வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 31 அக்டோபர், 2011

மனிதன் படைத்த விதி!


பிறப்பும், இறப்பும்..
விழிப்பதும், தூங்குவதும் போல இயல்பானது என்பர் வள்ளுவர்..

பிறப்பைப் போல இறப்புக்கும் மதிப்பு உண்டு..
விலை மதிப்பில்லாத உயிரை சாலைவிபத்துக்களில் இழப்பது கொடுமையிலும் கொடுமை..

உலகம் முழுவதும் சாலைவிபத்துக்களில் ஆண்டொன்றுக்கு 13 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சாலையோரங்களில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு தரும் சொற்களையும், சாலைவிதிகளையும் யார் மதிக்கிறார்களோ அவர்கள் தம் உயிருக்கும், உடலுக்கும் மதிப்பளிக்கிறார்கள் என்று பொருள்.

இதோ..

இன்று..
இளங்கவிஞர் கேசவன் அவர்களின் விழிப்புணர்வு தரும் கவிதை ஒன்று..

வகுக்கப்பட்ட சாலை விதியே நம்
தலையில்
எழுதப்பட்டதலைவிதி!

கண்ணறியா விதியாம் நம் தலைவிதி
அதை மதியாமல் திரிந்தாலும் தவறில்லை!
நாம் நன்கறிந்த விதியாம்
நம் சாலைவிதி - அதனை
மதியாமல் நடப்பது சரியா..?

பொருளறியா இறை மந்திரங்கள் 
எத்தனையோ ஓதுவதால் 
வாழ்வு செம்மையுறும் என்று நம்பும் நீ
நன்கு பொருளறிந்த சாலையோர 
விழிப்பளிக்கும் சொற்களைமதியாமல் நடப்பது சரியா..?

எத்தனையோ காலங்கள் 
எப்படியெல்லாமோ வீணடித்தாய் நீ!
சாலையைக் கடக்கும் 
அந்த ஒரு மணித்துளியில்
என்னதான் சாதித்திடுவாய்..?
உன் உயிரை அடகு வைத்து
 ஒருநொடி! இருநொடி!
பொறுமை இழந்த நீ
அடுத்த நொடி இழப்பது ஏதென்று அறிவாயோ..?

நொறுக்கப்பட்ட வாகனம்!
 நசுக்கப்பட்ட உடல்கள்!
தெறிக்கப்பட்ட இரத்தங்கள்!
இழக்கப்பட்ட உயிர்கள்!
இவையாவிலும் மேலாக..
உன்னால் துடித்த! 
உனக்காகத் துடித்த 
உறவுகளும் தானடா!

தூய்மையான மழைத்துளி 
சாக்கடையில் விழுவதைப் போல்
ஒப்பில்லா இரத்தத்துளி
தார்ச் சாலையில் விழலாமா..?

எத்தனையோ வார்த்தைகள்!
எண்ணற்ற ஊர்வலங்கள்!
இருந்தென்ன பயனடா..?
வார்த்தை எழுதியவருக்கும்
ஊர்வலம் நடத்தியவருக்கும் 
தானா..
விழிப்புணர்வு..?

உன் உயிர் காப்பவன் இறைவன் என்றால்
நீ மதித்தால்..
சாலைவிதியும் இறைவன் அன்றோ..!!

உன் உயிர் பறிப்போன் எமன் என்றால்
நீ மதிக்காவிட்டால்..
சாலைவிதியும் எமன் அன்றோ!

தாயின் விதி நலம் தரும்!
 பாடசாலை விதி ஒழுக்கம் தரும்!
சாலை விதி வாழ்க்கைதருமடா..!

சாலைவிதிகளை மதிக்காவிட்டாலும்
காலில் போட்டு மிதிக்கலாமா..?

எத்தனையோ விபத்துக்கள்..
அத்தனைக்கும் காரணம்..
மிதிக்கப்பட்ட சாலைவிதிகள்..!

