வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 11 மே, 2024

அச்சம் தவிர் - சான்றோர் சிந்தனை


இளங்கன்று பயமறியாது, மடியிலே பயமிருந்தால் வழியிலே பயம் இருக்கும்,

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்..

என்று அச்சத்தைப் பற்றி பழமொழிகள் உண்டு.

 தொல்காப்பியர் உடல் மொழிகளை எட்டுவகையாக மெய்ப்பாட்டியலில் பிரித்துரைக்கிறார். அவற்றுள் அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்ற நான்கு காரணங்களால் அச்சம் தோன்றும் என்றுரைக்கிறார்.

 திருவள்ளுவர் தீவினையச்சம், அவையச்சம் என்ற இரு அதிகாரங்களில் அச்சம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அறிவுடைமை என்ற அதிகாரத்தில்,

 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில். - 428

அஞ்ச வேண்டிவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையோர் செயல் என்று குறிப்பிடுகிறார். உட்பகை என்ற அதிகாரத்தில்,

 

வாள்போல பவைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு. - 882

வாள்போன்ற வெளிப்பகைக்கு அஞ்சவேண்டாம் உறவுகள்போன்ற உட்பகைக்கு அஞ்சுக என்கிறார்.

மகாகவி பாரதியார்.........


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.. என்றார்

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை  என்று சொன்ன பாரதி…

 

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த     
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்     
அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்     
அஞ்சாத பொருளில்லை அவனியிலே     
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த     
மரத்தில் என்பார்; அந்தக் குளத்திலென்பார்     
துஞ்சுது முகட்டி லென்பார் மிகத்     
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

என்று பாரத மக்களின் நிலையெண்ணிப் பாடியுள்ளார்.

வள்ளுவர் அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சவேண்டும் என்கிறார்

பாரதி அஞ்சுவோரின் இழிவையும் அஞ்சாமையின் உயர்வையும் பேசுகிறார்.

பாரதி தன் புதிய ஆத்திச்சூடியில்,

அச்சம் தவிர் என்று உறுதிபட மொழிகிறார்.

 

நாய், பேய், பாம்பு, பல்லி, இடி, மின்னல், தண்ணீர், உயரம் என மனிதர்களுக்குத் தோன்றும் அச்சங்கள் பலவிதம்..

 

நான்கு நண்பர்கள் தங்களுக்கான அச்சம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

முதலாமவர் சொன்னார் எனக்கு இருட்டு என்றால் பயம் என்று

இரண்டாம் நபர் எனக்கு விமானத்தில் பயணிப்பதென்றால் பயம் என்றார்

மூன்றாம் நபர் எனக்கு தனிமை என்றால் பயம் என்றார்.

நான்காம்  நபர் எனக்கு பயம் என்ற சொல்லைக் கேட்டாலே பயம் என்றார்.

 

பெண்களுக்குரிய நற்பண்புகளுள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று நான்கு உரைக்கப்படுகிறது. அவற்றுள் அச்சம் முதலாவதாக இடம்பெறுகிறது.

 

ஆண்களுக்குரிய நற்பண்புகளுள் பெருமையும் உரனும் ஆடூஉ மேன என்றுரைக்கப்படுகிறது. பெருமை என்பது பழி, பாவங்களுக்கு அஞ்சுதல், உரன் என்பது : அஞ்சாமை, அறிவு என்று தமிழ் இலக்கணம் உரைக்கிறது.

 

பாரதியும், பாரதிதாசனும் கண்ட புதுமைப் பெண்கள் அச்சம் கொள்வதில்லை.

 

அச்சம் தவிர்க்கவேண்டியது தான் என்றாலும் அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுவதும் அறிவுடையவர் செயல் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

 

அச்சங்கள் பலவகை உண்டு. எல்லா அச்சங்களுக்கும் அறியாமையே அடிப்படையாகிறது.

 

மருத்துவரிடம் செல்கிறோம்.. அவர் நம் நோய் நீக்க ஊசி போடவேண்டும் என்கிறார். குழந்தைகளாக இருந்தால் எனக்கு ஊசி வேண்டாம் என்று அழுவார்கள்..

ஏனென்றால் அவர்களுக்கு ஊசி,  மருந்து என்பதும் தம் நோய் நீக்கவல்லது என்பதும் புரியாது. அது வலிக்கும் என்று மட்டும் நினைத்து அழுவார்கள்.

ஆனால் வளர்ந்த பிறகும் பலர் ஊசி போட்டுக்கொள்ள அஞ்சுவர். அவர்களுக்கு உள்ளது அறியாமை என்று சொல்ல முடியுமா..

ஒருவருக்கு அறியாமை தோன்றிவிட்டால் அச்சம் என்ற உணர்வு தோன்றி பலவிதமான கற்பனைகளை அவருக்குத் தோற்றுவிக்கும். அதிலும் எதிர்காலம் குறித்த அச்சம் குறிப்பிடத்தக்கது. என்ன நடக்குமோ என்ற எண்ணம். குறிப்பாக எதிர்மறையான விளைவுகளையே மனம் தோற்றுவித்து அச்சத்தை ஏற்படுத்தும்.

 

ஊசி பெரிய வலியை ஏற்படுத்தாது.. ஆனால் மருத்துவர் ஊசி போடும் முன் அது எப்படி வலிக்கும் என பல முறை மனம் பழைய நினைவுகளைத் தோற்றுவிக்கும்.

 

ஆனால்.. இந்த வலி கண்ணிமைக்கும் மணித்துளிகள் தான். இது மருந்து…

இதை நாம் ஏற்பது அறிவுடைமை என மனதிற்குப் புரியவைத்தால் ஊசிக்கு நாம் அஞ்சமாட்டோம்..

