Monday, June 18, 2012

இதுவல்லவா தாயுள்ளம்



 • கடவுள் எல்லோரிடமும் நேரிடையாக வரமுடியவில்ல என்பதால்தான் அம்மா என்ற கடவுளை நமக்குத் தந்தான் என்று கவிதைகள் சொல்வதுண்டு.


 • தலைகூட நிற்காமல் ஆடிக்கொண்டிருந்த வயதில் பார்த்துப்பார்த்து

வளர்த்த பெற்றோருக்குத் தெரியாதா?

தன் பிள்ளை வயதுக்கு வந்தபிறகு நல்ல துணையாகப் பார்த்துத்
திருமணம் செய்துவைக்கவேண்டுமென்று?

அவசரம்! அவசரம்!

எல்லாவற்றிலும் அவசரம்..

காதல் என்ற பெயரில், 
பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோரை மறந்து யாரோ ஒருவரோடு..

இருபது வயது வரை
என்பெற்றோரின் வசமிருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசமாகிவிட்டேன்

என்று பாடிக்கொண்டே சென்றுவிடுகின்றனர் பிள்ளைகள்.

இது நன்றி மறத்தல் அல்லவா?
இதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இங்கு ஒரு தாய் தன்னைமதிக்காமல் தன்மகள், அவள் காதலனுடன் ஓடிச்சென்றமைக்குத் தண்டனை கொடுக்கிறாள்
என்ன தண்டனை கொடுக்கிறாள் என்று பாருங்கள்.


முதியோர் இல்லங்களும், தனிக்குடும்பங்களும் நிறையவே தோன்றிவரும் இக்காலத்தில் தாய்சேய் உறவுநிலை குறித்த புரிதலுக்காக இப்பாடலைத் தங்கள் முன்வைக்கிறேன்.


காதலனுடன் சென்று தன் கற்பைக் காத்துக்கொள்வதே 
அறநெறி என்று உணர்ந்த,
 பிறைபோலும் நெற்றியைக் கொண்ட எனதருமை மகள்
அவள் காதலித்தவனோடு சென்றுவிட்டாள்
அவள் சென்ற பாலை வழியோ
மள்ளர் தம் பறையை முழக்கினால் அதன் ஒலிக்கேற்ப மயில்கள் எழுந்து ஆடி மகிழும் உயர்ச்சியும், நெடுமையும் கொண்ட மலையில் ஆரவாரமிக்க மேகங்கள் மழை பொழிய அவள் சென்ற நிலம் குளிர்ச்சியையுடையனவாகுக என வேண்டிக்கொள்கிறாள் தலைவியைப் பெற்ற நற்றாய்.


மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங்குன்றம் படு மழை தலைஇச்
சுரம் நனி இனிய ஆகுகதில்ல
அறநெறி இதுஎனத தெளிந்த என்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே
ஐங்குறுநூறு -371

நகைச்சுவை

பாலை நிலத்தில் வாழும் மறவர்களான மள்ளர்கள் முழக்கிய பறையோசையை இடியோசை எனத் தவறாக உணர்ந்து, மயில்கள் நடனமாடும் என்ற கருத்து மயில்களின் அறியாமை காரணமாக நகையை ஏற்படுத்துவதாக உள்ளது.


தாயுள்ளம்.

தன்னை மதிக்காது தலைவனுடன் சென்றாள் தலைவி. என்றாலும், கொடிய வெப்பம் வீசக்கூடிய பாலைநிலம் மழை பொழிந்து இனிது குளிச்சியுடையனவாகவேண்டும் என்று எண்ணும் தாயின் உள்ளம் தாயுள்ளத்தின் தன்னிகரற்ற தன்மையை உணர்த்துவதாகவுள்ளது.

அறநெறி

தலைவனைக் காதலித்த தலைவி, தம் காதலைப் பெற்றோர் எதிர்த்தால் அஞ்சாது தலைவனுடன் உடன்போக்கிலாவது சென்று தம் கற்பைக் காத்துக்கொள்ளவேண்டும் அதுவே அறநெறி என்ற சங்ககாலக் கருத்து இப்பாடல் வழி சுட்டப்படுகிறது.

15 comments:

 1. நம்மளை 25 வருசத்திற்க்கும் மேலாக கண்ணும் கருத்துமாக வளர்க்கும் பெற்றோருக்கு நமக்கான அந்த பெண்ணை தேடும் அந்த இனிமையான துன்பத்தை அளிக்காத மகன் இருதாலென்ன., இறந்தாலென்ன.?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தொடர் வருகைக்கும் இலக்கியவாசிப்புக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி நண்பா.

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்பரே.

   Delete
 3. நீண்ட நாட்கள் கழித்து வேர்களைத் தேடி வந்தேன்... முதல் பதிவே அருமையாக இருக்கிறது!!

  தாய் கொடுக்கும் தண்டனையை விடுங்கள்...

  காதலித்து மணப்பது குற்றமா?
  சங்க கால பாடல்கள் பலவற்றிலும் காதல் இருக்கிறதே!!

  //தன் பிள்ளை வயதுக்கு வந்தபிறகு நல்ல துணையாகப் பார்த்துத் திருமணம் செய்துவைக்கவேண்டுமென்று?//

  இன்றைய சமூகத்தில் வெறும் வெட்டி சாதி/ மத கெளரவத்தைக் காப்பாற்ற பல காதல் திருமணங்கள் அழிக்கப்படுகிறன (காதலனோ காதலியோ அழிக்கப்பட்டு!) இதற்கு உங்கள் பதில் என்ன??


  அவர்களுக்குத் தெரியும் தான்.. ஆனால், காதல் வலையில் விழுந்தவர்களைச் சரியான வழியில் நடத்த

  ReplyDelete
  Replies
  1. காதலிப்பது அவரவர் திறமை
   அவர்களைத் தற்காத்துக்கொள்வது பெற்றோரின் கடமை..

   என்பது தங்கள் கேள்விக்கான எனது பதில் நண்பா.

   Delete
 4. அருமையான பகிர்வு...
  பாடலும் அதற்கான விளக்கமும் அருமை...

  ReplyDelete
 5. தாயைத் துறந்து சென்றாலும் மகள் நன்றாக வாழவேண்டும், அவள் துயருறாவண்ணம் இயற்கையும் துணைசெய்யவேண்டும் என்று வாழ்த்தலே அவளுக்கான தண்டனையெனில் அத்தாயின் உள்ளம் அளவிடற்கரிய மேன்மையும் மென்மையும் கொண்டது என்பதில் சந்தேகமென்ன? பாடலுடன் சூழல் விளக்கி அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி முனைவரே.

  ReplyDelete
 6. தாய்மைக்கே உரிய சிறப்பு விளக்கிய விதம் அருமை .

  ReplyDelete
 7. அன்னையின் அன்பை அழகுறச் சொல்லும் பாடல்.எளிதில் புரியும் வண்ணம் எளிமையான விளக்கம் அளித்ததற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முரளி.

   Delete