உன் உயிருக்கு மதிப்புக் கொடு!
சாலைவிதிகளை மதித்தொழுகு!
இயற்கையான மரணம் எய்து..!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றால்..
விபத்தற்ற வாழ்வு மதிப்பற்ற செல்வமல்லவா!!!

படைப்பாக்கம்

ச. கேசவன்
இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.
நாமக்கல் மாவட்டம்
தொடர்புடைய இடுகைகள்

சனி, 29 அக்டோபர், 2011

மழையல்ல பேகன்!



நல்லவர் ஒருவர் இருந்தால் அவ்விடத்தில் அவருக்காக எல்லாருக்கும் 
மழைபெய்யும்....
எவ்விடத்தும் ஏற்றத்தாழ்வு பாராது மழை பெய்யும் என்று இலக்கியங்கள் 

சொல்லிச் சென்றுள்ளன. 

ஆயினும் ஏன் இன்னும் நீரில்லாத பாலை நிலங்கள் உள்ளன??


என்ற ஐயம் எனக்கு என்றும் உண்டு..

மேடான நிலத்தில் மழை பொழிந்தால் தங்காதே..
தீயவர் இருக்கும் நிலத்தில் மழை எவ்வாறு பொழியும்..?



என தத்துவவியல் அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் ஆயிரம் விளக்கங்கள் சொல்லலாம்.. இருந்தாலும்..

மழையும் இடம் பார்த்துத்தான் பொழியும் என்ற சிந்தனையையும் நாம் முற்றிலும் மறுத்துவிட முடியாது..

மழை போலக் கைமாறு கருதாது கொடுப்பதால் மழையையும் கொடையையும் ஒப்பிட்டு நிறைய புலவர்கள் பாடிச் சென்றுள்ளார்கள்...
அப்படியொரு பாடலை இன்று காண்போம்.

ரு சமயம்பேகனின் கொடைத்தன்மையைப் பற்றி புலவரிடையே ஒரு பேச்சு எழுந்தது. பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததால் அவன் கொடைமடம் மிகுந்தவன் என்றனர். அதனைக் கேட்ட பரணர், பேகன் கொடைமடம் உள்ளாவனாக இருந்தாலும் படைமடம் இல்லாதவன்” என்று பேகனைச் சிறப்பித்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மழையின் சிறப்பு.
வேண்டும் இடம், வேண்டாத இடம் என்று வரையறை செய்யாது எல்லா இடங்களிலும் மழை பொழியும். அம்மழை போல பேகன்  தன்னிடம் பரிசில் பெற வருபவரிடம் ஏற்றத்தாழ்வு பாராது வழங்குவான்.

கொடை மடம்!
கொடுக்கவேண்டும் என்ற சிந்தனை வந்தால் உடனே கொடுத்துவிடவேண்டும் தள்ளிப்போட்டால் நம் மனம் மாறிவிடும். அப்படிக் கொடுத்தவர்களையே வள்ளல்கள் என்றும் கொடைமடமுடையவர்கள் என்றும் நம் முன்னோர் போற்றியுள்ளனர்

வேண்டியவர், வேண்டாதவர், வலியோர், மெலியோர், புதியோர், பழையோர், எனக் கருதாது யாவருக்கும் கொடை வழங்குவதால் பேகனை கொடை மடமுடையவன் என்று போற்றுவர்.

படை மடம்!
நடப்பது போரானாலும் அதிலும் சில எழுதப்படாத விதிமுறைகள் கடைபிடிக்கவேண்டும். அவ்வாறு கடைபிடிக்காவிட்டால் படைமடமுடையவன் என்று இவ்வுலம் இழிவாகப் பேசும்.
அதே நேரம் பேகன் படைமடம் கொண்டவனல்ல!
ஏனென்றால்..
போர்க்களத்தில் புறமுதுகிட்டவர், புண்பட்டவர், மூத்தோர், இளையோர், என போர்புரிய தகுதியற்றவர்களிடம் இந்த பேகன் என்றுமே போர்புரிந்ததில்லை.
அதனால் பேகன் படைமடம் கொண்டவனல்ல என்று புகழ்ந்துரைக்கிறார் புலவர்.

 பாடல் இதோ..

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.

புறநானூறு -142
திணை: பாடாண்ஒருவருடைய புகழ்வலிமைகொடைஅருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழிஇயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


நீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும்,
அகண்ட வயல்வெளிகளில் பொழிந்தும்,
தேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும் அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் போன்றது பேகனின் கொடைத் தன்மை. காரணமின்றி  ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம். ஆனால்,  மதங்கொண்ட யானைகளையும் வீரக் கழலணிந்த கால்களையும் உடைய பேகன் பிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான்ஆகவேஅவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்ல! என்றார் பரணர்.

தமிழ்ச் சொல் அறிவோம்.

1.அறுதல் இல்லாமற் போதல்அற்றுப் போதல்வற்றிப்போதல்
2.உகுத்தல் சொரிதல்.
3. வரை அளவு.
4.கடாம் மத நீர்5.
 கொடை மடம் காரணமின்றி (ஆராயாது)கொடுத்தல்.
6. படைமடம் = அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுதல்மயங்குதல் கலத்தல்தாக்கப்படுதல்.


பாடல் வழியே..

1. பேகனின் கொடைத்தன்மை மழையோடு ஒப்பிட்டு உரைக்கப்படுகிறது.

2. கொடை மடம் போற்றப்பட்ட சூழலிலும், படைமடம் தூற்றப்பட்டமை உணர்த்தப்படுகிறது.

3.கொடையில் பின்பற்றவேண்டிய கொள்கைகளையும், போரில் பின்பற்றவேண்டிய கொள்கைகளையும் சீர்தூக்கிப்பார்ப்பதாக இப்பாடல் அமைகிறது.

தொடர்புடைய இடுகைகள்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

ஏற்றுமதியான நாகரிகம்



பழந்தமிழர்கள் கடல் கடந்தும் வாணிகம் செய்தனர். அதனால் நம் நாகரிகங்கள் பல நாடுகளிலும் பரவும் சூழல் ஏற்பட்டது. சென்ற இடங்களில் நம் பொருளோடு சேர்த்து நம் நாகரிகங்களையும் விற்றுவந்தோம் என்பதையே இலக்கிய ஆதாரங்கள் காட்டுகின்றன.
தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் தரும் இலக்கியச் சான்று ஒன்றைக் காண்போம்..

தமிழில் “கறி“ என்ற சொல் மிளகைக் குறித்தது. அந்தக் காலத்தில் குழம்பு, இரசம் போன்றவற்றில் மிளகைத்தான் பயன்படுத்தினார்கள். பின்பு மிளகுபோல் குழம்பில் சுவை சேர்க்கப் பயன்பட்ட, புதிதாக வந்த காயை மிளகாய் என்றார்கள். 

சங்க காலத்தில் உலகெங்கும் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. யவனர்கள் பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகை வாங்கிக் கொண்டு பாய்மரக் கப்பலில் சென்றதைச் சங்கப்பாடல்களால் அறிகிறோம். இதனால் கறி என்ற சொல்லும் பிற மொழிகளில் இடம்பெற்றது.
ஆங்கிலத்தில் எந்த அகராதியிலும் Curry   என்ற சொல்லைப் பார்க்கலாம். இச்சொல் நம் நாகரிகத்தின் சிறப்பைக் காட்டுவது போல் பல மொழிகளிலும் சென்று இவ்வாறு வழங்கப்படுகிறது.