 

குழந்தைகள் சிலநேரம் தங்கள் தலைமுடிகளைத் தாமே பிடித்துக்கொண்டு அழுவதைப் பார்த்திருப்போம்..அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாது நாம் தான் இதற்குக் காரணம் என்று. அந்தக் குழந்தைகளின் கைகளை முடியிலிருந்து எடுத்துவிட்டால் அழுகை தானே நின்றுவிடும்.

 

இப்படித்தான் நமக்குத் தோன்றும் அச்சங்கள் யாவும் அறியாமையாலேயே தோன்றுகின்றன..

சாதனையாளர்கள் யாவரும் முதலில் தமக்குள் தோன்றிய அறியாமை நீக்கியதாலேயே அச்சமில்லாதவர்களாக வாழ்க்கையை எதிர்கொண்டனர்.

அதனால் தான் பாரதி,

 

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்

காலருகே வாடா !சற்றே உனை மிதிக்கிறேன் என்று பாடினார்..

 

உலக அளவில் மனிதர்களின் அச்சங்களுள் பெரிதும் முதலிடத்திலிருப்பது அவையச்சம்.. மேடையில் பேசுவது,

 

கவையாகப் பிரிந்து, கொம்புகளாக விரிந்து, காடுகளில் நிற்கும் அந்த மரங்கள் நல்ல மரங்கள் அல்ல. பலரும் கூடியிருக்கும் மன்றத்தில் “படித்துச் சொல்” என்று நீட்டிய ஓலையை வாய்விட்டுப் படிக்காமலும், அதில் எழுதப்பட்டுள்ளவற்றின் குறிப்பினை அறிந்துகொள்ள மாட்டாமலும் நிற்பவன்தான் நல்ல மரம் என்றுரைக்கிறார் ஒவையார்.

 

அவையஞ்சாமை பற்றி பேச வந்த வள்ளுவர் அதற்கு முன் அவையறிதல் பற்றிப் பேசியுள்ளார்…

வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர். - 721

நல்ல பேச்சாளர்அச்சத்தினால் தவறாகப் பேசமாட்டார்கள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார். -722

கற்றோரும் போற்றுமாறு பேசுவோர் கற்றோருள் கற்றோராவார்

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர். - 723

போருக்கு அஞ்சாதார் எளியவர்அவையில் அஞ்சாதாரே அரியவர்

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.- 724

தெரிந்ததைப் புரியுமாறு கூறி, தெரியாததை  கேட்டு அறிக

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.- 725

நற்சபையில் அஞ்சாமல் பேசநல்ல நூல்களைப் படி

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு. - 726

கோழைக்கு வாள் எதற்குஅவையஞ்சுவோருக்கு நூல் எதற்கு?   

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.- 727

அவையயஞ்சுபவனின் அறிவு பேடியின் வாளுக்குச் சமம்

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.- 728

பேச்சுத்திறன் இல்லாதவர்கள் பல கற்றாலும் பயனில்லை

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.- 729

அவையச்சம் கொள்வோர்கல்லாதாரைவிடக் கீழானவர்

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.- 730

அவையச்சம் கொள்வோர்வாழ்ந்தும் பயனில்லை

என அவையச்சம் குறித்து திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்..

மூன்று வயதில் நாம் பேசக் கற்றுக்கொள்கிறோம்.. ஆனால் வாழ்நாள் முழுவதும் எங்கு பேசவேண்டும், என்ன பேசவேண்டும்.. எப்படிப் பேசவேண்டும்.. எவ்வளவு பேசவேண்டும் என்று கற்றுக்கொள்வதில்லை..

எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து. என்று நாலடியார் உரைக்கிறது.

கல்வி போல அறியாமை நோயைத் தீர்க்கும் மருந்து வேறு ஏதும் இல்லை என்பது இதன் பொருள்.

அவையச்சம் நீக்க பல வழிகள் உண்டென்றாலும் அவற்றுள் ஒன்றை மட்டும் நாம் முதலில் உணரவேண்டும்.

பேசும் முன் நமக்கு முன் உள்ள யாவரும் முட்டாள்கள் நாம் தான் அறிவாளி என எண்ணிக்கொள்ளலாம். அப்போது நமக்குத் தன்னம்பிக்கை வரும்.

தன்னம்பிக்கை வந்த பிறகு, நாம் தான் முட்டாள் நாம் பேசுவதைக் கேட்கும் யாவரும் பெரிய அறிவாளிகள் என எண்ணிக்கொள்ளவேண்டும்..

அவ்வாறு எண்ணிக்கொண்டால்..

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (குறள்- 645)3

என்று பேசுவோம்..

அவையச்சம் மட்டுமல்ல நமக்குள் தோன்றும் அச்சங்கள் யாவும் நம் அறியாமை நீங்கினால் தானே நீங்கிவிடும்.

இதில் சிக்கல் என்னவென்றால்..

நமக்கு எதுவுமே தெரியாது என்று தெரிந்துகொள்ள நாம் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும்…

வள்ளுவரும், ஔவையாரும், பாரதியும் சொன்ன கருத்துகளை சிந்திப்போம்..

அச்சம் தவிர்ப்போம்..  (கோயம்புத்தூர், அகில இந்திய வானொலியில் சான்றோர் சிந்தனை நிகழ்வில் “அச்சம் தவிர்“ என்ற தலைப்பில் வழங்கிய கருத்துரை. (26.04.2024 ஒலிபரப்பான தேதி) - நன்றி அகில இந்திய வானொலி, கோயம்புத்தூர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக