Thursday, February 4, 2010

பழந்தமிழரின் இசைக்கருவிகள்(படம்)ஓரறிவுயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரைக்கும் இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இத்தகைய இசைக்கு அடிப்படையனவை இசை்ககருவிகளாகும். பண்டைத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்று வெவ்வேறு வடிவங்களோடும், பெயர்களோடும் நம் பயன்பாட்டில் உள்ளன.

பண்டைத்தமிழர் இசைக்கருவிகளை,

தோல் கருவி
நரம்புக்கருவி
துளைக்கருவி
கஞ்சக்கருவி

என நான்கு வகையாகப் பகுத்தனர். இக்கருவிகளுள் எது முதலில் தோன்றியது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

தோல் கருவிதான் முதலில் தோன்றியது என்போர்,
வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல் வெயிலில் காய்ந்த போது ஏதோவொரு கல்பட்டாலும் ஒலி எழுப்பும் தன்மையுடன் அத்தோல் இருக்கும். அதை அறிந்த பழந்தமிழன் அந்தத் தோலைக் கல்லில் போர்த்தி இருகக் கட்டி ஒலி எழுப்பினான். இதுவே தோல்கருவியின் தோற்ற வரலாறு என்கின்றனர்.

நரம்புக்கருவி தான் முதலில் தோன்றியது என்பவர்கள்,

பழந்தமிழர் போருக்காகவோ, வேட்டையாடவோ வில்லைப் பயன்படுத்தினர். வில்லை எய்தபோது நாணிலிருந்து வரும் ஒலியே யாழ் தோன்றக்காரணமானது. யாழில் பழமையானது வில்யாழ், சீறியாழ், பேரியாழ், மகர யாழ், செங்கோட்டியாழ் எனப் பழ நரம்பாலான இசைக்கருவிகள் வளர்ச்சி பெற்றன. இன்று பயன்பாட்டிலிருக்கும் வயலின், கிட்டார் போன்ற நரம்பிசைக் கருவிகளுக்கு யாழே தாயாகும்.

துளைக்கருவி தான் முதலில் தோன்றியது என்பவர்கள்,

மூங்கிலில் வண்டு செய்த துளையில் காற்று வந்து முத்தமிட்ட போது மூங்கிலின் சிணுங்களே மண்ணில் தோன்றிய முதல் இசை என்கின்றனர் சிலர்.

கஞ்சக்கருவி இரும்பு, செம்பு, பொன் ஆகியவற்றால் செய்யப்பட்டது. சேர்ந்திசைக்கருவியாக இக்கருவி பயன்பட்டது.

வாழ்வியலில் இசைக்கருவிகள்.

பழந்தமிழரின் வாழ்வியலோடு இசைக்கருவிகள் இரண்டரக் கலந்திருந்தன.

பண் இசைப்பதால் பாணர் என்று பெயர் பெற்ற கலைஞர்கள் தம்மோடு எப்போதும் யாழ் வைத்திருந்தனர்.
சீறியாழை வைத்திருப்பவர் சிறுபாணர் என்றும் பேரியாழை வைத்திருப்பவர் பெரும்பாணர் என்று பெயர் பெற்றனர்.

ஆயர்கள் ஆநிரைகளை மேய்ப்பதற்கு குழல் இசைத்தனர்.

சங்க கால வாழ்வியலில் அதிகம் பயப்பட்ட இசைக்கருவிகளில் தோல்கருவிகளுள் குறிப்பிடத்தக்கது பறை, முரசு, முழவு ஆகியன ஆகும்.

ஆற்றுநீர் அணை உடைந்து வந்தால்,
யானை மதம்பிடித்து ஓடி வந்தால்,
மக்களுக்கு அறிவிப்பு செய்ய தோல்க்கருவியை இசைத்தனர்.
உழவுத் தொழில்.
குரவை, துணங்கை, வெறியாட்டு ஆகிய கூத்து நிகழ்விலும் தோல்க்கருவி முதன்மை பெற்றது.

போரில் வெற்றியின் அடிப்படையாக முரசொலி இருந்தது. எந்த நாட்டு மன்னன் வெற்றி பெறுகிறான் என்பதை முரசொலியை வைத்தே அறிந்துகொள்ள முடியும். ஒரு மன்னன் வெற்றி பெற்றால் முதலில் செய்வது தோற்ற மன்னனின் முரசின் கண்ணைக் கிழிப்பது தான். அரசனுக்கு அளிக்கும் மதிப்பை முரசுக்கும் முரசுகட்டிலுக்கும் அக்கால மக்கள் அளித்தனர்..

வழி தவறியவர்களுக்கு வழிகாட்டும் இசை.

