Wednesday, October 12, 2011

இப்படியும் ஆங்கிலம் பேசலாம்!அறிவுக்கு மொழி தடையல்ல!
ஆனால் காலச்சூழல் ஒரு சமூகத்தில் சில மொழிகளை உயர்வான மொழியாகவும், சில மொழிகளை இழிவான மொழிகளாகவும் பிரதிபலித்துவிடுகிறது.

ஆங்கிலம் பன்னாட்டுத் தொடர்பு மொழி என்பதால் இன்று இம்மொழிக்கு பெருமதிப்பு வழங்கிவருகின்றனர்.

இன்றைய சூழலில் ஆங்கிலம் பேசுவோரை...
இலக்கண மரபுகளின் படி ஆங்கிலம் பேசுவோர்...
இலக்கண மரபுகளின்றி பேச்சுநடையில் ஆங்கிலம் பேசுவோர்...

இரு மொழிகளைக் கலந்து ஆங்கிலம் பேசுவோர் என வகைப்பாடு செய்ய இயலும்.
இவர்களுள் ஆங்கிலத்தோடு தம் தாய்மொழியைக் கலந்துபேசுவோரின் விழுக்காடே அதிகமாக உள்ளது. இப்படிப் பேசினால்தான் இவர்களைப் பச்சைத் தமிழன் என்று மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

தமிழைத் தமிழாகப் பிறமொழி கலவாது பேசுவோரைக் காண்பது அரிதாகவுள்ளது.
தமிழுடன் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவோரைக் கண்டால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த இலக்கியச் செய்திதான்.

கமலாம்பால் சரித்திரத்தில் (பக்கம்17) பிராமணர்கள் தாங்கள் பேசும் பாஷையில் சமஸ்கிருத பதங்களை இடையிடையே சேர்த்துப் பேசுவதைக் கண்ட ஓர் ஆட்டிடையன், தானும் அவர்களைப் போலப் பேச எண்ணி வீட்டுக்குப் போய் தாயரை அழைத்து,

'அம்மா ஆஷ்டுகுஷ்டி வந்து வேஷ்டியைத் தின்கிறது. அதை ஓஷ்டு ஓஷ்டு' என்று சொன்னதாக ஒரு கதை உண்டு.

இந்த ஆட்டிடையனுக்கும் தமிழுடன் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவோருக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் எனக்குத் தெரியவில்லை.
இன்று பல தமிழர்கள் தமிழ் பேசும்போது இடையிடையே..

மம்மி, டாடி, அங்கிள், ஆன்டி, சார், மேடம், சாரி, தேங்ஸ், எக்ஸ்கியுஸ்மீ, தென், பட், சோ, ஆல்ரைட், பியுட்டிபுல்... இது போன்ற சொற்களைச் செருகி, அதோடு s  ஆங்கில ஒலி அதிகமாக வருவது போலப் பேசினால் போதும் இதுதான் ஆங்கிலம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். இவ்வளவு தானா ஆங்கிலம்..?? காலப் போக்கில் இந்தச் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று மாற்றிக்கொண்டாலும் வியப்பதற்கு எதுவுமில்லை.


செருப்பு சிறிதாக இருக்கிறதா?
செருப்பு அழகாகவுள்ளது, காலை வேண்டுமானால் வெட்டிக்கொள்ளலாம்..
என்ற சிந்தனை அறிவுடைமை ஆகுமா? சிந்திப்போம்..

தமிழ் + சமஸ்கிருதம் = மணி (ப்) பிரவாளம்
தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம்
தமிழ் + ? = ???????

தொடர்புடைய இடுகைகள்

52 comments:

 1. தமிழ்+இங்கிலிஷ் = தங்கிலிஷ் என்ற பதமும் உண்டு. இப்போ அனைவரும் ஆங்கில முறையிலான பள்ளியிலேயே குழந்தைகளை சேர்ப்பதால் ஆங்கிலத்தை தவிர்த்து பேசுவது இயலாததாகி விடுகிறது. தமிழ்மொழியின் பொக்கிஷங்கள் தெரியாமலேயே வளர்கிறார்கள். கவலைக்குறிய விடயம்தான் இது.

