Thursday, November 26, 2009

தொடித்தலை விழுத்தண்டினார்.வாழ்க்கை எவ்வளவு தூரம்…?

கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!

இந்த வாழ்க்கை ஆற்றுநீர்போன்றது சில நொடிகளுக்கு முன் இருந்த நீர் அடுத்த நொடி அங்கு நில்லாது ஓடும் அது போல இளமை நிலையில்லாதது.

இளமைக்காலத்தில் யாருடைய அறிவுரையையும் கேட்பதில்லை மனது.

இளமைக்காலத்தில் செய்வதெல்லாம் சரியென்றே சொல்லும் மனது எதற்கும் அஞ்சுவதில்லை.

வயது முதிர்ந்தபோது இளமைக்கால நிகழ்வுகளெல்லாம் வந்து வந்து வந்து போகும்.

மாடு அசைபோடுவது போல இங்கு ஒரு முதியவர் தன் இளமைக்கால அனுபவங்களை அசைபோட்டுப்பார்க்கிறார்.

பாடல் இதோ..

இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-

“தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்” ஆகிய எமக்கே?

243. யாண்டு உண்டுகொல்?
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல் துறை: கையறுநிலை


பாடலின் பொருள்.

செறிந்த மணலில் செய்த வண்டற்பாவைக்குப் பூவைப்பறித்துச் சூடுவர் இளமகளிர். அந்த மகளிருடன் கைகோத்து அவர்களுடன் தழுவியவழி தழுவியும், அசைந்தவழி அசைந்தும் ஒளிவு மறைவு அறியா இளமைந்தரும் விளையாடுகின்றனர்.

அத்தகைய மைந்தருடன் உயர்ந்த மருத மரம் விளங்கும் நீர்த்துறையில் தாழ்ந்து நீருக்கு மிக அருகில் படிந்த கொம்புகளில் ஏறி கரையிலுள்ளோர் திகைப்பெய்த நீர்த்திவலைகள் சிதற திடும் எனக் குதிக்கின்றனர்.

மூச்சடக்கி நீரின் அடியில் சென்று மணலெடுத்து வருகின்றனர்.

எதையுமே ஆராய்ந்து பார்க்காத இளமைப் பருவம் இரங்கத்தக்கது.
அத்தகைய இளமைப்பருவம் இன்று எங்கு சென்றதோ..?

பூண் செறிந்த பெரிய தடியை ஊன்றியவராயும், நடுக்கமுறுபவராயும், இருமல்களுக்கிடையே
சில சொற்களைப் பேசுகின்ற முதுமையுடையவர்களாகிய எங்களுக்கு அவ்விளமை எங்கிருக்கிறதோ.?
அது இரங்கத்தக்கது.

இப்பாடல் வாயிலாக அறியப்படும் உண்மைகள்.

1. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெற்ற “தொடித்தலை விழுத்தண்டு என்னும் தொடரின் சிறப்புக் கருதி இப்புலவர் “தொடித்தலை விழுத்தண்டினார் என்றே அழைக்கப்படலானார்

2. பெண்டிர் உள்ளிட்ட பலரும் நீர்நிலையில் சூழ்ந்திருக்க இளைய ஆடவர்கள் திடுமென நீரில் குதித்து மூச்சடக்கி மணல் எடுத்துவரும் ஒரு வகை விளையாட்டு சங்க காலத்தில் வழக்கில் இருந்தமை இப்பாடல் வழி அறியமுடிகிறது.

3. கையற்றுப் புலம்புவது கையறுநிலையாகும். இப்பாடலில் இளமை கடந்து போனதால் இம்முதியவர் கையற்றுப் புலம்புகிறார். கையறுநிலை என்னும் துறையும் விளக்குதாகவும் இப்பாடல் விளங்குகிறது.

21 comments:

 1. தெளிவான விளக்கம் அருமை சார் ...