அன்று பல சூழல்களின் காடுகளைக் கடந்து செல்லும் நிலையிருந்தது. அப்போது வழிமயக்கம் ஏற்பட்டு எப்படிச் செல்வது என்ற வழிச்செல்வோர் அஞ்சும் போது, மேட்டுப்பகுதிகளில் அனைவரும் கூடித் தம் இசைக்கருவிகளால் இசைத்தனர். அவ்விசை கேட்டுக் கானக்காவலர்கள் ஓடோடி வந்து முதலில் அவர்களுக்குப் பசி தீர காய் கனிகளை அளிப்பர். பின் அவர்கள் வழிமயக்கம் தீர உதவுவர்.

பழங்கால இன்னிசைக் கச்சேரி.

பல இசைக்கருகளையும் சேர்ந்து இசைக்கும் பெரிய இசைநிகழ்ச்சிகள் பலவற்றையும் அன்றைய தமிழன் கேட்டு மகிழ்ந்திருக்கிறான்..

இன்னியம் ( இனிய இசை ஒலி)
பல்லியம் ( பல இசைக்கருவி)
அந்தரப்பல்லியம் (வானில் இசைக்கும் ஒலி)


ஆகிய சொற்கள் இதற்குச் சான்றுகளாகின்றன.

இசையால் பெயர் பெற்ற தமிழன்.

பாணர் ( பண் இசைப்பதால்)
சிறுபாணர் ( சீறியாழை இசைப்பவர்)
பெரும்பாணர் ( பேரியாழை இசைப்பவர்
பறையர் ( பறை இசைப்பவர்)
துடியர் ( துடி இசைப்பவர்)
கடம்பர் (கடம் இசைப்பவர்)
இயவர் ( இசைப்பவர்
கூத்தர் ( கூத்தாடுவதால்)
வயிரியர் ( வயிர் என்னும் கருவியை இசைப்பவர்)

கலைஞர்கள் கருவிகளைக்கட்டித் தம் தோளில் சுமந்து கொண்டு வள்ளலை நாடிச் செல்வதைப் பல சங்கப்ப பாடல்கள் சுட்டுகின்றன.
சான்றாக மலைபடுகடாம் என்னும் பத்தப்பாட்டு நூலில் இடம் பெற்றுள்ள குறிப்பு,

விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு, 5
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் து¡ம் பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் து¡ம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி, 10
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,

(மலைபடுகடாம் -2-11)

இப்பாடலில் இவ்விசைக்கருகளின் இசையை அழகாகக் குறிப்பிட்டுள்ளார் புலவர்.

இவ்வாறு பழந்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்றைய இசைக்கருகளுக்கு அடிப்படையாகும். பழந்தமிழர் வகுத்த பண்களே இன்றைய இராகங்களுக்கு முன்னோடி.

இன்றை இசைக்கருவிகளுக்கு அடிப்படை மின்சாரம்.
மின்சாரம் இல்லாவிட்டால் இந்தக் கருவிகள் செத்துப் போகும்.

பழந்தமிழர் இசைக்கருவிகளின் அடிப்படை இயற்கை.

இயற்கையப் புறந்தள்ளி மனிதனால் வாழமுடியாது!
இயற்கைக்கு இணையான இசையை எந்த ஒரு இசையமைப்பாளனாளும் உருவாக்க முடியாது!
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் பழந்தழிழர்தம் இசைக்கருவிகளும் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையே.
அதனால் தான் சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது இவ்விசைக்கருவிகளின் ஒலிகளைக் கேட்டுணர முடிகிறது.

பழந்தமிழரின் அனுபவங்களும், அவர்கள் விட்டுச்சென்ற பழைய கருவிகளுமே நமது இன்றைய இசைக்கு வாழ்வுக்கான அடிப்படை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

25 comments:

 1. பழந்தமிழர் இசைக்கருவிகளின் அடிப்படை இயற்கை.

  இயற்கையப் புறந்தள்ளி மனிதனால் வாழமுடியாது!

  நல்ல விளக்கம்

  ReplyDelete
 2. இசைக்கருவிகளைப்பற்றி இவ்வளவு அறிய தகவல்களை தொகுத்தளித்துள்ளீர்கள்... நன்றி... பலத்தகவல்கள் இதுவரை எனக்கும் தெரிந்ததில்லை. சில பழைய இசைக்கருவிகளை பார்த்திருக்கிறேன்...ஆயினும் வரலாறு அறிந்ததில்லை... இப்போது அறிகிறேன்.

  நன்றி...

  ReplyDelete
 3. புதிய தகவல்கள் (எனக்கு), மிக்க நன்றி.

  //இயற்கைக்கு இணையான இசையை எந்த ஒரு இசையமைப்பாளனாளும் உருவாக்க முடியாது!//

  இது மறுக்க முடியாத உண்மை.

  ReplyDelete
 4. அவசியமான பதிவு. அருமையான பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 5. கவிக்கிழவன் said...

