Friday, February 12, 2010

நீரின்றி அமையா யாக்கை.மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா? என்று இங்கு இருந்துகொண்டே சிந்தி்த்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா? என்பதைத் தான்.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. என்றும்.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

என்பதை,

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
என்றும் உரைப்பார் வள்ளுவர்.

இக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல்க் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.

இதே சிந்தனையைப் புறநானூற்றுப் பாடலும் முன்வைக்கிறது.


நீரின்றி அமையாத உடல்,

உடல் உணவால் அமைவது!

உணவைவே முதன்மையாகவும் உடையது!

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்!

எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்!

நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப்படைத்தவராவர்
.


என்ற கருத்தை இப்பாடலில் காண முடிகிறது. இந்த சிந்தனை பழங்காலத் தமிழரின்,

நிலவியல்,
உடல்கூறியல்,
வானியல், குறித்த அறிவியல் அறிவை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

நீரின்றி - நிலமில்லை!
நிலமின்றி - உடலில்லை!

நிலம் - உடல் இரண்டுக்குமே அடிப்படைத் தேவை நீர்!

இந்த நீரை நிலத்துடன் சேர்க்கும் போது உணவு கிடைக்கிறது!

உணவே மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் தலையானதாகவுள்ளது.


மன்னனுக்கு நல்லறம் சொல்லும் புலவர் சொல்கிறார்..

மன்னனே..
பல புகழையும் கொண்டவன் நீ..
உனது புகழ் நீங்காததாக இருக்க வேண்டுமானால் நிறைய நீர் நிலைகளை உருவாக்கு.
நீ உருவாக்கும் நீர் நிலைகள் வெறும் நீர்நிலைகள் அல்ல!
நிலத்தோடு நீரைச் சேர்ப்பது என்பது உடலோடு உயிரை சேர்ப்பதாகும்.. என்றுரைக்கிறார். இதனையே,


முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

புறநானூறு - 18. நீரும் நிலனும்!
பாடியவர்; குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
என்ற பாடல் விளக்குகிறது.

இதன் பொருள்...

முழங்கும் கடல் முழுவதும் வளைந்த பரந்தகன்ற உலகத்தைத் தம் முயற்சியால் கொண்டு, தம்புகழை உலகில் நிலைக்கச் செய்து தாமே ஆண்ட வலியோர் மரபில் வந்தவனே!

ஒன்றைப் பத்து மடங்குகளாக அடுக்கிய கோடியைக் கடையெண்ணாகக் கொண்டு உன் வாழ்நாள் அமையட்டும்.
நீரில் படியுமாறு தாழ்ந்த குறுகிய காஞ்சி மரத்தின் மலர்களைக் கவ்வும் வாளை இன மீன்களையும், நிறம் பொருந்திய கெடிற்று மீன்களையும் கொண்டது ஆழமான அகழி!

அதனுடன் வானம் அஞ்சுமாறு உயர்ந்த சீரிய நெடிய மதிலையும் கொண்ட வளமுடைய பழைய ஊரினைக் கொண்டு விளங்கும் வலிமையான அரசனே!

நீ செல்கின்ற உலகத்தில் நுகரத்தக்க செல்வத்தை வேண்டினாலும் உலகை ஆளும் அரசர் பலருடைய தோள் சிறந்த புகழை இவ்வுலகில் நிலை நிறுத்த விரும்பினாலும் அவ்விருப்பங்களுக்குத் தக்க செயல் ஒன்றனைக் கூறுவேன் இனி பெருமையுடையவனே கேட்பாயாக,

வெல்லும் போருடைய செழிய!

நீரின்றி அமையாத உடல்,
உணவால் அமைவது!

உணவைவே முதன்மையாகவும் உடையது!

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்!

எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்!

நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப்படைத்தவராவர்.

விதைகளை விதைத்து மழையை நோக்கும் புல்லிய புன்செய் நிலமகன்ற இடமுடைய நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால் நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைபிடிப்பாய்!

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலை பெருகச் செயதல் வேண்டும். இவ்வாறு நிலத்துடன் நீரைக் கட்டியோர் இவ்வுலகில் நிலைக்குமாறு தன் பெயரை உலகுள்ளவரை நிறுத்திய புகழை அடைவர். அவ்வாறு செய்யாதவர் இவ்வுலகினோடு தம்பெயரைச் சேர்த்த புகழை அடையார்.பாடல் கிளறும் சிந்தனைகள்.


² நீரே நிலத்துக்கும், உடலுக்கும் மதிப்பளிக்கிறது. என்ற அவர்களின் சிந்தனை அவர்களுக்கு இருந்த அறிவியில், உடலியல், நிலவியல் அறிவை அறிவுறுத்துவதாக உள்ளது.

² புகழ் நிலைக்க வேண்டுமானால் நீர் நிலைகளை உருவாக்கு என்று மன்னனுக்கு அறிவுறுத்தும் புலவர் மண் மீதும் மக்கள் மீதும் கொண்ட பற்றுதல் புலனாகிறது.

² இன்றைய அரசு இயற்கை தந்த நீர்நிலைகளைக் கண்டு கொள்ளாததன் விளைவு 1 லிட்டர் குடிநீரின் விலை ரூபாய் 15. பூச்சிக்கொல்லி மருந்தின் ( வெளிநாட்டுக் குளிர்பானங்கள் ) விலை ரூபாய் 30.