  ReplyDelete
 2. என்ன ஒரு விளக்கம்..முதுமையில் அசை போட எனக்கும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கப் பயணம் செல்கிறது.

  ReplyDelete
 3. வாழ்க்கை எவ்வளவு தூரம்…?

  கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!//

  ஆரம்பமே அருமையான தத்துவத்துடன் தொடங்குகிறது... கட்டுரை மிக அழகு அந்த பாட்டுதான் எளிமையாய் படிக்க இயலவில்லை...... தங்களின் விளக்கம் நன்று முனவரே.

  ReplyDelete
 4. //கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!//

  தூரம் ரொம்ப கம்மி தான் :-)

  ReplyDelete
 5. Comment by புலவன் புலிகேசி on 26 November 2009 03:21

  என்ன ஒரு விளக்கம்..முதுமையில் அசை போட எனக்கும் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கப் பயணம் செல்கிறது......//

  நம்பிக்கை தான் வாழ்க்கை நண்பரே...

  ReplyDelete
 6. சி. கருணாகரசு said...

  வாழ்க்கை எவ்வளவு தூரம்…?

  கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!//

  ஆரம்பமே அருமையான தத்துவத்துடன் தொடங்குகிறது... கட்டுரை மிக அழகு அந்த பாட்டுதான் எளிமையாய் படிக்க இயலவில்லை...... தங்களின் விளக்கம் நன்று முனவரே//

  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 7. ரோஸ்விக் said...

  //கருவறையிலிருந்து இறங்கி கல்லறை செல்லும் தூரம் தான்..!//

  தூரம் ரொம்ப கம்மி தான் :-//  ஆம் நண்பா..

  ReplyDelete
 8. காளையடக்குதல் தமிழர் தம் வீரச்செயல் என்பதுபோல, உலக அளவில் மனிதர்தம் வீரச்செயல் நீச்சல் சாகசம் என்று கருதத்தோன்றுகிறது. நீச்சல் சாகசம் காளையடக்குதல் போல் அல்லாமல் ஆண்-பெண் இருவருக்கும் பொது. அதனாலேயே அது உலகோர் வழக்காகவும் மாறியிருக்கலாம். கிராமங்களில் உள்ள வற்றாத கிணறுகளில் இன்றும் நீச்சல் சாகசம் நிகழ்த்தப்பட்டுவருகிறது. நீச்சல் சாகசத்தில் உள்ளம் கொள்ளும் பெருஞ்சலனம் உயிர்நீங்கும் வரை நீங்குவதில்லை. அதனாலேயே அந்த முதியவர் மனத்தில் நீர்வளையமாக நீச்சல் சாகச நினைவுகள் விரிந்தபடியே உள்ளன. முதுமையின் இயலாமை தரும்; பெருவலியே இப்பாடல் என்பது எனது கணிப்பு. எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ‘சங்கச்சித்திரங்கள்’ என்ற தலைப்பில் தமிழ்ச்சங்கப்பாடல்களை மலையாளத்திலும் தமிழிலும் எழுதிவந்தார். அவற்றைக் கவிதா பதிப்பகம் நூலாக்கம் செய்துள்ளது. அந்நூலைவிடத் தெளிவாகச் சங்க இலக்கியப் பாக்களைத் தங்கள் பதிவுகள் விளக்கிவருகின்றன. வாழ்த்துக்கள். இவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட முயற்சி செய்யவும். நூலாகத் தாங்கள் வெளியிட்டால், அந்நூலின் பிரதிகளை நான் உட்பட தமிழ்ச் சமூகம் நன்றியுடன் வாங்கிக்கொள்ளும். நன்றி.
  - ப. சரவணன்

  ReplyDelete
 9. மிக்க மகிழ்ச்சி நண்பரே..

  இவ்வலைப்பதிவில் இடம்பெற்ற கட்டுரைகளை அதன் கருத்துரைகளுடன் நூலாக்கம் செய்யும் எண்ணம் உள்ளது..

