வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

குழவி இறப்பினும்....




பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார் ஒளவையார்.


(மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26))

பசியை விடவும் கொடுமையானது தண்ணீர் தாகம். வயிற்றில் தீ எரிவது போல இருக்கும்.

கோச்செங்கண்ணனால் சிறைப்பட்ட சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை, நீர் வேட்கையால் சிறைக்காவலரை நீர் வேண்டினான். சிறைக் காவலன் காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான். அதனை மானத்துக்கு இழுக்காகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர்விட்டான்.“


தமிழர்தம் மானம்
போர்க்களத்தில் அழிய எண்ணுதல்
விழுப்புண் வேட்கை
(விழுப்புண் - முகத்தினும் மார் பினும் பட்ட புண். )
ஆகிய பண்புகளை இயம்பும் புறநானூற்றுப் பாடல் காலத்தை வென்று தமிழர் தம் பெருமையைப் பறை சாற்றி நிற்கிறது.


குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?

(புறநானூறு-74)

பாடியவர்: சேரமான் கணைக்கா லிரும்பொறை
திணை: பொதுவியல் துறை; முதுமொழிக் காஞ்சி 'தாமே தாங்கிய
தாங்கரும் பையுள்' என்னும் துறைக்குக் காட்டுவர் இளம்பூரணர்

பிள்ளை இறந்து பிறந்தாலும், உருவமின்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றை ஆள் அல்ல என்று பழந்தமிழர் கருதார். மாறாக அவற்றையும் வாளால் கீறி வடுப்படுத்தியே அடக்கம் செய்தனர். ஏனென்றால் ஒவ்வொரு ஆணும் போர்க்களத்தில் விழுப்புண் பட்டே இறக்க வேண்டும் என்பது அவர்தம் ஆசையாக இருந்தது.

தமிழர் மரபு இவ்வாறு இருக்க,
ஓர் அரசன் போரில் அழியாது புண்பட்டு உயிர்பிழைத்தால், வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவனை, சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போல துன்புறுத்துவான். அத்தகைய மனிதம் இல்லாத பகைவர்,
வயிற்றில் தீ போல இருக்கும் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால் உடனே தந்துவிடுவார்களா....?

காலம் தாழ்த்தி அவர்கள் தரும் தண்ணீரைக் குடித்து இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விட உயிர் விடுவது எவ்வளவோ மேல் என்கிறது. சேரன் மனம்.

இதுவே பாடலின் பொருள். இப்பாடல் வழி தமிழரின் விழுப்புண் வேட்கை,போர்க்களத்தில் அழிய எண்ணுதல், மற்றும் மானத்துக்காக உயிரையே விடலாம் என்னும் உயர்பண்பு ஆகியவற்றை அறியமுடிகிறது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

பெண்களும் மலரணிதலும்(சங்க காலம்) பகுதி - 2



(பெண்களும் மலரணிதலும் என்னும் கட்டுரைக்கு நண்பர் குமரன் அவர்கள் எழுப்பிய ஐயம் கீழே....
அதற்கு விளக்கமாகவும் தமிழரின் மலரணியும் மரபை மேலும் விளக்கும் விதமாகவும் இக்கட்டுரை அமைகிறது.....

கேள்விகள்
எளிய உரையாடல் வடிவாக விளக்கத்தைத் தந்ததற்கு நன்றி நண்பரே. முதன்மைச் செய்திகளை தடித்த எழுத்தில் இட்டதும் நன்று.

வழக்கம் போல் சில ஐயங்கள்: :-)

1. இப்பாடலில் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்ற சொற்றொடர் வருகிறது. இதற்கு உரையாசிரியர்கள் கூறும் விளக்கம் என்ன? நம் என்றதால் தலைவனும் தலைவியும் ஆயர் குலம் என்பது தெரிகிறது. ஆனால் தன் குலத்தையே புல்லினம் என்று தலைவி கூறுவது புரியவில்லை; ஆயர் குலம் தாழ்ந்த குலம், புல்லினம் என்றொரு மரபு சங்க காலத்திலும் இருந்திருக்கிறதா? அதனை ஆயர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா? அதனால் தான் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்றாளா தலைவி? உரையாசிரியர்கள் சொல்வது என்ன?

2. இப்பாடலில் தலைவன் அணிந்த முல்லையங்கண்ணியைத் தலைவி சூடிய செய்தி மட்டுமே எனக்குத் தென்படுகிறது. மணமாகாத பெண்கள் மலர் அணிவது இல்லை என்ற செய்தி வருவித்துக் கொண்ட செய்தியைப் போல் தான் தோன்றுகிறது. நேரடியாக இந்தப் பாடலில் அந்த செய்தி இல்லை. இந்த செய்தியை நேரடியாக - அதாவது மணமாகாத பெண்கள் மலர் அணிவதில்லை என்ற செய்தியை நேரடியாக - கூறும் ஏதேனும் பாடல் உண்டா? மாற்றாக மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் உண்டா?

எனக்கென்னவோ மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் பலவும் சங்க இலக்கியத்தில் உண்டென்றே தோன்றுகிறது; அகத்துறையில் கொஞ்சம் தேடினால் நிறைய கிடைக்கும் என்று நினைக்கிறேன். நானும் தேடிப் பார்க்கிறேன்.

3. அப்படியே 'மணமாகாத பெண்கள் மலர் சூடுவதில்லை' என்னும் மரபு இருந்திருந்தாலும் அம்மரபு ஐவகை நிலத்தவரிடையேயும் அங்கே வாழ்ந்த எல்லா குடியினரிடையேயும் இருந்த மரபு தானா? அன்றி ஆய்க்குலத்துப் பெண்களுக்கு மட்டுமே ஆன மரபா? அப்படி ஆய்க்குலத்தவர்க்கு மட்டுமே ஆன மரபென்றால் அதனைச் சங்ககால மகளிர் அனைவருக்கும் பொதுமைப்படுத்துவது சரியாகுமா?

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். விட்டால் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே செல்வேன். கேள்விகளைக் கேட்பதென்னவோ எளிது தானே?! :-)

எனக்குத் தென்படும் இன்னொரு செய்தி - தலைவனும் தலைவியும் ஆய்க்குலத்தவர் என்பதால் அதனை எப்படியோ உய்த்துணர்ந்த (சூடியது முல்லை மலர் என்பதால் தலைவனும் ஆய்க்குலம் என்று அறிந்தனர் போலும் யாயும் அன்னையும் அத்தனும்) பெற்றோர்கள் ஒத்த குலத்தவரான இருவரையும் சேர்த்து வைக்க மனம் கொண்டனர் போலும். இதுவே வேறு குலத்தவராயின் இற்செறித்தல், வெறியாட்டு, உடன்போக்கு போன்றவை நிகழ்ந்திருக்கும் போலும்.

