வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

பெண்களும் மலரணிதலும்(சங்க காலம்) பகுதி - 2(பெண்களும் மலரணிதலும் என்னும் கட்டுரைக்கு நண்பர் குமரன் அவர்கள் எழுப்பிய ஐயம் கீழே....
அதற்கு விளக்கமாகவும் தமிழரின் மலரணியும் மரபை மேலும் விளக்கும் விதமாகவும் இக்கட்டுரை அமைகிறது.....

கேள்விகள்
எளிய உரையாடல் வடிவாக விளக்கத்தைத் தந்ததற்கு நன்றி நண்பரே. முதன்மைச் செய்திகளை தடித்த எழுத்தில் இட்டதும் நன்று.

வழக்கம் போல் சில ஐயங்கள்: :-)

1. இப்பாடலில் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்ற சொற்றொடர் வருகிறது. இதற்கு உரையாசிரியர்கள் கூறும் விளக்கம் என்ன? நம் என்றதால் தலைவனும் தலைவியும் ஆயர் குலம் என்பது தெரிகிறது. ஆனால் தன் குலத்தையே புல்லினம் என்று தலைவி கூறுவது புரியவில்லை; ஆயர் குலம் தாழ்ந்த குலம், புல்லினம் என்றொரு மரபு சங்க காலத்திலும் இருந்திருக்கிறதா? அதனை ஆயர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்களா? அதனால் தான் 'நம் புல்லினத்து ஆயர் மகன்' என்றாளா தலைவி? உரையாசிரியர்கள் சொல்வது என்ன?

2. இப்பாடலில் தலைவன் அணிந்த முல்லையங்கண்ணியைத் தலைவி சூடிய செய்தி மட்டுமே எனக்குத் தென்படுகிறது. மணமாகாத பெண்கள் மலர் அணிவது இல்லை என்ற செய்தி வருவித்துக் கொண்ட செய்தியைப் போல் தான் தோன்றுகிறது. நேரடியாக இந்தப் பாடலில் அந்த செய்தி இல்லை. இந்த செய்தியை நேரடியாக - அதாவது மணமாகாத பெண்கள் மலர் அணிவதில்லை என்ற செய்தியை நேரடியாக - கூறும் ஏதேனும் பாடல் உண்டா? மாற்றாக மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் உண்டா?

எனக்கென்னவோ மணமாகாத பெண்கள் மலர் அணிந்திருந்ததைக் காட்டும் பாடல்கள் பலவும் சங்க இலக்கியத்தில் உண்டென்றே தோன்றுகிறது; அகத்துறையில் கொஞ்சம் தேடினால் நிறைய கிடைக்கும் என்று நினைக்கிறேன். நானும் தேடிப் பார்க்கிறேன்.

3. அப்படியே 'மணமாகாத பெண்கள் மலர் சூடுவதில்லை' என்னும் மரபு இருந்திருந்தாலும் அம்மரபு ஐவகை நிலத்தவரிடையேயும் அங்கே வாழ்ந்த எல்லா குடியினரிடையேயும் இருந்த மரபு தானா? அன்றி ஆய்க்குலத்துப் பெண்களுக்கு மட்டுமே ஆன மரபா? அப்படி ஆய்க்குலத்தவர்க்கு மட்டுமே ஆன மரபென்றால் அதனைச் சங்ககால மகளிர் அனைவருக்கும் பொதுமைப்படுத்துவது சரியாகுமா?

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். விட்டால் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே செல்வேன். கேள்விகளைக் கேட்பதென்னவோ எளிது தானே?! :-)

எனக்குத் தென்படும் இன்னொரு செய்தி - தலைவனும் தலைவியும் ஆய்க்குலத்தவர் என்பதால் அதனை எப்படியோ உய்த்துணர்ந்த (சூடியது முல்லை மலர் என்பதால் தலைவனும் ஆய்க்குலம் என்று அறிந்தனர் போலும் யாயும் அன்னையும் அத்தனும்) பெற்றோர்கள் ஒத்த குலத்தவரான இருவரையும் சேர்த்து வைக்க மனம் கொண்டனர் போலும். இதுவே வேறு குலத்தவராயின் இற்செறித்தல், வெறியாட்டு, உடன்போக்கு போன்றவை நிகழ்ந்திருக்கும் போலும்.

பதில் – 1.
புல்லினம் என்பது ஆட்டினத்தைக் குறிக்கும். உரையாசிரியர்களும் ஆட்டிடையர்களின் ஒரு இனம் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆயர்குலம் தாழ்ந்த குலம் என்பதற்கான சான்றுகள் இல்லை நண்பரே...
பதில் – 2.சங்க காலத்தில் திருமணமாகத பெண்கள் கூந்தலில் மலரணிவது இல்லை. இம்மரபைப் பல பாடல்கள் வழி நேரிடையாகவே காணமுடிகிறது. திருமணத்தின் ஒரு குறியீடாக மலரணிதல் அமைந்திருந்தது.
திருமணமாகத பெண்கள் மலரணிந்தால் அப்பெண் காதலிக்கிறாள் அவன் சூடிய மலரே அது என்று அலர் தூற்றப்பட்டதை அறிகிறோம். சான்றுகள் கீழே....
பதில் -3.கூந்தலில் மலரணிதல் பற்றிய மரபு முல்லை நிலத்துக்கு மட்டுமன்றி எல்லா நிலங்களுக்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது.

தங்கள் கேள்வி மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது நண்பரே... விளக்கங்கள் கீழே...

சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கும் சான்றுகளுள் சில....

தலைவன் களவுக் காலத்தில் தலைவியைப் பார்த்து அவள் கூந்தலில் மலர் சூடிச் செல்கிறான். கூந்தலில் மலரைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர்.( அகம் 180)
• ஒரு நாள் தாய் தன் மகளிடம் – உன் கூந்தலில் மலரின் மணம் வருகிறதே..? என்று வினவுகிறாள். தன் களவு வெளிப்பட்டது என்ற அஞ்சிய தலைவி, தலைவனுடன் உடன்போக்கு செல்கிறாள்.( நற் – 143)
• தலைவி கூந்தலில் மறைத்த மலர் அன்னை அக்கூந்தலை அவிழ்க்கும் போது வீழ்கிறது.அன்னை நெருப்பைத் தொட்டவள் போல அவ்விடம் விட்டு நீங்குகிறாள்.(கலி -115)
• இரவில் தலைவனைக் காணும் போது மலர் சூடிச் சென்ற தலைவி, தன்வீட்டார் முன்னர் மலர் நீக்கியவளாகக் காட்சியளிக்கிறாள்.( குறுந் – 312)
• ஏறுதழுவல் நடைபெற்ற போது வலிமையான காளையை இடையன் ஒருவன் அடக்குகிறான். அப்போது அக்காளை அவன் தலையில் சூடிய முல்லைச் சரத்தைத் தன் கொம்பால் சுழற்றி வீசுகிறது. அம்மலர்ச்சரம் ஓர் ஆயமகளின் கூந்தலில் வீழ்கிறது. அதனை விரும்பிய தன் கூந்தலுள் மறைத்த அப்பெண் ஊராருக்கும்,அவர் தூற்றும் அலருக்கும், தம் பெற்றோருக்கும் அஞ்சுகிறாள்.( கலி- 107)
• திருமணத்தின் போது தலைவனை, “ திருமணத்தைக் கொண்டாடும் படி பின்னிய கரிய கூந்தலில் மலர் சூட்டினாய் “ என்று தோழியர் வாழ்த்துகின்றனர். ( ஐங் – 296)


தமிழரின் மலரணியும் மரபு பற்றி மூதறிஞர் . வ.சுப. மாணிக்கனார் அவர்களின் கருத்து.....

கூந்தல் மலரணிதல்

பண்டை நாளில் வழங்கிய கரணம் ஒன்றே; அதுதானும் சிலம்பின் அகற்சி என்று முடிவு கட்டுதற்கு இல்லை. சிலம்பின்மை ஓர் எதிர்மறையடையாளம். இவள் மணவாட்டி என்று அறிவிப்பான் பல அடையாளங்கள் திணைக்கேற்ப இருந்திருத்தல் கூடும். அவை இலக்கியம் ஏறாதிருத்தலும்
கூடும். சங்கச் செய்யுட்களை நுணுகிக் காண்பார்க்கு மற்றொரு அடையாளமும் வழங்கியமை தெரியவரும். இஃது உடன்பாடான அறிகுறி; பெரிதும் வழக்கில் பரவியிருந்த கரணம்.

“ தண்கயத் தமன்ற ஒண்பூங் குவளை
அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி
பின்னுப் புறந்தாழக் கொன்னே சூட்டி
நல்வரல் இளமுலை நோக்கி நெடிதுநினைந்து
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே...
பொன்னேர் நுண்தாது நோக்கி
என்னும் நோக்குமிவ் வழுங்கல் ஊரே ” (அகம். 180)


‘குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; வளரும் மார்பை ஒரு நோக்கு நோக்கிச் சென்றுவிட்டான்; இந்தச் செயலுக்கே ஊர் என்னை ஒருவகையாகப்பார்க்கலாயிற்று. புன்னைத் தாதின் நிறத்தையும் பசலை படர்ந்த என்மேனி நிறத்தையும் உற்று நோக்கிற்று’ எனத் தலைவி ஊரலருக்குக் காரணம் உரைக்கின்றாள். கூந்தலில் பூவைக் கண்டவளவிலேயே ஊர்ப்பார்வை மாறிவிட்டதே என்று தலைமகள் நொந்து கொள்ளினும், ஒருவனோடு ஒருத்திக்கு உறவு உண்டு என்பதற்கு மலர் போதுமான அடையாளம் என்று
ஊரார் துணிவுற்று அலர் மொழிந்தனர் என்று நாம் அறிய வேண்டும்.

அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்
இன்னா இன்னுரை கேட்ட சின்னாள்
அறியேன் போல உயிரேன்
நறிய நாறும்நின் கதுப்பென் றேனே (நற். 143)


“இன்னானுடன் இவர் மகளுக்குத் தொடர்பு என்று என் காது கேட்க ஊர்ப்பெண்டுகள் பேசுவதை அறிவேன். சில நாட்களாகத் தெரிந்து வைத்தும், தெரியாதவள் போல ஒன்றும் காட்டிக் கொள்ளாதிருந்தேன். ஒருநாள் ‘நின் கூந்தல் நறுமணம் வீசுகின்றதே என்று கேட்டுவிட்டேன்’ என்று தாய் தன்
மகள் உடன் போகியதற்குத் தானே காரணம் எனச் சொல்லுகின்றாள்.
குமரியர் கூழையில் பூமணத்திற்கு இடமில்லை; நின் கூந்தல் மணக்கின்றதே என்று அன்னை வினவியதும் களவு வெளிப்பட்டுவிட்டது. இனி வீட்டில் இருத்தல் பொருந்தாது என்று மகள் தாய்க்கு அஞ்சி உடன்போயினாள்.
இயற்கை வனப்புமிக்க இடத்தில் இன்புறும் தலைவன் காதலியின் கருங்குழலில் பூங்கொத்துக்களைச் சூடி அணிசெய்து மகிழ்வான். வீடு செல்லும்போது தலைமகள் பூவைக் கூந்தலிலிருந்து அகற்றி விடுவாள். மலரை எடுத்தெறிந்து விட்டாலும், மலர் இருந்த கூந்தல் மணக்குமன்றோ? ஆதலின் தாய் மகளின்
கூந்தலில் மலரைப் பார்க்காவிட்டாலும், அதன் மணத்தை அறிந்து, நின் கதுப்பு நறிய நாறும் என்று வினவினாள் எனக்கொள்க.


குமரி மலரணியாமை

பண்டைத் தமிழ்க் கன்னி மலர்சூடாள் என்பதும், மலர் சூடின்
கன்னியாகாள், ஒருவனை வரித்தாள் என்பதும் நம் பழஞ் சமுதாய வழக்கு. இக்கருத்து கற்றார்க்கு இன்று வியப்பாகவும் புரட்சியாகவும் தோன்றும், தோன்றக்கூடும். இவ் வழக்கம் இந்நாள் தமிழகத்து இல்லாமையும், இருக்க இயலாமையும் கண்டு பலர் மலைக்கவும் மலைப்பர். தௌ¤விற்கு இன்னும் சில
சான்றுகள் காண்போம்.

இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே. (குறுந். 312)


இரவுக்குறி வந்து செல்லும் தலைமகன் இனி மணந்து கொள்ள
வேண்டியதுதான் என்று தன்னெஞ்சிற்குக் கூறும் கருத்துடையது இப்பாட்டு. ‘பலமலர்களைச் சூடிக் கமகமவென்று மணம் பரப்பி இரவில் வந்து முயங்கி என்னவளாகின்றாள்; பின்பு சூடிய மலர்களை உதிர்த்துக் கலவியிற் கலைந்த கூந்தலைச் சீர்செய்து, யாதொரு மாறுபாடும் தோன்றாதபடி, காலையில் தன் வீட்டாருக்குக் காட்சியளிக்கின்றாள். எனக்கு ஏற்பவும் தன் சுற்றத்தாருக்கு ஏற்பவும் இடமறிந்து நடந்து கொள்ளும் என் காதலி, நெஞ்சே! எத்தன்மையள் தெரியுமா? அவள் ‘இரண்டறி கள்வி’ என்று தலைவன் காதலாளின் அறிவுத் திறத்தை வியக்கின்றான். கூந்தலில் பெய்த மலர், தானே உதிரவில்லை; வேண்டுமென்றே உதிர்க்கின்றாள். ஏன்? “உதிர்த்து” என்ற பிறவினையை நினைக. கன்னியர் மலர் சூடுவது இயல்பு வழக்காயின், தலைவன் அணிந்த மலரையும் இயல்பு வழக்குப் போலப் பெற்றோர்க்குக் காட்டிவிடலாமன்றோ? அன்னை முன் பூ விழுந்தபோது தலைவி அவலப்பட வேண்டாமன்றே? அன்னையும் அதிர்ச்சியுற வேண்டுவதில்லையே! அன்போடு சூடிய பூவை
அச்சத்தோடு நினைந்து உதிர்த்தாள் எனின், குமரியர் பூவணிதல் சமுதாய வழக்கிற்கு ஒவ்வாக் காட்சி என்பது தௌ¤வு.