  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிப்பதாகவுள்ளது..

  மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 10. பாடலும் பொருளும் அருமை.

  இளமையும் முதுமையும் ஒன்றாய்ச் சேர்ந்து நிற்பது (போட்டோ) கருத்திற்கு துணை தருகிறது.

  ReplyDelete
 11. மாதேவி said...

  பாடலும் பொருளும் அருமை.

  இளமையும் முதுமையும் ஒன்றாய்ச் சேர்ந்து நிற்பது (போட்டோ) கருத்திற்கு துணை தருகிறது..//

  கருத்துரைக்கு நன்றி மாதேவி

  ReplyDelete
 12. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

  உங்க பதிவுகளை படிக்கும்போது நான் வியந்துபோகும் விஷயம் நீங்கள் தேர்ந்துடுக்கும் தலைப்பும்,அதற்கேற்ற இலக்கிய பாடல்களும்,உடன் அழகானதமிழில்
  விளக்கமும்..எப்படிங்க உங்களால முடியுது.அப்பா தமிழாசிரியர் என்பதால் எனக்கு தமிழ் மீது ஆர்வம் வந்தது.ஆனால் இலக்கிய நூல்களை அதிகம் படித்ததில்லை.நேரம் கிடைத்து படிக்கச் நேர்ந்தாலும் பொறுமை இருப்பதில்லை.ஆனால் நீங்கள்...ரொம்ப ரொம்ப கிரேட் ஸார்.உங்களுக்கு ஆயிரம் வணக்கங்களும்,வாழ்த்துக்களும்...

  ReplyDelete
 13. ரொம்ப நாள் ஆசை இது.. அக நானூறு, புற
  நானூறு, ஆசாரக் கோவை எல்லாம் படிக்க
  வேண்டுமென்று...அழகாக, கரும்பினை
  'க்ரிஸ்டல் சுகர்' ஆக தந்து விட்டீர்கள் இந்த
  காலத்துக்கு உகந்தாற்போல...மிக்க நன்றி.
  தொடருங்கள்....தொடர்கிறேன்.....

  ReplyDelete
 14. பூங்குன்றன்.வே said...

  நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

  உங்க பதிவுகளை படிக்கும்போது நான் வியந்துபோகும் விஷயம் நீங்கள் தேர்ந்துடுக்கும் தலைப்பும்,அதற்கேற்ற இலக்கிய பாடல்களும்,உடன் அழகானதமிழில்
  விளக்கமும்..எப்படிங்க உங்களால முடியுது.அப்பா தமிழாசிரியர் என்பதால் எனக்கு தமிழ் மீது ஆர்வம் வந்தது.ஆனால் இலக்கிய நூல்களை அதிகம் படித்ததில்லை.நேரம் கிடைத்து படிக்கச் நேர்ந்தாலும் பொறுமை இருப்பதில்லை.ஆனால் நீங்கள்...ரொம்ப ரொம்ப கிரேட் ஸார்.உங்களுக்கு ஆயிரம் வணக்கங்களும்,வாழ்த்துக்களும்//

  மிக்க மகிழ்ச்சி பூங்குன்றன்..

  ReplyDelete
 15. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

  ரொம்ப நாள் ஆசை இது.. அக நானூறு, புற
  நானூறு, ஆசாரக் கோவை எல்லாம் படிக்க
  வேண்டுமென்று...அழகாக, கரும்பினை
  'க்ரிஸ்டல் சுகர்' ஆக தந்து விட்டீர்கள் இந்த
  காலத்துக்கு உகந்தாற்போல...மிக்க நன்றி.
  தொடருங்கள்....தொடர்கிறேன்...  தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிப்பதாகவுள்ளது நண்பரே...

  ReplyDelete
 16. All the best for your Work.
  Thanks a lot for a nice desktop picture.

