Friday, January 29, 2010

மணல் வீடும் மாறாத மனமும்.
கதை ஒன்று…

மாலை 6 மணியாகிறது.
வழக்கமாக வேலைக்குச் சென்ற தன் மகள் 5மணிக்கே வந்துவிடுவாள்.
7 மணி ஆனபின்னும் இன்னும் வந்து சேரவில்லையே என்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகிறார்கள். தன் மகளின் அலைபேசியைத் தொடர்புகொள்ள முடியததால்,அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கிறார்கள். அவர்களோ தங்கள் மகள் 4 மணிக்கே கிளம்பிவிட்டாளே என்கிறார்கள்.

ஒன்றும் புரியாத குடும்பத்தார், அவளின் தோழி வீட்டுக்கெல்லாம் அழைத்துப்பார்த்து ஏமாற்றத்தை மட்டுமே பதிலாகப் பெறுகிறார்கள்.

இந்த சூழலில் இந்தக் குடும்பத்தின் குழப்பத்தைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளோர் கதை திரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒருவர் சொல்கிறார்..

அந்தப் பொன்னு இப்படி ஓடிப் போகும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அந்தப் பொன்னு ஒரு பையனோட வண்டில போனத நான் பல தடவ பார்த்திருக்கேன்..!

இன்னொருவர்…

அட! ஆமாங்க…
அந்தப் பொன்னு என்ன அடக்க ஒடுக்கமாவா இருந்துச்சு..
யாரப்பார்த்தாலும் சிரிச்சி சிரிச்சிப் பேசிட்டு…..
அதான் சொல்லாமக் கூட யாரையே கூட்டிட்டு ஓடிடுச்சி!

இவ்வாறு வாய்க்கு வந்தவாறு ஆளாளாளுக்குப் இந்தப் பெண்ணின் குடும்பத்தாரின் காதுபடவே பேசிக்கொண்டிருக்க…………….

ஒருவழியாக அந்தப் பெண்னே வீடு வந்து சேர்ந்தாள்!


அவ்வளவு தான் கதை…

என்ன கதையிது. கதையின் முடிவு என்ன?
அந்தப் பெண் எங்கு சென்றாள்?
ஏன் இவ்வளவு காலதாமதமாக வந்தாள்?
ஊர் மக்கள் பேசியதெல்லாம் உண்மையா? பொய்யா?
பெற்றோர் அவளிடம் என்ன கேள்வி கேட்டார்கள்?
அதற்கு அவள் என்ன பதில் சொன்னாள்?

இதெல்லாம் உணர்த்தவில்லை இந்தக் கதை.
இந்தக் கதை உணர்த்தும் நீதி…

ஒரு பெண் வீட்டிற்குக் காலதாமதமாக வந்தால் ஊரார் என்னவெல்லாம் பேசுவார்கள். இந்த சமூகம் இதனை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது தான்.

இந்தக் கதையைப் படிக்கும் போது நம்மைச் சுற்றி இது போன்ற பல உண்மை நிகழ்வுகளை நம் மனது எண்ணிப்பார்க்கும்.

அந்தப் பெண்ணின் பெற்றோர் மனம் படும் பாடு! என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியாது.

தமிழர் பண்பாட்டு கூறுகளுள் இவையெல்லாம் என்றும் மாறாத தன்மையுடைன. காலங்கள் பல மாறிய போதும் மாறாத மனித மனங்களுக்கான சில சான்றுகள்.

சங்கப்பாடல் ஒன்று..

(மகட் போக்கிய தாய் சொல்லியது.)

களவொழுக்கத்தில் இடையூறுகள் ஏற்பட்டன. ஆதலால் தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு சென்றான். செய்தியறிந்த நற்றாய் அவளது பிரிவாற்றாமையைால் வருந்திப் புலம்பினாள்.

தலைவி ஒரு தலைவனைக் காதலிக்கிறாள் வீட்டில் தம் காதலை ஏற்கமாட்டார்கள் என்று அஞ்சிய தலைவி தலைவனுடன் உடன்போக்கில் ( தலைவன் உடன் பெற்றோர் அறியாது செல்லுதல்) சென்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள். அதனால் அவளின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தோன்றின. அதனை நன்கு அறிந்தாள் நற்றாய்.


வயலைக் கொடி படர்ந்த பந்தரின் கீழ் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள் தலைவி.

அப்போது நற்றாய் தலைவியைப் பார்த்து…

நீ என்ன சிறுபிள்ளையா?
மணப்பருவம் அடைந்துவிட்டாய் என்பது நினைவில் இல்லையா?
வளம் பொருந்திய மனைக்கு உரிமையுடையவள் நீ!
இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பந்து எறிந்து விளையாடித்த திரிகின்றாயே!
என்றாள்.

அழகிய நெற்றியையுடைய தலைவி தன்மனதில்……

தாய் என்னுடைய காதலை அறிந்தனளோ!
அதனால் தான் சினம் கொண்டு பேசுகிறாளோ!
என்று அஞ்சியவாளாக,

விரைவில் தாயைப் பிரிந்துவிடுவோமே என்று எண்ணி தாய்மீது சினம் கொள்ளாது அன்புடன் இனிய மொழிகள் பேசினாள்.

ஒருநாள் தம் பெற்றோர் அறியாது தன் தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டாள்.

தன் மகள் தன்னை நீங்கி யாரோ ஒருவனோடு சென்றுவிட்டாள் என்பதை அறிந்த தாய் என்ன செய்வதென்று தெரியாமல்ப் பித்துப் பிடித்தவள் போல அழுதுபுலம்பினாள். தாம் பல முறை திட்டியபோதும் அன்பு மொழிபேசிய தலைவியின் ஒவ்வொரு செயல்களும் நற்றாயின் கண்முன் வந்து வந்து போயின. தினம் தினம் மகளின் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தவள் தாய். தன் மகள் வளர்ந்துவிட்டாளும் இன்னும் ஒரு குழந்தையாகவே எண்ணி வாழ்பவள் தாய். தன்னை நீங்கிச் சென்ற தலைவியை நினைந்து நினைந்து அழுது புலம்பினாள் தாய்.

அதற்குள் இதனை அறிந்த ஊரார் இச்செய்தியறிந்து தாயைத் தேற்றுவதற்காக வந்துவிட்டனர்.
ஊராறிடம் இவ்வாறு புலம்புகிறாள் தாய்…

அவள் இடையின் தழையாடைக்குச் சேர்க்கும் இலைகளைத் தரும் நொச்சி மரத்தைப் பாருங்கள்!

என் அன்புமகள் தன் சிவந்த சிறுவிரல்களால் செய்த சிறு மணல்வீட்டைப் பாருங்கள்!
கண்ணுடையவர்களே காண்கிறீர்களா?

நம் வீடு பலரையும் விருந்தினராக ஏற்று எந்நாளும் பெருஞ்சோறோடு விளங்கும் வீடன்றோ!

பெருவிருந்துகள் எந்நாளும் நடக்கும் இந்த வீட்டில் எம்மோடு மகிழ்வோடு இருந்திருக்கக் கூடாதா?

யாரோ ஒருவன்,
அயலான்,
அவன் மீது கொண்ட காதலால் நாங்கள் அவள் மீது கொண்ட அன்பைப் புரிந்துகொள்ளாமல்ச் சென்றுவிட்டாளே!!

அவள் சென்ற வழி என்ன இனிமையானதா?

கடத்தற்கரிய நெடிய வழியல்லவா அது!
திரண்ட அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் வெண்ணிற மலர்களைக் கரடிக்குட்டிகள் கவர்ந்துண்ணும் வெம்மை பொருந்திய மலைகளைக் கொண்டது!

அவ்வழிகளில் செல்லும் உயிர்கள் வெம்மை தாளாது நெட்டுயிர்ப்புக்கொள்ளும் தன்மையது அந்நிலம்..

அந்தோ என்மகள் என்ன துன்புறுவாளோ!


என்று புலம்புகிறாள் நற்றாய். பாடல் இதோ,

275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
5 'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
10 ஏதிலாளன் காதல் நம்பி,
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
15 நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?