            ஆங்கில அகராதிகளில் “கூலி“ (Cooli, Cooly) என்ற  சொல்லையும் தவறாது காணலாம். “கூலம்“ என்ற சொல் தானியத்தைக் குறிக்கும். அதனையே வேளாண்மை வேலைக்குத் தரும் பணமாகக் கொடுத்ததால், கூலி வந்தது.
எந்த வேலையாயினும் காசுக்கு வேலை செய்து அங்ஙனம் வாங்கும் பணத்தைக் “கூலி“ என்றனர். பின் அங்ஙனம் வேலை செய்பவனையே குறித்தனர். திருவள்ளுவர் மெய்வருத்தக் கூலிதரும் என்றது பயன்தரும் என்ற பொருளிலாகும். இந்தச் சொல்லும் ஆங்கில வழியாக எல்லா மொழிகளிலும் சென்று வழங்குகிறது. கறி, கூலி போன்ற சொற்களுக்குக் கீழே (Tamil) என்று அடைப்பில் போட்டிருப்பதை “சேம்பர்ஸ்“ அகராதியில் பார்க்கலாம். “வெளிநாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் உடல் உழைப்பு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேலையாட்கள், வெளிநாட்டவர்க்கு அடிமை வேலை பார்க்கும்  இந்திய வேலைக்காரர்கள் என இச் சொல்லுக்கு ஆங்கில அகராதியில் பொருள் எழுதப்பட்டிருக்கும். ஏற்றுமதியான இச்சொல்  நம் நாகரிகம் இறங்கி வந்ததைக் காட்டுகிறது.

 (ஆசிரியர் -தமிழண்ணல் -நூல்- சொல் புதிது சுவை புதிது 57-58)

தொடர்புடைய இடுகைகள்.

திங்கள், 24 அக்டோபர், 2011

எதிர்காலத் தொழில்நுட்பம்!!




அறிவியல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்து வருகிறது..
நிலவைப் பார்க்கும் சிறு குழந்தையாய் நானும்..
இன்றைய உலகிற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறேன்..
அறிவியல் மாற்றங்கள் சிலவற்றைக் காணும்போது..
“மனிதனுக்காக அறிவியலா?
அறிவியலுக்காக மனிதனா?“
என்று கூட சிலநேரங்களில் தோன்றும்.
இன்றைய அறிவியல் உலகைக் கண்டு எனக்குத் தோன்றிய கற்பனை“ யான தொழில்நுட்பம் பற்றிய இடுகை இது..
             


                இணையத்தில் உலவும்போது “புதிய தொழில்நுட்பம் “ என்றொரு அறிவிப்பு காணக் கிடைத்தது. சரி என்னதான் நுட்பம் என்று பார்க்கலாம் என்று அந்த இணைப்பில் சென்றேன்..

என்றொரு இணையதளம் அறிவித்தது. நானும் அதில் பயனர் கணக்கை உருவாக்கிக் கொண்டு உள்நுழைந்தேன்..

நான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திலிருப்பவருடன் பேசக் காத்திருப்பதுபோலவே, எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குப் பேச பலரும் காத்திருந்தார்கள்...

காத்திருப்போர் பட்டியலில் “கபிலன்“ என்ற பெயர் எனக்குப் பிடித்தது. அவருடன் உரையாட முடிவுசெய்து தொடர்புகொண்டேன்.. சில மணித்துளிகளில் அவர் முகம் என் கணினித் திரையில் தெரிந்தது..

இனி எங்கள் உரையாடல்..

நான் : வணக்கம் கபிலன்!
கபிலன் : வணக்கம் முனைவரே!


நான் : கபிலன் இதெல்லாம் உண்மையா!! இதையெல்லாம் இன்னும் என்னால் நம்பமுடியவில்லை?
கபிலன் : ஏன் நண்பரே..!!


நான் : அறிவியல் காலத்தை வென்றுவிட்டதா..?
கபிலன் : இல்லை நண்பரே.. காலம் தான் அறிவியலை வென்றுவிட்டது!  காலத்தின் கோட்பாடுகளை மனிதனால் இன்னும் மாற்றமுடியவில்லை. கொஞ்சம் புரிந்துகொண்டிருக்கிறான். அவ்வளவுதான்..


நான் : எது எப்படியோ.. எதிர்காலத்துக்கு வந்துவிட்டேன்.. உங்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் வைத்திருக்கிறேன்..
கபிலன் : நானும் தான் நண்பரே..


நான் : மகிழ்ச்சி..
கபிலன் : நீங்களே முதலில் கேளுங்கள்  நண்பரே..
நான் : தங்கள் பெயர் பற்றி முதலிலேயே கேட்க வேண்டும் என நினைத்தேன்.. “கபிலன்“ என்ற பெயர் தங்களுக்கு எந்தச் சூழலில் வைத்தார்கள்.
கபிலன் : என் தந்தை ஒரு கணினி வன்பொருள் துறைசார்ந்தவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவர். அதனால் சங்கப்புலவரான கபிலரின் நினைவாக இப்படியொரு பெயர் வைத்துவிட்டார்.


நான் : அப்படியா.. மகிழ்ச்சி!! கபிலன்.. நான் தங்கள் காலத்துக் கல்வி நிலை குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
கபிலன் : எங்கள் காலத்தில் வீட்டிலிருந்துகொண்டோ, பணியாற்றிக்கொண்டோ இணையவழியே கல்வி பயில்வதுதான் வழக்கமாக உள்ளது..


நான் : அட அப்படின்னா எல்லோரிடமும் கணினி இருக்கிறதா..?
கபிலன் : என்ன அப்படிக் கேட்டிட்டீங்க.. மேகக் கணினி நுட்பத்“தால் கணினி இன்றைய சூழலில் எல்லா தரப்பினருக்கும் சென்று சேர்ந்துவிட்டது.

நான் : வியப்பா இருக்கே.. சரி! இவ்வளவு அழகாத் தமிழ் பேசறீங்களே.. எப்படி..?
கபிலன் : மொழி மாற்றி மென்பொருள்கள் பல பெருவழக்கில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதனால் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எழுதப் படிக்க, புரிந்துகொள்ள, பேச முடிகிறது. அதனால் அவரவர் தம் தாய்மொழி மீது பற்றுடையவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
நான் : கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது...


கபிலன் : தமிழரின் நாட்டுப்புற மரபுகள் குறித்த தேடல் எனக்கு என்றுமே உண்டு. இணையத்தில் தேடியபோது நிறைய செய்திகள் கிடைக்கின்றன. உங்கள் பார்வையில் உங்களுக்குப் பிடித்த இரு இணைய பக்கங்களை எனக்கு அறிமுகம் செய்யுங்களேன்..
நான் : 1.தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் “பண்பாட்டுக் காட்சிகம்“ என்னும் பிரிவு.
      2.அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களின் 
“வசந்த மண்டபம்“  என்னும் வலைப்பக்கம்.
கபிலன் : பார்க்கிறேன் முனைவரே.. இன்றைய சூழலில் விளையாட்டுகள்  கூட வீட்டுக்குள்ளே கணினிக்குள்ளே விளையாடுவது மட்டுமே விளையாட்டு என்றாகிவிட்டது. உடல் உழைப்பு என்பது சிறிதும் இல்லாமல்  போய்விட்டது. தமிழரின் தொன்மையான விளையாட்டுக்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலவாக உள்ளேன்..
கபிலன் : மகிழ்ச்சி முனைவரே இதையும் பார்க்கிறேன்..
தனித்தமிழ்! தனித்தமிழ்! என்று இலக்கிய வரலாறுகளில் ஒரு காலம் குறிப்பிடப்பட்டுள்ளதே.. அப்படின்னா என்ன? தனித்தமிழ் என்றால் மொழியைத் தனிமைப்படுத்துவதா? தனிமைப்படுத்திக்கொள்வதா? எனக்கு இந்தக் கோட்பாடே புரியவில்லை..?
நான் : பிறமொழிக் கலப்பால் தாய்மொழி சீர்கெட்டுவிடும் என்று மொழியைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சி இது கபிலன்.


கபிலன் : அட! வியப்பாக உள்ளதே.. பிற மொழி கலந்தால் அம்மொழி செத்துவிடுமா..? அப்படியென்றால் வடமொழி கலந்தபோதே தமிழ் மொழி செத்திருக்கவேண்டுமே..


