வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 18 நவம்பர், 2009

இரும்பிடர்த்தலையார்
தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில், “இரும்பிடர்த்தலையார்“ என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், “செவியறிவுறூஉ“ என்னும் புறத்துறையையும் விளக்குவதாக இவ்விடுகை அமைகிறது.

பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடிய புறநானூற்றுப்பாடலில் எடுத்தாளப் பெற்ற “இரும்பிடர் தலையிருந்து“ என்னும் தொடரால் “ இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார்.

நிலம் பிறழ்ந்து பெயர நேர்ந்தாலும் உன் ஆணையாகிய சொல்லில் மாறாதே என்று மன்னனுக்குப் புலவர் அறிவுறுத்தியதால் இப்பாடலின் துறை “செவியறிவுறூஉ“ ஆயிற்று.


பாடல் இதோ,


உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக!
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின்
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மை யானே.


3.வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.

பாடலின் பொருள்.

முழு மதியின் வடிவத்தைப் போல விளங்குகின்ற உயர்ந்த வெண்கொற்றக் குடை!
அது நிலைத்த கடற்பரப்பை எல்லையாக உடைய நிலத்தை, நிழல் செய்யவும் காவலாக அமைத்த முரசு, இழும் என்னும் ஓசையுடன் முழங்கவும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தியவர் பாண்டியர்!
அருளுடைய நெஞ்சமும் குறையாத ஈகையும் கொண்டவர். அத்தகைய பாண்டிய மரபிலே வந்தவனே!
குற்றமற்ற கற்பினையுடைய சேயிழையின் (மனைவி, பெண்) கணவனே!

பொன்னாலாகிய பட்டத்தையும் புள்ளியையுடைய நெற்றியையும் நெருங்க முடியாத வலிமையையும் மணம் வீசும் மதநீரையும், கயிற்றால் கட்டிய கவிழ்ந்த மணிகள் பொருந்திய பக்கங்களையும் பெரிய துதிக்கையையும் கொண்டது உனது யானை!
அது தன் தந்தங்களையே போர்க்கருவியாகக் கொண்டு பகைவர் மதிலின் கதவுகளைக் குத்தும்!
அத்தகைய யானையின் கழுத்தின் மேல் அமர்ந்து கூற்றுவனைப் போல, பகைவர் மீள வழியின்றி வீழ்த்தும், ஒளி வீசும் வாளைக் கையில் கொண்டவனே!

பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த காலும், பூசப்பட்டு உலர்ந்த சந்தனத்துடன் குறுக்கே அகன்ற மார்பையும் கொண்டவனே!
நீரில்லாத அரிய நில வழிகளில் மறவர்களின் அம்புக்கு இலக்காகி இறந்தவர்களின் அடையாளமாக அங்கு கற்குவியல்கள் காணப்படும். அதன் மீது திருந்திய சிறகினையும், வளைந்த வாயினையும் உடைய பருந்து அமர்ந்து வருந்தும்.
உன்ன மரங்கள் வளர்ந்து பிரிந்து செல்லும் வழிகள் விளங்கும்.

இத்தகைய வழிகளைக் கடந்து உன்னிடம் பொருள் பெறும் எண்ணத்துடன் இரவலர் வருவார்கள். அவர்களின் மனக்குறிப்பை முகக்குறிப்பாலேயே உணரும் திறன்கொண்டவன் நீ என்பதால் உன்னை இரந்து வேண்டுவர்.

அதனால் நிலமே பெயர்வதாயினும் உன் ஆனையாகிய சொல் மாறக்கூடாது. என்று மன்னனிடம் இந்தப் புலவர் அறிவுறுத்துகிறார்.

இப்பாடலின் வழி அறியாலுகும் உண்மைகள்


1. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத நிலையில் இப்பாடலில் இடம்பெறும், “இரும்பிடர்த் தலையிருந்து“ என்னும் தொடரால் இப்புலவர் இரும்பிடர்த்தலையார் என்னும் பெயர் பெற்றார் என்னும் கருத்து புலப்படுகிறது.

2.எமனிடமிருந்து உயிர்கள் பிழைப்பது அரிது என மக்கள் எண்ணுவர். அது போல பாண்டியனிடமிருந்து பகைவர் பிழைத்தல் அரிது. என்ற கருத்தின் வழியாக பாண்டியனின் வீரம் உணர்த்தப்படுகிறது.

3.யானையின் வீரத்தையும், அதன் மீது அமர்ந்து போர்செய்யும் பாண்டியனின் வலிமையையும் கூறுவதால், பாண்டியனின் படைச்சிறப்பும், அதை வழிநடத்தும் ஆற்றலும் சுட்டப்படுகிறது.

4.நீரில்லாத பாலை வழியே வரும் மக்களை அம்பெய்து கொல்லும் ஆறலைக்கள்வர்கள் இறந்த உடல்களின் மீது கற்களைக் குவியல்களாகப் போடுவர். வழிச்செல்வோர் “வம்பலர்“ என்றழைக்கப்படுவர். அவர்கள் மீது இடப்பட்ட கற்க்குவியல் ஆதலால் அதை “வம்பப் பதுக்கை“ என்று அழைத்தமையும் அறியமுடிகிறது.