² நீரின் தனித்துவத்தையும், அதன் தேவையையும் அறிவியல் அடிப்படையில் நிலவியல் அடிப்படையில் பாண்டியனுக்கு அறிவுறுத்த குடபுலவியனார் என்ற புலவர் இருந்தார்.

² இன்றைய கவிஞர்களுக்கோ இலக்கிய நயத்தோடு…………

டர்ர்ர்ங்குது, சுர்ர்ர்ர்ங்குது என்று பாட்டெழுதவே நேரம் போதவில்லை..

² அரசுக்கோ தம் நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

19 comments:

 1. கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் திருக்குறள், கொஞ்சம் கவிதை என அனைத்து விசயங்களையும் ஒரே பதிவில் முடித்துவிட்டீர்களே, நீங்க பெரிய ஆள்தாம்பா.

  ReplyDelete
 2. உண்மைதான், இப்போது நீர் நிலைகளில்தான் குடி இருப்புகளே கட்டப்படுகிறது.

  ReplyDelete
 3. ² இன்றைய கவிஞர்களுக்கோ இலக்கிய நயத்தோடு…………

  டர்ர்ர்ங்குது, சுர்ர்ர்ர்ங்குது என்று பாட்டெழுதவே நேரம் போதவில்லை.

  ...........சொல்ல வேண்டிய விஷயத்தை, எவ்வளவு நேர்த்தியாய் எழுதி விட்டீர்கள். இந்த பதிவை மிகவும் ரசித்து படித்தேன். சமூக அக்கறையுடன் நன்கு எழுதி உள்ளீர்கள்.

  ReplyDelete
 4. நீர் இப்போதைய தேவையை சுட்டி காடி இருக்கிர்கள்

  ReplyDelete
 5. Blogger சசிகுமார் said...

  கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் திருக்குறள், கொஞ்சம் கவிதை என அனைத்து விசயங்களையும் ஒரே பதிவில் முடித்துவிட்டீர்களே, நீங்க பெரிய ஆள்தாம்பா.

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சசி.

  ReplyDelete
 6. Blogger சைவகொத்துப்பரோட்டா said...

  உண்மைதான், இப்போது நீர் நிலைகளில்தான் குடி இருப்புகளே கட்டப்படுகிறது.


  ஆம் நண்பரே..

  ReplyDelete
 7. Blogger Chitra said...

  ² இன்றைய கவிஞர்களுக்கோ இலக்கிய நயத்தோடு…………

  டர்ர்ர்ங்குது, சுர்ர்ர்ர்ங்குது என்று பாட்டெழுதவே நேரம் போதவில்லை.

  ...........சொல்ல வேண்டிய விஷயத்தை, எவ்வளவு நேர்த்தியாய் எழுதி விட்டீர்கள். இந்த பதிவை மிகவும் ரசித்து படித்தேன். சமூக அக்கறையுடன் நன்கு எழுதி உள்ளீர்கள்.  நன்றி சித்ரா.

  ReplyDelete
 8. ஆஹா.. நம்மிடம் ஒரு time machine மட்டும் இருந்தால், அந்த புற நானூற்று காலத்துக்கே ஓடிப்போய் விடலாம்.
  எவ்வளவு தொலை நோக்குப் பார்வையுடன் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்!!!

  ReplyDelete
 9. //நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப்படைத்தவராவர்.//

  அருமை குணசீலன் நல்ல பகிர்வு

  ReplyDelete
 10. உண்மைதான் நண்பரே 30 ரூ கொடுத்து வாங்கும் தண்ணீரின் தரம் கேவலமாகவே இருக்கிறது..தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்..நிலவில் நீர்த்தேடி என்ன ஆகப் போகிறது? முதலில் பூமியில் தேடுங்கள்

  ReplyDelete
 11. நீரின் அருமை யாருக்கு இப்போது தெரிகின்றது நண்பரே...நல்ல தண்ணீரையும் இப்போது விலைகொடுத்து வாங்கும் நிலமை....நல்ல பகிர்வு. வாழ்க வளமுடன், வேலன்.

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு முனைவரே.

  ReplyDelete
 13. உங்களின் எல்ல பதிவுகளும் மிக பயனுள்ளதாகவும் அழ்ந்த தேடலுடனும் இருக்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

  ReplyDelete
 14. V.A.S.SANGAR said...

  நீர் இப்போதைய தேவையை சுட்டி காடி இருக்கிர்கள்.

  ஆம் நண்பரே.

  ReplyDelete
 15. Blogger ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

  ஆஹா.. நம்மிடம் ஒரு time machine மட்டும் இருந்தால், அந்த புற நானூற்று காலத்துக்கே ஓடிப்போய் விடலாம்.
  எவ்வளவு தொலை நோக்குப் பார்வையுடன் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்!!


  ஆம் நண்பரே..
  சங்கப்பாடல்களைப் படிக்கும் போது அக்காலத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படத்தான் செய்கிறது.

  ReplyDelete
 16. Blogger புலவன் புலிகேசி said...

  உண்மைதான் நண்பரே 30 ரூ கொடுத்து வாங்கும் தண்ணீரின் தரம் கேவலமாகவே இருக்கிறது..தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்..நிலவில் நீர்த்தேடி என்ன ஆகப் போகிறது? முதலில் பூமியில் தேடுங்கள்.//

  ஆம் நண்பா..

  ReplyDelete
 17. Blogger thenammailakshmanan said...

  //நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப்படைத்தவராவர்.//

  அருமை குணசீலன் நல்ல பகிர்வு.

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா.

  ReplyDelete
 18. சிந்திக்க வேண்டிய பதிவு..
  நன்றி பா.

  ReplyDelete