வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கயம் மூழ்கும் மகளிர் கண்கள் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 09

Kurunthogai - 09


தலைமக்களிடையே ஏற்படும் கருத்துவேறுபாடுகளை ஊடல் என்று சொல்வதுண்டு. பரத்தையரிடம் கொண்ட ஈடுபாடு காரணமாகத் தலைவியை நீங்கிய தலைவன் மீண்டும் தலைவியைச் சந்திக்க வருகிறான். தோழியை வாயிலாக அழைத்து வருகிறான். தோழி முன் தன் கோபத்தை வெளிப்படுத்துவது நாகரிகமல்ல என்பதை உணர்ந்த தலைவி தலைவனின் தவறை மறந்து அவனை ஏற்கிறாள். நெய்தல் திணை என்பதால் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் உரிப்பொருளாகிறது. தலைவனின் செயலால் வாடும் தலைவியின் நிலையும். தலைவனின் தவறை மறந்து அவனை ஏற்கும் பண்பும் இப்பாடலில் சுட்டப்படுகிறது.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

போனா வருவீரோ...?

போனா வருவீரோ
வந்தா இருப்பீரோ..
சண்டலா உன் நெனவாவே
நான் சரிகா உருகுறேனே...

என்றொரு பாடல் வீராப்பு என்ற தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடலைக் கேட்டபோது என் நினைவுக்கு வந்த சங்கப்பாடல் இது..

                      லைவன் இரவுநேரத்தில் வந்து தோழியின் துணையோடு தலைவியைச் சந்தித்துக் காதலித்து மகிழ்கிறான். அவன் வரும் வழியோ அச்சத்திற்குரியது. யானை,புலி,பாம்பு,இடி,காட்டாறு என பல இடர்கள். அத்தனையும் கடந்து அவன் வந்து  தலைவியைப் பார்த்துச் செல்கிறான். இவர்களின் சந்திப்பு ஊராருக்குத் தெரிந்தால் அலர் தூற்ற ஆரம்பித்துவிடுவார்களே என்ற அச்சம் வேறு தோழிக்கு இருக்கிறது.

தலைவன் வந்து தலைவியைக் காணாவிட்டாலோ ஆற்றாமையால் தலைவி உடல்மெலிவுற்றுப் போவாள்...

இந்தச் சிக்கலுக்குத் சரியான தீர்வு தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதே. இதனைத் தோழி மிக அழகாகத் தலைவனுக்கு உணர்த்துகிறாள்.

தலைவியைக் காணவந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க அவன் காதுபட இவ்வாறு பேசுகிறாள்..

இரவில் வந்து உன்னைச் சந்தித்துச் செல்கின்ற தலைவனிடம்..

செல்கிறீர்களா?
என்று கேட்க முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். செல்லுக என்றால் அவரின் பிரிவுக்கு நாம் உடன்பட்டோம் என்று பொருளாகிவிடும்.

சென்றால் வருவீரோ?
என்று நாம் அவரிடம் கேட்டால் அவர் வரும்வரை பிரிவாற்றியிருக்க நாம் துணிந்ததாகப் பொருள்படும். இவ்விரண்டினுள் ஒன்றும் தலைவனிடம் கூறஇயலாதவராக நாம் இருக்கிறோம். அவரோ நம் நிலையை உணர்ந்து திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லாதவராக இருக்கிறார் என்கிறாள் தோழி.

(மறைந்திருந்து இதனைக் கேட்கும் தலைவன் விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வருவான்.)
பாடல் இதுதான்.


சேறி ரோவெனச் செப்பலு மாற்றாம்  
    
வருவி ரோவென வினவலும் வினவாம் 
    
யாங்குச்செய் வாங்கொ றோழி பாம்பின் 
    
பையுடை யிருந்தலை துமிக்கு மேற்றொடு 
நடுநா ளென்னார் வந்து 
    
நெடுமென் பணைத்தோ ளடைந்திசி னோரே. 
குறுந்தொகை-268









கருவூர்ச் சேரமான் சாத்தன்
 தோழி , பாம்புகளின் படத்தை உடைய பெரிய தலையை, துணிக்கும், இடியொடு கூடிய, பாதியிரவு, என்று எண்ணாதவராகி, வந்து நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற நின் தோள்களை, அடைந்த தலைவர் பால்,
செல்கின்றீரோ என்று, செப்புதற்கும் வன்மை இல்லே மாயினேம்;
சென்றால் மீண்டும் வருவிரோ என்று, கேட்டலையும் செய்யோம்
எவ்வாறு செய்வேம்!
  