முல்லைக் குமரியின் கவலை

பெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலான்
கைபுனை கண்ணி முடித்தாளென்று யாய்கேட்பின்
செய்வதி லாகுமோ மற்று. (கலி. 107)


குமரிப் பெண்ணாள் ஒருத்தியின் கவலையை இம் முல்லைக்கலி
உணர்த்துகின்றது. அவள் கவற்சிக்குக் காரணம் என்கொல்?
முல்லைத்திணையில் ஏறுகோள்விழா நடந்தது. பார்வையாளராகக்
குமரியரெல்லாம் குழுமியிருந்தனர். செவியிலே மறையுடைய ஒரு காளையை இடையன் மடக்கினான், அடக்கினான். அக்காளை தன் கொம்பினால் அவன் தலையிற் சூடிய முல்லைச்சரத்தை எடுத்து மாட்டிக்கொண்டு சுழற்றியது. கொம்பு சுழன்ற வேகத்தில் ஒரு முல்லைப்பூ தனித்துச் சென்று எங்கோ இருந்த இடைமகளின் கூழைக் கற்றை யுள்ளேபோய் விழுந்தது. (“அப்பூ
வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று”). இழந்த பொருள் எதிர்பாராது
கிடைப்பின், ஆசையோடு அதனைப் போற்றிக்கொள்வதுபோல, தானே வந்து கூந்தலில் விழுந்த பூவைக் கீழே நழுவி விழாதபடி அந்த ஆய்மகள் தலையில் முடித்துக் கொண்டனள். விழாவிற்கு வந்த பெண்கள் சிலர் கண்ணிலேனும் இந் நிகழ்ச்சி பட்டிருத்தல் கூடும். காதலிற் கண்டதைக் காணாதார்க்குப் போய்க் கூறினாலல்லது சில கண்களுக்குத் தூக்கம் வந்தொழியா; ஆதலின், முல்லைப்பூவை முடித்துக் கொண்டமை கண்ட மாதர்கள், தம் வீட்டுக்கு நேரே செல்லாது அவள் அன்னைக்குச் சென்று அலர் சொல்லியிருத்தல் கூடும். இந்நிலையில் ‘என்ன செய்வேன்? எங்ஙனம் தாயைக் காண்பேன்? கேட்டால், எதனை மறுமொழிவேன்’ என்று துடிக்கின்றாள் முல்லைமுடித்த கூந்தலி. ‘இவள் கூழைக் கூந்தல் இதுவரை மலர் பெய்து அறியாதது, ஒரு பூமேல் ஆசைகொண்டு இவள் தானே சூடிக்கொண்டாலும், அதுவே தவறாம். அயலான் கைதொட்டுத் தலையில் வைத்த கண்ணிப் பூவந்து விழுந்ததெனின், ஏறிட்டுப் பாராது எடுத்து எறிய வேண்டியதிருப்ப, என் மகள் அதனை விழைந்து முடித்துப் பொதிந்து கொண்டளாயின், அக்குற்றம் பொறுக்குந் தரத்ததோ? என்றெல்லாம் தாய் காரணத்தை அடுக்கி நினைத்து
அடங்காச் சினங்கொண்டால், என்செய்வோம்? எனக் கற்பனைசெய்து கவல்கின்றாள் முல்லைக் குழலி. அவள் கவலை கிடக்க; அக்கவலை நமக்கு அறிவிப்பது என்ன? ‘பெய்போது அறியாத் தன் கூழை’ என்ற தொடரின் கருத்து யாது? “மயிருக்கு மணந்தரும் பூ முடித்தல் வேண்டும் என்று அறியாதவள்” என்பது
நச்சினார்க்கினியர் உரைவிளக்கம். பூ முடித்துப் பழக்கமில்லாதவள் என்பது இதன் கருத்து. “பெய்போது அறியா” என்பது அவருரை. இவ்வுரையைக் காட்டிலும் போதுபெய்தலை (சூடுதலை) அறியாத என்று உரைப்பதுவே பொருந்தும். “ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை” (653) என்னும் குறள் நடையோடு பெய்போது என்ற நடையை ஒப்பிடுக. உரை எதுவாயினும் குமரிக்கொண்டை பூ மணம் அறியாதது என்பதுவே பொருள்.

கூழைக் கூந்தல்

கூந்தலைக் குறிக்கும் பலவகைச் சொற்களுள் கூழை என்பது ஒன்று. இச்சொல் ஒருபொருளின் இறுதி நிலையை, இறுதிப்பகுதியின் குறை நிலையைக் குறிக்கும்.1 இளங்குமரியின் தலைமயிர் நீண்ட வளர்ச்சி பெற்றிருப்பதில்லை. இன்னும் வளர வேண்டும் குறையுடையது.2 ஆதலின்
கூழைக் கிளவியைக் குமரியர் கூந்தலுக்கே ஆட்சிசெய்யும் இலக்கிய வழக்கைக் காண்கின்றோம். (குறுந்.113 நற்.140.; அகம்.315 கலி.107). முடித்தற்கு வேண்டும் கூந்தல் நீட்சி மனைவிப் பருவத்தே வளருமாதலின், பூ அணியும் வழக்கம் திருமணம் தொடங்கி மேற்கொள்ளப்படுவது எனக் கொள்ளலாம். குமரிப் பருவத்துக் கூழைக் கூந்தலைச் செவிலியர் எண்ணெய் தடவி வாரிப் பின்னி விடுமளவே செய்குவர். பின்னிய கூந்தலில் பூ அணிவதில்லை.

பின்னுவிட் டிருளிய ஐம்பால் (கலி.59)
மண்ணி மாசற்ற நின்கூழை (கலி.107)
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் (அகம்.108)
கூந்தல் வாரி நுசுப்பிவந் தோம்பிய
நலம்புனை யுதவி (அகம்.195)


இனைய பாடலடிகள் குமரியர் கூந்தலின் ஒப்பனையில் பூ இல்லாமைக்குச் சான்றுகளாம். கன்னியர் பூவணிதல் ஆகாது என்று தமிழ்ச் சமுதாயம் கொண்ட முறைக்குக் காரணம் என்ன?

கூழைமோனை “ஈறிலி கூழை, எனப்படும். (காரிகை 19)
ஐங் 374; “முடியகம் புகாஅக் கூந்தலள்”


பொலிவுடையது, கண்ணுக்கினியது, நட்பாடத் துணையாவது, கைக்கு அழகியது, மணம் பொதிந்தது, மனத்தைக் கிளறுவது, காதலுக்கு நாகரிகத் தூதாவது; அனைய பெருஞ் சிறப்பும் வாய்ந்த ஒரு சிறு பொருள் பூ; பூவனையர் பூப்பெய்திய குமரியர்.

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. (குறுந்.32)
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே (குறுந்.84)


காதற்கன்னி முல்லையும் குவளையும் வேங்கையும் காந்தளும் ஆம்பலும் போல்பவள் எனவும், ஐம்மையும் நறுமையும் இனிமையும் தன்மையும் வாய்ந்த மென்மையள் எனவும், பூவாகவும் பூவின் தன்மையனவாகவும் போற்றப் படுகின்றாள். இல்லக் குமரியர் பூச்சூடி மணம்
பரப்பிப் பிறரைக் கவரவேண்டும் என்பதில்லை; கவருதலும் கூடாது. அத்தகைய செய்புனை கவர்ச்சி கற்பு நெறிக்கு ஒவ்வாது. காதல் நெறியை வளர்க்காது என்றெல்லாம் தமிழ் மூதறிஞர்கள் கண்டனர்; குமரியர் பூவணிதலைக் கடிந்தனர் என்று கொள்ள வேண்டும்.

பூவணியும் உரிமை

குமரியர் பூவணியும் உரிமையைத் திருமணநாள் முதல் பெறுகின்றனர். இவள் இல்லறத்தி, மனைவியானாள் என்பதற்குப் பூக்கரணம் செய்யப்படும். இக்கரணத்தைத் தலைவன் செய்வான் என்று அறிகின்றோம். செந்நிற வேங்கை பூவின்மேல் இருந்த மயில் நகையணிந்த பெண் போலக் காட்சியளிக்கும் நாட்டவனே, நல்லது செய்தாய்; நின் குடும்பம் வாழ்க. திருமணத்தைக் கொண்டாடும்படி பின்னிய கரிய இவள் கூந்தலில் மலர்
சூட்டினாய்;

எரிமருள் வேங்கை யிருந்த தோகை
இழையணி மடந்தையில் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயரவிவள்
பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங்.296)


என்று மணஞ்செய்து கொண்ட களவொழுக்கத் தலைவனைப் பார்த்துத் தோழி மனமார வாழ்த்துகின்றாள். கூந்தலைப் பின்னி மலரணிந்தான் என்று கூறாமல், பின்னிய கூந்தலில் மலரணிந்தான் என்று கூறுவதால், பின்னியநிலை குமரிக் கோலம் என்றும் மலரணிகை கற்புக்கோலம் என்றும் தௌ¤வாதல் காண்க. மலரணி சடங்கு செய்யும்போது, தலைவியின் கூந்தலைத் தலைவன் கை தொடும். தன் கூந்தலைத் தொட்டானுக்குக் குமரி உரிமையாகின்றாள். உற்றார்க்கு உரியர் பொற்றொடி
மகளிர்’ என்பது பழமொழி. “இவள் ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே” (குறுந்.225)”குறுந்தொடிமகளிர் நாறிருங் கூந்தற்கிழவர்” (புறம்.113) என்ற அடிகளால், கூந்தலுக்கு உரியவன் யாவன் அவன் கொழுநன் என்ற மணவழக்குப் பெறப்படும். கூந்தலுக்கு உரியவன் என்றால், கூந்தலில் மலர் வேய்ந்து மணங்கொள்பவன் என்பது குறிப்பு.
நல்லாவூர் கிழார் பண்டு நடந்த மணமுறைகளைத் தாம் பாடிய ஒரே
ஒரு பாட்டில் தொகுத்துச் சொல்லுவர். குழந்தைகள் பெற்ற இல்லற மாதர் ஒருங்குகூடி, ‘கற்பு வழாமல் அறம்பல செய்க, கொண்டானைப் பேணி ஒழுகுக, தக்க வாழ்க்கைத் துணையாகுக’ என்று திருமணக் காலத்து மணப்பெண்ணை வாழ்த்துவர் எனவும், கூந்தல்மேல் பூவும் பிறவும் விளங்க நன்மணம்
நிகழ்த்துவர் எனவும் அப்பாட்டு மணச்சடங்கைச் சொல்லிச் செல்கிறது:-

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றை (அகம் .86)


திருமணந் தொட்டு மகளிர் பூவணிவர் என்பதற்கு இப் பாட்டும் குறிப்பிற் சான்றாதல் காண்க: இம் முடிபை நினைத்து களவுத் துறைப் பாடல்களைக் கற்கும்போது, எதிர்ச் சான்றுகள் போல்வன சில தோன்றக்கூடும்; குமரிக் காலத்துப் பூச்சூடும் வழக்கம் உண்டு போலும், அது சமுதாய விலக்கன்று என்று காட்டுவதுபோலச் சில செய்யுட்கள் காணப்படும்.