அகநானூறு -275.
கயமனார்

இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

L காதலித்த தலைமக்கள் (காதலர்கள்) பெற்றோர் அறியாது வேறு புலம் செல்லும் உடன்போக்கு என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
L பாலையின் கொடுமை புலப்படுத்தப்படுகிறது.
L தலைவி தாய் மீது கொண்ட அன்பும், தாய் மகள் மீது கொண்ட அன்பும் சுட்டப்படுகிறது.
L வண்டல் இழைத்தல் என்னும் மணல் வீடு கட்டி விளையாடுதல், பந்துவிளையாடுதல் என்னும் இரு சங்ககால விளையாட்டுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
L பெண்கள் தழையாடை அணிந்து கொள்ளும் மரபு உணர்த்தப்படுகிறது.
L தலைவியை எண்ணி நற்றாய் கொண்ட மனத்துயர் இன்றைய பெற்றோர் கொள்ளும் மனத்துயராகவே எண்ணமுடிகிறது.


ஒப்புமை.


இன்றைய காதலுக்கும் சங்ககாலக் காதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

இன்றைய காதலர்கள் பெற்றோர் அறியாது செல்வதை ஓடிப்போதல் என்கின்றனர். சங்ககாலத்தில் “உடன்போக்கு“ என்று இது அழைக்கப்பட்டது.

சங்க காலக் காதலர்களின் காதலைப் பற்றி ஊரர் பேசுவது அம்பல் அலர் எனப்பட்டது. இன்று புறம் பேசுதல் என அழைக்கப்படுகிறது.

(அம்பல் என்பது காதலை பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமக்குள் பேசுவது.
அலர் என்பது அந்தப் பெண்ணின் பெற்றோர் மட்டுமன்றி ஊரறிய யாவரும் பேசுவது)

நடந்துமுடிந்த பின்னர் வருந்துவதைவிட,

நடக்கும் முன்னரே யோசித்தால் உறவுகள் துன்பமின்றி வாழமுடியும்.

J இத்தனை ஆண்டுகாலம் வளர்த்த பெற்றோர் தமக்கு சரியான துணை தேடித்தருவார்கள் என்ற மகளின் நம்பிக்கையும்,

J தன் மகளின் விருப்பம் தான் என்ன? அவன் அவளுக்கு ஏற்றவன் தானா? என அறிந்து, சாதி,மதம், பணம் ஆகியவற்றை நோக்காது, முடிந்தவரை அவளின் விருப்பத்துக்கு முன்னரிமை அளிக்கும் பெற்றோர்,

J பெண்ணின் பெற்றோர் அறியாது அவளை அழைத்துச் செல்வதைவிட அவளின் பெற்றோரிடமே சென்று பெண்கேட்டு மணம் செய்து கொள்ளும் காதலன்.

J இவ்வாறு ஒவ்வொருவம் சிந்தித்து நேர்வழியில் செயல்பட்டால் வாழ்வில் இது போன்ற துன்பங்கள் நேராது.

36 comments:

 1. படித்தேன்,வியந்தேன்,ஒப்புமை மிக அழகு.

  ReplyDelete
 2. இன்றைய காதலுக்கும் சங்ககாலக் காதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.//

  சரிதான்..:))
  அழகான பாடல்.:)
  நன்றி முனைவரே,,:)

  ReplyDelete
 3. பெண்னே,பொன்னு=பெண்ணே,பொண்ணு எதுங்க சரி..? நிஜமாவே தெரியாதனால் கேட்டேன்.

  நாங்க (தெரியாம) நிறைய பிழையோடதான் எழுதறோம் உங்கள் போன்றோர்தான் ரெஃபெரென்ஸ்:))) அதனால இந்த உரிமை.

  ReplyDelete
 4. மிகவும் சிறப்பான பதிவு ஐயா.

  பாடல் வரிகள் உணர்த்தும் அர்த்தங்கள் அருமை.

  ஒப்புமையும் வெகு சிறப்பு.

  ReplyDelete
 5. கண் முன்னே காட்சிகள் விரிகிறது, படிக்கும்போதே, நல்ல எழுத்து நடை முனைவரே.

  ReplyDelete
 6. அழகான பாடல், விளக்கிய விதமும் மிக அருமை.......

  அழகுதமிழில் உங்கள் எழுத்துநடை, மிகவும் ரசிக்க வைக்கிறது......

  பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. சிறந்த இடுகை.பாராட்டுகள்.

  ReplyDelete
 8. aaranyanivasrramamurthyJanuary 29, 2010 at 10:27 PM

  மிகப் பிரமாதமாய் இருந்தது. படித்து முடித்தவுடன் ஒரு நிறைவு மனத்துள் மத்தாப்பாய் ஒளிர்ந்தது!!

  ReplyDelete
 9. அருமையாய் சொல்லி இருக்கிரீகள்.ஆனால் இந்த காலத்து பிள்ளைகலுக்கு புரிவது கஷ்டம்.

  ReplyDelete
 10. நல்ல தெளிவான விளக்கங்களோடு அழகான பதிவு.

  ReplyDelete
 11. அருமையாக இருக்கின்றது நண்பரே...
  காலங்கள் மாறினர்லும் மனங்கள் மாறவில்லை.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 12. அழகான பாடல், அருமையான விளக்கம்.... படித்தேன்..ரசித்தேன்...

  ReplyDelete
 13. Blogger ஜெரி ஈசானந்தா. said...

  படித்தேன்,வியந்தேன்,ஒப்புமை மிக அழகு.


  நன்றி ஆசிரியரே.

  ReplyDelete
 14. Blogger பலா பட்டறை said...

  இன்றைய காதலுக்கும் சங்ககாலக் காதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.//

  சரிதான்..:))
  அழகான பாடல்.:)
  நன்றி முனைவரே,,:)


  மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 15. Blogger பலா பட்டறை said...

  பெண்னே,பொன்னு=பெண்ணே,பொண்ணு எதுங்க சரி..? நிஜமாவே தெரியாதனால் கேட்டேன்.

  நாங்க (தெரியாம) நிறைய பிழையோடதான் எழுதறோம் உங்கள் போன்றோர்தான் ரெஃபெரென்ஸ்:))) அதனால இந்த உரிமை.  இரண்டுமே சரிதான் நண்பரே..
  பொன் (தங்கம்)போன்றவள் என்பதால் பொன் னு என்றழைத்தனர்.

  பெண்களை அழைக்க வேறு பெயர்கள்.......


  பேதை
  பெதும்பை
  மங்கை
  மடந்தை
  அரிவை
  தெரிவை
  பேரிளம்பெண்

  இவை வயதை அப்படையாகக் கொண்ட பெண்களின் பெயர்கள்..

  மகளிர்
  சேயிழை
  நங்கை
  ஆயிழை

  என்று பல பெயர்கொண்டு பெண்கள் அழைக்கப்பட்டனர்.

  இது போல ஆண்களுக்கும் பல பெயர்கள் உண்டு நண்பரே

  பாலன்
  மீளி
  விடலை
  காளை
  மறவோன்
  திறவோன்
  முதுமகன்

  என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

  இவை ஒவ்வொரு பெயர்களுக்குமே காரணம் உண்டு.

  தமிழ்மொழியில் இடுகுறிப்பெயர்களைவிட காரணப்பெயர்களே அதிகம்!

  ReplyDelete
 16. வெ.இராதாகிருஷ்ணன் said...

  மிகவும் சிறப்பான பதிவு ஐயா.

  பாடல் வரிகள் உணர்த்தும் அர்த்தங்கள் அருமை.

  ஒப்புமையும் வெகு சிறப்பு.


  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 17. சைவகொத்துப்பரோட்டா said...

  கண் முன்னே காட்சிகள் விரிகிறது, படிக்கும்போதே, நல்ல எழுத்து நடை முனைவரே.


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 18. Blogger ஆரூரன் விசுவநாதன் said...

  அழகான பாடல், விளக்கிய விதமும் மிக அருமை.......

  அழகுதமிழில் உங்கள் எழுத்துநடை, மிகவும் ரசிக்க வைக்கிறது......

  பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்  மகிழ்ச்சி நண்பரே..
  கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 19. Blogger ஸ்ரீ said...

