வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் திருப்புமுனை!

உயிர்க்கொலை என்பது சில நேரங்களில் நீதியாகவும்,
சிலநேரங்களில் அநீதியாகவும் நம்மால் பார்க்கப்படுகிறது!
ஜாலியன் வாலாபாக் படுகொலை என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஆளுநர் மைக்கேல் டையர்! இவர் செய்த கொலையை நாம் அநீதியாகப் பார்க்கிறோம்.
டையரின் செயலைக் கண்டு வருந்தி அவரைக் கொல்வதற்காக 21 ஆண்டுகள் முயன்று அவரைக் கொன்ற ஒருவரின் செயலை நாம் நீதி என்று கொண்டாடுகிறோம்.
அந்த ஒருவரின் செயலை,

காந்திஜி கண்டித்தார்! நேதாஜி வரவேற்றார்!
இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி இவர் என்றது பெர்லின் பத்திரிக்கை!
ரோம் நகரில் அதிகம் வெளியான பெர்கெரெட் (BERGERET) என்ற பத்திரிக்கை
இவரின் செயலை தீரச்செயல் என்று பாராட்டியது
ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள்
யானையைப்போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது
ஜெர்மனி வானொலி!

ஆம் அந்த ஒருவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் புரட்சியாளர்களுள் ஒருவர் உத்தம்சிங்!
1889- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உத்தம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது
1919- ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாக பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்
1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது:
நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.
என்று தான் செய்த செயல் குறித்து சிறிதும் வருத்தம் கொள்ளாத டயரைக் கொல்வதுதான்
தன் வாழ்வின் இலக்கு என்று கொண்டார் உத்தம்சிங்
மூன்றாண்டுகள் மைக்கேல் டையரைக் கொலை செய்யும் திட்டத்துடன் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1933- ல் காஷ்மீர் சென்று ஜெர்மனிக்குத் தப்பிவிட்டார். அவர் இத்தாலி, பிரன்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக 1934- ல் லண்டனை அடைந்தார்.
மைக்கேல் டையரைக் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1940- ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகள் கழித்து அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

கேக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய சங்கம், மத்திய ஆசிய சங்கம் இவற்றின் கூட்டம் நடந்தது.
மைக்கேல் டையர் ஒரு பேச்சாளர். சிங் ஒரு புத்தகத்தில் ரிவால்வர் மாதிரியே வெட்டி அதனுள் ரிவால்வரை வைத்து எடுத்துச் சென்றார். சுவரின் அருகில் நின்றார். கூட்ட முடிவில் டையர் மேடையை நோக்கிச் செல்லும் போது இருமுறை சுட்டார். டையர் உடனே இறந்துவிட்டார்.

உத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் "நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்" என்று கூறினார்
1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

அடிமைப்பட்டிருந்த இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்க உயிர் தியாகம் செய்தவர்கள் பலர். அவர்களின் ஒருவரான உத்தம்சிங் வாழ்வின் திருப்புமுனையாக ஜாலியன் வாலாபாக் படுகொலை அமைந்தது என்பது நாம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்சொல்லவேண்டிய வரலாற்று நிகழ்வு.

4 கருத்துகள்:

  1. மிக முக்கிய வரலாற்று நிகழ்வை மிகச் சிறப்பாக நினைவுகூர்ந்திருக்கிறீர்கள். இருமுறை வாசித்தேன்.

    பாராட்டுகள் குணசீலன்.

    பதிலளிநீக்கு
  2. என்னவொரு கொடூர மனப்பான்மை... உத்தம்சிங் அவர்களை சொல்லவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுதலைப் போராட்ட வரலாறைப் படிக்கும்போது நாம் எவ்வளவு மனிதர்களின் தியாகத்தில் கிடைத்த சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே மேலோங்குகிறது நண்பரே.

      நீக்கு