Sunday, April 22, 2012

போனா வருவீரோ...?

போனா வருவீரோ
வந்தா இருப்பீரோ..
சண்டலா உன் நெனவாவே
நான் சரிகா உருகுறேனே...

என்றொரு பாடல் வீராப்பு என்ற தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடலைக் கேட்டபோது என் நினைவுக்கு வந்த சங்கப்பாடல் இது..

                      லைவன் இரவுநேரத்தில் வந்து தோழியின் துணையோடு தலைவியைச் சந்தித்துக் காதலித்து மகிழ்கிறான். அவன் வரும் வழியோ அச்சத்திற்குரியது. யானை,புலி,பாம்பு,இடி,காட்டாறு என பல இடர்கள். அத்தனையும் கடந்து அவன் வந்து  தலைவியைப் பார்த்துச் செல்கிறான். இவர்களின் சந்திப்பு ஊராருக்குத் தெரிந்தால் அலர் தூற்ற ஆரம்பித்துவிடுவார்களே என்ற அச்சம் வேறு தோழிக்கு இருக்கிறது.

தலைவன் வந்து தலைவியைக் காணாவிட்டாலோ ஆற்றாமையால் தலைவி உடல்மெலிவுற்றுப் போவாள்...

இந்தச் சிக்கலுக்குத் சரியான தீர்வு தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதே. இதனைத் தோழி மிக அழகாகத் தலைவனுக்கு உணர்த்துகிறாள்.

தலைவியைக் காணவந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க அவன் காதுபட இவ்வாறு பேசுகிறாள்..

இரவில் வந்து உன்னைச் சந்தித்துச் செல்கின்ற தலைவனிடம்..

செல்கிறீர்களா?
என்று கேட்க முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். செல்லுக என்றால் அவரின் பிரிவுக்கு நாம் உடன்பட்டோம் என்று பொருளாகிவிடும்.

சென்றால் வருவீரோ?
என்று நாம் அவரிடம் கேட்டால் அவர் வரும்வரை பிரிவாற்றியிருக்க நாம் துணிந்ததாகப் பொருள்படும். இவ்விரண்டினுள் ஒன்றும் தலைவனிடம் கூறஇயலாதவராக நாம் இருக்கிறோம். அவரோ நம் நிலையை உணர்ந்து திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லாதவராக இருக்கிறார் என்கிறாள் தோழி.

(மறைந்திருந்து இதனைக் கேட்கும் தலைவன் விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வருவான்.)
பாடல் இதுதான்.


சேறி ரோவெனச் செப்பலு மாற்றாம்  
    
வருவி ரோவென வினவலும் வினவாம் 
    
யாங்குச்செய் வாங்கொ றோழி பாம்பின் 
    
பையுடை யிருந்தலை துமிக்கு மேற்றொடு 
நடுநா ளென்னார் வந்து 
    
நெடுமென் பணைத்தோ ளடைந்திசி னோரே. 
குறுந்தொகை-268

கருவூர்ச் சேரமான் சாத்தன்
 தோழி , பாம்புகளின் படத்தை உடைய பெரிய தலையை, துணிக்கும், இடியொடு கூடிய, பாதியிரவு, என்று எண்ணாதவராகி, வந்து நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற நின் தோள்களை, அடைந்த தலைவர் பால்,
செல்கின்றீரோ என்று, செப்புதற்கும் வன்மை இல்லே மாயினேம்;
சென்றால் மீண்டும் வருவிரோ என்று, கேட்டலையும் செய்யோம்
எவ்வாறு செய்வேம்!
  


பாடல் வழியே..


 •          தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தோழி படும் பாடு மிக அழகாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
 •          தலைமக்கள் இரவில் சந்தித்துக் காதல் கொள்வார்கள். அதற்கு இரவுக்குறி என்று பெயர் என்ற அக்கால அகவாழ்வியல் சுட்டப்படுகிறது.
 •           இன்றும் நம் அகவாழ்வியலோடு ஒப்புநோக்கத்தக்க அகச்சூழலாகவே இக்காட்சி நம் கண்முன் விரிகிறது.


22 comments:

 1. பள்ளிகூடத்தில் எட்டாம் வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து தமிழ் ஆசிரியர் செல்வக்கோ அவர்களின் 'தமிழ் பீரியர்ட்'-ளில் நண்பர்களுடன் சேட்டைகள் செய்துகொண்டே கவனித்துக்கொண்டு இருப்பதை போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது தங்களின் சங்ககால பாடல்களை உதாரணத்துடன் விளக்கும் பாங்கு..!

  ReplyDelete
 2. ஆக, பழசு புதுசாகி இருக்கு......ம்
  சங்க கால பாடல் பகிர்வுக்கும் விளக்கத்துக்கும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி மனசாட்சி.

   Delete
 3. குறுந்தொகைப் பாடலும் விளக்கமும் சுவராஷ்யமாக இருந்தது.

  ReplyDelete
 4. நுண்ணிய மன உணர்வுகளையும் எளிதாய் அழகாய் உரைக்கும் வல்லமை அழகுத்தமிழுக்கு உண்டு என்பதை மீண்டுமொருமுறை பறைசாற்றும் பழம்பாடல். பாடலும் விளக்கமும், இன்றையப் பாடலோடு அதைப் பொருத்திப் பார்த்த தன்மையும் வியக்கவைக்கின்றன. பகிர்வுக்கு மிகவும் நன்றி முனைவரே.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி கீதா

   Delete
 5. சங்கப் பாடலை இன்றைய திரைப்படப் பாடலை காட்டி விளக்கி இருக்கிறீர்கள். இப்படி சுவைபட பாடம் நடத்தினால் யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது.?அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி முரளி

   Delete
 6. பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா.

   Delete
 7. அருமையான குறுந்தொகைப் பாடல் பகிர்வு

  ReplyDelete
 8. குறுந்தொகைப் பாடலும் அதற்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கமும் வெகு அருமை. ரசித்துப் படித்து மகிழ்ந்தேன். நம் தமிழ் இலக்கியங்களுக்கு நிகரானவை எந்த மொழியிலும் இல்லை!

  ReplyDelete
  Replies
  1. ஆழ்ந்த வாசித்தலுக்கு நன்றி நண்பரே

   Delete
 9. அருமையான விளக்கம் முனைவரே!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 10. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தோழி படும் பாடு மிக அழகாகப் புலப்படுத்தப்பட்டுள்ள அருமையான விளக்கம் ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜேஸ்வரி.

   Delete
 11. கள்ளூறும் காதல் உணர்வுகள் மிகுந்த குறுந்தொகைப் பாடலை, இன்றைய திரைப்பாடலுடன் பொருத்தி பகிர்ந்திருப்பது அருமை.

  எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ‘காதல் உணர்வுகள்’ (கவனிக்க:- காதல் உணர்வுகள் தான்) மாற்றம் கொள்ளாமல் இருப்பதும் வியப்புக்குரியதே.

  ReplyDelete
 12. வியப்புக்கு நன்றி கவிஞரே..

  ReplyDelete