பாடல் வழியே..


  •          தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தோழி படும் பாடு மிக அழகாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
  •          தலைமக்கள் இரவில் சந்தித்துக் காதல் கொள்வார்கள். அதற்கு இரவுக்குறி என்று பெயர் என்ற அக்கால அகவாழ்வியல் சுட்டப்படுகிறது.
  •           இன்றும் நம் அகவாழ்வியலோடு ஒப்புநோக்கத்தக்க அகச்சூழலாகவே இக்காட்சி நம் கண்முன் விரிகிறது.


சனி, 21 ஏப்ரல், 2012

சாலையைக் கடக்கும்போது...


சாலையைக் கடக்கும்போது இது போல எத்தனை எத்தனை விழிப்புணர்வளிக்கும் செய்திகளைப் பார்க்கிறோம்..
கொஞ்சம் சிந்திக்கலாமே...

புதன், 18 ஏப்ரல், 2012

சங்க ஓவியங்கள்



பள்ளியில் படித்த காலத்திலேயே தமிழ் மொழியின் மீது ஏதோ இனம்புரியாத பற்று இருந்துவந்தது. அப்போது கேட்ட கதைகள் மனதில் இன்னும் நிழலாடுகிறது.


என அப்போது கேட்ட சின்னச்சின்னக் கதைகள் மனதில் விதையாய் விழுந்தன.

கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது, அறிவியலா? தமிழா? என இருபெரும் துறைகள் என்முன்நின்றன.இருந்தாலும் மனம் சங்க இலக்கியத்தின் மீது கொண்ட பற்றால் உரிமையோடு தமிழைத் தேர்ந்தெடுத்தது.

தமிழ் இளங்கலை பயின்றபோது,

செம்புலப் பெயல்நீரார்,அணிலாடுமுன்றிலார், தேய்புரிபழங்கயிற்றினார் என்னும் புலவர்களின் பெயர்களுக்கான காரணம் அறிந்தபோது சங்கஇலக்கியத்தின் மீது மேலும் பற்றுதல் ஏற்பட்டது.

என்னும் பாடல்களைப் படித்தபோது சங்கஇலக்கியத்தின் மீது காதல் ஏற்பட்டது.

முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றகாலத்தில்,




போன்ற பாடல்களில் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணர்ந்துகொண்டேன்.

மு.வரதராசன் - பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை.
வ.சுப.மாணிக்கனார் – தமிழ்க்காதல்
ஆகிய நூல்களைப் படித்த காலத்தில் நாமும் சங்கஇலக்கியத்தை ஆய்வுசெய்யவேண்டும் என்ற எண்ணம் கருக்கொண்டது.

ஆய்வியல் நிறைஞர், மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்காக சங்கஇலக்கியத்தில் முழுதும் வாசிக்கும் பெருவாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சங்கஇலக்கியத்தில் ஒலிமாசுமாடு, இசைமருத்துவம், ஒலிக்குறிப்புக்கூறுகள் என்னும் மூன்று நோக்கங்களில் நான் செய்த ஆய்வில் சங்கஇலக்கிய மாந்தர்களின் பேச்சு என் காதுகளில் கேட்க ஆரம்பித்தது. காட்சி என் கண்களுக்குத் தெரிந்தது.

நான் கண்ட காட்சிகளை தமிழுலகத்துக்கும் காண்பிக்கவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.
2007 ஆம் ஆண்டு தமிழ் வலையுலகம் எனக்கு அறிமுகமானது. இன்று வரை புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கற்று வருகிறேன். இந்தத் தலைமுறையினரின் தொழில்நுட்பங்களிலெல்லாம் சங்கஇலக்கியத்தைப் பதிவு செய்யவேண்டும் என்ற வேட்கையில் இந்த வலையில் தொடர்ந்து சங்க இலக்கியம் குறித்து எழுதிவருகிறேன்.
புதிதாக எதுவும் சொல்லிவிட்டேன் என்று என்றுமே எண்ணியதில்லை.என்றாலும் ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும் புதிதாக ஏதாவது சொல்லவேண்டும் என்றே எண்ணியிருக்கிறேன். 


இதுவரை எழுதிய கட்டுரைகளில் தொடரால் பெயர் பெற்றபுலவர்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து
“உயிருள்ள பெயர்கள் என்ற பெயரில் நூலாக பதிப்பித்துள்ளேன். இரண்டாவதாக வலையுலக தமிழுறவுகளால் அதிகமாக பார்வையிடப்பட்ட சங்கஇலக்கியக் காட்சிகளை 40 கட்டுரைகளாகத் தொகுத்து உங்கள் மறுமொழிகளோடு வெளியிடவுள்ளேன்.இந்த நூலுக்கு “சங்க ஓவியங்கள்“ என்று பெயரிட்டுள்ளேன். சங்க ஓவியங்களைக் காண இங்கே சொடுக்கவும்.



திங்கள், 16 ஏப்ரல், 2012

இதுவும் கடன் தானே..

கடன் இல்லாமல் வாழ்பவர்கள் யார்?
ஏழை முதல் பணக்காரர்வரை அவரவர் தகுதிக்கேற்ப கடனின் மதிப்பும் அதிகமாக இருக்கிறது!

கடன் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது பணம் தான்!

சிலநேரங்களில் நினைத்துப்பார்ப்பேன் இவை மட்டும்தான் கடனா?




  • நிலம்,நீர்,தீ,காற்று,வான் என்னும் இயற்கையின் கூறுகளிடமிருந்து பெற்ற இந்த உடல் இயற்கையிடம் நாம் பெற்ற கடன் தானே..               நாமே கொடுக்க மறந்தாலும், மறுத்தாலும் இயற்கை நம்மிடமிருந்து நம்மைப் பறிமுதல் செய்துகொள்கிறதே, இதுவும் ஒருவகைக் கடன் தானே!

  • நம் பெற்றோர் நம்மைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள்.                    என்றாலும் அவர்களுக்கு நாம் எவ்வளவு செய்தாலும் இந்த வளர்ப்புக் கடனை முழுவதும் அடைக்கமுடியாதே..                                         இருந்தாலும் நம் குழந்தைகள் நாம் பெற்றோரிடம் பெற்ற கடனுக்கு வட்டிபோட்டு வசூல் செய்துகொ்ளகிறார்களே..                                                                                             இதுவும் ஒருவகைக் கடன் தானே என்று..
இப்படிக் கடன் குறித்து நாம் சிந்திக்கும் இவ்வேளையில் பழந்தமிழ் அகப்பாடல் ஒன்று.. 

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.


இந்தப் பாடலின் பொருளைக் காண இங்கே சொடுக்கவும்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு..

To bring forth and rear a son is my duty.
To make him noble is the father’s.
To make spears for him is the blacksmith’s.
To show him good ways is the king’s.
And to bear
a bright sword and do battle,
to butcher enemy elephants,
and come back:
that is the young man’s duty.
Poet: Ponmutiyar
Translated by A.K.Ramanujan


ஒப்புநோக்கத்தக்க பாடல்

புதன், 11 ஏப்ரல், 2012

தொழில்நுட்ப அடிமைகள்



 இன்று ஓர் ஆடவன் தன் மனைவியைவிட்டு நீங்கிப் பொருள் தேடுவதற்காக வெளிநாட்டுக்குச் சென்றால், தன் மனைவியோடு பேசுவதற்குத்தான் எத்தனை எத்தனை வாய்ப்புகள்.. வசதிகள்...

இருவரும் உடனுக்குடன் அலைபேசியில் பேசிக்கொள்ளலாம்!
மின்னஞ்சலில் நிழற்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்துகொள்ளலாம்!
ஸ்கைபில் நேரடியாக ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிக்கொள்ளலாம்!
உடனே பார்க்கவேண்டுமென்றால் விமானத்திலேறி சில மணிநேரங்களில் வந்துவிடலாம்..

அப்படியே கொஞ்ச காலம் பின்னோக்கிப் போவோமா..?
தொலைபேசியில் பேசலாம் ஆனால் கட்டணம் கொஞ்சம் அதிகம்வரும்...
கடிதத்தில் செய்திகளைப் பங்கிட்டுக்கொள்ளலாம் காலம் அதிகம் செலவாகும்..
புறாக்களில் தூது அனுப்பலாம் ஆனால் நீண்ட நாள் காத்திருக்கவேண்டும்..