பதில் – 1.
புல்லினம் என்பது ஆட்டினத்தைக் குறிக்கும். உரையாசிரியர்களும் ஆட்டிடையர்களின் ஒரு இனம் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆயர்குலம் தாழ்ந்த குலம் என்பதற்கான சான்றுகள் இல்லை நண்பரே...
பதில் – 2.சங்க காலத்தில் திருமணமாகத பெண்கள் கூந்தலில் மலரணிவது இல்லை. இம்மரபைப் பல பாடல்கள் வழி நேரிடையாகவே காணமுடிகிறது. திருமணத்தின் ஒரு குறியீடாக மலரணிதல் அமைந்திருந்தது.
திருமணமாகத பெண்கள் மலரணிந்தால் அப்பெண் காதலிக்கிறாள் அவன் சூடிய மலரே அது என்று அலர் தூற்றப்பட்டதை அறிகிறோம். சான்றுகள் கீழே....
பதில் -3.கூந்தலில் மலரணிதல் பற்றிய மரபு முல்லை நிலத்துக்கு மட்டுமன்றி எல்லா நிலங்களுக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது.

தங்கள் கேள்வி மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது நண்பரே... விளக்கங்கள் கீழே...

சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கும் சான்றுகளுள் சில....

தலைவன் களவுக் காலத்தில் தலைவியைப் பார்த்து அவள் கூந்தலில் மலர் சூடிச் செல்கிறான். கூந்தலில் மலரைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர்.( அகம் 180)
• ஒரு நாள் தாய் தன் மகளிடம் – உன் கூந்தலில் மலரின் மணம் வருகிறதே..? என்று வினவுகிறாள். தன் களவு வெளிப்பட்டது என்ற அஞ்சிய தலைவி, தலைவனுடன் உடன்போக்கு செல்கிறாள்.( நற் – 143)
• தலைவி கூந்தலில் மறைத்த மலர் அன்னை அக்கூந்தலை அவிழ்க்கும் போது வீழ்கிறது.அன்னை நெருப்பைத் தொட்டவள் போல அவ்விடம் விட்டு நீங்குகிறாள்.(கலி -115)
• இரவில் தலைவனைக் காணும் போது மலர் சூடிச் சென்ற தலைவி, தன்வீட்டார் முன்னர் மலர் நீக்கியவளாகக் காட்சியளிக்கிறாள்.( குறுந் – 312)
• ஏறுதழுவல் நடைபெற்ற போது வலிமையான காளையை இடையன் ஒருவன் அடக்குகிறான். அப்போது அக்காளை அவன் தலையில் சூடிய முல்லைச் சரத்தைத் தன் கொம்பால் சுழற்றி வீசுகிறது. அம்மலர்ச்சரம் ஓர் ஆயமகளின் கூந்தலில் வீழ்கிறது. அதனை விரும்பிய தன் கூந்தலுள் மறைத்த அப்பெண் ஊராருக்கும்,அவர் தூற்றும் அலருக்கும், தம் பெற்றோருக்கும் அஞ்சுகிறாள்.( கலி- 107)
• திருமணத்தின் போது தலைவனை, “ திருமணத்தைக் கொண்டாடும் படி பின்னிய கரிய கூந்தலில் மலர் சூட்டினாய் “ என்று தோழியர் வாழ்த்துகின்றனர். ( ஐங் – 296)


தமிழரின் மலரணியும் மரபு பற்றி மூதறிஞர் . வ.சுப. மாணிக்கனார் அவர்களின் கருத்து.....

கூந்தல் மலரணிதல்

பண்டை நாளில் வழங்கிய கரணம் ஒன்றே; அதுதானும் சிலம்பின் அகற்சி என்று முடிவு கட்டுதற்கு இல்லை. சிலம்பின்மை ஓர் எதிர்மறையடையாளம். இவள் மணவாட்டி என்று அறிவிப்பான் பல அடையாளங்கள் திணைக்கேற்ப இருந்திருத்தல் கூடும். அவை இலக்கியம் ஏறாதிருத்தலும்
கூடும். சங்கச் செய்யுட்களை நுணுகிக் காண்பார்க்கு மற்றொரு அடையாளமும் வழங்கியமை தெரியவரும். இஃது உடன்பாடான அறிகுறி; பெரிதும் வழக்கில் பரவியிருந்த கரணம்.

“ தண்கயத் தமன்ற ஒண்பூங் குவளை
அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி
பின்னுப் புறந்தாழக் கொன்னே சூட்டி
நல்வரல் இளமுலை நோக்கி நெடிதுநினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே...
பொன்னேர் நுண்தாது நோக்கி
என்னும் நோக்குமிவ் வழுங்கல் ஊரே ” (அகம். 180)


‘குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; வளரும் மார்பை ஒரு நோக்கு நோக்கிச் சென்றுவிட்டான்; இந்தச் செயலுக்கே ஊர் என்னை ஒருவகையாகப்பார்க்கலாயிற்று. புன்னைத் தாதின் நிறத்தையும் பசலை படர்ந்த என்மேனி நிறத்தையும் உற்று நோக்கிற்று’ எனத் தலைவி ஊரலருக்குக் காரணம் உரைக்கின்றாள். கூந்தலில் பூவைக் கண்டவளவிலேயே ஊர்ப்பார்வை மாறிவிட்டதே என்று தலைமகள் நொந்து கொள்ளினும், ஒருவனோடு ஒருத்திக்கு உறவு உண்டு என்பதற்கு மலர் போதுமான அடையாளம் என்று
ஊரார் துணிவுற்று அலர் மொழிந்தனர் என்று நாம் அறிய வேண்டும்.

அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சின்னாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும்நின் கதுப்பென் றேனே (நற். 143)


“இன்னானுடன் இவர் மகளுக்குத் தொடர்பு என்று என் காது கேட்க ஊர்ப்பெண்டுகள் பேசுவதை அறிவேன். சில நாட்களாகத் தெரிந்து வைத்தும், தெரியாதவள் போல ஒன்றும் காட்டிக் கொள்ளாதிருந்தேன். ஒருநாள் ‘நின் கூந்தல் நறுமணம் வீசுகின்றதே என்று கேட்டுவிட்டேன்’ என்று தாய் தன்
மகள் உடன் போகியதற்குத் தானே காரணம் எனச் சொல்லுகின்றாள்.
குமரியர் கூழையில் பூமணத்திற்கு இடமில்லை; நின் கூந்தல் மணக்கின்றதே என்று அன்னை வினவியதும் களவு வெளிப்பட்டுவிட்டது. இனி வீட்டில் இருத்தல் பொருந்தாது என்று மகள் தாய்க்கு அஞ்சி உடன்போயினாள்.
இயற்கை வனப்புமிக்க இடத்தில் இன்புறும் தலைவன் காதலியின் கருங்குழலில் பூங்கொத்துக்களைச் சூடி அணிசெய்து மகிழ்வான். வீடு செல்லும்போது தலைமகள் பூவைக் கூந்தலிலிருந்து அகற்றி விடுவாள். மலரை எடுத்தெறிந்து விட்டாலும், மலர் இருந்த கூந்தல் மணக்குமன்றோ? ஆதலின் தாய் மகளின்
கூந்தலில் மலரைப் பார்க்காவிட்டாலும், அதன் மணத்தை அறிந்து, நின் கதுப்பு நறிய நாறும் என்று வினவினாள் எனக்கொள்க.


குமரி மலரணியாமை

பண்டைத் தமிழ்க் கன்னி மலர்சூடாள் என்பதும், மலர் சூடின்
கன்னியாகாள், ஒருவனை வரித்தாள் என்பதும் நம் பழஞ் சமுதாய வழக்கு. இக்கருத்து கற்றார்க்கு இன்று வியப்பாகவும் புரட்சியாகவும் தோன்றும், தோன்றக்கூடும். இவ் வழக்கம் இந்நாள் தமிழகத்து இல்லாமையும், இருக்க இயலாமையும் கண்டு பலர் மலைக்கவும் மலைப்பர். தௌ¤விற்கு இன்னும் சில
சான்றுகள் காண்போம்.

இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312)


இரவுக்குறி வந்து செல்லும் தலைமகன் இனி மணந்து கொள்ள
வேண்டியதுதான் என்று தன்னெஞ்சிற்குக் கூறும் கருத்துடையது இப்பாட்டு. ‘பலமலர்களைச் சூடிக் கமகமவென்று மணம் பரப்பி இரவில் வந்து முயங்கி என்னவளாகின்றாள்; பின்பு சூடிய மலர்களை உதிர்த்துக் கலவியிற் கலைந்த கூந்தலைச் சீர்செய்து, யாதொரு மாறுபாடும் தோன்றாதபடி, காலையில் தன் வீட்டாருக்குக் காட்சியளிக்கின்றாள். எனக்கு ஏற்பவும் தன் சுற்றத்தாருக்கு ஏற்பவும் இடமறிந்து நடந்து கொள்ளும் என் காதலி, நெஞ்சே! எத்தன்மையள் தெரியுமா? அவள் ‘இரண்டறி கள்வி’ என்று தலைவன் காதலாளின் அறிவுத் திறத்தை வியக்கின்றான். கூந்தலில் பெய்த மலர், தானே உதிரவில்லை; வேண்டுமென்றே உதிர்க்கின்றாள். ஏன்? “உதிர்த்து” என்ற பிறவினையை நினைக. கன்னியர் மலர் சூடுவது இயல்பு வழக்காயின், தலைவன் அணிந்த மலரையும் இயல்பு வழக்குப் போலப் பெற்றோர்க்குக் காட்டிவிடலாமன்றோ? அன்னை முன் பூ விழுந்தபோது தலைவி அவலப்பட வேண்டாமன்றே? அன்னையும் அதிர்ச்சியுற வேண்டுவதில்லையே! அன்போடு சூடிய பூவை
அச்சத்தோடு நினைந்து உதிர்த்தாள் எனின், குமரியர் பூவணிதல் சமுதாய வழக்கிற்கு ஒவ்வாக் காட்சி என்பது தௌ¤வு.

முல்லைக் குமரியின் கவலை

பெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலான்
கைபுனை கண்ணி முடித்தாளென்று யாய்கேட்பின்
செய்வதி லாகுமோ மற்று. (கலி. 107)


குமரிப் பெண்ணாள் ஒருத்தியின் கவலையை இம் முல்லைக்கலி
உணர்த்துகின்றது. அவள் கவற்சிக்குக் காரணம் என்கொல்?
முல்லைத்திணையில் ஏறுகோள்விழா நடந்தது. பார்வையாளராகக்
குமரியரெல்லாம் குழுமியிருந்தனர். செவியிலே மறையுடைய ஒரு காளையை இடையன் மடக்கினான், அடக்கினான். அக்காளை தன் கொம்பினால் அவன் தலையிற் சூடிய முல்லைச்சரத்தை எடுத்து மாட்டிக்கொண்டு சுழற்றியது. கொம்பு சுழன்ற வேகத்தில் ஒரு முல்லைப்பூ தனித்துச் சென்று எங்கோ இருந்த இடைமகளின் கூழைக் கற்றை யுள்ளேபோய் விழுந்தது. (“அப்பூ
வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று”). இழந்த பொருள் எதிர்பாராது
கிடைப்பின், ஆசையோடு அதனைப் போற்றிக்கொள்வதுபோல, தானே வந்து கூந்தலில் விழுந்த பூவைக் கீழே நழுவி விழாதபடி அந்த ஆய்மகள் தலையில் முடித்துக் கொண்டனள். விழாவிற்கு வந்த பெண்கள் சிலர் கண்ணிலேனும் இந் நிகழ்ச்சி பட்டிருத்தல் கூடும். காதலிற் கண்டதைக் காணாதார்க்குப் போய்க் கூறினாலல்லது சில கண்களுக்குத் தூக்கம் வந்தொழியா; ஆதலின், முல்லைப்பூவை முடித்துக் கொண்டமை கண்ட மாதர்கள், தம் வீட்டுக்கு நேரே செல்லாது அவள் அன்னைக்குச் சென்று அலர் சொல்லியிருத்தல் கூடும். இந்நிலையில் ‘என்ன செய்வேன்? எங்ஙனம் தாயைக் காண்பேன்? கேட்டால், எதனை மறுமொழிவேன்’ என்று துடிக்கின்றாள் முல்லைமுடித்த கூந்தலி. ‘இவள் கூழைக் கூந்தல் இதுவரை மலர் பெய்து அறியாதது, ஒரு பூமேல் ஆசைகொண்டு இவள் தானே சூடிக்கொண்டாலும், அதுவே தவறாம். அயலான் கைதொட்டுத் தலையில் வைத்த கண்ணிப் பூவந்து விழுந்ததெனின், ஏறிட்டுப் பாராது எடுத்து எறிய வேண்டியதிருப்ப, என் மகள் அதனை விழைந்து முடித்துப் பொதிந்து கொண்டளாயின், அக்குற்றம் பொறுக்குந் தரத்ததோ? என்றெல்லாம் தாய் காரணத்தை அடுக்கி நினைத்து
அடங்காச் சினங்கொண்டால், என்செய்வோம்? எனக் கற்பனைசெய்து கவல்கின்றாள் முல்லைக் குழலி. அவள் கவலை கிடக்க; அக்கவலை நமக்கு அறிவிப்பது என்ன? ‘பெய்போது அறியாத் தன் கூழை’ என்ற தொடரின் கருத்து யாது? “மயிருக்கு மணந்தரும் பூ முடித்தல் வேண்டும் என்று அறியாதவள்” என்பது
நச்சினார்க்கினியர் உரைவிளக்கம். பூ முடித்துப் பழக்கமில்லாதவள் என்பது இதன் கருத்து. “பெய்போது அறியா” என்பது அவருரை. இவ்வுரையைக் காட்டிலும் போதுபெய்தலை (சூடுதலை) அறியாத என்று உரைப்பதுவே பொருந்தும். “ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை” (653) என்னும் குறள் நடையோடு பெய்போது என்ற நடையை ஒப்பிடுக. உரை எதுவாயினும் குமரிக்கொண்டை பூ மணம் அறியாதது என்பதுவே பொருள்.

கூழைக் கூந்தல்

கூந்தலைக் குறிக்கும் பலவகைச் சொற்களுள் கூழை என்பது ஒன்று. இச்சொல் ஒருபொருளின் இறுதி நிலையை, இறுதிப்பகுதியின் குறை நிலையைக் குறிக்கும்.1 இளங்குமரியின் தலைமயிர் நீண்ட வளர்ச்சி பெற்றிருப்பதில்லை. இன்னும் வளர வேண்டும் குறையுடையது.2 ஆதலின்
கூழைக் கிளவியைக் குமரியர் கூந்தலுக்கே ஆட்சிசெய்யும் இலக்கிய வழக்கைக் காண்கின்றோம். (குறுந்.113 நற்.140.; அகம்.315 கலி.107). முடித்தற்கு வேண்டும் கூந்தல் நீட்சி மனைவிப் பருவத்தே வளருமாதலின், பூ அணியும் வழக்கம் திருமணம் தொடங்கி மேற்கொள்ளப்படுவது எனக் கொள்ளலாம். குமரிப் பருவத்துக் கூழைக் கூந்தலைச் செவிலியர் எண்ணெய் தடவி வாரிப் பின்னி விடுமளவே செய்குவர். பின்னிய கூந்தலில் பூ அணிவதில்லை.

