வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 25 மார்ச், 2023

நன்னூல் -36-46 நூற்பாக்கள் விளக்கம்

 


 

கற்பித்தல் வரலாறு என்பது ஆசிரியர் மாணவர்க்கு பாடம் கற்பித்தலின் இயல்பையும் முறையையும் விவரிக்கின்றது. இது பாடம் சொல்லுதலின் வரலாறு நுவலும் திறன் ஈதல் இயல்பு என பல சொற்றொடர்களால் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதனை பவணந்தி முனிவர்,

 

 1. நூல் நுவல் திறன்

ஈதல் இயல்பே இயம்பும் காலை

காலமும் இடனும் வாலிதின் நோக்கி

சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி

உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து

விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து

கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொளக்

கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப                                                 36

 

 கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டியன,

1. காலத்தையும் இடத்தையும் நன்கு ஆராய்தல்,

2. நல்ல இடத்திலிருந்து வழிபடு தெய்வத்தை வணங்குதல்,

3. கற்பிக்கும் பாடத்தை மனதில் பதியவைத்து நினைகொள்ளுதல்,

4.  விரைந்து சொல்லாமல், சினமில்லாமல் முகமலர்ச்சியுடன் இருத்தல்

5. மாணவனின் தன்மையறிந்து நடத்துதல்

6.  மாணவன் தெளிவடையுமாறு மாறுபடற்ற மனத்துடன் கற்பித்தல்,

 

2. மாணாக்கர்  இயல்பு

 

தன் மகன் ஆசான் மகனே மன்மகன்

பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே

உரைகோளாளற்கு உரைப்பது நூலே                                                      37

1. தன்மகன்,

2. தன்னுடைய ஆசிரியருடைய மகன்,

3. நாட்டையாளும் அரசனுடைய மகன்,

4. பொருளை மிகுதியாக வாரி வழங்குபவன்,

5. தன்னை வணங்கி வழிபடுபவன்,

6. சொல்லும் பொருளை விரைந்து ஏற்றுக் கொள்ளும் திறனுடையோன்

என அறுவகைப்பட்டவர்களுக்கும் பாடம் கற்பிக்கலாம்

 

3. மூவகை மாணாக்கர்

அன்னம் ஆவே மண்ணொடு கிளியே

இல்லி குடம் ஆடு எருமை நெய்யரி

அன்னர் தலை இடை கடை மாணாக்கர்                                                    38

 

முதல் நிலை மாணவர்கள் - அன்னப்பறவையும் பசுவையும் போன்றவர் தலை மாணாக்கர்.

அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரித்தறியும் ஆற்றலுடையது.

அவ்வாறே நன்மை தீமையைப் பிரித்து அறிபவர் தலை மாணாக்கர்.

பசு இரை கிடைத்தபோது உண்டு பின்பு அசை போடும் இயல்புடையது. அவ்வாறே பாடம் கேட்டுப் பின்பு நினைத்துப் பார்த்துத் தெளிவு பெறுபவர் தலை மாணாக்கர்

இடைநிலை மாணவர்கள் - மண்ணையும் கிளியையும் போன்றவர் இடை மாணாக்கர்.

மண் எவ்வளவு உழைப்பை வழங்குகிறோமோ அவ்வளவு விளைச்சலைத் தரும். அவ்வாறே ஆசிரியர் கற்பித்த அளவே அறிவு பெறுபவர் இடை மாணாக்கர்.

கிளி சொன்னதை மட்டமே சொல்லும் இயல்புடையது. அவ்வாறே திகழ்பவர் இடை  நிலை மாணாக்கர்

கடைநிலை மாணவர்கள்ஓட்டைக்குடம், ஆடு, எருமை, பன்னாடையையும் போன்றவர்.

எதையும் மனதில் தங்க வைக்காத தன்மையில் ஓட்டைக் குடம் போலவும் அங்கும் இங்கும் மேம்போக்காகப் படிப்பதில் ஆடு போலவும் எதையும் குழப்புவதில் எருமை போலவும் நல்லதை விடுத்து அல்லதைத் தேக்கிக் கொள்வதில் நெய்யறி (பன்னாடை) போலவும் இருப்பவர் கடை மாணாக்கர் ஆவார்.

 

4. மாணாக்கராகாதார்

களி மடி மானி காமி கள்வன்

பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சி

தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி

படிறன்  இன்னோர்க்குப் பகரார்நூலே               39                                                                                                              

 

குடிகாரன், சோம்பேறி, அகங்காரி, காமுகன், திருடன், நோயாளி, அறிவில் ஏழை, மாறுபாடுடையவன், சினத்தன் அதிகமாகத் தூங்குபவன், மந்த புத்தி உள்ளவன், நூல்களின் பரப்பைக் கண்டு பயந்து தடுமாறுபவன், தீவினை செய்வோன், பாவி, பொய் சொல்பவன் முதலானவர் மாணவர் ஆகார். இத்தகையோருக்கு ஆசிரியர் பாடம் கற்பிப்பதில்லை. எனவே இத்தகையோர் மாணவர்க்குரிய தகுதியற்றவர் ஆவர்.