அப்படியே சங்ககாலத்துக்கு போகலாம் வாங்க..

                 லைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்துவிட்டது ஆவலோடு காத்திருக்கிறாள் தலைவி. அந்தக் காலத்து விரைவுவாகனமே குதிரைதான். செல்வத்தின் அடையாளம் குதிரை இழுத்துச்செல்லும் தேர்தான்!

தலைவனின் தேர்மணியோசையையே எதிர்நோக்கி வழிமேல் (விழி) காதுவைத்துக் காத்திருக்கும் தலைவிக்கு இந்த ஓசை போதாதா..!

அவன் தான் வந்துவிட்டான் என மனம் துள்ளிக்குதிக்கிறது..
அறிவு சொல்கிறது..
ஒருவேளை இது இயல்பாக ஆயர்கள் ஓட்டிவரும் ஆநிரைகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளின் ஓசையோ என்று..!
சரி எதுவாக இருந்தாலும் என்னுயிர்த்தோழி நீயும் என்னோடு வா முல்லை படர்ந்த கல்லின் மீது சென்று அந்த மணியோசை எங்கிருந்து வருகிறது என்று பார்த்துவரலாம் என்று தோழியை உடன் அழைக்கிறாள் தலைவி..
பாடல் இதோ.

                   முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்
                  கண்டனம் வருகஞ் சென்மோ தோழி
                    எல்லூர்ச் சேர்தரு மேறுடை யினத்துப்
                    புல்லார் நல்லான் பூண்மணி கொல்லேர்
                    செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு
                       வல்வி லிளையர் பக்கம் போற்ற
                    ஈர்மணற் காட்டாறு வரூஉம்
                  தேர்மணி கொல்லாண் டியம்பிய வுளவே.







குறுந்தொகை -275
ஒக்கூர் மாசாத்தி.
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்த காலத்துத் தலைவியை நோக்கி, "மணி ஒலி செவிப்படுகின்றது; அது தலைவனது தேர்மணி ஓசையோ என்று சென்று பார்ப்போம்" என்று தோழி கூறியது.)
   
(தோழி , அங்கே ஒலிப்பனவாக உள்ளவை, மாலைக் காலத்தில் ஊரை வந்து அடையும், காளையை உடைய பசுவினத்தில் உள்ள, புல்லை உண்ட நல்ல பசுக்கள், கழுத்தில் பூண்ட மணி ஓசையோ?
தாம் செய்த வினையை முற்ற முடித்ததனால் ஆகிய, நிறைவுடைய உள்ளத்தோடு, வலிய வில்லை உடைய இளைய வீரர் தன் அருகில் பாதுகாப்ப, ஈரமாகிய மணலை உடைய காட்டு வழியிலே வரும், தேரின் மணி ஓசையோ?
முல்லைக்கொடி படர்ந்த கல்லின் மேல் ஏறி, கண்டு வருவேம்: வருவாயாக.)
பாடல் வழியே..

நேற்று...

இந்தப் பாடலில் கண்டதுபோல பொருள் தேடச் சென்ற தலைவனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்த தலைவி கண்முன் நிழலாடுகிறாள்.

இன்று....

இதேபோலப் பொருள் தேடச் சென்ற தலைவன் மீண்டு வரும் போது..
(பல வீடுகளில்..)
மனைவி நெடுந்தொடர் பார்த்துக்கொண்டிருப்பாள்!
பிள்ளைகள் தொலைக்காட்சியாக இருந்தால் கிரிக்கெட் பார்ப்பார்கள்..இணையதளமென்றால் சமூகத்தளங்களில் மேய்ந்துகொண்டிருப்பார்கள்..

நாளை..

கணவனும்.. மனைவியும்.. பிள்ளைகளும் பணிக்குச் செல்லும் சூழலில் பாசத்துக்கேது இடம்.. காத்திருத்தலுக்கு ஏது நேரம்???

தொலைக்காட்சி
அலைபேசி
இணையதளம் (சமூகத் தளங்கள்)..

என பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறவுகளின் பிரிவுகளின் வலியையும் தூரத்தையும் குறைக்கவே தோன்றின என்றாலும்..