பின்னுவிட் டிருளிய ஐம்பால் (கலி.59)
மண்ணி மாசற்ற நின்கூழை (கலி.107)
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் (அகம்.108)
கூந்தல் வாரி நுசுப்பிவந் தோம்பிய
நலம்புனை யுதவி (அகம்.195)


இனைய பாடலடிகள் குமரியர் கூந்தலின் ஒப்பனையில் பூ இல்லாமைக்குச் சான்றுகளாம். கன்னியர் பூவணிதல் ஆகாது என்று தமிழ்ச் சமுதாயம் கொண்ட முறைக்குக் காரணம் என்ன?

கூழைமோனை “ஈறிலி கூழை, எனப்படும். (காரிகை 19)
ஐங் 374; “முடியகம் புகாஅக் கூந்தலள்”


பொலிவுடையது, கண்ணுக்கினியது, நட்பாடத் துணையாவது, கைக்கு அழகியது, மணம் பொதிந்தது, மனத்தைக் கிளறுவது, காதலுக்கு நாகரிகத் தூதாவது; அனைய பெருஞ் சிறப்பும் வாய்ந்த ஒரு சிறு பொருள் பூ; பூவனையர் பூப்பெய்திய குமரியர்.

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. (குறுந்.32)
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே (குறுந்.84)


காதற்கன்னி முல்லையும் குவளையும் வேங்கையும் காந்தளும் ஆம்பலும் போல்பவள் எனவும், ஐம்மையும் நறுமையும் இனிமையும் தன்மையும் வாய்ந்த மென்மையள் எனவும், பூவாகவும் பூவின் தன்மையனவாகவும் போற்றப் படுகின்றாள். இல்லக் குமரியர் பூச்சூடி மணம்
பரப்பிப் பிறரைக் கவரவேண்டும் என்பதில்லை; கவருதலும் கூடாது. அத்தகைய செய்புனை கவர்ச்சி கற்பு நெறிக்கு ஒவ்வாது. காதல் நெறியை வளர்க்காது என்றெல்லாம் தமிழ் மூதறிஞர்கள் கண்டனர்; குமரியர் பூவணிதலைக் கடிந்தனர் என்று கொள்ள வேண்டும்.

பூவணியும் உரிமை

குமரியர் பூவணியும் உரிமையைத் திருமணநாள் முதல் பெறுகின்றனர். இவள் இல்லறத்தி, மனைவியானாள் என்பதற்குப் பூக்கரணம் செய்யப்படும். இக்கரணத்தைத் தலைவன் செய்வான் என்று அறிகின்றோம். செந்நிற வேங்கை பூவின்மேல் இருந்த மயில் நகையணிந்த பெண் போலக் காட்சியளிக்கும் நாட்டவனே, நல்லது செய்தாய்; நின் குடும்பம் வாழ்க. திருமணத்தைக் கொண்டாடும்படி பின்னிய கரிய இவள் கூந்தலில் மலர்
சூட்டினாய்;

எரிமருள் வேங்கை யிருந்த தோகை
இழையணி மடந்தையில் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயரவிவள்
பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங்.296)


என்று மணஞ்செய்து கொண்ட களவொழுக்கத் தலைவனைப் பார்த்துத் தோழி மனமார வாழ்த்துகின்றாள். கூந்தலைப் பின்னி மலரணிந்தான் என்று கூறாமல், பின்னிய கூந்தலில் மலரணிந்தான் என்று கூறுவதால், பின்னியநிலை குமரிக் கோலம் என்றும் மலரணிகை கற்புக்கோலம் என்றும் தௌ¤வாதல் காண்க. மலரணி சடங்கு செய்யும்போது, தலைவியின் கூந்தலைத் தலைவன் கை தொடும். தன் கூந்தலைத் தொட்டானுக்குக் குமரி உரிமையாகின்றாள். உற்றார்க்கு உரியர் பொற்றொடி
மகளிர்’ என்பது பழமொழி. “இவள் ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே” (குறுந்.225)”குறுந்தொடிமகளிர் நாறிருங் கூந்தற்கிழவர்” (புறம்.113) என்ற அடிகளால், கூந்தலுக்கு உரியவன் யாவன் அவன் கொழுநன் என்ற மணவழக்குப் பெறப்படும். கூந்தலுக்கு உரியவன் என்றால், கூந்தலில் மலர் வேய்ந்து மணங்கொள்பவன் என்பது குறிப்பு.
நல்லாவூர் கிழார் பண்டு நடந்த மணமுறைகளைத் தாம் பாடிய ஒரே
ஒரு பாட்டில் தொகுத்துச் சொல்லுவர். குழந்தைகள் பெற்ற இல்லற மாதர் ஒருங்குகூடி, ‘கற்பு வழாமல் அறம்பல செய்க, கொண்டானைப் பேணி ஒழுகுக, தக்க வாழ்க்கைத் துணையாகுக’ என்று திருமணக் காலத்து மணப்பெண்ணை வாழ்த்துவர் எனவும், கூந்தல்மேல் பூவும் பிறவும் விளங்க நன்மணம்
நிகழ்த்துவர் எனவும் அப்பாட்டு மணச்சடங்கைச் சொல்லிச் செல்கிறது:-

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றை (அகம் .86)


திருமணந் தொட்டு மகளிர் பூவணிவர் என்பதற்கு இப் பாட்டும் குறிப்பிற் சான்றாதல் காண்க: இம் முடிபை நினைத்து களவுத் துறைப் பாடல்களைக் கற்கும்போது, எதிர்ச் சான்றுகள் போல்வன சில தோன்றக்கூடும்; குமரிக் காலத்துப் பூச்சூடும் வழக்கம் உண்டு போலும், அது சமுதாய விலக்கன்று என்று காட்டுவதுபோலச் சில செய்யுட்கள் காணப்படும்.

வண்டுவழிப் படரா தண்மலர் வேய்ந்து (அகம்.198)
வீபெய் கூந்தல் வீசுவளி உளர (நற்.264)
அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை
மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத்
துணிநீர்ப் பௌவம் துணையோ டாடி (நற்.265)
குவளை நாறுங் குவளையிருங் கூந்தல் (குறுந்.300)


இவ்வாறு வரும் பகுதிகளைக் கண்டு, என் முடிவுக்கு மாறான சான்றுகள் என்று கருதிவிட வேண்டா. துறைகளோடு பொருத்தி நேர்பட ஆராயின், இயற்கை புணர்ச்சியிலும் உடன்போக்கிலும் இன்பக்களிப்பிலும் இன்ப எதிர்பார்ப்பிலும் நீர் விளையாட்டிலும் குமரியர் பூவணிந்த குறிப்புக்களாகவே இருக்கும்.

முடிபுகள்

மேற் செய்த ஆராய்ச்சியால் கண்ட தெளிவு என்ன? மணந்த
குமரியரை மணவாக் குமரியரினின்றும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கமே கரணத் தோற்றத்திற்குக் காரணம் ஆம்: காலிற் கிடந்த சிலம்பை அகற்றுவது ஒரு கரணம். கூந்தல் மேல் மலரணிவது ஒரு கரணம். இவ் விரண்டும் பண்டைத் திருமணக் காலத்துப் பரவலாக வழக்கில் இருந்த கரணங்கள் என்று
தௌ¤கின்றோம். இவள் மனைவியானாள் என்ற அறநிலையைச் சிலம்பு கழித்த அடியாலும், மலர் வேய்ந்த முடியாலும் அறிந்து கொள்ளலாம்; சிலம்பு இன்மையை நெருங்கிக் காணவேண்டும் என்பதில்லை. செவிக்குச் சிலம்பின் ஓசை கேளாமையால், இவள் மனைவிமை எய்தியவள் என்பதனைச் சேய்மையிலேயே விளங்கிக் கொள்ளலாம். மலர்சூடியிருப்பதை அணுகிக்
காணவேண்டுவதில்லை; மூக்கிற்குப் பூமணம் வந்து தாக்குதலால், இவள் இல்லறத்தி என்று சேய்மைக் கண்ணேயே முடிவு கொள்ளலாம். அடியாலும் முடியாலும் இன்மைக் குறியாலும் கன்னிமை கழிந்த மனையாட்டி என்பதனைத்
தமிழ்ச் சமுதாயம் எல்லாரையும் அறியச் செய்தது. மணமாகி யாளைத் தோற்றத்தால் குமரியென மயங்கி விடாதவாறும், அங்ஙனம் மயங்கிப் பொய்யும் வழுவும் மேற்கொள்ளாதவாறும் கரணத் தடுப்புக் கண்டது தமிழ்ச் சமுதாயம். சடங்கு தோன்றக் காரணம் என்ன? சடங்கு என்ன? சடங்கின் குறிக்கோள் என்ன? இவற்றிற்கு இன்று நாம் விடை பலவாறு கூறலாம்.
தொல்காப்பியம் சங்கப் பனுவல்களின் துணைகொண்டு, தமிழ்ச் சமுதாயம் காட்டும் விடைகளை மேலே கண்டோம்.

சடங்கு என்பது பெண் இனத்திற்கு மட்டுமா? மணமாகிய குமரனை மணமாகாக் குமரனின்றும் வேறுபடுத்திக் காட்ட வேண்டியதில்லையா? இவன் திருமணத்தான் என்பதற்கு அடையாளம் வேண்டாவா? இவ்வினாக்களுக்கு
அறிவு ஒப்பும் நேரிய மறுமொழி தரமுடியாதுதான். கற்பு இருபாலார்க்கும் பொது என்று நாம் இன்று கொள்வது போலப் பண்டைத் தமிழ்ச் சமுதாயம் கொள்ளாமலில்லை; கொண்டிருந்தது. எனினும் வழிவழிப்பட்ட சில செயல்
முறைகளை நடைமுறையில் ஒருவாறு ஒப்புக்கொண்டு குடும்பவியலைப் போற்றியது; போற்றும் பொறுப்பைச் செறிவும் நிறைவும் மிக்கபெண்ணினத்துக்கு அளித்தது. பலதாரமணம் ஆடவர்க்கு வழக்காறாக இருந்தமையின், இவன் மணங்கொண்டான் என அடையாளம் விதிக்க
வேண்டும் என்ற நிலை தோன்றவில்லை. “தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்று கண்ணகியின் கற்பின் மாட்சியைப் பாராட்டினார் இளங்கோ. கோவலனைப் பாராட்டும்போது அவர் பாராட்டிய தென்ன?
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன்

ஒருவன் மணமாகாப் பெண்டிர் பலரைக் காதலிக்கலாம்; ஒருவனை மணமாகாப் பெண்டிர் பலரும் காதலிக்கலாம். இவை தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோள் அல்ல. ஒருவன் ஒருத்தி என்பதுவே அதன் குறிக்கோள். எனினும் ஒருவன் பலர் என்னும் நடைமுறைக்கு இணங்கிச் சமுதாயம் இயங்க வேண்டியதாயிற்று. அதனாலன்றோ பிறன்மனை நயவாமை என்ற அறம்போலப் பிறன் கணவனை நயவாமை என்ற அறம் தோன்ற இடமில்லை.

களவு கற்பு என்னும் காதல் நிலைகளும், வெறியாட்டு அலர்
உடன்போக்கு கரணம் முதலான வழக்காறுகளும் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்டவை. இவற்றையே அக விலக்கியத்திலும் காண்கின்றோம். ஆகவே அகத்திணையியல் கண்கண்ட சமுதாய அடிப்படையுடையது. நடைமுறை
தழுவியது, மெய்யானது என்று உணர்வோமாக. “இல்லது” என்று நாட்ட எழுதினார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் (ப. 30) அகத்திணை பொய்க் கூறுகளின் புனைவா? எல்லாம் புனைநெறி வழக்கா? இல்லை என்பர்.
தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். 999). தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தாலும். தகாத மரபுகளுக்கு அகத்திணையில் இடமில்லை?
தக்க மரபுகளுக்கு மிக்க இடமுண்டு. இது பொய்யெனப் படாது, அறிவுடைக் கற்பனையாகும். இதனைத் தொல்காப்பியர் புலன்நெறி வழக்கு என்று தெளிவாகக் கூறுவர். இறையனாரகப் பொருளும் அதன் உரையும் அவற்றின் வழிவந்த கருத்துரைகளும் அகத்திணைக்கு நேர் முரணாக எழுதிய இடங்கள் பல பொய்யாப் புலனெறி வழக்கைப் பொய்ந்நெறி வழக்கு (இல்லது) என்று
எழுதிய இவ்விடம் அவற்றுள் ஒன்று என்பர். அதனால் திருமணத்திற்கு முன்பு மகளிர் மலரணிதல் இல்லை என்றும் அவ்வாறு அணிந்தால் அப்பெண் யாரையே காதரலிக்கிறாள் என்றும் அலர் தூற்றினர் என்றும் அறியமுடிகிறது.

(கேள்விகளைப் போல எனது பதிலும் நீண்ட கொண்டே செல்கிறது என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் தேவையிருப்பின் இது தொடர்பான சான்றுகளை இன்னொரு கட்டுரையாகவும் தரத் தயாராகவுள்ளேன் கருத்துரை வழியே ஐயம் வினவியமைக்கு நன்றி நண்பரே..)

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

வில்லக விரலினார்




சங்க காலத்தில் தலைவன் பரத்தையரிடம் செல்வது பெரும் தவறாகக் கருதப்படவில்லை. அதற்கு அக்காலச்சூழல் ஒரு காரணமாக அமைகிறது. தலைவனின் செயலால் தலைவி வருந்துவதுண்டு. அவ்வேளையில் தலைவி தலைவன் மீது ஊடல் (கோபம்)கொள்வாள், வாயில் மறுப்பாள் (தலைவனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தல்) ஆயினும் தலைவனை ஏற்றுக்கொள்வாள். சில நேரங்களில் பரத்தையை நொந்துகொள்ளுதலும் உண்டு.

தலைவி தன்னைப் பழித்துப் பேசினாள் என்பதை அறிந்தாள் ஒரு பரத்தை. அதனால் தலைவி மீது கோபம் கொண்டாள். தலைவியின் உறவினர் கேட்குமாறு தனக்கும் தலைவனுக்குமான நெருங்கிய அன்பு நிலையைப் புலப்படுத்துகிறாள்.........


பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
குறுந்தொகை -370. (மருதம் - பரத்தை கூற்று)


வில்லகவிரலினார்.

பொய்கையிலிருக்கும் ஆம்பல் மலரானது, வண்டுகளின் வருகையை உணர்ந்து தன் இதழைத் திறக்கும். இத்தகைய குளிர்ச்சியான நிலத்தின் தலைவனோடு சேராது தனித்திருந்தால் தான் நானும் தலைவனும் இரு வடிவினை உடையவர்களாக இருப்போம்.
நாங்கள் இருவரும் சேர்ந்து அணைந்திருந்தால் வில்லோடு சேர்ந்த விரல் போல ஒருவராகத் தான் காட்சியளிப்போம். என்கிறாள் பரத்தை.


மலரினும் மெல்லிது காமம் என்பர் வள்ளுவர். அதன் செவ்வியை உணர்ந்து தலைப்படுபவர் சிலரே என்பது அவர்தம் கருத்து.

காமம் என்ற சொல்லை இக்காலக் கண்கொண்டு காண்பதை விட சங்க காலக் கண்கொண்டு காண்பது நலம் தருவதாக அமையும்.

கமம் என்ற சொல்லே காமம் என்றானது. கமம் என்ற சொல்லுக்கு நிறைவு என்பது பொருளாகும். சங்க இலக்கியத்தில் பயின்று வரும் காமம் என்ற சொல்லுக்கு அன்பின் நிறைவு என்பதே பொருளாகும்.


அத்தகைய மலரை விட மென்மையான அன்பின் முதிர்ச்சியைச் சுட்டும் காமத்தைத் தலைவனின் தேவையை உணர்ந்து அளிக்கத் தக்கவள் தானே என்கிறாள் பரத்தை.

ஆம்பலின் மலரானது வண்டின் வருகையை அறிந்து தன் இதழைத் திறக்கும் என்பதற்கு தலைவன் தான் தன்னைத் தேடி வருகிறான். தான் தலைவனைத் தேடி வரவில்லை என்ற பொருளும் நோக்கத்தக்கதாகவுள்ளது.

இப்பாடலில் பரத்தை தனக்கும் தலைவனுக்குமான உறவுநிலையை வில்லுக்கும் விரலுக்குமான உறவு நிலையோடு ஒப்பிட்டு உரைக்கிறாள். இத்தொடரின் சிறப்பினைக் கருதி இப்புலவர் வில்லக விரலினார் என்று அழைக்கப்படலானார்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பதடிவைகலார்




தொடரால் பெயர் பெற்ற புலவர்களுள் “ பதடி வைகலார் “ குறிப்பிடத்தக்கவராவார். பதடி என்ற சொல்லுக்குப் பயனில்லாமை என்பது பொருளாகும்.

பொருள் தேடச் சென்ற தலைவன், தான் பொருளீட்டிய நிலையில் தலைவியைக் காண எண்ணுகிறான். அப்போது தாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் அவற்றுள் தலைவியுடன் சேர்ந்து வாழ்ந்த காலங்களே பயனுள்ளவை. எஞ்சியவை பயனற்றவை என்ற எண்ணம் தோன்றுகிறது. இதுவே பாடலின் உட்பொருளாகும்.

323. முல்லை - தலைவன் கூற்று (குறுந்தொகை)

எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே.
-பதடி வைகலார்.



பாணர்களின் யாழிசை மிகவும் இனிமையுடையதாக மழையின் ஓசைபோல உள்ளது. மழை பெய்த நிலத்தில் முல்லை மலரின் மணம் போன்ற மணம் வீசுகின்ற நறிய நுதலைக் கொண்ட என் தலைவியின் இரு தோள்களிலும் துயின்று கழிந்த நாட்களே இவ்வுலகில் நான் வாழும் நாட்கள் ஆகும். எஞ்சியவை. பிற நாட்களெல்லாம் என்ன பயனுடையவை..?
அந்நாட்கள் பதர் போல எவ்விதமான பயனும் அற்றவை என்கிறான் தலைவன்.

தலைவியின் தோளில் துஞ்சிக் கழிந்த நாட்களை நினைக்கும் போதெல்லாம் அந்நாட்கள் இன்பம் தருவனவாக அமைவாதால், அந்நாட்களை வாழ்ந்த நாட்கள் என்று கூறாது வாழும் நாட்கள் என்று இயம்பினான்

தலைவியன் தோளில் துயிலாத அந்நாட்களெல்லாம் இன்பம் என்னும் உள்ளீடு இல்லாத பதர் போன்றன என்பதைப் “ பதடி வைகல் என்று பாடியதால் இப்புலவர் பதடி வைகலார் என்றே அழைக்கப்பட்டார்.
இப்பாடல் வழியாகத் தலைவன் தலைவி மீது கொண்ட மிகுந்த அன்பையும், பதடி வைகலார் என்னும் புலவரின் பெயர்க்காரணமும் அறியமுடிகிறது.

புதன், 12 ஆகஸ்ட், 2009

தேய்புரிப் பழங்கயிற்றினார்

உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் உயர்நிலை அடைந்தவன் மனிதன். 
மனம் இருப்பதாலேயே மனிதன் என்றழைக்கப்பட்டான். 
இந்த மனம் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. 
எந்த வேலை செய்தாலும் இந்த மனம் இடையில் வந்து பேச ஆரம்பித்துவிடுகிறது. 
மனம் சொல்வதை அறிவு கேட்பதில்லை. 
மனத்துக்கும் அறிவுக்கும் நடக்கும் இந்த விவாதத்தை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்திருப்போம். 
சில நேரங்களில் அறிவு, மனத்தை வென்றுவிடுகிறது.
சில நேரங்களில் மனது அறிவை வென்றுவிடுகிறது.. 
மனதுக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தைத் தள்ளி நின்று பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா....? 

இங்கு ஒரு தலைவன் தன் மனதுக்கும், அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைத் தள்ளி நின்று பார்க்கிறான். 

தன்னை ஒரு பழங்கயிறாகவும், 
மனம், அறிவு ஆகிய இரண்டையும் இரு யானைகளாகவும் எண்ணிக்கொள்கிறான்.
பழமையான கயிறாகிய தன்னை இருபுறமும் யானைகள் பற்றி இழுக்கின்றன. 
கயிறாகிய தான் எப்போது வேண்டுமானாலும் அறுந்து போகலாம் என்பதே தலைவனின் நிலையாகவுள்ளது.
இப்படி ஒரு உணர்வை நற்றிணைப் பாடல் பதிவு செய்துள்ளது. 

“புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்காத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே “

நற்றிணை -284 பாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார்


பொருள் முடியாநின்ற தலைமகன்
ஆற்றானாகிச் சொல்லியது

தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள்தேடச் சென்றிருக்கிறான். அவன் மனமோ உடனே சென்று தலைவியைப் பார்...! 
உனது பிரிவை அவள் தாங்கமாட்டாள்..! என்கிறது. 

அறிவோ பொருள் தேடிய பின்தான் செல்ல வேண்டும் என்கிறது.
மனமும் அறிவும் பேசிக்கொள்ளும் உரையாடலை தள்ளிநின்று தலைவன் பார்க்கிறான். 

