நூல்களைக் கடந்து சிந்திப்போம்…ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பது நம் முன்னோர் வாக்கு.
     
     சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
     வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.  (645)  
     
      என்பார் வள்ளுவப்  பெருந்தகை

எழுத்து, சொல், தொடர் என நாம் வடிவமைத்துக்கொண்ட மொழியானது, நாம் தகவல் தொடர்பு செய்துகொள்ளவும், நம் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவும் துணைநிற்கிறது. ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்புப் பட்டையங்கள் என்று பல வடிவங்களாக நாம் அறிவுச் செல்வங்களைக் காலமாகவே சேமித்து வைத்திருக்கிறோம்.

பொன்னகரம் (ஒலிக்கோப்பு)

புதுமைப்பித்தன் என்ற புனைப் பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), அவர்களின் பிறந்தநாள் இன்று. மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்ந்த இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். எள்ளலுடன் கூடிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றவையாகும். 

இவரது பொம்மையை உங்களுக்கும் பிடிக்கும்

தமிழ்ச்சிறுகதை உலகில் தடம்பதித்த புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள் இன்று. இவரைப் பற்றிய முழுவிவரங்களையும் தமிழ்விக்கிப்பீடியாவில் இந்த ஜெயகாந்தன் இணைப்பில் காணலாம். இந்நாளில் இவரது படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த பொம்மை என்ற கதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். இந்த பொம்மையை உங்களுக்கும் பிடிக்கும்.

இந்திய மருத்துவம் – தென்கச்சியார்


இன்று நிறைய பொழுதுபோக்குக்கான ஊடகங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிக்கு முன் மக்களைப் பெரிதும் ஈர்த்த வானொலிகளை மறக்கமுடியுமா? வானொலி என்றதும் என் நினைவுக்கு வருபவர் தென்கச்சியார்தான். இவரது இன்று ஒரு தகவல் வழியாக பல கதைகளையும்,  வரலாறுகளையும் நான் அறிந்துகொண்டேன். எல்லோருக்கும் புரிம்படியாகப் பேசும் இவரது மொழிநடை, நினைத்து நினைத்து சிரிக்கும் நகைச்சுவையைச் சொன்னாலும் அதைச் சிரிக்காமல் சொல்லும் நுட்பம் ஆகியன இவரிடம் நான் கண்டு வியந்த பண்புகளாகும். இன்று இந்திய மருத்துவம் குறித்த இவரது சிந்தனைகளை உங்களோடு நானும் மீ்ண்டும் படித்து மகிழ்கிறேன்.

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்புஎனக்குப் பிடித்த புரட்சிக் கவி!

நான் இராமசாமித் தமிழ்க் கல்லூரியில் இளங்கலை தமிழ் படித்தபோது முதல்வராக இருந்த தமிழாகரர் தெ.முருகசாமி ஐயா அவர்கள் எனக்கு பாரதிதாசன் அவர்களின் புரட்சிக் கவி என்ற காப்பியத்தை நடத்தினார். இன்றும் அவர் பாடம் நடத்திய காட்சிகள் மனதில் நிழலாடுகின்றன. இன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நினைவுநாள். இந்நாளில் பாரதிதாசன் அவர்களின் படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்த புரட்சிக்கவி என்ற படைப்பை வணக்கத்துடன் பகிர்ந்துகொள்கிறேன்.

புகழ் - வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்..


உன்னைப் புகழும்போது செவிடனாக இரு!
உன்னை இகழும்பொது ஊமையாக இரு!
என்றொரு பொன்மொழி உண்டு..
புகழ் ஒரு போதை! இன்னும் இன்னும் என்று நம்மை மதிமயக்கி நம் வளர்ச்சியைத் தடுப்பது அதனால்தான் நம்மைப் புகழும்போது நாம் செவிடனாக இருக்கவேண்டும்!
நாம் இகழப்படும்போது நம்மை நாம் தன்மதிப்பீடு செய்துகொள்வது நம்மை வளர்த்துக்கொள்ள துணைநிற்கும் அதனால் தான் நாம் அப்போது ஊமையாக இருக்கவேண்டும்!

பிறந்தநாள் பரிசுவாழ்த்தும் மனங்கள்

எல்லையில்லா 
நுண்ணறிவால் 
வளர்ந்தவரே வணக்கம்!

ஏட்டு நூலோடு 
சுயசிந்தனையையும் வளரவிட்டு
உள்ளம் மகிழ்ந்தீர்

பலமொழிகளோடு
தமிழ்மொழியும் 
கற்கவேண்டியதுதான் 
என்பதை உணரவைத்தீர்….

