் உள்ளுறைப் பொருளை நன்கு விளக்கினீர்கள் நண்பரே. அது புரியாமல் பாடலே புரியாதது போல் இருந்தது. அதனைப் படித்த பின்னரே பாடல் விளங்கியது. நன்றி.

  ReplyDelete
 23. அருமையான செய்யுள் விளக்கம். தொடரட்டம் உங்கள் தமிழ்ப்பணி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. " உழவன் " " Uzhavan " said...

  சங்க இலக்கியங்களில் சொல்லாது எதுவுமே இல்லை எனலாம்.. மிக்க அழகு


  ஆம் நண்பரே..

  ReplyDelete
 25. Blogger குமரன் (Kumaran) said...

  பாடலின் உள்ளுறைப் பொருளை நன்கு விளக்கினீர்கள் நண்பரே. அது புரியாமல் பாடலே புரியாதது போல் இருந்தது. அதனைப் படித்த பின்னரே பாடல் விளங்கியது. நன்றி.


  நன்றி நண்பரே..

  ReplyDelete
 26. nanrasitha said...

  அருமையான செய்யுள் விளக்கம். தொடரட்டம் உங்கள் தமிழ்ப்பணி வாழ்த்துக்கள்.


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

  ReplyDelete