தாழ்ந்த இருண்ட கூந்தலையும், மையுண்ட கண்களையும் கொண்ட தலைவியின் மீது கொண்ட அன்பால் என் நெஞ்சம் அவளிடம் செல்ல வேண்டும் என்கிறது.! 

அறிவோ தொடங்கிய செயலை முடிக்காமல்ச் செல்வது அறியாமை, இகழ்ச்சி என்கிறது.! 

நெஞ்சம் அறிவு என்னும் இரு யானைகளும் தேய்ந்த பழமையான கயிறான என்னை எப்போது வேண்டுமானாலும் அறுத்துவிடலாம்...! என்று எண்ணிக் கொள்கிறான்.. 
இப்பாடலில் தலைவனின் இருவேறு மனநிலைகளை இரு யானைகளாகவும், அதனால் ஏற்பட்ட தன்னிலையை தேய்ந்த பழங்கயிற்றோடும் ஒப்பிட்டமை எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில். இவ்வழகிய உவமையே புலவருக்குப் பெயராகிவிட்டது. தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில் இப்புலவரும் தேய்புரி பழங்கயிற்றினார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

பழங்காலத் தமிழர் வாணிகம்



சங்க இலக்கிய ஆய்வு நூல்களின் வரிசையில் இன்று நாம் காண இருப்பது,
பழங்காலத் தமிழர் வாணிகம்.
இந்நூலின் ஆசிரியர்
மயிலை. சீனி வேங்கடசாமி ஆவார்.
பழந்தமிழர்கள் பண்ட மாற்று முறை, நாளங்காடி, அல்லங்காடி, தரைவாணிகம், கடல் வாணிகம் என்று வாணிகத்தில் மிகவும் தேர்ச்சியுடையவர்களாக இருந்தனர்..
பழந்தமிழர்களின் வாணிகத்தின் தனிச்சிறப்பை இயம்பும் நூல் ‘பழங்காலத் தமிழர் வாணிகம்’ஆகும்.

இந்நூலின் உள்ளடக்கம்……….

1. சங்க கால மக்கள் வாழ்க்கை
2. பண்டமாற்று
3. போக்குவரத்து சாதனங்கள்
4. தமிழ்நாட்டு வாணிகம்
5. பழங்காலத் துறைமுகப் பட்டினங்கள்
• கிழக்குக் கரை
• கொல்லத்துறை
• எயிற்பட்டினம் (சோபட்டினம்)
• அரிக்கமேடு (போதவுகே)
• காவிரிப்பூம்பட்டினம்.
• தொண்டி
• மருங்கூர்பட்டினம்
• கொற்கை
• குமரி

7.தமிழகத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள்
• மங்களூர்
• நறவு
• தொண்டி
• மாந்தை
• முசிறி
• வைக்கறை
• மேல்கிந்த
• விழிஞம்
8.இலங்கைத் துறைமுகங்கள்
• மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்)
• மாதிட்டை (மாதோட்டம்)
9.விளை பொருளும் உற்பத்திப் பொருளும்
• வெல்லமும் சர்க்கரையும்
• கள்ளும் மதுவும்
• மிளகு
• அறுவை(துணி)
• உப்பு
• வளை
• முத்து
• யானைக் கோடு
• நீலக்கல்


என்பது நூலின் உள்ளடக்கமாகும்.

நூலின் முகவுரை

சங்க காலத் தமிழர் வாணிகம் என்னும் இந்தப் புத்தகம் கடைச்சங்க காலத்தில் (அதாவது கிமு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி.இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது.
அந்தக் காலத்துப் பழந்தமிழர், பாரத தேசத்தின் வடக்கே கங்கைக் கரை(பாடலிபுரம்) முதலாகக் கிழக்குக் கரை மேற்குக் கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்)மலேயா, பர்மா, முதலான கடல் கடந்த நாடுகளோடு செய்த வாணிகத்தைப் பற்றியும், மேற்கே அரபு நாடு, அலெக்சாந்தரியம்(எகிப்து) உரோம் சாம்ராச்யம் (யவண தேசம்) ஆகிய நாடுகளுடனும் செய்த வாணிகத்தைப் பற்றியும் கூறுகிறது. அந்தப் பழங்காலத்து வாணிகச் செய்திகளைச் சங்க காலத்து நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது. மற்றும் தாலமி, பிளைனி முதலான யவன ஆசிரியர் எழுதின குறிப்புகளிலிருந்தும் ‘ செங்கடல் வாணிகம்’ என்னும் நூலிலிருந்தும் , புதைபொருள் ஆய்வுகளிலிருந்தும் கிடைத்த செய்திகளிலிருந்தும் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்டது.

சங்க கால மக்களின் வாணிகம், சமூக நிலை, வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள எண்ணுவோரும். சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோரும் படிக்க வேண்டிய நூலாக இவ்வரிய நூல் விளங்குகிறது.

புதன், 5 ஆகஸ்ட், 2009

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.





(மூங்கிலின் இருபுறமும் தீப்பற்றிக்கொண்டபோது அதன் இடையில் சிக்கிக்கொண்ட எறும்பு)

“இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.”

இவ்வரிகளை,

முதல் முறை படித்போது கவிதை நயம் உணர்ந்தேன்..

இரண்டாம் முறை படித்த போது உவமை நயம் உணர்ந்தேன்..

மூன்றாம் முறை படித்த போது எறும்பின் வலி உணர்ந்தேன்...

நான்காம் முறை படித்த போது எறும்பைப் போன்ற தலைமக்களின் மனவலியை உணர்ந்தேன்....

இப்போது எனக்கு ஒரு ஐயம் எழுகிறது..

எறும்பின் வலி முதல் முறை படித்த போது ஏன் என்னால் உணர முடியவில்லை..?

‘பூனை எலியை விரட்டுகிறது,
இரண்டும் ஓடுகின்றன..
இரண்டும் ஓட்டம் தான் ஆனால் இரு ஓட்டத்துக்கும் வேறுபாடு உண்டு.

பூனை பசிக்காக ஓடுகிறது...
எலி உயிர் காக்க ஓடுகிறது....

பூனை பசிக்காக ஓடுவது போல நாம் பணத்துக்காக ஓடுகிறோம். கூட்டத்தோடு கூட்டமாக நானும் ஓடுகிறேன்...


அதனால் நானும் உணர்வுகளை இழந்து எந்திரமாக மாறிவிட்டேனோ என்பதே என் ஐயம்..

ஆம்...

நாளிதழில் கோர விபத்துக்களைப் படித்துக்கொண்டே என்னால் காபி அருந்தமுடிகிறது.....

தொலைக்காட்சியில் சுனாமியையும், தீ விபத்துக்களையும் பார்த்துக்கொண்டே என்னால் சாப்பிடமுடிகிறது.....

சாலையில் அடிபட்டுகிடப்பவரைப் பார்த்துக்கொண்டே அவருக்கு உதவி ஏதும் செய்யாமல் என்னால் போகமுடிகிறது.....


எனப் பலவாறு எண்ணி....
நான் எந்திரம் தான் என்று முடிவுக்கு வருமுன்பு.....

இருதலைக்கொள்ளியில் சிக்கிய எறும்பு என்னிடம் பேச ஆரம்பித்தது.

எறும்பு – காலம் கடந்தாவது வலியைப் புரிந்து கொண்டாயே....
உனக்குள் இன்னும் மனிதம் உயிருடன் தான் உள்ளது என்று
....