  ReplyDelete
 2. இவ்வளவு தானா ஆங்கிலம்..?? காலப் போக்கில் இந்தச் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று மாற்றிக்கொண்டாலும் வியப்பதற்கு எதுவுமில்லை.
  //

  ஏற்கனவே ஐக்கியமாகிவிட்டது என நினைக்கிறேன்.... ஆம் நண்பரே! யாராவது பேருந்து வந்து விட்டதா? என்று கேட்கிறோமா.. பஸ் வந்திருச்சான்னு தான் கேட்கிறோம்... டைம் என்ன? என்று கேட்கிறோம் நேரம் எத்தனை என்று கேட்கிறோமா... இதையெல்லாம் வேரிலையே வெட்டி எரிந்திருந்தால் இன்று ஆலமரமாக வளர்ந்திருக்காது... என்ன செய்ய... ஆதங்க பகிர்வு.. தமிழை நேசிப்போம்... இனியாவது தமிழில் முழுமையாக பேச முயற்சி செய்வோம்... பகிர்வுக்கு நன்றி முனைவரே

  ReplyDelete
 3. பல்லாயிரக்கணக்கான தமிழ் பதம் இல்லாத வார்த்தைகளுக்கு சிறிய தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் வரும் வரை ஆசை நிராசையாகி கொண்டே தான் போகும்... ரயில்வே கேட் என்ற சொல்லை தமிழ் படுத்த முயற்சித்து தோற்று போனேன் என்று இங்கு கூறிக் கொள்கிறேன்... நான் தமிழ் அறிஞ்சன் அல்ல... ஆனால் தமிழ் அறிஞர்கள் ஏன் இந்த முயற்சியில் ஈடுபடுவதில்லை... ஈடுபட்டாலும் படிக்க முடியாத அளவுக்கு பெரிய வார்த்தைகளாக்கி பேசுவதை கடினமாக்கி விடுகிறார்களே... blade என்ற சொல்லுக்கு முகச்சவரம் செய்யும் கத்தி என்று எங்கோ படித்த நினைவு...

  ReplyDelete
 4. blade - தகர கத்தி அருமையாக இருக்கிறது அல்லவா?

  ReplyDelete
 5. //
  அதோடு s ஆங்கில ஒலி அதிகமாக வருவது போலப் பேசினால் போதும் இதுதான் ஆங்கிலம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். இவ்வளவு தானா ஆங்கிலம்..??
  //

  sssssssss

  ReplyDelete
 6. //காலப் போக்கில் இந்தச் சொற்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று மாற்றிக்கொண்டாலும் வியப்பதற்கு எதுவுமில்லை.//

  உண்மைதான் ஐயா.இந்நிலமை மாறவேண்டும்.

  ReplyDelete
 7. தமிழ் மொழியை வளர்ப்பது பற்றிய சிந்தனை வராமல் இருப்பதும், தமிழ் நாட்டிலே ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குத் தான் அதீத வேலை வாய்ப்பு என்ற நிலை மாறினால் தான் தமிழின் மீது மக்களுக்கு ஆர்வம் வரும்.

  ReplyDelete
 8. நியாயமான ஆதங்கம் நண்பரே! இன்று பல பொருட்களுக்கு தமிழ் வார்த்தைகள் என்னவென்று தெரியாமலே இருக்கிறோம், நான் உள்பட.. இதை மாற்ற முடியுமா என்பது சந்தேகமே..

  பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள், வாழ்த்துகள் எது சரி?

  ReplyDelete
 10. நயம்பட உரைத்தீர்-மிக
  நல்ல பதிவே
  பயன்பட உரைத்தீர்-எடுத்து
  சொல்ல இதுவே

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 11. //'அம்மா ஆஷ்டுகுஷ்டி வந்து வேஷ்டியைத் தின்கிறது. அதை ஓஷ்டு ஓஷ்டு' //செம சிரிப்புங்க.

  எனக்குத் தெரிந்து நம் தமிழர்கள்தான் பிற அதிக மொழிகலப்புடன் தமிழை பேசுகிறோம்.இது இப்போ தவிர்க்க முடியாதாகிவிட்டது.யாருக்கும் இது பெரிதாகத் தெரியவில்லை.

  ReplyDelete
 12. ஒரு நிமிடம் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து பேசினால் பரிசு என்று தொலைக்காட்சியில் போட்டி வைக்கிறார்கள் என்றால் நிலைமை எந்த அலவுக்கு உள்ளது என்று பார்த்துக்கொள்ளுங்கள்... நண்பரே...

