வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 30 ஜூன், 2009

ஈமத்தாழி(ஈமத்தாழி – இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்.)

தமிழர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. பழங்கால மனிதன் விலங்குகளைப் போல் வாழ்ந்தான். பின் இனக்குழுவாகவும், நிலவுடைமைச் சமூக வாழ்வும் வாழ்ந்து பண்பாட்டு வளர்ச்சி பெற்றான். இப்பண்பாட்டுக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.
இனக்குழுவாக வாழ்ந்தபோது வயது முதிர்ந்தவர்களைத் தம்முடன் வேட்டையாட அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலைகளில் அம்முதியவர்களைப் பெரிய தாழிகளில் வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துச் சென்றிடுவர் எனப் பண்பாட்டு மானுடவியல் கூறுகிறது.

சங்கப்பாடல்கள் பலற்றிலும் ஈமத்தாழி பற்றிய குறிப்பு காணப்படுகிறது.


இறந்த மனிதன் மீண்டும் கருவுற்றுப் பிறக்கிறான் எனற நம்பிக்கைப் பழந்தமிழரிடையே இருந்திருக்கிறது. அதனால் அவன் மறுபிறப்புக்குத் தேவையான எலும்புகளையும் , அவன் பயன்படுத்திய பொருட்களையும் அத்தாழிகளில் இட்டுப் புதைத்தனர். மேலும் அந்த தாழிகள் தாயின் கருவரைபோலவே வடிவமைக்கப்பட்டது குறிப்பித்தக்கது. கிடைத்த ஈமத்தாழிகளின் கழுத்துப்பகுதியில் தொப்புள்கொடிபோன்ற வடிவமைப்பு அக்கால மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.


சான்று – 1.

(இறந்தவரை அடக்கும் தாழி அவரது பெருமைக்கு ஏற்ப மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்பது சங்கத்தமிழர் மரபு. )

ஐயூர் முடவனார் என்னும் புலவர், தம் அரசன் இறந்துவிட்டான், அவன் புகழுக்கு ஏற்ப பெரிய தாழியை உன்னால் செய்யமுடியுமா? என்று கேட்பதாக புறநானூற்றுப் பாடல் ஒன்று அமைந்துள்ளது.

மண்ணில் கலங்கள் செய்யும் குயவனே....!
இருள் திரண்டு ஓரிடத்தே நின்றது போன்ற ஆகாயத்தில் சென்று தங்கும் சூளை ஒத்த இடமகன்ற பழைய ஊரில் கலங்களைச் செய்கின்ற குயவனே.......!
நீ இரங்கத்தக்கவன்....!
நீ எவ்வளவு வருந்தப் போகிறாய்............?

பெரிய போர்ப்படையை உடையவன்,
அறிவுடைய மாந்தர்களிடம் புகழ் பெற்றவன்,
சூரியனைப் போல தலைமைப் பண்புடையவன்,
செம்பியன் மரபினன்,
கொடிகள் அசையும் யானைகளுக்குச் சொந்தக்காரன்,
எனப் பல்வேறு பெருமைகளையும் கொண்டவன் சோழன் அத்தகைய அரசன் இறந்துவிட்டான்.......
அவன் புகழுக்கு இணையான பெரிய தாழியைச் செய்ய நீ எங்கு போவாய் ..........

உன்னைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது........
என்கிறார் புலவர்.

இப்பாடல் வாயிலாக சங்க காலத்தில் இறந்தவரின் புகழுக்கு இணையான பெரிய தாழியை செய்து அவரைப் புதைக்கவேண்டும் என்ற மரபு புலனாகிறது.
இதனை,“கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?“

புறநானூறு 228.
என்னும் பாடல் இயம்புகிறது.

சான்று – 2

பெண் ஒருத்தி தன் கணவனுடன் சுரத்திடையே வந்துகொண்டிருந்தாள். அப்போது உண்டாகிய போரில் விழுப்புண் பட்ட கணவன் இறந்து போனான். அதனால் தனிமையுற்ற தலைவி ஊர்க்குயவனிடம் பேசுவதாக இப்பாடல் உள்ளது.

கலம் செய்யும் குயவனே.......!
பெரிய இடத்தைக் கொண்ட தொன்மையான இவ்வூரில் கலம் செய்யும் குயவனே.......!

வண்டிச் சக்கரத்தில் உள்ள பல்லியைப் போல நான் தலைவனுடன் இன்ப, துன்பங்களில் ஒன்றாகவே வாழ்ந்துவிட்டேன். இப்போது அவன் மட்டும் என்னை நீங்கி இறந்து போனான். நான் மட்டும் தனியாக வாழ விரும்பவில்லை.

அதனால் நானும் அவனோடு இருப்பது போன்ற மிகப் பெரிய தாழியைச் செய்வாயாக....
என்கிறாள் தலைவி..
தன் கணவன் இறந்துவிட்டாலும் தானும் அவனோடு இறந்துவிடவேண்டும் என்ற தலைவியின் அன்போடு
இறந்தவரைத் தாழிகளில் வைத்துப் புதைக்க வேண்டும் என்ற தமிழர் மரபும் இப்பாடல் வழிப் புலனாகிறது
.இதனை

“கலம்செய் கோவே : கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!“

(புறநானூறு -256)
என்னும் பாடல் உணர்த்துகிறது.

இப்பாடல்கள் வழியாகப் பழந்தமிழர் இறந்தவர்களை பெரிய ஈமத்தாழிகளில் வைத்துப் புதைக்கும் மரபினை அறியமுடிகிறது.

வியாழன், 25 ஜூன், 2009

குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்....
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்.

நெடு 87-88.

இவ்வடிகள் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் நெடுநல்வாடையில் இடம்பெற்றுள்ளன. இவ்வடிகள் வாயிலாக சங்கத்தமிழர்தம் கட்டிடக்கலை மாட்சி விளங்குகிறது.

கோபுர வாயிலானது வெற்றிபெற்ற வீரன் யானையோடு நுழையும் போதும் உயரம், அகலம் போதுமானதாக இருந்தது. அதாவது,

வெற்றிபெற்ற வீரர்கள் மகிழ்வுடன் யானை மீது வருவர். யானையின் உயரம், அமர்ந்திருக்கும் வீரர்களின் உயரம்,கையில் தாங்கிய கொடியின் உயரம் என யாவும் வாயிலில் இடிக்காதவாறு வாயிலானது நல்ல உயரமாகவும் அகலமாகவும் கட்டப்பட்டிருந்தது. அந்த வாயிலைக் காணும் போது மலையைக் குடைந்து கட்டப்பட்டிருந்தது போல இருந்தது.

வாயிலின் சிறப்பே இங்ஙனம் இருந்திருந்தால் மாட மாளிகை, கூட கோபுரங்கள் என எவ்வளவு சிறப்பாக சங்கத்தமிழர் வாழ்ந்திருப்பர் என்று எண்ணத்தோன்றுகிறது.

செவ்வாய், 16 ஜூன், 2009

தமிழ் பிடிஎப் கோப்புகளை வேர்டுக்கு மாற்ற.......

தமிழ் நூல்கள் பலவும் இன்று பிடிஎப் வடிவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல்லாயிரம் பக்கங்களை ஒரே புள்ளியில் அடக்கிவிடுவதாலும், எழுத்துருச் சிக்கலின்றி இருப்பதாலும் இம்முறை மிகுதியான பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழ் பிடிஎப் கோப்புகளை வேர்டு முறைக்கு மாற்றுவதைப்பற்றி சென்ற இடுகையில் தமிழில் பிடிஎப் செய்யலாம் ( இவ்வலைப்பதிவில் இணையதள தொழில் நுட்பம் என்னும் பிரிவில் உள்ளது)
என்ற தலைப்பில் கண்டோம்.

இந்தக்கட்டுரையில் தமிழ்ப் பிடிஎப் கோப்புகளை வேர்டு வடிவில் மாற்றுவது பற்றி காண்போம்.

வழிமுறை - 1

கூகுளில் சென்று பிடிஎப் 2 வேர்டு என்று தேடினால் பல இணையதளங்களின் முகவரிகள் கிடைக்கும். அவற்றுள் இலவசமான சேவை வழங்கும் இணையதளங்களைத் தேடிப் பெற வேண்டும். அப்படி ஒரு இலவச சேவை வழங்கும் இணையமாக,
http://hellopdf.com/download.php/


இவ்விணையத்தைக் குறிப்பிடலாம்.

இவ்விணையதளத்திற்குச் சென்று பதிவிறக்க முற்பட்டால் மூன்று பதிவிறக்க முகவரிகள் கிடைக்கும். மூன்றில் எதில் வேண்டுமானாலும் பதிவிறக்கிக் கொள்ளலாம். பதிவிறக்கிய பின்பு, அதனை நம் கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். அப்போது கீழே உள்ளது போல ஒரு பக்கம் தோற்றமளிக்கும்.
இதில் இடது புறமுள்ள பட்டியலில் பிரௌசிங் செய்து நாம் மாற்றம் செய்ய வேண்டிய பிடிஎப் கோப்பினைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு கீழுள்ள பகுதியில் கன்வர்ட் டு வேர்டு என்பதை சொடுக்கினால் நம் கோப்பு மாற்றம் செய்யப்பட்டு திறக்கும். அதனை சேமித்துக் கொள்ளலாம். இம்முறையில் மாற்றம் செய்யும் போது, இன்னொரு சிக்கலும் ஏற்படும். மாற்றம் செய்த வேர்டு கோப்பின் எழுத்துருவில் தான் அக் கோப்பினைப் பயன்படுத்த முடியும். அந்த எழுத்துரு நம்மிடம் இருந்தால் அவ்வெழுத்துரு வாயிலாகவே பயன்படுத்திக் கொள்ளலாம் மாறாக அவ்வெழுத்துரு இல்லாத நிலையில் பொங்குதமிழ் எழுத்துரு
(http://www.suratha.com/reader.htm) வாயிலாக நமக்குத் தேவையான எழுத்துருவாக மாற்றியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.வழிமுறை - 2

நாம் வேர்டாக மாற்ற வேண்டிய பிடிஎப் கோப்பினைத் திறந்து கொள்ளவேண்டும். அதில் I போன்ற வடிவத்தில் உள்ள செலக்ட் டூலின் வாயிலாக நாம் வேர்டாக மாற்ற வேண்டிய பக்கங்களைக் காப்பி செய்து கொண்டு அதனை பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி வாயிலாக மாற்றி, பின் அதனைப் புதிய வேர்டு கோப்பாகச் சேமித்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெள்ளி, 12 ஜூன், 2009

வெறியாட்டு

இது ஒரு அகத்துறையாகும். அகவாழ்வில் நிகழ்த்தப்படும் கூத்தாக இவ்வெறியாட்டு சிறப்பிக்கப்படுகிறுது.
அகவாழ்வில் தலைவனின் பிரிவால் தலைவிக்கு உடல் மெலிவு உள்ளிட்ட மாறுபாடுகள் தோன்றும். அதனைக் கண்டு செவிலித்தாய், நற்றாய் உள்ளிட்டோர் இம்மெலிவு தெய்வத்தால் நேர்ந்த குறை என்று கூறுவர். அதற்காக முருகனுக்குப் பூசை செய்து இக்குறையைப் போக்க முயல்வர்.

இரவில் பூசை தொடங்கும் வேலன் என்னும் பூசாரி தினையை குருதியில் கலந்து எறிந்து முருகனைக் கூவி அழைப்பான். கழற்சிக் காயிட்டு தலைவிக்கு வந்த நோய்க்கு முருகனே காரணம் என்று உரைப்பான். இதுதான் வெறியாட்டு ஆகும்.

காட்சி -1.

இப்படி ஒரு தலைவிக்கு அவளின் உடல் மாறுபாடு கண்டு வெறியாட்டு எடுத்தனர். வழக்கம் போல வேலனாக வந்த மலைநாட்டுப் பூசாரி தலைவியின் மெலிவுக்குக் காரணம் முருகன் என்று கூறுகிறான்.
சினம் கொண்டாள் தலைவி. தன் மெலிவுக்குக் காரணம் தலைவன் என்பதை அறிந்த முருகக் கடவுளே பூசாரி அழைத்தான் என்று வந்துவிடுவதா?
கடவுளாகவே இருந்தாலும் தன்னறிவு வேண்டாமா? என்று கடவுளாகிய முருகனையே நொந்து கொள்கிறாள்.
சரி வந்தது தான் வந்துவிட்டாய் இனிமேலாவது இது போன்ற இடங்களுக்கு வராதே என்று முருகனிடம் உடன்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்கிறாள் தலைவி.இதனை,

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக,
மடவை மன்ற, வாழிய முருகே!


பிரமசாரி என்னும் புலவர் நற்றிணையில் விளக்கியுள்ளார்.காட்சி – 2

தலைவி தலைவனின் பிரிவால் உடல் மெலிவுற்றாள். அது கண்டு பெற்றோர்; வெறியாட்டு எடுத்தனர். அதனால் தோழி தலைவனை நொந்து கொண்டாள். அச்சூழலில் அயலே தலைவன் வந்து மறைந்து நின்றான். அப்போது தலைவி கூறுவதாக இப்பாடல் உள்ளது.

'அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய் தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?


- வெறிபாடிய காமக்கண்ணியார்
என்பது வெறியாட்டை உணர்த்தும் பாடலாகும்.இப்புலவருக்கு இப்பாடலின் சிறப்புக் கருதி வெறிபாடிய காமக்கண்ணியார் என்னும் பெயர் நிலைபெற்றது.

இப்பாடலின் பொருள்,

தோழி…..
மலை உச்சியிலிருந்து வீழும் அருவிக்கூட்டங்களைக் கொண்ட காடு பொருந்திய நாட்டையுடையவன் தலைவன். அத்தலைவன் என்னைத் தழுவிப் பிரிந்ததால் எனக்கு உடல் மெலிவு ஏற்பட்டது. அதனை அறியாது என் பெற்றோர் வெறியாட்டு எடுத்தால் இத்துன்பம் தீரும் என எண்ணுகின்றனர். வேலனும் (மலை நாட்டுப் பூசாரி) வெறியாடும் களத்தை நன்கு அமைத்து முருகனுடைய வேலுக்கு மாலை சூடினான். சத்தமாகப் பாடிப் பலி கொடுத்தான். அழகிய சிவந்த தினையினை குருதியுடன் கலந்து தூவி முருகனை வருமாறு அழைத்தான்.

அச்சம் பொருந்திய அந்நள்ளிரவில் பல மணமிக்க மலர்களை அணிந்த தலைவன், வலிமையான களிற்றைத் தாக்க வரும் புலியின் பார்வையோடு யாரும் அறியாவண்ணம் என்னைக் கண்டு தழுவிச் சென்றான். என் உடல் மெலிவும் நீங்கியது.

இவ்வாறு என் உடல் மாற்றத்துக்கான காரணத்தை அறியாது வெறியாட்டெடுக்கும் பெற்றோரின் செயலால் சிரிப்புத் தான் தோன்றுகிறது என்கிறாள் தலைவி.


காட்சி – 3

சிறைப்புறமாகத் தலைவன் நிற்க அவன் தலைவியை வரைந்து கொள்தல் எண்ணித் தோழி கூறுவதாக இப்பாடல் உள்ளது.

“ தலைவிக்கு ஏற்பட்ட உடல் மெலிவுக்குக் காரணம் தெய்வக்குறை என எண்ணி வெறியாட்டு எடுக்கின்றனர் பெற்றோர்.

தலைவியின் உடல் மெலிவுக்குக் காரணம் நானனல்ல, ஒரு தலைவன் என்று முருகக் கடவுள், தாய்க்குக் குறிப்பாலோ, கனவிலோ உணர்த்தினால் என்ன? என்று தோழி தலைவியிடம் கேட்பதாக இப்பாடல் அமைகிறது.
இதன் வாயிலாக தலைவன் தலைவியின் நிலையறிந்து வரைந்து கொள்வான் என்பது கருத்தாகும்.


சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும்,
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும்,
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி,
வெறி என உணர்ந்த அரிய அன்னையை,
கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய்
என்னினும் வாராது; மணியின் தோன்றும்
அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின்,
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின்
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?-
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே.சங்க கால வெறியாட்டு மரபு அப்படியே சிற்றிலக்கியங்களிலும் காணமுடிகிறது.

முத்தொள்ளாயிரத்தில் ஒரு தலைவியின் உடல் மெலிவு கண்டு இதே போல வெறியாட்டு எடுக்கின்றனர். அதனை,


“காராட் டுதிரம் தூஉய் அன்னை களன்இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ! -போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சினவேற் கோதேக்கென்
நெஞ்சங் களங்கொண்டநோய்!“ ( முத்தொள்ளாயிரம் 11)

இப்பாடல் உணர்த்துகிறது.

வேலன் வருகிறான் காராட்டை பலிகொடுத்து , அழகான வெறியாட்டக் களம் அமைத்து என்னை நீராட்டி எனக்கு வந்த நோயோ நீங்கிப் போ என்று சொல்கின்றனர். என் தலைவனால் என் நெஞ்சில் களம் கொண்ட இந்நோய் வெறியாட்டு எடுத்து நீராடுவதால் நீங்கிச் செல்லும? என்று அவர்களின் செயல்கண்டு தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறாள்.

இன்றைய காலத்திலும் கிராமங்களில் பெண்களுக்கு ஏற்பட்ட உடல் மாறுபாடுகளைக் கண்டு பேய் ஓட்டுகிறேன் என்று கோடாங்கியிடம் சென்று பூசை நடத்துவதுண்டு.

பெண்களுக்கு மனதில் ஏற்பட்ட மன அழுத்தமே அவர்களின் உடல்மாறுபாட்டுக்கு அடிப்படைக் காரணமாகும்.அதனை அறியாது சங்க காலத்தில் வெறியாட்டு எடுத்தனர். அடுத்து வந்த காலத்தில் பெண்ணுக்குப் பேய்தான் பிடித்திருக்கிறது என்று எண்ணி பேய் ஓட்டினர்.

ஆனால் சங்க காலத்தில் வெறியாட்டு, தலைமக்கள் களவு வாழ்விலிருந்து கற்பு வாழ்வுக்கு மாற அடிப்படையான ஒன்றாக இருந்தது. இது போன்ற சூழல்களில் தலைவியைக் காண வரும் தலைவனிடம் தோழி பேசுவாள்,
பார்த்தாயா? தலைவி எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறாள் என்று அதனால் விரைவில் மணந்து கொள் என்று வரைவு கடாவுவாள்..

இதுவே வெறியாட்டு என்னும் அகத்துறையாகும்.

செவ்வாய், 9 ஜூன், 2009

மகன் இறந்தும் மகிழ்ந்த தாய்.

மகன் இறந்தால் எந்தத் தாயாவது மகிழவாளா? சங்ககாலத் தாயொருத்தி தன் மகன் இறந்தது அறிந்து மிகவும் மகிழ்ந்தாளாம். அதுவும் தன் மகன் பிறந்த போது இருந்த மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியோடு இருந்தாளாம்.
இது என்ன விந்தை என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவள் மகிழ்ந்ததற்கான காரணம் அக்கால மக்களுடைய வீரத்தை இயம்புவதாகவுள்ளது.

277.மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
(புறநானூறு 277)

பாடியவர்: பூங்கணுத்திரையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

என்பது பாடலாகும்.
( மாலையையோ அல்லது பூவையோ அணிந்து பகைவரோடு போர் புரிதல் தும்பையாகும்.)

மீனை உண்ணக்கூடிய கொக்கின் சிறகினைப் போல வெண்மையான நரைத்த கூந்தலை உடைய முதியவள் ஒருத்தி இருந்தாள். அவளின் இளைய மகன் தன்னைத் தாக்கவந்த யானையைக் கொன்று தானும் இறந்து போனான். இச் செய்தியைக் கூறக் கேட்ட தாய், அவனை ஈன்ற பொழுதினும் உவகை மிகக் கொண்டாள்
( உவகை – பெருமகிழ்ச்சி ) அவள் சிந்திய கண்ணீர் வலிய மூங்கில் அசைகின்ற வெதிர மலையில் பெய்த வான் மழை . மூங்கிலினின்று சொட்டும் மழைத்துளியினும் மிகுதியாகும். இப்பாடல் வழியாக சங்க காலப் மகளிரின் வீரம் உணர்த்தப்படுகிறது.

திங்கள், 8 ஜூன், 2009

பழந்தமிழர் விளையாட்டுக்கள் – 36.

விளையாட்டு என்றவுடன் கிரிக்கெட், கால்ப்பந்து, டென்னிஸ் ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகிறது.
ஏனென்றால் அவ்விளையாட்டுகளில் தான் பணம் கிடைக்கிறது.

பணத்துக்காக விளையாடுகிறார்கள் – பணம் விளையாடுகிறது.

உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கிறதா?
சீனா போன்ற நாடுகளில் திறமைக்குத் தான் மதிப்பளிக்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளியிலேயே சென்று அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் திறமையை வளர்க்கிறார்கள். அதனால் அந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.


விளையாட்டு என்றால் என்ன?
இவை மட்டும் தான் விளையாட்டுகளா?


o விளையாட்டு என்பது பொழுது போக்கமட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வது.
o பழந்தமிழர் ( ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்) பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். உடலையும் மனதையும் நலமாக வைத்திருந்தனர். அவ்விளையாட்டுக்களை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.1.அசதியாடல்(இருபாலர்) நகைச்சுவையாகப் பேசி மகிழ்தல்

2.அம்புலி அழைத்தல்(இருபாலர்) நிலாவை அழைத்து விளையாடுதல்

3.அலவன் ஆட்டல்(இருபாலர்) நண்டைப் பிடித்து விளைளயாடுதல்

4.உலாவல்(இருபாலர்) இயற்கையான சூழலில் நடந்து செல்லுதல்

5.ஊசல்(இருபாலர்) மரத்தில் கயிறு கட்டி முன்னும் பின்னும் ஆடி விளையாடுதல்

6.எண்ணி விளையாடல்(இருபாலர்) ஒன்று,இரண்டு என்று மரத்தையோ,நாவாயையே,விலங்குகளையோ எண்ணி பொழுது போக்காக ஆடுதல்.

7.எதிரொலி கேட்டல்(பெண்) மலைப்பகுதிகளில் ஒலி எழுப்பித் திரும்பிக் கேட்கும் ஒலி கேட்டு விளையாடுதல்.

8.ஏறுகோள்(ஆண்) மாடு பிடித்தல். இன்று ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு,ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் வலிமையான மாட்டைப் அடக்குபவனையே பெண்கள் திருமணம் செய்து கொண்டனர்.

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்’

என்கிறது கலித்தொகை வலிமையான காளையை அடக்கிய ஆடவனையே சங்க காலமகளிர் திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு காளையை அடக்க முடியாத ஆடவனை அடுத்த மறுபிறவியிலும் விரும்ப மாட்டேன் என்கிறாள் இந்தப் பெண்.

9.கண் புதைத்து விளையாடல்(பெண்) இன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது

10.கவண்(பெண்) கிளைத்த கம்புகளில் வாரைக்கட்டி அதில் கல்லை வைத்து எறிந்து விளையாடுதல்.

11.கழங்கு(பெண்) சொட்டாங்கி என்று கிராமங்களில் இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது.

12.குதிரையேற்றமும், யானையேற்றமும்(ஆண்)
குதிரை, யானை ஆகியவற்றை அடக்குவதாகவும், தம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகவும் இவ்விளையாட்டு அமைந்தது.

13.குரவை(பெண்) இது ஒரு வகையான கூத்து. பெண்கள் ஆடுவது மரபு.

14.சாம விளையாட்டு(ஆண்) இரவில் ஆண்கள் விளையாடும் விளையாட்டு.

15.குறும்பு விளையாட்டு (இருபாலர்) நகைச்சுவையாக விளையாடுவது.

16.சிறுசோறு(பெண்) பெண்கள் சோறு சமைப்பது போல விளையாடுவது.

17.சிறுதேர்(ஆண்) முக்காற்சிறு தேர் உருட்டி விளையாடுவது.

18.சிறுபறை(ஆண்) பறை என்பது தோலால் ஆன இசைக்கருவி. இதனை இசைத்து மகிழ்வது இவ்விளையாட்டாகும்.

19.சிற்றில் சிதைத்தல்.(ஆண்) பெண்கள் கட்டிய சிறு வீட்டை ஆண்கள் இடித்து விளையாடுவது.

20சுண்ண விளையாட்டு(பெண்) நறுமணம் வீசும் பல நிறப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவது.

21.சூது(இருபாலர்) ஏதாவது ஒரு பொருளை ஈடாக வைத்து விளையாடுவது.

22.செடி கொடி வளர்ப்பு(பெண்) சங்க கால மக்கள் இயற்கையாயோடு இயைபுற்று வாழ்ந்தார்கள். செடி கொடி வளர்ப்பதையே பெண்கள் ஒரு விளையாட்டாகச் செய்தனர்.

23.நீர் விளையாட்டு(இருபாலர்) நீரில் குதித்து விளையாடுதல், அங்கு வரும் நண்டுகளைப் பிடித்து விளையாடுதல்.

24.பந்து(இருபாலர்) பந்தினை வைத்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர்.

25.பறவைகளைக் காணுதலும் அவற்றைப் போலச்

செய்தலும்
(இருபாலர்)

மொழியின் தோற்றக்கூறுகளுள் போலச் செய்தலும் ஒன்றாகும். சங்ககாலத்தில் பெண்கள் பறவைகளைக் கண்டு அவற்றின் ஒலியைப் போலச் செய்து மகிழ்ந்தனர்.

26.பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்(பெண்) பறவை, விலங்குகளை வளர்ப்பதை சங்க கால மகளிர் ஒரு விளையாட்டாகவே கொண்டிருந்தனர்.

27.பறவை விலங்குகளுடன் விளையாடுதல்(இருபாலர்) பறவை, விலங்குகளோடு விளையாடுவதை இருபாலரும் விளையாட்டாகக் கொண்டனர்.

28.பாவை விளையாட்டு(பெண்) பொம்மை போல செய்து விளையாடுவது.

29.பிசி நொடி விளையாட்டு(பெண்)
விடுகதை கூறி விளையாடுவது.

30.மணற்குவியலில் மறைந்து விளையாடல்(பெண்)
பெரிய மணற்குவியல்களில் மறைந்து ஒருவரை ஒருவர் கண்டு விளையாடினர்.

31.மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும்(பெண்)
பல விதமான மலர்களையும் கொய்து மாலையாக்கி மகிழ்ந்தனர்.

32.மல்(ஆண்) ஆடவர் இருவர் ஒருவரை ஒருவர் தம் வலிமையால் அடக்க முற்படுதல் இவ்விளையாட்டின் அடிப்படையாகும்.


33.வட்டு (ஆண்)
வட்டமான இரும்பு போன்ற பொருளை எறிந்து விளையாடுதல்.

34.வள்ளை(பெண்)
பெண்கள் கூடி பாடல் பாடி ஆடுவது இவ்விளையாட்டின் பண்பாகும்.

35.வில் விளையாட்டு(ஆண்)
நரம்பால் செய்த வில்லை குறிவைத்து எறிந்து விளையாடுவது. வில்லில் இருந்து எழுந்த ஒலியே யாழ் என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமானது. யாழுள் வில்யாழ் என்னும் ஒரு யாழும் உண்டு.

36.வேட்டை. (ஆண்)
விலங்குகளை வேட்டையாடித் தம் வீரத்தை வெளிப்படுத்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது.


இவ்விளையாட்டுகள் பல பிற்கால வளர்ச்சியாகப் பல சிற்றிலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளன.
• சிற்றில் சிதைத்தல்,சிறுதேர், கழங்கு,ஊசல் ஆகியன பிள்ளைத்தமிழில் பருவங்களாக இடம் பெற்றுள்ளன. உலாவர் உலா என்னும் சிற்றிலக்கியமாக வளர்ந்துள்ளது.

சங்கத்தமிழர்கள் விளையாட்டு சில நிகழ்கால வாழ்விலும் வழக்கில் உள்ளன.

• ஏறுகோள் இன்றும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்று வழங்கப்பட்டு வருகிறது.
• பிசி,நொடி விளையாட்டை இன்ற வினாடி வினாவாக வழங்கி வருகிறோம்.

பழந்தமிழர்கள் பறவை,விலங்கு வளர்ப்பு என விளையாடிய விளையாட்டுகள் வாயிலாகத் இயற்கையைப் போற்றி வளர்த்தனர்.சுற்றுச் சூழலைக் காத்தனர். நாமோ இதையெல்லாம் மறந்ததால் தான் இயற்கைச் சீற்றங்களுக்கு ஆளாகியுள்ளோம்.

பழந்தமிழரின் விளையாட்டுச் சுவடுகள் இன்றும் பல வடிவங்களில் உள்ளன. இவற்றைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள, சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம் என்னும் நூலைக் காணலாம்.


சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்
சு.சிவகாமசுந்தரி
நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
41.பி சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட்
சென்னை

1995
விலை 40
பொருளடக்கம்
முன்னுரை.
சங்க இலக்கிய விளையாட்டுக்கள்.
சங்க இலக்கியத்தில் இருபாலர் விளையாட்டுக்கள்.
சங்க இலக்கியத்தில் ஆண்பாலர் விளையாட்டுக்கள்.
சங்க இலக்கியத்தில் பெண்பாலர் விளையாட்டுக்கள்.• பழந்தமிழர்கள் விளையாட்டுகள் வாயிலாக தம் உடல், மனநலத்தையும் காத்து, இயற்கையையும் போற்றி வாழ்ந்தமை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

சனி, 6 ஜூன், 2009

காதலின்- அகலம்- உயரம்- ஆழம் - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 03

குறுந்தொகை - 03

மண்ணில் உயிர்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி காதல். 
காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை. 
காதலைப் பாடாத இலக்கியங்களும் இல்லை.

காதல் உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. 
ஆயினும் மனித உயிர்கள் மட்டுமே காதலைக் காதலிக்கத் தெரிந்து கொண்டன. 
சங்க காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் தீராமல்த் ததும்பிக் கொண்டிருக்கிறது காதல். 
காதலைப் பல மொழிகளில் பல புலவர்கள் பாடியுள்ளனர். இன்றுவரை காதல் பல வடிவங்களில் பாடப்பட்டு வருகிறது.

வாய்மொழிப் பாடல்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைகூ, சென்ரியு என பாடல் வடிவங்கள் மாறலாம் ஆனால் பாடுபொருள் உள்ளடக்கம் மாறுவதில்லை. காதலைப் பல வடிவங்களில் பாடியுள்ளனர் ஆனால் காதலின் வடிவத்தைப் பாடிய பாடல் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவுள்ளது. 

ஆம் இன்று வரை காதலை இவ்வாறு வடிவப்படுத்திப் பாடிய பாடல் எதுவும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை.

காதலை வடிவப்படுத்த முடியுமா?
காதல் என்ன பொருளா?
 என்றெல்லாம் வினா எழலாம்.

அழிந்து போகும் பொருட்களையே நாம் வடிவப்படுத்திப் பழகிவிட்டோம். அவையெல்லாம் காட்சிப் பிழைகள் என்பதை நாம் உணர்வதற்கு ஒரு முதிர்ந்த மனநிலை வேண்டும்.

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,

குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

குறுந்தொகை- 03
பாடியவர் - தேவகுலத்தார்

( தலைமகன் சிறைப் புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி,தோழி இயற்பழித்த வழி, தலைவி இயற்பட மொழிந்தது.)

சிறைப்புறம் – வீட்டுக்கு அருகே மறைவான இடம்.
வரைவு – திருமணம்
இயற்பழித்தல்- இயல்புகளைப் பழித்தல்.
தலைவன், தலைவியை மணம்செய்துகொள்ளாது களவு வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறான். அதனை உணர்ந்த தோழி தலைவியைக் காணத் தலைவன் வந்து சிறைப்புறமாக மறைந்திருப்பதை அறிந்து அவன் கேட்குமாறு அவனியல்புகளைப் பழித்தாள். அதனை ஏற்றுக் கொள்ளாத தலைவி, தோழியிடம் தன் காதலை எடுத்தியம்புவதாக இப்பாடல் உள்ளது.


குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு, 
மலைப்பகுதியில் பெரிய தேனை வண்டுகள் தொகுத்தற்கு இடனாகிய நாட்டையுடைய தலைவனோடு நான் கொண்ட நட்பு,

சொல்லப்புகுங்கால் நிலத்தைவிட அகலமானது,
நினையப் புகுங்கால் வானத்தைவிட உயரமானது,
உள்புகுந்து எல்லை காணப்புகுங்கால் கடலைவிட ஆழமானது.
 என்பதே இப்பாடலின் பொருளாகும்.


இதில் காதல் நட்பு என்றே சுட்டப்படுகிறது. 
மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் அளந்துகாண இயலாத தன்மை புலப்படுத்தப்படுகிறது. 
நிலம்,வான்,நீர் இவை தனித்தனியே பயன்படாது. 
நிலத்திலிருந்து வானுக்கு நீர் செல்வதும் பின் அந்த நீர் மழையாகப் பொழிவதும் கடலில் சென்று கலப்பதும் இயற்கையாக இயைபுற்று அமைந்துள்ளது.
அது போல தலைவனோடு தாம் கொண்ட நட்பும் இயைபானது என்கிறாள் தலைவி.

ஒரு குழந்தையிடம் சென்று உனக்கு உன் அம்மாவை எவ்ளவு பிடிக்கும் என்று கேட்டால் நிறைய பிடிக்கும் என்று சொல்லும். 
எவ்ளவு நிறைய என்று கேட்டால் தம் கையை முழுவதும் விரித்து இவ்வளவு நிறைய என்ற கூறும். 
அந்த குழந்தை மனநிலையில்தான் வளர்ந்த பின்னும் நாம் இருக்கிறோம்.


நமக்கெல்லாம் அழகை ரசிக்கத்தெரியும் ஆனால் வெளிப்படுத்தத் தெரியாது. இன்னும் அழகை ரசிக்கக்கூட முடியாத இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்போரும் உள்ளனர். 
இந்தப் பாடலில் புலவர் எவ்வளவு அழகாகக் காதலை வடிவப்படுத்தியுள்ளார.

காதலின் அகலம் நிலத்தின் அளவு.
காதலின் உயரம் வானத்தின் அளவு.
காதலின் ஆழம் கடலின் அளவு
என்கிறார்.

இவ்வாறு காதலை வடிவப்படுத்திய பாடல் உலக மொழிகளில் எங்காவது உண்டா? 
இல்லை இன்று வரை தமிழில் பல காதல் பாடல்கள் வந்துள்ளனவே அதிலாவது உண்டா?

அவ்வாறு இருந்தால் அது இப்பாடலின் தாக்கமாகவே இருக்கக் கூடும். அத்தகைய செம்மையான காதல் பாடல்களைக் கொண்டது நம் தமிழ் மொழி..

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்வோம்.

வெள்ளி, 5 ஜூன், 2009

நரை நீக்கும் நல்ல மருந்து -UPSC EXAM TAMIL - புறநானூறு -191முடி நரைக்காமல் இருப்பதையே நாமெல்லாம் விரும்புகிறோம். அதற்காக எத்தனை மருந்துகள், மாத்திரைகள்,மருத்துவ ஆலோசனைகள்.........
இருந்தும் முடி நரைப்பது தடுக்க இயலாததாகவே உள்ளது.

முடியின் இயற்கையான நிறமே வெண்மைதான். 
முடியில் உள்ள நிறமிகளே முடிக்கு நிறத்தைத் தருகிறது. 
அதனால் தான் நாட்டுக்கு நாடு முடியின் நிறம் வேறுபடுகிறது. நிறமிகள் தீர்ந்துபோனபின், முடி தன் இயற்கையான நிறத்தை (வெண்மை)அடைகிறது.

முடி நரைப்பதற்கு மரபியல் அடிப்படையில் பல காரணங்களை அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆயினும் முடி நரைக்காமல் இருக்கவேண்டும் என்ற நமது ஆசையை மூலதனமாகக் கொண்டு பல விற்பனை நிறுவனங்கள் தம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. நரை நீக்கும் மருந்துகள் இன்றைய நிலையில் பல வடிவங்களில் கிடைக்கின்றன.

                        

சங்க காலத்திலேயே நரை நீக்கும் மருந்து ஒன்று இருந்தது........
அதனைக் காண்போம்....


கோப்பெருஞ்சோழன்(அரசர்), பிசிராந்தையார்(புலவர்)இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களாவர். 
இவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்புக் கொண்டிருந்தனர். கோப்பெருஞ்சோழன் தம் பிள்ளைகளோடு மாறுபட்டு தன் அரசுரிமையைத் துறந்து வடக்கிருந்து தம் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்டார்.

( வடக்கிருத்தல் என்பது சங்க காலத்தில் இருந்த வழக்கமாகும். தம் மானத்துக்கு இழுக்கு ஏற்பட்ட போது வடக்கு நோக்கி உணவு, தண்ணீர் உண்ணாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலாகும்)

கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்தபோது, தன் அருகே நண்பர் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என கூறினார்.தான் நன்றாக வாழ்ந்த காலத்தில் வராவிட்டாலும், தனக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் தன் நண்பர் பிசிராந்தையார் வருவார் எனக் நம்பினார்.

முகம் கூட காணாத இவர்களின் நட்பை அறிந்த ஊரார் பிசிராந்தையாராவது வருவதாவது என மனதில் எண்ணிக் கொண்டனர். 
யாவரும் வியப்பெய்த கோப்பெருஞ்சோழனைக் காண வந்து சேர்ந்தார் பிசிராந்தையார்.

பிசிராந்தையாரைக் கண்ட ஊர்மக்கள் அவரது தோற்றம் கண்டு வியந்து போனார்கள். 
வயதான பின்பும் முடி நரைக்காமல் இருந்த அவரது தோற்றமே ஊரார் வியப்பெய்தக் காரணம். 
நரையின்றி இருப்பதன் ரகசியத்தை அவரிடம் வினவினர்.

அதற்குப் பிசிராந்தையார் மூலிகையையோ, பச்சிலையையோ மருந்தாகக் கூறவில்லை.

முதுமைப் பருவம் எய்தியும் நான் நரையில்லாமல் இருப்பது எப்படி என்று வினவுகிறீர்கள். 
அதற்கு என் சுற்றமும் சூழலும் தான் காரணம்.
என் மனைவி மாண்புடையவளாகத் திகழ்கிறாள்.
மக்களும் அறிவு நிரம்பியவர்கள்.
என் ஏவலாலர்கள் என் இயல்பினை உணர்ந்தவர்கள்.
நான் வாழும் நாட்டை ஆளும் அரசன் செம்மையான ஆட்சி செய்பவனாக உள்ளான்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக என்னைச் சுற்றியிருப்பவர்கள் சான்றோர்கள். அவர்கள் கல்வியில் பெரியவர்களாகவும், உயர்ந்த கொள்கையுடையவர்களாகவும் உள்ளனர்”


இதுவே நான் நரையின்றி வாழக் காரணம் என்றார். 
அந்தக் கருத்தை உணர்த்தும் பாடல்,


“யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?. என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.“ 191.


(திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி)
நரையில ஆகுதல்!
பாடியவர்: பிசிராந்தையார்

பிசிராந்தையார் குறிப்பிடும் நரை நீக்கும் மருந்து அமைதியான வாழ்வு,
அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படையானது சுற்றம் .
நம் சுற்றமும் சூழலும் நமக்குப் பிடித்தது போல இருந்தால் இளமையோடு வாழலாம் என்பதே அவர் கூறும் மருந்தாகும். 
நம் சுற்றமும் சூழலும் நமக்குப் பிடித்தது போல எப்பொழுது அமையும்?
நாம் நல்லவராக இருந்தால் நம் சுற்றமும் நல்லபடியே அமையும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.