நான் : இப்படித் தனித்தமிழ்க் கோட்பாடுகள் அன்று தோன்றியதால் தான் இன்று எதிர்காலத்தில் கூட உங்களால் தமிழ் பேச முடிகிறது.. இல்லையா..?


கபிலன் : அது அப்படியல்ல முனைவரே...
“அறிவுக்கு மொழி  தடையல்ல!
 இன்று உலகமே பேசும் ஒரே மொழி இணையமொழி!“
உங்கள் காலத்தில் இயல், இசை, நாடகம் என்று அதோடு நின்றுவிடாமல்..
இணையத்தமிழ் என்று இலக்கிய, இலக்கணச் செல்வங்களைப் பதிவு செய்தீர்களல்லவா.. அந்த அரிய செயல் தான் இன்று தமிழ்மொழியைக் காத்து நிற்கிறது..


நான் : அட!! அப்படியா.. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது..
கபிலன் : உங்களோடு உரையாடியதில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை..
நான் : எனக்கும் தான் கபிலன்..


கபிலன் : பணி அழைக்கிறது... மீண்டும் உரையாடுவோம்...
நான் : நன்றி கபிலன் தங்களோடு உரையாடியதில் பல உண்மைகளை உணர்ந்து கொண்டேன் மகிழ்ச்சி.. மீண்டும் உரையாடுவோம்..

கூடங்குளம் – சில தவறான புரிதல்கள்..



இன்று நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளரின் பேச்சினைப் பற்றி சொன்னார்...

நல்லதொரு ஆன்மீகச் சொற்பொழிவாளரான அவர் நன்றாகத் தான் பேசிக்கொண்டிருந்தார்..
உரைவீச்சில் இயல்பாக்க் கூடங்குளம் பற்றி பேசினார்...

“ஒரு குடும்பம் நல்லா இருக்கனும்னா
அந்தக் குடும்பத்தில ஒருத்தர் இறந்தால் பரவாயில்லை..
ஒரு ஊரு நல்லா இருக்கனும்னா
ஒரு குடும்பம் அழிஞ்சாப் பரவாயில்லை..
ஒரு நாடு நல்லாயிருக்கனும்னா
ஒரு ஊரே அழிஞ்சாப் பரவாயில்லை..

அதுபோல இன்று நம் நாட்டின் அடிப்டைத் தேவை மின்சாரம்..
அதற்கு ஒரு கூடங்குளம் அழிஞ்சா என்ன? குறைஞ்சா போயிடும்
என்று..“

என்னவொரு அறியாமை நிறைந்த பேச்சு..

இந்த ஆன்மீக ஞானியின் பிதற்றலுக்கும்.. 
மத்திய, மாநில அரசின் புரிதலுக்கும் எனக்கொன்றும் பெரிய வேறுபாடு தெரியவில்லை..

அறிவியல் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது..
அணுமின் நிலையங்களுக்கு மாற்றாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்....
வெளிநாடுகளில் ப்ளும்பாக்சு என்று என்னென்னவோ புதிய புதிய நுட்பங்களைக் கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்..

நாம் இன்னும்....


தொடர்புடைய இடுகைகள்


வெள்ளி, 21 அக்டோபர், 2011

உயிர்க் கதறல்......


உயிர்
நானும் குழந்தையாகத்தான் பிறந்தேன்
எனக்கு அப்போது தெரியாது
நானும்
பல அவதாரம் எடுப்பேன்
தினம் இறப்பேன்
தினம் பிறப்பேன் என்று..

கல்விச் சாலை சென்றேன்..
கல்வி என் உயிர் பறித்துச் சிற்பமாக்கியது! 

வாழ்க்கைப் பள்ளி சென்றேன்..
பணம் என்னைக் கொலை செய்து இயந்திரமாக்கியது!

ஒவ்வொரு நாளும்..
சுயநலம் என்னைப் புழுவாக்கியது!
பொதுநலம் எனக்குச் சிறகு தந்தது!