காலம் காற்றடிக்கும் 
நேரத்தில் கடந்து
எல்லையற்ற அளவில் 
வளரப்போகிறது என்பதைப் புரியவைத்தீர்

ஒவ்வொரு பிறப்புக்கும்
அர்த்தமுண்டு
அதற்கும் 
சில கடமைகளுண்டு
என்பதை விளங்கவைத்தீர்

இரண்டடி குறளுக்கும்
இணையில்லாப் பொருளுண்டு
என்பதை 
நிகழ்கால விளக்கத்துடன் விளக்கினீர்...

இப்படி உங்களிடம் கற்கவேண்டியது
அதிகம்தான்
இருந்தபோதும் 
காலம்தான் எங்களைக் 
கடத்திச் செல்கிறதே

இருந்தாலென்ன?
உண்மை அன்பிற்கும் 
வாழ்த்தும் மனதிற்கும்தான்
வயது பொருட்டில்லையே… 

அதனால்தான் குழந்தை உள்ளத்துடன்
நேச நண்பரான உம்மை
கவிதையால் அர்ச்சித்து
வாழ்த்து தொழுகிறோம்
பல்லாண்டு வாழ்க..!!!!

இப்படிக்கு 
மாறாத நேசமுடன் உம் வணிகவியல் மாணவிகள்
கவிதை ஆக்கம் – இளம்கவிஞர் .பாரதி


தமிழறிஞர்கள் பிறந்தநாளை மட்டுமே நினைவு வைத்திருக்கும் நான் இன்று 

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தநாள் என்று அதற்கான 

தரவுகளைத்தேடிக்கொண்டிருந்தேன் இன்று எனது பிறந்தநாள் என்பதை 

எனக்கு நினைவுபடுத்திய எனதருமை மாணவச் செல்வங்களுக்கு 

மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிறந்தநாள்

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - ஜனவரி 2, 1876; மதுரை, தமிழ்நாடு) அவர்களின் பிறந்தநாள் இன்று. சிறந்த தமிழறிஞரான இவர்,தமிழ்த்தாத்தா என அழைக்கப்பட்ட . வே. சாமிநாதையரின் ஆசிரியர் என்னும் பெருமைக்குரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர்.
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர். நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.
சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்:
பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களை விட தமிழ்த்தாத்தா புகழ்பெற்றுத் திகழ்ந்தார். உ.வே.சா பெற்ற புகழ் யாவும் குருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களையே சேரும்.

நல்ல ஆசிரியரால் நல்ல மாணவரை உருவாக்கமுடியும்
நல்ல மாணவரால் நல்ல ஆசிரியராக உயரமுடியும் என்பதற்க இந்த குருவும் சீடரும் நல்ல சான்றுகளாவர்.
இவரது பிறந்தநாளன்று அவரது தமிழ்ப்பணியை எண்ணிப்பார்ப்பது நம் கடமை.


பணிவே உயர்வுதரும்!பெருமைப் பண்புடையவர்கள் என்றும் பணிந்து நடப்பார்கள், ஆனால் சிறுமைப் பண்பு உள்ளவர்களே என்றும் தன்னைத்தானே வியந்து பாராட்டிக்கொண்டிருப்பார்கள் என்பதை வள்ளுவர்,

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

என உரைப்பார்.பணிவுக்கும் அடிமைத்தனத்துக்கும் நூல் அளவுதான் வேறுபாடு அது பலருக்குத் தெரிவதில்லை. 

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை பிறந்தநாள்

பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடகநூலைப் படைத்தவராவார்  (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) இவரது பெயரால் இன்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. 
இவர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
சுந்தரம் பிள்ளையின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல்
அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமே யாகும்.
முழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu)
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
-
மனோன்மணியம் சுந்தரனார்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தனது 42வது வயதில் 1897 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.
வெளியிட்ட நூற்கள்
·         நூற்றொகை விளக்கம் (1888)
·         மனோன்மணீயம் (நாடக நூல், 1891)
·         திருவிதாங்கூர் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி (Early Sovereigns of Travancore, 1894)


அன்று இதே நாளில் பிறந்த பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணியை எண்ணிப் பார்ப்பதில் பெருமிதம் கொள்வோம்

(தரவுகளுக்கு நன்றி - தமிழ்விக்கிப்பீடியா)