இன்று இந்தத் தொழில்நுட்ப வசதிகளுக்கு அளவுக்குஅதிகமாகவே நாம் அடிமையாகிப் போய்விட்டோமோ என்று தோன்றுகிறது..

தொழில்நுட்பம் நமக்கு அடிமையாக இருக்கலாம்
நாம் இந்தத் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக இருக்கலாமா?

தொடர்புடைய இடுகைகள்

பயணம் இது பந்தையமல்ல!



தொடர்புடைய இடுகைகள்


திங்கள், 9 ஏப்ரல், 2012

உண்டு உறங்கமட்டுமல்ல வீடு...

கண்ணில் பட்டு மனதைத் தொட்ட நிழற்படம் இது..


  • நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் மதிப்புமிக்க சொத்து நல்லநூல்களாகும்.
  • உடலுக்கு உணவுபோல,சிந்தனை வளத்துக்கு நல்ல நூல்கள் தேவை.
  • ஒவ்வொரு நூல்களும் அந்த ஆசிரியரின் வாழ்நாள் அனுபங்களாகும். அதனால் அந்த நூலை நாம் படிக்கும்போது அவரின் வாழ்நாளையும் சேர்த்து நாம் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.
  • என்னதான் இணையத்தில் நூல்கள்.. பிடிஎப், ஆடியோபுக், இபேப்பர் என பல வடிவங்களில் கிடைத்தாலும் ஒரு நூலை கையில் பிடித்துப் படிக்கும் சுகமே தனி.. அது குழந்தையைக் கையில் வைத்துக் கொஞ்சுவதுபோல சுகமானது.
  • புத்தகம் என்ற சொல்லே புத்தி+அகம் என்ற ஆழ்ந்த பொருளை உள்ளடக்கியது.
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான் 
என்பார்கள். நானறிந்தவரை அதன் பொருளே வேறு..
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான்
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் 
என்றுதான் இருந்திருக்கவேண்டும்..

கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்
என்பதும் கூட
நல்ல நூல்களைக் 
கண்டு அதைக் (நல்ல நூல்களை)கற்றவன் பண்டிதனாவான் 
என்றுதான் இருந்திருக்கவேண்டும்.

இப்பச் சொல்லுங்க உண்டு உறங்க மட்டுமா வீடு..

கொஞ்சம் நல்ல நூல்களையும் படிக்கலாமே
அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லலாமே...

தொடர்புடைய இடுகை




ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஈரோட்டுக்கு வந்த சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகளிலெல்லாம் இப்போது ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதை அதிகமாகவே பார்க்கமுடிகிறது.

ஆகாயத்தாமரை பற்றிய விக்கிப்பீடியா(நன்றி) செய்திகள் சில..
இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஓர் ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும். தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர் வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.

அன்று..

வேறு எங்கும் இல்லாத அளவிற்கு,ஈரோடு காவிரி ஆற்று பகுதியில் வண்ணமாய் பறந்து திரியும் பட்டாம் பூச்சிகளைக் காணமுடிந்தது!




                                 
                          இன்று..
ஈரோட்டில் காவிரி ஆறு எங்கே உள்ளது? என்று தேடும் அளவுக்கு ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. இந்தக்காட்சியைப் பார்க்கும்போது...

இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் போராகவே தோன்றுகிறது.
தொடர்புடைய இடுகை

சனி, 7 ஏப்ரல், 2012

தாலாட்டுப் பாடத்தெரியுமா?





தாயின் கருவறையில் இருக்கும்போது
அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது.
குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை!

நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்..

நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது.

முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்..
அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி...
என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும் தாலாட்டுக்கு இதுவே பரவாயில்லை' என்று எண்ணித் தூங்கிப்போகின்றன.

இதோ நானறிந்த தாலாட்டு..
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே என் கண்மணியே
அடிச்சாரைச் சொல்லி அழு
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..


இப்படி ஒரு தாலாட்டு என்பது தன் உறவுகளையும், நல்லபழக்கவழக்கங்களையும்,  பண்பாடுகளையும்,மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும்.
இணையத்தில் உலவியபோது தாலாட்டு என்னும் வலைப்பதிவு கண்ணில்பட்டு வியப்பை ஏற்படுத்தியது. நீங்களும் சென்று பாருங்களேன்..