வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 ஜூன், 2013

சங்கஇலக்கியக் காட்சிப்பதிவு -பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்



சங்கஇலக்கியப் பாடல்களைப் படிக்கும்போது அக்கால மக்களின் வாழ்வியல், சுற்றுச்சூழல் ஆகியன மனக்கண்முன் நிற்கும். அக்காட்சிகள் என்றும் நினைவில் நிற்கும் அளவுக்கு, பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் தமிழரின் பெருமைகளை சின்னச்சின்ன ஓவியங்களாக வரைந்து சிறுவிளக்கங்களுடன் மிக அழகாக விளக்கியுள்ளார். இதன் வழியாக,


சங்ககாலக் கட்டிடக்கலை மரபு
சங்ககால சிற்பக்கலை
போர்மரபு
இசைமரபு
தாவரவியல் அறிவு
போன்ற பல்வேறு செய்திகள் மனதில் பதியுமாறு விளக்கப்பட்டுள்ளன.

திங்கள், 17 ஜூன், 2013

தமிழர் பெருமைகள் (பெருந்தச்சன் தென்னன் மெய்மன்)

பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழரின் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன. பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்கள் பழந்தமிழ்இலக்கியங்களில் காணக்கிடைக்கும் பல அரியசெய்திகளை ஓவியங்களாகவும் சிறுசிறு விளக்கங்களாகவும் வழங்கிவருகிறார். இவர்தரும் செய்திகளைப் பார்க்கும்போது நாம் தமிழ் என்னும் நம் மொழியை மட்டும் தொலைக்கவில்லை, நமது மிகப்பெரிய வரலாறையும்,நமது பெருமைகளையும் தொலைத்திருக்கிறோம் என்ற எண்ணமே தோன்றுகிறது.


வெள்ளி, 14 ஜூன், 2013

உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்


  1. தண்ணீர்
  2. காற்று
  3. அளவான உணவு
  4. பரிதியின் ஒளி (சூரியஒளி)
  5. உடற்பயிற்சி
  6. ஓய்வு
  7. நல்ல நண்பர்கள்

இன்றைய அறிவியல் உலகில், அன்றாட வாழ்வியல் கூறுகள் பல மாறிவிட்ட சூழலில் இந்த ஏழு மருத்துவர்களையும் நாம் இழந்துவிட்டோமோ என்றுதான் தோன்றுகிறது.

தண்ணீர் – நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், பருவமழை தவறியதாலும் இன்றைய சூழலில் தண்ணீரும் தனியார் மருத்துவமனைகளைப் போல விலைமதிப்புமிக்கதாகிவிட்டது.

காற்று காடுகளை அழித்ததாலும், விவசாயத்தை மறந்ததாலும் காற்றும் கூட இன்று மின்விசிறி, குளிரூட்டி என பெயர் மாற்றிக்கொண்டது. எதிர்காலத்தில் குழந்தைகளிடம் காற்று எங்கிருந்து வரும் என்று கேட்டால் குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டு காற்று மின்விசிறியில் இருந்து வரும் என்றுதான் கூறுவார்கள்.

அளவான உணவு– வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இன்று என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கூட பலர் நினைவு வைத்திருப்பதில்லை. இச்சூழலில் அளவான உணவு என்பது அளவில்லாத ஆசை என்றுதான் தோன்றுகிறது.

பரிதியின் ஒளி – ஓசோன் படலம் முழுவதும் இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு பரிதியின் ஒளி, உயிர்களை வாட்டி வதைக்கிறது. எதிர்காலத்தில் ஓசோன் படலம் போல செயற்கையாக ஏதாவது படலத்தை உருவாக்கினால்தான் பூமியில் வாழமுடியுமோ என்று தோன்றுகிறது.

உடற்பயிற்சி – வீடு விற்பனைக்கு என்ற பெயரில் விளைநிலங்களைக் கூட பட்டா போட்டு விற்றுவருகிறார்கள். அதனால் விளையாட்டுத் திடல்களெல்லாம், வீடுகளாக மாறிவருகின்றன. எதிர்காலத்தில் பள்ளிக்கூடங்களில் எல்லாம் விளையாட்டுப் பாடவேளை என்பது கணினிக்கூடங்களில் விளையாடும் விளையாட்டுதான் என்று மாறிப்போகலாம்,

ஓய்வு  – ஏறிவரும் விலைவாசி உயர்வுக்குத் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏழை, நடுத்தர மக்கள் கூடுதலாக உழைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஓய்வு என்பது மரணம் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல நண்பர்கள்  – பகக்கத்தில் இருக்கும் நண்பர்களைவிட முகநூலிலேயே நண்பர்களைத் தேடும் இந்தக் காலத்தில் நல்ல நண்பர் யார் என்பதற்கான இலக்கணமே மாறிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இன்பதுன்பங்களை அக்கம்பக்கத்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதைவிட சமூகதளங்களில் பகிர்ந்துகொள்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.

இவ்வாறு மாறிப்போன காலச்சூழலில் இந்த தலைசிறந்த ஏழு மருத்துவர்களையும் நம் குழந்தைகளுக்கு நாம் அடையாளம் காட்டவேண்டும்.

ஏனென்றால் இன்றைய சூழலிலில் “ மருத்துவத்துறை நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு மருத்துவம் பார்க்கத்தான் மருத்தவர்கள் இல்லை.”

அதனால்,

  • தண்ணீர் குடித்தால் தலைவலி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தீரும்..
  • நல்ல காற்று நலமான வாழ்வுக்கு அடிப்படையானது
  • அளவான உணவே நோயற்ற வாழ்வு
  • அதிகாலைப் பரிதியின் ஒளி உடலுக்கு நல்லது.
  • நம் மனம் நினைப்பதை உடல் செய்ய உடற்பயிற்சி தேவை!
  • ஓய்வு மனித இயந்திரத்தை புத்துணர்வுடன் செயல்படவைக்கும்.
  • கூகுளில் தேடினாலும் கிடைக்காத நண்பர்கள் நம் அருகே இருக்கிறார்கள்.

என்னும் உண்மைகளை  இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வோம் நண்பர்களே..

தொடர்புடைய இடுகைகள்

காற்று ஆணா? பெண்ணா?
இயற்கைக்கும் மனிதனுக்குமான 20/20