  சிறந்த இடுகை.பாராட்டுகள்.


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 20. Delete
  Blogger Sabarinathan Arthanari said...

  நன்று நண்பரே.

  மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 21. aaranyanivasrramamurthy said...

  மிகப் பிரமாதமாய் இருந்தது. படித்து முடித்தவுடன் ஒரு நிறைவு மனத்துள் மத்தாப்பாய் ஒளிர்ந்தது!!


  மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 22. Blogger malar said...

  அருமையாய் சொல்லி இருக்கிரீகள்.ஆனால் இந்த காலத்து பிள்ளைகலுக்கு புரிவது கஷ்டம்.


  ஆம் உண்மைதான் புரிந்து கொள்வது எளிதல்ல..
  புரிந்திருந்தால்.2500 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்காது.

  இந்தப்பிள்ளைகளாகள்..

  காதலிக்கும் போது புரியாத பெற்றோரின் வலி.

  இந்தக் காதலர்கள் பெற்றோரானபின்னர்..
  இவர்களின் பிள்ளை காதலிக்கும் போது தெரியும்! புரியும்!

  நினைக்கிறேன்..

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மலர்.

  ReplyDelete
 23. Blogger ஹேமா said...

  நல்ல தெளிவான விளக்கங்களோடு அழகான பதிவு.


  நன்றி ஹேமா.
  தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது.
  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 24. Blogger வேலன். said...

  அருமையாக இருக்கின்றது நண்பரே...
  காலங்கள் மாறினர்லும் மனங்கள் மாறவில்லை.

  வாழ்க வளமுடன்,
  வேலன்.


  கருத்துரைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 25. Blogger Sangkavi said...

  அழகான பாடல், அருமையான விளக்கம்.... படித்தேன்..ரசித்தேன்...


  நன்றி சங்கவி.

  ReplyDelete
 26. வலைப் பக்கங்களில் உங்கள் பதிவுகள் மிக முக்கியமானவை. இலக்கியத்தின் மூலம் காலத்தையறியும் காரியத்தைச் செய்கிறீர்கள். ப்ழந்தமிழ் இலக்கியத்தின் அழகையெல்லாம் இங்கு வந்து அள்ளிக் குடிக்க முடிகிறது.

  பாராட்டுக்கள் நண்பரே!

  ReplyDelete
 27. உடன்போக்கு-நான் கேட்டிறாத வார்த்தை அருமை நண்பரே கதையும் இலக்கனமும் மிக சிறப்பாக பொருந்தியிருக்கிறது

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 28. மாதவராஜ் said...
  வலைப் பக்கங்களில் உங்கள் பதிவுகள் மிக முக்கியமானவை. இலக்கியத்தின் மூலம் காலத்தையறியும் காரியத்தைச் செய்கிறீர்கள். ப்ழந்தமிழ் இலக்கியத்தின் அழகையெல்லாம் இங்கு வந்து அள்ளிக் குடிக்க முடிகிறது.


  மிகவும் மகிழ்ச்சி நண்பரே..
  தங்களைப் போன்ற முன்னோடிகளின் ஊக்கம் எனது எழுத்துக்களை மேலும் செம்மைப் படுத்திக்கொள்ள உதவும் நண்பரே..

  ReplyDelete
 29. ஜிஎஸ்ஆர் said...
  உடன்போக்கு-நான் கேட்டிறாத வார்த்தை அருமை நண்பரே கதையும் இலக்கனமும் மிக சிறப்பாக பொருந்தியிருக்கிறது

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்  மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 30. அந்த பெண் கொஞ்சம் லேட்டாக வர அவளைப் பெற்றவர்கள் போல எங்களையும் துடிதுடிக்க வைத்து விட்டீர்கள். ஒரு நல்ல பதிவை படித்த
  திருப்தி அடைந்தேன்!!

  ReplyDelete
 31. மிக்க மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 32. மிக நன்று.
  தங்கள் பனி சிறக்கட்டும்

  ReplyDelete
 33. வியக்கும்படியான நல்ல பகிர்வு

  அன்புடன்
  ஆ.ஞானசேகரன்

  ReplyDelete