  பழந்தமிழர் இசைக்கருவிகளின் அடிப்படை இயற்கை.

  இயற்கையப் புறந்தள்ளி மனிதனால் வாழமுடியாது!

  நல்ல விளக்கம்.

  நன்றி கவிக்கிழவன்.

  ReplyDelete
 6. Blogger க.பாலாசி said...

  இசைக்கருவிகளைப்பற்றி இவ்வளவு அறிய தகவல்களை தொகுத்தளித்துள்ளீர்கள்... நன்றி... பலத்தகவல்கள் இதுவரை எனக்கும் தெரிந்ததில்லை. சில பழைய இசைக்கருவிகளை பார்த்திருக்கிறேன்...ஆயினும் வரலாறு அறிந்ததில்லை... இப்போது அறிகிறேன்.

  நன்றி...


  மகிழ்ச்சி பாலாசி.

  ReplyDelete
 7. Blogger சைவகொத்துப்பரோட்டா said...

  புதிய தகவல்கள் (எனக்கு), மிக்க நன்றி.

  //இயற்கைக்கு இணையான இசையை எந்த ஒரு இசையமைப்பாளனாளும் உருவாக்க முடியாது!//

  இது மறுக்க முடியாத உண்மை.


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 8. மாதவராஜ் said...

  அவசியமான பதிவு. அருமையான பகிர்வு. நன்றி.


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 9. நல்ல பதிவு. சில கருவிகள் முன்பே கேள்விப்பட்டாலும் அவை குறித்த விளக்கங்கள் அருமை. மிக்க நன்றி.

  ReplyDelete
 10. பயனான தொகுப்பு ஐயா. மிக்க நன்றி.

  ReplyDelete
 11. நல்ல உபயோகமான பதிவு.. இதுவரை கேள்வி படாத சமாச்சாரங்கள்..
  நன்றி முனைவரே..

  ReplyDelete
 12. அரிய தகவல்கள். சான்றுகளுடன்
  மிக்க நன்றி

  ReplyDelete
 13. சுப.நற்குணன் said...

  பயனான தொகுப்பு ஐயா. மிக்க நன்றி.


  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 14. Sivaji Sankar said...

  நல்ல உபயோகமான பதிவு.. இதுவரை கேள்வி படாத சமாச்சாரங்கள்..
  நன்றி முனைவரே..

  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 15. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  அரிய தகவல்கள். சான்றுகளுடன்
  மிக்க நன்றி


  கருத்துரைக்கு நன்றி யோகன்.

  ReplyDelete
 16. தொடர்ந்து வாசித்துக்கொண்டு வருகின்றேன். தமிழர்களின் தடங்களை தொகுத்துக்கொண்டுருக்கும் எனக்கு உங்கள் எழுத்துக்கள் மிக்க உபயோகமாய் இருக்கிறது. சிறப்பான உங்கள் பங்களிப்பு எதிர்கால தமிழினத்துக்கு நிச்சயம் உதவும். ஆவணப் பொக்கிஷமிது.

  ReplyDelete
 17. மிக்க மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 18. தங்களது பழந்தமிழரின் இசைக்கருவிகள் என்ற கட்டுரையை எனது நண்பரின் தளமான 'தமிழ்ச்சிகரம்'(www.tamilsigaram.com) தளத்தின் 'சாளரம்'(http://tamilsigaram.com/Linkpages/window/disp.php?MessageId=7349) பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது மேலான படைப்புக்களை இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கவும். இணையதளத்திற்கு ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி - admin@tamilsigaram.com
  tamilsigaram@yahoo.com

  ReplyDelete
 19. நல்ல உபயோகமான பதிவு.. இதுவரை தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி நண்பரே..
  நன்றி முனைவரே..

  ReplyDelete
 20. மிக்க மகிழ்ச்சி நண்பரே..

  February 5, 2010 2:01 AM
  Delete
  Blogger சே.குமார் said...

  தங்களது பழந்தமிழரின் இசைக்கருவிகள் என்ற கட்டுரையை எனது நண்பரின் தளமான 'தமிழ்ச்சிகரம்'(www.tamilsigaram.com) தளத்தின் 'சாளரம்'(http://tamilsigaram.com/Linkpages/window/disp.php?MessageId=7349) பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது மேலான படைப்புக்களை இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கவும். இணையதளத்திற்கு ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி - admin@tamilsigaram.com
  tamilsigaram@yahoo.com

  நன்றி குமார்.

  ReplyDelete
 21. திவ்யாஹரி said...

  நல்ல உபயோகமான பதிவு.. இதுவரை தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி நண்பரே..
  நன்றி முனைவரே..

  நன்றி ஹரி.

  ReplyDelete
 22. Nandri nanbarae en kelvigalukku vidai kidaithadhu

  ReplyDelete