  இப்போதிற்க்கும் தலைமுறையினருக்கு சில ஆங்கில வார்த்தைகள் நாக்கோடு ஊரிவிட்டன... பிறக்கின்ற குழந்தைகள் இவர்களோடு பேசி வளரும்போது அவர்களுக்கு இவை அங்கில வார்த்தைகள் என்ற சுவடு அறியும் வய்ப்பு குறைவாகதான் உள்ளது...

  ReplyDelete
 13. தமிழுடன் ஆங்கிலத்தை கலந்தால் கூ்ட பராவயில்லிங்க...
  அர்த்தமில்லாத பல வார்த்தைகள் சேர்த்து கொடுமை படுத்துராங்க...

  ReplyDelete
 14. உண்மை தான் ஆதங்கம் தெரிகிறது ..

  ReplyDelete
 15. நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டீங்க முனைவரே?
  படிப்பின் வாசனையறியா ஆட்டிடையனுக்கும்
  மொழியறிந்து படித்தவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா?

  ஒரு அராபியன் தன் மொழியில் கலப்படம் வந்தால் முகம் சுழிக்கிறான், அடுத்த மொழிக்காரர்கள் அரபு பேசும்போது, தன் மொழி பெருமை பேசி அங்கே இருக்கும் மொழிக் கலப்பை அறுத்தெரிகிறான்.

  நமது மொழிக்கென்று இருந்த தனித்தன்மை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் சரியே.
  ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் உள்ள திரைப்படங்களில் வரும் சொற்கள் கூட இன்று உள்ள தலைமுறையினருக்கு புரியவில்லை...
  இந்த நிலையில் நான் தமிழன் என்று மார்தட்டி கொள்வதில் என்ன புண்ணியம் இருக்கிறது. முதலில் கலப்படமற்ற மொழி பேச கற்றுக்கொள்வோம்.

  ReplyDelete
 16. பேசுகையில் இடையே ஆங்கிலம் கலந்து தமிழை பண்ணித் தமிழாக்கி விடாதீர்கள்
  (confirm பண்ணனும்)
  (change பண்ணனும்)

  தமிழை தமிழாய் பேசப்பழகுவோம்.

  ReplyDelete
 17. nalla padhivu nandri

  ReplyDelete
 18. நல்ல பதிவு. முதலில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் பேசும்போது ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே பேசவேண்டும்.அப்போதுதான் இந்த கலப்படம் வருவதை தடுக்கலாம்.

  ReplyDelete
 19. நல்ல கருத்து... இங்கே இன்னும் மோசம் முனைவரே.. குழந்தைகள் தமிழில் பேசுவதே இல்லை.. ஹிந்தி தான்... பத்து வார்த்தைகள் பேசினால், போனால் போகிறது என ஒன்று தமிழ் வார்த்தையாக இருக்கிறது... :(

  ReplyDelete
 20. @கடம்பவன குயில் தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் கருத்துரைக்கும் நன்றி..

  ReplyDelete
 21. @மாய உலகம் புரிதலுக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி நண்பா.

  ReplyDelete
 22. @suryajeeva அன்பு நண்பரே..

  நானறிந்தவரை..

  இரயில்வே கேட் - என்ற சொல்லுக்கு..

  தொடர்வண்டி வாயிற்கதவு என்றும்.

  பிளேடு - மழிதகடு

  என்றும் சொல்லாம்..

  ReplyDelete
 23. @suryajeevaதகரக் கத்தி என்று பிளேடை அழைத்தால் காய்கறி வெட்டும் கத்திக்கும் இதற்கும் மயக்கம் ஏற்படுமே நண்பா..

  மழிதகடு என்னும் சொல் நயமாகவே இருக்கும் எனக் கருதுகிறேன்.

  ReplyDelete
 24. @"என் ராஜபாட்டை"- ராஜா நீங்க ஆங்கிலம் நல்லாப் பேசிறீங்களே..

  ReplyDelete
 25. @பிரணவன் நடைமுறைச் சிக்கலை அழகாக முன்வைத்திருக்கிறீர்கள் அருமை பிரணவன்.

  ReplyDelete
 26. @Abdul Basith முடியாது என்று எண்ணாமல் நம்மால் முடிந்தவரை முயற்சிப்போம் நண்பா..

  வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 27. @!* வேடந்தாங்கல் - கருன் *!முத்து+கள்=முத்துக்கள்
  அச்சு+கள்=அச்சுக்கள்

  என்பது போல வாழ்த்துக்கள் என்பதும் வழக்கில் பயன்பாட்டில் உள்ளது..