 

5. கோடல் கூற்று- பாடம் கேட்டலின் வரலாறு

 

கோடல் மரபே கூறும் காலை

பொழுதொடு சென்று வழிபடல் முனியான்

குணத்தொடு பழகி அவன் குறிப்பிற்சார்ந்து

இரு என இருந்து சொல் என சொல்லி

பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி

சித்திர பாவையின் அத்தகவு அடங்கிச்

செவி வாயாக நெஞ்சு களனாக

கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து

போ என போதல் என்மனார் புலவர்                                                        40

 

மாணாக்கர் பாடம் கற்றலின் இயல்பையும் முறையையும் கற்றல் வரலாறு என்பார். நன்னூலார். இது பாடம் கேட்டலின் வரலாறு கோடல் மரபு என்னும் பெயர்களில் வழங்கப்படுகிறது. இதனை நன்னுலார்,

 

பாடம் கேட்கத் தொடங்கும் மாணவன் பின்பற்ற வேண்டியவை:

 

1) உரிய நேரத்திற்குச் செல்லுதல்

2) வணங்குதல்

3) ஆசிரியரின் குணமறிந்துப் பழகி அவரது குறிப்பறிந்து நிற்றல்.

4) ஆசிரியர் இரு என்றால் இருத்தல், சொல் என்றால் சொல்லுதல்

5) நீர் வேட்கை உடையவன் போல் ஆர்வமாகவும் சித்திரப் பாவை போல்  அடக்கமாகவும் விளங்குதல்.

6) செவிவாயாகவும், நெஞ்சம் - வயிறாகவும் விளங்குமாறு பாடங்களைக் கேட்டு  மனதில் பதியவைத்தல்.

7) பாடத்ததை மறந்து விடாமல் மனதில் பதிய வைத்தல்

8) ஆசிரியர் போ என்ற பின்பு திரும்புதல்.

 

6. நூல் கற்கும் முறை

 

நூல் பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்

பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்

ஆசான் சார்ந்து அவை அமைவர கேட்டல்

அம்மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்

வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மட நனி இகக்கும்                                                       41

 

மாணாக்கர் பாடம் கற்கும் முறையினை இப்பகுதி விவரிக்கிறது. பாடம் கேட்டு முடிந்த பின்பு பயிற்சி செய்தல் முக்கியமானது. சிந்தித்தல்  மீண்டும் கேட்டல் நல்ல மாணவர்களுடன் பழகுதல் ஐயம் வரும்பொழுது வினாவுதல் தன்னை வினவிய பொழுது விடை கூறுதல் என்பன பயிற்சியின் படிநிலைகள் ஆகும்.

1) உலக வழக்கு செய்யுள் வழக்கு எனும் இருவகை வழக்கினை அறிதல்.

2) மூலபாடத்தை மனதில் பதித்தல்

3) ஆசிரியரிடம் கற்ற பாடத்தைப் பலமுறை நினைவூட்டல்

4) ஆசிரியர் அருகில் அமர்ந்து மனதில் பதியுமாறு பாடம் கேட்டல்.

5) தலை மாணாக்கருடன் பழகிப் பாடத்தைப் பயிற்சி செய்தல்

6) ஐயம் தீர்க்குமாறு வினாதல்

 

7. இருமுறை கேட்க

 

ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின்

பெருக நூல் இல் பிழைபாடு இலனே                                                          42

 

இருமுறை பாடம் கேட்டால் - பிழை இன்றி அறியலாம்

 

8. மும்முறை கேட்க

முக்கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்

மூன்று முறை பாடம் கேட்டால் - தானே பிறருக்குச் சொல்லும் திறன் பெறலாம்.

 

9. காற்புலமை

 

ஆசான் உரைத்தது அமைவர கொளினும்

கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்                                                          44

 

ஆசிரியரிடம் கற்கும் பொழுது கால் பங்கும்

 

10. அரைப் புலமை

 

அவ்வினை யாளரொடு பயில் வகை ஒருகால்

செவ்விதின் உரைப்ப அவ் இரு கால் உம்

மையறு புலமை மாண்புடைத்து ஆகும்                                                    45

    

திறனுடைய மாணவருடன் பழகுப்பொழுது கால் பங்கும்   தன் சார்புடையவர்க்குப் பயிற்றுவிக்கும் பொழுது அரைப் பங்கும்   என முழுமை அறிவு பெறலாம். இவற்றைக் கடமையாகக் கொண்டால் மாணவனின் அறியாமை மிகுதியாகவும் உறுதியாகவும் அகலும்.

 

11. ஆசிரியருடன் மாணவர் பழகும் முறை

 

அழல் இன் நீங்கான் அணுகான் அஞ்சி

நிழல் இன் நீங்கான் நிறைந்த நெஞ்சம் ஓடு

எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம்

அறத்த இன் திரியா படர்ச்சி வழிபாடு ஏ                                                46

 

 ஆசிரியரை எவ்வாறு வழிபடுவது என்பதை நன்னூலார் மாணாக்கர்களுக்குத் தெளிவுபடுத்துகிறார். அந்தவகையில் நெருப்பில் குளிர் காய்பவன் நெருங்காமலும் விட்டு நீங்காமலும் இருப்பான். அவ்வாறே ஆசிரியரிடமும் பழகி  வழிபட வேண்டும் நிழலைப் போன்று பின்தொடர வேண்டும் . ஆசிரியருக்கு எது மகிழ்வைத் தருமோ அதற்கு மாறுபாடாமல் திகழ வேண்டும். இதனை என நன்னூலார் விவரிக்கின்றார். இவ்வாறு ஆசிரியர் மனம் மகிழும்படி மாணாக்கார்கள் நடந்துகொள்வதே அறத்தின் வழிச் செய்யும் ஆசிரிய வழிபாடாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக