
தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்பர். தமிழில் இறைவனைத் தேடிய அளவுக்கு வேறு எந்த மொழிகளிலும் தேடியதில்லை.
நம்பிக்கை அதிகம் தோன்றியதும் நம்நாட்டில்தான்! – அதைவிட
மூடநம்பிக்கைகள் அதிகம் தோன்றியதும் நம்நாட்டில்தான்!!
உணவு, உடை, தகவல் தொடர்பு என எவ்வளவோ வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் நம் கடவுளர் மட்டும் இன்னும்...
அதே பிச்சைப் பாத்திரம், புலித்தோல், காளை ஊர்தி, கருடஊர்தி...
கடவுளை நாம் நம்புவது உண்மையென்றால் இன்றைய சூழலில் நாமெல்லாம் ஞானிகளாக, துறவிகளாக மாறியிருப்போம்.
கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த அளவுக்காவது நாம் மனிதர்களாக வாழ்கிறோம். இந்த நம்பிக்கையும் இல்லாதிருந்தால் இன்றைய சூழலில் காட்டு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பெரிய வேறுபாடு இருந்திருக்காது.
இலக்கியத்தில் நகைச்சுவை.
முக்கூடற்பள்ளு சிற்றிலக்கியங்களுள் குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியப் பரப்பில் இவ்விலக்கியத்துக்குத் தனித்துவமான இடம் உண்டு. மருதநிலம் சார்ந்த வாழ்வியலை படம்பிடித்துக்காட்டும் இவ்விலக்கியத்தின் நகைச்சுவைக் காட்சிகளை பதிவு செய்வதே இவ்விடுகையின் நோக்கமாகும்.
பள்ளன் ஒருவன். அவனுக்கு இரண்டு மனைவியர்கள். ஒருத்தி மூத்தபள்ளி, இன்னொருத்தி இளையபள்ளி. இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையில் கடவுளர் பட்ட பாடு நகைச்சுவை நயம் தோய சொல்லப்பட்டிருக்கும். சிரிக்க சிரிக்கப் பேசினாலும் கடவுளர் குறித்த புராணச் செய்திகளை அழகாக மனதில் பதியவைப்பதாக இப்பகுதி விளங்குகிறது.
ஆடையில்லாத கடவுளர்கள்..?
இடுப்பிலே சுற்றிக் கட்டிக் கொள்ள நாலுமுழத் துண்டு கூடக் கிடைக்காமல் புலித்தோலை எடுத்து உடுத்தவன் உங்கள் சோதிவடிவான சிவன் அல்லவா?
கற்றையாக சடையும் கட்டி, மரவுரியையும் இடுப்பிலே முன்காலத்திலேயே கட்டிக் கொண்டானே அவன் உங்கள் சங்குக் கையனான திருமால்அல்லவோடி..?
“சுற்றிக் கட்ட நாலு முழத் துண்டும் இல்லாமல் – புலித்
தோலை உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி!
கற்றைச் சடை கட்டி மரவுரியும் சேலைதான் – பண்டு
கட்டிக் கொண்டான் உங்கள் சங்ககுக் கையன் அல்லோடி“
(முக்கூடற்பள்ளு – 169)
(சிவன் தாருகாவனத்து முனிவர் ஏவிய புலியைக் கொன்று அதன் உரியை உடுத்ததையும், இராமன் மரவுரி தரித்துக் கானகம் சென்றதையும் இப்பாடலடிகள் சுட்டுகிறது)
உணவில்லாத கடவுளர்கள்..?
ஊருக்குள்ளே பிச்சையெடுத்துத் திரிந்தும் பசியாற்றமாட்டாதவனாகக் கடல் நஞ்சையெல்லாம் எடுத்து உண்டானே, அவன் உங்கள் நாதன் அல்லோடி..?
மாட்டு மந்தைக்குப் பின்னாகவே திரிந்தும்கூடச் சோற்றுக்கு வழியில்லாமல் வெறும் மண்ணைத் தின்றானே அவன் உங்கள் மேகவண்ணன் திருமால் அல்லவோடி?
“நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் – வாரி
நஞ்சையெல்லாம் உண்டானுங்கள் நாதனல்லாடி?
மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் – வெறும்
மண்ணை உண்டான் உங்கள் முகில் வண்ணனல்லோடி?
(முக்கூடற்பள்ளு – 170)
(சிவன் இரந்துண்டது பிரமனின் தலையோடு தன் கையினின்றும் போவதற்காகக் கொண்ட பிட்சாடனக் கோலம், மற்றும் பார்கடலைக் கடைந்தபோது வந்த நஞ்சை உண்டமை.
கண்ணன் மண்ணை உண்ட கதை)
வாகனம் இல்லாத கடவுளர்கள்..?
ஏறிச் செல்ல ஒரு வாகனமும் இல்லாமல் மாட்டின் மீதே ஏறித்திரிந்தவன் தானே உங்கள் ஈசன்..?
அந்த மாடுகூட இல்லாமல்தானே பறவை மீதிலேறிக் கொண்டன் உங்கள் கீதன் திருமால்..? இது உண்மையல்லவோடி?
“ஏற ஒரு வாகனமுமம் இல்லாமையினால்-மாட்டில்
ஏறியே திரிந்தானுங்கள் ஈசன் அல்லோடி?
வீறு சொன்னதென்ன மாடு தானுமில்லாமல் – பட்சி
மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதன் அல்லோடி?
(முக்கூடற்பள்ளு – 171)
(காளை வாகனத்தைக் கொண்டவன் சிவன்
கருடனை வாகனமாகக் கொண்டவன் திருமால் என்ற புராணச் செய்தி)
இவ்விலக்கியத்தில் சிவனையும், திருமாலையும் திட்டுவது போல இருந்தாலும் இக்கடவுளர் குறித்த தொன்மச் செய்திகளை அழகாகப் பதிவு செய்வதாக இப்பாடல் அமைகிறது.
இக்காட்சியை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டாலும்..
உள்மனது ஏனோ..
திரும்பத் திரும்பக் கேட்கிறது..
“எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்
இத்தனை கடவுளர் இருந்த என்ன பயன்..???“ என்று...
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்
(உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.)
என்ற வள்ளுவரின் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.