  நானறிந்தவரை வாழ்த்துகள் என்தே சரியான பதம் நண்பா..

  இதுபற்றிய விவாதக்குறிபுகளை இந்த முகவரியில் காணலாம்.

  http://www.thamilworld.com/forum/index.php?showtopic=18949

  ReplyDelete
 28. @புலவர் சா இராமாநுசம் தங்கள் கவித்துளி வாழ்த்துக்கு நன்றிகள் புலவரே..

  ReplyDelete
 29. @ராஜா MVS இதை நினைத்தால் தான் அச்சமாக உள்ளது நண்பா..

  ReplyDelete
 30. @கவிதை வீதி... // சௌந்தர் // உண்மைதான் நண்பா அதிலும் திரைத்துரையினர்...

  குறிப்பாக இசையமைப்பாளர்களின் கொடுமைதான் தாங்கிக்கொள்ளமுடியாதது..

  ReplyDelete
 31. @மகேந்திரன் நல்லதொரு சான்று தந்தீர்கள் நண்பா..

  அருமை..

  ReplyDelete
 32. @மகேந்திரன்தமிழை தமிழாய் பேசப்பழகுவோம்


  தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றிகள் நண்பா.

  ReplyDelete
 33. @வே.நடனசபாபதி தங்கள் சிந்தனை வரவேற்கத்தக்கது..

  ஒவ்வொரு தமிழனும் இதை உணரவேண்டும்.

  ReplyDelete
 34. @வெங்கட் நாகராஜ் நிலம் சார் சூழலையும்

  மொழியின் அவல நிலையையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் அன்ரே..

  ReplyDelete
 35. தமிழரின் இன்றைய நிலையை ஆதங்கத்துடன் உரைத்துள்ளீர்கள். என் மகன் எட்டு வயது வரை டிவி, ரேடியோ, டேபிள் போன்ற சொற்களையெல்லாம் தமிழ்ச் சொற்கள் என்றே நினைத்திருக்கிறான் என்பது அவன் சொல்லித்தான் புரிந்தது. அந்த அளவுக்கு நம்மிடையே ஆங்கிலம் புழங்குகிறது. இதை வருத்தத்துடனே பகிர்கிறேன்.

  ReplyDelete
 36. இரண்டு பதங்கள் புணரும்போது வல்லெழுத்து மிகுவது வேறு. இங்கு கள் என்பது விகுதி மட்டுமேயாம். எனவே வாழ்த்துகள் என்பதே சரி. வாழ்த்துக்கள் என்பது தென்னங்கள், இனிப்புக்கள் என எதோ கள் வகையைக் குறிப்பது போலாகிவிடும். இருந்தாலும் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள் எனும் போது ஓர் அழுத்தம் கிடைப்பது வலி மிகப் போதுமானதாகிறது.

  ReplyDelete
 37. பள்ளியில் பேசினால் ஃபைனென்றும் செய்தித்தாள்
  அள்ளினால் சந்திப் பிழைகளும் - கொல்லுமச்
  சேனல் யுவதிகளால் செத்தபின்னும் செம்மொழி
  ஆனதே இன்பத் தமி"ல்"

  ReplyDelete
 38. @கீதா நிகழ்கால வாழ்வியல் உண்மையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கீதா.

  ReplyDelete
 39. @எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் நண்பர் கருன் அவர்களின் வினாவுக்குத் தங்கள் பதில் மேலதிக விளக்கமாக ஏற்புடையதாகவே உள்ளது நண்பா..

  அருமை.

  ReplyDelete
 40. குணா அண்ணா,தமிழ் சீரிழந்து வருவது மிக வேதனையாக உள்ளது.தமிழில் பேசினால் நம்மை வினோதமாக பார்க்கிற ஜென்மங்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன,"தமிழ் ஒன்னுத்துக்கும் உதவாது பா" என்று தமிழிலேயே என்னிடம் சொல்லிய ஆசிரியர்களை நான் பார்த்திருக்கிறேன்,தமிழ் நிலைகுலைய இது போன்ற துரோகிகள் தான் காரணம்.தமிழை வளர்க்க ஒன்றும் பெரிதாக செய்யத்தேவையில்லை தமிழில் பேசினாலே போதும்...

  ReplyDelete