Saturday, January 30, 2010

மனையுறை குருவிகளின் காதல்.
சங்கப்பாடல்கள் அகப்புற வாழ்வியலை நேரிடையாகக் கூறவில்லை. இயற்கையைத் துணையாகக் கொண்டே எடுத்தியம்பியுள்ளன. மனையில் தங்கும் குருவிகளின் வாழ்வியலைக் கொண்டு இங்கு ஒரு அகவாழ்வியல் விளக்கம் பெறுகிறது.


தலைவன் தான் சென்ற செயல் முடிந்து தலைவியைக் காணவருகிறான். இத்தனை காலம் தலைவனை நீங்கியதால் தலைவி உடல் மெலிந்து, பசலையுற்று வாடியிருந்தாள். இனி அத்துயர் நீங்கியது எனத் தோழி மகிழ்ந்து உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.“வீட்டின் கூரையில் தங்கியிருக்கும் கருமையான மோவயையுடைய குருவியின் சேவல், வேற்றுப் புலம் சென்றது
அங்கு தங்குமிடத்தில் ஓர் பெண்குருவியோடு கூடியது. பிறகு பொழுது சாயத் தம் கூட்டுக்கு வந்தது.
ஆண்குருவி வேறு பெண்குருவியோடு கூடியதற்கான அடையாளங்கள் உடலில் தெரிந்தன. அதனை அறிந்த உரிமையுடைய பெண்குருவி வருந்தியது. அதனால்த் தம் சிறிய பிள்ளைக் குருவிகளோடு சேர்ந்து ஆண்குருவியைத் தம் கூட்டுக்கு வரவிடால்த் தடுத்தது.

இதனால் ஆண்குருவி தம் கூட்டுக்குச் செல்ல இயலாது வெளியிலேயே நெடுநேரம் காத்திருந்தது. அவ்வேளையில் மழை வேறு வந்துவிட்டது. மழையிலேயே நனைந்தபடி நடுங்கிக்கொண்டு நின்றது. அதனைப் பார்த்த பெண்குருவி மனதில் நீண்ட நேரம் எண்ணி தம் ஈரநெஞ்சத்தால் ஆண்குருவியை உள்ளே வர அனுமதித்தது.

இத்தகைய நிகழ்வுக்குரிய மயக்கத்தைத் தரும் மாலைக் காலத்தில் மாலை அணிந்த குதிரைகள் மெல்லிய பயிர்களை மிதிக்க பெரிய வெற்றியையுடைய தலைவனின் தேர் வந்தது. இனி இவளது அழகிய நெற்றியில் உள்ள அழகானது பசலையால் உண்ணப்படாது.ஒப்புமை.


குருவியின் சேவல் பிற பேடையொடு கூடியதால் சேவற்குரிய பேடை எதிர்த்துப் பின் இரக்கங்காட்டியது.
தலைவனும் முன்பு பரத்தையரோடு ( பொருட் பெண்டிர்) சேர்ந்து வந்தமையால் தலைவி ஊடினாள். (கோபம் கொண்டாள்) இப்போது வேறு பணிநிமித்தம் சென்று வருவதால் ஊடாது ஏற்றுக் கொள்வாள்.

உட்கருத்து.


வேறு பெடையை அணைந்து வரும் சேவலை, பெடையும் பிள்ளைகளும் கூட்டில் நுழையாதவாறு தடுத்தன என்பது முன்பு தலைவன் பரத்தையரிடம் சென்று மீண்டபோது தலைவி அவனை ஏற்காது ஊடல் கொண்டாள். பின் அவனின் வருத்தம் தாளாது ஏற்றனள். இக்கருத்தே இப்பாடலின் உட்பொருளாகவுள்ளது.

சங்க காலம் மக்கள் தொகை குறைவு ஆதலால் தலைவன் பரத்தையரிடம் செல்வதை சமூகம் ஏற்றது. சங்க காலத்துக்கு அடுத்துவந்த சங்க மருவிய காலத்தில் பரத்தையர் பிரிவு வன்மையக கடியப்பட்டது. ஆயினும் தன் தலைவன் தனக்கே உரியவன் என்னும் உரிமையைத் தலைவி தன் ஊடலாலும், வாயில் மறுத்தலிலும் புலப்படுத்துவது மரபாக இருந்தது.


பாடல் இதோ..நற்றிணை 181. முல்லை

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
5 சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்,
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப,
கையற வந்த மையல் மாலை
10 இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று, பெருவிறல் தேரே;
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே.


(வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.)

இப்பாடல் வழியாக அகவாழ்வியல் ஒன்று அழகான இயற்கையோடு இயைபுபட விளக்கம் பெறுகிறது.

பாடல் படித்த பின்னரும் அகவாழ்வைக் காட்டிலும் மனதில் நிலைத்துவிடுவது குருவிகளின் வாழ்வியல்தான்.

தலைவனுடைய மனநிலை
தலைவியினுடைய மனநிலை

ஆகியவற்றைப் புரிந்து கொண்ட தோழியின் மனநிலை ஆகியவற்றைப் புலப்படுத்திய புலவர் பாராட்டுக்குரியவர்.

கவிதை சுட்டும் குருவிகளின் வாழ்க்கை உண்மையா? என்று சிந்திப்பதைவிட ஓர் அகவாழ்வியலை மனதில் நிற்குமாறு இயற்கையோடு இயைபுறப் பாடிய புலவரின் திறம் எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கது.