வண்டுவழிப் படரா தண்மலர் வேய்ந்து (அகம்.198)
வீபெய் கூந்தல் வீசுவளி உளர (நற்.264)
அணிமலர் முண்டகத் தாய்பூங் கோதை
மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத்
துணிநீர்ப் பௌவம் துணையோ டாடி (நற்.265)
குவளை நாறுங் குவளையிருங் கூந்தல் (குறுந்.300)


இவ்வாறு வரும் பகுதிகளைக் கண்டு, என் முடிவுக்கு மாறான சான்றுகள் என்று கருதிவிட வேண்டா. துறைகளோடு பொருத்தி நேர்பட ஆராயின், இயற்கை புணர்ச்சியிலும் உடன்போக்கிலும் இன்பக்களிப்பிலும் இன்ப எதிர்பார்ப்பிலும் நீர் விளையாட்டிலும் குமரியர் பூவணிந்த குறிப்புக்களாகவே இருக்கும்.

முடிபுகள்

மேற் செய்த ஆராய்ச்சியால் கண்ட தெளிவு என்ன? மணந்த
குமரியரை மணவாக் குமரியரினின்றும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கமே கரணத் தோற்றத்திற்குக் காரணம் ஆம்: காலிற் கிடந்த சிலம்பை அகற்றுவது ஒரு கரணம். கூந்தல் மேல் மலரணிவது ஒரு கரணம். இவ் விரண்டும் பண்டைத் திருமணக் காலத்துப் பரவலாக வழக்கில் இருந்த கரணங்கள் என்று
தௌ¤கின்றோம். இவள் மனைவியானாள் என்ற அறநிலையைச் சிலம்பு கழித்த அடியாலும், மலர் வேய்ந்த முடியாலும் அறிந்து கொள்ளலாம்; சிலம்பு இன்மையை நெருங்கிக் காணவேண்டும் என்பதில்லை. செவிக்குச் சிலம்பின் ஓசை கேளாமையால், இவள் மனைவிமை எய்தியவள் என்பதனைச் சேய்மையிலேயே விளங்கிக் கொள்ளலாம். மலர்சூடியிருப்பதை அணுகிக்
காணவேண்டுவதில்லை; மூக்கிற்குப் பூமணம் வந்து தாக்குதலால், இவள் இல்லறத்தி என்று சேய்மைக் கண்ணேயே முடிவு கொள்ளலாம். அடியாலும் முடியாலும் இன்மைக் குறியாலும் கன்னிமை கழிந்த மனையாட்டி என்பதனைத்
தமிழ்ச் சமுதாயம் எல்லாரையும் அறியச் செய்தது. மணமாகி யாளைத் தோற்றத்தால் குமரியென மயங்கி விடாதவாறும், அங்ஙனம் மயங்கிப் பொய்யும் வழுவும் மேற்கொள்ளாதவாறும் கரணத் தடுப்புக் கண்டது தமிழ்ச் சமுதாயம். சடங்கு தோன்றக் காரணம் என்ன? சடங்கு என்ன? சடங்கின் குறிக்கோள் என்ன? இவற்றிற்கு இன்று நாம் விடை பலவாறு கூறலாம்.
தொல்காப்பியம் சங்கப் பனுவல்களின் துணைகொண்டு, தமிழ்ச் சமுதாயம் காட்டும் விடைகளை மேலே கண்டோம்.

சடங்கு என்பது பெண் இனத்திற்கு மட்டுமா? மணமாகிய குமரனை மணமாகாக் குமரனின்றும் வேறுபடுத்திக் காட்ட வேண்டியதில்லையா? இவன் திருமணத்தான் என்பதற்கு அடையாளம் வேண்டாவா? இவ்வினாக்களுக்கு
அறிவு ஒப்பும் நேரிய மறுமொழி தரமுடியாதுதான். கற்பு இருபாலார்க்கும் பொது என்று நாம் இன்று கொள்வது போலப் பண்டைத் தமிழ்ச் சமுதாயம் கொள்ளாமலில்லை; கொண்டிருந்தது. எனினும் வழிவழிப்பட்ட சில செயல்
முறைகளை நடைமுறையில் ஒருவாறு ஒப்புக்கொண்டு குடும்பவியலைப் போற்றியது; போற்றும் பொறுப்பைச் செறிவும் நிறைவும் மிக்கபெண்ணினத்துக்கு அளித்தது. பலதாரமணம் ஆடவர்க்கு வழக்காறாக இருந்தமையின், இவன் மணங்கொண்டான் என அடையாளம் விதிக்க
வேண்டும் என்ற நிலை தோன்றவில்லை. “தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்று கண்ணகியின் கற்பின் மாட்சியைப் பாராட்டினார் இளங்கோ. கோவலனைப் பாராட்டும்போது அவர் பாராட்டிய தென்ன?
மண்தேய்த்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேளென் றிசைபோக்கிக் காதலாற்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன்