  ReplyDelete
 17. கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 18. தண் கயம் ஆடுவதும் மண்ணால் செய்த பாவைக்கு பூச்சூடுவதும் இன்றைக்கு பாவை நோன்பு என்று குறிக்கப்படும் ஒரு வித வழிபாட்டினைச் சேர்ந்தது என்று படித்த நினைவு. இப்பாடலின் தொடக்க வரிகள் அந்த பாவை நோன்பினைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

  பலரும் பார்க்கும் படி மகளிரும் ஆடவரும் கை பிணைத்து தழுவு வழித் தழுவி தூங்கும் வழித் தூங்கி மறை எனல் அறியாது நிற்பது கல்லா இளமை என்று சொல்வதைப் பார்த்தால் அதற்கு நேர் எதிரிடையாக 'கற்பு' என்பதை வைக்கும் சங்க கால விழுமியம் புரிவதைப் போல் தோன்றுகிறது. அப்போது கற்பு என்பது இருபாலருக்கும் உரியது என்பதும் புரிகிறது. கற்பு என்பது நல்ல நடைமுறைகளைக் கற்பதும் அதன் படி நிற்பதும் என்று புரிகிறது. நல்ல நடைமுறைகளில் சில ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலையும் அவர்களின் களியாட்டங்கள் மறைவாக நடப்பதும் என்று புரிகிறது. எந்த காலத்தில் இந்தக் கற்பு நிலை என்பது பெண்டிருக்கு மட்டுமே என்று மாறியதோ? மருத நிலத்தில் தான் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அங்கே தானே பரத்தையர் தொடர்பு பரக்கப் பேசப்படுகின்றது. கல்லா இளமையும் மருத நிலத்தில் நிகழவே வாய்ப்புகள் மிகுதி என்று தோன்றுகிறது. அப்படித் தோன்றிய கல்லா நிலை மெதுவாக நெய்தலுக்கும் சென்றதைத் தான் சிலப்பதிகாரம் சொல்கிறது போலும்.

  மேலே சொன்ன கற்புடன் யார் இருந்தாலும் அவர்களைப் போற்றுவது மட்டுமே முதியோர் செய்வர்; அவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்வதில்லை. ஆனால் கல்லா இளையவர் ஆடும் களியாட்டத்தைக் கண்டு இந்த தொடித்தலை விழுத்தண்டினாருக்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்து பொறாமையும் புலம்பலும் கொள்ள வைக்கிறது போலும். :-) இவர் கற்றவரா கல்லாதவரா? :-) பாடல் புனையும் திறன் கல்லாதவரிடமும் சங்க காலத்தில் இருந்திருக்கிறது போலும். :-)

  என்ன நண்பரே 'இவன் தொடர்பே இல்லாமல் ஏதேதோ சொல்லி புலம்புகிறானே' என்று தோன்றுகிறதா? :-) பல இடங்களில் படித்தவை எல்லாம் இந்த இடுகையைப் படித்தவுடன் நினைவிற்கு வந்து அவற்றை எல்லாம் சொல்கிறேன். கொஞ்சம் முயன்றால் இதனை விரிவுபடுத்தி ஒரு நல்ல ஆய்வுக்கட்டுரை எழுத இயலும்.

  ReplyDelete
 19. குமரன் (Kumaran) said...

  தண் கயம் ஆடுவதும் மண்ணால் செய்த பாவைக்கு பூச்சூடுவதும் இன்றைக்கு பாவை நோன்பு என்று குறிக்கப்படும் ஒரு வித வழிபாட்டினைச் சேர்ந்தது என்று படித்த நினைவு. இப்பாடலின் தொடக்க வரிகள் அந்த பாவை நோன்பினைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. //

  ஆம் நண்பரே..

  நல்லது நண்பரே இதனோடு தொடர்புடைய இடுகைகளை தொடர்ந்து எழுதுகிறேன்..
  கருத்துரைக்கு நன்றிகள்!!!

  ReplyDelete
 20. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

  http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_8.html

  ReplyDelete