காலத்தை வென்ற இக்கவிதை தாங்கி வருவது சங்ககால வாழ்வியலை மட்டுமல்ல இயற்கையோடு அக்காலமக்கள் கொண்ட உறவுநிலையையும் தான்!

24 comments:

 1. அருமை குணா.
  இதையெல்லாம் படிக்கணும் என்று எவ்வளவோ நாளாய் நினைத்து இருந்தேன். இப்போது உங்கள் பதிவின் மூலம் கிடைப்பது மகிழ்ச்சியே. பாராட்டுக்களுடன் நன்றிகளும் உங்களுக்கு

  ReplyDelete
 2. வணக்கம் குணா நீண்ட நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை.தமிழ்மணம் விருது கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. அழகான பாடல்,,,விளக்கிய விதமும் அருமை...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வெகுநாட்களுக்குப் பிறகு சங்கால நினைவுகளுக்கு இழுத்துச்சென்ற இடுகை

  ReplyDelete
 5. நல்ல இலக்கியம் பருக உங்கள் தளத்திற்குள் தினம் வர வேண்டும் என்பதே ஆசை. பணி நிமித்தம் வர இயலவில்லை. எனது பேராசிரியரின் கதையை எனது மனசு தளத்தில் பகிர்ந்துள்ளேன். படித்து கருத்துஸ் சொல்லுங்க பேராசிரியரே.

  ReplyDelete
 6. நண்பரே கோழிக்கு இப்படி ஒரு குணமா? அருமையான விளக்கங்கள்.

  ReplyDelete
 7. மிக அருமையான இடுகை. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.

  ReplyDelete
 8. வாழ்வியலை பற்றிய அருமையான கவிதை நன்றி

  ReplyDelete
 9. தமிழின் சுவை அள்ள அள்ள குன்றாதது ! உங்கள் விளக்கங்கள் தேனில் கலந்த திணை மாவு !

  ReplyDelete
 10. றமேஸ்-Ramesh said...
  அருமை குணா.
  இதையெல்லாம் படிக்கணும் என்று எவ்வளவோ நாளாய் நினைத்து இருந்தேன். இப்போது உங்கள் பதிவின் மூலம் கிடைப்பது மகிழ்ச்சியே. பாராட்டுக்களுடன் நன்றிகளும் உங்களுக்கு//

  மகிழ்ச்சி றமேஸ்.

  ReplyDelete
 11. முனைவர் கல்பனாசேக்கிழார் said...
  வணக்கம் குணா நீண்ட நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை.தமிழ்மணம் விருது கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.  நன்றி முனைவரே.

  ReplyDelete
 12. ஆரூரன் விசுவநாதன் said...
  அழகான பாடல்,,,விளக்கிய விதமும் அருமை...வாழ்த்துக்கள்


  நன்றி நண்பரே..

  ReplyDelete
 13. நீச்சல்காரன் said...
  வெகுநாட்களுக்குப் பிறகு சங்கால நினைவுகளுக்கு இழுத்துச்சென்ற இடுகை  நன்றி நண்பரே.

  ReplyDelete
 14. சே.குமார் said...
  நல்ல இலக்கியம் பருக உங்கள் தளத்திற்குள் தினம் வர வேண்டும் என்பதே ஆசை. பணி நிமித்தம் வர இயலவில்லை. எனது பேராசிரியரின் கதையை எனது மனசு தளத்தில் பகிர்ந்துள்ளேன். படித்து கருத்துஸ் சொல்லுங்க பேராசிரியரே.  நன்றி குமார் பார்க்கிறேன்.

  ReplyDelete
 15. புலவன் புலிகேசி said...
  நண்பரே கோழிக்கு இப்படி ஒரு குணமா? அருமையான விளக்கங்கள்.


  கோழி இல்லை நண்பரே குருவி..

  சேவல் என்பது ஆண்பறவைகளுக்கான பொதுப்பெயர் என்பதைத் தாங்கள் அறியாததால் புரிதலில் சிறு தவறு ஏற்பட்டுள்ளது..

  ஆண்பறவைகளைப் பொதுவாக சேவல் என்றும் பெண் பறவைகளை பேடை என்றும் அழைப்பது தமிழர் மரபியல் நண்பரே.

  ReplyDelete
 16. செ.சரவணக்குமார் said...
  மிக அருமையான இடுகை. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.


  நன்றி சரவணக்குமார்.

  ReplyDelete
 17. கலகலப்ரியா said...
  அருமை...!


  நன்றி பிரியா.

  ReplyDelete
 18. Sabarinathan Arthanari said...
  வாழ்வியலை பற்றிய அருமையான கவிதை நன்றி


  நன்றி சபரி நாதன்.

  ReplyDelete
 19. bala said...
  தமிழின் சுவை அள்ள அள்ள குன்றாதது ! உங்கள் விளக்கங்கள் தேனில் கலந்த திணை மாவு !  நன்றி பாலா.

  ReplyDelete
 20. நண்பரே படங்களேல்லாம் எங்கிருந்து எடுக்கின்றீர்கள்.அருமையாக உள்ளது,வாழ்க வளமுடன், வேலன்.

  ReplyDelete
 21. மகிழ்ச்சி நண்பரே..

  கூகுள் படங்களிலிருந்தும்..
  நூலகத்தில் நூல்களிலிருந்தும் நண்பரே..

  ReplyDelete
 22. அருமையான பாடல்...

  ரொம்ப அழகா விளக்கியிருக்கீங்க.

  ReplyDelete