ஒருவன் மணமாகாப் பெண்டிர் பலரைக் காதலிக்கலாம்; ஒருவனை மணமாகாப் பெண்டிர் பலரும் காதலிக்கலாம். இவை தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோள் அல்ல. ஒருவன் ஒருத்தி என்பதுவே அதன் குறிக்கோள். எனினும் ஒருவன் பலர் என்னும் நடைமுறைக்கு இணங்கிச் சமுதாயம் இயங்க வேண்டியதாயிற்று. அதனாலன்றோ பிறன்மனை நயவாமை என்ற அறம்போலப் பிறன் கணவனை நயவாமை என்ற அறம் தோன்ற இடமில்லை.

களவு கற்பு என்னும் காதல் நிலைகளும், வெறியாட்டு அலர்
உடன்போக்கு கரணம் முதலான வழக்காறுகளும் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்டவை. இவற்றையே அக விலக்கியத்திலும் காண்கின்றோம். ஆகவே அகத்திணையியல் கண்கண்ட சமுதாய அடிப்படையுடையது. நடைமுறை
தழுவியது, மெய்யானது என்று உணர்வோமாக. “இல்லது” என்று நாட்ட எழுதினார் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் (ப. 30) அகத்திணை பொய்க் கூறுகளின் புனைவா? எல்லாம் புனைநெறி வழக்கா? இல்லை என்பர்.
தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். 999). தமிழ்ச் சமுதாயத்தில் இருந்தாலும். தகாத மரபுகளுக்கு அகத்திணையில் இடமில்லை?
தக்க மரபுகளுக்கு மிக்க இடமுண்டு. இது பொய்யெனப் படாது, அறிவுடைக் கற்பனையாகும். இதனைத் தொல்காப்பியர் புலன்நெறி வழக்கு என்று தெளிவாகக் கூறுவர். இறையனாரகப் பொருளும் அதன் உரையும் அவற்றின் வழிவந்த கருத்துரைகளும் அகத்திணைக்கு நேர் முரணாக எழுதிய இடங்கள் பல பொய்யாப் புலனெறி வழக்கைப் பொய்ந்நெறி வழக்கு (இல்லது) என்று
எழுதிய இவ்விடம் அவற்றுள் ஒன்று என்பர். அதனால் திருமணத்திற்கு முன்பு மகளிர் மலரணிதல் இல்லை என்றும் அவ்வாறு அணிந்தால் அப்பெண் யாரையே காதரலிக்கிறாள் என்றும் அலர் தூற்றினர் என்றும் அறியமுடிகிறது.

(கேள்விகளைப் போல எனது பதிலும் நீண்ட கொண்டே செல்கிறது என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் தேவையிருப்பின் இது தொடர்பான சான்றுகளை இன்னொரு கட்டுரையாகவும் தரத் தயாராகவுள்ளேன் கருத்துரை வழியே ஐயம் வினவியமைக்கு நன்றி நண்பரே..)

20 கருத்துகள்:

 1. அருமையான விளக்கம்

  /"கடிகொள் இருங்காப்பில் புல்லினத்து ஆயர்
  குடிதோறும் நல்லாரை வேண்டுதி - எல்லா
  இடுதேள் மருந்தோ நின்வேட்கை? தொடுதரத்
  துன்னி, தந்தாங்கே, நகைகுறித்து, எம்மைத்
  திளைத்தற்கு எளிய மாக் கண்டை ; "அளைக்கு எளியாள்
  வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய் " /

  பதிலளிநீக்கு
 2. தொடர்ந்து ஆழ்ந்து அக்கறையோடு உங்கள் பதிவுகளை படித்தால் போதும் நாங்களும் விரைவில் இலக்கியவாதிகள் தான்...

  பதிலளிநீக்கு
 3. தமிழரசி 25 August 2009 06:10

  தொடர்ந்து ஆழ்ந்து அக்கறையோடு உங்கள் பதிவுகளை படித்தால் போதும் நாங்களும் விரைவில் இலக்கியவாதிகள் தான்...
  ]]


  நானும் கூவிக்கிறேன்.

  தனியாக நேரம் ஒதுக்கி பார்வையிடுகிறேன் தங்கள் பதிவினை.

  பதிலளிநீக்கு
 4. பெண்களும் மலரணிதலும் என்ற கட்டுரையைப் படித்தேன்.மிக நன்றாகவும் விளக்கமுடனும் இருந்தது மகிழ்ச்சி.இப்படிப்பட்ட தரமான கட்டுரைகள் நூல் வடிவில் வந்தால் தமிழ் ஆர்வலர்கள் மிகுந்த பயனடைவர்.உங்கள் இலக்கியப்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 5. தங்கள் வருகை்க்கும் கருத்துரைக்கும் நன்றி பரமசிவம்.