துரோகம் என்னைப் புலியாக்கியது!
நன்றி என்னை நாயாக்கியது!
இப்படி...
என் உயிரைத் தொலைத்துவிட்டுத்
தேடிக்கொண்டே இருந்தேன்..

அனுபவமே என்னை மீண்டும்
 உயிர்ப்பித்து மனிதானாக்கியது!

இருந்தாலும்...
பசி என் கண்களை மறைத்தது!
உழைப்பே என் கண்கள் திறந்தது!

துன்பம் என்னைக் கோழையாக்கியது!
இன்பமே எனக்குத் தன்னம்பிக்கையளித்தது!

இளமையில் தொலைத்த நாட்களை
முதுமை கணக்குப் பார்க்கிறது!

இப்படியாக நான் தினமும்
பல அவதாரம் எடுக்கிறேன்
 பிறக்கிறேன்
 இறக்கிறேன்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே
ஒவ்வொரு மணித்துளியும்
உயிரோடு 
உணர்வோடு
மனிதனாக வாழ
 முயற்சிக்கிறேன்.......

 தொடர்புடைய இடுகைகள்

வியாழன், 20 அக்டோபர், 2011

வருக! வருக! என வரவேற்கிறேன்!

வாங்க! வாங்க!

மிழர் பண்பாட்டில் வரவேற்றல் குறிப்பிடத்தக்க பண்பாடாகும்.       இப்பண்பாட்டை புறப்பாடல் வழி இயம்புவதே இவ்விடுகையின்    நோக்கமாகிறது.


அன்புள்ளவரைக் கண்டால் அகமகிழ்ச்சியடைகிறோம்.                            
புன்சிரிப்புடன் புகழ்மொழி கூறுகிறோம்.பெரியோராயிருந்தால் கைகுவித்துக் கும்பிட்டு வரவேற்கிறோம்.    வரவேற்பதிலே இன்றும் கூடப் பலவகை உண்டு. 

கை கும்பிட்டு வரவேற்பது. கை கொடுத்து சமத்துவமாக வரவேற்பது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்பது. இப்படிப் பல வகையில் வரவேற்கிறோம்.

இவற்றுள் கை குலுக்கி வரவேற்பது தமிழர் நாகரிகம் அன்று. இந்த முறை  மேல் நாட்டாரிடம்  நாம் கற்றுக் கொண்டது  என்போர் உண்டு. உயர்ந்தவர்களை பெரியோர்களைக் கண்டால் நிலத்தில் வீழ்ந்து வணங்கி வரவேற்கவேண்டும் சமமுள்ளவரைக் கண்டால்  கும்பிட்டு வரவேற்கவேண்டும். தன்னிலும் தாழ்ந்தவரை இளையவரைக் கண்டால்  தழுவிக் கொண்டு  வரவேற்கவேண்டும்.  இதுவே தமிழரின் வரவேற்பு முறை இந்திய நாட்டு நாகரிகம் என்றும் கூறுகின்றனர்.

இவை தமிழர் நாகரிகமாக இருக்கட்டும்.இந்திய நாகரிகமாகவும் இருக்கட்டும். இந்த நாகரிகத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம்.

கை கொடுத்து வரவேற்பது  மேல் நாட்டு நாகரிகமா? அந்நியர் நமக்குக் கற்றுத் தந்த நாகரிகமா? தமிழர் நாகரிகம் அல்லவா? என்பதுதான் நம் கேள்வி...

என்று தம் பண்பாடு சார்ந்த வினாவை புறநானூறு தமிழ் நாகரிகம் என்னும் நூலில் முன் வைக்கிறார் 
தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். இதற்கு அவர் சான்று கூறும் புறப்பாடலில் இந்தப் பண்பாடு எந்த அளவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

பிலர் ஒருநாள் டுங்கோ வாழியாதனைச் சந்திக்கச் சென்றார் வேந்தனும் எழுந்து வந்து கைகொடுத்து வரவேற்றான். கபிலரின் கைகளைத் தொட்டபோது வேந்தனுக்கு மனதில் ஒரு கேள்வி தோன்றியது..