பாடல் – 1.

முத்தொள்ளாயிரம்.


நாண் ஒருபால் வாங்க நலன் ஒருபால் உள்நெகிழ்ப்பக்
காமரு தோள் கிள்ளிக்கு என் கண்கவற்ற யாமத்து
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு போலத்
திரிதரும் பேரும் என் நெஞ்சு.


முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலில்,
தலைவியின் மனநிலைக்கு எறும்பின் மனநிலை ஒப்புமை காட்டப்படுகிறது.

தலைவன் வீதியில் வலம் வருகிறானாம்...
தலைவிக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை..
போ...!போ....! சென்று பார் என்று ஒரு மனம் சொல்கிறது....

கூடாது ! சென்று பார்க்கக் கூடாது அது பெண்மைக்கு அழகல்ல....
என்று நாணம் ஒருபக்கம் தடுக்கிறது..........

தலைவியின் இம்மனநிலையை....
மூங்கிலின் இருபுறமும் தீப்பற்றிக்கொள்ள அதன் இடையே அகப்பட்ட எறும்பின் மனநிலையோடு ஆசிரியர் ஒப்பிட்டுச்செல்கிறார்....

இப்பாடலைப் படித்து முடித்துவிட்டு,

என்ன! உவமை,!
எத்தகு உயிர் வலி! மெய்சிலிர்த்து நிற்கிறேன்..........

தீக்குள் அகப்பட்ட எறும்பு வந்து என்னிடம் சொல்கிறது........

என்னை முதலில் பாடியது முத்தொள்ளாயிரம் இல்லை.
சங்க இலக்கியத்தில் அகநானூறு...

ஆம் இங்கு தலைவியின் மனநிலைக்கு என்னை ஒப்புமை சொன்னது போல அகநானூற்றில் தலைவனின் மனநிலைக்கு என்னை ஒப்புமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றது...


பெருமகிழ்ச்சியோடு அகநானூற்றுப் பாடலைப் பார்க்கிறேன்...

பாடல் – 2.

வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர்
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப,
5 அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய,
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
10 ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்;
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர்
வாழ்தல் அன்ன காதல்,
சாதல் அன்ன பிரிவு அரியோளே!
நரை முடி நெட்டையார்

(அகநாநூறு – 339) பாலை.



“ போகா நின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது“ 339

பொருள் ஈட்டி வர வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான் , சென்றவன் இடைவழியில் அவளுடைய உயர்ந்த பண்புகளை எண்ணித் தன் நெஞ்சிடம் சொல்வதாக இப்பாடல் அமைகிறது.“

விரைந்தோடும் குதிரைகளைக் கொண்டது தேர்....
அதன் சக்கரங்கள் பதிந்து செல்லும் சுவட்டில் மழை நீர் ஓடுகிறது..
சக்கரங்களின் சுவட்டில் மழை நீர் ஓடுவது பாம்பு விரைந்தோடுவது போலவே இருக்கிறது.

குவிந்து ஒன்றோடொன்று தொடர்பற்ற விரல்களைப் போல பயிற்றங்காய்கள் விரிந்து முதிர்ந்தன..

இவ்வாறாகப் பனிப்பருவம் தோன்றியது...

ஒருபக்கம்...............
முயன்று பொருள் தேடவேண்டும்....
என்று தளர்வில்லாத ஆண்மை முன்னே இழுக்கிறது...

மறுபக்கம்.............
தலைவி மீது நான் கொண்ட காமம் பின்னே இழுக்கிறது....

அதனால் இருபாற்பட்ட நெஞ்சையுடைய நான்..........
இருபுறமும் கணுக்களில் தீப்பற்றிக் கொண்ட எறும்பு ஒருபுறமும் செல்ல இயலாது....
உள்ளேயே இருந்து வருந்துவது போல வருந்தி நிற்கிறேன்....

உடம்பும் உயிரும் சேர்ந்தால் தான் காதல்...
உடலை விட்டு உயிர் பிரிந்தால் சாதல்....

நானும் தலைவியும் உடம்பும் உயிரும் போல.....
இப்போது பிரிந்திருக்கிறோம்........
எனக்கு உயிர் இருக்கிறதா..........?
பாவம் தலைவி என்னைப் போலத் தானே அவளும் எண்ணுவாள் என்று புலம்புகிறான் தலைவன்..............

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.
என்னும் ஒரு உவமை அகநானூறு, முத்தொள்ளாயிரம் என்னும் இரு நூல்களிலும் ஆளப்பட்டுள்ளது.

அகநானூற்றில் தலைவனின் மனநிலைக்கும்,
முத்தொள்ளாயிரத்தில் தலைவியின் மனநிலைக்கும்
உவமையாக எடுத்தாளப்பட்டுள்ளது....

மெல்ல மெல்ல உணர்வுகளை இழந்து எந்திரங்களாக மாறிவரும் சமூகத்துக்கு உயிரின் வலியையும், உணர்வுகளின் சுமையையும் எடுத்தியம்பிவதாக இவ்வுவமை அமைகிறது என்றால் அது மிகையல்ல..

சனி, 1 ஆகஸ்ட், 2009

டாஸ்க்பார் வழி இணையதளத்தேடல்...

பொதுவாக நாம் இணையப் பக்கங்களைக் காண இன்டர்னெட் எக்ஸப்ளோர், பயர்பாக்ஸ் போன்ற பிரௌசர்களையே பயன்படுத்தி வருகிறோம். பிரௌசரைத் திறந்து அதன் அட்ரஸ்பாரில் நமக்குத் தேவையான முகவரிகளை இட்டுத் தான் தேடி வருகிறோம். இன்னும் சிலர் கூகுள் உள்ளிட்ட தேடுதளங்கள் வழியாகத் தான் சென்று தேடுவார்கள்..
இவ்வழிமுறைக்கு மாற்றாக நம் கணினித் திரையிலேயே ஒரு அட்டரஸ் பாரை உருவாக்கிக் கொள்ளலாம்...

வழி :
1.நம் கணினித் திரையில் காலம் காட்டும் பகுதிக்குச் செல்லவும்.
2.நாள் நேரம் குறிக்கும் பகுதியில் நம் சுட்டியை வலதுபுறம் சொடுக்கினால்...
அதில் கீழ்க்காணும் படத்தில் உள்ளது போல டூல்பார் - அட்ரஸ் என்று வரும் அதில் அட்ரஸ் என்னும் பகுதியைச் சொடுக்கினால..



நாள் , நேரத்துக்கு அருகே அட்ரஸ் என்னும் புதிய பகுதி தோற்றம் தரும்.
3. அட்ரஸ் என்னும் பகுதியை நம் சுட்டியில் சுட்டி இழுத்தால் புதியதொரு அட்ரஸ் பார் பகுதி தோன்றும். அந்த முகவரிப் பட்டையை நாம் விரும்பும் இடங்களில் மேலோ, கீழோ வைத்துக்கொள்ளலாம்.




4. அதில் நமக்குத் தேவையான தளங்களை உடனுக்குடன் தேடிப்பெறலாம்..
பிரஸர் வழியாகச் சென்று தேடுதளங்கள் வழியே தேடும் நிலைக்கு மாற்றாகவும் நமக்கு ஒரு புதிய அனுபவமாகவும் இம்முறை அமைகிறது...