  பதிலளிநீக்கு
 6. திரு பரமசிவம் அவர்கள் கூறியிருப்பது சரிதான். இதை புத்தகமாக கொண்டுவந்தாள் பலரும் பயன்பெற ஏதுவாக இருக்கும்.
  நல்ல விளக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 7. அருமையான விளக்கங்கள். மலரணிதலின் சிறப்புக்களைத் தந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. விரிவான செறிவான கட்டுரை. நேரமெடுத்து அடுத்த பகுதியையும் கொடுதீர்களென்றால் நிறைவாக இருக்கும்.

  குழந்தை பருவம் முதலே மலரணிதல் வழக்கத்தில் இல்லையா?அல்லது பெண் பூப்பெய்த பின்பு நிறுத்தப்படுகிறதா?

  ஆண் பெண் இருவருக்குமே மலரணிதல் கட்டுப்பாடுகள் இருந்தணவா?


  கற்பு குறித்த எடுகோள்கள் தனி பதிவாக வருவது சிறப்பாக இருக்கும். கரணங்கள் குறித்த தொல்காப்பிய வரிகள் திரிபு அல்லது பிற்சேர்க்கை என்றொரு கருத்துக்கோணத்திற்கு உங்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் அப்பதிவில் விளக்கலாம்.
  ”பொய்யும் வழுவும் தோன்றிய....

  போர் வயப்பட்ட சமூகத்தில் பலதார அல்லது திருமண உறவு தாண்டிய காதல்-உறவுகள் இயல்பே.

  நல்ல கட்டுரை. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. தங்கள் கருத்துரைக்கு நன்றி அன்பரே..
  ஆண்களைப் பொருத்தவரை அவ்வந்நிலம் சார் மலர்களை போர்க்காலங்களில் சூடுவது மரபாக இருந்தது.

  பெண்கள் திருமணத்துக்கு முன்பு மலர் அணிவது வழக்கில் இல்லை.
  அவ்வாறு அணிந்தால் அவள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்று ஊரார் அலர் தூற்றுவது மரபாக இருந்தது.

  //போர் வயப்பட்ட சமூகத்தில் பலதார அல்லது திருமண உறவு தாண்டிய காதல்-உறவுகள் இயல்பே. //

  பதிலளிநீக்கு
 10. //போர் வயப்பட்ட சமூகத்தில் பலதார அல்லது திருமண உறவு தாண்டிய காதல்-உறவுகள் இயல்பே. //

  தலைவன் தன் மனைவியை நீங்கி பரத்தையரிடம் செல்வது வழக்கமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 11. தமிழைப் பற்றி நிறை பதிவுகள் போடுகிறீர்கள். மகிழ்ச்சி. எனக்கு ஒரு விவரம் வேண்டும், அதற்க்கு நீங்கள் தான் தகுதியானவராக இருப்பீர்கள் என நினைக்கிறேன். தமிழ்ப் புத்தாண்டு எப்போதிலிருந்து சித்திரை ஒன்றாம் தேதியில் கொண்டாடப் பட்டு வந்தது என்பது பற்றி சங்க இலக்கியங்களில் தகவல்கள் உள்ளதா, அது பற்றி விவரம் கூற முடியுமா? நன்றி.

  பதிலளிநீக்கு
 12. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  தங்கள் மேற்பார்வைக்காக..
  http://palipedam.blogspot.com/2008/02/blog-post_21.html

  http://oosssai.blogspot.com/2011/01/blog-post_05.html

  சங்க இலக்கியத்தில் தைநீராட்டு பற்றிய குறிப்பு உள்ளது நண்பரே ..
  சித்திரை 1ஆம் தேதி பற்றிய குறிப்புகள் எதுவும் நானறிந்தவரை இல்லை..

  பதிலளிநீக்கு
 13. முதல் முறைய கேள்விபடுகிறேன்...
  கொஞ்சம் குழப்பமாக தான் உள்ளது...
  நான் சிலர் இல்லத்திற்கு செல்லும் போது
  மலர் சரம் தருவார்கள்.., அல்லது சூடி விடுவார்கள்...
  திருமணம் ஆன பெண் , திருமணம் ஆகாத பெண்
  என்ற பாகுபாடு அவர்கள் பார்த்தில்லை ...
  மலரை அணிய தந்தால் வேண்டாம் என கூறினால்...திட்டுவார்கள்...
  பெண் என்றால் பூ , பொட்டு, வளையல், புடவை
  இப்படி இருப்பது தான் மரபு என நான் ( அனைவரும் தான்)
  நினைத்து கொண்டிருக்கிறேன்...
  ""திருமணத்திற்கு முன்பு மகளிர் மலரணிதல் இல்லை""-காலப்போக்கில் மாறிஇருக்கலாம் ..
  ஆனால் வியப்பாக இருக்கிறது....
  இவை எதனால் மாறிஇருக்கும் என கூற முடியும்மா
  பகிர்வுக்கு நன்றி....

  பதிலளிநீக்கு
 14. பண்பாட்டுப் படையெடுப்புகளே இதற்குக் காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன்..

  பதிலளிநீக்கு
 15. அருமை அருமை பாராட்ட வார்த்யே இல்லை........

  பதிலளிநீக்கு