நம் கைகளைவிட புலவரின் கைகளில் மிகவும் மென்மையாக இருக்கிறதே?“ என்பதுதான் அந்தக் கேள்வி. அதை வாய் திறந்து புலவரிடமே கேட்டுவிட்டான் வேந்தன்..

அதற்குக் கபிலர் பதிலளிப்பதாகவே இப்பாடல்அமைகிறது..  


கபிலர் கடுங்கோ வாழியாதனைப் பார்த்து ...

அரசே.. நீ உழைப்பாளி

யானையை அடக்கியாளும் இரும்பாலான அங்குசம்!

குதிரையின் கடிவாளம்!

அம்பு, வில் மற்றும் ஆயுதங்கள்! ஆகியவற்றையெல்லாம் பிடித்துக் கொண்டே இருப்பதல்லவா உன் கைகள் வன்மையாக இருக்கின்றன!!

ஆனால் என் கையோ சுவையான ஊன் கலந்த சோற்றை உண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பதல்லவா என் வேலை.. அதனால் தான் என் கைகள் மென்மையாக இருக்கின்றன என்கிறார். பாடல் இதோ..

கடுங்கண்ண கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5.
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10.
பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில்
வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவு நாற்றத்தை பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
15.
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (14)




 புறநானூறு -14

கபிலர் வேந்தனைப் பார்த்து..
மன்னா நீயோ..
வலிமைகொண்ட யானைகளைக் கொண்டு எதிரிகளின் காவல் மிக்க கோட்டைகளை அழிப்பாய்!

அக்கோட்டையின் உள்ளே தாழிடப்பட்ட எழு என்னும் கணைய மரத்தைச் சிதைப்பாய்!

இரும்பாலான அங்குசத்தைத் தாங்கி யானைகளை போர்க்களத்தே செலுத்துவாய்!

எத்தகைய போரானாலும் அச்சமின்றிச் சென்று தாங்கி நிற்பாய்!

குந்தாலியால் கற்பாறைகள் உடைக்கப்பட்டு அவ்விடத்தே பெரிய குழிகளாகவும் அதில் நீர் நிறைந்தும் காணப்படும். ஆழமான அக்குழிகளில் குதிரைகள் வீழ்ந்துவிடாமல் குதிரைகளைக் கடிவாளத்தாலே கட்டுப்படுத்துவாய்!

அம்புசுமந்த உன் முதுகிலிருந்து அம்பெடுத்து வில்லின் நாணை இழுத்துப் பிடித்து எதிரிகளின் மீது அம்புகளை எய்வாய்!

உன்னை நாடிப் பரிசில் வேண்டி வருவோர்க்கெல்லாம் இல்லை என்றுரைக்காமல் பொன்னும் பொருளும் அணிகலனும் வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பாய்.. இவ்வாறு உன் கைகள் ஓயாது பணியாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதனால் உன் கைகள் வலிமையானதாகக் காட்சியளிக்கின்றன.

என் போன்ற புலவர்களின் கை உன் கைக்கு நேர் எதிரானது. எங்களுக்கு என்ன பெரிய வேலை இருக்கிறது..

உன் போன்ற வள்ளல்கள் தரும் ஊன் கலந்த உணவை உண்டுவிட்டு, அது செறிக்கவில்லையே என வருந்தி வயிறு தடவிக் கொண்டிருப்பது மட்டுமல்லவா எங்கள் வேலை என்கிறார்.


 பாடல் வழியே..

1. விருந்தினரைக் கை கொடுத்து வரவேற்கும் தமிழர் பண்பாடு அறிவுறுத்தப்படுகிறது.
2. கடுங்கோவின் வீரம், கொடை ஆகியன நயமாகப் புலப்படுத்தப்படுகின்றன.

தொடர்புடைய இடுகைகள்.