வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

கொற்றவள்ளை

இன்றைய சமூகம் கல்விக்கு முதன்மையளிப்பது போல, சங்க காலத்தமிழர்கள் வீரத்துக்கு முதன்மையளித்தனர். “காதலும், வீரமும்” அவர்களின் இரு கண்களாகத் திகழ்ந்தன. காதல் “களவு, கற்பு“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. புறம் “போர், கொடை“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இன்று கல்வி கற்றவர் பெறும் மதிப்பும் புகழும் அன்று போரில் வெற்றி பெற்றவர் பெற்றார். போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வெட்டி வீழ்த்துபவனுக்குப் “பரணி“ பாடினர் “ஈதல் இசைபட வாழ்தலே“ சிறந்த வாழ்க்கை என்று வாழ்ந்தனர் நம் முன்னோர்.

வாழ்வியலுக்கான இலக்கணங்களாக அகமும், புறமும் திகழ்ந்தன. அகத்தை அகத்திணையென்றும், அகத்துறையென்றும் பாகுபாடு செய்தனர். திணையென்பது வாழ்வியல் ஒழுக்கமாகும். துறையென்பது திணையின் உட்கூறு ஆகும்.

புறவாழ்வை இயம்ப புறத்திணைகளும், புறத்துறைகளும் பயன்பட்டன.

“வஞ்சி“ என்னும் புறத்திணையையும் “கொற்றவள்ளை“ என்னும் துறையையும் விளக்குவதாக இன்றைய இடுகை அமைகிறது.

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.


திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.

சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும் கூறுதல்.


மன்னன் ஒருவன் மாற்றான் மேல் படையெடுத்துச் செல்லுதலைக் கூறுவது வஞ்சித்திணையாகும். இப்பாடல் இளஞ்சேட் சென்னியின் படையெழுச்சி கூறியதால் வஞ்சித்திணையாகும்.

துறை விளக்கம்.


மன்னனது புகழைக் கூறி பகைவர் நாட்டின் அழிவிற்கு இரங்குதல் கொற்றவள்ளை ஆகும்.
கொற்றம் என்பது வீரத்தையும், புகழையும் குறிக்கும். வள்ளை என்பது ஒருவகைப் பாடலாகும். மன்னனை வாழ்த்திப்பாடுவதால் கொற்றம்+வள்ளை கொற்றவள்ளை ஆனது..

பாடல் இதோ...

'
வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
'

இப்பாடலில் தாயில்லாத குழந்தை போல நின் பகைவர் நாடு ஓவாது கூவும் என்றதால் கொற்றவள்ளையானது.

பாடல் விளக்கம்.


வாள்கள் வெற்றியைத் தருமாறு குருதிக்கறை படிந்தன. ஆதலால் சிவந்த வானத்தின் வனப்பினைப் போன்றன.

வீரக்கழலை அணிந்த கால்கள் காவல் தொழிலை அறிவிப்பதால் கொல்லும் இயல்புடைய ஆனேற்றின் கொம்புகளைப் போன்றன.

கேடயங்கள் தைத்த அம்புகளால் துளைபெற்றன, அவை நிலையில் தப்பாத இலக்கினைப் போன்றன.

குதிரைகள் எதிரிகளை வீழ்த்தும் காலம் நேர்ந்த போது இடம் வலம் என்று காட்டுவதால் முகம் சேணத்துடன் உராய்ந்து சிவந்த வாயைப் பெற்றன. ஆதலால் அவை விலங்குகளின் கழுத்தைக் கவ்விய புலி போன்றன.

ஆண்யானைகள் மதிற்கதவுகளை முறித்துச் சினமுடன் திரிந்து கூர்முனை மழுங்கிய கொம்புகளை உடையனவாதலால் உயிரை உண்ணும் எமனைப் போன்றனவாயின.நீ அசையும் தலையாட்டமுடைய விரைந்தியங்கும் குதிரைகளுடன் பொன்னாலான தேர்மீது பொலிவுடன் காட்சியளிக்கிறாய். அதனால் பெரிய கரிய கடலின் நடுவே உயர்ந்து சிவந்து காணப்படும் ஞாயிறு போலத் தோன்றுகிறாய்.

இவ்வாறு விளங்குவதால் உன்னைப் பகைத்தவர் நாடுகள் தாயில்லாததால் உணவுண்ணாமல் அழும் குழந்தை போல் ஓயாது அழுவனவாயின.
என்று சோழனைப் பாடுகிறார் பரணர்.

இப்பாடல் வழியாக…


² வஞ்சி என்னும் புறத்திணை விளக்கம் பெறுகிறது.
² கொற்றவள்ளை என்னம் புறத்துறை உணர்த்தப்படுகிறது.
² சோழனின் வீரமும் அதனால் பகைவர் நாடு படும் துயரும் உணர்த்தப்படுகிறது.
² சங்கத்தமிழர் வீரத்துக்கு எந்த அளவுக்கு வாழ்வில் பங்களித்தனர் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

10 கருத்துகள்:

 1. தமிழ்மண விருதுக்கு பாராட்டுகள். :) பாடல் விளக்கத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. Blogger வானம்பாடிகள் said...

  தமிழ்மண விருதுக்கு பாராட்டுகள். :) பாடல் விளக்கத்துக்கு நன்றி.//

  வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 3. சைவகொத்துப்பரோட்டா said...

  எளிமையான விளக்கம். நன்றி நண்பரே.//

  வருகைக்கும் கருத்துரைக்கும்நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 4. விருதுக்கு வாழ்த்துக்கள். விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. தமிழ்மண விருதுக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 6. இன்றைய சமூகம் கல்விக்கு முதன்மையளிப்பது போல, சங்க காலத்தமிழர்கள் வீரத்துக்கு முதன்மையளித்தனர். “காதலும், வீரமும்” அவர்களின் இரு கண்களாகத் திகழ்ந்தன. காதல் “களவு, கற்பு“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. புறம் “போர், கொடை“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இன்று கல்வி கற்றவர் பெறும் மதிப்பும் புகழும் அன்று போரில் வெற்றி பெற்றவர் பெற்றார். ..................
  எளிய நடையில் தெளிவாக சொல்லி இருக்கீங்க. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. புலவன் புலிகேசி said...

  விருதுக்கு வாழ்த்துக்கள். விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள்.


  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 8. நேசமித்ரன் said...

  தமிழ்மண விருதுக்கு பாராட்டுகள்

  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 9. Blogger Chitra said...

  இன்றைய சமூகம் கல்விக்கு முதன்மையளிப்பது போல, சங்க காலத்தமிழர்கள் வீரத்துக்கு முதன்மையளித்தனர். “காதலும், வீரமும்” அவர்களின் இரு கண்களாகத் திகழ்ந்தன. காதல் “களவு, கற்பு“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. புறம் “போர், கொடை“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இன்று கல்வி கற்றவர் பெறும் மதிப்பும் புகழும் அன்று போரில் வெற்றி பெற்றவர் பெற்றார். ..................
  எளிய நடையில் தெளிவாக சொல்லி இருக்கீங்க. நன்றி.
  நன்றி சித்ரா..

  பதிலளிநீக்கு