5.“முன்னம் முகத்தின் உணர்ந்து“ என்னும் தொடர் வழியாக,உன்னம் என்ற மரம் தழைத்தலும், கரிந்து நிற்றலும் சகுனங்களாகும் என்ற சங்க கால நம்பிக்கையைத் தெரிந்துகொள்ளலாம்.

6.பாலை நிலத்தின் கொடுமையும், ஆறலைக்கள்வர்களின் கொடுமையும், அந்நில வழியே பல துன்பங்களைக் கடந்து பாண்டியனை நம்பி வரும் இரவலர்களின் வறுமையும் குறிப்பிடும் புலவர், இரவலர்களின் மனக்குறிப்பை அவர்களின் முகக்குறிப்பாலேயே புரிந்து கொண்டு கொடையளிக்கும் தன்மையுடையவன் பாண்டியன் என்று கூறுவதால் பாண்டியனின் கொடைத்திறனும் சுட்டப்பட்டது.

7.நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்..
என்று பாண்டியனின் செவிகளில் புலவர் அறிவுறுத்துகிறார். இதன் வழி இரவலர் உன் மீது கொண்ட நம்பிக்கையும்,உன் செங்கோலும் வழுவாது ஆடசி செய்தல் வேண்டும் என்ற அறிவுத்தல் புலனாகிறது....

மேலும் நிலம் பெயரும் (நிலநடுக்கம் ஏற்படும்) என்ற சங்க கால மக்களின் எண்ணத்தையும்,
அவ்வாறு நிலம் பெயர்ந்தாலும் தம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடாது என்ற சங்ககாலமக்களின் ஆழ்ந்த கொள்கையையும் எண்ணிப்பெருமிதம் கொள்வதாக இப்பாடல் அமைகிறது.

8 கருத்துகள்:

 1. இதுவரை நான் அறியாத பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 2. சற்று கடினமான பாடல்கள் நீங்கள் விளக்கிய விதம் அருமை குணா

  பதிலளிநீக்கு
 3. 2 Comments
  Close this window Jump to comment form

  Blogger சந்ரு said...

  இதுவரை நான் அறியாத பல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்//

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு..

  பதிலளிநீக்கு
 4. தமிழரசி said...

  சற்று கடினமான பாடல்கள் நீங்கள் விளக்கிய விதம் அருமை குணா//

  நனறி தமிழ்..

  பதிலளிநீக்கு
 5. முனைவரே. இவ்வளவு பெருமைகள் கொண்ட பாண்டியனுக்கு இந்த அறிவுரையை புலவர் தர வேண்டிய தேவை என்ன வந்தது என்று எண்ணி வியக்கிறேன். புலவரின் பெயரைப் போல் இந்தப் பாண்டியனின் பெயரும் தெரியவில்லை போலும்; பாடல் வரிகளைக் கொண்டே பாண்டியன் பெயரையும் சொல்லும் மரபு வந்திருக்கிறது. புறநானூறு தொகுக்கப்பட்டதற்கு வெகு காலத்திற்கு முன்பே இப்பாடல் புனையப்பட்டிருக்க வேண்டும்; அதனால் தான் பாடியவர் பெயரும் பாடப்பட்டவர் பெயரும் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. பாண்டிய மன்னனின் பெயரைப் பாடப்பட்டோன் -பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.

  என்று குறிப்பிட்டிருக்கிறேனே..
  தாங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. நண்பரே. பாடியவர் பெயரையும் தான் 'இரும்பிடர்த்தலையார்' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் - அதனால் அது தான் அவரது இயற்பெயர் என்று ஆகிவிடுமா? இந்தப் பாடலில் வரும் ஒரு தொடரை வைத்துத் தானே அவரும் குறிக்கப்படுகிறார்? அதே போல் தான் பாடப்பட்டவரது பெயரையும் நான் காண்கிறேன். பாண்டியன் என்பதும் வழுதி என்பதும் பொதுப்பெயர்கள்; கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் என்ற சொற்றொடர் இப்பாடலில் பயின்று வருகிறது - பொருளைப் பார்க்கும் போதே அது இயற்பெயர் இல்லை; பாடப்பட்டவனைப் போற்றும் சொற்கள் என்று தெரிகிறதே. அதனால் தான் பாடப்பட்ட பாண்டியன் பெயரும் தெரியவில்லை என்று சொல்கிறேன்.

  இயற்பெயர் தெரியாமல் பாடலில் வரும் சொற்றொடரை வைத்துப் பெயர் பெற்ற புலவர்களின் பட்டியலை யாரோ தொகுத்திருக்கிறார்கள் (நீங்களாகக் கூட இருக்கலாம்); அந்தப் பட்டியலின் படி நீங்கள் இந்தத் தொடர் இடுகைகளை எழுதி வருகிறீர்கள். பாடப்பட்டவரின் பெயர் தெரியாமல் பாடலில் வரும் சொற்றொடரை வைத்துப் பெயர் கொள்பவரைப் பற்றிய பட்டியல் எடுக்கப்பட்டால் அதில் இந்தப் பாடலுக்குரியவரின் பெயரும் வரும். இது வரை யாரும் இந்தப் பட்டியலை எடுக்கவில்லை என்றால் ஆய்வாளர் யாரேனும் எடுத்து இதனைச் செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 8. புதிய சிந்தனையைத் தூண்டியுள்ளீர்கள் நண்பரே..

  தங்களின் ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி!!!

  பதிலளிநீக்கு